அந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும்போதெல்லாம் எனக்கு தோழர் கந்தர்வனின் ' தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்' சிறுகதை தான் நினைவுக்கு வரும். மனிதர்களின் அபிலாஷைகளை அள்ளிக்கொண்டு வந்து தட்டுகிற இடமாக அந்த எழும்பூர் ரயில் நிலையம். முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு அங்குபோய் இறங்கினேன். மதுரை தாண்டி பயணம் செய்த முதல் அனுபவம் அது. அன்றும் கூட அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் போய் தாதார் எக்ஸ்பிரசைப் பிடிக்கனும், ஒருமணிநேர அவகாசத்தில். வெளியே வந்தபோது பீடியைக் கிழே போட்டுவிட்டு ஒரு தாத்தா அழைத்தார். அவரது வாகனத்தில் சென்ட்ரல் போவதாக உடன்பாடு. அவரைவிட வயதான குதிரையும் வண்டியும் எனக்காகக் காத்திருந்தது. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்னும் பாடலை மந்தமாகச்சுழலும் இசைத்தட்டின் லயத்தில் பாடிக்கொண்டு போனேன். இனிக் குதிரை வண்டி நினைவுகூறலில் மட்டுமே காணலாம். டெல்லி சென்று திரும்பி வந்த அந்த 1995 ஆம் ஆண்டையும் என்னால் மறக்க முடியாது. நானும் தோழர் நடராஜனும் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இறங்கி உடனடியாக வைகையைப் பிடிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தோம். மனசு முழுக்கஇந்தியாவின் குறுக்கு வெட்டுத் தோற்றம் நிறைந்து கிடந்தது. உடலில் ஒரு பத்து நாளின் ரயில்புகை படிந்தது போல உணர்வு. பல்துலக்காதபோதும் பசி அரிசிச்சோறு தேடியது. சின்னவன் அப்பா எங்கே அப்பா எங்கே என்று கேட்பதாக அவள் சொன்னது. பயணவேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஒரு பணிரெண்டு மணிநேரத்தில் சாத்தூர் என்ஜிஓ காலனியில் இருக்கப்போகிறோம் என்னும் குறுகுறுப்பு வந்தபோது அவள் வாசம் அடித்தது. பலநேரங்களில் குழந்தைகள் துவர்களாகவும் இருந்துவிடுவார்கள். முன் பதிவு செய்யாத பயணிகளுக்கான வரிசை நீண்டு கொண்டே போனது. திருச்சிக்கு அம்மா அப்பவை அனுப்பிவைக்க,மதுரையில் சாயங்காலம் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள.நேற்று மகனின் வேலைக்காக மந்திரியைப்பார்க்க வந்தஇப்படி ரகரகமான பயணிகளின் கூடவே ஒரு ராணுவவீரன் தன் காதல் மனைவியோடு மிகமிக நெருக்கமாக. ஒன்பது மாதத்துக் கர்ப்பினியான அவளுக்கு எழும்பூர் இம்பாலாவில் நெய்த்தோசை வாங்கிவந்து கொடுத்தான்.ராணுவ கிட்பேக்குகளையும் பெரிய பெரிய சூட்கேசுகளையும் அடுக்கி அதன் மேல் அவளை உட்கார வைத்திருந்தான்.ஈக்கள் கூட அவளை நெருங்காதபடிக்கு அன்புவேலி சுற்றியிருந்தான். நெய்த்தோசையின் மணம் எங்கள் பசியைக் கூடுதலாக்கியது. தயிர் சாதப் பொட்டலம் வாங்குவதற்காக நிலைய முகப்புக்குப் போனோம். ஐந்து பேர் தாடியோடு மரப்பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். பொட்டலம் வாங்கித் திரும்பும்போது அவர்கள் அந்த ஐந்து பேர் இந்த உலகின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவார்கள் எனத்தெரியாமல் கடந்துபோனோம். திரும்பும்போது அந்த இடம் ஒரே கலவரமாக இருந்தது.ஒற்றைப்பெண் காவலர் அதில் ஒருவரின் கழுத்தைப்பிடிக்க அவர் கத்திக்கொண்டிருந்தார். ஒரு ஐந்து நிமிட அவகாசத்தில் மூன்று பேரை சயனைடு விழுங்கிவிட்டிருந்தது. யாராவது ரயில்வே போலீசில் தகவல் சொல்லுங்கள் என வேடிக்கை மனிதர்களிடத்தில் முறையிட்டார்கள் அந்த போலீஸ். யாரும் போகவில்லை என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் நான் ஓடிப்போய் சொன்னேன். ரயில்வே போலீஸ் எந்த அவசரமும் காட்டவில்லை. திரும்பவும் அந்தக் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தேன் இன்னும் கூட அங்கு நடப்பது என்ன என்று தெளிவாகத் தெரியவில்லை. கூட்டத்தை விலக்கிக்கொண்டு போனேன். நான்குபேர் இறந்து கிடந்தார்கள். அவர்களது கண்களில் ஏக்கமும் கனவுகளும் நிலைகுத்தி நின்றது. மரணம் என்பது அவ்வளவு சடுதியில் லயிக்கும் என்பதை நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். இன்னும் கூடுதலாக இரண்டு மூன்று காவலர்கள் வந்திருந்தார்கள். பிடிபட்டவர் ஈழத்தமிழில் பேசிக் கொண்டிருந்தார். எங்களை வாழத்தான் அனுமதிக்கவில்லை சாகவாவது அனுமதியுங்கள் என்று கத்தி கத்திச் சொன்னார். எங்கட நாடு விடுதலை அடையும் என்று கோஷம் எழுப்பினார். வேலூர் சிறைச்சாலையிலிருந்து தப்பிவந்த ஈழப்போராளிகளை தமிழ்நாடு சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்த செய்தி அப்போது நினைவுக்கு வந்தது. கூட்டத்திலிருந்தவர்கள் தங்கள் கற்பனைகளோடு செய்தியை வேறு வேறு நிகழ்ச்சியாக மாற்றிக்கொடுத்தனர். அதிரடிப்படை கவச வாகனம் வருவதற்கு முன்னமே செய்தித் தாள்களின் வாகனங்கள் அந்த இடத்தை அடைந்திருந்தன. காவலர்கள் தொலைக்காட்சி விளம்பரங்கள்; டீ காபி சாப்பாடு விற்போரின் குரல்கள்; போர்ட்டர்களின் அரைஓட்டம்; ரயில்வருகை அறிவிப்பு; வழியனுப்பும் நெகிழ்வும்; வரவேற்குமுற்சாகமும் ஆன எழும்பூர் ரயில் நிலைய வளமை சிதைந்து எங்கும் பரபரப்புசூழ்ந்து கொண்டது. இப்போது எங்குபார்த்தாலும் காக்கிச்சட்டைகள் நிறைந்திருந்தது. கூட்டம் கலைக்கப்பட்டது நாங்கள்வரிசைக்குத் திரும்பினோம். அந்த ராணுவவீரர் இன்னும் மனைவியோடு நெருக்கமாக நின்று கொண்டிருந்தார். " இந்த ரயில் நிலையத்தில் வெடுகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது எல்லோரும் கலைந்து ஓடுங்கள்" என்று காவல் துறை அறிவித்தது. தீப்பந்தமிட்டுக் கலைத்துவிட்ட தேன்கூடு மாதி கூட்டம் கலைந்தோடியது. சூட்கேஸ் எடுக்க மறந்தவர்கள்வாங்கிவந்த சப்பாட்டுப் பொட்டலத்தை எடுக்க மறந்தவர்கள் கையில் குழந்தையை துக்கிக்கொண்டு ஓடிய தாய்மார்கள் என உயிர்கள் பயத்தில் ஓடியது. நானும் நடராஜனும் கடைசியாய் உயிர்காக்க நடந்தோம். பின்னலே திரும்பிப் பார்த்தபோது வெறிச்சோடிக்கிடந்தது எழும்பூர் நிலையம். ஓட முடியாத - வேகமெடுத்து நடக்க முடியாத, அந்த ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் எங்களுக்கு முன்னால் நடந்து போனாள். ஒரு கையை இடுப்பிலும் ஒரு கையை அடிவயிற்றிலும் வைத்தபடி. அந்த ராணுவவீரன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் காணவில்லை. எந்த வெடிகுண்டும் இல்லை பயணிகள் திரும்ப வரலாம் என்று மறு அறிவிப்பு வந்தது. போலீசின் முந்தைய அறிவிப்பு எஞ்சிய இருக்கிற போராளிகளைப்பிடிக்கிற உத்தி என்பது பின்னால் ஆனந்தவிகடன் படிக்கும்போது அறிய நேர்ந்தது. நாங்கள் இருந்த வரிசை மறுபடி உருவானது. நாங்கள் அந்த ராணுவ வீரனின் அருகில் இருந்தோம். அவன் அவளிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவள் எதிர்த்திசையில் திரும்பிக்கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான். பல கட்ட சோனைக்குப்பின் இரண்டு மணிநேர தாமதத்தில் வைகை கிளம்பியது. நிலைகுத்திய கண்களோடு கிடந்த நான்கு பேர்: நெடுநேரம் வரை வராமல் வந்தும் ஓடவசதியாய் நின்றிருந்த காவலர்கள்; தலைதெறிக்க ஓடிய கூட்டம்: அவர்களை முந்திக்கொண்டு ஓடிய ராணுவவீரன்: ஒரு பெண் போலீஸ்: கண்ணீர் நிறைந்திருந்த கர்ப்பிணிப் பெண்னின் கண்கள் எல்லாம் இன்று வரை கூட வருகிறது. அதுவரை என்னோடு வந்த கற்பிக்கப்பட்ட இலக்கணங்கள் அருவருப்பாய் கழிந்தோடியது புகைவண்டி கழிப்பறையினூடாக. |
23.11.09
கற்பிதங்கள் கழிந்து ஓடும் நேரம்.
21.11.09
ஒரு பறவை - ஒரு கவிதை
சாத்தூர் ரயில் நிலையத்தின் முன்னால் கால்சரய் போட்ட ஒருவன் அந்த நாடோடிக் குடும்பத்துப் பெண்ணைச் சீண்டியதற்கு வாங்கிக் கட்டிக்கொண்ட கொடமானம் அவன் தலைமுறைக்கும் போதுமானதாக இருந்தது. நீ உயிர் பிழைத்திருப்பது உன் சாமர்த்தியத்தால் இல்லை என் மனிதாபிமானத்தால் என்று சொன்ன வாத்தைகளின் அர்த்தம் யானையின் முதுகில் ஒரு சின்ன தொரட்டிக்கம்போடு மீசை முறுக்கும் நோஞ்சான் யானைப்பாகருக்குத் தெரியும். எங்க ஊரில் அதை சத்தியத்துக்குக் கட்டுப்படிருக்கு எனச்சொல்லுவார்கள்.
ரொம்ப நளினமாக - கவித்துவமாக நான் பறவை எனப் பிரகடனப்படுத்துகிறது அன்புச்சகோதரி எஸ். தேன்மொழியின் கவிதை.
என்னை அங்கே தேடாதீர்கள்
என் இல் உள் நான் இல்லை
பறவையின் சிறகுகளில்
கட்டப்பட்டிருக்கும் என் வீடு.
கடலின் ரகசியங்களைகூட்டிப்
போகும் என் ஆளுமை.
அண்ட ஆகசங்களை
அடைகாக்கும் என் தாய்மை.
காட்டுப் பூக்களில்
கரைந்திருக்கும் என் பெண்மை.
16.10.09
புனிதவதிகள் மேல் சுமத்தும் அறியாதோர் பழி.
விளையாண்டு களைத்து தண்ணீர் குடிக்க வீடு நுழையும்பும்போது அவள் அதை மறைத்தாள்."எனக்குத்தெரியாம என்னத்த ஒளிச்சுவச்சு திங்கெ" என்று அவளிடம் கோபித்துக்கொண்டபோது. "ஆமா ஒன்யக்காட்லயும் எனக்கு தீமண்டமா பெருசுன்னு" சொன்னாள். பதில் போதவில்லை சந்தேகப்பொறி பற்ற ஆரம்பித்தது. முதல் பையனுக்கு முதல் மொட்டை. வீடும் உறவும் பரபரக்கிற சந்தோசத்தில் அவள் பங்கில்லை. கூட வரவில்லை. போ பின்னால வாரேன் சொன்னதை நம்பிக்கொண்டேன். வீடு திரும்பும் வரை வரவில்லை அப்போதுகூட எனக்கு அம்மா மேல்தான் கோபம், ஆண்டவன் மேலில்லை. சுத்தம் என்று பின்காரணங்கள் கொண்டு வரலாம். சுத்தம் ஒரு நாளும் சோறு போடாது. அது மனிதர்களைக் கூறு போடும்.
உலகவிருத்தியின் ஊற்றுகண்ணைத் தீட்டெனச்சமூகம் பழித்ததனால் வந்ததிந்தக்கேடு என்பதை முழுசாய்ப் புரிந்துகொள்ள ஒரு ஆணுக்கு கால்நூற்றாண்டு காலம் தேவையாக இருக்கிறது. சக மனுஷியை, சரிபாதியைப் புரிந்து கொள்ள மறுக்கிற தடுப்புச் சுவர்கள் தான் இங்கே அடுக்கடுகாக உயர்ந்து நிற்கிறது வர்ணங்களாலும் பேதமையாலும். புரியாத அறிவியல் மீது கோபுரங்கள் முளைத்த தேசமிது. |
4.9.09
கமலஹாசனும்- தீப்பெட்டிஆபீஸ் பெண்ணும் - கற்பிதங்களை கடந்து நிற்கும் இயல்புகள்.

அவள் வங்கிக்கு வரும்போது சிலநேரம் நேராக நானிருக்கும் செக்சனுக்கு வருவாள். சில நேரம் திட்டமிட்டு என்பக்கம் வருவதைத்தவிர்த்து விடுவாள். பணம் எடுக்கும் படிவத்தை என்னையே பூர்த்திசெய்து தரச்சொல்லி வற்புறுத்துவாள். அப்படியொன்றும் அவள் படிக்காதவளும் இல்லை பனிரெண்டு வரை படித்திருக்கிறாள். நாங்கள் சேவை செய்யும் பகுதிகளில் விதிகளை மீறி இப்படியான அதிகப்படியான வேலை செய்தாக வேண்டும். காரணம் எல்லாமே கிராமத்து வாடிக்கையாளர்கள். இந்தா போடு ஐநூறு என்று சொல்லி புத்தகத்தை நீட்டும்போது நாம் மறுத்தால் மல்லுக்கு நிற்பார்கள். " எங்களுக்குத்தான் படிக்கத்தெரியதுல்லா" என்று தெனாவட்டாகச் சொல்லுவார்கள். கொஞ்சம் பழகிய பின்னால் அப்படியே அன்பாகிப் போவார்கள். பூர்த்திசெய்து கையெழுத்துப் போடவேண்டிய இடத்தை x குறியிட்டு படிவத்தை திருப்பிக்கொடுத்தாள் கையெழுத்துக்கு முன்னால் + குறியிட்டு திருப்பித்தருவாள். முதலில் எனக்குப்புரியவில்லை. உங்களுக்கும் புரிந்திருக்காது. உங்களின் முதல் பெயரை அதாவது இனிஷியலை முன்னாள் போடுங்கள் என்று சொன்னால் இடக்காக அதுதான் இனிஷியல் என்று சொல்லுவாள். கணவரின் அல்லது தந்தையாரின் இனிஷியலைப் போடுங்கள் என்று சொன்னால் பிடிவாதமாக ரெண்டுமே அதுதான் என்று சொன்னாள். சந்தேகம் வந்து கையெழுத்து சரிபார்க்க வைத்திருக்கும் படிவத்தை எடுத்துப்பார்த்தேன் உண்மையில் அங்கேயும் + குறிதான் இருந்தது. என்னம்மா வீட்டுக்காரர சிலுவையில அடிச்சிட்டீங்கன்னு கேட்டேன் அதற்கு '' சார் கேலி பண்ணாதீங்க அது சிலுவைக்குறி '' என்று சொன்னாள் ஏஞ்சல் எனும் அந்தப்பெண். கொஞ்சம் ஆர்வம் வந்து கதை கேட்டேன். அவள் பனிரெண்டு வரை படித்து ஒருவனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள். அப்போது அவளுக்கு விஜயலட்சுமி என்கிற பெயர். அவள் என்னிடம் சொல்லமறுத்த எதோ ஒரு காரணத்துக்காக மணமுறிவு ஏற்பட்டிருக்கிறது. பெண்ணடிமைத்தனம் புரையோடிக்கிடக்கும் இந்தச் சமூகத்தில் வேறு என்ன காரணம் இருந்துவிடப் போகிறது. புகுந்த வீடும், பொறந்த வீடும் தடுக்க தடுக்க மீறிவந்து தீவிர கிறிஸ்தவ பக்தையாகி விட்டாளாம். அது சரி அப்பா பேரையாவது இனிஷியலாகப் போடலாமே என்றேன்." எந்தப் பெய பேரும் வேண்டாம், எனக்கு ஜீவன் ஏசு அவர் போதும் " என்று சொன்னார். ஒட்டு மொத்த ஆண் வர்க்கம் மீதே ஒரு வெறுப்பு மண்டிக்கிடப்பதை அறியவைக்கிற பதில் அது. எனக்கு இப்போது கமலஹாசன் ஞாபகம் வந்தது. வாணியின் குரலை, சரிகாவின் குரலை, நீர்த்துப்போகச் செய்துவிட்டு அல்லது இருட்டடித்துவிட்டு கமலஹாசனின் குரலே எங்கும் ஒலிக்கிறது. ரொம்பப் புதுமையாக இருப்பது போல மாய்மாலம் காட்டும் ஆணாதிக்க சிந்தனை ஒளிந்து கிடக்கிறது அந்தக்குரலில். கமலின் எல்லாப் படங்களிலும் மனைவியரே ஆடை வடிவமைப் பாளராக வருவது வேறு கதை. அவர்களிருவரும் மணந்திறந்து பேசினால் என்ன பேசக்கூடும், ?. சேரனின் ஆட்டோகிராப் ஒரு பார்போற்றும் சினிமாவாகி பொருளும் புகழும் அள்ளியது. அதை அப்படியே மாற்றி ஒரு பெண்ணின் ஆட்டோகிராப் ஆக்கும் துணிச்சல் இங்கில்லை. அப்படியான கதைகளுக்குப் பஞ்சமாகிப்போனது தமிழ் சினிமாவும் கலாச்சாரமும். இப்படியொரு படம் வந்தது தமிழில், ருத்ரையாவின் அவள் அப்படித்தான். சுத்தமாகப் புறந்தள்ளி தூக்கியெறிந்தது தமிழ்ச்சமூகம். படத்துக்கும் கூட அப்போது A சான்றிதழ் வழங்கியிருந்தது சென்சார் போர்டு . உடுத்தியிருக்கும் ஆடையில் ஒரு சிறு இஞ்ச் கூட விலகாத விரசமில்லாத படம் அது. காட்சிகளை விட தர்க்கம் தூக்கலாக இருந்த படம். ரெண்டு கதாநாயகி இருந்தால் மனைவி தவிர்த்த ஒருத்தியைக் கொன்று குவிக்கும் குரூரச் சிந்தனை மிக்கது தமிழ்ச் சினிமாக்கதை. மீறி உயிரோடு இருக்க நேர்ந்தால் அவர்களைக் கடவுள், இசை, சமூக சேவையென ஒதுக்குத் தள்ளிவிடும் மனுதர்மச் சிந்தனை மிகுந்தது நமது சினிமா. பாலச்சந்தர் இதில் கில்லாடி. ரொம்ப பெண் கதாபாத்திரங்களை உருவாக்கி கடைசியில் சிதைத்தவர். இது பெரிய வாதங்களை உருவாக்கும் பகுதி. சாஞ்சா சாயிர பக்கம் சாயும் எழுபத்தைந்தாண்டு கால சினிமாவை வெறும் மூன்று மூலக்கூறுகளில் அடக்கிவிடலாம். கோடம்பாக்கம் பக்கத்தில் நின்று கொண்டு " மதுரக் கத வச்சிருக்கேன்" என்று எவனாவது சொன்னால் அவனை அருவாளோடு வந்து கடத்திக்கொண்டு போய்விடுவார்கள். இந்த நிமிடத்தில் கொள்ளை விலைக்கு விற்பனயாவது அருவாளும் மதுரையும் தான். அதிலிருந்து மீறி வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தக் கற்பிதங்களை உடைத்தெறிகிற இயல்பான வாழ்க்கையை ஊடகங்களுக்குள் கொண்டு வரும் நாட்கள் தொலைவில்இல்லை. இந்த நம்பிக்கையோடு முடிக்கலாம், அதற்கு முன்னாள். முந்தா நாள் பேருந்து நிலையத்தில், பேன்சிஸ்டோர் மறைவில் ஒரு ஆடவனோடு பேசிக்கொண்டிருந்த பெண் ஏஞ்சலேதான். அவள் கண்ணில் ஒளிர்ந்துகொண்டிருந்த காதலையும், முகத்தில் குடிகொண்டிருந்த பரவசத்தையும் எவ்வளவு தூரத்தில் இருந்தும் கண்டுகொள்ளலாம். நேற்றுவங்கிக்கு வந்து பணம் எடுத்தாள் M.ஏஞ்சல் என்று கையெழுத்திட்டு. கர்த்தரும் கற்பிதங்களும் ஒதுங்கிப் போனது இயல்புகளின் வெக்கையில். |