' ரெண்டுதரவெ போட்டேன் பிஸி பிஸின்னே வருது '
......
' என்ன பிள்ளைக ஒரு போன் பண்ணத் தேரமில்லாம என்னதான் படிப்போ'
வெங்காயம் உறிக்கும் போதும், வீடு கூட்டும் போதும் அங்களாய்த்தவாறே பொழுதுகடத்தும் தாய்க்காரி.இனிப்புக்கடையில், எதேச்சையாய்,மிக்சர் வாங்கப்போன போது கூட பால்கோவவைப் பார்த்ததும் நிழலடுகிறது பிள்ளை முகம்.விளம்பரத்தில் வரும் இளைஞனைப் பார்த்ததும் இதே கலரில் அவனுக்கொரு சட்டை எடுக்கவேணும் என்று குறிப்பெழுதிக்கொள்கிறாள்.
இதே தவிப்பு அங்கும் இருக்குமா ?.பெரு நகர வீதியில் எதிர்ப்படும் தாய்மார்களின் நடையில்,விடுதித்தேநீரில் இல்லாத சுவையில், அழுக்குத் துணியைத் துவைக்கிற பொழுதில் நிழலாடுமா தாயின் முகம்?.
இந்தக் கேள்விகளைத் தகப்பன் கேட்டான் தாயிடம்.
அவளும் ஒரு எதிர்க் கேள்வி வைத்திருந்தாள், பேருந்தில் பணியிடத்தில் எதிர்ப்படும், மூதாட்டிகளை சேவிக்கிற கரிசனம் எதற்காகவென.
ஞாயிற்றுக் கிழமை காலையிலே கிளம்பிப் போனார்கள் ஊருக்கு.பேருந்துப் பயணத்தின் பாதியில் கனமழை கொட்டியது.ஓட்டுனர் அழைத்து எஞ்சினுக்கு அருகில் உட்காரச்சொன்னார்.குளிருக்கு இதமாக இருந்தது.ஓட்டுனரிடம் கொஞ்சம் அம்மாவின் சாயல் தெரிந்தது.அது கதகதப்பில உபசரிப்பிலா என்று பிரித்துப்பார்க்க முடியவில்லை அவனுக்கு. கைப்பையில் கனத்தது அம்மாவின் நினைவுகளும் அவள் பல்லுக்கு இதமாக மெள்ள கொஞ்சம் இனிப்புகளும்.
இண்டு இடுக்கிலிருந்து கூடப் பூக்கும் உறவுகளின் நினைவுகள்.
எங்கு தோண்டினாலும் கூடத் தட்டுப்படும் ஈரம்.