Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

18.9.11

பெட்டிக்குள் சுருங்கிப்போன பிராயங்கள்.


அம்மையின் இடுப்பும்
அப்பன்காரனின் முதுகும்

வாசற் கதவும்
வள்ளிமுத்து தாத்தாவீட்டு
வண்டி மேக்காலும்

வானம் விரித்துப்போட்ட
படுதாவில் வரைந்த
மேகச்சித்திரங்களும்

பள்ளிக்கூடப்பெஞ்சும்
பார்வதியின் சடைக்குஞ்சமும்

மதியமழைநாளில்
காரைவீட்டு மொட்டைமாடிக்
குழாயிருந்துகொட்டும் குற்றாலமும்

வேலவர் பவுல் மாதுவென
சாயக்கிடைத்த தோள்களுமாய்
விளையாடக்கிடைத்த நாட்களை

ஈடுகட்டுமா
பொம்மைப்படங்களும்
போகோசானலும் ?

காட்ட்டுப்புழுதியில்
சுட்டுத்தின்ற
காடைமுட்டையின்
ருசியறியுமா
பீட்ஷா சகதிக்குள்
பிசைகின்ற விரல்கள்.

29.9.10

தீபாவளி,சிறார்கள்,எந்திரன் துப்பாக்கி.

ராமர் வில்லெடுப்பார் அம்பை நாணில் வைத்து இழுக்காமலே விடுவார் அது பறந்து போகும், பறந்து போகும் போய்க்கொண்டே இருக்கும்.நம்ம தமிழ்சினிமாவில் மாதிரி  தலைவாசலில் இருந்து கதாநாயகன் ஓடிவருவார்.அடுப்பங்களையிலிருந்து கதாநாயகி ஓடிவருவார். அது ஒரு அஞ்சு நிமிசம் ஓட்டம் இருக்கும்.அஞ்சஞ்சும் பத்து நிமிஷம் ஓடிக்கடக்கிற அளவில் வீடுகள் இந்தியாவில் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை. அதே போலத்தான் ராமரின் வில்லும் மதுரைக்கு ஜவுளி எடுக்க போகிற மாதிரி கிளம்பிப்போகும். அதுக்குள்ளாற அடுப்பில் உலை நத்த்து விட்டு கடைக்குப் போய் விட்டுவந்து விடலாம்.கிளம்பிப் போன அம்பு ஒன்று பத்தாகும். பத்து நூறாகும்.அது வேற கதை.அதோடு நில்லாமல் அம்பிலிருந்து தீ ஜுவாலைகள் கிளம்பும்.அந்தப் பக்கமிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கும்.சாத்தூரில் அப்போது தண்ணிப்பஞ்சம். ராமாயணம் பார்க்க வந்த ஒரு அம்மா 'இம்பூட்டு தண்ணியும் வீணாப்போகுதே'என்று ஆதங்கப்பட்டார்.'என்னதான் சண்டன்னாலும் இப்பிடிக் குடிக்கிற தண்னிய நாசமாக்குறது நல்லால்ல' என்றும் தீர்ப்புசொன்னார்.

ஆனால் குழந்தைகள் அப்படியில்லை.தொலைகாட்சிக்கு முன்னாடி கட்டிப்போட்ட மாதிரிக்கிடக்கும்.
ஒண்ணுக்குத் தண்ணிக்கு கூடப்போகாமல் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும்.நம்ம குடும்பங்களுக்கு பிள்ளைகளை டியூஷனுக்கு அணுப்ப வேண்டும் அல்லது அவர்கள் சமத்தா இருக்கவேண்டும்.அப்படியில்லாமல் ஓயாம சண்டைபோட்டும்,எதாவது கேட்டு நச்சரிக்கும் குழந்தைகளைத் திசை திருப்ப ராமாயணம் போட மாட்டானா என்று ஏங்குவோம்.அந்த அளவுக்கு அது அவர்களை entertain பண்ணும்.அப்படியான காலச்சூழலில்தான் இந்த விளம்பரங்களும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.ராமாயணத்தில் இருக்கிற குழந்தைகளுக்கான ஈர்ப்பை சுவீகரித்துக்கொண்டு அப்படியே முன்னேறி விட்டன.அவ்வளவு fantacy நிறைத்து தருகிறார்கள்.

சோப்புக்கள் எல்லாம் பாதாம்,பிஸ்தா,ஏலக்காய்,முந்திரி எனப்பாயசம் தயாரிக்கிற பொருளில் தாயாராகிறதாம்.இன்னொரு சோப்பில் பப்பாளி,ஆரஞ்சு,ஆப்பிள் கலந்து பழரசத்துக்கான சேர்மானம் இருக்குமாம்.சாப்பிடுகிற பொருட்களெல்லாம் கேடு விளைவிக்கும் ரசாயணக் கலவைகளில் தயாரிக்கிற (ம_ராண்டிகள், மன்னிக்கவும்) பன்னாட்டுக் கம்பெனிகள் இப்படி நமது காதுகளில் டிஜிட்டல் பூச்சுற்று நடத்துவாகள்.அதை விட அதிசயம் என்னவென்றால்  வழுக்கைத் தலையில் முடி முளைக்குமாம். இப்படிச் சொல்லுகிற சொக்குப்பொடிகள்.இதை அங்கீகரிக்கிற மாதிரியும் ஆமோதிக்கிற மாதிரியும் விற்பனை அமோகமாக நடப்பதால் இன்னும் என்னென்ன சொல்லுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

அப்படியொரு அங்கீகாரம் தான் எந்திரன் படத்துக்கான ஒலிப்பேழை,முன்னோட்டக் காட்சிகள் வெளியீடும் அதற்கடுத்து தற்போது களேபரப்படுத்திக் கொண்டிருக்கும் முன்பதிவுத் திருவிழாவும்.கண்ணில் தட்டுப்படுகிற முன்னோட்டக்காட்சியில் ரஜினியின் இடுப்பைச்சுத்தி ஆயிரங்கண்ணுப்பானை போல கணக்கிலடங்காத ஏகே 47 துப்பாக்கிகள் துருத்துகிறது.எல்லாவற்றையும் இயக்கி குண்டு மழைபொழிவார் கணினியுக ராமர்.வில்லுக்கும் சரி துப்பாக்கிக்கும் சரி நியூட்டனின் விதி நிரூபணமாகவேண்டும்.பின்னோக்கி எவ்வளவு இழுக்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் முன்னேறிப்பயணிக்கும் விசை.ஒரு துப்பாக்கியை தமிழ்ச்சினிமாவில் காட்டுகிறதைப்போல சொகுசாய் கையாளமுடியுமா?. ராணுவ வீரர்கள் தான் சொல்லவேண்டும்.  தானியங்கித் துப்பாக்கிகளை இயக்க stand வேண்டும் அல்லது புஜங்களில் தாங்கிப்பிடிக்கவேண்டும்.அகஸ்துமகஸ்தாக இருந்தால் வெடிக்கிற போது கிளம்புகிற எதிர்விசை தோள் புஜத்தை கலக்கிவிடும் என்று ராணுவவீரர்கள் சொல்லக் கேட்கலாம்.

அதுவெல்லாம் கிடக்கட்டும் ஓரமாய்த்தூக்கி வைத்துவிடுவோம்.ஒரு கலிக்கிண்டுகிற துப்பாக்கி.அதாங்க குருவி சுடுகிற துப்பாக்கியைச் சொந்தமாக வைத்திருப்பதற்குக் கூட ஆறுமாசம்,ஒரு வருஷம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டும். ஆயிரம் காரணம் சொல்லி உரிமம் வாங்க வேண்டும்.வாங்குகிறவருக்கு சமூக அந்தஸ்து வேண்டும். பண்ணையார், பெருமுதலாளி,அமைச்சர் போன்ற அந்தஸ்து.அதையும் மீறி வைத்திருந்தால் அதைக்கள்ளப் பணத்தோடு பதுக்கித்தான் வைத்திருக்கமுடியும்.போலீஸ் கண்டு பிடித்துவிட்டால் கதி அதோகதிதான்.இதை எந்த சினிமாவாவது சொல்லியிருக்கா?.இங்கே தான் அப்படிக் கிடையவே கிடையாது.மக்களை சிந்திக்க வைக்கிற அறிவை உயர்த்துகிற எந்தக் காரியத்தையும் செய்யப் போவதில்லை என்று சத்தியம் பண்ணுகிற வைபவம்தான்,(பெரிய பதாகைத்) தமிழ்சினிமாக்களுக்குப் பூஜைபோடுகிற வைபவம்.

விளையாட்டுத் துப்பாக்கி வாங்குவதற்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் மட்டும்தான் இங்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை.தீபாவளி வருகிறது கொஞ்சம் சகாயமாகவும் கிடைக்கும்.அப்படி துப்பாக்கிகள் வைத்திருக்கிற ரஜினியை சிறுவர்களுக்கு ரொம்பப்பிடிக்கும்.நிஜத்தில் மனிதர்களின் ஆழ்மனத்தில் அற்புதங்களுகான ஏக்கம் தூங்கிக்கொண்டே இருக்கும்.அதைக் காசாக்குகிற வித்தைதான் ஒரு அடியில் பத்து, இல்லை இல்லை நூறு பேரை அடித்துப்பறக்க விடும் டெக்னிகல் தரம் உயர்த்தப்பட்ட சினிமா.நிச்சயம் அவர்களுக்கான பொழுதுபோக்கு 200 சதவீதம் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற படச்சுருள்களின் வரிசையில் எந்திரனும் சேரலாம். சிறுவர்களுக்குத்தானென்றாலும் டாம் அண்ட் ஜெர்ரி,ஹாரிபாட்டர் போன்றவற்றை நாமும் பார்ப்பதில்லை ?.

27.8.10

சகஜ மீட்பர்கள்

அந்தப் பகல்நேரச்சென்னைத் தொடர் வண்டியில் இடம் பிடித்துக் கொள்ள சிரமமில்லாமல் இருந்தது தம்பி அருணும்,முதலாளி செல்வாவும் நெல்லையிலிருந்தே வந்ததால் இது சாத்தியாகியது. முதலாளி செல்வா முதலாளி யில்லை. நம்ம ஒரு போதும் முதலாளியாகப் போவதில்லை நாமெல்லாம் ஆயுட்காலக் கடனாளிகள்,அதானாலயாக்கும் ஒருத்தருக்கொருத்தர் முதலாளின்னு சொல்லிக்கலாம் என்கிற அவரின் definition எனக்குப்பிடித்திருந்தது.பிறகென்ன ஒரு இருபது வருட காலமாக அவருக்கு நான் முதலாளி,எனக்கு அவர் முதலாளி.அவரைப்பற்றியதான ஒரு பெரும் பதிவுக்கு வாத்தைகளும்,விஷயங்களும் குவிந்துகிடக்கிறது அதைப் பின்னாட்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

வண்டி நகர்ந்த பின் டீ விர்கிறவர்கள்,வெள்ளரிக்காய் விற்கிறவர்கள் கடந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.மாதுவும் அருணும் இன்னொரு பெட்டிக்கு இடம் தேடிப் போய்விட்டார்கள். ஜூனியர் விகடனில் திருப்பூர் எம் எல் ஏ பழைய்ய தோழர் கோவிந்தசாமியின் பேட்டியைப் படிக்கச் சொல்லிக்கொடுத்தார்.படித்துப்பார்த்தேன் ஆளும் கட்சியின் ரகரகமான ஆட்டைகளில் அது ஒரு டைப்பாக இருந்தது.பெரும்பாலும் இதுமாதிரியான பொறணிப்பத்திரிகைகளை ஊர்மடத்து ஆண் பொறணி,ஓடைகுப்போகிற பெண்கள் பொறணியாகவே பார்க்கத்தோன்றும்.சில நேரம் அவசியமான செய்திகளும்கூட வரலாம்.

குழந்தைகள் பாட்டி இருக்கைக்கும்,தாயின் இருக்கைக்குமான இடைவெளிகளை ஆடுகளமாக்கிக் கொண்டு
அங்குமிங்கும் ஓடினார்கள்.துலுக்கபட்டி நிலையம் நெருங்கும்போது முதலாம் திருநங்கை வந்தார்.எல்லோரையும் தொட்டு சங்கோஜப் படவைத்து காசு வசூலித்தார்.அவரைப்பார்க்க உள்ளூர் நங்கைபோலத்தெரிந்தது எனது இருக்கைக்கு வந்ததும் ஒதுங்கிப்போய்விட்டார்.சற்றுநேரத்திற்கெல்லாம் இரண்டாவது நபரும் வந்தார்.தோள்பட்டையை உலுக்கி துட்டுக்கேட்டார்.இல்லையென எனச்சொன்னதற்கு

"நாங்கெல்லாம் பாவப்பட்ட பிறவிகள்,எங்களுக்கு காசுகொடுத்தா ஒங்களுக்கு புண்ணிய'மென்று சொன்னார்.

மனிதகளில் என்ன பவம் புண்ணியம் ஒங்கள நீங்களே ஏன் தாழ்த்திக்றீங்க

இருக்றதத்தான சொல்லமிடியும் இந்தப்பொழப்ப பாத்திகளா

நீங்களும் ஒழைக்கலாம்

'ஆமா ஆபீஸர் உத்தியோகமா காத்துக்கிட்டுருக்கு,அங்க பாருங்க ஒலகமே எங்கள ஒரு மாதிரியாப்பாக்கு ஒருத்தர் ரெண்டுபேரு யோக்கியமா இருந்தா ஒண்ணும் பண்ணமுடியாது,வந்துட்டாங்க'

படபடவென்று பேசியபடி அடுத்த இருக்கைக்குப்போய் கைதட்டிக்கொண்டு நின்றார்.ரயிலின் இரைச்சல்,பயணிகளின் பேச்சுச்சத்தம்,டீ விற்கிறவர்களின் பெருங்குரல் எல்லாம் ஒலியிழந்து மௌனத்துக்கு திர்ரும்பிக் கொண்டிருந்தது. ஒரு நிமிட நேர இறுக்கத்தை உடைத்துக்கொண்டு குழந்தைகள் ரயிலுக்குள் ரயில் ஓட்டிகொண்டிருந்தார்கள்.

14.11.09

பொதுவின் தூதர்கள்.







தரையை நோக்கி நீளும்
விழுதின் நுனியில் பூத்திருக்கும்
தளிர் மஞ்சள் நிறத்தில்
குழந்தைகளின் பிஞ்சு விரல்களையும்.

இதுவரை எழுதப்படாத
சொல்கொண்டு சிதறும்
வார்த்தைகளில் உலகமகா
இசை மீட்டலையும்

முகத்தில் ஒண்ணுக்கிருந்த
பொக்கிஷ நாட்களைச்
நாட்களைச்சேமிக்க பனித்த
உன்சிரிப்பாணியாய்கிடக்கிற
குழந்தைகள் உலகம்.

எந்த தேசத்துக்
குழந்தையின் புகைப்படமும்
எனது குழந்தையின் சாயலைப்
பிரதிபலிக்கிற பொதுவின் தூதர்களாகவும்


காக்கைக்கு தன்குஞ்செப்படியோ


உலகிற்கு எல்லாமே பொன்குஞ்சு.




9.11.09

சீசேம் வீதி. Sesame Street ( சவளைபாய்ந்து கிடக்கும் குழந்தைகள் இந்தியா)








உலகமெங்கும் வாழுகிற குழந்தைகளுக்கான கொண்டாட்டமாக சீசேம் வீதியின் நாற்பதாம் ஆண்டுக்கொண்டட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் சீசெம் வீதி என்றால் என்னவென்று சொல்லு பிறகு கொண்டாட்டத்தைப் பற்றிப்பேசலாம் என்கிற குரல் கேட்கிறது. அது சீசேம் வீதி ஒரு ஆச்சரியம் ஆம் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிதான் சீசேம்வீதி. 1960 ஆம் ஆண்டுக்கு முன்னாள் குழந்தைகளை மையப்படுத்திய தொலைக்காட்சி நிகழ்சி ஏதும் இல்லையென்பது அமெரிக்ககளுக்கு பெரும்குறையாக இருந்திருக்கிறது.



இந்தியாவில் தொலைக்காட்ட்சி புழக்கத்தில் வந்ததே 1975 ஆம் ஆண்டுதான் என்பது நாம் பெருமையோடு நினைவுகூற வேண்டிய செய்தி. அதுவும் கூட அந்த ராமாயணத்தில் இந்த மஹாபாரதத்தில் வந்தது என ரூதர்போர்டுக்கு போட்டியாக நமது புராணங்களை முன்னிறுத்திக் கொண்டிருந்தோம் இருக்கிறோம் இருப்போம். இதைச் சவாலாக எடுத்துக்கொண்ட கார்னெகி கல்வி நிருவணம் 1966 ஆமமாண்டு ஜோன் கேன்ஸ் கூனி எனும் இயக்குநரை தத்து எடுத்து இது குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டது. மத்தியதர, குறைவான வருமானமுள்ள குடும்பத்துக் குழந்தைகளுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வியை விதைப்பதே இதன் நோக்கமாக இருந்தது.



ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பதின்மூன்று தொடருக்கு சில்றன்ஸ் டெலிவிசன் வர்க்சாப் நிறுவணத்தின் சின்னமே சிசேம்வீதியின் சின்னமாக இருந்தது. அதன்பிறகான செழுமைப்படுத்தலில் கல்வியாளர்கள்,மனோத்ததுவநிபுணர்கள்,குழந்தை ஆர்வலர்கள் கூட்டு முயற்சியில் புதுப்பொலிவுடன் 1969 ஆண்டு நவம்பர் 10 ஆம்தேதி முறைப்படி ஆராம்பிக்க இருந்தது. இந்தத்தொடரின் முன்னோட்டம் அதற்கு இரண்டு நாள் முன்னதாக ஒலிபரப்பப்பட்டவுடன் அமெரிக்க அரசு இதன் முக்கியத்துவம் உணர்ந்து அரசு கஜானாவில் இருந்து ஒரு பெரும் தொகையை கொடுத்தது.



கணினி வரைகலை, பொம்மைகள், நிஜ நடிகர்கள் எல்லவற்றையும் இணைத்து குழந்தைகளுக்கான கற்றலின் முனைப்பை தூண்டுகிற விதமாக வடிவமைக்கப்பட்டது. குழந்தைகளிடம் எழுத்து எண்,கணிதவினாக்களுக்கான விடைகள் ஆகியற்றை பொழுதுபோக்காக அறிமுகப்படுத்தியது. கல்வியை அன்றாட சமூக நிகழ்வுகளில் இருந்து எடுத்துக் கொடுத்தது.வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்த முடியாததாகக் கல்வியை மாற்றியது சீசேம் வீதி.



கனத்த காட்சிகள், சடுதியில் மாறும் நிகழ்வுகளின் தொகுப்பு, வேடிக்கை, சிரிப்பு இசை எனும் லாபம் கலந்த வியாபார யுக்திகளோடுதான் துவக்கத்தில் தயாரிக்கப்பட்டது சீசேம்வீதி. இதைக் கேள்விப்படும்போது உங்களுக்கு ஏதாவது அலையாடுகிறதா?. உங்கள் ஊகம் சரிதான், சோப்பு, சீப்பு, உப்பு, கண்ணாடி, பல்பொடி விற்க இன்று பயன்படுத்தப்படும் விளம்பர யுக்தியை அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதில் கண்டுபிடித்து உலகத்துக்கு விற்று விட்டார்கள்.



தங்கள் நிராசைகளை ஏற்றிவைக்கும் நடுகல்லாகவும், அருதப்பழசான ஜாதி,மதம்,கடவுளைப் புதுப்பிக்கும் இடமாகவும்குழந்தைகள் பேனப்படுகிற பொது இந்தியாவில் இது போன்ற செய்திகள் வியப்பானதாக இருக்கிறது.



சவளையாகக் கிடக்கும் இந்தியக் குழந்தைகள் குறித்து பேச இன்னும் போதிய குரலற்றுக்கிடக்கிறது இந்தியா......

21.10.09

முறைசாராக் கல்வி.






மடிக்கணினி, வலையுலகம்.
சாட்டிலைட், வானூர்தி.
ஊர்கள்,சாலைகள்.
மனிதர்கள்,தெருக்கள்.
பணியிடங்கள்,கலாசாலைகள்.
நாகரீகம்,விஞ்ஞானம்.

எல்லாம் பின்னோக்கிச் சுருட்டப்பட்டு

முகாம்களில் அடடைக்கப்பட்டிருக்கிறது.
விகாரமாகச்சிரித்த முகம் வெளியலைகிறது.


அங்கு


பசியை விரட்ட விளையாடும்

குழந்தைககள்கையில் கிடக்கிறது

சிதறிய கனவுகள்.

பாடத்திட்டம், பரீட்சை, வீட்டுப்பாடம்

எல்லாமேவலியும் ரணமுமாக

வரிசைப்படுத்தப் படுகிறது.

குழந்தைக் கேள்விகளுக்கு பதிலாகத்தாயின்

வறட்டுக் கன்னத்தில் வழியும் ரத்தம்.



இனி

எழுதப்படாத பாடத்திட்டம்

படியேறிக் குடியேறும்.



17.7.09

கெட்டவார்த்தைகளாலும் இதழ் விரியும் ஃபாண்டசிப்பூக்கள்


விடுமுறைநாட்களை தேடிக்காத்திருக்கும் அவர்களுக்காக ஊரின் பொப்துப்பிரதேசங்கள் பல காத்திருப்பது தெரியுமா?. பொட்டல்கள், குட்டிச்சுவர், ஆலமரம், பிள்ளையார் கோவில் கல்மண்டபம், கண்மாய்த் தண்ணீர் எல்லாமே குழந்தைகள்தங்கள் மேல் புரண்டு விளையாடத் திறந்துகிடக்கும். பொங்கல், பூஜை, கொடை தவிர்த்த நாட்களிலும், நேரங்களிலும்கோவில் பிரகாரங்கள் வெறிச்சோடிக்கிடப்பது இவர்களைத்தேடித்தான்.



மொட்டைப் பொட்டலில் பூவும், பிஞ்சும், காயும் கனியும், விளைந்து கிடப்பது விளையாட்டுக் காலங்களில் மட்டும் தான். நிற்கக்கூட இடமில்லாத சைக்கிள் ரிக்சாவில் குழுமியிருக்கிற அவர்களைப் பார்த்துக் கண்ணீர்வடிக்காத கவிதை இல்லை ஆனால் அந்த நகரும் புதருக்குள் இருந்து கொண்டு குதூகலாமாய் கத்திக்கொண்டு போகிற அவர்களிடம் இந்த தேசத்தின் காயங்களுக்கெல்லாவற்றிற்கும் மருந்திருக்கிறது.



மறைந்த எழுத்தாளர் தணுஷ்கோடி ராமசாமி " கிராமத்து ஏழைச் சிறுவர்களுக்கென்று யாரும் விளையாட்டுப்பொருள் வாங்கித் தருவதில்லை. அதனால் அவர்கள் கண்ணில் காண்கிற எல்லாவற்றையுமே விளையாட்டுப்பொருளாக மாற்றுகிறார்கள்". என்று தனது தோழர் நாவலில் குறிப்பிடுகிறார். இதையே UNICEF நிறுவணமும் தனது ஆய்வில் உறுதிசெய்கிறது. வண்னத்துப் பூச்சியின் இறகை பிய்த்துப் போடாத குழந்தைப்பருவம் இல்லையென்று சமயவேலின் கவிதை சொல்லுகிறது.


சோளத்தட்டையின் நுணியில் மாட்டியிருக்கும்

மயிராலான சுறுக்குக் கயிற்றில்

மட்டிக்கொண்டுசாமியாடக்காத்திருக்கும்

வேலியோரக்கரட்டாண்டி.



இப்படிக் காமராஜும் கூட கவிதை செய்யலாம். விளையாட்டுப் பருவத்தை நினைவில் சுமந்தபடி. ஃபாண்டசிப்பூக்கள் பூக்கிற அனதப் பருவத்திலிருந்து தான் உலகமகா இலக்கியத்துக்கான, விதைகள் துளிர்க்கிறது. மாரிச்செல்வியின் வீட்டுக்கொல்லையில் பல கனவுமரங்கள் கிளைவிட்டுக்கிடக்கும், அதில் பூத்துக்கிடக்கிற பூவில் அதிகமாக விளையாட்டுப் பொருளும் கொஞ்சம் நெல்லுச்சோறும், ரொம்பவே கெட்டவார்த்தைகளும் கிடைக்கும். அவளை நாங்கள் " கேமராக்காரி " என்றுதான் கூப்பிடுவோம். ஆரம்பப்பள்ளியின் பதிவேட்டில் மட்டுமே அவளுக்கு மாரிச்செல்வியெனும் பெயர் இருக்கிறது அடுத்து கல்யாணப்பத்திரிகையில் தான் அவள் திரும்பப்பார்த்தாள். அவளை நாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.