Showing posts with label ஆசியல். Show all posts
Showing posts with label ஆசியல். Show all posts

6.1.16

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.

வடக்கே போ,மேற்கே போ,தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.
எதற்கம்மா என்ன தீமை இருக்கிறது எனக்கேட்பான்
தீமைகள் இல்லையப்பா பூச்சாண்டி இருக்கிறான் என்பாள்.

இல்லையம்மா கிழக்கே தான் என் நண்பன் இருக்கிறான்
இல்லையம்மா கிழக்கே தான் நம் வயல் இருக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் சூரியன் உதிக்கிறது
இல்லையம்மா கிழக்கே தான் நம் பசுமாடு மேய்கிறது

சொன்னாக்கேளு எதுத்துபேசினால் சூடு வைத்துவிடுவேன்
வடக்கே போ மேற்கே போ தெற்கே கூடப்போ
உயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.




7.3.11

விறு விறுப்பான காட்சிகள் அரங்கேறும் கட்சிக் கூட்டணி.


நிஜமான சூதாட்டம் ஆரம்பமாகிறது. கடந்த பத்தாண்டுகளாக திரும்பமுடியாத சேற்றுக்குள் சிக்கிக்கொண்ட ஜனநாயகம் கைதேர்ந்த சூதாடிகளின் பிடியில் சிக்கிக்கொண்டது.ஜாதிக்கட்சிகளின் கொட்டம் அடங்கிப்போனது பாமக போன்றகட்சிகள்  தங்களின் சொந்த மண்ணிலே மண்ணைக்கவ்வியது என்கிற நோக்கர்களின் வாதமெல்லாம் தவிடுபொடியாக அடுத்த தலைமுறை ஜாதிக்கட்சிக்காரர் களம் இறங்குகிறார்.அவரைத்தொடர்ந்து எல்லா ஜாதிக்கட்சிகளும் அதே ஜாதியைச்சேர்ந்த அந்தக்கட்சியின் எதிரிகளும் களம் இறங்குகிறார்கள்.எல்லா ஊர்களிலும் ஜாதிகள் புது வடிவம் எடுக்கின்றன. ஆள்திரட்டுகின்றன, போஸ்டர் அடிக்கின்றன வாகனங்கள் அமர்த்தி எதாவதொரு காட்டுக்குள் கூட்டம் கூட்டி அவரவர்களுக்கு தனித்தனியே அரசியல் மாநாடுகள் நடத்துகின்றன. ஒரு சட்டமன்றத் தொகுதி கிடைத்தால் கூடப்போதும் அதை வைத்தும்,  அந்த மக்களை வைத்தும் பிழைப்பு நடத்திக்கொள்ளலாம் என்கிற சுத்தம் செய்யமுடியாத சந்தர்ப்பவாத சாக்கடைக்குள் அமிழ்ந்துவிட்டது அரசியல் தமிழகம்.

சட்டிசுடுகிறதே என்று சொல்லி, தப்பிக்க எவ்விக்குதித்து, எரிகிற அடுப்பில் விழுந்துகிடக்கிறது காங்கிரஸ்.இன்று இமயம் தொலைக்காட்சியில் இனமான காங்கிரஸ் தமிழர் உயர்திரு ஈவிகேஎஸ் பேட்டி நடந்தது. கடந்த காலத்தை ஒரே ஒரு வைரஸ் ஊடுருவச்செய்து கரப்ட் ஆக்கி தேடமுடியாதபடி ஆக்கி விட்டால்.அப்புறம் கேட்டால். அத்தணையும் புரட்சிக்கருத்துக்கள்.அவர் உலக அரசியல் பேசுகிறார். பொருளாதார மந்தம் குறித்தும் அது எந்தெந்த நாடுகளை சூறையாடியது என்றும் பட்டியல் தருகிறார்.கண்ணைமூடிக்கொண்டே கேட்டால் காரல் மார்க்சின் பேரன் பேசுவதுபோலத் தொணியிருக்கும். ஆளும் திமுக ஊழலின் உச்சத்தில் இருக்கிறதென்கிற  வாசகம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நையாண்டி. இந்த நையாண்டியும் எவ்வளவு நாள், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதில் எந்த உறுதியும் கிடையாது.

ஏனெனில் அரசியலில் நிரந்த எதிரியும் கிடையாது. நிரந்தர நண்பனும் கிடையாது. இது  கலப்பு அரசியல்,கலப்பு பொருளாதாரம், மசாலாச் சினிமா போல இந்தியாவில் தயாரான தத்துவம். ஒழப்படித் தத்துவம். இங்கே அந்த மாதிரி ரொம்பக்கிடைக்கும். எம்ஜியார் அண்ணாயிசம் என்கிற ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை ? அதே மாதிரித்தான். 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின்னர் உலகமெல்லாம் புரட்சி நடந்துகொண்டிருந்தது. வறட்சி இருந்தால் புரட்சி வரும்,அடிமைத்தனம் இருந்தால் புரட்சி வரும், கொடும்கோலாட்சி இருந்தால் புரட்சி வரும். இவையெல்லாம் மாற்றத்திற்கான தட்பவெப்பநிலை. இந்த மூன்றும் அந்த 1920 களில் இல்லாமலா தேனும் பாலும் ஓடிக் கொண்டிருந்தது ?.

எத்தனை லட்சம் உயிர்கள் பறிபோனது.எத்தனை தலைவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள் எத்தனை தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள், தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்.நடந்தது என்ன அதிகாரத்தை வெள்ளையனிடமிருந்து பிடுங்கி உள்ளூர் ஆதிக்க ஜாதிகளிடமும், பண்ணையார்களிடமும் ஒப்படைக்கத்தான் ஜனநாயகம் என்கிற அமைப்பு உருவானது. ஒரே வீட்டில் நாலு அண்ணன் தம்பிகள் இருந்தாம் நாலு பேருக்கும் ஆளுக்கு ஒரு சொத்து,ஆளுக்கு ஒரு வியாபாரம் ஆளுக்கு ஒரு கட்சி என்று ஜனநாயகத்தைப் பிரித்துக்கொண்டார்கள். நான் தலைவர் உயர்திரு ஈவிகேஎஸ்ஸைச் சொல்லவில்லை. இப்படி விநோதம் இங்கே தான் நடக்கும். நடக்கட்டும். வெள்ளையனை 300 ஆண்டுகள் பொறுத்துக்கொள்ளவில்லை ? அதுபோல கொள்ளையர்களை 64 ஆண்டுகாலம் பொறுத்துக்கொள்ளவில்லை. இன்னும் நாட்கள் இருக்கிறது.அதுவரை ஆட்காட்டி விரலைக் கழுவி வைத்துக்கொள்வோம்.