27.12.15

அவனைப் போக விடு


(கருப்புக் கவிதைகள் பக்கத்திலிருந்து
கருப்புக்காதல் வரிசை -
மொழிபெயர்ப்பு முயற்சி.)
..

நாம் சந்தித்துக்கொண்ட முதல்பொழுதிலேயே
உனை முடிவில்லாமல் அறிந்ததாய் உணர்ந்தேன்.
தனித்தினி நான் பயணிப்பதெப்படி நண்பனே ?
பரிமாறிக்கொண்ட ரகஸ்யங்களை விட்டு
தனித்துநான் பயனிப்பதெப்படி நண்பனே ?

சந்தோசங்களை விடவும் சண்டையில் நாம்
பரிமாறிதுதானே அதியற்புத உன்னதங்கள்.
ஆனந்தம்,களியாட்டம்,கண்ணீரென
எல்லாவற்றையும் சேர்ந்தே செலவழித்தோம்.

வாழ்வின் பரியந்தமும் புன்னகை கூடவரும்
யாரும் விரும்பாத நான் உன் அன்புக்கு பாத்திரமானதால்.
உனக்கான என் அன்பை,என்மரியாதையை, இடத்தை
எதற்காகவும் விட்டுக்கொடுக்கமுடியாது.
என்னில் அடியாழத்தில் இருக்கும் இவற்றால்
ஒருபோதும் உனைப்பிரிய முடியாது.

எனினும், இன்னொரு நான், மிதிபட்டநான்.
என்னால் நீ இழந்தவை போதும்
இது உன்னை ஒரு போதும் காயப்படுத்தக்கூடாது
என்பொருட்டு பேத உலகில் நீ இழந்தவை போதும்.

இருப்பினும் நீயெனக்கு எப்போதும் உன்னதம்.
உவர்ப்பிலும் நானுனக்கு சளிக்காத சந்தோசம்.
அதிமாக நேசித்தால் அருகிலிருந்து நேசிக்காதே
எங்கள் முதுமொழியை நான் முன்மொழிகிறேன்

மறந்துவிடாதே
நினைவுகள் அழியும் வரை
நானும் மறக்கமுடியாது
போய்வா....

உலோகங்களை விட அடர்த்தியான துரு

சாமி கும்பிடாததால் அரச இலையை வைத்து பிள்ளையார் உருவம் செய்த க்ராபிக்சை ரசிக்கமுடியாத மரபில் வளர்ந்தவன்.
ஆனால் இளையராஜாவைப்பிடிக்கும் என்பதற்காக ஏனைய இசையமைப் பாளர்களை கிள்ளுக்கீரையாகப்பார்க்கிற மேனாமினுக்கித்தனம் துளியும் கிடையாது. சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி பாடலை எங்கு கேட்டாலும் நெக்குருகிப்போகிற இசைக்கிறுக்கு.
 பிரம வதனம் வேண்டும் என்கிற மலையாளப்பாடலையும், கபி கபி இந்திப் பாடலையும் தரவிறக்கம் செய்வதற்காக இரண்டு இரவுகள் செலவழித்த பயித்தியம். இந்த வலையுலககத்திலும் கூட இளையராஜவை சிலாகிக்கிற யாரும் எம் எஸ் வியையோ, ரஹ்மானையோ விமர்சித்து எழுதியதாக ஞாபகமில்லை.

ஆனால் இங்கு பல பிரபல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எம் எஸ் வியை பேசுகிற பொழுதெல்லாம் லைட்டா இளையராஜாவை ஒரு தட்டு தட்டாமல் கடந்து போக முடியாது அவர்களால். போனால் அன்று தூக்கம் வராது. இளையராஜாவுக்கு சளிப்பிடித்தாலும் போதும் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கிவிடுவார்கள்.அப்போழுதெல்லாம் மனுநீதிச்சோழனின் மறுபதிப் பைப்போல தங்களைத் தாங்களே தராசாக்கிக் கொள்வார்கள். கவுரவக் கொலைகள் குறித்தோ, இளவரசன் படுகொலை குறித்தோ, பாடகி சின்மயியின் இட ஒதுக்கீட்டு தேற்றம் குறித்தோ கருத்து ஏதும் சொல்லாத கந்தசாமிகள் அவர்கள். இந்த இரண்டு நாளில் ஞாயயம்டா, நீதிடா என்று பெருங்குரலெடுத்து சொம்பில்லாத நாட்டாமையாகிவிட்டார்கள்.

நீண்ட நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் ஒரு பிரச்சினை குறித்து திருமாவளவனிடம் கேள்விகேட்கிறார்கள். அதற்கு அவரும் சிரத்தையாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள்.  வியர்வையையோ அழுக்கையோ  சொரிந்து அதை பார்த்துவிட்டு பின் உதறுகிறார். இதை ஒரு நான்கு தரம்  காட்டுகிற அருவருப்பை என்ன பெயர் சொல்லி அழைப்பது ஊடகதர்மம் என்றா.
ஒரு காமிரா எவ்வளவு உன்னதமானது. மூன்றாவது கண்ணில்லையா அது?.பேட்டியோடு தொடர்புடைய ஆயிரம் காட்சிகளில் எதவதொன்றை காண்பிக்கலாம். அல்லது அதற்கு எதிர்மறையான காட்சிகளைக்கூட வைக்கலாம். இந்த இரண்டையும் விட்டு விட்டு சொரிவதையும் அழுக் கெடுப்பதையும் காட்டுகிற அந்த ஊடகத்தின் மூளையில் எவ்வளவு அழுக்கு இருக்கும்?.

நீயா நானா நிகழ்சியில் ஒருத்தர் எங்க ஜாதிப்பிள்ளைகளை காதலித்தால் வெட்டுவம் குத்துவம் என்று கொக்கரிக்கிறார். திருவாளர் ஊடகம் அப்படி யெல்லாம் பேசப்படாது என்று செல்லமாய்க் கண்டிக்கிறார். அடடே எவ்வளவு காத்திரமாக தனது அறச்சீற்றத்தை முன்வைக்கிறார் என்று வியந்து முடிப் பதற்குள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. விகழ்பமில்லாமல் கருத்துச் சொன்னதற் காக வெட்டுவோம் குத்துவோம் என்று சொன்ன பங்கேற்பாளருக்கு பரிசு கொடுத்து முடித்தார்.

நல்ல வேளை அருவாளைப் பரிசாகக்கொடுக்கவில்லை.

கருப்புக்கவிதைகள் 1

கருப்புக்காதல்
---------------------
கருப்புக்காதல்
தொகுப்பிலிருந்து
பெயரிடப்படாத
ஒரு கருப்புக்கவிஞனின்
வெறுப்புப்பாடல்

நன்றி.
black poems

0
நேர்த்தி ஒருபோதும் நேர்த்தி இல்லை,
உண்மை என்னவெனில்
நானெப்போதும் நேர்த்தி இல்லை.
தவறுகளால் கட்டமைக்கப்பட்டவன் நான்.

அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்
அவர்களிலும் நேர்த்தியானவனாகவும்
சிகப்பே புதிய கருப்பாவது போல
வேற்றுமை தான் நிஜ உலகம்.

நான் எப்படி இருப்பதெனவும்
நான் யார்போல இருப்பதெனவும்
நான் மட்டுமே முடிவெடுக்கமுடியும்.

நான் பிறர்போல் நடிக்கமுடியாது
மன்னிக்கவும்
என்னிடம் இல்லாத நேர்த்தியை
இருக்கிறதென்று ஒருநாளும்
என்னால் நடிக்கவே முடியாது.
0

2

கடவுளுக்கும் பிடித்த நிறம்
------------------------------------------------

சத்தியமான உலக அழகி
இரவின் வண்ணம் குழைந்தவள்
சுருள்சுருளான கேசம் அணிந்தவள்
உயர்ந்த தோள்களும் தாழ்ந்த புன்னகையும் படைத்தவள்
அவள் தான்சானியாவிலிருந்து வருகிறாள்
அவளே ஆண்களின் ஆதித்தாய்.

தேனின் நிறம்பெற்றவர்களே தேவதைகள்
அவர்கள் அலபாமாவினின்று வருகிறார்கள்
பசிய கண்களும் தடித்த அதரங்களும்
அகன்ற நாசியும் அதுபோன்றே இடையும் கொண்ட
அவர்கள் சூரியன் உறங்கும் போது
உருவெடுத்த வண்ணம் பூசியவர்கள்
அவர்களின் வளைவுகளை வடிக்கும் போது மட்டும்
கடவுளுக்கு கைநடுங்கவில்லை.

ஆகவே அழகிய கருப்புத்தான்
கடவுவுளுக்கு பிடித்த நிறம்

அழகிய கவிதையின் சொந்தக்காரி
ஆதி அழகின் சொந்தக்காரி

அன்புக்கருப்பி
-திமோத்தி.n.ஸ்டெல்லி0
3இது ஒரு கருப்புக்கவிதை.
ஆப்ரிக்க - அமேரிக்க கவிஞனின் வேதனை ஊற்றி எழுதப்பட்டவரிகள்.
கவிஞனின் பெயர் தெரியவில்லை.ஆனாலும் அந்த வலி
எல்லாக்கருப்பின மக்களின்பெயரையும் ஓங்கி உச்சரிக்கிறது

being a black at work place

எனது அன்பை பலஹீனமாக எடுத்துக்கொண்டார்கள்
எனது அமைதியை ஊமைத்தனமென்றார்கள்
எனது தனித்தன்மையை புரியாதபுதிரென்றார்கள்
எனது மொழியை வட்டாரவழக்கென்றார்கள்
எனது உறுதியை மூர்க்கமென்றார்கள்
எனது சிறிய தவறுகளுக்காக என்னை வீழ்த்தினார்கள்
எனது வெற்றியை விபத்தென்று உருவகப்படுத்தினார்கள்
எனது புத்திக்கூர்மையை என்வேலையாகக்குறுக்கினார்கள்
எனது கேள்விகளை என் அறியாமை என்று அறிவித்தார்கள்
எனது முன்னேற்றத்தை தகாதகுறுக்குவழி என்றார்கள்