நேற்றிரவே வீடுகளில்,மொச்சைப்பயறும்,சீனிக்கிழங்கும் அவியத்தயாராக இருந்திருக்கும். விடிந்தும் விடியாமலும் அவையெல்லாம் நார்ப்பெட்டியில் ஆவிபறக்க விழுந்துகிடக்கும்.ஊரின் நாக்கில் ஒட்டுமொத்தமாக தண்ணீர் கொட்டும்.ரக ரகமான பயறுகளின் மணம் தெருக்களில் வழிந்து ஓடும். அப்புறம் ரெண்டு நாளைக்கு அனுகுண்டுச் சத்தம் காதைப்பிளக்கும்.
பாரிவேட்டை,மாசிப்படப்பு,என்று சொல்லும் குலதெய்வங்களை நினைத்துப் பார்க்கும் திருநாள் இது.ஒட்டு மொத்த தமிழகமே எட்டுத்திசையிலும் நகர்ந்து கொண்டிருக்கும்.ரயில்,பேருந்து வேன் தொடங்கி ஆட்டோ க்கள் வரை கூட்டம் கூரையில் உட்கார்ந்து பயணம் செய்யும்.நெல்லும் கரும்பும் செழித்துக்கிடக்கும் கோவை மாவட்டக்குக்கிராமத்திலிருந்து வேலிக்கரடுகள் பரவிக்கிடக்கும் ராமநாதபுர குக்கிராமத்துக்கு கூட்டமாக வருவார்கள். எதாவதொரு பொட்டக் காட்டில் கேட்பாரற்றுக் கிடந்த நடுகல்லைச் சுற்றி பந்தலிட்டு படையல் வைத்து, பொங்கி, குலவையிட்டு கும்மாளமிட்டுச் செல்லுவார்கள். இது ஒரு சுற்றுலாவெனக் குதித்துக் கூட வரும் சிறார்களிடம் இது ஒங்க முப்பாட்டன் வாழ்ந்த கிராமம் வாய்மொழி வரலாறு சொல்லிவைப்பார்கள்.
பழைய வாழ்வைத் தோண்டி பூர்வீகம் தேடி,வேர்காணும் மக்களிடத்தில் அலெக்ஸ் ஹேலியின் ஏழுதலைமுறைத்தேடல் அடி ஆளத்தில் உறங்கிக்கொண்டே இருப்பதற்கான அடையாள நாள் பாரிவேட்டை. இதற்கு பின்கதை,புனைவு வரலாறு,பிற்சேர்க்கை பல வந்து வேறு வண்ணங்கள் பூசப்பட்டாலும். ஒட்டுமொத்த தமிழகத்தின் முப்பாட்டன்களின் பெயர்கள் மொத்தம் பத்து அல்லது இருபதுதானிருக்கும். கருப்பன், மாடன், கந்தன், இசக்கி,சாயலுள்ள பெயர்கள் தவிர ஏதும் இருக்கச் சாத்தியமில்லை.அப்படி இருந்தால் எழுதுங்கள்.