யார் வீட்டிலாவது கல்யாணம்,சடங்கென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய்ய ஒலி பெருக்கித் தளவாடங்கள் வரும். குழல் விளக்கும், போனோக்ராம் ரிக்கார்டுமாக ஊர் அல்லோல கல்லோலப்படும்.தில்லாணா மோகனாம்பாள் படகாருகுறிச்சியி நாதசுரம் நகுமோகு பாட ஆரம்பித்ததும் ஹோவெனச் சத்தம் வின்னைமுட்டும்.அந்த நேரத்திலிருந்து விடிய விடிய ரிக்காடுசெட் போடுகிறவரோடு தவம் கிடப்போம், சிநேகம் கொள்வோம். அவருக்கு சிகரெட் வாங்கிக் கொடுக்க,அவருக்கெனச் சொல்லி வீட்டிலிருந்து வரக்காப்பி கொண்டுவர போட்டிகள் நடக்கும்.
அதுபோலத்தான் எங்கள் பள்ளிக்கூடம் வந்த நீலாம்பிகை டீச்சர்.தினம் அவரை வழியனுப்ப பஸ் நிறுத்தத்துக்கு போவது, அவரது குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு விளையாடுவதெனக் கிடந்த கிறக்கம் தான். முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பட்டாளம்,பாட்டு,விளையாட்டு என எல்லாமே என்னைச் சுற்றியே வட்டமிடும். சாத்தூர் சுற்றுவட்டாரத்திலே நம்ம ஸ்கூலோட பெருமைய நீதாங் காப்பாத்தனும் என்று தலைமை ஆசிரியர் என்னிடம் பெரிய பாரத்தை தூக்கிவைத்தபோது கிடைத்த பெருமையோடு ஊரும் என்னை தூக்கிவைத்து உச்சி முகரும். அதை நாங்கள் எங்கள் சேட்டைகள் மூலம் காலிபண்ணிவிடுவோம்.
ஊரில் உறவு முறைக்கு மிக முக்கியப்பங்கு இருக்கும். எல்லோருக்கும் அத்தைமகள் மாமன் மகள்கள் கொத்துக் கொத்தாக இருக்கும்போது எனக்கு மட்டும் சித்திகள்,அத்தைகளாக வளைய வளைய வருவார்கள். எனவே அந்த ஆட்டத்தில் நான் ஒற்றை ஆளாய் பார்வையாளர் பக்கம் நின்று கொண்டிருப்பேன். சோறு பொங்கி விளையாடுகிற விளையாட்டில்கூட எனக்கு தகப்பனார் அல்லது மகன் எனும் பாத்திரமே ஒதுக்கப்படும்.
எனவே பக்கத்து ஊரிலிருந்து தான் எனக்கான தேவதைக் கனவுகள் வரும். ஒவ்வொரு கனவுச் சித்திரத்தையும் எனக்குள்ளே எழுதி எழுதி அழித்துவிடுவேன். மாணவர் மன்றத்தில் எனது பாடல் ஒலிக்க வேண்டுமானால் அவள் பாடு என்று முதல்வரி எடுத்துக் கொடுக்கவேண்டும். அவளுக்கு எனது ஊர் புளியங்காய் பிடிக்கும். எனக்கு அவள் கைக்குள் பொத்திவைத்து கொண்டுவரும் எல்லாமே கிறக்கம். ஒரு அட்லஸ் சைக்கிளும் அவளும் இருந்தால் உலகத்தை சுண்டுவிரலில் தூக்கிவிடலாம் என்று கனவு கண்ட காலம்.
அவளின் கண்ணில் படுவதற்காகவே அவள் வீட்டுப் பக்கம் இருக்கும் நூல்நிலையம் போனேன்.யுனெஸ்கோ கொரியரின் வழுவழுத்த பக்கங்கள் என்னை எழுத்தோடு இழுத்துக் கொண்டு போகும்.எட்டுவரை என்னோடு படித்த அவள் நான் சாத்தூருக்கு ஒன்பதாம் வகுப்புக்குப் போனவுடன் கல்யாணமாகி ஊரை விட்டுப் போய்விட்டாள்.அவளால் அறிமுகமான எழுத்து வாசம் என்னைச் சுற்றிக் கொண்டே வந்தது. குரும்பூர் குப்புசாமி,சாண்டில்யன்,தாண்டி சுஜாதா அறிமுகமானார் அவரோடு ஜெயராஜ் ஓவியங்களும் இரவுத்தூக்கம் கெடுக்கும்.
சாத்தூர் ஏவீஸ்கூலுக்கு வந்தேன் ஒரு எட்டுகிலோமீட்டர் தொலைவில் இன்னொரு உலகம் இருந்தது அது என் கிராமத்தை கேலிசெய்யும் சிறுநகரம்.ஒருகோடியில் மாணவர் விடுதி மறுகோடியில் ஆயிர வைசியப்பள்ளி . இடையில் நடந்து கடக்கும் தூரத்துக்குள் பச்சைத்தாவணி பாவாடையில் எதிர்ப்படும் எத்தல் ஹார்விப் பெண்களில் தொலைந்து போன கலைச் செல்வியின் முகம் தேடி தோற்றுப்போனேன்.அவற்றைத் துடைக்கிற சாக்கில் சினிமா,விளையாட்டு,படிப்பு என உயர்நிலைப்போட்டி முடிந்த போது எனது கிராமத்து சேக்காலிகள் என்னைவிட்டுக்கடந்து போனாகள். என்னோடு லட்சுமணன்,குணா,முருகையா,செல்வகுமார் நடிகன் ராம்கி எல்லோரும் கூட வந்தார்கள்.
எனது அண்ணன் என் இலக்கிய தடத்தை வாசிப்பின் மூலம் அறிமுகப்படுத்திய அந்தோணிக்காக முழுநேரத்தூதுவனாக என்னை வரித்துக் கொண்டேன். அவனுக்காக கடிதம் எடுத்துக்கொண்டு போய் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தேன். அவனுடைய காதலியை நான் பாலோ பன்னுகிறேன் என்று குடுமபத்தாரிடமும் அவனிடமும் சொல்லியிருக்கிறாள்.இதைச் சொல்லிவிட்டு என் உடன்பிறவா சகோதரன் சிரித்தான். எனது தொழில் நுட்பக் கோளாறு என்றுணர்ந்த பிறகு நொந்து போய் வேண்டாமப்பா தென்றலை,அன்னத்தை,மேகத்தை வைத்துக்கொள் என்னைவிட்டுவிடு என்று சொல்லி விலகிக் கொண்டேன். விலகி ஜெயகாந்தன்,சுஜாதா,பாலகுமாரன்,சில சோவியத் புத்தகங்கள் அதில்வரும் பல்லுடைக்கும் பெயர்கள் ஆகியவற்றோடு கரைந்து போனேன்.
அப்போது தான் இளையராஜாவும், இன்ரீகோ ரெக்கார்டுகளும், ஜானகி, ஜேசுதாஸ், ஜென்சி, சுனந்தா, என்னடிமீனாட்சி எஸ்பிபியும் என்னை இழுத்துக் கொண்டார்கள். நான் மூங்கில் வரிச்சி ஒடித்து ஓட்டைகளிட்டு புல்லாங்குழல் செய்தேன். ஊருக்கு வெளியே உட்காந்து அடுப்பு ஊதுவதுபோல் ஊதி ஊதி இசை செய்தேன். எனது குரலில் ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு பாட்டு ஒருமுறையாவது பாடாமல் இரவு நேர கிராம ஜமா முடியாது.அந்தகாலத்து இசைக் கச்சேரிகள் கேட்பதற்காக சைக்கிளில் இருபது முப்பது கிலோமீட்டர் இரவுப்பயணம் போவோம். ஒரே ஒரு முறையாவது நெல்லை முயுசியானோ கச்சேரியில் எல்லா வாத்தியங்களோடும் பாடவேண்டும் என வெறியாய் அலைந்து, இரண்டு முறை பாடவும் செய்தேன். வான்கோழி முயற்சியாக பல இடங்களில் வெறும் தாளத்தோடு கச்சேரியும் நடத்தினோம்.கமகம் சுதி,மூச்சுப்பயிற்சி என்கிற ஏதும் தெரியாத எங்கள் சினிமாப்பாட்டு உழைப்புத் தவிர ஏதும் இல்லாத பக்கத்து ஊர்களுக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.
எல்லாவற்றையும் சொல்லிமுடித்தேனா தெரியவில்லை.
ஒளித்து வைத்திருக்கிற இரண்டு பெண்பெயர்கள்,
ஒருகோடை மழை நேரம், எதிர்பாராத நேரத்தில் திடுமெனக் கிடைத்த வியர்வை கலந்த முதல் முத்தம், ஒரு பத்து மீட்டர் இடைவெளிக்குக் குறையாமலே பார்த்திருந்த என்னோடு பேசாத கவிதா ( வேறு பெயர்) பலவருடங்கள் கழித்துப் பார்க்கும்போது தன் பிள்ளையிடம்
'இந்த பாரு ஒங்கப்பா' என்று சொன்ன வார்த்தையின் முழு அர்த்தம்
எல்லாமே வேறு ,வேறு ராகங்களில் கூட வந்து மறைந்துருக்கும் பாடல்கள்.
ஊர்போகும் போது
தென்படும் நினைவிடங்கள்,
அவற்றின் மிச்சமாக
சில எழுத்துக்கள்,
எப்போதாவது
மதுக்கிறக்கத்தில்
மாதுவோடு பகிர்தல்,
எதாவதொரு உருவத்தில்
ஊடுறுவும் கனவு,
என்ன பலமான சிந்தனை
என்று ஊடறுக்கும்
அவளது கேள்வி,
அதோ அந்த ஷோகேசில்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற
வாசிக்காத புல்லாங்குழல்.
இவற்றோடு
தடதடவெனக்
கடந்துபோகிறது
நிகழ் வாழ்க்கை.
28 comments:
//எல்லாவற்றையும் சொல்லிமுடித்தேனா தெரியவில்லை.
ஒளித்து வைத்திருக்கிற இரண்டு பெண்பெயர்கள்,
ஒருகோடை மழை நேரம், எதிர்பாராத நேரத்தில் திடுமெனக் கிடைத்த வியர்வை கலந்த முதல் முத்தம், ஒரு பத்து மீட்டர் இடைவெளிக்குக் குறையாமலே பார்த்திருந்த என்னோடு பேசாத கவிதா ( வேறு பெயர்) பலவருடங்கள் கழித்துப் பார்க்கும்போது தன் பிள்ளையிடம்
'இந்த பாரு ஒங்கப்பா' என்று சொன்ன வார்த்தையின் முழு அர்த்தம்
எல்லாமே வேறு ,வேறு ராகங்களில் கூட வந்து மறைந்துருக்கும் பாடல்கள்.
ஊர்போகும் போது
தென்படும் நினைவிடங்கள்,
அவற்றின் மிச்சமாக
சில எழுத்துக்கள்,
எப்போதாவது
மதுக்கிறக்கத்தில்
மாதுவோடு பகிர்தல்,
எதாவதொரு உருவத்தில்
ஊடுறுவும் கனவு,
என்ன பலமான சிந்தனை
என்று ஊடறுக்கும்
அவளது கேள்வி,
அதோ அந்த ஷோகேசில்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற
வாசிக்காத புல்லாங்குழல்.
இவற்றோடு
தடதடவெனக்
கடந்துபோகிறது
நிகழ் வாழ்க்கை.//
மாமா...ஏ!கிளாஸ்....
எல்லாத்தையும் சொல்றது கஷ்டம்தான்,, இருந்தாலும் பதிவு அருமையா இருக்குது
//இவற்றோடு
தடதடவெனக்
கடந்துபோகிறது
நிகழ் வாழ்க்கை.
//
எங்கோ ஆரம்பித்து இந்த கவிதையை போலவே தடதடத்து முடிந்திருக்கிறது பதிவு
மாப்ளே வா.
லாவண்யா சொன்னப்பிறகுதான் கவனிக்கிறேன்.
தவ்வித் தவ்வி வந்துவிட்டேன்.
கால்பாவாத இடங்களில்
என்னவெல்லாம் விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்பதை
நிதானமாக மறுசுழற்சிக்கு கொண்டு போகவேண்டும்.
வாங்க அண்ணாமலையான்.
எனக்குள் இன்னொருவன் வந்து
எழுத்துக்களை மட்டறுக்கிறான்.
மிகச்சரி லாவண்யா.
முழுமையாக இல்லையா.
சொல்லாமல் போனதுகூட
நிஜமான பதின் பருவ நினைவாகலாம்.
இங்கே மறைபொருள்கள் மிக உன்னதமானவை.
காடிக்கஞ்சியானாலும் மூடிக்குடிப்பது எல்லோர்
ரத்தத்திலும் கலந்தோடுது.
அன்புக்கு நன்றி தங்கையே.
அன்பு காமராஜ்,
பதின் பருவ நாட்குறிப்பிற்கு ஒரு அந்தஸ்து கொடுக்கிறது உங்களுடைய இந்த பதிவு. ரொம்ப அருமையா ஆரம்பிச்சு ஒரு மழைத் தொடர் பயணம் போல சில்லென்ற காற்றுடன், பச்சையம் கலந்த காற்று சுவாசப்பையை நிறைக்கிறது. அதீத பிரியத்துடன் ஒட்டிக்கொள்ளும் ஒரு டீச்சர் எல்லார் வாழ்க்கையிலும் வந்து போகிறார்கள். எனக்கு பொற்கொடி, என் முதல் தம்பிக்கு தங்கத்தை, இரண்டாமவனுக்கு பியுளா என்று அறிவை விட உணர்வை கிளறிய பெண் டீச்சர் பொதுவாய் இருக்கிறார்கள்.
புல்லாங்குழல் இசை எனக்கு கை வரவில்லை... என்னால் நிலவு தூங்கும் நேரம் பாடலின் முதல் அடியை தவிர வேறு எதுவும் வாசிக்க வராது. ஆனாலும் புல்லாங்குழலும், வயலினும் என் கனவில் வாசித்த, வாசிக்கிற இசை இன்று வரை தொடர்கிறது. இளையராஜாவின் அநேக பாடல்களில் உயிரை தொலைத்திருக்கிறேன்... நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு தங்க ரதத்தில், மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம், வசந்தகால கோலங்கள், மாதாவின் கோயிலில் போன்ற பிரத்யேகமான சில பாடல்களில் பிராண வாயு சேகரித்து வாழ்ந்து வருகிறேன். எனக்கு சரவணன் என்ற நண்பன் இருந்தான், பத்தாவது படித்த பிறகு ஒரு மியூசிக் சென்டரில் வேலைக்கு சேர்ந்து விட்டான். அவனின் தெரிவுகளில் சில பாடல்கள் எனக்கு புழக்கத்தில் இல்லாத சில பாடல்களை அறிமுகபடுத்தியது... மழை தருமோ என் மேகம், நினைவிலே மனைவி என்று, மலரே என்னென்ன கோலம், தென்றல் ஒரு பாடம் சொன்னது, கடலில் அலைகள் பொங்கும், சின்ன சின்ன மேகம் என்று இளையராஜாவின் பல பாடல்களை என் அன்றாட வாழ்க்கையின் இசை சித்திரங்களாய் கிறுக்கியது.
நான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தது ராஜெஷ்குமாரில் இருந்து தான், பிரபாகர், சுபா, ராஜேந்திர குமார் என்று தொடங்கி சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் என்று வளர்ந்தது... சுஜாதாவின் கடைசிபக்க அறிமுகங்களில் இருந்து முதலில் தொட்டது இந்திரா பார்த்தசாரதி, பாலகுமாரனில் இருந்து தி.ஜா. என்று பெண்கள் பற்றி பேசும் நாவல்களில் அதிக கவனம் வந்தது... என்னுடன் இருந்தவர்கள் என்னை பாலகுமாரனின் தீவிர வாசகனாக பார்த்தார்கள்... புருஷவிரதம் என்கிற நாவல் வரை பாலகுமாரினின் எல்லா நாவல்களையும் படித்திருக்கிறேன்...இன்னும் படிக்கிறேன்...
கரையோர முதலைகள், மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள், அகல்யா என்று நீங்கள் என்ன பெயர் சொன்னாலும் அதை படித்திருக்கிறேன்... பாலகுமாரன் விசிறி சாமியாரை எழுத ஆராம்பித்த போது...கொஞ்சம் சரித்திரம், ஆன்மிகம் என்று போன போது நான் வெளியே வந்து விட்டேன். லா.ஸ.ரா வை படிக்க குடுத்த சுரேஷ் என்ற நண்பன் எனக்கு புதுவிதமான எழுத்துநடையை அறிமுக படுத்தினான். அபிதா, புற்று, பாற்கடல், கழுகு, பச்சை கனவு என்று பறந்து விரிந்து, கிறங்கி கிடந்தேன் அதன் பிறகு.
சினிமா இசையின் மீது உள்ள ஆர்வத்தில் எங்கு பாட்டுக்கச்சேரி நடந்தாலும் போய் விடுவேன் ரவியுடன்... சீர்காழி கொவிந்தராஜனில் ஆரம்பித்து எஸ்.பி.பியில் முடியும் நிறைய கச்சேரிகளின் சாயலும் ஒரே மாதிரி இருக்கும். சுந்தர் ஜெகன், ஜீவன், அங்கிங்கு என்று அப்போது பிரபலமான இசைக்குழுக்களின் கச்சேரி என்றால் எப்படியாவது போய் விடுவோம். திருவிழாக்களின் ஒரு அங்கமாக இருந்தன அப்போது அந்த இசைக்குழுக்கள். தெருமூக்கில் நடக்கும் இசை கச்சேரிகளில் கதவுக்கு பின்னே அல்லது மொட்டை மாடியில் இருந்து பாடல்களையும், ரவியையும் ரசிக்கும் லதாவின் காதல் பார்வை, ரவிக்கு ஒரு கூடுதல் ஸ்வரத்தை சேர்க்கும்.
உடைந்து நொறுங்காத ஒரு கண்ணாடி குவளையில் நிரப்பிய இந்த பதின் பருவ நினைவுகளில் மிதக்கிறது கரைந்தும் கரையாமல் ஒரு ஐஸ்துண்டு.
அன்புடன்
ராகவன்
அருமையான பகிர்வு காமராஜ். விமலன் எழுதின ‘காக்காச் சோறு‘ புத்தகத்துக்கு நீங்க எழுதியிருக்கற முன்னுரை வாசிச்சேன். நன்றாக இருந்தது. பகிர்தலுக்கு நன்றி. வாழ்த்துகள்.
ரொம்ப நல்ல இருக்கு .
//யார் வீட்டிலாவது கல்யாணம்,சடங்கென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய்ய ஒலி பெருக்கித் தளவாடங்கள் வரும். குழல் விளக்கும், போனோக்ராம் ரிக்கார்டுமாக ஊர் அல்லோல கல்லோலப்படும்//
இப்போதும் எங்க ஊர்ல இந்த பாட்டு, கலாட்டா எல்லாம் இருக்கு என்ன .......கேசட் போய் cd
பாட்டு சத்தம் காதில விழுந்தாதான் ஒரு கொண்டாட்ட சந்தோசமே வரும் .
குரும்பூர் குப்புசாமி
யாரிவர் ?
சோறு பொங்கி விளையாடுகிற விளையாட்டில்கூட எனக்கு தகப்பனார் அல்லது மகன் எனும் பாத்திரமே ஒதுக்கப்படும் //
அய்யோ பாவம் அண்ணா.
சூப்பரா ஆரம்பிச்சு ஒரு மாதிரி சோகமா முடிச்சிட்டீங்க.
கண்தெரியாத இசைஞனொடும்,குல்சாரியோடும் திரிந்த காலம் அது. ஸ்தெப்பி புல்வெளியில் ஓடும் குட்டி குல்சாரி போல காரணமே இல்லாத சந்தோஷத்தோடு களைத்துப் போகாத கால்களோடு நுரை தள்ள ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என கணவு கண்ட காலமது. குதிரையின் நான்கு காலையும் சேர்த்துக்கட்டி தலைகீழாக தொங்கவிட்டு விட்டார்கள் மென்பொருள் கம்பெனியில். அந்த காலம் என்று சொல்கிற அளவுக்கு வயசாகவில்லையென்றாலும் முடிந்து போன காலம்தானே அது.
\\எல்லோருக்கும் அத்தைமகள் மாமன் மகள்கள் கொத்துக் கொத்தாக இருக்கும்போது எனக்கு மட்டும் சித்திகள்,அத்தைகளாக வளைய வளைய வருவார்கள். எனவே அந்த ஆட்டத்தில் நான் ஒற்றை ஆளாய் பார்வையாளர் பக்கம் நின்று கொண்டிருப்பேன். சோறு பொங்கி விளையாடுகிற விளையாட்டில்கூட எனக்கு தகப்பனார் அல்லது மகன் எனும் பாத்திரமே ஒதுக்கப்படும்.
எனவே பக்கத்து ஊரிலிருந்து தான் எனக்கான தேவதைக் கனவுகள் வரும். ஒவ்வொரு கனவுச் சித்திரத்தையும் எனக்குள்ளே எழுதி எழுதி அழித்துவிடுவேன்.\\
ஏங்கதய படிச்ச மாதிரி இருக்கு. கூடப்படிக்கிறவன் மச்சான்னு கூப்பிட்டா கொலவெறியோட மொறைக்கிற அளவுக்கு சித்தி மகள்களும் பெரியம்மா மகள்களும். மருந்துக்கு கூட அத்தை மக கிடையாது. பரவாயில்லை...ஞாபகம் வைப்பதற்காகவது தொடர்பதிவெழுதுபவர்களுக்கு ஏதோ வாய்த்திருக்கிறது. இருபத்தெட்டு ஆகியும் இன்னமும் நாங்கெல்லாம் எழுதி எழுதி அழிச்சுகிட்டுதான் இருக்கிறோம். எதுவும் நடக்கிற மாதிரி தெரியல.பாப்போம் இன்னும் எத்தனை வருஷம்தான் கோலம் போடுறோம்னு.......
இன்னும் சொல்ல முடியாத சொல்லக் கூடாதவை கூடக் கோடி இருக்கலாம் ஒவ்வொருவரிடமும்....எல்லாமேவா சொல்லிவிடமுடிகிறது???? சொன்னவை மழையாய் மனதை நனைத்தாலும்!
ராகவன்...
நினைத்தநேரமெல்லாம் கிடைக்கும்
மாடித் தொட்டி நீர் மழை போல.
எழுத்தும் பேச்சுமாக கிடைத்த என் அன்பு
ராகவன்.
நான் எல்லா துக்கங்களையும் பாடல்வழியே கரைத்துவிடுவேன்.
இன்னொருவர் காணாதபடி.
எல்லா சந்தோசங்களையும் அதன்மீதே தெளித்துவிடு
வேன் எல்லோரையும் தொற்றிக்கொள்ளும்படி.ஏழுத்துக் என் கைபற்றுகிறது நன்றி ராகவன்.
வாருங்கள் வாசுதேவன். நலமா ?
அன்புக்கு நன்றி.
வாங்கப்பா மதார்.
குரும்பூர் குப்புசாமி.
ராணிமுத்துவில் கதை எழுதுபவர்.
உங்க ஏரியா தானே, நெஜம்மாவே தெரியாதா ?
இல்லை காமெடியா ?
அமித்தம்மா,
கருத்துக்கு நன்றி
அருணா நன்றி.
vetti said...
// கண்தெரியாத இசைஞனொடும்,குல்சாரியோடும் திரிந்த காலம் அது. ஸ்தெப்பி புல்வெளியில் ஓடும் குட்டி குல்சாரி போல காரணமே இல்லாத சந்தோஷத்தோடு களைத்துப் போகாத கால்களோடு நுரை தள்ள ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என கணவு கண்ட காலமது.//
அடடா அமிர்தமப்பா,
அமிர்தம்,
அண்ணா, மிகவும் ரசித்து படித்தேன். உணர்ச்சிக்குவியலாகி போனேன்! அப்படியே காட்சிகள் கண்முன்....நீங்கள் ஒரு நாவல் எழுதலாம்...(ஏற்கெனவே எழுதியிருந்தால் அறிய தாருங்கள்.)
/எனது தொழில் நுட்பக் கோளாறு என்றுணர்ந்த பிறகு நொந்து போய் வேண்டாமப்பா தென்றலை,அன்னத்தை,மேகத்தை வைத்துக்கொள் என்னைவிட்டுவிடு என்று சொல்லி விலகிக் கொண்டேன்/
:-) அல்லது :-( ?
//வாங்கப்பா மதார்.
குரும்பூர் குப்புசாமி.
ராணிமுத்துவில் கதை எழுதுபவர்.
உங்க ஏரியா தானே, நெஜம்மாவே தெரியாதா ?
இல்லை காமெடியா ? //
நா பையன் இல்ல பொண்ணுங்க , சத்தியமா அவர தெரியாது . ராணிமுத்து எல்லாம் நா சின்ன வயசுல படிச்சது . அதுக்கு அப்புறம் எல்லாம் கொஞ்ச நாள் ராஜேஸ்குமார் தான் .
காமராஜ் அண்ணா,
பகிர்வை நேற்றே படித்து விட்டாலும் பின்னூட்டம் இட நேரமில்லை. மிக அருமையான நினைவலைகள். ராகவன் கூறியது போல் தொடர் பதிவுக்கே ஒரு அந்தஸ்து தந்துள்ளது, உங்கள், மாதண்ணனின் பகிர்வுகள்.ஒரு கவிதையாக இருந்தது.
Kalakal sir....
அன்பின் முல்லை.
நன்றி.
சகோதரி மதார்..
ராணி ராணிமுத்துவில் எழுதுவார் அவர்.
ரொம்ப மோசமாகவெல்லாம் இல்லை.
அந்தப் புத்தகத்தின் தரத்துக்கு எழுதுவார்.
நீங்க சொல்ற மாதிரி அதில் கிடையாதுப்பா.
அன்புக்கு நன்றி
அம்பிகா.
0
நன்றி ப்ரதீப்.
அருமையான நினைவுகள்...படிக்கும்போது எங்கயோ கையப்புடிச்சி கூட்டிட்டுபோறமாதிரியே இருக்குங்க....
தோழர் காமராஜ் அவர்களே !
சில சமயம் வார்த்தைகள் அற்று .......
வெறும் மவுனம்
மட்டுமே நிலவுவது போல........
இருக்கிறது
உங்களின் இந்த பதிவை படிக்கும் போது
இதற்கும் மேல் என்னால் ஏதும் எழுத முடியவில்லை
"நான் பாடவந்த பாடல் இன்னும் தீரவில்லை "
அருமையான தலைப்பு !
அன்புடன் கிச்சான்
அருமையான நினைவலைகள், கடகடவென கடந்து போகிறது வாழ்க்கை.
Post a Comment