Showing posts with label விடுபட்டமனிதர்கள். Show all posts
Showing posts with label விடுபட்டமனிதர்கள். Show all posts

30.3.10

மௌனத்துச் சலனங்கள்.

வேஷ்டி சட்டையுடன் கிளம்பும்போது இருப்பா என்றென் அம்மா திருஷ்டி இட்டாள்.புடவைக்கு நிகரான லவிக்கை இல்லாத பொருந்தாமை இடற வந்து வண்டியேறினாள். பீடத்தின் முன்பு ரெண்டு பத்திக் குச்சியைப்
பொருத்தி வைத்து விட்டு விழுந்து  நமஸ்கரித்தாள். பக்கத்து சாமிக்கும் பொருத்தி வைத்தாள்.அவள் என்னைக் கும்பிடச் சொல்லவில்லை. நானும் கேலியெதும் சொல்லவில்லை. சுமூகமான கல்யாண நாள்.

அவள் பணப் பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்து உண்டியலிட்டாள். என்னிடமும் கொடுத்து போடச்சொன்னாள்.உண்டியல் துவாரத்திற்குள் ரூபாய் நோட்டைத் திணிக்கும் போது அந்தப் பார்வை என்னை அறுத்தது.
அழுக்கும்,பசியும் அப்பிய முகம். வார்த்தைகளற்ற வாய்,கூப்பாடு போடுகிற வயிறு. நுழைத்த தாளை மீள உறுவினேன்.'இந்த,.. என்ன இன்னைக்கூ கிறுக்குப் பிடிச்சிருச்சா?' நான் அவனைக் காட்டினேன்.

வண்டியில் போய் ஆறு இட்லி ஒரு ஆம்லெட் பொட்டலம் வாங்கிக் கொண்டுவந்து அவன் முகத்துக்கு நேரே நீட்டினேன்.சலனமற்று வாங்கிக் கொண்டான் நான் எதிர்பார்த்த முகமலர்ச்சி தென்படவில்லை. ஒதுங்கிப் போய் நாலு இட்லி சாப்பிட்டான். பின் தயங்கி அப்படியே வைத்து விட்டான், அழுதிருக்க வேண்டும். நகர்ந்து போனான். ஒரு நாய் வந்தது. பிறகான நாட்களில் நாய் இருந்தது. அவனில்லை.