கரிச்சான் குருவிச்சத்தம்
வெங்கலச் சட்டியில்
பால்மோதும் சத்தம்
மாட்டின் மணிச்சத்தம்
சாணி தெளிக்கும்
வீட்டுவாசல்களோடு
விடிந்து கிடந்த காலை
மருவி.
தூரத்துவீட்டில் கேட்கும்
சாம்பிராணி மணக்கும்
சுப்ரபாதம்
மொழி புரியாவிட்டாலும்
மனனம் ஆகிப்போன
மசூதியின் பாங்கோசை
குளிர் வியர்வை கோர்த்த
பால் பொட்டலம்.
வீசியெறியப்பட்டு
விரிக்கப்படாத நாளிதழ்,
வியர்வை வேண்டித்
தலைப் பாகையுடன்
நடக்கும் மேலாளர்.
எல்லாவற்றோடும்
இணைந்துகொண்டது
பத்து ரூபாய்க்கு
ஒத்தக்குடம் தண்ணீர்.
நீர்வராத் தெருக்குழாயில்
கூடு கட்டப் பழகிவிட்டது
சிட்டுக்குருவி.
15 comments:
அண்ணா, ரொம்ப நாளா பதிவுபக்கம் காணோமே?
/வியர்வை வேண்டித்
தலைப் பாகையுடன்
நடக்கும் மேலாளர்.
/
டக்-னு புரியலை...அப்புறம் :-).
ரொம்ப நல்லாருக்கு - குருவிக்காவது உபயோகப்படட்டுமே!!
//குளிர் வியர்வை கோர்த்த
பால் பொட்டலம். //
மிகக் கவர்ந்தது.
நல்ல கவிதை அண்ணா.
ஆனால் முதல் மூன்று பத்திக்கும் அடுத்த இரண்டு பத்திக்கும் இடையில் ஏதோ தொடர்பு துண்டிக்கப்பட்டது போல... இது ஒரு வேளை தோற்ற மயக்கமா? கால மாற்றங்களை சொல்லும் கவிதை போல விளங்கிக் கொண்டேன். கவிதையின் இறுதி பத்தி கொஞ்சம் வேறு கருத்தும் சொல்வது போல இருக்கு.
நல்லா இருக்கு அங்கிள்!
//மொழி புரியாவிட்டாலும்
மனனம் ஆகிப்போன
மசூதியின் பாங்கோசை//
ரொம்ப ரசித்தேன்.
அன்பு காமராஜ்,
கடைசி நான்கு வரிகளில் தெறிக்கும் ஹைக்கூ, கவிதையை வேறு தளத்திற்கு உயர்த்துகிறது... குளிர் வியர்வை பால் பொட்டலம், அழகாய் இருந்தது கை மாற்றி மாற்றி வீட்டுக்குள் கொண்டு செல்கிறேன் இந்த கவிதையையும்...
முன்னாடி எங்க வீட்டுல ஆவின் பால் தான் வாங்குவோம், அது அப்போ பாட்டிலில் வரும். அழகான நீலம், சிகப்பு கோடுகள் போட்ட அலுமினியம் மூடியை திறந்தவுடன் மேலே ஒட்டிக்கொண்டு இருக்கும் வெண்ணையை தின்ன நானும் தம்பியும் சண்டை போடுவோம். அந்த காம்பவுண்டில் என் வீட்டிலும், என்னுடைய பெரியம்மா வீட்டிலும் மட்டுமே ஆவின் பால் வாங்குவோம், ஏனைய பிறருக்கு பால்க்கார கோமதி வந்து, சுட சுட கறந்த பாலை கொண்டு வந்து ஊத்தி விட்டு செல்வாள். பாங்கோசையும், காலையில் கிளம்பும் ராமேஸ்வரம் பாசஞ்சரும் ஒரே நேரத்தில் எழுப்பும் எங்கள் எல்லோரையும். சிலோன் ரேடியோவில் ஒளி பரப்பாகும் பக்தி பாடல்களில் தப்பாமல் இருக்கும் இரண்டு இந்து சமய பாடல்கள், ஜிக்கி, வசந்தா அல்லது லீலா பாடிய கிறித்துவப்பாடல், நாகூர் ஹனிபாவின் பாடலும் நிரம்பி வழியும் எங்கள் வீட்டில். அப்போது எங்கள் காம்பவுண்டிலேயே யாரிடமும் டேப் ரெகார்டர் கிடையாது... அதிக பட்சமாக ஒரு பிலிப்ஸ் five band ரேடியோ மாத்திரம் எங்க வீட்டுக்காரர்கள் வீட்டில் இருக்கும். ஆயிரத்து எழுபது ரூபாய்க்கு வாங்கிய ரேடியோவை இன்னமும் என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருக்கிறார்கள்.
எழுந்தவுடன், கக்கூசுக்கு ஓடனும், ரெண்டு கக்கூஸ் மட்டுமே இருந்தது பதினோரு வீடு குடித்தனத்துக்கு... காலையில் பக்தி மாலை சிலோன் ரேடியோவில் முடிந்தவுடன், ஓடினால் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகம், கொல்லைக்கு போயிட்டு அப்படியே கிணத்தில நீர் சேந்தி குளிச்சுட்டு பள்ளிக்கு கிளம்ப சரியா இருக்கும். முறை வாசல் இருப்பதனால் பத்து நாளைக்கு ஒருமுறை தான் சாணி கரைத்து வாசல் தெளித்து கோலம் போடும் பாக்கியமெல்லாம், அதுவும் மீனாம்மா நாலு வீட்டுக்கு வேலை பார்க்கிறதால பெரும்பாலும் மீனாம்மாவே எல்லாவற்றையும் செய்து விடும். பால் கார கோமதி அங்கேயே மாட கட்டி பால கரக்கிறதால, சாணிக்கு எங்கேயும் அலைய வேண்டியதில்லை, வாசல் முன்னாடியே கிடக்கும், அள்ளி தெளித்த வாசலில் பூக்கும் கோலத்தில் பூசநிபூ... இலாத சமயம் பூவரச மரப்பூவுக்கும் வாய்க்கும் பிள்ளையார் மேல ஒக்கார... அகல்யா அக்கா கோலம் மட்டும் தனியா தெரியும், கோலம் போடும் சாக்கில், அவளும் மீசைக்கார நைனா பையன் சம்பத்தும், இலாத மீசை தடவி தடவி முறுக்கிகிட்டே.., அப்படி பார்த்து பார்த்து என்ன தான் பேசிக்குவாய்ங்களோ, வளைஞ்சு நெளிஞ்சு அவங்க வீட்டு கோலத்துல போய் முட்டும் அது... வாசல் நிலைக்கதவில கொஞ்சம் கோலப்பொடி சிந்தி இருந்தா அது அகல்யா நிலைக்கதவில் சாய்ஞ்சு நின்னதுக்கான தடம்.
மூக்கையா ஆசாரி வீட்டில் நிறைய பேர் இருப்பதால் காலை டிபனுக்கு அம்மியில சட்னி அரைக்க முடியாது, அதனால எங்க வீட்ட ஒட்டி போட்டிருக்கிற உரலில் தான் சட்னி ஆட்டுவது வழக்கம். காம்பவுண்டே ஒரு பத்து மணி வரை பர பரன்னு இருக்கும் எல்லா பிள்ளைகளும் பள்ளிக்கும் போன பின்னாடி, தத்தமது வீட்டுக்காரர்கள் வேலைக்கு போன பிறகு படிக்கட்டுகளுக்கு எதிரே இருக்கும் சின்ன திண்ணையில் அரங்கேறும் எல்லா கதைகளும், அகல்யா அக்காவும், சம்பத்தும் அடிக்கடி இவர்களின் கதை மாந்தர்களாய் இருப்பதுண்டு, அகல்யா அக்காவின் அம்மாவும் வேலைக்கு போவதால், இதை பேச இவர்களுக்கு நேரம் பத்தாது... அகல்யா அக்கா கீழே வருவதில்லை, அவர்கள் மாடி வீட்டில் குடியிருப்பாதால், அதற்கு அவசியமும் இல்லை.
எங்காவது கொக்கி போட்டு எழுத வச்சுடுது உங்களோட எழுத்து...
மேலாளரின் தலைப்பாகை ஏனோ ஒட்டவில்லை என்று படுகிறது. மேலே எழுதியுள்ளது சம்பந்தமே இல்லாமல் இருந்தாலும், அதிகாலையை நினைக்கும் போது எனக்கு என் ஒண்டு குடித்தன அனுபவங்கள் தான் முன்னாடி நிற்கிறது...
அன்புடன்
ராகவன்
அருமை நண்பரே..
அழகான அதிகாலை.ஆனால் அச்சோ.....பத்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர்?????????
very nice poem.
துல்லியமான விவரணைகளுடன், நல்ல கவிதை.
"வெங்கலச் சட்டியில்
பால்மோதும் சத்தம்"
இந்த வரிகள் என்னக்கு மிகவும் பிடித்து இருக்கிறது
தோழரே
"மாட்டின் மணிச்சத்தம்"
இந்த வரிகளும் .....
"குளிர் வியர்வை கோர்த்த
பால் பொட்டலம்"".
இந்த வரிகளும் ..........
நன்றி முல்லை.
நன்றி லாவண்யா.
மிகச்சரி, இதை இரண்டு
கவிதையாக்கியிருக்கலாம்.
நன்றி தீபா.
0
வழக்கம்போல ராகவன்.
நன்றி ராகவன்.
நன்றி குணசீலன்
நன்றி அருணா
நன்றி முத்துவேல்
நன்றி குப்பன்சார்
நன்றி கிச்சான்
தாமதமாகிப் போச்சு மக்கா.
கவிதைகளில் உங்களுக்கு நல்ல நுணுக்கப் பார்வை வாய்க்கிறது காமராஜ்.தொடர்ந்து கவிதைகளும் எழுதுங்களேன்..
ராகவன்,
great!!
Post a Comment