28.6.09

இன்னொரு சந்தாதாரர்.
" போன வாரம் மணியப்பாத்தேன்
ஆள் ரொம்ப குண்டாயிட்டான் பீர் ஜாஸ்தி குடிப்பான் போல,
இப்ப பாக்க முடியறதில்ல, அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சி.
கணேஷா, அவம் பெரிய அரிஸ்டாட்டில் மாதிரி
எப்ப வாயத்தொறந்தாலும் அரசியல் வாந்தி.
மச்சி வா இப்ப ஒரு புது கதெ, ஒரு நாள் பூரா பேசனும்,
பஸ் விருதுநகருக்கு உள்ள வாராது.
ரோட்ல எங்கயோ புதைபொருள் இருக்காம்,
பூரா தோண்டிக்கிடக்கு, கருமாதிமடத்தில நில்லு''
பக்கத்து இருக்கை வாலிபன்
தனது அலைபேசியில் காது சூடாகும்
அளவு பேசிக்கொண்டு வந்தான்.
விருதுநகர் வந்தது குதூகலித்துக் கொண்டார்கள்,
வந்தவன் பயணச்சீட்டு வாங்கினான்.
அலைபேசி ஒலித்தது.
இன்னொரு சந்தாதாரர்.
மறுகாதில் வைத்துப்பேசினான்,
மற்றவனும் அப்படியே.
பேசிப்பேசி அலுத்துபோய் தூங்கிப்போனார்கள்.
நேரில் பேசிக்கொள்ள நேரம் இல்லை.

25.6.09

வெட்டவெளி ரகசியம்

மழைத்தட்டான் பறக்கும்போதும்ஊதக்காத்து வீசும் போதும்,குடைதேடுவதும், சாளரம் அடைப்பதுவுமாகஉலகம் கூட்டுக்குள் அடைகிறது.மனது மட்டும் திறந்து வெளியேறிஇழுத்துப்போகிறது பழைய நாட்களுக்கு.


ஒவ்வொரு மழைத்துளியும்வேறு வேறு தண்ணீராலனது.மத்தியான மழை, சாயங்கால மழை முன்னிரவு மழை, பின்னிரவு மழை எனஓவ்வொரு மேகமும் தனக்கான நேரத்தை தேர்ந்து கொள்கிறது.


நனையாத இடம் தேடி உயிர்கள் அலையும்ஓடி வரும் மனிதர் தேடும்குடை கூரை எல்லாம் மாயைமழை மனதையே ஈரமாக்கும்.வெட்டவெளியில் பெய்தாலும்மழை எப்போதும் அந்தரங்கமானது.

21.6.09

பனைக் குருத்தின் வசீகர வாசனையை சுமந்து வரும் போதிநிலா - மாதவராஜின் சிறுகதைகள்
இன்னொரு குருச்சேத்திரம் என்னும் தொழிற்சங்க கட்டிடத்திறப்புவிழாக் கவிதையோடு எண்பதுகளில் தமிழுலகுக்கும் கூடவே எனக்கும் அறிமுகமான ஒரு எழுத்தாளரைப்பற்றிச் சொல்லவேண்டும். தனது முதல் சிறுகதையிலேயே இலக்கியச்சிந்தனை பரிசோடு தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் ஒரு பரவலான கவனத்தைபெற்ற எழுத்தாளர். முன்னதாக ராஜகுமாரன் என்கிற தலைப்பில் வெளியாகிப் பின்னால் போதிநிலா என்ற பெயர் மாற்றத்தோடு அவரது சிறுகதை தொகுதி வெளிவரும்போது வீரசுதந்திரம் வேண்டி, காந்தி புன்னகைக்கிறார் தொடங்கி சேகுவாரா வரையிலான பல கட்டுரைத் தொக்குப்புகள் அதை முந்திக்கொண்டு விட்டது. பனைக் குருத்தின் வசீகர வாசனையை சுமந்து வரும் சிந்தனையின் ஆழத்தோடு நாஞ்சில் தேரிக்காட்டுப் பகுதியிலிருந்து பெயர்த் தெடுத்துவந்த ஒரு உயர்ந்த எழுத்தாளர் ஒருவர் கந்தக பூமியில் கரிசல் மண்ணில் வேர்பிடித்துக் கொண்டார். கொல்லையில் முளைத்துக்கிடக்கும் காட்டுக்கீரைகளின் மகத்துவம் தெரியாது வீட்டுக்காரனுக்கு. அதுபோல விருதுநகர் மாவட்டமும் ஏன் அவர் வசிக்கிற சாத்தூரும்கூட இதுவரை அறியாத மூன்று ஆவணப்படங்களின் இயக்குனர். அந்தப் படங்களைத் தயாரித்த கரிசல் குழுமத்தின் ஊடு இழை அவர்.எழுத்தாளர் மாதவரஜ். ( பதிவர் - தீராத பக்கங்கள் )குழந்தைப் பருவத்துப் பாட்டி கதைகளில் வரும் மாயக்கம்பளம், அண்டரண்டாப் பட்சி, சுண்டெலியண்ணன் தொடங்கி படக்கதைகளின் வரும் லைலா, துப்பறியும் ரிப்கர்பி, இரும்புக்கை மாயாவி எனும் அமானுஷ்யங்களில் அற்புதங்களில் லயிக்காதவர் யாருமிருக்க இயலாது. அப்படிப்பட்ட குழந்தை பருவத்து அற்புதங்களில் மனிதரல்லாத ஒரு படிமம் இந்த வாழ்வின் துயரங்களை தீத்துவைக்கும். வேதாளம் கதைசொல்லும். ராஜகுமாரன் தூங்கும் போது மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் கிளிகள் பேசிக்கொள்ளும். அது போலவே நிகழ்காலத் தண்ணீர்ப் பஞ்சத்தின் நாவறட்சியை ஒரு மண்குடம் நெகிழ்ச்சியோடு பேசுகிற கதை '' மண்குடம் ''.கதாநாயகர்கள் அழகான வசீகர நிறம் கொண்டு அறம் மறம் செழித்த மனிதர்களாகத்தான் இருக்கவெண்டும் எனும் விதிகளை உடைத்து ஒரு மண்பானையை அதுவும் பெண் பானையை மையக் கருவாக்கியிருக்கும் அந்தச்சிறுகதை. எல்லோரும் படித்தே தீரவேண்டிய படிமம். மண்பானைக்கு அடியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணலும், அதிலிருந்தும் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் கூட தண்ணீர்பஞ்சத்தின் உக்கிரத்துக்கு வலுச்சேர்க்கும் கதையின் இறுதியில் ஒரு போராட்ட உத்தி உயர்த்திப் பிடிக்கப் பட்டிருக்கும். ஆனாலும் அது ஒரு ஏழைக் குடிசையின் எல்லா சுக துக்ககங்களையும் கூர்மையாக வாசகர்களுக்குள் இறக்கும்.// அவ அப்படியே ஆசையா என் கழுத்த எடது கையால கட்டி அணைச்சுக்கிடுவா. அக்குள் பக்கத்துக்ல வர்ற வாசனையில சொக்கிக் கிறங்கிப் போவேன். அப்பப்ப அவ மாரை ஒரசிப்பாத்து 'க்ளுக்' குன்னு சிரிப்பேன். சில நேரம் குலுங்கி குலுங்கிச் சிரிச்சு அவ சேலைல தண்ணிய வாரி எறச்சு விளையாடுவேன். அவா கோபமே படமாட்டா. அண்ணாந்து அவ மொகத்தப் பாப்பேன், அவ கண்ண, மூக்க, ஒதட்ட, கழுத்த எத்தன தடவப் பாத்தாலும் அலுக்காது // .ஒரு தண்ணிக் குடத்துக்கும் பெண்ணுக்கும் உண்டான வசீகர நிமிஷங்களை ஒரு காதல் நிமிடங்களோடு ஒப்பிடுகிற, அல்லது கிராமத்து சேட்டைகளை நினைவுக்கு கொண்டு வரும் விவரணைகளும் அடங்கிய கதை. அதில் தண்ணீர்க் குடம் குடிசையிலிருந்து கிளம்பி தெரு, ஊர், நாடு என பஞ்சத்தின் ரேகை படர்ந்த எல்லா இடங்களுக்கும் அலைந்து இறுயில் நகராட்சி அலுவலக வாசலில் தன்னைப் போன்ற குடங்களோடு வந்து நிற்கும். தன்னைத் தலைக்கு மேல் தூக்கி உடைக்கப் போகும் போது போருக்குப்போகிற வீரனின் கர்வத்தோடு பேசும். உடைந்து சிதறிய பின்னால் அடுத்த பிறவியில் செண்பகத்தின் வயிற்றில் பிறக்கவேண்டுமென்கிற கண்ணீர்கனவோடு முடியும்.சிட்பண்ட் கம்பெனியில் வசூல் வேலை பார்க்கும் ஒரு வேலையில்லாப் பட்டாதாரியின் ஏக்கங்களை சொல்லாமல் சொல்லும் இயேசுவானவன். கடன் வசூல் பண்ண போய்விட்டு திரும்ப பேருந்துக்காகக் காத்திருப்பவனின் நினைவுகளாக சொல்லப்படும் அது. காத்திருக்கையில் கடந்துபோகிற ஒரு மாருதி காரும் மணல் லாரியும் போல வாழ்வின் மேடுபள்ளங்கள் சொல்லப்படுகிற கதை. அந்த இரண்டு வாகனத்தோடு போட்டி போடுகிற வேகமான கதை. ஓடிக்கொண்டிருக்கும் லாரி மணல்மேல் கைகால் பரப்பி வெயில் உரைக்காமல் படுத்துக்கிடக்கும் உழைப்பாளிக்கு எது வெயில் என்னும் கேள்வியோடு முடிந்து வாசகனுக்கு அதிக வேலை கொடுக்கும்.உத்தியோகம், குடும்பம் இந்த இரண்டுக்கும் நடுவில் உருளும் பொருளாதாரம் எனச் சிக்கிக் கிடக்கும் வாழ்க்கையிலிருந்து சில தெறிப்புகளை அலாதியாக எடுத்து வாசகனுக்கு வழங்கும் மாதவராஜின் கதைகள். யாரும் பார்க்கமறந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் காத்துக் கிடக்கும் நிலா, காதலித்து நெருங்கியவன் அந்த நெருக்கத்தை ஊர்மடத்தின் பேசு பொருளாக்குவதும். அதைக் கேட்ட நேரத்தில் கழிவைக் கறைத்து தலையில் ஊற்றிய அவமானம் கொள்ளும் ''புறம் தள்ளி''. கண்தெரியாத ஐஸ்காரனுக்கு கிடைத்த குளிர் நேரமும் ஆளரவம் கேட்டதும் அவனை தூக்கியெறிந்து விட்டு ஓடும் அவலமும், வாழ்ந்து கெட்ட குடும்பத்தை ஜப்தி செய்ய வரும் வங்கி ஊழியருக்குள் இருக்கும் நெகிழ்வான மனிதன், வாழ்நாள் முழுக்க மிதிபடும் குடிகரனின் மனைவி கணவனின் அவமானத்தை தாங்காமல் வேலைபாக்கும்வீட்டை விட்டு வெளியேறும் ரோசமென மாதவராஜின் கதை எங்கும் நெகிழ்வின் தருணங்கள் பதிவாக்கப்பட்டிருக்கும்.


எனக்குப்பிடித்தமொத்தம் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தோழர் மாதவராஜின் தொகுதி. அடக்கம் கருதி சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இதுவும் எங்கள் அன்புத்தோழர் பவா செல்லத்துரையின் " வம்சி புக்ஸ் " வெளியிட்டதுஅந்தப் போதிநிலா வின் பாலொளியில் வாசகன் வாழ்வின் உன்னதங்களையும் சூட்சுமங்களையும் தெரிந்து கொள்ளலாம்

20.6.09

தேசம் பட்ட கடனுக்காக முத்துராமலிங்கம் செய்த முட்டாள்தனம்.

பனை மரத்தில் முருகப்பெருமானின் வேல் முளைத்தது, தேங்காயின் கண்ணிலிருந்து தானாகக் கண்ணீர் வடிந்தது, பிள்ளையார் பால் குடித்தார், தோஷம் தீர மஞ்சள் சேலை கட்டவேண்டும் இப்படியான திடீர் புரளிகள் கிளப்பிவிடுவது இந்த ஊடகங்களின் வேலையாக இருக்கிறது. பரபரப்புச் செய்திகள் குறைவான காலங்களில் இதுபோன்ற செய்திகள் மேலெழும்பிவரும். அப்படியொரு செய்திதான் திருச்சியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் எனும் மூட்டைதூக்கும் தொழிலாளி ஒரு 5000 ரூபாயை பிரதமருக்கு அணுப்பியது. இந்தியா பட்ட கடனுக்கு தனது பங்காக அணுப்பிய அந்த தொகை பிரதமர் நிவாரணநிதியில் சேர்க்கப்பட்டதும் ஒரு பாராட்டுக்கடிதம் முத்துராமலிங்கத்துக்கு வந்திருக்கிறதும் யதார்த்தம்.


இந்தியா பட்டிருக்கும் கடனை இந்திய அரசாங்கமே கட்டத்திணறுகிற நிலையில் ஒரு சாமான்யன் அதுவும் ஒரு அன்றாடம் காய்ச்சி பணம் அனுப்புவது ஒரு விநோதச்செயல் அவ்வளவு தான். அதைத்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதால் என்ன நடந்துவிடப்போகிறது. அதே போல மனநிலையிலிருக்கும் இன்னும் சில பித்துக்குளிகள் அவரவர் வசதிக்கேற்ப பிரதமருக்கு பணம் அணுப்பலாம். ஏன் இன்னும் ஒரு படி மேலே போய் நேரடியாக ஐ எம் எப் க்கோ இல்லை, அமெரிக்கா பிரிட்டன் ஜப்பான் போன்ற நாடுகளுக்கோ கூட அணுப்பலாம். கடலில் கரைத்த பெருங்காயம்போல அது பட்ட கடனில் கோடியில் ஒருபங்கைக் கூட குறைத்து விடப்போவதில்லை.


தேசம் முழுக்க உள்ள தனியார் நிறுவணங்கள் ஒருபோதும் மின்சாரக் கட்டணத்தை கறாராகக் கட்டுவதில்லை, நிஜமானவருமான வரியை கட்டுவதே இல்லை. இந்தியப் பெருமுதலாளிகள் வாங்கிய வங்கிக்கடன்கள் பெருமளவு வராக்கடன்களாகவே இருக்கிறது. திவாலாகிப்போன சத்யம் போன்ற தனியார் நிறுவணங்களுக்கு ஸ்டிமுலேடிவ் பேக்கேஜ் என்கிற பெயரில் அறுநூறு கோடி எழுநூறுகோடி இனாமாகக் கொடுத்து முதலாளிகளை மட்டும் காப்பாற்றி விட்டு ஊழியர்களைத் தெருவுக்கு அணுப்புகிறது. ஹவாலாக்கள், பதுக்கல்கள், மோசடிகள், ஊழல்கள் அதன் மீது விசாரணைக்கமிசன்கள் என கோடி கோடியாக இந்திய அரசின் பணம் பறிபோகிற போது, ஒரு தலைவர் தனது பிறந்த நாளில் பேரப்பிள்ளைகளுக்கு கைச் செலவுக்கு கோடி ரூபாய் கொடுக்கிற இந்த தேசத்தில் கஞ்சிக்கில்லாத ஒரு ஏழை தனது பங்காக பணம் அணுப்புவதால் எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை. வேண்டுமனால் பரபரப்பாக பேப்பரில் பிரசுரமாகலாம் பிளாக்கில் எழுதலாம் அவ்வளவுதான்.

19.6.09

கவிதையோடு கதகதப்பை இணைக்கும் பாரதி ஜிப்ரானின் " முன்பனிக்காலம் "

தமுஎச சென்னை மாநாட்டு முகப்பில் பல புத்தக கடைகள் இருந்தது. அரங்கத்தில் செவிநிறைந்த பெச்சுக்கள் திகட்டிச் சில நேரம் வெளிவந்த பார்வையாளர்கள் தொட்டுத்திரும்பும் எல்லையாக அந்தப் புத்தகக்கடைகள் இருந்தன. மாநாட்டில் சுடச்சுட வெளிவந்த புத்தகங்களுக்கு பிரத்யேக மற்றும் உடனடிக்கடைகள் உருவானது. எண்பதுகளில் கிராக்கியாயிருந்த கிடக்காத புத்தகங்களூக்கென தனி கடை இருந்தது. அது ஒவ்வொன்றும் பத்து ரூபாய் ஐந்து ரூபாய்க்கு கிடைத்தது. டால்ஸ்டாயின் கசாக்குககள், அன்னை வயல், ச.த வின் வாளின் தனிமை, கு.அழகிரிசாமி கதைகள், அயோத்திதாசர் சிந்தனைகள், ஆதவனின் அட்டைப்படம் போட்ட உயிர் எழுத்து, மணல்வீடு இதழின் பழைய பிரதிகள் என மலிவு விலைக்குகிடைத்தவற்றைப் பொக்கிஷங்களாக்கிக் கொண்டு நகர்ந்தோம். பார்வையாளர்கள் குறைவான பக்கத்து கடையில் ஒரு இளைஞன் ஏக்கத்தோடு உட்காந்திருந்தான். அங்கும் கூட அட்டைப்படத்தயும் விலையையும் பார்த்துவிட்டு மீள எத்தனிக்கையில் ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து " இது நான் எழுதிய கவிதைகள் " என நீட்டினான் ஒரு இளைஞன். ஐநூறு ரூபாய் விலையிட்ட புத்தகங்கள் கூட அதன் விளம்பரத்தால் விற்றுத்தீர்கிற எழுத்துலகில், படைப்புக்கான குறைந்த பட்ச அங்கீகாரம் தேடும் ஏக்கம் கனன்று கொண்டிருந்தது கூறையில்லாத கடையில் காத்திருந்த அவரது தேகம் முழுக்க.

" முன்பனிக்காலம் " கவிதைத்தொகுப்பு, பாரதி ஜிப்ரான்.

புதிதாக வங்கிய பொருட்களை, துணிகளை மறுநாள் காலைவரைகூட காத்திராமல், அந்த நிமிடத்திலே நுகர்ந்து விடத் துடிக்கிற பிள்ளை மனம் எல்லோரிடத்திலும் கிடக்கிறது. ஆனால் இந்த புத்தக விஷயத்தில் மட்டும் அது நேரெதிர் நடைமுறையாகி விடுகிறது.
காதலின்றி கடக்க முடியாத அந்த இளம் பருவத்தில் சமூகம் சார்ந்த சிந்தனகளும் கவிதைகளும் நிறம்பிக்கிடக்கிறது பாரதி ஜிப்ரானின் முன்பனிக்காலத்தில். தோல்விகள் வெற்றியின் படிக்கட்டு என்பதும் இனிப்புத் தடவப்பட்ட கவிதைதான். புறக்கணிப்பும் ஒதுக்குதலும் கிடைக்கப் பெற்ற நிஜம் சொல்லித்தீராத வார்த்தைகளை புதைத்துவைத்திருக்கும். அதிலிருந்து சில நுனிகளை அறிமுகப்படுத்துகிறது ஓரிரு கவிதைகள். நிலவு, காற்று, இரவு எனும் கவிதைக் கருப்பொருளோடு அவரவர் பானியில் ஓவியமெழுதி எழுதித்தீராமல் நீள்கிறது கவிதை வரலாறு. அந்தப் பட்டியலில் முன்பனிக்கால நினைவுகளின் கதகதப்பையும் கையில் வைத்துக் கொண்டு இணைவது எளிதாகிறது , பாரதி ஜிப்ரானுக்கு .


0............
உள்ளே வரத்தயங்கிநெடுநேரமாய்சாளரத்தின் பின்னாலேயேநிற்கிறது நிலவு

0

மரங்களை நோக்கிப்பயணப்படுகிறது மனசுமின்விசிறி சுழலாத ஒவ்வொரு இரவிலும்.தண்ணீர் லாரிகள் வராத நாட்களில் அநேகர் மனங்களிலும் விரிந்து ஓடுகிறதுவறண்ட நதியின் பிம்பம்.

0

விடிவதற்குள் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவீதியில் மக்களை நடக்க வைத்த அவருக்காகமக்கிய கயிற்றில் நெளிந்த ஈய டம்ளரை தொங்க விட்டதேநீர்க்கடையும் இதே வீதியில்தான் இருக்கிறது பல ஆண்டுகளாய்.
0
பூக்களை உதிர்த்து விட்ட மன வருத்தத்தோடேஅங்கும் இங்குமாய் முகம் காட்டாமல் அலைந்துகொண்டிருக்கிறது காற்று.
0
அரைகுறையாக தின்று முடித்து.......ஆரிய பவனில் பில்லைப்பார்க்கும்போது,மனசு சொல்லும்தெருவோர பீப் பிரியாணிக்கடைகள்வாழ்கவென்று.
0
குளிர்கால குளங்களிலிருந்துமேலேறிச்செல்லும்மெல்லிய பனிப்புகையின் அசைவுகளில்மிருதுவான உன் புன்னகையைப்பார்க்க நேர்கிறதெனக்கு.

18.6.09

அதிர்ச்சிகள் நிறைந்த ஆவணக்காப்பகம் கருப்புத்தாய்

தெருவில்...
' ஏத்தா நில்லு ' எனச் சொன்னவானை
' என்னடா சொன்னே ' என்று கேட்டது ம்
வளர்ந்துகிடந்த அவனது மீசைமுடிக்குள்கிடந்த
இரண்டு ஓநாயும் ஓடிப்போனது.


வறுமை, சிறுமை,
புறக்கணிப்புகளோடுகலாச்சாரத்தழைகளினூடாக
தொடர்கிறதுதடைதாண்டும் வழ்க்கை.


வீட்டுக்குள்....

எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு விறகின்
எதிர்
நுனியில் கசியும் திரவத்தை எடுத்து
அடிபட்ட காயத்தில் தடவியபடி
படிக்கிறாள்ஒரு யுகத்தின் பாடலை.


அவளது தாய்மைக்கும் அன்பிற்கும்
பின்னாலே ஒளிந்து கிடக்கிறது
இன்னொரு வாழ்க்கை.

17.6.09

விளிம்பு மனிதரையும், போராட்ட குணத்தையும் பரிகசிக்கும் நகைச்சுவைகள்
சாமி படத்தில் விவேக் தனது தெரு நண்பர் வீட்டுக்குப் போவார். அங்கே திண்ணையில் இருக்கும் இரண்டு பையன்களில் ஒருவன் படிப்பான் ஒருவன் காலனிகளை துடைப்பான். வழக்கம்போல சின்னக்கலைவாணர் அந்த செருப்பு துடைக்கும் சிறுவனுக்காக வாதாடுவார். இன்னின்ன மாகான்கள் பிறந்த இந்த பூமியில் சின்னதுகளை செருப்புத்துடைக்க வைக்கலாமோ என்று சொல்லிவிட்டு பின்னர் வாடா உன்னை நான் படிக்க வைக்கிறேன் என்று சொல்லி அவனிடம் உனக்கு என்ன படிக்க பிடிக்கும் என்று கேட்பார அவன் லா என்று சொல்லுவான் '' அநியாயமா ஒரு சட்டமேதையை இப்படி பண்ணிட்டேளே ''லா வுல என்ன லா படிக்கப்போறே சிவிலா, கிரிமினலா ? இப்படிக் கேட்கிற வரை எல்லாம் சரியாகப்போகிறமாதிரித்தோன்றும். அந்த விளிம்பு நிலைச்சிறுவன் சகீலா என்று சொன்னதும் ஒரு உலக மகா சிரிப்பாக மாறும்.


கொஞ்சம் உற்றுக்கவனித்தால் அதில் படிமமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. கீழ்சாதிப்பெண்கள் மட்டுமே அவர்களுக்கு போகப்பொருளாக இருக்கிறார்கள் என்பதுவும், என்னதான் படிக்க வைக்க முயற்சி செய்தாலும் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதும். இப்படியான ஆதிக்க மனோபாவக் கருத்தோட்டத்தை ஊர்ஜிதம் செய்கிற மாதிரியான பிரச்சாரத்தை ஒளித்து வைத்திருக்கும் அந்த வசனம். கிறிஸ்தவப் பெயர் கொண்ட பெண்கள் கற்பு நெறிகளில்லாத பெண்களாகவும், தீவிரவாதிகள் குல்லா தாடி வைத்திருப்பவர்களாகவும், திருடர்கள் பனியன் கைலிகட்டிக்கொண்டு கருப்பாக இருப்பதாகவும், என்ன பகுத்தறிவுப் படம் எடுத்தாலும் பூஜை போட்டுத்தான் படம்துவக்க வேண்டும் என்கிற சினிமா மூடநம்பிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த காமெடிகள் இருக்கிறது.பொதுவாகவே விவேக்கின் காமெடிகள் ஒரு மேல்தட்டு, அல்லது மத்திய தர மனோபாவத்தை மெச்சுகிற, அல்லது சிலாகிக்கிறவைகளாகவும் விளிம்பு மக்களை, பெண்களை பரிகசிக்கிறவைகளாகவும் இருக்கிறது. '', மூன்றாம் பாலினத்தை கேலி பண்ணாவிட்டால் அவருக்கு ஜென்மமே சாபல்யம் அடையாது. 'வாலிபர்களே போட்டிருக்கிற ட்ரெஸ்ஸப்பாத்து டீசெண்டான பொண்ணுங்கனு நம்பிறதீங்க வாயத் தொறந்தா ஒரு கூவமே ஒடுதப்பா' என்று இன்னொரு படத்தில் ஒரு கருத்துசொல்லுவார் அவர். பெண்களை மிகக்கேவலமாக அதுவும் குப்பத்துபெண்களை, கூவம் நதிக்கரையில் வசிக்கிற பெண்களை மட்டமாக பேசுவது, " நடைபாதை என்பதே நடக்கிறதுக்கு தானே'', எனும் அறிவார்ந்த மேல்தட்டு கேள்விகளையும் நையாண்டியையும் தமிழ் திரையுலகில் பரப்பும் ஒரு பிற்போக்கு சிந்தனை மிகுந்தவர். நலிந்த கலைகளில் ஒன்றான சாவு மேளத்தை இளக்காரமாக்குகிற, 'இதுக்குத்தான் இன்னும் சங்கம்' ஆரம்பிக்கவில்லை என்று தொழிற்சங்கங்களை கேவலப்படுத்துகிற ஒருவர் விவேக். அவரை கலைவாணர் என்எஸ்கே வோடு ஒப்பிடுவது தான் மிகச்சிறந்த காமெடி. ஆனாலும் தமிழ் சூழலில் புரட்சி என்கிற சொல்லுக்கு வேறுவிதமான அர்த்தங்கள் வரக்காரணமாக இந்த திரைப்படம் தான் இருந்தது என்பது கசப்பான வரலாறு. அதற்குள் கிடக்கும் அவர் அப்படித்தானே சிந்திக்க முடியும்.விவேக் ஒருபோதும் ஆட்சி அதிகாரங்களை, கேலிப்பொருளாக்கியது கிடையாது அப்படி ஆரம்பத்தில் இருந்திருந்ததாக வைத்துக்கொண்டாலும் கூட ஒரு பலத்த கண்டணத்துக்குப்பின் அவர் தனது திசையை நலிந்த நாட்டார் தெய்வங்கள் பக்கம் திருப்பிக்கொண்டார். அதற்குப் பின்னர் தனது சொந்த தாத்தாவைக்கூட அவர் '' பெரியார் '' என்று சொல்லவில்லை. மாறாக நான் ஒரு போதும் மதத்துக்கு எதிரானவன் இல்லை என்று நேரிலும், பூடகமாகவும் அறிவித்துக் கொண்டார். கலைஞர் கருணாநிதியை கேலிசெய்கிற அவர் வேறு அரசியல் கட்சிகளை பெரும்பாலும் கேலி செய்வதில்லை.ஆட்சி அதிகாரங்களை, உலகமயத்தை, சர்வாதிகாரத்தை, இனவாதத்தை, கேலிப்பொருளாக்கிய மகா கலைஞன் சாப்ளின், மகாப்பெரும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கண்டணத்தையே அசட்டை செய்தபடி மேடையேறிய மதுரகவி பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் அன்றைய அரசங்கமான காங்கிரசை எதிர்த்தும் சுயமரியாதையை ஆதரித்தும் பிரச்சாரம் செய்த NSK, MR.ராதா எல்லாம் தங்களின் சமரசமற்ற கருத்துக்களால் மட்டுமே தனித்து நின்றார்கள். கலைவடிவங்கள் காலந்தோறும் அதிகார பீடங்களின் மீதான எதிர்க்குரலை உயத்திப்பிடித்தபடியே வளர்ந்து வந்திருக்கிறது. இந்த வரலாறுகளை மிரிண்டா போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விளம்பரம் செய்கிற விவேக் எப்படி அறிய முடியும்.

15.6.09

வலைகளின் அலைவரிசை
கனவுகளிலும் வந்துபோகிறார் சிலநேரம் வலைமாந்தர்கள்
ஒவ்வொரு காலையும் முகம் கழுவாமல்வலையைத்திறந்து பார்க்கிறேன்பள்ளிப்பிராயத்து நாட்களைப்போல்,
காதலால் அலைந்தகாலம் போல்.


இன்னும்

மகளிர் கல்லூரிக்குள் தனியே நடந்து கடக்கிற மனநிலையோடும்ஐந்து நட்சத்திர விடுதிக்குள் பொருந்திப்போகாத சங்கோஜத்ததோடும்புழங்குகிறேன் இந்த வலைத்தளத்தில்.


இப்போதும் கூடஒவ்வொரு பதிவுக்கும் மூன்று நான்கு முறைட்ரில் வாங்குகிறது அன்பு கொடுத்து வாங்கிய எனது கணினி.


இரண்டு நாள்மெனக்கெட்டு புத்தகம் கூடி, கூகுள்தேடி தூசிதட்டி திரட்டும் பதிவு பார்ப்பாரற்று காத்திருக்க, போகிற போக்கில் போடும் பதிவுக்கு கிடைக்கிறது பாப்புலாரிட்டி


கனவுகளிலும் வந்துபோகிறார்
சிலநேரம்முகம்தெரியத வலைமாந்தர்கள்
ஒவ்வொரு காலையும் முகம் கழுவாமல்அலைவரிசயைத்தேடியபடிவலையைத்திறந்து பார்க்கிறேன்பள்ளிப்பிராயத்து நாட்களைப்போல்,
காதலால் அலைந்தகாலம் போல்.


இருந்தாலும்சிந்திக்க

இயலாத தூரங்களில்இருந்து நீள்கிறது நம்பிக்கையின் கரங்கள்.
அன்பை மட்டும் மூலதனமாக்கும் மனித ஜீவிதத்தில்.
இது எனது நூறாவது பதிவு.


என்னை இங்கும் அறிமுகப்படுத்திய மாதவராஜ் தோழன்.

ஆதரவோடு முதுகு தட்டிய வடகரை வேலன்.

எந்தநேரமும் அன்பும் ஆதர்சமும் தரும் தம்பி ப்ரியா கார்த்தி.

எப்போதும் வந்துபோகும், svv, சீனா சார்.

தமுஎச வின் பவா,ராம்கோபால்,விமலவித்யா, தமிழ்.

எங்கிருந்தோ நெருங்கி வரும் ராஜராஜன், அய்யனார்.

எங்கள் செல்ல மா பிள்ளை ஆண்டோ கால்பர்ட்.

அன்புகுறையாத அருணா மேடம்,

சந்தோசப்பதிவுகளின் ராணி தாரணி,

அப்புறம் அன்புத்தோழி மயாதி.

மதிப்புமிக்க குப்பன் யாஹூ,

விருப்ப பதிவர்கள் jeevaraaja, ஜீவா, ஞானசேகரன், முத்துராமலிங்கம், கார்த்திகேயன்மண்ணின் மைந்தன் வெயிலான்.

குளிர்துருவத்திலும் சூடுகுறையாத செந்தழல் ரவி.

அனுஜன்யா, வால்பையன், கலை அரசன், சரவணன்.

பெரியாரைக் கொண்டுவரும் தமிழ் ஓவியா.

அவரையும் வையும் அனானிகள்.

என நீள்கிறது அன்பின் பட்டியல்.

இப்படி இந்த எட்டுமாதத்தில்சம்பாதித்த நண்பர் கூட்டத்துக்கு


நன்றி


அன்புடன் - எஸ். காமராஜ்

11.6.09

துறவி நண்டு - எஸ்.தேன்மொழியின் கவிதைத்தொகுப்பு.

முப்பது வருடத்தாம்பத்தியத்துக்குப்பிறகு இறந்து போன கணவனின் முன்னத்திப்பல்லில் ஒரு சிங்கப்பல் இருப்பதைக்கண்டுதுணுக்குற்றாள். அழுகையூடாக " இத்தன வருசம் குப்ப கொட்டி, எங்கவீட்டுக்காரருக்கு இப்படி ஒரு பல்லிருப்பதைப்பார்க்க குடுத்துவக்காத பாவியாகிட்டேனே " என ஒப்பாரி வைத்தாளாம்.


இந்த விசயத்தைச் சொன்ன சொக்கலிங்கம் சார் கெக்கலிட்டு சிரித்தார். கணவனின் சாவு எவ்வளவு பெரிய இருட்டிலிருந்துஅவருக்கு விடுதலை கொடுத்திருக்க வேண்டும். பாலச்சந்தர் திரைப்படங்களில் அறினைகள் கூடப் பாத்திரங்களாகும். நிஜத்திலோ பெண் பூ, பொன், குத்துவிளக்கு, நிலம், கடல், ஆறு, பத்தினி, தெய்வம் என அறினைகளாகவே அறிமுகப்படுத்தப்படுகிறாள். புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே பல புத்திமதிகள் சொல்லுறங்கேளு முன்னே எனக் காலந்தோறும் பெண்ணுக்கு பத்துக கட்டளைகள் உருவாகிக்கொண்டிருக்கும் நமது படைப்பிலக்கியங்கள்.


எழுத்தாளர் சுஜாதாவும் நடிகர் கமலஹாசனும் இணைந்து விக்ரம் படத்தில் சட்டையைக்கழற்ற முடியுமா என்று பெண்மைக்கு எதிராக சவால் விடுவார்கள். நீள் நெடும் இலக்கியத்தில் பெண்ணைப்பேச பெண்ணே முன் வரவில்லை. வந்தவர்களும் கூட சுருதி சுத்தமாக ஆண் குரலிலேயே பேசினர்கள். முப்பத்துமூன்று என்ன, நூறு சதவீதம் கொடுத்தால் கூட அதை ஆண்களிடம் பறிகொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிற பெண்களாகவே பெரும்பாலான பஞ்சாயத்து தலைவர்கள் இருப்பதை பேராசியர். பழனித்துரை பஞ்சாயத்துராஜ் மீதான தனது ஆய்வு நூல்களில் குறிப்பிடுகிறார்.


நான் வேலை பார்த்த நென்மேனிக் கிளைக்கு அருகில் இருக்கிறது நாகலாபுரம் கிராமம். அங்கே பஞ்சாயத்து உதவித்தலைவர் அந்தக் கிராமத்தின் பண்ணையார். தலைவரோ ஒரு பெண். அதுவும் கூலிக்காரப் பெண். அதே பண்னையில் வேலை பாக்கிற கூலிப்பெண். காட்டில் களையெடுத்த கையோடு நடந்து வந்து காசோலையில் கையெழுத்துப் போட்டுவிட்டு மீண்டும் மூன்று கிலோ மீட்டர் வெயிலில் நடந்தே போய்விடுவார்கள். சாவகாசமாக இரு சக்கர வாகனத்தில் வந்து பணத்தை வாங்கிக்கொண்டு போகும் அந்த ஆணின் சாமார்த்தியம் பேசும் சமூகம், அவர் தொடுக்கும் இரண்டு வித ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சிந்திக்கவில்லை.


இவற்றையெல்லாம் உடைத்து எறிந்து விடுகிற எழுத்துக்கள் வெளிவருகிறது இப்போது. ஆயிரமாயிரம் ஆண்டு அடைத்துவைக்கப்பட்ட உணர்வுகள் வெளிக்கிளம்பும்போது ஒரு போதும் தென்றலாய் வராது. அதுதான் விஞ்ஞானம். அப்படிப்பட்ட மீறல் மொழியாக, அதிர வைக்கும் பெண்ணிய எழுத்துக்களாக.

என் அறைக்குள் வரவேண்டாம்,
புத்தகங்களை மூடவேண்டாம்,
என்னை எழுப்பவேண்டாம்.

...
உரசலில் குத்திட்டு எழும்பாதஎன்மயிர்க்கால்கள்அடங்கிக்கிடக்கின்றனஆண் சிங்கத்தைவிடவும் கம்பீரமாக

என அறிமுகமாகிறார். கவிஞர் எஸ். தேன்மொழி.

துறவி நண்டு என்கிற அவரது தொகுப்பில் 64 கவிதைகள் இடம்பெறுகிறது.அத்தனையும் பெண்ணுடல் குறித்து உரக்கச்சொல்லும் கவிதைகள். கடலடி மௌனத்தைக் கலைத்துப்போடுகிற ஆயிரமாயிரம் உயிரினங்களில் ஒன்றாம் துறவி நண்டு. தோற்றுத் தோற்று வெற்றியடைகிற கொடுத்தலின் கர்வம் நிறைந்த மொழிகளால்வெளிக்கிளம்புகிறது அவரது கவிதைகள்.


// ஏதேன் தோட்டம் தேவன்களுக்குப் பயப்படாத பூனைகளால் நிரம்பியுள்ளது //...என எச்சரிக்கிற அவரது சொற்கள் இறுகி // அடுத்த படைப்புலகில் ஏவாள் ஆடைகட்டிப் படைக்கப்படுவாள் // எனச் சவால்களில் முடிகிறது. எல்லாப்படைப்பளிகளும் தமது பால்யத்திலிருந்து எழுந்து வந்து எழுதத்தருகிறார். அது தேன்மொழிக்கும் வாய்க்கிறது // மழைக்கான அறிகுறியோடும் மழையோடும் அந்தச்சிறுமி என்னிலிருந்து பிரசவிக்கிறாள் //என்று பால்யகாலத்துக்கு மீளப்போகும் அவர் மழை முடிந்தவுடன் அவளைத்திருப்பி அனுப்புகிறார்.// அவளை நோக்கி எறியப்படாத கல்லிலிருந்து பிறக்கிறது அவனுடனான நட்பு // என்று ஆண்- பெண் நட்பின் தேடலாகவும், நெறிமுறையாகவும் முன் வைக்கிறார் தேன்மொழி.

மனித உடல் விசித்திரமானது, பெண்ணுடல் அதை விட மகோன்னதமானது. அவளிலிருந்து வெளியேறும் அலாதியான உதிரம் படைப்பு விஞ்ஞானம். அது இயற்கையின் அதிசய கொடையான மறுசுழற்சிமுறை. அதன்பொருட்டு அவளின் நாட்கள் இகழப்படுவதை சுத்தமெனச்சொல்லும் ஏற்பாட்டின் மீது கல்லெறிகிறது " சித்தளும் ஒட்டுத்துணியும் ".// வீதிகளின் சுத்தத்திற்கும், வீடுகளின் நாகரீகத்திற்கும், எதிர் திசையில் நின்று ... நீளும் பரந்தாமனின் கைகளில் இருந்து உருவுகிறாள் வரமறுக்கும் ஒட்டுத்துணியை // . தள்ளிவைக்கப்பட்ட வலிகளின் தடித்தவரியாக வந்து விழுகிறது பொதுச்சமூகத்தின் மேல்.


பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவிட்டு, பூட்டிய பூட்டை இழுத்து சரிபார்க்கும் வளமைகளைக் கலாச்சாரம் என்றும், கருப்புக் கட்டுப்பாடு என்றும் கூப்பாடு போடும் சமூகம் இந்த சமூகம். பூட்டுகின்ற கைகளுக்கும் கற்புவேண்டும் எனும் கோரிக்கை கூட மீண்டும் ஏதாவதொரு விதத்தில் பெண்ணை பூட்டிவைக்கத் துடிக்கிற திருகல் வேலையென்றே புரிந்துகொள்ளவேண்டும். போலிக்கற்பிதமும், அதைக்காக்கிற கட்டுப்பாடும், அதனால் செழித்து வளரும் சந்தேகமும் காப்பியங்களக்கப்பட்ட கொடுமைகளை மறு விசாரணைக்கு கொண்டுவருகிறது தேன் மொழியின் கவிதை. ஆங்காரமான மொழியில் ''அதே சமதக்னி''.


அதே சமதக்னி, அதே பரசுராமன்.
ஆனால் ரேணுகா இல்லை, தலை இல்லை, முண்டம் இல்லை சந்தேகப்பவைக்குள் யாரும் இல்லை.
இருக்கிறாள் கங்கம்மாகாத்திருக்கிறாள் மாரியம்மா
கருவறுக்கும் ஆயுதங்களோடு.
இப்போது கேள் மாரியம்மா .
இப்போது கேள் கங்கம்மாயார் தலை வேண்டும் உனக்கு.
அதே சமதக்னி
அதே பரசுராமன்.


நான் தெரிவு செய்த இந்தக்கவிதைகள் எல்லோருக்கும் பொதுவானதென ஆகாது. ஆனால் நிச்சயமெதிரும் புதிருமாக வினயாற்றும் வலிமை கொண்ட எழுத்துக்கள். சில நெருடல்களிருக்கிறது. அவை அப்படித்தான் இருக்க முடியும். மாற்றம் ஒருபோதும் காய்ச்சி வடிகட்டி ஆறவைத்த குடி நீராகாது. ஆண் மனதில் செரிக்க இயலாத சொல்லும் பொருளும் அடர்ந்துள்ளது தேன்மொழியின் பிரகடனத்தில். '' ஒரு மனிதனைத்தரிசிக்க நெருங்க அன்புவைக்க, ரசிக்க இதைவிட வேறு தருணமில்லை'' என்கிற இருபால் பொது ரசனையின் அபரிமிதமான கவிதைகளும் நிறைத்து வைக்கப்பட்டுள்ள தொகுப்பு இது.தனது முதல் தொகுதியிலே கவனம் பெறும் மொழியோடு தகுதி பெறுகிறார் எஸ்.தேன்மொழி. வாழ்த்துக்கள்.


" துறவி நண்டு "

கவிதைத்தொகுப்புஎஸ்.தேன்மொழிகாலச்சுவடு பதிப்பகம்விலை ரூ.60.

10.6.09

எனக்கொரு கவிதை வேண்டும்.
வலிகள் நிறைந்து, வார்த்தைகள் குறைந்து.
பிரபஞ்சத்தில் யாரவது ஒருவரேனும்
இனம் கண்டுகொள்ளும் அலங்காரமற்றதாய்
எனக்கொரு கவிதை வேண்டும்.

.
வலிகளின் மேல் ஈக்கள் மொய்க்காதுஎனில்,
எனக்கு ஈ விரட்டுகிற வேதனை மிச்சம்.


இப்போது எனக்கொரு கரம் வேண்டும்.
வனினூடாக எங்கிருந்தாவது வரும் அது.
ஈ விரட்ட அல்ல, தோளை இறுக்காமல்ஆற்றுப்படுத்த
எனக்கொரு கரம் வேண்டும்.


இருக்கவே இருக்கிறது, இன்றைய இரவு.
மேகம் உடுத்த நிலவு, அங்கிருந்து கசிகிற அன்பு
வார்த்தைகளற்றஉரையாடலில் கலைந்து போக
காத்திருக்கும் புதிய காலை.


நிலவைக்கானோம், பதறிப்போய் எழுந்து நடந்தேன்
இன்னொருத்தரோடு பேசியபடி அதே நிலவு.

9.6.09

காக்காச்சோறு - விமலனின் சிறுகதைத்தொகுப்பு
வீடு என்பது அகமா ? புறமா ? இரண்டும் சந்தித்துக்கொள்கிற களம் என்றே நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.


வீட்டிலிருந்து வெளிக் கிளம்புகிற சரியான மனிதனும் அவன் புரிதலுமே, புற உலகம் குறித்து தெளிவாக முடிவெடுக்க முடிகிறது. கணவர்களின் உடனடி ஆலோசகர்கள் மனைவிகள். குழந்தைகளின் உடனடி உதாரண மனிதர்கள் பெற்றோர்கள். அவர்களுக்குள் உரையாடல் தீர்ந்து போன பின்னர் முகட்டு வளையைப் பார்த்தபடிதான் எல்லோரும் காலம் தள்ள நேரிடும். நமது சமூக ஏற்பாட்டில் உறவுகளுக்குள் உரையாடல்கள் குறைந்தே காணப்படுகிறது. காரணம், இங்கு எல்லா உறவுகளுமே ஆண்டான், அடிமை கோட்பாட்டில் தான் தீர்மானிக்கப்படுகிறது, செயல்படுகிறது. ஆதலால் தான் அந்த இடத்தை பாட்டிகளும் நண்பர்களும் பிடித்துக் கொள்கிறார்கள். தோழர் மூர்த்தி உறவுகள் குறித்து ஒரு மிகப்பெரிய இலக்கிய ஆரய்ச்சியே நடத்தியிருக்கிறார்.


இடக்கரடக்கல் வனராஜன் வீட்டை விட்டுக்கிளம்பும்போது துணிப்பை நிறையக் கோரிக்கைகளோடு கிளம்புகிறார். நிராதரவான நிலைநமையில் கிடந்து அல்லாடுகிற மனது மண்குழியில் கிடக்கிறதான கற்பனையும் வர்ணனையும் வாசகனிடம் மனசைப் பிசைகிற கிரக்கத்தை உண்டு பண்ணும். இறுதியில் தூக்குவாளி டீயுடன் இசக்கியின் வீட்டில் அவருக்கு ஒரு மாயக்கம்பளம் காத்திருக்கிறது அது இசக்கியின் முதுகு. அதில் ஏறித்தான் வாழ்க்கையின் வெறுமைகளைத் தாண்டிப் போகிறார்கள்.


குழந்தைகள் உலகம் ரொம்ப அலாதியானது, அதில் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது, எதிர்கொள்ளவும் இயலாது. உங்களிடம் இருக்கும் அச்சடிக்கப்பட்ட பதிலுக்குள் இல்லாத கேள்விகள் உற்பத்தியாகும் வாழ்கைக்கான ஆராய்ச்சி சாலை அது. அதைத்தான் வண்ணத்துப்பூச்சி பேசுகிறது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு காண்க்ரீட் தளங்களிலும் தேனெடுக்கிற வல்லமை கூடிப்போகிறது கதையின் ஓட்டத்தில். படைப்பாளி எல்லாவற்றையும் கூடுதலாக உற்றுப்பார்க்கிறான் அதனால் தான் காகங்கள் அவனிடம் சொல்லாத சேதிகளெல்லாம் சொல்லுகிறது. காக்கை எப்போதுமே ஒதுக்கப்பட்டவைதான். எனவே அவை விடுபட்ட பறவைகளில் ஒன்றாகிப்போகிறது. அதனால் தான் அந்தக் காக்கைகள் ஒன்று திரண்டு மூர்க்கமாக ஆண்டனா கம்பிகளையும், கான்க்ரீட் சுவர்களையும் கொத்திக் குதறுகிறது. இது போலப் படிமமான பல இடங்கள் வாசிப்பினூடாக வந்து நம்மை யோசிக்க வைக்கிறது.


தேனீர்க்கடையில் அமர்ந்து, அல்லது நின்று, பொழுது கடத்துகிறவர்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் கைக்கும் உதட்டுக்கும் இடையில் பயணமாகும் அந்த சுடு திராவாகத்தின் இனிப்பில் உலகத்தின் கசப்பைத் துடைகிற முயற்சி நடப்பதை அவதானிக்கமுடியும். அதனால் தானே கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் தேனீர்க்கடைகள் அதிகமாக வியாபித்திருக்கிறது. கசப்பைக்கடக்க வருகிற மனிதர்களை எதிர்பார்த்தபடி, அங்கே 24 மணிநேரமும் தேனீர்க் கொதிகலன்கள் கொதித்துக்கொண்டே இருக்கிறது. மூர்த்தியின் எழுத்துக்கள் அதிலிருந்து கிளம்பும் ஆவியைப்போல அலை அலையாய் வாழ்க்கையின் அடித்தளத்தை அர்த்தத்தோடு விவரிக்கிறது.


பெண்ணின் மனம் ஆழம் என்பதெல்லாம் மாய்மாலம், எட்டிப்பார்க்கவே தயங்குகிற ஆண் மனதுதான் குரூரமான ஆழம். மூர்த்தியின் கண்ணில் படுகிற பெண்கள், சோகக்கவிதையாய் பிணவறையில் கிடக்கிறவள், அவள் மீது போர்த்தப்பட்ட சந்தேகங்கள், வார்த்தை கொண்டு விரட்டுகிற கணத்த சரீரத்துக்கிழவி, அழுத்தமான நினைவுகளை வெள்ளை ஆடைகொண்டு போர்த்தியபடி உலவும் அம்மா, காய்ந்து கிடக்கும் கரிசல் தரிசை செருப்பில்லாத காலோடு கடந்துபோகிறவள், சிறைக்குபோன கணவனோடு சிதைந்து போகிற நம்பிக்கை, அதை எதிர்கொள்கிற கந்தனின் மனைவி, அடுப்பங்கரையிலும், குளியலரையிலும் வியர்வையோடு ஈர்க்கிற மனைவியின் பிம்பம், அதன் பின்னால் நிழலாடுகிற தொலைந்துபோன காதல். இப்படி ரக ரகமான பெண்களின் அருகில் போய் உறையாடுகிறது மூர்த்தியின் படைப்புகள். ஒரு ஆண், பெண் மனதோடு பேசுவது கடினம், ஆனால் அதற்கான முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. மூர்த்தியின் கதைப் பரப்பெங்கும் அந்த முயற்சி நடக்கிறது.


யாரும் பொறாமைப்படுகிற மொழி மூர்த்தியுடையது. அன்றாடம் நம்மோடு பயணிக்கிற, நமக்குப் பிடிக்காமல் போனாலும், நமது மூஞ்சைச்சுற்றி வட்டமிடுகிற கொசுக்களின் ரீங்காரத்தைப்போல உரத்துக்கேட்கிற விளம்பர வரிகளை வம்புக்கு இழுக்கிற வரிகள் நம்மையும் சேர்த்து உரையாடலுக்குள் இழுத்துக்கொள்கிறது.


எழுத்துக்கு பிரச்சாரம் தேவையா என்னும் கலாச்சாரச் சண்டையில் மூர்த்தியின் எழுத்துக்கள் மிகத்துள்ளியமாக பிரச்சாரத்தின் பக்கமே நிற்கிறது. அது அடிமக்களின், அதாவது நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே, ஒதுக்கப்பட்டவர்களுக்கும் மேலே இருக்கிறவர்களைப் பற்றிய பிரச்சாரம். எல்லோரும் கஷ்டப்படுகிற தொழிலாளி பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு வயோதிக சுமைத் தொழிலாளியின் அந்திம காலம் பற்றிப்பேசுகிறார். இப்படிச் சில கதைகள் நம்மை அதிர வைக்கிறது, சில கதைகள் வாசகனோடு உரையாடிக்கொண்டே கூட வருகிறது. சில கதைகள் படிமங் கலந்து வந்து கண்ணாமூச்சி காட்டுகிறது. காமம் குரோதம் நிறைந்த குடிகாரார்கள் அஞ்சு தலை நாகமாக, சந்தேகக்கணவன் சாக்கடையாக, வந்து அடிவாங்குகிறார்கள்.


இந்தப்புவிப் பரப்பில் தன் கண்ணுக்குள் படுகிற அவலங்கள் அணைத்தையும் மொத்தமாகப் படம்பிடிக்கிற ஆர்வத்தோடு கிளம்பியிருக்கிற எழுத்து, அவரது மனசைப் போலவே மென்மையானதும் விசாலமானதுமாகிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் அறிவொளி நாடகக்கலைஞானாக, பின்னர் தொழிற்சங்க பிரதிநிதியாக, எல்லாவற்றிலும் தனது செய்நேர்த்தியை உறுதிசெய்கிற மூர்த்தி, தன் கதைகளின் மூலமாக அகம் புறம் இரண்டையும் இன்னொரு தளத்திற்கு எடுத்துக்கொண்டு போகிறார்.


ஆசிரியர் - விமலன் அல்லது எஸ்.கே.வி.மூர்த்தி.வெளியீடு - வம்சி புக்ஸ்.விலை - ரூ 70.

8.6.09

நெருங்கி வரும் பழைய குலக்கல்வி முறை.
இந்தப் பதிவிற்கு வருகை தந்த வலை உள்ளங்களுக்கும்,வாக்களித்த அன்பர்களுக்கும், வழக்கம் போல என்னை உற்சாகப்படுத்தயூத்புல் விகடனில் மறுமொழி சேர்த்த நண்பர்கள். ஞானசேகரன், விஷான்வின்,svv, பெரியாரை விமர்சிக்கிற நண்பர்,முனைவர் கல்பனா,கலையரசன் ஆகியோருக்கும்,குட்பிளாக்கில் இணைத்த யூத்புல் விகடனுக்கும். என்னை இந்த வலைத்தளத்துக்குள்தள்ளிவிட்ட எனது உயிர் நண்பன் மாதுவுக்கும் நன்றி.

ஆயிரத்து நூறு மதிப்பெண்கள். கவுன்சிலிங்கில் நல்ல கல்லூரி கிடைப்பதற்கான நூறு சதவீத வாய்ப்பிருந்தது. எனினும்தனது பெண் மெப்கோ கல்லூரியில்தான் படிக்கவேண்டுமென்கிற பிடிவாதத்துக்கு ஐந்து லட்சம் பணம் தயார்செய்துவிட்டு" என்ன, கண்டும் கானாததுக்கு கல்விக்கடன் வாங்கிக்கொள்வேன் " என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் ஒரு வங்கி அதிகாரி.இந்த நிமிடம் வரை மேல்நிலைப் பள்ளிக்குள் ஒருவர் கூட நுழையமுடியாத மேட்டுப்பட்டிக் கொத்தனாரின் வம்சாவளியில் முதல் பெண் ஒன்பதாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கிறாள். தகுதிகாண் தேர்வில் தோற்றுப்போக அவளது தந்தை " நல்லவேளை இடம்கிடைக்காமல் போனது கிடைத்திருந்தால் சாகுமட்டும் சாந்துக்கரண்டி தேயத்தேய பாடுபட்டுப்போடணும், இனி அவளை தீப்பெட்டி ஆபீஸுக்கு அணுப்பிப்பிட்டு அக்கடான்னு அலையலாம் " என்று சந்தோசப்படுகிறார்.
ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும், அமைச்சர் பொன்முடி நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் கட்டணம் வசூலிக்கிற தொழில் நுட்பக்கலூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கறாராக அறிக்கைவிடுகிறார். அது அறிக்கையா அல்லதுஅழைப்பா என்பதை அறியாத ஜனங்கள் ஏழுகோடிக்குமேல் தமிழகத்தில் இருக்கிறார்கள். மருத்துவக்கல்லூரிக்கான நன்கொடையாக நாற்பது லட்சம் வசூலிக்கிற கல்வித் தந்தைகளும் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கல்லூரி வளாக முகப்பில் சிலையும் இருக்கிறது.

தேடு கல்வியிலாத ஊரைத் தீயினுக்கிறையாக்குவோம், பள்ளித்தலம் அணைத்தும் கோவில் செய்குவோம் என்று சொன்ன மகாகவி பாடத்திட்டத்தில் மட்டும் இருக்கிறான்.

மண்ணெண்ணை விளக்கினில் படித்து கலெக்டர் ஆன கதையெல்லாம் என் சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். மண்ணெண்ணை வாங்கவும் வக்கில்லாத என்போன்றோருக்கு தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. படிக்க நினைக்கிற யாருக்கும் சமூக பொருளதாரா ஏற்றத் தாழ்வுகள் தடையாக இருக்கக் கூடாது என்னும் மிக உயர்ந்த லட்சியத்தால் காமராஜர் மதிய உணவும், கல்வி உதவித்தொகையும், மாணவர் விடுதிகளும் கொண்டு வந்தார். வறுமையும் உழைப்பும் உரமான அணுபவக்கல்வியோடு ஏட்டுக்கல்வி இணைந்து ஒரு புதிய சமூகம் உருவானது ஒருகாலத்தில். அப்போதுதான் இந்த தேசத்தை நேசிக்கிற நிஜ மனிதர்களும் நிஜக் கல்வியாளர்களும் உருவானார்கள்.இன்று நிலைமை தலைகீழ். ஆங்கில வழிக்கல்வி பயிலாத மாணவர்கள் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டவர்களாவதும் தொழில் நுட்பக்கல்லூரியில் தன் மக்களைச் சேர்ப்பதற்கு சம்பளமோ கிம்பளமோ சேர்த்துவைக்காத தகப்பன் தறுதலையாவதும்.பத்துப் பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கும் அரசாங்க ஆசிரியர்கள் அந்தச் சம்பளத்தைத் தனது மகனைத் தனியார் பள்ளியில் படிக்கவைக்கச் செலவு செய்வதும் நாகரீகமாகிப்போனது. ஒரு அரசு தனது குடிமக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் பாதுகாப்பு, நீதி போன்றவற்றை இலவசமாக மட்டுமே வழங்கவேண்டும். அது மட்டுமே சரியான அரசையும் மக்களையும் நிர்மானிக்கும். அதை விடுத்து எல்லாவற்றையும் விற்பனைக்கு கொண்டுவந்தால். கொக்காக்கோலா க்ரூப் ஆப் போலீஸ் ஸ்டேசன், டாடா ஜுடிசியல் நீதிமன்றம் (பி)லிட், காட்கேபட்டில் அன் சன்சுக்குச்சொந்தமான கங்கை நதி என் நீண்டுகொண்டே போய் கடைசியில் அரசாங்கமும் தனியார்மயமாகும். அப்புறம் ''லாடு ரிப்பன் எங்கப்பன்'' என்று மறுபடியும் பள்ளிகளில் கடவுள் வாழ்த்துச்சொல்ல வேண்டியது வரும்.

3.6.09

பகல்நேரம்
எல்லாப்பேருந்துகளும் போனபின்னும்
காத்திருப்பதாகப்பவனைபண்ணியபடி
தொலைக்காட்சிப்பெட்டிக்குமுன்
பகல்கடத்தும் பச்சை சட்டைக்காரரும்
குழந்தைகள் நிறைந்த பகுதியில்
குரலை உயர்த்திச்சுண்டி இழுக்கும்
திண்பண்ட வியாபாரியும்.
சபலக்கண்கள் தேடியபடியே மேலாடை
சரிசெய்யும் வேற்று ஊர் பெண்ணும்.
கடலை விற்பதாகப் பாவணை பண்ணியபடி
கஞ்சா விற்கிற தள்ளுவண்டிக்காராரும்.
வெயிலும், வெள்ளரிக்காயும்
காவல் துறையும் ஜேப்படித்திருடர்களும்
நிறைந்ததெங்கள் பேருந்து நிறுத்தம். .

1.6.09

மண்ணிலிருந்து வேர்பிடித்த பெண்தலைவர் - CK. ஜாணு
CK. ஜானு, கேரளத்தின் பிரபலப் பெயர்களில் ஒன்று. ஆதிவசி கோத்ரா மாஹா சபாவின் தலைவரான ஜானு அதியா எனும் ஆதிவாசி இனத்திலிருந்து வந்த கலகக்காரர். அதியா என்பதற்கு அடிமைகள் என்று அர்த்தமாம். என்ன பெயரிட்டாலும்பட்டியலினத்தவர்கள் அடிமைகள் என்பதை மறுதலிக்க இந்திய சமூகம் லேசில் தயாராக இல்லை. இயற்கையோடு இயைந்தவாழ்வினால் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளும் ஆதிவாசிப் பழங்குடியினர். காடுகளில் வசிப்பதனால் ஒரு போதும் காட்டின் இறையான்மை பாதிக்கப்படுவதில்லை. அல்லது அவர்களால் காடு மாசு படாத வாழ்நெறிகள் படைத்தவர்கள். இதை எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆதிவாசிகளின் ஆர்வலருமான ச. பாலமுருகனின் சோளகர்தொட்டி நாவல் மிக அருமையாகவிவரிக்கிறது.ஜேம்ஸ்ராப்டனின் மெட்ரிக் முறை நில அளவைக்கு முன்னர். வளமான இந்தியக் காடுகளின் செல்வங்களின் மேல் ஆங்கிலேயக்கண்ணகள் பதிவதற்கு முன். பட்டா முறை கொண்டுவருவதற்கு முன்னர். காடுகள் முழுக்க இயற்கைக்கும், விலங்குகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான் சொந்தமாக இருந்தது. பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த அவர்களை காட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை இந்த தேசம் முழுக்க நடந்து வருகிறது. அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட காடுகள் வழிதவறி, தடுமாறி, சரியான முறையில் பெருமுதலாளிகளின் கைகளுக்கு வந்து விடுகிற ஏற்பாடுகள் இங்கே கச்சிதமாக நடைபெறுகிறது. தங்களின் காடுகளை மீண்டும் தங்களுக்கே மறுபங்கீடு செய்து தரவேண்டுமென்கிற போராட்டத்தின் மிகப்பெரிய உந்து சக்தி CK ஜானு.முறைப்படியான பள்ளிக் கல்வி கிடைக்கப்பெறாத ஜானு கேரள எழுத்தறிவு இயக்கதினால் எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டார். எழுத்தறிவித்த இயக்கத்தின் வெளிச்சத்தில் கேரள சிபிஎம் கட்சியின் அனுதபியாகிப் பின் உறுப்பினாராகவும் மாறிச் சமூகச் சீர்திருத்த இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கே அவருக்கு மங்களாக இருந்த உலகைப்புரிந்து கொள்ளும் அணுபவம் கிடைத்தது. இருந்தும் பொதுச்சமூகம் விடுபட்டவர்களின் உரிமைக்காகப் போராடும் என்கின்ற நம்பிக்கை இழந்து போனது. கேரள ஜனத்தொகையின் 1.5 விழுக்காடு பங்கு வகிக்கிற தங்களுக்கான தலைமையையும் போராட்டத்தையும் 1982 ல் தாங்களே வகுத்துக்கொண்டார்கள்.தொண்ணூறுகளின் துவக்கத்தில் மலை சார்ந்த மக்களின் ஒவ்வொரு அசைவிலும் தன்னை நெருக்கப்படுத்திக்கொண்ட ஜானுவுக்கு 1994 ல் அரசு சேவை விருது வழங்கியது. அதை திருப்பி அணுப்பினார். 2001 ஆம் ஆண்டு கேரளத்தை உலுக்கிய நடைபயணங்கள், சாலை மறியல்கள், செயலகம் நோக்கிப்பேரணி போன்ற போராட்டங்களுக்குத் தலைமை வகித்த ஜானு உலகச்செய்திகளின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பினார். இறுதியாக 2003நில மீட்சிப்போராட்டங்கள் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கியது. அரசின் தடையை மீறி '' முத்தங்கா '' மலைப்பகுதியில் குடியேற்றம் நடத்திய அவர்களின் மீது வழக்கம்போல காவல்துறை வன்முறையை பிரயோகித்தது. ஒரு காவலர் இறந்து போனார் போராட்டக்கரர்களிலும் பல உயிர்ச்சேதம் உண்டானது. பின்னர் ஆராளம் பண்ணைப் பகுதியில் ஆதிவாசிகளுக்குஇடம் ஒதுக்கித்தர அரசு கொள்கையளவில் ஒத்துக்கொண்டது.மிகப்பெரிய கல்விபின்புலம், அரசியல் பின்புலம், குடும்பப் பிண்ணனி என ஏதுமில்லாத CK ஜானு நிஜமான மக்கள் தலைவர் என்பதை உலகச் செய்தி ஊடகங்கள் அங்கீகரிக்கின்றன.

மஞ்சுவிரட்டு

----------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பச்சைக்கலர் தகரப்பேட்டி, கண்கள் குழிக்குள் கிடக்கிற பசி, துணைக்குச் சித்தப்பா.பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அந்த ஊர் இன்னும் வறட்சியாகத்தெரிந்தது. வழி நெடுகக் கடந்து போன பொட்டல் காடுகளும் வேலிக்கருவேல மரங்களும் அது வரை பதிவு செய்யப்பட்ட சினிமாக் கிராமங்களை கிழித்துப்போட்டிருந்தது. வேலைக்கான உத்தரவு கையில் கிடைத்ததிலிருந்து அவன் வேற்று மனிதனாகிப்போனான். ஊதாரி, உருப்படாதவன் என்கிற பிம்பம் உடைந்து அரசாங்க முத்திரை குத்தப்பட்ட மரியாதை அவன் மேல் பதிந்தது. ரெட்டைப் போஸ்ட்டுக்கு வழியனுப்ப வந்த எட்டுப்பேரில் ஆறுபேர் அவனோடு திருட்டுப் புகை பிடித்தவர்கள். அவனுக்காக கடிதம் கொண்டுபோனவர்கள். ராத்திரி பணிரண்டு மணிக்குமேல் பக்கத்தூருக்குப்போய் கோழி திருடி அதை சுடுகாட்டுக்குப்பக்கத்திலே வதக்கி தின்ற கூட்டம். சந்தோசம், கேலி, விளையாட்டு, பசி எல்லாவற்றையும் பகிர்ந்து கிடந்த நாட்கள் இறுகி, கண்ணீர் கடந்த அந்த நேரம் ஆறு பேரும் முகம் திருப்பிக்கொள்ளப் பேருந்து நகர்ந்தது. இருபத்திமூனு வருசம் தரிசுக்காட்டில் நீளக்கயிரில் கட்டிப்போட்ட மாட்டைப்போல் சூரங்குடியை மட்டுமே வட்டமடித்து வந்தவன், இரு நூறு கிலோ மீட்டர் தாண்டிய மற்றொரு கிராமத்துக்கு முதன் முதலாக இடம் பெயெர்ந்தான்.

சாயங்காலம் வரை உடனிருந்து விட்டு சாந்தாம்மா மெஸ்ஸிலும், பெருமாள்சாமியிடமும் நல்ல வார்த்தை சொல்லி ஒப்படைத்து விட்ட திருப்தியில் அவனது சித்தப்பாவும் ஊருக்குப் போய் விட்டார். அந்த நிமிடத்திலிருந்து அங்கு எதிர்ப்படுகிற செட்டி நாட்டு மண்ணும், மனிதர்களும் பிரம்மாண்ட வீடுகளும் மிரட்சியை உண்டு பண்ணியது. இரண்டொரு மாதங்களில் கண்மாய்த்தண்ணீரை வடி கட்டிக்குடிக்கவும், பக்கத்துக்கண்மாயில் குளிக்கவும் பழகிக்கொண்டான். இளநீரை விடவும் சுத்தமான பம்பு செட்டில் குளித்ததும், கிணற்று நீரில் பல்டியடித்து விளையாண்டதும் பழைய காலங்களாகிப்போனது. புதிய மனிதர்கள் புதிய பழக்க வழக்கங்கள், அரசாங்க உத்யோகக்காரன் என்கிற புதிய அடையாளம், சார் போட்டுக்கூப்பிடுகிற மரியாதை எல்லாம் கைபழகுவதற்கும், ஏற்றுக்கொள்ளவும் கூச்சமாகவே இருந்தது. அதேபோல் ஒரு பொய் மரியாதையை எந்த நேரமும் பையில் வைத்திருக்க வேண்டுமென்றும், உயர் அதிகாரிகளைக்கண்டதும் அதை உடலெங்கும் பூசிக்கொள்ள வேண்டுமென்றும் மூத்த ஊழியர்கள் சொன்னதும் லேசுக்குள் பழக்கத்துக்கு வரவில்லை. சாயங்காலப்பொழுதுகளில் இலங்கை வானொலியில் பாட்டுக்கேட்பதுவும், நிலாக்காலங்களில் மொட்டை மாடியிலிருந்து நிலவொளியில் நனைகிற தனிமையும் மட்டும் பழமை மாறாமலிருந்தது.


இரண்டாம் நாள் சாயங்காலம் உள்ளாடை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. பெருமாள் சாமிதான் கூட்டிக்கொண்டு போனார்.அது ஒரு இரும்புக்கடை, போகிறவழியில் தெரிந்த நன்பரைப்பார்க்கப்போகிறார்என்று நினைத்துக்கொண்டான். அவனை கடைக்காரருக்கு அறிமுகம் செய்து வைத்தார். கொஞ்ச நேரம் பழமை பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பத்தயாரானான். '' ஜட்டி வாங்கவில்லையா '' என்று கேட்டார். ''அதான் ஜவுளிக்கடைக்குப் போவோம்'' என்று விளக்கம் சொன்னான்.ஆனால் அந்த இரும்புக்கடைக்குள்ளிருந்து பத்திருவது வெளிநாட்டு ஜட்டிகளைக் கடைப்பையன் கொண்டு வந்ததை அவன் எதிர் பார்க்கவில்லை.


அந்த ஊர் கடலுக்கு அருகில் உள்ள சுத்துப்பட்டிகளின் சந்திப்பாக, வாரச்சந்தை கூடுகிற இடமாகவும் இருந்தது. எண்பதுகளின் துவக்கத்தில் இலங்கைத்தமிழர் பிரச்சினை கனன்று கொண்டிருந்த நேரம்.ரானுவ லாரிகளில் வந்து நகரங்களிலும்,கிராமங்களிலும் தமிழர் விடுதலைக்குழுக்களின் இரண்டாம் கட்டதலைவர்கள் அனுதாபமும் நன்கொடையும் சேகரித்தார்கள். தூத்துக்குடியிலிருந்து எம் வி எம் சிதம்பரம்மென்ற கப்பல் போக்கு வரத்து தடை செய்யப்படாமலிருந்தது. அது போலவே ராமேஸ்வரம் தொடங்கி வேம்பார் வரையிலான கடலோரங்களில் இரவு நேரக் கள்ளத்தோணிகள் மிகக்குறைந்த சிரமத்தில் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் பயணப்பட்டுக்கொண்டிருந்தது. எனவே வருடத்தின் கால்பகுதி காலங்களில் விவசாயம் பண்ணவும் எஞ்சிய காலங்களில் ஒரே நபர் நான்கு கடவுச்சீட்டுக்கள் வைத்துக்கொண்டு திரைகடல் தாண்டி திரவியம் கொண்டுவரவுமான தொழில்களை பிரதானமாகக்கொண்டிருந்தது அந்த கிழக்கு ராமநாதபுரம் பகுதி. ஜட்டி முதல் தங்க பிஸ்கட் வரையிலான வெளிநாட்டு மோகத்தை, வரி செலுத்தியும் வரி செலுத்தாமலும் அவர்கள் தமிழ் மண்ணுக்கு கொண்டுவந்தார்கள். உள்ளூர் லக்ஸ் சோப்பை விட வெளிநாட்டு லக்ஸ் கூடுதலாக மணத்தது, இரண்டையும் ஒரே சோடா உப்பில் தான் தயாரிக்கிறார்கள் அதுவும் லீவர் லிமிடெட் என்கிற ஒரே பண்ணாட்டுகம்பெனி என்பது அந்த உறையில் உள்ள மிக நுண்ணிய எழுத்தைப்போல மறைபொருளாகவே இன்னும் இருக்கிறது. எனவே மருந்துக்கடைகளில் மலேசிய ஹவாய் செருப்புகளும் வெளிநாட்டு சிகரெட்டுகளும் கூடக் கிடைத்தது. பெருகிய கன்மாய்த்தண்ணீரை பங்கு போட்டுக்கொள்ள வெட்டுக்குத்து வரை போகிறதும், விடிய விடிய முழித்திருந்து நெல்லுக்கு நீர் பாய்ச்சுவதையும் பார்த்துப்பழகிப்போன அவனுக்கு, புழுதி விதப்பாடு என்று சொல்லிக்கொண்டு மாணாவாரியில் நெல் விதைக்கிற விவசாயமும் அதிசயமாக இருந்தது. பழையசினிமாவில் பார்த்த மஞ்சுவிரட்டு, மாட்டுவண்டிப்பந்தயம் எல்லாம் நேரடியாகப்பார்க்கக் கிடைக்கிற அந்தப்பகுதியில் எருது கட்டு என்று ஒரு வீர விளையாட்டும் புழக்கத்திலிருக்கிறது. டெட்ரக்ஸ் சட்டைபோட்டுக்கொண்டு சிங்கப்பூர் செண்டடித்துக்கொள்கிறவர்களும், தலைக்கு வேப்பெண்ணெய் தட்விக்கொள்கிறவர்களும் ஒரே கிராமத்துத்தெருவில் வசித்தார்கள்.

ஒரு மாலை வேளையில் காட்டுக்குள் காலார நடந்து போய்க்கொண்டிருந்தபோது, இரவும் பகலும் சந்திக்கிற வசீகர நேரம் உப்புக்குறைந்த குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. தூரத்தில் நான்கைந்து சிகரெட்டுக் கங்குகளும் சன்னமான பேச்சுச்சத்தமும் கேட்டது. மாலைப்பொழுதில் வாலிபர்கள் திருட்டுப்புகை பிடிக்கிறார்கள் என்பதான யூகத்தில், வேலவர், எம் ஜி, வள்ளிமுத்து எல்லோரையும் நினைத்துக்கொண்டே கடந்து போனான். எதேச்சையாக அவர்களைப்பார்க்க நேர்ந்தபோது தூக்கிவாரிப்போட்டது. வட்டமாய் உட்கார்ந்து சீட்டு விளையாடுவார்கள். ஆனால் அங்கே அருகருகே வட்டமடித்து உட்கார்ந்து வியாபாரக்கதைகள் பேசியபடி மலம் கழித்துக்கொண்டிருந்த வயது வந்த ஆடவர்களை அங்கு தான் பார்த்தான். அது பரவாயில்லை சில பேர் ஊரை அடுத்த தார் சாலையின் ஓரத்தில் வேட்டியைத்திரைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதும் அந்த வழியே போகிற பால்காரப்பென்கள் சங்கோஜத்தோடு ஒதுங்கிப்போவார்கள் அப்போது அவர்களை வழியக்கூப்பிட்டு குசலம் விசாரிப்பதும் ரொம்பசாதாரணம். மூன்று மாடி நான்கு மாடியில் நவீன வீடுகளும், அரை ஏக்கரில் பழங்காலத்து புராதண வீடுகளும் இருக்கும் அங்கே கழிப்பறை என்பதே கிடையாது.


இந்தக்கதைகளோடும் சம்பளப்பணத்தோடும் எதாவது பொருள்களோடும் இரண்டு மாதங்களுக்கொருதரம் ஊர்திரும்புகிறதுமாக இரண்டு வருடங்கள் ஓடிப்போனது. அந்த இரண்டு வருடங்களில் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுக்குள் காரியார்த்தமானவர்களையும் ஆத்மார்த்தமானவர்களையும் பிரித்துப்பார்ப்பதில் சிரமிருந்தது. சென்னையில் மட்டுமே மையங்கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளால் மிச்சமுள்ள தமிழகத்துக்கு எந்தப் பாதிப்புமில்லாமலிருந்த காலம் அது. அப்போது எல்லோருக்குமான ஈர்ப்பும் பொழுது போக்கும் சினிமா மட்டுமாக இருந்தது. ஒரு வரிக்கதைகளைச் சினிமாவென நம்பிக்கொண்டிருந்த மக்களிடம், கேள்விகளை முன்வைக்கிற படங்கள் பெருவாரியாக முளைத்து வந்ததும் அதற்கு பணம் செலவழிக்கிற தயாரிப்பாளர்கள் உயிரோடிருந்ததும் அதிசயம். கண்சிவந்தால் மண்சிவக்கும் பார்த்து விட்டு பல இரவுகள் தூங்க முடியாமல் அலைக்களிக்கப்பட்டான். அந்த அவஸ்தையை வடிக்க ஒரு குயர் நோட்டு வாங்கி பக்கம் பக்கமாகக் கிறுக்கினான். ராணுவ லாரிகளில் வந்து இனப்படுகொலை அவலத்தைக் கடைவிரித்த புகைப்படக் கண்காட்சியைப்பார்க்க விடுப்பெடுத்துக்கொண்டு காரைக்குடிக்குப் போனான். அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் சுத்தளவில் எங்கு ரேக்ளா வண்டிப்பந்தயம் நடந்தாலும் முதல் பத்திரிக்கை பேங்கைத்தேடி வந்து விடும். கல்யாணம் காது குத்து நடத்தும் பிரமுகர்களின் பிரதான விருந்தாளிகளாகவும் ஆனார்கள். எல்லா இடங்களிலும் தெரிந்த முகங்கள் இருந்து வணக்கம் சொல்லும்போது மரியாதை கூடியது. அது சில நேரங்களில் ஆகாசத்தில் பறப்பதுபோலிருந்தது. தாத்தா வயசிருக்கிற முனியாண்டிப் பெரியவர் போன்றவர்கள் பேருந்து நெரிசலில் எழுந்து இடங்கொடுக்கிற போது மனசு ப்஢சைகிற அவஸ்தையாகவுமிருந்தது. அவன் இப்போது சாதாரண ஜனங்களுக்கு மேல் நிற்கிற ஒரு வங்கி ஊழியன். கடைக்கு சிகரெட் வாங்கப்போனாலும் காத்துக்கிடக்கிற கூட்டம் விலக்கி உடனேவெளியேறுகிற முதல்மரியாதைக்குரியவன்.


அவன் தங்கியிருந்த அறைக்கு எதிரே கிருஷ்ணன் கோயிலிருந்தது. விசேச காலங்களிலும், மார்கழி மாதங்களிலும் மைக்செட் போட்டு பஜனைப்பாடல்கள் போடுவார்கள். அந்த விடிகாலைக்குளிரில் இடுப்பில் துண்டு கட்டிகொண்ட ஏழெட்டுப்பேர் பதினாறு சுதிகளில் ஆண்டாள் பாசுரங்கள் பாடிக்கொண்டு வருவார்கள். ஆர்மோனியப்பெட்டி, மிருதங்கம், கஞ்சிரா சத்தங்களுக்கு ஊடாக பொக்கை வாய்க்குரலில் பாடுகிற அயோத்திராமச்செட்டியாரின் குரல் அலாதியாகக்கேட்கும். அந்தக்கோயில் பற்றியதான நினைவுகள் வரும்போதெல்லாம் அந்தக்கோயிலுக்குப்போய் கருவரையும் சிற்பங்களும் பார்க்க உள்ளூர ஆசை வந்துபோகும். மொட்டைப்பனை, குத்துக்கல், துருப்பிடித்த சூலாயுதம், இவைகளே சாமியாகவும், பன்னிக்கூடு அளவு இருக்கும் ஒரு ஓட்டுச்சாய்ப்பு மாரியாத்தாவின் கோவிலாகவும் அறிமுகமாகி அருகிருந்தது. ஆபரண பூஜியதையாய் அருளொளிரும் கண்களோடு காட்சி தரும் சிலைக்கோலம் பார்க்கிற பாக்கியம், பேர் சொல்லி நட்சத்திரம் இணைத்து காத்திரூக்கிற பவ்யம், பிரகாரம் சுற்றிக்காலோய்ந்து உட்காருகிற ஆசுவாசமான தருணம் எல்லாமுமே இன்னொரு உலகமாக இருந்தது.

ஒரு வருடம் ஓடிப்போனது அந்த ஊரின் மனிதர்களும் மூலை முடுக்குகளும் சிநேகமாகிப்போனது. ஊரின் கீழ்கோடியில் ஒரு புதிதாகக் கட்டப்பட்ட கோயிலுக்கு கும்பாபிசேகம் நடந்தது. முந்திய நாள் சிறப்பு பூஜைக்காக ஊரின் பிரமுகர்களோடு இவனும் அழைக்கப்பட்டிருந்தான். தூரத்திலேயே ''கற்பூர நாயகியே கனகவல்லி'' பாட்டுக் கேட்டது. அதே சாயலில் ஹனீபாவின் ''தீனோரே ஞாயமா மாறலாமா'' இருக்கும். இந்த இரண்டின் மூலப்பாடலாக ''ஆதாஹே சந்த்ரமா ராத்து ஆஜி'' என்றொரு ஹிந்திப்பாடல் இருப்பதைச்சொல்லிக்கொண்டே நாகராஜோடு நடந்தான். வயரிங் பிளம்பிங் வேளைகள் இல்லாதபோது மேனேஜருக்கு எடுபிடி வேளைகள் செய்வதன் மூலம் அன்றைக்கான சாராயத்துக்கோ, ஒரு கால் பாட்டில் சீமைச்சாராயத்துக்கோ உத்திரவாதம் பண்ணிக்கொள்ளும் நாகராஜுக்கு மேனேஜரின் இடத்தில் அவனிருந்தான். கோயிலை நெருங்கும்போது ஊதுவத்தி, சாம்பிராணி, சந்தனத்தோடு பூமாலைகளின் வாசம் வந்து கொண்டிருந்தது. ஆட்கள் பூஜைக்கான பொருள்களோடு போவதும் வருவதுமாக எதிர்ப்பட்டார்கள். இருட்டில் அடையாளம் கண்டுகொண்டு ''மீசக்கார மேனேஜர் வல்லையா'' யாரோ கேட்டுக்கொண்டு கடந்து போனார்கள். ஏற்கனவே அரை போதையிலிருந்த கோயில் முக்கியஸ்தர்களில் ஒருவர் நாகராஜை உரிமையோடு இழுத்துக்கொண்டு போனார். '' டே ஆறுமுகம் பூஜை இருக்குடா'' என்று சொல்லிக்கொண்டே பின்னால் போனார் '' ஏ குட்டச்சாமி இதுவும் பூஜைதயா, மில்டரி சரக்கு''. அவர்களிருவரும் அந்த மிலிட்டரிச்சரக்கைப்பற்றியும் போன பொங்கலுக்கு குடித்த இதுபோன்றதொரு தருணத்தைப்பற்றியும் பேசிக்கொண்டு அந்த இடத்தினின்றும் கடந்துபோனார்கள்.

இப்போது அவன் மட்டும் அந்த திருவிழா பரபரப்பில் தனித்து விடப்பட்டிருந்தான். சிலை வந்து சேருவதற்கு தாமாதமாகியிருந்ததால் மின்சார வெளிச்சத்தில் பீடத்தை அப்போதுதான் கட்டிமுடித்துப்பூசிக்கொண்டிருந்தார்கள். பூசிமுடித்தவுடன் வெள்ளையடிக்க தயார் நிலையில் சுன்னாம்புப்பால் வாளிகளில் காத்திருந்தது. மறு நாள் அன்னதானத்திற்கான சமயல் வேலைகள் துரித கதியில் நடந்தேறிக்கொண்டிருந்தது. உரலிடிக்கிற மாவாட்டுகிற காய் நறுக்குகிற வேலைகளுக்கு ஊடாக எடுப்பான பெண்களின் பின்னால் மைனர்கள் அலைந்தார்கள். ''அப்பச்சி ஆத்தாகிட்டா சொல்லிருவேன்'' என்று சொல்லி சாராய நெடியின் வாசத்தை எட்டிப்போகச்செய்தார்கள். தர்மகர்த்தா வந்து ஒரு நாற்காலி ஏற்பாடு செய்து அவனை உட்காரச்சொல்லிவிட்டு '' இருங்க இன்னுஞ் செத்த நேரத்தில் பூஜை ஆரம்பிச்சுரும்'' சொல்லிவிட்டுப்போனார். நேரம் மந்தமாக நகர்ந்துகொண்டிருந்தது, ரூமுக்கு போய்விட்டு வரலாமா என்று யோசனை பண்ணினான். அதற்குள் நாகராஜ் வந்துவிட்டான். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, வழக்கம்போல பெண்கள் பற்றிய பேச்சை ஆரம்பித்தான். திருவிழாக்காலங்களுக்கென ஒரு குதூகலம் இயல்பிலே அமைந்துபோகும். எல்லா வயதினருக்குமான எல்லாம் அங்கே நிறைந்திருக்கும். பூ மஞ்சள் வாசனைப்பவுடர் எல்லாம் கலந்தொரு வாசம் மிதந்துகிடக்கும் அது மிக மிக அலாதியானது. மசாலை இடிக்கிற கீழ்குடியிருப்புப் பெண்ணைக்கான்பித்து அவன் சொன்னவைகள் இரவு ஒன்பது மணிக்காட்சிக்கு காண்பிக்கிற மளையாளப்படங்களுக்கு இணையானது.ஒலி பெருக்கியில் சிவனுக்கிசைந்தது பாடல் நிறுத்தப்பட்டு உய்ய்ங்க் என்ற சத்தம் சரிசெய்யப்பட்டது, '' ஹலோ, ஹலோ, மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ உங்கள் மத்தியில் ஒலிபெருக்கிக்கொண்டிருப்பது'' என்று கடகடத்தமிழில் விளம்பரம் நடந்தது. அப்புறம் வேற்றுக்குரலில் '' சிறப்பு பூஜை ஆரம்பிக்க இருப்பதால் மேளக்காரர்கள், சமயல்காரர்கள், சுத்தக்குறைவானவர்கள், தீட்டுப்பட்டவர்கள், கீழ்சாதிக்காரர்கள் எல்லோரும் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறும் படிக்கு கும்பாபிசேக கமிட்டியார் கேட்டுக்கொள்கிறார்கள்'' என்று பிரகடனப்படுத்தப்பட்டது. திரும்பவும் பக்திப்பாடல் ஒரு நிமிட இரண்டு நிமிட இடைவெளியில் அறிவிப்புமாக தொடர்ந்தது. எல்லோரும் போய்விட்டார்கள் பூஜைக்கானபொருட்கள்அடுக்கப்பட்டுத் தயாராயிருந்தது. மீண்டும்அறிவிப்பு ஒலித்தது. பீடத்தைச் சுற்றிப்பெருக்கிக் கொண்டிருந்த ஆளை, '' நீ இன்னுமா போகல '' என்று உரிமையோடுவிரட்டினார்கள். நாகராஜ் இவன் முகத்தை உற்றுப்பார்த்தான். அதற்கு எதோ அர்த்தம் இருப்பதுபோலிருந்தது. ஊதுவத்தி, சாம்பிராணி, சந்தன வாசனைகள் மங்கிப்போய் புழுங்கல் நாற்றமடித்தது. இவனது உருவம் கரைந்து கொண்டிருந்தது. நாகராஜ் இவனது கையைப்பற்றியிருந்தபோதும் அத்துவானக்காட்டிலிருப்பதுபோலிருந்தது. கொஞ்சம், உயரத்தில் ஏறிப்பார்த்தால், இருநூற்றி ஐம்பது கிலோமீட்டருக்குகு ஆளரவமே இல்லாதது போலிருந்தது. கோயில் வளாகத்தை விட்டு வெளியேறினான். தூரத்தில் கோயிலின் வெளிச்சம் தெரிந்ததும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ஒலிபெருக்கி வழியே மந்திரச்சத்தம்கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோலச் சன்னமாகிக்கொண்டிருந்தது. அவனுக்குச் சற்று முன்னாள், மேளக்காரர்கள், சித்தாள், சமயலுக்கு ஒத்தாசை பண்ணியவர்கள், பெரும் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். சிரிப்பும், சத்தமுமாக ஏதேதோ பேசிக்கொண்டு கோயிலினின்றும் ஒதுக்குபுறமாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.