இந்த வார 20.10.2010 ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.'சீனாவின் அமைதியைக்கெடுத்த அமைதிப்பரிசு'.திரு ஆரோக்கியவேல் எழுதியிருக்கிறார்.சீனக்கவிஞரும் தியானமென் எழுச்சியின் தலைவர்களில் ஒருவருமான கவிஞர் 'லியூ சியோபோ'வுக்கு கிடைத்த நோபல் விருதைப்பற்றியதான கட்டுரை அது.இந்தக்கால எழுத்துக்கள் தனித்து நிற்கின்றன.நோபல் விருது கிடைத்தது தெரியாமல் சிறக்குள்ளிருக்கும் லியூ வுக்கு அவரது மனைவி மூலம்,தகவல் சொல்லப்பட்டதாகவும்.தகவல் சொல்லப்போன மனைவி என்ன ஆனாள் என்று தெரியாமல் போனதாகவும் எழுதிக்கொண்டே வந்து 'உலகின் மிகப்பெரிய சிறைக்குப்பெயர்தான் சீனாவோ' என்று முடிக்கிறார். நல்லா இருக்குல்ல ?. இந்த முடிவின் வார்த்தைகள் ஒரு கவிதைபோல வந்து விழுந்திருக்கிறது.அருமை ஆரோக்கியவேல்.
0
ஒரு நாடு அதன் மக்களுக்கு எதுவாக இருக்கவேண்டும்.சீனா உண்மையிலேயே சிறையா இந்தக்கேள்விகள் ஊடகங்களின் வழியாக நம்மை வந்து சற்று ஆட்டிவிட்டுப்போகிறது.இது ஒன்றும் புதியதல்ல.உள்ளூர் அரசியல் வாதிகள் தகரம் கண்டுபிடிப்பதற்குமுன்னமே உண்டியல் கண்டுபிடித்தவர்கள் என்று வசைபாடுவதும் அமெரிக்கா தனது இலக்கியங்கள் அணைத்தையும் பொதுவுடமைக்கு எதிராகாக்கூர்தீட்டி விடுவதும் புதிதல்ல.தனது காமிக்ஸ் கதைகள்தொடங்கி உலகு புகழ் ரா ரா ரஸ்புதீன் பாடல்கள் வரை ரஷ்யாவை எதிரியாக்கியிருக்கும் அமெரிக்கா.அதன் சாகச கதநாயகர்களான ஜேம்ஸ்பாண்டுகள் ஒத்தை ஆளாய் சீனாவுக்குள்,ரஷ்யாவுக்குள்,தென்கொரியாவுக்குள்,க்யூபாவுக்குள் புகுந்து அதகளப்படுத்தி ஜெயித்துவிட்டு கடல்வழியே நாயகியோடு சல்லாப பயணம் மேற்கொள்வார்கள்.
அவர்களது ஜனங்களை சிந்திக்கவிடாமல் செய்ய அங்கே அதுதான் மேம்படுத்தப்பட்டபோதை. நமக்குத்தான் நாட்டுப்போதைகள் அதிகம் கிடைக்கிறது. அவை யாவன என்று கேட்கறீர்களா?. ஒண்ணா ரெண்டா சொல்லுவதற்கு. சின்ன வயசில் கம்யூனிசம் என்றால் இருக்கிறவர்களிடம் வழிப்பறி செய்வது என்று சொன்ன உள்ளூர் காங்கிரஸ் தாத்தா முத்தையாவின் அறியாமைதான் எனக்கான அறிமுகம்.என்னைப்போல 90 சதமான இந்தியர்களுக்கும் அடித்தட்டு ஜனக்களுக்கான அறிமுகம் அதுவாகத்தான் இன்னும் இருக்கும். அதுபோலத்தான் சீனாவும் ஒத்தைக்கண்ணன் அறிமுகம். இந்திய சீன எல்லைப்போரின் போது
'ஐ சக்க ஐ அரைப்படி நெய்;
சீனாக்காரன் தலையில
தீயப்பொருத்தி வை'
என்கிற தேசபக்தி ரைம் மூலம் சீனா அறிமுகமானது.பக்கத்து தெருக்காரனிடம் சண்டையென்றால் சொந்தத்
தெருக்கார ஈ, காக்கா, குஞ்சுகளும் எதிரிப்பட்டை பூசியே தீரவேண்டும்.இப்படியான சின்ன ஆனால் மிகப்பெரிய உளவியல் பாதிப்போடு தான் எல்லோரும் இயங்கவும் வேண்டும் இல்லையா ?.சமீபத்தில் சீனா பற்றிய தேடலில் கூகுலுக்கும் சீனாவுக்கும் ஏற்கனவே வாய்க்காத் தகறாராகிப்போனது தெரியவந்தது. அங்கே இருக்கிற பைடு டாட்காம் கூகுலுக்கு வியாபார எதிரியாகிப்போனதால் விக்கிப்பீடியாவில் சீனா பற்றிய தகவல் இல்லை. அதானாலாயே அது இரும்புத்திரை நாடு என்று சொல்லிவிடலாமா?.
ஒரு சராசரி சீனக்குடிமகனுக்கும்,பணக்கார சீனக்குடிமகனுக்கும் உள்ள வருமான இடைவெளி 362 டாலரிலிருந்து,1142 டாலர் என்று சொல்லுகிறது பிரிட்டிஷ் பத்திரிகை.அதுதான் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியென்றும் சொல்லுகிறது. இதை ஒருநாளைக்கு நாப்பது ரூபாய் கூட கூலிகிடைக்காமல் திண்டாடும் என் 20 சதமான இந்தியர்களிடம் நான் எப்படி விளக்கிச் சொல்லமுடியும். 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' திட்டத்தால் 250 கோடி ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டதாக அதுவே சொல்லுகிறது.நிலப்பரப்பிலும் மக்கட்தொகையிலும் நமக்கு நிகரான சீனாவின் தனிநபர் வருமாணம்,தனிநபர் சுகாதாரம் எல்லாம் திருப்தியளிக்கக்கூடிய அளவில் இருக்கிறது என்பதை யாரும் சொல்லுவதில்லை. clean energy என்று சொல்லப்படுகிற இயற்கை எரிசக்தியை உபயோகிப்பதில் உலக நடுகளில் முதலிடத்தில் சீனா நிற்கிறது என வாஷிங்டன் போஸ்ட் இதழ் சொல்லுகிறது.கட்டிடம்,காகிதம்,தீக்குச்சி போன்ற தளவாடங்களுக்கு மரத்தை வெட்டுவதில்லை என்கிற முடிவெடுத்ததால் தீப்பெட்டி தயாரிக்கும் பழய்ய தானியங்கி எந்திரங்கள் தென் தமிழ்நட்டுக்கு வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன.
அதை வாங்கப்போன ஒரு தீப்பெட்டித் தொழிலதிபர் வார்த்தைகளில் சொல்லுவதானால் 'அங்கே சோத்துக்கில்லாமல் வற்றிப்போன கண்களோடு எந்தமனிதனையும் பார்க்கமுடியாது.பிச்சைக்காரர்கள் மருந்துக்கு கூடக்கிடையாது' என்கிற கனிப்பு பாரபட்சமானதாக இருக்கமுடியாது.இது போதாதா வேறென்ன வேண்டும்.ஜனநாயகம் வேண்டுமாம், மதநம்பிக்கைக்கான விடுதலை வேண்டுமாம்.ஹப் புக்கு போக உரிமை வேண்டுமாம்.ஐயயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ எடுக்க அனுமதி வேண்டுமாம்.5 டாலர் கொடுத்து காப்பிகுடிக்க விடுதலை வேண்டுமாம்,பொது இடங்களிலும்,தொடர்வண்டிகளிலும் பான்பராக் எச்சிலைத்துப்புகிற ஜனநாயகம் வேண்டுமாம்.தாய்ப்பால் தவிர இந்த பூமியின் அணைத்து படைப்புகள் மீதும் விலைப்பட்டியல் ஒட்டிவிடுகிற போட்டிவேண்டுமாம். அழிக்கவே முடியாத லஞ்சமும் ஜாதியும் பிணைந்துகிடக்கிற சௌஜன்யம் வேண்டுமாம். இதெல்லாம் கொடுக்காத சீனா ஒரு சிறையென்றால், சிறையே.
1991 அல்லது அதற்கு முந்தைய தேர்தலா என்று தெரியவில்லை வேட்பாளர்களின் சொத்துமதிப்பை இதே ஆனந்த விகடன் வெளியிட்டது. அதை மீண்டும் பொக்கிஷம் பகுதியில் போட்டுக் காண்பித்தால் இந்த விடுதலை பெற்ற ஜனநாயம் சம்பாதித்தது எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம்.