யார் வீட்டிலாவது கல்யாணம்,சடங்கென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய்ய ஒலி பெருக்கித் தளவாடங்கள் வரும். குழல் விளக்கும், போனோக்ராம் ரிக்கார்டுமாக ஊர் அல்லோல கல்லோலப்படும்.தில்லாணா மோகனாம்பாள் படகாருகுறிச்சியி நாதசுரம் நகுமோகு பாட ஆரம்பித்ததும் ஹோவெனச் சத்தம் வின்னைமுட்டும்.அந்த நேரத்திலிருந்து விடிய விடிய ரிக்காடுசெட் போடுகிறவரோடு தவம் கிடப்போம், சிநேகம் கொள்வோம். அவருக்கு சிகரெட் வாங்கிக் கொடுக்க,அவருக்கெனச் சொல்லி வீட்டிலிருந்து வரக்காப்பி கொண்டுவர போட்டிகள் நடக்கும்.
அதுபோலத்தான் எங்கள் பள்ளிக்கூடம் வந்த நீலாம்பிகை டீச்சர்.தினம் அவரை வழியனுப்ப பஸ் நிறுத்தத்துக்கு போவது, அவரது குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு விளையாடுவதெனக் கிடந்த கிறக்கம் தான். முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பட்டாளம்,பாட்டு,விளையாட்டு என எல்லாமே என்னைச் சுற்றியே வட்டமிடும். சாத்தூர் சுற்றுவட்டாரத்திலே நம்ம ஸ்கூலோட பெருமைய நீதாங் காப்பாத்தனும் என்று தலைமை ஆசிரியர் என்னிடம் பெரிய பாரத்தை தூக்கிவைத்தபோது கிடைத்த பெருமையோடு ஊரும் என்னை தூக்கிவைத்து உச்சி முகரும். அதை நாங்கள் எங்கள் சேட்டைகள் மூலம் காலிபண்ணிவிடுவோம்.
ஊரில் உறவு முறைக்கு மிக முக்கியப்பங்கு இருக்கும். எல்லோருக்கும் அத்தைமகள் மாமன் மகள்கள் கொத்துக் கொத்தாக இருக்கும்போது எனக்கு மட்டும் சித்திகள்,அத்தைகளாக வளைய வளைய வருவார்கள். எனவே அந்த ஆட்டத்தில் நான் ஒற்றை ஆளாய் பார்வையாளர் பக்கம் நின்று கொண்டிருப்பேன். சோறு பொங்கி விளையாடுகிற விளையாட்டில்கூட எனக்கு தகப்பனார் அல்லது மகன் எனும் பாத்திரமே ஒதுக்கப்படும்.
எனவே பக்கத்து ஊரிலிருந்து தான் எனக்கான தேவதைக் கனவுகள் வரும். ஒவ்வொரு கனவுச் சித்திரத்தையும் எனக்குள்ளே எழுதி எழுதி அழித்துவிடுவேன். மாணவர் மன்றத்தில் எனது பாடல் ஒலிக்க வேண்டுமானால் அவள் பாடு என்று முதல்வரி எடுத்துக் கொடுக்கவேண்டும். அவளுக்கு எனது ஊர் புளியங்காய் பிடிக்கும். எனக்கு அவள் கைக்குள் பொத்திவைத்து கொண்டுவரும் எல்லாமே கிறக்கம். ஒரு அட்லஸ் சைக்கிளும் அவளும் இருந்தால் உலகத்தை சுண்டுவிரலில் தூக்கிவிடலாம் என்று கனவு கண்ட காலம்.
அவளின் கண்ணில் படுவதற்காகவே அவள் வீட்டுப் பக்கம் இருக்கும் நூல்நிலையம் போனேன்.யுனெஸ்கோ கொரியரின் வழுவழுத்த பக்கங்கள் என்னை எழுத்தோடு இழுத்துக் கொண்டு போகும்.எட்டுவரை என்னோடு படித்த அவள் நான் சாத்தூருக்கு ஒன்பதாம் வகுப்புக்குப் போனவுடன் கல்யாணமாகி ஊரை விட்டுப் போய்விட்டாள்.அவளால் அறிமுகமான எழுத்து வாசம் என்னைச் சுற்றிக் கொண்டே வந்தது. குரும்பூர் குப்புசாமி,சாண்டில்யன்,தாண்டி சுஜாதா அறிமுகமானார் அவரோடு ஜெயராஜ் ஓவியங்களும் இரவுத்தூக்கம் கெடுக்கும்.
சாத்தூர் ஏவீஸ்கூலுக்கு வந்தேன் ஒரு எட்டுகிலோமீட்டர் தொலைவில் இன்னொரு உலகம் இருந்தது அது என் கிராமத்தை கேலிசெய்யும் சிறுநகரம்.ஒருகோடியில் மாணவர் விடுதி மறுகோடியில் ஆயிர வைசியப்பள்ளி . இடையில் நடந்து கடக்கும் தூரத்துக்குள் பச்சைத்தாவணி பாவாடையில் எதிர்ப்படும் எத்தல் ஹார்விப் பெண்களில் தொலைந்து போன கலைச் செல்வியின் முகம் தேடி தோற்றுப்போனேன்.அவற்றைத் துடைக்கிற சாக்கில் சினிமா,விளையாட்டு,படிப்பு என உயர்நிலைப்போட்டி முடிந்த போது எனது கிராமத்து சேக்காலிகள் என்னைவிட்டுக்கடந்து போனாகள். என்னோடு லட்சுமணன்,குணா,முருகையா,செல்வகுமார் நடிகன் ராம்கி எல்லோரும் கூட வந்தார்கள்.
எனது அண்ணன் என் இலக்கிய தடத்தை வாசிப்பின் மூலம் அறிமுகப்படுத்திய அந்தோணிக்காக முழுநேரத்தூதுவனாக என்னை வரித்துக் கொண்டேன். அவனுக்காக கடிதம் எடுத்துக்கொண்டு போய் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தேன். அவனுடைய காதலியை நான் பாலோ பன்னுகிறேன் என்று குடுமபத்தாரிடமும் அவனிடமும் சொல்லியிருக்கிறாள்.இதைச் சொல்லிவிட்டு என் உடன்பிறவா சகோதரன் சிரித்தான். எனது தொழில் நுட்பக் கோளாறு என்றுணர்ந்த பிறகு நொந்து போய் வேண்டாமப்பா தென்றலை,அன்னத்தை,மேகத்தை வைத்துக்கொள் என்னைவிட்டுவிடு என்று சொல்லி விலகிக் கொண்டேன். விலகி ஜெயகாந்தன்,சுஜாதா,பாலகுமாரன்,சில சோவியத் புத்தகங்கள் அதில்வரும் பல்லுடைக்கும் பெயர்கள் ஆகியவற்றோடு கரைந்து போனேன்.
அப்போது தான் இளையராஜாவும், இன்ரீகோ ரெக்கார்டுகளும், ஜானகி, ஜேசுதாஸ், ஜென்சி, சுனந்தா, என்னடிமீனாட்சி எஸ்பிபியும் என்னை இழுத்துக் கொண்டார்கள். நான் மூங்கில் வரிச்சி ஒடித்து ஓட்டைகளிட்டு புல்லாங்குழல் செய்தேன். ஊருக்கு வெளியே உட்காந்து அடுப்பு ஊதுவதுபோல் ஊதி ஊதி இசை செய்தேன். எனது குரலில் ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு பாட்டு ஒருமுறையாவது பாடாமல் இரவு நேர கிராம ஜமா முடியாது.அந்தகாலத்து இசைக் கச்சேரிகள் கேட்பதற்காக சைக்கிளில் இருபது முப்பது கிலோமீட்டர் இரவுப்பயணம் போவோம். ஒரே ஒரு முறையாவது நெல்லை முயுசியானோ கச்சேரியில் எல்லா வாத்தியங்களோடும் பாடவேண்டும் என வெறியாய் அலைந்து, இரண்டு முறை பாடவும் செய்தேன். வான்கோழி முயற்சியாக பல இடங்களில் வெறும் தாளத்தோடு கச்சேரியும் நடத்தினோம்.கமகம் சுதி,மூச்சுப்பயிற்சி என்கிற ஏதும் தெரியாத எங்கள் சினிமாப்பாட்டு உழைப்புத் தவிர ஏதும் இல்லாத பக்கத்து ஊர்களுக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.
எல்லாவற்றையும் சொல்லிமுடித்தேனா தெரியவில்லை.
ஒளித்து வைத்திருக்கிற இரண்டு பெண்பெயர்கள்,
ஒருகோடை மழை நேரம், எதிர்பாராத நேரத்தில் திடுமெனக் கிடைத்த வியர்வை கலந்த முதல் முத்தம், ஒரு பத்து மீட்டர் இடைவெளிக்குக் குறையாமலே பார்த்திருந்த என்னோடு பேசாத கவிதா ( வேறு பெயர்) பலவருடங்கள் கழித்துப் பார்க்கும்போது தன் பிள்ளையிடம்
'இந்த பாரு ஒங்கப்பா' என்று சொன்ன வார்த்தையின் முழு அர்த்தம்
எல்லாமே வேறு ,வேறு ராகங்களில் கூட வந்து மறைந்துருக்கும் பாடல்கள்.
ஊர்போகும் போது
தென்படும் நினைவிடங்கள்,
அவற்றின் மிச்சமாக
சில எழுத்துக்கள்,
எப்போதாவது
மதுக்கிறக்கத்தில்
மாதுவோடு பகிர்தல்,
எதாவதொரு உருவத்தில்
ஊடுறுவும் கனவு,
என்ன பலமான சிந்தனை
என்று ஊடறுக்கும்
அவளது கேள்வி,
அதோ அந்த ஷோகேசில்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற
வாசிக்காத புல்லாங்குழல்.
இவற்றோடு
தடதடவெனக்
கடந்துபோகிறது
நிகழ் வாழ்க்கை.