14.8.12

நைல்நதி காதல் நாகரீகத்தின் தொட்டில். cairo time (சினிமா)தமிழ்த்திரைப்படங்களை கேமரா இல்லாமல்கூட படம் பிடித்துவிடுவார்கள் போல அருவா இல்லாமல் படமே எடுப்பதில்லை. ஆங்கிலத்திரைப் படங்களென்றால் துப்பாகியால்சுட்டுத்தான் ஜிப்பைக்கூடக் கழற்றுகிறது.
அல்லது நம்பமுடியாத உருவில் பல்லிகளையும் பாச்சான்களையும் வடிவமைத்து அமெரிக்காவை மிரட்டுவதாக கதைகள் ஜோடிப் பார்கள். இடையில் இத்தாலியன் ஜாப் என்கிற ஆங்கிலப்படம் பார்த்தேன். அது ஏற்கனவே பார்த்த மாதிரியே இருந்தது. அடடே நமக்கு பூர்வஜன்ம ஞாபகம் வந்துவிட்டதா என்று பயந்துபோய் மூளை கசக்கினேன். ஆமாம் அது மங்காத்தா. அப்படியெல்லாம் இல்லை இதோ மெல்லிய பியானோ ஒலி படம் முழுக்க பரவிக்கிடக்க நைல் நதியில் மிதக்கும் ஒரு காதல்கதையைச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று கொடுத் திருக்கிறார் இயக்குநர் ரூபா நடா.கதையும் கூட உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி எழுதிய ரூபா நடாவின் நாவல்.

இதுவும் கூட ஒரு நடுவயதுப் பெண்ணின் தனிமையின் அருகே நகர்ந்து போகும் கதைதான். ஆனால் அந்த அமைதியும்,நைல்நதியும்,கழுத்து ஒடியும் உயரத்தில் எழுந்துநிற்கும் பிரமீடுகளும்,மணற்பரப்பும் நம்மை கட்டிப் போடுகிறது. காஸாவில் அமெரிக்க அரசுப்பணிக்காக வந்து தங்கிவிட்ட தனது கணவன் மார்க்கை (டாம் மெக்காமஸ்) மூன்றுவருடங்கள் கழித்து கெய்ரோவுக்கு தேடி வருகிறாள் பத்திரிகையாளர் ஜூலியட் ( பாட்ரீசியா க்ளார்க்சன்). உலகம் முழுவது ம் தாங்கள் விதைத்து வைத்திருக்கும் பயங்கரவாதம் கெய்ரோவிலும் செழித்துக்கிடக்கிறது. காஸாவிலிருந்து கெய்ரோ வரும் வரை அவளுக்கு பாதுகாப்புக்கென தனது பழய்ய மெய்க்காப்பளன் தாரிக்கை (அலெக்சாண்டர் சித்திக்) அமர்த்துகிறான் கணவன் மார்க்.

தனது காதலி இன்னொருவனுக்கு மனைவியானதினால் மணம் உடைந்து போன தாரிக்ஒரு தேநீர்விடுதியை நடத்திக்கொண்டு தனியே வாழ்கிறான். அவர்களிருவரும் ஒருமூன்றுவாரம் ஊரைச்சுற்றுகிறார்கள். கெய்ரோவின் உணவுகள்,தேநீர்,மக்கள்,அவர்களின் வறுமை,அவர்களின் கல்யாணம் அங்குநடக்கிற இசையும் நடனமும், அவர்களின் குக்கா புகை என ஜூலி யட்டை மட்டுமல்ல நம்மையும்  ஈர்த்துவிடுகிற காலாச்சாரம் கெய்ரோ வெங்கும் விரிந்துகிடக்கிறது. அந்தக் காட்சிகளின் பதிவில் நாம் கூடவே பயணிக்கிற உணர்வு மேலிடுகிறது.ஒரு நாள் பொழுதுபோகாமல் தாரிக்கின் தேநீர்விடுதிக்கு போகிறாள் அங்கே ஒரே குடியும் பாட்டும் கும்மாளமுமாக இருக்கிறது.அந்தக்கூட்டம் முழுக்க அவளை விநோதமாகப் பார்க்கிறது. ஏனென்று கேட்கிறாள். இது ஆண்களுக்கான விடுதி என்று கூறுகிறான். ஆண் பெண்ணென்று தனித்தனியாகவா வாழ்கை இருக்கிறது என்றுகேட்கிறாள்.

தாரிக்கின் பழய்யகாதலி  யாஸ்மீனைத்( ஆமினா அன்னாபி )  .கணவனை இழந்துவிட்ட அவள் தாரிக்கின் அளப்பரிய காதலை கண்ணீரோடு நினைவு கூறுகிறாள். அவனோடு திரும்ப வாழ ஆசைப்படுவதாகவும் சொல்லுகிறாள். தாரிக்கிடம் வந்து அதைச்சொன்னதும் தாரிக் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். வாதப்பிரதிவாதங் களோடே நைல்நதியில் படகுப்பயணம் செய்கிறார்கள். பிரம்மீடுகளின் மீதேறி அமர்ந்து கொண்டு கெய்ரோவை வேடிக்கை பார்க் கிறார்கள். பிரம்மீடுகளுக்கு போகும் வழியெங்கும் மணற்பரப்பில் நடப்பதான காட்சி ஒருமுறை யேனும் எகிப்துக்கு போய்வரத்தூண்டும். அந்த மூன்றுவார அருகாமையும் ஒருவருக்கொருவரின் பகிர்தலும் அவர்களுக்குள் மெல்ல மெல்ல வேதியல் விளைவுகளை உண்டுபண்ணுகிறது.

இந்த சுற்றுலா முழுக்க விந்தைகளை அவளுக்கு அறிமுகம் செய்த காரணத் துக்காக பாரம்பரிய அமெரிக்க நன்றியாக ஜூலியட் தரும் முத்தத்தில் தாரிக் கிளர்ச்சியாகிறான். விடுதி அறையின் பொழுதுபோகாத  நிமிடங் களை நகர்த்த அவள் அடிக்கடி தாரிக்கைத் தேடிவருகிறாள். கணவன் மார்க்கின் திரும்புத லோடு கதையின் கடைசி நிமிடங்கள் அழகிய காதல்கவிதையாய் முடிகிறது. கணவனின் அணைப்பிலும் அவனது முத்தத்திலும் தாரிக்கையே அவள் விழிகள் தேடுகிறது. அந்த லிஃப்டின் கதவுகள் மூடும் வரை தாரிக்கின் பிம்பத் தில் நிலைகுத்தி நிற்கிறது ஜூலியட்டின் காதல் கசியும் கண்கள்.

மெசப்படோமியா,நைநதி,எகிப்து என்ற பள்ளிப்பருவத்தில் போரடித்த  மனப் பாடப்பகுதி எழுந்து அலையலையாய் வந்து கவிதைகோர்க்கிற அனுபவம்.

29.7.12

bread and tulips - (இத்தாலியப்படம்) வசீகரிக்கும் முதிர்காதல்.


ஞாயிற்றுக்கிழமைகளை அர்த்தமுள்ளதாக்க மிகப்பெரும் முயற்சிகள் தேவையற்றுப் போகிறது. மிகச்சாதாரண நிகழ்வுகளும்,சம்பாஷனைகளும் அந்தநாளை இனிதாக்கிவிடும். பயணக்களைப்பில் படுத்துக்கொண்டே  தொலைக் காட்சி பார்க்கிற சோம்பேறி நிமிடங்களை நிமிர்த்தி வைத்து,அதற்குள்ளேயே இழுத்துக்கொண்டு போய் அமிழ்த்தி விட்டது இன்றைய சினிமா.bread and tulips என்கிற இத்தாலிப்படம் அது. வெறும் பத்து அல்லது பனிரெண்டே கதாபாத்திரங்கள். அவர்களு டனான உறவுகள், உணர்வுகள் இவை அணைத்தையும் பார்வையாளர்கள் மேல் பாய்ச்சமுடிந்திருக் கிறது அந்த இயக்குனரால்.

விடுமுறையைக்கழிக்க பேருந்தில் பயணமாகும் ஒரு குடும்பம் ஓரிடத்தில் அந்தக்குடும்பத்தின்  பிரதானப் பெண்ணை மறந்துவிட்டு பயணத்தைத் தொடர்கிறது. இரண்டு மணிநேரங்களுக்கு மேலாகியும் கணவனோ குழந்தைகளோ அவளைத்தேடி திரும்ப வராததால் பேதலித்துப் போகிறாள். தெரியாத இடம் மீண்டும் எப்படி வீடுபோவோம் என்று அல்ல. எப்படி மொத்தக்குடும்பமும் தன்னை மறந்து போனது என்கிற சிந்தனையில் குழம்பி, தன்னைத்தானே தொலைத்துக்கொள்கிறாள்.அந்த விடுமுறையைத் தனியேகழிக்க விரும்புகிறாள். தன் வாழ்நாளில் ஒருதரமாவது பார்த்துவிட ஏங்கிய வெனிஸ் நகருக்கு போகிறாள் ரோசல்பா.

வெனிஸ் நகரின் மார்க்கபோலோ விடுதியில் தொடர்ந்து தங்கமுடியாத அளவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த விடுதியின் சேவகர் பெர்னாண்டோவிடம் உதவி கேட்கிறாள்.பெர்னாண்டோ தனது அறையில் தங்க இடம் அளிக்கிறான். பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மஸாஜ் மற்றும் அழகு கலை நடத்தும்  க்ராஸி யாவுடன் நட்புக்கொள்கிறாள்.சாப்பாட்டுக்கு துலிப் மலர்கள் விற்கும் ஒரு கடையில்  வேலைக்குச் சேர்கிறாள்.
ஒவ்வொரு நாளும் அறைக்குத் திரும்பும்போது கொஞ்சம் உணவும், துலிப் மலர்கள் மீது செருகப் பட்ட ஒரு கடிதமும் காத்திருக்கிறது. அதை வைத்து விட்டு அங்கிருந்து போய்விடும் எப்போதும் வருத்தம் தோய்ந்த முகத்தோடு அலையும்  பெர்னாண்டோவை அறிந்துகொள்கிற ஆர்வம் மேலிடுகிறது அவளுக்கு. அவன் வாசித்துவிட்டு அடுக்கி வைத்திருக்கிற புத்தகங்கள் அவன்மீது லயிப்பை உண்டாக்குகிறது. அவனது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அக்கார்டியன் வாத்தியம் பெர்னாண்டோ மீது கூடுதல் ஈர்ர்ப்பை உண்டாக்கு கிறது. அந்த அக்கார்டியனை இசைத்து பக்கத்து அறை சிநேகிதியை சிலாகிக்கச்செய்கிறாள். அவனைப்பின் தொடர்கிறாள். ஊருக்குள் அவனது மகளும் பேரனும் இருப்பதை அறிகிறாள்.அவர்களோடு சேர்ந்து பேரனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.

கணவனின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் சிப்பந்தியை உளவுக்கு அமர்த்தி ரோசல்பாவை வெனிஸ் நகர் முழுக்கத் தேடச்சொல்லுகிறான்.அவனிடம் இருந்து தப்பிக்க நடன விடுதிக்குப் போகிறார்கள் ரோசல்பாவும், பெர்னாண்டோவும்.அங்கே அவளுக்குச்சில கவிதைகள் சொல்லுகிறான், பின்னர் இருவரும் நடனமாடு கிறார்கள்.விடுதியைத்தேடிக்ககண்டுபிடிக்கிற உளவாளி,ரோசல்பாவின் சிநேகிதி க்ராசியாவுடன் உறவுகொள் கிறான். பின்னர் உளவு வேலையை உதறிவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறான். ஊரில் தனது மகன் போதைக்கு அடிமையாகி,பள்ளியில் இருந்து இடைநின்று போவதை அறிந்து வேண்டாவெறுப்புடன் ஊருக்குத் திரும்புகிறாள். அன்றிரவு மிகுந்த எதிர்பார்ப்புடன் படுக்கைக்கு செல்லுகிற ரோசல்பாவை கண்டு கொள்ளாமல் தூங்கி விடும் கணவனை எழுப்பி பேசுகிறாள். இனி நமக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லித் தூங்கிவிடுகிறான்.

வெனிசில் ரோசல்பாவை நினைத்துக்கொண்டே உருகிப்போகிற பெர்னாண்டோ அவலைத்தேடி போகிறான். மீண்டும் ஒரு முறை தன்னோடு நடனமாட அழைக்கிறான்.இருவரும் காதலாகி நடனமாடுகிறார்கள்.மிகச்சாதார ணமாக ஆரம்பிக்கிற இந்தப்படத்தில் பரபரப்பு,சண்டை,குரோதம்,திகில்,சஸ்பென்ஸ் என எதுவுமில்லை.அதுமட்டு மல்ல மையக்கதாபாத்திரங்கள் யாரும் இளையவர் இல்லை.ரோசல்பாவாக நடிக்கும் லிசியாமாக்லியட்டாவும், பெர்னாண்டோவாக நடிக்கும் கான்ஸும் நடுவயதுக்காரர்கள்.தவிரவும் படம் முழுக்க ஆங்கில பாணியிலான காதல் காட்சிகள் ஏதும் இல்லை.

ஆனால்

படம் முழுக்க நகர விடாமல் நம்மை ஈர்க்கிற மெலிதான புல்லாங்குழல் இசைபோல காதல் கதை நெய்யப் பட்டிருக்கிறது. சிறுபிராயத்தில் நம்மை வசீகரித்த மூன்றாம் வகுப்பு கனகசுந்தரி டீச்சர்,அடுத்த தெருவுக்கு வாக்கப்பட்டு வந்த மல்லிகா மதினி,மூன்றுவருடம் சிவகாசிப்பேருந்துப்பயணத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து வந்த  மின்சார வாரிய தமயந்தி மேடம். இப்படி நினைவுகளின் நிலைத்துப்போன முகங்களின் முதிர்ந்த பிம்பமாய் வருகிறது லிசியா மாக்லியட்டாவின் வசீகரமுகம். சிரிக்கிற காந்தக்கண்களும் அவரது பாவனைகளும் பார்வையாளர்களைக் கட்டி இழுத்துக்கொண்டு போகிறது. நீர் சூழ்ந்த அந்த அழகிய வெனிஸ் நகர வீதியெங்கும் சுழன்று சுழன்று போய் நடனத்துடனான இறுதி முத்தத்தில் ஜொலிக்கிறது. கனிந்து விழுந்த பழத்தின் வாசனையோடும் ருசியோடும் காதல் சொல்லப்பட்டிருக்கிறது.

8.7.12

அமீர்கானின் நேர்மைக்கு ஒரு செவ்வணக்கம்.


எப்பொழுதாவது இப்படி நேர்ந்து விடுகிறது. மிகுந்த சோர்வில் இருக்கும் போது எங்கிருந்தாவது ஒரு கை வந்து தலை கோதிச்செல்வது போல, நாவறண்டு அலையும் பொட்டக்காட்டினிடியே கிடைத்த ஊத்து தண்ணி போல, எப்பொழு தாவது இப்படி நடந்து விடுகிறது.

இன்று 08.07.12 விஜய் தொலைக்காட்சியின் ’சத்யமேவ ஜயதே’
.
நேர்மையாகச் சொல்லப்போனால் இயக்குநர் ஸ்டாலின் k விஜயன் சொன்னது போல ஒரு தேசியத்  தொலைக் காட்சிமுதன்முதலாக தீண்டாமை பற்றிய முழுநீள நிகழ்சியை ஒருங்கிணைத்திருப்பது இதுவே முதல் முறை. அதைப்போலவே இந்த தேசத்தினைப் பற்றிய அக்கறையுள்ள மிகச்செறிவான ஆவணப்படம் india un touched வெகுவாக முன்னிலைப் படுத்தப்பட்டதும் இதுவே முதல் முறை. இன்னும் ஆயிரம் ஆயிரம் பெருமைகள் இந்தியாவுக்கு இருந்த போதிலும் அவைகளுக்கு அருகில் இழிவும் கண்ணீரும் வழிந்த படி வீற்றிருக்கும் தீண்டாமையைச் சரிசெய்யாமல் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

ஒரு மிகப்பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இனி கடவுள் கூட இந்தியாவில் பிறக்கும்போது தலித்தல்லாத சாதியில் பிறக்கவேண்டும் என்று தான் சிரத்தை எடுத்துக்கொள்வார் என்று சொன்னார். அதைச்சொல்லும்போது அவரின் முகம் ஒரு யுகாந்திரச் சோகத்தைச் சுமந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு கடவுள்  மறுப்பாளர். போதிக்கப்படும் நீதி பாதிக் கப்படும்போதுதான் தெரியும். இந்த தீண்டாமைக்கொடுமையின் சிறு துகளைக் கூட அறியாமல், இங்கிருந்து அது போய்விட்டது என்று சொல்லுபவரைப் பார்க்கும்போது கொலை வெறி தான் வருகிறது.

ஒரு பள்ளியில் படிக்கிற ஐநூறு குழந்தைகளில் மூன்று அருந்ததியக் குழந்தைகளைப்பொறுக்கி எடுத்து  கழிப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லுகிற ஆசிரியன் குறித்து நீங்கள் என்ன மதிப்பீடு வைத்திருக் கிறீகள். இந்தச் சமூகம் அந்தத்தா..யை எப்படி எதிர் கொள்கிறது.இந்த அரசு அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று யோசிக்கையில் வாழ்க்கை நரகமாக மாறிப்போகிறது.

இந்த சோகத்தை,இந்திய அவலத்தை அங்குலம் அங்குலமாக பேசியதால் அமீர் அமீர்கான் உண்மையில் மிகப்பெரும் இடத்துக்குப்போய் நிற்கிறார். அவரது சத்யமேவ ஜயதே எல்லா நிகழ்ச்சிகளையும் மிஞ்சி நிற்கிறது.
ஒரு லாகூன், கொடுக்கும்போதும், ஒரு தாரே ஜமீன் பர் கொடுக்கும் போதும் அவர் மீது கவிழ்ந்திருந்த நம்பிக்கைக்கு சின்ன பங்கம் கூட வைக்காத நேர்மையாளராக மிளிர்கிறார்.

வாழ்த்துக்கள் அமீர்கான்.

21.6.12

வலி மிகுந்த மாற்றம்.

கைப்பேசியின் இனியும் சேமிக்க இடம்போதாது என்று எச்சரிக்கை வந்தது. சேமிப்புக்கிடங்கில் கிடந்த  எண் களையெல்லாம் வரிசைப்படுத்தி, நீண்ட நாட்களாக அழைக்கப்படாத எண்களை நீக்கிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தான். வரிசையில் வருகிற ஒவ்வொரு எண்ணும் முக்கியமானதாகவெ இருந்தது. அலைபேசி ஒலித்த  மறு கணமே எடுக்காவிட்டால் கோபித்துக் கொள்ளும் கணேசன், கும்கி.குளிக்கிற நேரம்,கழிக்கிற  நேரம்,  வண்டி யோட்டுகிற நேரம்,தூங்குகிற நேரங்களில் போன்பேச இயலாது என்கிற சிந்தனை இல்லாமல்  கோபித்துக் கொள்ளுகிற சுந்தரலிங்கண்ணன். சுந்தரலிங்கண்ணன் வாடிக்கையாக ராத்திரி பதினோரு மணிக்குத்தான் போன் பண்னுவார். எடுக்காவிட்டால் மறுபடியும் மறுபடியும் அழைப்புமணி அடிக்கும். எடுத்து விட்டால் எலே  சின்னப் பயலே உனக்கு அவ்வ்ளோ திமிராலே என்று தொடங்கி குறைந்தது அரை மணி நேரம் பேசுவார்.  தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகுட்டிகள் எழுந்து விடும். அவளுக்கானால் ரொம்ப நாளாச் சந்தேகம்  வேறு.  ”அர்த்த ராத்திரியில் அப்படி ஆம்பளக்கி ஆம்பள என்ன பேசுவீங்க”  பொறுக்கமாட்டாமல் கேட்டே விட்டாள்.

எங்கப்பா போன?, அவனும் போன எடுக்கமாட்டுக்கான், நீயும் எடுக்கமாட்டுக்க என்று எடுத்ததும் கோபத்தை மட்டுமே வணக்கமாகச் சொல்லும் சன்முகண் ணாச்சி. சுருளி எடுக்காமல்போய் அவள் எடுத்துவிட்டாள் மிகவும் பரிவோடு குசலம் விசாரிப்பார். பிள்ளைகளைப் பற்றிக் கேட்பார். இந்த ஒரு வருடத்தில் ரெண்டே ரெண்டுதரம் மட்டுமே அவரிடமிருந்து போன் வந்திருந்தது. பல முறை அழைத்தும் எடுக்காமல் ஒரு நாள் எடுத்து  என்னப்பா, சீக்கிரம் சொல்லு என்றார். எப்படிண்ணே இருக்கீங்க என்று கேட்டான். இருக் கேன் இருக்கேன் வையி என்று மறுமுனை கட்டானது. படபடவெனக் கண்ணீர் வந்து தொலைத்துவிட்டது. என்ன ஏதென்று கேட்டவளிடம் சொன்னான். எதுக்கெடுத்தாலும் சின்ன நொள்ள கெனக்க அழதுக்கிட்டு,ஆம்பள தான ?, என்று அங்கிருந்து போய்விட்டாள்.

வாரத்துக்கு ஒருமுறையாவது  போன்பண்ணுங்கண்ணே அத மிச்சம் பிடிச்சி எங்ககொண்டு போகப் போறிங்க என்று அன்பை உலுக்கிவிடும் நாசர். இப்படி யான எண்கள் எல்லாம் ஒருகாலத்தில்  நெருக் கமாக இருந்து இப்பொழுது  எட்டாத தொலைவுக்கு போயிருந்தது. ”என்னங்க எல்லார்ட் டயுமா சண்ட போட்டீங்க  முன்ன மெல்லாம் நொய்யி நொய்யின்னு போனடிச் சிக்கிட்டே இருக்கும் இப்பென்ன மாசத்து ஒரு போனக்கூட காணும்” என்கிறவளுக்கு மார்க்சைப் பற்றி என்னசொல்ல ? மாற்றம் சாஸ்வதமானது மட்டுமல்ல ரொம்ப  வலிமிகுந்ததும் தான்.

வரிவடிவில் வந்துபோன ஒவ்வொரு எண்ணாகக் கடந்து போகும்போதும் நினைவுகள்  துயர்வடிவில்  கடந்து போனது. சங்கரராமன் சேர்மன் என்றிருந் தது அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பின்னிரவிலும் நிற்காமல் புனுப் புனு வெனப்பெய்த ஒரு  அடைமழை நாள், காரின் கண்ணாடிகளில் வழித்தோடிய நினைவுவந்தது. பாலுசாரின் மாருதி 800 காரும்,அதன் பின் பகுதியில் ஏற்றப் பட்ட சுவரொட்டிகளும், அன்று சூலக்கரை முக்கு ரோட்டில்  விடிய விடியப் பேசிக்கொண்டிருந்ததும்  நினைவுக்கு வந்தது. அத்தோடு கூட மூன்றுநாள்   சங்க அலுவலகத்தில் தோழர்களோடு குழுமிக்கிடந்த நாட்களும் நினைவுக்கு வந்தது.

சின்னவனாக இருக்கும் போது வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு பன்றி குட்டி போட்டிருந்தது.அதில் ஒரு குட்டி இரண்டு மரக் கவளிக்கிடையில் சிக்கிக் கொண்டு வீர் வீரென்று கத்திக்கொண்டிருந்தது.குட்டிப்போட்ட பன்னிக்கு பக்கத்தில போகாத வெறிபிடிச்சிக்கடிச்சிறும் என்று அம்மா பயமுறுத்தியதை யும் சட்டை பண்ணாமல்  சிக்கிக் கிடந்த குட்டியையெடுத்து விட்டான். மறு கனம் எங்கிருந்தோ பிடறி சிலிர்த்து ஓடிவந்த தாய்ப்பன்றி  சுருளிச் சாமியை  தூக்கி எறிந்தது.மயங்கி விழுந்து கிடந்தவனை எடுத்துவைத்துக் கொண்டு அலறிப்பிடிச்சி தலையில தலையில அடித்துக்கொடு அழுதாள் அம்மா. அப்போது  பன்றி கடித்த கெண்டைக்கால் தழும்பும் கூடவே நினைவுக்கு வந்தது.

எல்லா எண்களுக்கும் பெயர் இருந்தது. ஒரே ஒரு எண்ணுக்கு மட்டும் நட்சத்திரக் குறியிருந்தது. அது யாருடை யதாக இருக்கும் என்று யோசிக்க யோசிக்க சுருளிச்சாமி மறந்து போன மனிதர்கள் எல்லோரும் நினைவுக்கு வந்தார்கள். இறுதியில் அந்த எண் யாருடையது என்று கண்டுபிடித்து விட்டான். ஒருநாள்  புறவழிச் சாலையில் சைக்கிளில் போய்க்கொண்டி ருக்கும் போது ஒரு பெண் ஓடிவந்தாள். சார் நீங்க பேங்லதான வேலபாக்கீங்க, சுருளிச்சாமிதான சார். நா பிகாம் படிச்சிருக்கேன்,சும்மாதான் வீட்ல இருக் கேன், ஒங்க பேங்க்ல ஏதாச்சும் வேலை இருந்தாச்சொல்லுங்க,இது எங்க அண்ணன் வீட்டு லேண்ட் லைன்,எம்பேரு சந்த்ரமதி இப்படி  திடுதிப் பென்று பிரசன்னமாகி ஒரு பயோடேட்டாக் கொடுத்து விட்டு மறைந்து போனவளை மறுபடியும் சுருளி பார்க்கவே இல்லை.முகம் கூட மறந்து போனது.அவள் கண்களில் இருந்த கெஞ்சல்,படபடப்பு இன்னும் அப்படியே   சுவடு மாறாமல் நிழலாடுகிறது. அந்தப்பெண்மேல் எந்த ஈடுபாடும்,ஈர்ப்பும் இல்லை. அசரீரி போல திடீரென்றுவந்த அந்தக் கோரிக்கையும், நம்பிக்கையும் அழிக்க முடியா ததாகிவிட்டது.

குட்டி,பேனா வானா என்று இரண்டு பெயர்கள் இருந்தது. ஜெயராஜும், பாலு சாரும்தான் அவை  இரண்டு பெயர்களும். குட்டி வெறும் மூன்று வருடப் பழக்கம் தான். பபுள்கம் மாதிரி அப்படியே ஒட்டிக்கொண்டான். சாயந்திரம்  சைக்கிளை எடுக்கப் போகும்போது அவனிருக்கும் மாடிக்குப்போய் ஒரு எட்டு பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவான் சுருளி. போகும் போது யாராவது புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தால் ஆட்காட்டி விரலை உயர்த்தி முகத்தை கெஞ்சலாக வைப்பான். ஒருநிமடம் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். மறு கணமே அதே ஆள்காட்டி விரலை ஆட்டி நாக்கைத் துருத்தி முறைப்பான். போனால் கொன்னுறுவானாம்.

கீழே இறங்கி ஒரு கோல்டு பில்டரும் ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிக் கொண்டு,  ரெண்டு டீ கொண்டுவரச் சொல்லிவிட்டு மேலேறும்போது. என்ன ஒரு நானூறு ரூவா கவர்மெண்டுக்கு நட்டமாயிருச்சா,என்னமா டயர்ட்டா  வாரப்பா, வேல பாத்தவன் மாதிரியே இருக்கியே என்பான். நாப்பது ஜுவல் போட்டுருக்கு,துட்ட எண்ணி எண்ணி இங்கரு ரேகை அழிஞ்சி போச்சி,இதுல இன்னைக்கு ஐநூறுரூவா ஷாட் வேற. ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டு ”பேத்த பேத்த,ஜோக்கடிச்சா சீரியஸ்சாகிறதப்பாரு,எங்க எனக்கு சிகரெட் என்று பைக்குள் விட்டு சிகரெட்டை  எடுத்துக் கொண்டு வாங்க சார் வெளியே என்று தோளில் கைபோட்டு பால்கணிக்கு இழுத்துக்கொண்டு போவான். அவன் அருகாமை சிகரெட் நெடியும்,நிஜாம் பாக்கு நெடியும் கலந்து மணக்கும்.

விடுமுறை நாட்களென்றால் அவனிடமிருந்து போன் வரும். ஏ சோம்பேறி என்ன தூக்கமா மூஞ்சக்கழுவிட்டு ஒடனே  இங்க  வரணும். அவன் இருக் கானா? ரொம்ப பிகு பண்ணுவான்,வந்தாக்கூப்பிட்டு வாங்க இல்ல உட்ருங்க, ஏம்பா இந்தக்காம்ரேட்ஸ் எல்லாமே இப்படித்தானா? என்பான். ரூமுக்குப் போனால் கிரிக்கெட்டைப்பற்றிப்,  பேசு வான்,குஷ்வந்த்சிங் ஜோக் சொல்லு வான், மெக்சிகோ ஜோக்கும் சொல்லுவான். ஏப்பா ஒங்க தலைவர் என்ன இப்படி லூஸ் மாதிரி ஸ்டேட்மெண்ட் விட்ருக்கார். வால்மார்ட் வந்தா எல்லாஞ் செத்தா போவாய்ங்க  என்பான். விவாதமாகும் சூடுபிடிக்கும்.அவன் வந்ததும் இன் னமும் காட்டமாகும்.அவன் சண்டை போட்டுவிட்டு எழுந்து போய்விடுவான்.

சுருளியும் குட்டியும் பத்துமணி வரைக்கும் சண்டை போடுவார்கள். மனத் தாங்கலோடு  பிரிந்து போவார்கள். ஒரு நாள்தான்  சுருளி அங்கு போக மாட்டான். மறுநாளே அவனிடமிருந்து போன் வரும்  பிச்சிப் பிடுவேன் பிச்சி ஒழுங்கா ஸ்டுடியோவுக்கு வா என்று அன்போடு கடிந்து கொள்வான். சுருளி யால் தட்ட முடியாது. போனதும் ’இந்த இப்படி சீரியஸ்ஸா முகத்த வைக்கா தண்ணே, ஒனக்கு ஒத்து வராது’ என்று கன்னத்தைப்பிடித்து  இணுங்குவான். அவனக்கூப்பிடு, இன்னைக்கு உள் சொட்டர் என்னோடது என்று உசுப்பி விடு வான். அன்று பின்னிரவுவரை பாட்டும், கதையும், விகடமும்ஆகக் கழியும். பனிரெண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடுவரை வந்து விடைபெற்றுக்கொண்டு போவான்.போகும் போது அந்த தெற்றுப்பல் பளீரென்று வசீகரிக்கும்.

மூன்று வருடத்தில் நண்பனாய்,குகனோடு ஐவராய்,பின்னர் தோழனாயும் மாறிப்போனவன், ஒரு  அதிகாலை விபத்தில் பெருங் குரலெடுத்து கதறக்கதற உற்றார் உறவுகளை உலுக்கி எடுத்து விட்டுப்போனான். அதற்கப்புறம் வாசல் வழிக்கடந்து போகும் எல்லா டீவிஎஸ் விக்டர் பைக்கும் அவனது நினைவு களைக் கிளறிக்கொண்டே கடந்து போனது. இதோ ஐந்து வருடங்கள் ஓடிப் போனது. அந்த எண் உபயோகத்திலிருக்கிறதா இல்லையா என்கிற அறிவுப் பூர்வமான கேள்விகளும் சிந்தனையும் இல்லாமல்  மூன்று கைப்பேசிகளுக்கு இடம் பெயர்ந்து இன்னும் சுருளியின் நட்புப் பட்டியலில் இருக்கிறது. அந்த எண்ணுக்கான அழைப்பு பாடலாக சிச்சூர் படத்தில் ஜேசுதாஸின் கொரித்தெரா ஹாவுமேராவை ஏற்றி வைத்திருந்தான்.அது குட்டி அடிக்கடி படிக்கும்   ஹிந்திப்  பாடல். இந்த மூன்று வருடத்தில் மட்டுமல்ல இனி மீதமுள்ள நாட்களிலும் அது  ஒலிக்காது. ஆனாலும்  கிட்டத் தட்ட மூடநம்பிக்கை போன்ற இந்த பாதுகாத்தல் சுருளிக்கு சந்தோசமானதாக இருந்தது.  

17.6.12

வலைஎழுத்தில் வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

வலைஎழுத்தில்  வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

மூன்று மணிநேர பயணத்துக்கப்புறம் மாட்டுத்தாவணிப்பேருந்துக்கு வந்திறங் கும் பயணிகள் எல்லாம்  முண்டி யடித்துக்கொண்டு எங்குபோவார் களோ அங்கேதான் போனேன். மூன்று ரூபாய் சில்லறை கேட்டார். இங்கே மூன்று க்கு ஒன்று இலவசம்.அப்பாட. அதற்கப்புறம் வணிக வளாகத்துக்குள் மேல் கோடியில் இருந்து கீழ்கோடி வரை ஒரு நடை நடக்க எனக்குப் பிடிக்கும். வலது கைப்பக்கம் இறுகக்கட்டி இடையிடையே சிகப்பு வண்ண செயற்கைப்பூ வைத்து அழகுபடுத்தப்பட்டிருக்கும் மல்லிகையின் மணத்தை ஓசியில் நுகர்ந் தபடி போக மனசு கொஞ்சம் லாஞ்சனைப்படும்.நாத்தம் சகிக்க முடியாத இடத்தில் ஒண்ணுக்குபோவதற்கு மூன்று ரூபாய்தெண்டம் கொடுத்து விட்டு, இந்த மனம் மயக்கும் சுகந்தத்தை ஓசியில் நுகர்ந்து செல்கிறோமே என்கிற லாஞ்சனை வரும். எத்தனைமுறை கடந்து போயிருக்கிறேன் ஒருதரமாவது பத்துரூபாய்க்கு  வாங்கிவீட்டுக்கு கொண்டுபோக வேண்டுமென்கிற யோசனை வந்ததில்லை.

வழுவழுப்பான தரையில் சுருண்டு தூங்கும் பயணிகளையும் சாயங்காலம் ஏழுமணிக்கு ஆவிபறக்கிற பூரியைக் காட்டி சாப்பிட அழைக்கும் ஹோட்டல் காரரையும்,தோசைக்கல் சைசுக்கு சுட்டு வைத்திருக்கிற முறுக்கையும்  பார்த் துக்கொண்டே  கடந்து போனேன்.எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு எச்சரிக்கை செய்து  கொண் டிருந்த காவல்துறை அன்பரின் குரலில் குழைத் துக்கொடுத்த பயத்தை, அவர் ஒலிக்கவிட்ட எம்ஜியார் பாட்டு அதிகரித்தது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதாம்.

வசலுக்கு வந்து சின்ன சொக்கிகுளம் போகிற பேருந்து எது என்று கேட்டேன். தப்பான பேருந்தில் ஏறி  பாதி வழியில் இறங்கி ஆட்டோ பிடித்து பிடிஆர் ஹாலுக்கு போகும்போது ஹாலின் முகப்பில் யாரும் இல்லாதது கண்டு பயந்து போனேன். காரணம் தோழர் பத்மாவின் நூல்வெளியீடு ஏழுமணிக்கு. நான் போனது  எழேமுக் காலுக்கு. ஒன்றல்ல இரண்டல்ல பல தடவை இப்படி நிகழ்ச்சி முடிந்தபிறகு போய் போன ஜோரில் திரும்பி வந்திருக்கிறேன். அதுவெல்லாம் சொந்த ஊரிலேயே. இது அதிக தூரம், சுமார் 112 கிமீ. இந்த முறையும் ஏமாந்து போனாயா என்று சோர்ந்து போனது மனது.காவலாளி ஓடிவந்து சார் ஃபங்க்சன் மேல நடக்கு என்று  சொன்னார். ஓடிப்போய் மேடையைப்  பார்த்தேன் மேடையில் பத்மா ஜாடையில் யாருமே இல்லை. மணப்பெண்ணும்  மண மகணும் இருக்க ஒரு ஓரத்தில் க்ளாரிநெட்டில் ஒரு கலைஞன் உயிரை  உருக்கிக் கொண்டிருந்தார். சினிமாவில் வருகிறமாதிரி கொஞ்சம் ஒரு 90 டிகிரி காமிராவை திருப்பினேன். பத்மா.அலைந்த கலைப்பு போய்விட்டது.

நூல் வெளியீட்டுவிழா என்றால் மேடையில் தான் நடக்குமென்கிற நடப்பை தகர்த்து நுழைவாயிலின் ஒரு  ஓரத் தில் தோழர் பத்மஜாவின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களில் பத்மாவும்  எழுத்தாளர் சக்திஜோதி மட்டுமே தெரிந்தவராக இருந்தார்கள். இன்னும் முடியலையே என்று கேட்டேன்  இனி மேதான், என்று சொல்லி, அங்கிருந்த வர்களை அறிமுகப்படுத்தினார்.கிட்டத்தட்ட எல்லோருமே எனக்கு முகநூல் வழியே பரிச்சயமான பெயர்களாகவே இருந்தது. தோழர் லட்சுமி சரவணக் குமார் முகநூல் படத்தில் பார்த்ததை விடவும், முதிர்ச்சியாகத் தெரிந்தார். பேச்சிலும் கூட. மணிஜீ, அகநாழிகை வாசுதேவன் ஆகியோரைத் தேடினேன் அவர்கள் வரத் தாமதமாகும் என்று பத்மா சொன்னார்கள்.

தங்கை தாரணி ப்ரியாவை அறிமுகப்படுத்தும் போது சந்தோஷமும் கூடவே வருத்தமும் சேர்ந்துவந்தது. நான் 2008 ல் ப்ளாக் ஆரம்பித்து எனக்குத்தெரிந்த தோழர்களைத் தாண்டிப்போய் நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்த முதல் ப்ளாக் தாரணியுடையது.அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருட வலைப் பரிச்சயம் இருந்தது அவரோடு. பின்னர் எனது பதிவுகளுக்கு கமெண்ட் போடுவார் அது பெரிதல்ல வாய்க்கு வாய் சாரி, வரிக்கு வரி அண்ணா என்று எழுதுவார் அதில் நான் லயித்துப் போயிருக்கிறேன். வெயிலின் அருமை நிழலில் தெரியும். அந்த தாரணியும் நானும் பக்கத்தில் பக்கத்தில் இருந்துகொண்டு ஒரு ஹலோக்கூட சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்பது வலை அறிமுகப்படுத்தியிருக்கிற ஒரு புதுவகையான உணர்வு. அப்புறம் சம்பிரதாயத்துக்கு இரண்டுவார்த்தை பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டோம். அந்த நாள் முழுக்க திரும்பத்திரும்ப அது பற்றியே யோசிக்க வைத்தது.

3.6.12

மெகா சீரியல்களை மிஞ்சும் தொலைக்காட்சி விவாதங்கள்

இன்றிரவு புதிய தலைமுறை விடைதேடும் விவாதங்கள் நிகழ்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பே மிகவும் நுணுக்கமான உள் நோக்கம் கொண்டது.கருத்து சுதந்திரம் குறித்த சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதா இந்த தலைப்பே சார்புத்தன்மை கொண்டது. ஹோஸ்டைல் விட்னெஸ்,லீட் கொஸ்டீன் வகைகளைச்சார்ந்தது இது.

இருந்துதான் தீரும். ஆம் சகிப்புத்தனமை குறைந்து வருகிறது என்று விவாதம் செய்த எல்லோரும் அந்த மக்களுக்கான உரிமைகளை ஒடுக்கு முறைகளை அழிக்கப் போராடுங்கள் அதைவிடுத்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்காதீர் கள் என்கிற தொனி நிறைந்த மையப் புள்ளியிலே தான் நின்று பேசினார்கள். பரமக்குடியில் ஒரு ஜனநாயகரீதியான போராட்டம் நடத்தியதற்காக பன்றி யைச் சுட்டுக்கொல்லுகிற மாதிரி சுட்டுக்கொன்றது அரசு. கலப்புத் திருமணத்தை பொறுக்கமாட்டாமல் உயிரோடு எரித்துக் கொன்றவனுக்கு வக்காலத்து வாங்கியது இந்த தேசத்து உச்சபட்ச நீதி.

இது ஊடகங்களில் வந்தசேதிகள். ஆனால் வராத ஒடுக்குமுறைகள் கோடிக் கணக்கில் கிடக்கிறது. இவற்றையெலாம் ரத்தக் கண்ணீரோடு தினம் தினம் சகித்துக்கொண்டுதான் உழல்கிறது தலித் சமூகம். அப்படித்தான் இந்த கார்ட்டூன் விவகாரத்திலும் அவர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று  ஆசைப் படுகிறது மேட்டுக்குடி அறிவுலகம்.

கிராமங்களில் நடக்கிற அக்கிரமங்களை எதிர்த்துக்கேள்விகேட்டால் அடித்துக் கொல்லப்படுகிற சம்பவங்கள்.அதுகுறித்து புகார் கொடுக்கப் போனால் உயிரைப்பறிகொடுத்தவர்கள் மீதும் பொய்வழக்குகள். யாராவது போய்க்கேட்டால் கீழூருக்கு மேலூரு தாயாப் பிள்ளையாப் பழகிக்கிட்டு இருந்தோம் புதுசாப்படிச்சிட்டு வந்த அகராதி பிடிச்ச பயகளால கலவரமாகிப் போச்சி” என்கிற கருத்துக் கணிப்புவரும். இதே ரீதியில் அனுகப்படும் இந்த விவாதங்களை நாம் இன்னொரு மெகா சீரியல்போலத்தான் கடந்து போகவேண்டியிருக்கிறது.

இது குறித்த விற்பன்னர்களின் கோப்புக்காட்சிகளில் ஊடகவியளாளர் ஞானியின் வாதங்கள் அதிர்ச்சி தருபவையாகவே இருந்தது. அவரும்கூட மெகா சீரியல் கதாநாயகிரேஞ்சுக்குத்தான் கருத்துசொல்லுகிறார்.
இந்தியாவில்  மட்டும் தான் புரட்சி என்கிற சொல்லுக்கு சினிமாக்கதநாயகர்கள் என்று அர்த்தம்.

13.5.12

நாளைமற்றொரு நாளே - விழுமியங்களின் எதிர்முனையிலிருந்து.

மதுரை டவுன்ஹாலில் வினாத்தாள் திருத்த ஆசிரியர்களோடு நடந்து போகையில் எங்கிருந்தாவது ஓடிவந்து ’ ஏ தணுஷ்கோடி எனக்கு ஒரு இருபது ரூபாய் கொடு, நான் சாராயம் குக்கவேண்டும். நீ எனக்குக்கொடுத்துத்தான் தீரவேண்டும். நீ எனக்குக்கொடுக்காமல் யாருக்குக் கொடுக்கப்போகிறாய்’ என்று அதட்டலோடு வாங்கிக்கொண்டு போவாராம். எங்கள் ஆசான் எழுத்தாளர் தணுஷ்கோடி ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்த பொழுதுகளில் குறைந்த பட்சம் நான்கைந்து தரம்  இந்தக்கதையைக்  கேட்டிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் மிகச்சிறந்த தமிழ்நாவல் களின் பேச்சு வருகிறதோ அப்பொழுதெல்லாம்  அழுக்குச் சட்டையணிந்திருந்த அந்த எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை பற்றிய செய்தி கூடவே பேசப்படும்.

தனது இறுதி நாட்களுக்கு முன் மதுரை வீதிகளில் அலைந்த எழுத்தாளர் ஜி.நாகரஜனைப் பற்றித் தான் எங்கள் ஆசிரியரும் தோழருமான தணுஷ்கோடி ராமசாமி அவர்கள் சொல்லுவார். குறத்தி முடுக்கு,நாளை மற்றொரு நாளே ஆகிய புதினங்கள் படிக்கத்தூண்டும் சுவாரஸ்யத்தின் கூடவே ஒரு பயத்தையும் கொண்டு வந்து சேர்க் கும்.அந்த பயத்தோடே பத்திருபது ஆண்டுகள் ஓட்டி விட்டேன்.சென்ற பதினொன்றாம் தேதி ராமநாதபுரத்து தனிமை என்னை அரண்மனை தொடங்கி செண்ட்ரல் ப்ளாசா வழியே முன்று தரம் அலைய விட்டது.ஏதாவது நான் விரும்புகிற புத்தகம் கிடைக்குமா  என்று அங்கி ருக்கிற அருணா ஸ்டோருக்கு (பெரும்பாலான ஊர்களில் ஸ்டேசனரிக் கடைகள் அருணா ஸ்டோர் என்றே இருக்கிறது) மூன்றாம் முறையாகப் போனேன்.

வாழ்க்கையில் ஜெயிப்பது  எப்படி, இயற்கை வைத்தியம் தொடங்கி எல்லாவைத்தியம்,செட்டிநாட்டுச்சமையல் தொடங்கி சீன நாட்டுவைத்தியம் வரையில்  அடுக்கி வைத்திருந்த புத்தகங்களோடு எக்சைல்,கொற்றவை போன்ற மிரட்டல் புத்தகங்களும் கிடந்து பயமுறுத்தியது. இவற்றின் தலைப்பும் சரி விலையும் சரி சாமன்யனை அருகே  அண்ட விடாது. அங்கு அரிதாக நாளை மற்றொரு நாளே,மாதொருபாகன் இரண்டும் இருந்தது.வாரிக் கொண்டுவந்தேன்.அன்று இரவு இரண்டு முறை மின்சாரம் தடைபட்டுப் போன பின்னும் நாளை மற்ரொரு நாளே புதினத்தை ஒரே மூச்சில் படிக்க முடிந்தது. எழுத்து அப்படியே இழுத்துக்கொண்டு போனது. எனக்குள்ளிருந்த பயம் எண்பதுகளைக் காட்டிலும் இன்னும்  அதிகமாகி விட்டது.

விளிம்பு மக்களின் வாழ்க்கையை எந்தவித மினுக்கல்களும் இல்லாமல் இயல்பாய் சொல்லவும் முடியும் என்று வரம்புகளைத் தாண்டிக் குதித்திருக்கிறார் ஜி.நாகாராஜன். தனது காதல் மனைவி மீனாவோடு கூடியிருக்கும் போது அனில்களின் கூடல்களையும், யானையின் கூடல்களையும் பேசிச்சிரிக்கும் கந்தன். விகல்பமில்லாமல் அணிகள் மயங்கிக் கிடக்கிற இதே மாதிரி, உனது வாடிக்கையாளர்கள் எவரோடும் மயங்கிக் கிடந்திருக்கிறாயா என்று கேட்கிறான்.அவள் ஒவ்வொருத்தராக விவரிப்பது உலுக்கி எடுக்கிறது.பேச்சியின் வீட்டில் வைத்து தொழில் நடத்துகிற மீனாவிடம் பொய்சொல்லி ரூபாய் வாங்குவது அவளும் அதைக் கண்டும் காணாமல் இருப்பது. ஒரு மதிய வேளையில் தன்னந்தனியே படுத்திருக்கும் கந்தனிடம்  ராக்காயி என்கிற மோகனா வருவதும் வெத்திலை பாக்கு வாங்கிக் கொடுக்கிறமாதிரி மச்சான் கந்தனுக்கு இஞ்சிச் சாராயம்  வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பது வுமாக வாழ்க்கை அவர்களுக்கு எல்லாம் கடந்ததாக இருக்கிறது.

கைப்பிள்ளையோடு வரும் கைம்பொண்,செட்டியாருடைய வைப்பாட்டியான ஆங்கிலோ இந்திய ஐரின், கடைசி யில் கொலைக் குற்றத்துக்கு ஆளாகும் வேளையில் அருகே இருக்கும் அன்னக்கிளி என,எல்லாம் கடந்த பெண் களாகவே கதை நெடுக வருகிறார்கள். இந்த கால் நூற்றாண்டில் படித்த எழுத்துக்களின் வழியே நமக்குள் படிந்து
போன படிமங்கள் ஒவ்வொன்றாய் வந்து நான் எங்கே நான் எங்கே எனத்தேடச் சொல்லுகிறது. காதல் வீரம் கற்பு
லட்சியம் என்கிற அகப்புற இசங்கள் எல்லாவற்றையும் சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய் எனப்புறந்தள்ளிவிட்டு
குடிசைக்குமுன்னாள் இருக்கும் சாக்கடையைத் தாண்டுகிற மாதிரி தாண்டிவிட்டுச்செல்கிறான் கந்தன்.அவன் நடந்து போகிற தெருக்கள்,அவனை ஏற்றிச் செல்லுகிற குதிரைவண்டி எப்பொழுதாவது கடந்து போகிற கார்கள், ஆள்பிடிக்கக் காத்திருக்கிற தியேட்டர்வாசல்,கட்சிமாநாட்டுக்கு வந்து போகிற மனிதர்கள்,லட்ஜின் வரவேற்பு அறையில் உட்கார்ந்து அரசியல் பேசும் மனிதர்கள் என மதுரையைப் புரட்டிப்போட்டு வரை படம் வரைந்து தந்திருக்கிறார் இந்த நாவலில். 

லாட்ஜில் காத்திருக்கும் பார்ட்டியிடம் தகிடுதத்தம் செய்து ஐம்பது ரூபாய் சம்பாதிப்பது. ஐரினையும் செட்டியாரை யும் வெட்டி விட்டு தரகுபார்ப்பது. கைம்பொண்டாட்டியை விலைபேசி அனுப்புவது சாக்கனாக் கடைக்காரனுக்கு உதவுவது என எல்லா காரியங்களும் தர்மஞாயங்களின் வாடையடிக்காத காரியங்களாகவே வாய்க்கிறது கந்தனுக்கு. அதுவெல்லாம் கூட இருத்தலின் பொருட்டு என்று சமாதானப் படுத்திக்கொண்டாலும் சுகவீனப்பட்டு கிடக்கிற தனது சொந்தக் குழந்தையை இறந்து போகிற வரை இயல்பாக்கி விடுவது நிறைய்ய எதிர்ப்பார்ப்பையும் அதிர்ச்சியையும் தரும் தருணம்.

இவ்வளவு  அதிர்ச்சியை வைத்திருக்கிற கதை அதற்கு ஈடாக பக்கம் பக்கமாய் எள்ளல்களையும் அடைத்து வைத்திருக்கிறது. செட்டியார்  செத்துப்போனதும்  வளர்ந்து வந்த அவரது தொப்பை வெடித்துத்தான் செத்திருப்பார் என்று சனங்கள் நினைத்திருக்கக் கூடும் என்று படிக்கும் போது சிரிக்காமல் இருக்கமுடியாது. அவர் நடத்துகிற காய்கறி மண்டியில் வெளிநாட்டுக் காய்கறிகளை அறிமுகப்படுத்தும்போது முள்ளங்கியில் பாதரசமும் கோசில் சுண்ணாம்பும் இருக்கிறது எடுத்துப் போங்கண்ணே என்று சொல்வாராம் இப்படியே போனால் பீட்ரூட்டில்  அலு மினியமும் காலிப்ளவரில் தங்கமும் கிடைக்கும் என்று சொல்லலாமாம். இன்னொரு முறை ஒருவன் கந்தனிடம் அறிவார்ந்து பேசுவதுபோல  அண்ணே இத்தனை தவறுகள் செய்கிறீர்களே அதற்கு என்ன காரணம் தெரியுமா வறுமை தானே என்று ஒருவன் கேட்பான் அதற்கு ’கொழுப்புத்தான்’ என்று கந்தன் பதில் சொல்லுவான்.

இருந்தாலும் படித்து முடித்த பிறகு கந்தனின் சில்க் ஜிப்பாவும் அவன்மறைத்து வைத்திருக்கிற சூரிக்கத்தியும் வாடிக்கையாளர்களிடம் சந்தோசமாக இருந்த தாகப்பாவித்துவிட்டு  கந்தனுடன் இறுக்கமாக இருக்கும் மீனாவும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை விட்டு ஓடிப்போன மகன் சந்திரனின் நினைவுகளோடு கூடிய அவர்களின் துயர் நிறைந்த வாழ்வும் நெருடிக் கொண்டே இருக்கும்.

22.4.12

வலைப்பதிவர் அறிமுகம்


சாத்தூரிலிருந்து இன்னொரு வலைப்பதிவர்.

தோழன் மாதவராஜ் தொடங்கிவைத்த வலைக்கலாச்சாரத்தில் அவனால் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதோ, இந்தக்குட்டியூண்டு சாத்தூரிலிருந்து கிட்டத்தட்ட எட்டாவது வலைப்பதிவராக அறிமுகமாகிறார் தம்பி ஆண்டனி.

ஓவியம்,புகைப்படம்,வீடியோ, ஆகியவற்றில் தொழில்முறைக்கலைஞனாக இருக்கும் தம்பி ஆண்டனி.மிகச்சிறந்த இயற்கை சம்பந்தமான புகைப்படக் கலைஞன். அதற்கென தனது ஓய்வு நேரங்களையெல்லாம் செலவுசெய்வபவர்.
அப்படிச்செலவழித்துப்பதிவு செய்த புகைப்படங்களையும் அனுபவங்களையும் ’தூரிகை நிழல்’ பக்கம் வழியே வலையில் பகிர்ந்து கொள்ளவருகிறார்.

வரவேற்போம்.

அவரது வலை விலாசம்

www.denilantony.blogspot.in

19.4.12

எதைத் தேடுகிறது நீதியின் தராசு ? ( எஸ். வி. வேணுகோபாலன் )

கைக்குழந்தைகளும் பெண்களும்
அய்யகோ என்று
அலறிய சத்தம்
பெருகிய குருதி
சாதிய வெறியோடு
சாய்க்கப்பட்ட உடல்களும்
மாய்க்கப்பட்ட உயிர்களும்
எல்லாம் பொய் என்று அறிவிக்கப்படுகிறது
நீதியின் மேடையிலிருந்து

அடங்காத ஆண்டைகளின்
அடியாட்கள் கும்பல் வெளியேறுகிறது
வெற்றிப் புன்னகையோடு சிறைகளிலிருந்து

சாட்சியங்கள் போதவில்லையாம்

காலகாலமான வன்கொடுமைக்கும்
தீண்டாமைக்கும்
அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும்
உறைந்து போன இரத்தத்தின் மீதே
நிறைந்து பெருகும் புதிய குருதியும்
சரிந்த இதயங்களும்
குலைந்தே போன நம்பிக்கைகளும்
பற்றுறுதியும் இன்ன பிறவுமாய்
தேசத்தின் சேரிகளெங்கும்  
பரவி விரவி இருக்கும் காட்சிகளுக்குச்
சாட்சிகளாய்
கையாலாகாத அரசுகளே இருக்க

வேறெதைத் தேடுகிறது நீதியின் தராசு,
வெறித்துப் போன தெருக்களில்
பொறித்திருக்கும் சாதிய வன்மத்தின்
தடயங்களுக்குக் கண்களை மூடிக் கொண்டு ?

***********

1996 ஜூலை 11 அன்று பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் பெதானி தோலா என்ற கிராமத்தில் நிலச் சுவான்தார்களின் ரணவீர் சேனை என்றழைக்கப் படும் குண்டர்படை தலித் குடும்பங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், கைக் குழந்தைகள் உள்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

 பெரிய முயற்சிகளுக்குப் பிறகு மறு நாள் பதிவு செயயப்பட்ட முதல் தகவல் அறிக்கை, நீண்ட நெடிய வழக்கு இவற்றுக்குப் பிறகு ஆரா செஷன்ஸ் நீதிமன்றம் மே 2010 ல் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனையும், மீதி இருபது பேருக்கு வெவ்வேறு கால அளவில்  சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேல் முறையீட்டை அடுத்து,  ஏப்ரல் 16, 2012 அன்று  பாட்னா உயர்நீதிமன்றம்,  'குறைபாடுள்ள சாட்சியங்கள்' என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
அத்தனை பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துவிட்டது.

 0
கவிதையும்,தகவலும்,கோபமும் 
தோழர். எஸ் . வி .வேணுகோபாலன்

16.4.12

காவல் பரண் நிழலில் ஒதுங்கிய திருடர்கள்.

அந்த ஊருக்கு ஏழெட்டுப்பாதைகள் இருப்பதுபோலவே அதனோடு எனக்கும் ஏழெட்டு வகையான உணர்வுகள் இருக்கிறது. அது எங்கள் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர்த் தொலைவிலிருக்கிறது.அங்கிருந்துதான் பேருந்திலேறி அயலூர்களுக்குப்போகவேண்டும். ஒவ்வொருமுறை நடந்துபோகும் போதும் இடையிலே வந்துபோகும் காடு கட்டாயம் ஒரு கதை வைத்திருக்கும்.கோடை காலமான இந்த தை முதல் ஆடிவரையிலான காலங்களில் அது செக்கச் செவே லென விரித்துக் கிடக்கும் பெரிய்ய பாய்போல இருக்கும்.ஆடியில் விதைக்க ஆரம்பித்ததும் நிலக் கடலை,பாசிப்பயறு,கம்புசோளம்,குதிரைவாலி இப்படியான பலவகை செடிகள் நிறைந்த பச்சைமரகதப் போர்வை யாகிவிடும்.வெறும் கரட்டான்களும்,சில்லான்களும் ஓடித்திரிந்த அந்த செவக்காட்டில் ஒரு நூறுவகை பூச்சி புழுக்கள் பறவைகள் வந்துசேரும்.வண்ணத்துப் பூச்சிகளையும்,ரயில்தட்டாம்பூசிகளையும் பிடிக்க கைவிரல் களைக்குவித்துக்கொண்டு அதன் பின்னாடி அலைந்த காலம் முதல்,அணில் ஆபீசுக்கு வேலைக்குப் போகும் அவளைத் தொடர்ந்து நடந்த காலங்கள் வரை இன்னும் பசேலென அப்பிக் கிடக்கிறது செவக்காட்டு நினைவுகள்.

பிஞ்சைகள் பூக்க ஆரம்பித்ததும் இரண்டு ஊருக்கும் இடையில் காவல் பரண் கட்டப்படும். அதிலேறிக்கொண்டு பார்த்தால் நான்கு ஊர்களின் காடுகளும் தெரியும்.பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்து பெரியாம்பளைகள் தான் காவல்காரராக இருப்பார்கள்.அப்போதெல்லாம் மதியக்கஞ்சி கொண்டுபோக நான் நீ என்று போட்டி வரும். என்னை மட்டும் வரவேண்டாம் என்று கண்டிப்பார் தாத்தா. காரணம் உண்டு. நான் தனியே போனதில்லை குறைந்தது மூன்றுபேராவது போவோம்.அப்புறம் எங்கள் வீட்டின் மற்ற பிள்ளைகளைப் போல நான் அவரது காவல் கம்புக்கும் மீசைக்கும் பயப்படுவதில்லை.சாயங்காலம் வீடுதிரும்பும்போது என்னால் அவருக்கொரு பிராது கட்டாயம் வந்துசேரும். சித்திரச்சுழி இந்த செம்பட்டப் பயல அணுப்பாத மரியசெல்வம் என்று என்  பாட்டியைச் சொல்லுவார்.’அவன் வராட்டி,பின்னே எவா கொண்டு வருவா’ என்பாள் ’இவா’ என்று பாட்டியைக்கை காட்டுவார், ’கெடக்கமாட்டயோ கெழட்டு லொள்ளி’ என்று அவர்கள் பேசுவது சண்டையென நினத்துக் கொண்டிருந் தகாலம் அது.

நாங்கள் ஊரைத் தாண்டியதுமே, தாத்தா பரணைவிட்டுக் கீழிறங்கி விடு வார்.அப்படியே நடந்து கனிநாடார்  பம்பு செட்டுக்குப் போய்க் கால்,கை அலம்பிக் கொண்டுவருவார். வரும்போதே விளைந்து முற்றிய கடலைச் செடிகள் அவரது கையில் தொங்கிக் கொண்டுவரும். அதைவாங்கிக் கொண்டு மடமடவென பரண்மேலேறுகிற தருணம் அலாதியானது. ஏணியற்ற பரணில் நான் ஏறும்போதெல்லா கொலைபதறிக்கொண்டு எந்தாத்தா ஏ மெல்லய்யா, இங்கரு..ஏ.ஏ..லே மேல்லடா,ஏய் ஏ செம்பாட்டச்..னிமெல்ல ஏறுடா,இந்தப் பொண்டாட்டியோளி,  சொன்னபிடி கேக்கமாட்டன்’என்பார். தெற்குப்பக்கம் அதிகமாகச்  சோளம் தான் போட்டிருப்பார்கள்.அதற்கு ரெண்டுகாரணம் உண்டு.அந்த பக்கத்து நாயக்கமார்களின் மாடுகளுக்கு  கோடை காலம் தீவனத்துக்கு ஆகும்.ரெண்டு அது ஊரை ஒட்டி இருப்பதால் வேறுவகையான விதைப்பாடுகள் வீடுவந்து சேராது. பாதியை களவாண்டு கொண்டு  போய் விடுவார்கள். இதையெல்லாம் தாண்டி இன்னொரு காரண மும் இருக்கிறது என்பதை ஒரு மதியவேளை  பரணேறிப் பார்த்த போது தெரிந்துகொண்டோம்.

பகல்வேளிகளில் காடுகள் முழுக்க பெண்களே அங்குமிங்கும் அலைந்து திரியும்  செடிகளைப் போலக்கலந்திருப் பார்கள்.ஆண்கள் தலை தட்டுப்படாது.அப்படித் தட்டுப்படுகிற தலைகள் பிஞ்சைக்கார முதலாளிகளாய் இருப்பார் கள். ரெங்காநாயக்கர் மட்டும் எல்லாக்காலங்களிலும் அந்த எள்ளுச்செடிகள் பூத்துக்கிடக்கிற  தனது பிஞ்சையைக் கட்டிக்கொண்டு கிடப் பார். எல்லாச்செடியும் அழிமாண்டமாகும் எள்ளுச்செடி ஒருகாலதுக்கும்   களவு போகாது. அதத்திங்கவும் முடியாது,ஆக்கிப்பொங்கவும் முடியாது. அது போலவே மாடுகண்ணும் உள்ள வராது. ஆனாலும் நாய்க்கரு பிஞ்சையே கதி யென்று கிடப்பார். அதனாலேயே ஆகாத காரியத்துக்கு ஆட்கள்போனால் எள்ளுச்செடிய நாய்க்கர் காத்துக்கெடந்த மாதிரின்னு சொலவட சொல்ல ஆரம்பித்துவிட்டது சனம். தாத்தாவும் ரெங்கா நாய்க்கரும் படு ஸ்நேகம் அதனால் அவர்பக்கம் திரும்பிக்குரல் கொடுக்க மாட்டார்.

பரணேறியதும் நான் எள்ளுகாட்டுப்பக்கம் அவன் எவண்டா எள்ளுச்செடியில சுத்திக்கிட்டு அலையிறது என்பேன் .தாத்தா உயிர்போகிற வேகத்தில் பரணில் ஏறிக்கொண்டே இருக்கிற எல்லாக்கெட்ட வார்த்தையும் வைவார்.நான் பின்னம்பக்கம் இறங்கி ஓடிவிடுவேன்.அப்படி ஓடுகிற ஒரு நாளில் எள்ளுக் காட்டுப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தேன்.

எள்ளுக்காட்டுக்கு அருகில் ஒசந்து வளர்ந்திருந்த சோளநாத்துக்குள் இருந்து எழுந்து எனக்கு முன்னாடி ரெங்கா நாயக்கர் ஓடிக்கொண்டிருந்தார். பயந்து போய் நின்ற நான் திரும்பிப் பார்த்த போது,அவர் எழுந்து ஓடிய இடத்தில்
சோளநாத்து ஆடியது.பேய்க்கதைகள் நினைவுக்கு வர சிலீரென்று வேர்த்தது. திரும்பப்பரணுக்கு தாத்தாவைத் தேடி ஓடப்போனேன். பச்சை நாத்துக் குள்ளிருந்து வெள்ளை வெளேரென்று ஒரு உருவம் எழுந்தது.

ஆண்டாளம்மா.

15.4.12

இன்னும் கிடைக்கவில்லை வியர்வையின் விலை

வாகனங்களின் வயிற்றை நிரப்பும்
அதே அம்மாவின் வேலை
பெட்ரோல் மணக்கும்
சீருடைதரித்த பங்க் பெண்களுக்கு.

நூற்றுக்கணக்கில் நுழையும்
வாகன வகைகளில் தம்பி கேட்ட
சைக்கிளின் ஜாடை எதிலும் இல்லை.

பூழுவைக்கடந்து செல்லும் பாவனையில்
விரைந்து வந்து நிரப்பிப்போகும்
பெண் காவலரின் சீருடையில் மணக்கும்
சீமைச்செண்டு வாசனை.

வெறித்த பார்வைகளை உதறிவிட்டு
சுற்றிச்சுழலும் எண்களைத்தொடரும்
கண்களுக்குள் கிடக்கிறது ரொம்பப் பசியும்
கொஞ்சம் கொல்லபட்டி கருப்பசாமியின் நினைவும்.

முப்பதுநாளும் அலுத்து உறங்கிப்போகும் அம்மா
ஒண்ணாம்தேதிமட்டும் கொட்டக்கொட்ட முழித்திருப்பாள்.
அவளை அறிந்தே அருகில் போய் உட்காரும்
முதலாளியின் வசவுக்கு வாங்கிய சன்மாணம்.

எனவே இன்னும் கிடைக்கவில்லை
ஒருமாதம் சிந்திய வியர்வையின் விலை.

14.4.12

சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.


காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.

இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப் படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.  சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க,பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி.உலகஅதிசயங் களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி மின்னணு வாக்கு கோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப் பட்டவர்களும் அனுமதிக்கப் படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். எனவே புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு ஒரு முடிவெடுத்தது. சமுதாயக் கிணறுகள் என்கிற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி நீர் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தது. இதையும் அம்பேத்கர்,பெரியார்  உட்பட பல சாதிமறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.அதையும் மீறி சட்டம் செயல்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்களுக்கென்று ஏற்படுத் தப்பட்ட தனி நீர்நிலைகளில் இரவோடு இரவாக மனிதக் கழிவுகளை அள்ளிப்போட்ட சம்பவங்கள் நடந்தது. 

2006 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலில்போது ஆவணப்பட படப்பிடிப்புக்காகப் போயிருந்தோம். பேருந்துநிலையத்தில் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லில் இருந்து இரண்டடித்தூரம் ஒதுங்கியே நின்றதொரு கூட்டம். விசாரித்தபோது தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக்கல்லில் உட்கார்வது அங்கிருக் கிற கள்ளர்களின் பெருமைக்கு இழுக்கு என்ற எழுதப்படாத சட்டம் இருக் கிறது.  உத்தப்புரத்தில் இன்னும் கூட ஒரு பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாமல் சாதிய ஆதிக்கத்தின் கீழ் மண்டியிட்டுக் கிடக்கிறது ஜனநாயகம். கிராமங்களில் கட்டப்படும் பெரும்பாலான நிழற்குடைகள் இரவோடு இரவா கச்  சிதிலமடைந்து போவதற்கு ’கீழத்தெரு பயலுகள்ளாம் நமக்குச் சமதையா உக்காரவா’ என்கிற ஆதிக்க மனோபாவம் தவிர வேறுகாரணங்கள் இருக் கவே முடியாது. இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.

அப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வர்கள் அதை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கி ணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடி யாகத் தாக்கினார்கள். என்றாலும் எதிர்த்தாக்குதல் ஏதும் இல்லாத சத்தியாக் கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறு கோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .

இதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்க வேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில்  இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது, இந்த சதுக்க பூதம் இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதை வெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இருநூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கும் மாவட்டத்தில் இரண்டே இரண்டு ஊர்களில் மட்டுமே பொதுமயானம் இருக்கிறது என்று சென்ற ஆண்டு பணிநிறைவு பெற்ற ஒரு கிராம நிர்வாக அலுவலர் சொன்னார்.

முன்னமிருந்த அடக்குமுறைகள் அளவு இப்போதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள ஆங்காங்கே ஆதரவுக்கரங்கள் நீளுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் நடைபெறும் திண்ணியங்கள், மேலவளவுகள், கயர்லாஞ்சிகள், சென்ன கரம் பட்டிகள், இருஞ்சிறைகள்,பரமக்குடிகள் ஆதிக்கத்தின் இருப்பைச்  சொல் லுவதற்கு கொத்துக்கொத்தாய் உயிர்ப்பலி கோருகிறது.சாண்ஏறுகிற சதீய வழுக்குமரத்தில் கிலோமீட்டர்க் கணக்கில் பின்னுக்குப்போக வேண்டியிருக் கிறது. அந்த நேரமெல்லாம் அம்பேத்கர் வந்து நின்று என் மக்களை இன்னும் அதே நிலையில் விட்டுப் போகிறேனே என்று சொல்லிய இறுதி வார்த்தைகள்  திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆகவே அவரது  தேவை இன்னும்  அதிகரிக்கிறது. அவரது செயல்பாட்டாலும் சிந்தனைகளாலும்,தியாகத்தாலும் கிடைத்த புரட்சியாளர் பட்டம் இன்னும் தீராத வன்கொடுமைகளின் பொருட்டு மேலும் மேலும் மதிப்பு மிக்கதாகிக் கொண்டிருக்கிறது.

8.4.12

திரைகடலோடி திரவியம் தேடு. திமிறும் உணர்வுகளைக் கொன்றுபோடு


அலுவலக ஊழியர்களோ,நண்பர் வட்டாரத்திலோ,இல்லை இலக்கிய வட்டாரத்திலோ மரணச்செய்தியென்றால் தவறாமல் போய்விடுவது வழக்கமாகிவிட்டது.கல்லூரி முடிக்கும் வரை ஊரில் துஷ்டியென்றால் எங்காவது காட்டுக்குள் போய் விட்டு எடுத்த பின் வீடு திரும்புகிற சுபாவம் இப்படி மாறிப்போனதற்கு தொழிற் சங்கமே காரணமாக இருந்தது. இன்றும் கூட பணி ஓய்வு பெற்று நான்குவருடம் ஆகிவிட்ட ஒருதோழரின்  மரணச் செய்தி வந்தது. சாயங்காலம் போவதாக உத்தேசித்துக்கொண்டோம். நான்குமணி இருக்கும் மாது வீட்டைப் பார்த்தேன் வண்டி இல்லை.போயிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு மற்றொரு தோழர் கணேசனுக்கு போன் பண்ணி அவரும் துஷ்டி வீட்டில் இருப்பதாக சொல்லவே தாமதமாகிவிட்டது என  அடித்துப்பிடித் துக்கொண்டு ஓடினேன்.

தெருவை நெருங்கிய போது ஆட்கள் யாரும் தென்படவில்லை.ஒருவேளை காரியம் முடிந்திருக்குமோ என்கிற கவலை வந்துவிட்டது. நின்று தயங்குவதைப் பார்த்த அந்த தெருக்காரர் துஷ்டி வீடு அடுத்த தெருவில் என்றார். நிம்மதியாக இருந்தது. அங்கேபோன போது ஏழெட்டு அலுவலகத் தோழர்கள் உட்கார்ந்திருந்தார்கள் நான் போனவுடன் எல்லோரும் சென்று இறுதி மரியாதை செய்துவிட்டு வந்தமர்ந்தோம். இறந்தவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி உண்டு. எண்பதுகளில் பத்துப்பைசாவுக்கு ஒரு ரோஜாப்பாக்குப் பொட்டலம் கிடைக்கும். சிகரெட் குடித்துவிட்டு புகை வாடையைப் போக்க பாக்குப்போடுகிற பழக்கம் எல் லோருக்கும் இருப்பதுபோல அவருக்கும் இருந்தது. அது செய்தியில்லை. ஒருபாக்குப் பொட்டலம் வாங்கி ஒருநாள் முழுக்க குடிக்கிற சிகரெட்டுக்கெல்லாம் அதையே கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப்படுத்திவிட்டு பத்திரப் படுத்திக் கொள்வார். யாருக்கும் அதிலிருந்து ஒரு துகள் கூடக்கொடுக்கமாட்டார் அப்படிப்பட்ட சிக்கண காரர். அதனாலே அவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி வந்தது.

இப்படி ஒவ்வொரு காரியத்திற்குப் பின்னாடியும் ஒரு காரணம் வைத்துக்கொள்ளும் இந்த மனிதக்கூட்டம் விசித்திரமானது. இறந்த வீட்டில் வந்து குழுமி,அந்தக் குடும்பத்தார்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் மகோன்னதமான பழக்கம் பொதுமைச் செயலால் ஆனது. கிராமம் என்றால் அதில் இன்னும் கூடுதல் பொதுமை இருக்கும். யாரும் வேலைக்குப் போக மாட்டார்கள். அன்று வேலைக்குப் போனால்தான் உலை வைக்கமுடியும் என்கிற வறுமை சூழ்ந்திருக்கும் ஏழைக்கிராமங்களிடம் இது இன்னும் அபரிமிதமாக இருக்கும். செல்போன் இல்லாத அந்தக்காலங்களில் வெளிஊர்களுக்கு செய்தி சொல்ல,அடக்க வேலைகள் பார்க்க, பந்தல்போட, சாப்பாடு தயார்செய்ய, இரவானல் தூங்கவிடாமல் செய்ய கதைப் பாடல் படிக்க பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவைக் கூப்பிட ஒருவர் என, தாங்களாகவே வேலைப்பிரிவு செய்துகொண்டு, அதை சிரமேற்கொண்டு செய்யும் மனிதாபிமானம் கட்டாயம் ஆதிப் பொதுவுடமையால் ஆனது. எவனாவது அதற்கும் மதத்திற்கும் முடிச்சுப்போட எவனாவது நினைத்தால் அவன் தொண்டையில் போடுபோடுங்கள்.

இங்கே ஒரு நடுவயதுக்காரர் ஓடியாடி வேலைகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாச்சா என்று கேட்டார்கள் இளையபையன் மட்டும் வரவில்லை என்று பதில் வந்தது.வெளி நாட்டில் இருக்கும் அவர் வருவதற்கான சூழல் இல்லை. நிறைமாதக் கர்ப்பினியான மணைவியை அழைத் துக்கொண்டும் வரமுடியாது அங்கே அவரைத்தனியே விட்டு விட்டும் வரமுடியாது என்று சொன்னார்கள்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கொஞ்ச நாள் அலுவலகத்தில் வேலை பார்த்த  நமக்கே தாமதமாக வருவது உறுத்தியதே. வரமுடியாத அந்த இளைய பையன் என்னபாடு பட்டுக்கொண்டிருப்பார்.

5.4.12

மௌனத்தை உடைக்கும் முன்கை

பரமக்குடி பேருந்து நிலையத்துக்குள் நுழைந்ததும் திபு திபுவெனக்கூட்டம் முண்டி யடித்துக்கொண்டு  ஏறியது. அதோடு கூடவே பனங்கிழங்கு விற்கிற சிறுவனும்,சுண்டல் விற்கிற நடுத்தர வயதுக்காரரும் ஏறினார்கள்.பத்து ரூபாய்க்கு ஆறு அவிச்ச பனங்கிழங்கு கிடைக்கும்,ஒரு பொட்டலம் சுண்டல் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது என்பதே ஆறுதலான விஷயம். ஆனாலும் அந்த சிறுவனிடம் கிழங்கு வாங்க மனம் ஒவ்வவில்லை.அந்த ஒரு நிமிட தாமதிப்பில் குழந்தை உழைப்புக்கு எதிராக செய்கிற கையாலாலாத நடுத்தர வர்க்கத்தின் கைங்கர்யம் அதுமட்டுமே. நடு இருக்கை மட்டுமே காலியாக இருந்தது அதில் உட்காருவதற்காகக் குறிவைத்து வந்த இரண்டு கிராமத் தார்கள் அழிச்சாட்டியம் செய்தார்கள்.பனங்கிழங்கு விற்கிற சிறுவனை கழுத் தைப்பிடித்து தள்ளினார்கள் இருக்கையின் முகப்பில்  உட்கார்ந்திருந்த பீகாரி இளைஞனை விலகச்சொல்லிக் கெட்ட வார்த்தையில் வைதார்கள். அது வரை இயல்பாக வேடிக்கைபார்த்த பேருந்துப்பயணிகள் ஒவ்வொருத்தராய் தங்களை தாங்களே உள்ளிழுக்கும் ஆமைகளானோம். அப்போதிலிருந்து சுமார் ஒருமணிநேரம் ஓயாத கெட்டவார்த்தை ஒவ்வொன்றும் டாஸ்மாக் வீச்சத்தோடு பேருந்து முழுக்க வழிந்து கிடந்தது.

’எம்மருமயென் ஆறுகெடா வெட்டுனாண்டா,ஒரு சுமோப்பிடிச்சியாந்து கேஸ் கேஸா எறக்கி  பெருமப்படுத்திட் டாண்லொய்’ என்று சொல்ல எதிராளி

 ‘சும்மா கெட வகுத்தெரிச்சலக் கெளப்பாத பெறகு குத்திப்புடுவே எனக்கும் வாச்சானே மருமயென் பேத்தியாளுக்கு சடங்கே வைக்கமாட்டேனுட் டாண்டா, சாதிகெட்டபெய. க்காலி,அதாம் போச்சுண்டா பத்ராவிசுல வேல பாத்துக்கிட்டு ஒத்தப் பைசா வரும்டியில்லாம எம்மவள மூளியா வச்சிறுக் கான் சிருக்கியுள்ள.., 

வயித்தெரிச்சலக் கெளப்பாதடா என்று பேசிக்கொண்டே வந்தார்கள்.காற்று வரவில்லை இறுக்கமாக இருந்தது. ஜன்னல் கண்ணாடி கொக்கியை மடக்கி நிறுத்த தெரியவில்லை இரண்டு மூன்று முறை மடேர் மடேரென்று கண்ணாடி கீழிறங்கியது. தெறக்கத்தெர்லன்னா உடவேண்டிய தானே  கண்ணாடியப் போட்டு ஒடச்சிராதங்கப்பு என்ற பொறுமிய கண்டக் டருக்கும் ரெண்டு வசவு காத்திருந்தது. இனிமையான  பாடல் களாக ஓடிக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டிய பேச்சுச் சத்தமும்,வசவுகளும்  ஆக்ரமித்துக்  கொண்டே யிருந்தது.

பின்னாடியிருந்த நடு வயதுப்பெண் எழுந்து ’

என்ன பஸ்ஸா இல்ல சாராயக் கடையா,பொம்பளைங்க  வர்றாங்கண்ணு தெரியல’ என்று குரல் கொடுத்தார்.

’பொட்டமுண்டைக்கி திமிரப்பாரு என்று மீண்டும் கெட்டவார்த்தையில் ஆரம்பித்தான்.

’இனிமே ஒனக்கு மர்யாதயில்ல பேச்ச நிப்பாட்டு’ என்றார்.’நா யார்ன்னு தெர்யுமா’ என்றான்.

அதான் ஒருமணிநேரமாப் பாத்துட்டு வர்ர்றோ மில்ல, நீ மனுஷனே இல்ல என்றார்.

இரண்டு பேரும் வரிந்து  கட்டிக் கொண்டு அவரோடு மல்லுக்கு நின்றார்கள். சன்னம் சன்னமாய் பேருந்துப் பயணிகள் எல்லோரும்  அந்தப் பெண்ணின் பக்கம் வந்தார்கள். பேருந்தும் திருப்புவனத்துக்கு வந்தது. பயணிகள் ஒருமித்த குரலோடு பஸ்ஸ ஸ்டேசனுக்கு விடுங்க ட்ரைவர் சார் என்று கத்தினார்கள். மள மளவென்று ரெண்டுபேரும் இறங்கி இருவரும் கூட்டத்துக்குள் மறைந்து போனார்கள்.

மீண்டும் ஓடத்துவங்கிய பேருந்து தனது இயல்புக்குத் திரும்பியது. எல்லோரும் அவரவர்  ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். மீண்டும் பாடல் தெளிவாக ஒலிக்க ஆரம்பித்தது. அந்தப்பெண் பக்கத்திலிருந்த குழந்தையிடம் வெளியே காட்டி எதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

25.3.12

இந்த அரை நூற்றாண்டின் ஆகச்சிறந்த போராட்டம்-கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம்

கூடங்குளம் அனு உலை ஆபத்தானதா இல்லை பாதுகாப்பானதா என்கிற கேள்வி பதில்கள் இன்னும் பொதுமக்களைச் சென்றடையவில்லை.தேர்தல் நேரத்தில் 2ஜி அலைக்கற்றையில் திமுகவின் பங்கு பற்றி  ஏற்படுத்தப் பட்ட பரப்புரை போல கூடங்குளம் குறித்த கேள்விகளை ஊடகங்கள் மக்களிடம் எழுப்பத்தவறி விட்டது.  எனவே நடந்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மின்வெட்டுக்கு காரணம் கூடங்குளம் அணு உலை  திறக்கப் படாதது தான் என்கிற மூட நம்பிக்கைக்கு மக்கள் நேரடியாகத் தள்ளப்பட்டு விட்டார்கள். சிறப்பு பொருளாதார மண்டலங் கள், அந்நியநாட்டு ஆலைகள்,கணினி வழியே நெல்,சோளம், கம்பு,பருப்பு விளைவிக்கும் ஐடி  நிறுவணங்கள் ஆகிவற்றுக்கு அள்ளிக் கொட்டப்படும் மின்சாரம் குறித்து ஒரு நடுநிலை நாளேடும் வாய்திறப்பதில்லை. அவர் கள் டேக்காக் கொடுக்கும் மின்கட்டணப் பாக்கித்தொகை பற்றியும், அதற்கான மொத்த சைபர்கள் என்பதை வெளியே தெரியவிடாமல் லாவகமாகப் பாதுகாத்துக் கொள்வதும் நம்மூர் ஊடகங்கள்தான்.

இந்தியாவில் உள்ள அத்தனை டெல்டாப் பகுதிகளிலும் பெட்ரோலியம், மற்றும் எரிவாயுக்களுக்கு தேவையான கனிமவளங்கள் இருந்தாலும் அவற்றை உபயோகப் படுத்துகிற முனைப்பை அரசுகள் மேற்கொள்ளு வதில்லை. மின்சாரம்  தயாரிக்க வெறும் அனு உலைகளை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை அதுதவிர்த்த அநேக வழிமுறைகள்  இங்கே மலிந்து கிடக்கின்றன. காற்று, கடல்அலை, சூரியவெப்பம், அனல், புனல் எனத்தொடங்கி குப்பைகளில் இருந்தும்,சாணங்களில் இருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும். தென் மாவட்டங்களின் பெரும் பகுதி காடுகளை அடைத் துக் கொண்டிருக்கும் வேலிகாத்தான் முட்செடிகளை எரித்து மின்சாரம் தயாரித்தால் மொத்த தமிழகத்துக்கும் மின்சாரம் கொடுக்கலாம். இப்படி யிருக்க  ன் அனு உலையால் மட்டுமே மின்சாரம் எடுப்பேன் என்று தலைகீழாக நிற்கிறது அரசு.

வெளிநாடுகள் வேண்டாமென்று கழித்துக் கொட்டுகிற எல்லாக் குப்பைகளும் இந்தியாவுக்குள் தங்கு தடையின்றி வந்துகொண்டிருக்கிறது. சீனா ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாடியே மரங்களை அழித்து  தீக்குச்சிகள்   தயாரிக்கும் முறையைத் தடை செய்து விட்டது. எனவே அங்கே உபயோகமற்றுக் கிடக் கும் தானியங்கி தீப்பெட்டி எந்திரங்களை போட்டி போட்டுக்கொண்டு இறக் குமதி செய்கிறார்கள் சிவகாசியைச் சுற்றியிருக்கும் தீப்பெட்டி உற்பத்தி யாளர்கள்.  காயலான் கடை விலையிலான அந்த எந்திரங்கள் மூன்று நான்குகட்ட  கமிஷன்களோடு பெருமையாய் வந்து இறங்குகிறது. அதே அணுகு முறையைத்தான் அனுஉலை மற்றுமல்ல எல்லா  விவகாரத் திலும் இந்தியா பின்பற்றுகிறது.

இந்த தேசத்தில் அறுபது சதமான மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வறுமையின் மீது நோயையும் ஏவிவிடும் அணுக்கதிர்கள் குறித்த பயம்,போபாலில் நடந்த  கசிவைப் போல இன்னொரு முறை நடந்துவிடக் கூடாது என்கிற பயம். எல்லாம்  நியாயமானது. ஆகை யால்  இவ்வளவு காலம் நடக்கும் போராட்டங்களை நியாயமாக அணுகுவது மட்டுமே மக்கள் நல அரசாக இருக்க முடியும். ஒரு கார் தொழிற்சாலை வேண்டாமென்று  நந்திக்கிராமத்தில் நடந்த போராட்டத்தை அந்த அரசு மதித்து  பின்வாங்கவில் லையா?. அதைவிட்டு விட்டு போராட்டங்களைக் கொச்சைப்படுத்த அந்நிய நாட்டுத்தொடர்பு என்கிற பெரிய்ய கண்டுபிடிப்பைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதே அரசுதான் அந்நிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 2 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

இப்போது அதற்கு ஒருபடிமேலே போய் ரவுடிகளை ஏவிவிட்டு ஜனநாயக ரீதியான பொதுக்கூட்டங்களில் ரகளை யைத் தூண்டிவிடுகிறது இந்த அமைப்பு. நேற்று ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் புகுந்து அடிதடியில் ஈடுபட்டிருக்கிறார் கள்.ஒரு நியாயமான போராட்டத்தைக் கொச்சை  படுத்த தரங்கெட்ட வகை யில் இறங்குகிற நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமே நிகழும். கீரைக் கடைக்கு எதிர்க் கடைமாதிரி உண்ணாவிரதத்துக்கு எதிராக உண்ணும் விரதம் இருக்கிற விநோதம் வேறெங்கும் கேள்விப்படாத ஒன்று. அதே போலப் போராட்டக்காரர்கள் கையிலெடுக்காத வன்முறையை ஆதரவாளர்கள் எடுத்திருக்கிறார் கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். இதே போலத்தான் ஐவர் என்கவுண்டர் கொலைகளை விசாரிக்கச் சென்ற உண்மை அறியும் குழுவுக்கும் நிகழ்ந்தது.

ஆனால் ஒரு  அற்புதமான போராட்டஉணர்வை  அறிமுகப் படுத்திய அனு உலை எதிர்ப்பாளர்கள் இந்த மாநில அரசை நம்பிக்கொண்டிருப்பது தான் கூடுதல் வேதனை.

04.03.2012

ஆக்கங்கெட்ட தமிழ்க்குருவிவிரட்டி விரட்டியடித்தாலும்
ஆளில்லா நேரம் பார்த்து
கூசாமல் வீடு நுழைகிறது
ரோசமில்லாத சாம்பக் குருவி.

அலகில் ஏந்தி வந்து போட்ட
ஐந்தாவது குச்சியையும்
ஒரு வீட்டை உடைக்கிற
வேதனையோடு வெளியே எறிந்தாச்சு.

ஆனாலும் அடம்பிடிக்கிறது
ஆக்கங்கெட்ட தமிழ்க்குருவி
வராண்டாவில் தொங்கும்
மின்விசிறியில் கூடுகட்ட.

23.3.12

பேருந்தைப்போட்டியிட்டு ஜெயிக்கும் நினைவுகள்.

அந்த விடிந்தும் விடியாத கருக்கலில்
திருமங்கலம் நுழையும் பேருந்து வெளிச்சத்தில்
மீசை பெருத்த போஸ்ட்டர்களைத் தாண்டி
நினைவு தேடும் ஷாஜகானின் சிரிப்பொலியை.

ஊருக்கு வரும் பகல் பொழுதுகளில்
முகத்துக்கு நேரே நீண்டு வெளேரெனச் சிரிக்கும்
உரித்த வெள்ளரிக்காயோடு கசியும்
காதுவளர்த்த பாட்டிகளின் வறுமை.

செழித்துக்கிடக்கும் சாலையோரத்து வேலிக்காடுகள்
கடக்கும் பொழுதெல்லாம் கயிறறுத்துக்கொண்டு
காட்டுக்குள் ஓடிமறைந்துகொள்ளும் இன்னொரு நான்.

இழுத்துக்கொண்டு வந்து இருக்கையில் வைக்கிற
இளைராஜாவின் பாடல் வந்த சுவடு தெரியாமல்
அந்தரத்தில் மீளப்பறக்க வைக்கும் என்ன செய்ய ?

11.3.12

தோனியின் கேள்விகள் முன்வைக்கிற நம்பிக்கை.

ஒரே சுற்றுச் சுவருக்குள் இருக்கும் இரண்டு தியேட்டர்களில் அரவானும்,தோனியும்  திரையிடப்பட்டுக்  கொண் டிருக்கிறது. அரவான் பார்த்துவிடலாம் என்று சொல்லும்போது பதறிப்போய் வேண்டாம் என்று என் கையைப் பிடித்துக்கொண்டார் தேனிப் பக்கத்து ஊர்க்காரர் இளைஞர் ஒருவர்.படம் வெளியாகுமுன்னமே அரவான் க்ரூப்ஸ் னு போஸ்ட்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க சார் என்று கலக்கத்துடன் கூறினார்.ஒரு கலைப் படைப்பை, ஒரு கலை ஞனை சாயம் பூசி அழகுபார்ப்பது வேதனை மிகுந்த அருவருப்பாகும். எனவே சாவகாசமாய்  பார்த்துக் கொள்ளலாம் என்று தோனியைத் தேர்ந்தெடுத்தோம். காலம் கடந்து விமர்சனம் . ஆனாலும் இது விமர்சனம் இல்லை. சும்மா பார்த்த திரைப்படத்தை  சிலாகிப் பதுதான். இந்த சிலாகிப்பு எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதுதான் உலகம் அவரவர் ரசனை வேறுவேறாய் கிடக்கிறது. எனினும் சமூகம் சார்ந்த சிந்தனை வயப்படுகிறவர்கள் காலம் கடந்தும் நிற்கவே நிற்பார்கள். பிரகாஷ்ராஜ் நிற்பார்.

திரைத் துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு கலகக் குரலைப் பதிவு செய்ய துணிச்சல் தேவை. அது நூறு கோடி இரு நூறுகோடி பணம் முதலீடு செய்கிற மசாலாத் துணிச்சலை விட கோடி மடங்கு பெரியது. கல்வி வியாபாரமாகிற கொடுமையை ஒரு முப்பதாண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி இயக்கங்கள் தெருத்தெருவாய் புலம்பிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புலம்பல்களை போட்டி என்கிற இரைச்சல் ஓரங்கட்டி விட்டது. அந்தோ.. இன்று கல்வி பொது விநியோகத்திடமிருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட் ....... கையில்  சிக்கிக்கொண் டிருக்கிறது. முதலில் சென்னை போன்ற பெருநகரங்களில் விதைக்கப்பட்ட விஷச்செடி தமிழகம் முழுக்க நீக்கமற வியாபித்துவிட்டது.

மூட்டை கட்டிக்கொண்டு போனால் ஒழிய உயர்கல்வி கற்க வேறு முகாந்திரமே இல்லை என்றாகிப்போன சூழல் இருக்கிறது. மண்ணெண்ணய் விளக்கிலும்,தெருவிளக்கிலும் படித்தவர்கள் மாவட்ட ஆட்சியாளராகினார்கள்  என் கிற செய்திகளால் பெருமிதப்பட்ட காலம் ஒன்றிருந்தது.அது வறிய மக்களின் கல்விக் கனவின்மீது திடமான வெளிச்சம் பாய்ச்சியகாலம். அதெல்லாம் இப்போது  மலை யேறிப்போய்  ஒரு லஞ்சம் வாங்காத அரசாங்க ஊழியன் கூட உயர்கல்வி குறித்து யோசிக்கமுடியாத சூழல் வந்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு பத்திரப் பதிவு அலுவலக குமாஸ்தாவின் குமுறலாய் கிளம்புகிறது தோனி.  ஒவ்வொரு ப்ரேமிலும் பெற்றோர்களின் மனசாட்சியை உலுப்பி விட்டுச் செல்கிறது படம்.

புறச் சமூகம் தனது குழந்தைகள் குறித்து விசாரிக்கிற கேள்விகளால் கூனிக்குறுகிப் போகிற பெற்றோர்களின் பிரதிநிதியாய் பிரகாஷ்ராஜ் தனித்து நிற்கிறார்.பந்தியில் அருகே அமர்ந்திருப்பவர் கேட்கிற கேள்விகளுக்கு அளக்கிற பெருமிதப் பொய்யும், கல்வி நிறுவன அதிபரிடம் தனது மகன் கட்டாயம் அதிக மதிப்பெண் வாங்கு வான் என்று சொல்லுவது, அதனால் வருகிற ஆதங்கத்தை மகனிடம் காட்டுகிற கோபமும் துல்லியமான செதுக்கல். பிரகாஷ்ராஜிடம் அடிவாங்குகிற ஒவ்வொரு அடியிலும் தனது அபிமானத்தை தளரவிடாத பந்தாய் திரும்புகிறது அந்தச் சிறுவனின்  நடிப்பு. கோமாவினால் படுத்த படுக்கையாய் கிடக்கிற போது நிலைகுத்தி நிற்கிற அவனது கண்கள் எல்லோரது கண்களிலும் நீரைக்கொட்டச்செய்யும்.

அடுக்குமாடியில் குடியிருக்கும் மக்களுக்கிடையே ஊடுறுவிக்கிடக்கும் பந்தம் மேலோட்டமாக இருந்தாலும் இந்த ஜாதிய திரட்டல் யுகத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. குடும்பத்துக்காக அரசியல்வாதியின் சின்ன வீடாகிற நளினியின் மீது காட்டுகிற வெறுப்பு,கந்து வட்டிக்கு கொடுக்கிற கனிபாயின் கறார்தன்மை மீது காட்சிப் படுத்தப்படுகிற வெறுப்பு,மதிப்பெண் வாங்கமுடியாத மகன் மேல் கவிழ்ந்திருக்கும் கோபம்  எல்லாமதிப்பீடுகளும் உடைந்து அன்பாகத் திரும்புகிற நெகிழ்ச்சி அழகு. எல்லோருக் குள்ளும்  மனிதா பிமானம்  ஒளிந்து கிடப்பதையும் எல்லோருக்குள்ளும் தனித்திறமை ஒளிந்து கிடப்பதையும் நம்பிக்கையோடு முன்வைக்கிறது தோனி.அதே நேரம் கல்விக்கொள்கை,புரையோடிக்கிடக்கும் லஞ்சம் இவற்றைச்சொல்லுகிறேன் பேர்வழி என்று இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கோபத்தைத் திசை திருப்பாத நேர்மை இருக்கிறது இந்தப்படைப்பில்.

சமூக மாற்றங்கள் சினிமாக் கதாநாயகர்களால் மட்டுமே வரும் என்கிற மூடநம்பிக்கையையும், காதல் 100 சதவீதம் சுத்தமானதும் டூயட் பாடுவதாலும் என்கிற முரணான மூட நம்பிக்கையையும் ஜஸ்ட்லைக்தட்  ஒதுக்கி விட்டு  இயல்பாக நகர்கிறது. பின்னணி இசை படம் முழுக்க பிரகாஷ்ராஜுடன் கை கோர்த்துக் கொண்டு  வரு கிறது. நிழலாகப்படகோட்டி விளையாண்ட காலம்போய் பாடல் வீட்டுக்கு வந்த பிறகும் பின்னாடி நிழலாகத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

28.2.12

எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா ?( ஷாஜஹான் கவிதைகள் )

மிகச் சிறந்த கவிஞன்,மிகச்சிறந்த கதைசொல்லி,நெஞ்சுருக்கும் பேச்சாளன் நிஜமான பொதுவுடமைக்காரன்,ஆகச்சிறந்த ஹாஸ்யக்காரன். எல்லா வற்றையும் உள்ளடக்கிய சக மனிதன். தோழர் ஷாஜகானின் கவிதை இது.


எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா ?

நட்புக்கு நீங்கள் செய்த துரோகத்தை
நம்பிக்கைக்கு நீங்கள் செய்த அவமரியாதையை
அன்பில் மேல் நீங்கள் செலுத்திய வன்முறயை
தவிப்பின் மீது நீங்கள் விசிய அலட்சியத்தை
கலையின் மீது அள்ளிப்பூசிய பொய்மையை

வரலாற்றின் மேல் செய்த இருட்டடிப்பை
எளிமையின் மேல் கொட்டிக் கவிழ்த்த அதிகாரத்தை
உண்மையின் மேல் போர்த்திய அரசியலை
இயல்பின் மீதான மேலதிகாரத்தை
வெற்றிகளின் பேராலான தீரா வெறியை
தோல்விகளின் மீதான கேலிச் சிரிப்பை
கொல்லப்பட்டோர் பற்றிய அவதூறுகளை

சிறுமைப்பட்டோர் மீது காட்டாதிருந்த கனிவுக்கு
கனவுகள்மேல் காட்டிய ஆத்திரத்திற்கு
காலம் சகலத்தையும் மறக்கச்செய்யும்
கண்களில் கொட்டிய மணலாய் உறுத்தும்

இவை எதுபற்றியேனும் வருந்தியிருக்கிறீர்களா
எப்பொழுதேனும் ?
ஒரு பொழுதேனும் வருந்தியிருந்தால்
நீங்களும் மனிதன் என்னைப்போல

27.2.12

காவல்கோட்டத்தை காவல் காக்கும் ஜெயமோகன் - இடதுஎழுத்துக்கெதிரான சூழ்ச்சி.காவல் கோட்டம் மிகச்சிறந்த நாவலா,இல்லை ஆதிக்க ஜாதிகளுக்காதரவான மிகச்சிறந்தபரப்புரையா என்பது குறித்து விவாதிக்கு முன்னாடி விமர்சனங் களின் விமர்சனங்களை கூர்மையாக அனுகவேண்டியிருக்கிறது. தமிழகத்தில் பார்ப்பணர்களும், முதலியார்களும், வெள்ளாளர்களும் ஜாதிகுறித்து வைத்திருந்த மேட்டிமையைக் காட்டிலும் இடைப்பட்ட சாதிகள் கொண்டிருக் கும் துவேஷமும்  மிகப் பிரபலமானது. அது இன்றுவரை தொடரும் அவலம். தீராத வன்கொடுமைகளைத் தடுக்கவழியில்லாமல் அலைகிறது தேசம். அப்படியிருக்க  இரண்டு ஜாதிகள் குறித்த பெருமிதங் களை ஒரு வரலாறாக முன்வைக்கிற இந்த நாவலில் இருக்கிற இடதுசாரிக் கருத்துக்களுக்கு எதிரான  விஷயங் களை அம்பலப்படுத்துகிறார் தோழர் மாதவராஜ்.

முதலில் இந்த விமர்சனத்தை அமைப்புக்கு எதிரானதாக கற்பித்துக்கொண்டு கிளம்பிய விவாதங்கள்  மேம்போக் கானவை. பின்னர் அதற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு கிளம்பும் குரல்கள் மிகுந்த உள்நோக்கமுடையவை. இந்துத் துவா மீது மோகமும் இடதுசரிகள் மீது தீராத காழ்ப்புணர்ச்சியும் கொண் டிருக்கிற ஜெயமோகன் இந்த நாவலை ஆதரித்தும் மாதவராஜை எதிர்த்தும் குமுதம் பத்திரிகையில் எழுதியிருப்பது மிகப்பெரும் வேதனை கலந்த சூழ்ச்சி யாகும். அந்த வாதங்களின் கூடுதல்  கொச்சைத் தனங்களாக எழுத்தாளர்  ஜெய காந்தனையும்,  எழுத்தாளர் மேலாண்மைப் பொன்னுச்சமியையும்  சுட்டிக் காட்டுவது இந்த எழுத்துலகம் கூர்ந்து  கவனிக்க  வேண்டிய விமர் சனம். யாரையும் விருப்பு வெறுப்பின்றி  விமர்சனத்துக் குள்ளாக்கும் தோழர் என்பது  மாதவ ராஜைப் பற்றி அறிந்த அத்தணை தோழர்களும்  அறிவார்கள். சு.வெங்கடேசன் உட்பட.

அமைப்பை எந்த தனி நபருக்காகவும் விட்டுக்கொடுக்காத நெறியுடையவரும் அவர். இதை தோழர்  உரா. வரதராஜன் மரணம் குறித்த பதிவிலும், அதற் கெதிராக வந்த விமர்சனங்களிலும் சமீபத்தில் தோழர் கோணங்கி குறித்த பதிவிலும் காணலாம்.அமைப்பு ரீதியாக மேலாண்மை பொன்னுச்சாமியைக் கொண்டாடுகிற மாதவராஜ் படைப்பு ரீதியாக அவரை அதிகமாக விமர்சித் திருப்பதை தமுஎச வட்டத்தில் அணைவரும் அறிவார்கள். தோழர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கும் கூட இது நன்றாகத் தெரியும்.தன்னை ஒரு போதும் எழுத்தாளர்  ஜெயகாந் தனின் மருமகன் என்று அறிமுகப்படுத்தாதவர் என்பதை மிகநெருக்கமாக அவரை அறிந்த எல்லோரும் அறிவார்கள். எண்பது களிலே எழுதத் தொடங்கிய அவர் தொண்ணூறுகளில் தான் எழுத்தாளர் ஜெய காந்தனின் மருமகனானார். அப்படியிருக்க எழுத்தாளர் ஜெயகாந்தனையும் தோழர் மேலாண்மையையும் இந்த விவாதங்களில் உள்ளிழுப்பது சூழ்ச்சி நிறைந்த செயல்.

இவ்வளவு காலமாக இடதுசாரிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிற சாகித்ய அகாடமி விருதுகள் தோழர் மேலாண்மைக்கும், காவல் கோட்டத் துக்கும் கொடுக்கப் பட்டதால் புனிதமானதாக மாறிவிட்டதாக மயக்கம் கொள் ளக்கூடாது என்கிற தொனி இருந்தது. தகுதிக்குறியோர் பட்டியலில் இந்த எழுத்துலகம் மதிக்கிற உன்னத எழுத்தாளர்கள் விடுபட்டதையும் அவர் தனது முதல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஒரு  இயக்கவாதியாக  மட்டு மிருந்து அந்த குறிப்பை அணுகினால் எரிச்சல் வரலாம், வரும். நேர்மையான முறை யில் அணுகினால் அது அலாதியாகத்தெரியும். பெத்தானியாபுரம் முருகா னந்தம் என்கிற நபரின் கேள்விகளாக முன்வைக்கப்பட்ட வரலாற்று ரீதி யான,மற்றும் சமூக ரீதியான கேள்விகளை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது.அதே கேள்விகளின் நீட்சிதான் மாதவராஜ் எழுதிய காவல் கோட்டம் விருதுகள் விழாக்கள் என்கிற மிகப்பெரிய விமர்சனம்.

இந்த விமர்சனத்துக்கு அமைப்பு ரீதியான கோபங்கள் வெளியேறும் என்பவை அறிந்த ஒன்று ஆனால்  அமைப் புக்கு எதிரான நபர்களிடமிருந்து எதிர்ப்பு வரு வது குதர்க்கமான ஒன்று. இருபத்தைந்து வருடங்கள்  முதலமைச்சராக இருந்த தோழர் ஜோதிபாசுவுக்கும் நேற்று கட்சியில் உறுப்பினரான ஒருவருக் கும் சமதையான அந்தஸ்து வழங்கும்  அமைப்புகள் இடதுசாரி அமைப்புகள். அப்படிப்பட்ட அமைப்பில் இருக்கிற  சட்டமன்ற வேட்பாளராக அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவர் வாளும் மலர்க் கிரீடமும் வாங்கிப் பெருமிதப்பட்டுக் கொள்வதை எந்த ஒரு இடதுசாரியும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அப்படி ஏற்றுக் கொள்ளாத ஆயிரக்கணக்கான  உண்மைத் தோழர்களின் பிரதிநிதித் துவக் குரலாக வந்ததுதான் இந்த நேர்மையான விமர்சனம்.

என்னைத்தவிர இங்கு எவன் எழ்துவதும் எழுத்தல்ல என்கிற கர்வத்தில் இருப்பவரும்,அதனால் தினம் வண்டி வண்டியாய் அம்பாரமாக இந்துத்வாக் குப்பைகளை  அள்ளிப் போடுபவரும், அந்தக் குப்பைகளின்மேல்  உட்கார்ந் திருகிறவருமான  ஜெயமோகன் இங்கு வந்து சாட்சி சொல்லவும்,நீதி சொல்லவும் இடதுசாரி அமைப்புகள் ஒன்றும் இளைத்தவை அல்ல. அதிகார மையங்களைச் சொரிந்து விடவும்,ஆதிக்க சாதிகளைப் பெருமிதப்படுத் துவதுமான அவர் போன்றவர்களின் எழுத்தை தோலுரிக்கிற பணி தான் இடதுசாரிகளின் முதற்பணி.  அப்படி யிருக்க அவர் வலிய வந்து  வெங்கடேசன் நனைகிறதாக ஒப்பாரி வைப்பது  ஆட்சேபகர மானது. தனது திண்ணை எழுத்துக்களிலும்,தனது கவிதை முன்னுரையிலும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் காரர்  ஜெமோ என்று  ஆரம்பிக்கிற சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக  ஜெயமோகன் களத்தில் குதிப்பதும் அதை தோழர்கள் மௌனமாக ஏற்றுக் கொள்வதும் கவலை அளிப்பதான ஒன்று.

நாவலின்மீது ஜெமோ ஆதவரவாகவோ எதிராகவோ கருத்துச்சொல்லுவதை புரிந்துகொள்ளலாம்.மாதவராஜின் கேள்விகளுக்கு ஜெமோ பதில் சொல்லுவதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. மாதவராஜை நோக்கி ஆரம்பக் கட்ட வாசகராக இருக்கிறார் என்கிற எள்ளலை முன்வைக்கிற ஜெயமோகனுக்கு மிகுந்த  பெருமிதத் தோடு நாங்கள் சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது. இந்துத்துவ,முதலாலித்துவ,ஜாதித்துவ பெருமைகளைத்  தூக்கிப் பிடிக்கும் நீங்கள் முதுநிலை வாசகராக இருக்கும் பட்சத்தில் நாங்கள் அதற்கு எதிரான எந்த இடத்திலும் இருப்போம். அது பற்றி எங்களுக்கு எள்ளளவும் வருத்தம் இல்லை. ஆனால் நாங்கள்  பாதிக்கப் பட்ட மக்கள் பக்கம் இருக்கிறோம். அவர்கள் அறிகிற பாஷைய எழுதுகிறோம் என்கிற பெருமிதம் எங்களுக்கு இருக்கிறது. அது தவிர்த்த எந்த அதிகார மையத்தின் சான்றிதழும் எங்களுக்கு அநாவசியமானது.

26.2.12

வியாரா வெறி விழுங்கிச் செரித்த பழய்ய பொது வாழ்க்கை.

பரபரப்பு வேகம் நிலகொள்ளாமை எதையும் நம்பாமை என்கிற நகரப்புழுதிகளோடு குழைந்துகிடக்கும் வாகனப் புகைகலந்த வாழ்வில் இருந்து தப்பிக்க வழியிருக்காவெனத் தெரியவில்லை. சற்றுக் கண்ணயர்ந்து பின்னுக்குப் போனால் நொடிகளில் வந்து விடுகிறது நூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் பழய்ய வாழ்க்கை. நடந்து வந்த நெடுந்தொலைவில் பால்யத்தோடு தூரக்கிடக்கிறது மாசுபடாத புழுதிவாழ்க்கை. டவுசர் போட்டுக் கொண்டு ஹோவெனக்கத்திக்கொண்டு தெருவில் ஓடத்துடிக்கிறது மனசின் கால்கள்.கடந்த காலம்  பசுமை யாகவும் எதிர்காலம் சிகப்பாகவும் எழுதிக்கிடக்கிற வர்ணங்களை வாசிக்க வாருங்கள்.

ஊதாவும் கருப்பும் கலந்த வர்ணத்தில் தெப்புதெப்பெனக்கிடக்கும் சுப்பையாத் தாத்தாவின் கிணற்றுத்தண்ணீரை திரும்பவும் நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. அந்த பம்புசெட் ரூமின் மேலேறிக் குதிக்கிற சாகசத்தை எழுத்தில் எப்படி முயன்றும் கொண்டுவர முடியாது. குளிக்க வரும் மதினிமார்களின் நல்ல மச்சினர்களாக ஒதுங் கிப்போய் காத்திருக்கும் தருணங்கள். இல்லை பெண்கள் வராத அடுத்த பம்புசெட்டுக்கு சுதந்திரக்குளியல் தேடி நடக்கும் தருணங்களில் மனசு பின்னுக்கிழுத்துக் கொண்டு ஓடிப்போய் எட்டிப் பார்க்கிற  குறு குறுப்பானதும் தான் திரும்ப முடியாத அந்தத் தொலைந்த வாழ்க்கை. காடுதிரிந்து வரும்போது மிளகாய்செடிக்கு ஓடும் வாய்க் காலின் ஓரம் மண்டியிட்டுக் குடிக்கும் தண்ணீரின் குளிர்ச்சி தொண்டையில் இன்னும் ஜில்லென நிலைத்திருக் கிறது.

இந்தத் தண்ணீரைப் பேசும் போதெல்லாம் ஊர்களுக்கிடையே யான நடைபாதைகள் நினைவுக்கு வந்துவிடும். மாட்டு வண்டிகள் நடந்து நடந்து உருவான அந்த நாற்கர சாலைகளில் நடந்துபோகும் போது நம்மோடு கூடவே வரும் சனங்களின் சுகதுக்கங்கள். பக்கத்து டவுனில் நடக்கும் திரைப்படமோ,அருகாமை ஊரில் நடக்கும்  தெருக் கூத்து நாடகமோ,அகாலத்தில் இறந்து போன சொந்தங்களின் மரணமோ ஊரை நடத்திக் கூட்டிக் கொண்டு போகும். எழுதாமல் அழிந்துபோன வரலாறும் வாழ்க்கையும், பதிவுறாமல் காற்றில் கறைந்து போனது பாட்டும் கூத்தும் சொலவடைகளும் அந்தக் கூட்டத்தோடு பேசிபேசி வளரும். பரமவைரிகள் போல முடிபிடித்துச் சண்டை யிட்டவர்கள் திரும்பிவரும் போது தோளில் கை போட்டுக் கொண்டு வருமாறு இளக வைத்துவிடும் இயல்பு உண்டு. நடந்துபோகிற நாற்பது பேரில் முன்னே போகிற பாதத்தில் முள் குத்தினால் பின்னே வரும் கால்கள் மருந்து சொல்லும். வழியை மறிக்கிற இடர்களில் எப்போதாவது தான் பாம்புகள் குறுக்கே வரும்.ஆனால் எல்லா நேரமும் பாம்புக் கதைகள் கூட வந்துகொண்டே இருக்கும். அப்போது நாம் மனிதர் தெரிந்த அத்துணை பாம்பின் வகைகளையும் அதன் குணங் களையும்  அறிந்து கொள்ளலாம்.

அத்தோடு கூட அமானுஷ்ய கற்பனைகளோடு ஐந்து தலைப் பாம்புகளும் வரும். அவை, ரத்தினத்தை  வயிற் றுக்குள் வளர்க்குமாம். உடலில் அதற்கு ரோமங்கள் முளைத்துவிடுமாம். ராக்காலங்களில் ரத்தினத்தை வாந்தி யெடுத்து,அந்த ஒளியில் இறைதேடுமாம். அந்த அரத்தினத்தின் மேல் சாணத்தைப் போட்டு மறைத்து விட்டால் கண் தெரியாமல் தரையக் கொத்தி கொத்திச் செத்துப் போகுமாம். ஆனால் கொம்பேறி மூக்கன் கொத்திவிட்டு பனைமரத்தில் ஏறிக்கொள்ளுமாம். மறுநாள் சுடுகாட்டில் புகை தெரிந்தால் தான் கீழிறங்குமாம். சாரைப் பாம்பு விரட்டினால் குறுக்கும் நெடுக்குமாக ஓடனும் நல்ல பாம்புவிரட்டினால் நேராக ஓடவேண்டும் என்கிற உபாயக் கதைகளும் கிடைக்கும். இந்தக் கதைகளைத் தாண்டி பாம்பு கடித்து விட்டால் ஊருக்கே விஷமேறிக் கொள்ளும்.

ஆளாளுக்கு மருந்து சொல்ல,மருந்து தயாரிக்கக் கிளம்பிவிடுவார்கள். அன்று இரவு கட்டாயம் பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவின் உடுக்கைச் சத்தம் ஊரைத் தூங்கவிடாது. அண்ணம்மாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே என்று பாடிக்கொண்டே கூட்டத்துக்குள் மச்சினிச்சிகளைத் தேடும் அவரது கண். ஒரு இரவு முழுக்
கப் பாடிக்கொண்டே இருக்கிற அவரது குரலில் உழைக்கும் மக்களுக்கான புராண கதைகள் கிடைக்கும்.  விராட பர்வம்,விக்கிரமாதித்த கதைகளை அதற்குப்பிறகு வேறெங்கும் கேட்கமுடியவில்லை. அதுபோலவே  மணிக் குறவன், தீச்சட்டிக் கோவிந்தன் பாடல் கதைகளும் சொல்ல ஆளில்லாமல்  தொலைந்து காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது. இச்சிப்பட்டை ராப்பட்டை,மதுரைவீரன்,அம்பிகாவதிஅமராவதி,காத்தவராயன் போன்ற கதைகளில் ஊடுசரடாய்க்கிடக்கும் மேல் கீழ் முரணை மனதுடைக்கும் குரலில் அறிமுகப்படுத்திய  நாட்டுப் புறப்பாட்கர்களும் பாடலும் இனி கிடைக்கப்போவதில்லை. 

கிராமங்களின் காலையும் மாலையும் பொது இடங்களுக்கானது இரவும் மட்டுமே வீடுகளுக்கானது. விடிந்தபிறகு அவை  காடுகளில் பரந்து விரிந்து கிடக்கும். விதைப்புக் காலங்களில் கலப்பை மாடு கடகப் பெட்டியோடும்,செடி வளர்ந்த காலங்களில்  களை யெடுப்பு செதுக்கிகளோடும், அறுப்புக் காலங்களில்  பண்ணையறுவாள் களோடும் மக்கள் காட்டுக்குள்ளே தான் திரிவார்கள். காடு அவர்களுக்கு வெறும் தானியங்களை மட்டும்  தருவ தில்லை. அத்தோடு கூட பயிர்வளர்க்கும் அறிவியல் நுணுக்கங்களையும்,பயிர்களோடு அண்ணாந்துபார்த்து வெயில்,மழை வரும் காலநிலைகளையும் சொல்லிக் கொடுக்கும். தாளப்பறக்கும் நெய்க் குருவிகளையும்,  தட்டாரப் பூச்சியைம் பார்த்துவிட்டால் மாடியில்,களத்தில் காய்கிற தானியங்களை மழைபடாத இடத்துக்கு மாற்றுகிற வேலை தொடங் கும். அதுகூட தேவைக்காகநடந்ததென்று சொல்லலாம் பறித்த நிலக்கடலை ஆய்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அந்தவழியாய் நடந்துபோகும் யாரையும் இந்தா கொஞ்சம் கடலை  திண்ணுட்டுப் போங்க என்று சொல்லுகிற வாஞ்சையை நிலம்போலே மனிதரும் வாய்க்கப்பெறுவது அலாதி குணம்.

அப்போதெல்லாம் காட்டுமரக் கிளைகளில் வகை வகையாய் தூக்குச்சட்டி தொங்கும் அதிசயம் நடக்கும். அந்த சட்டிகளுக்குள் குடியிருந்த புளிப்பேறிய கஞ்சி வகைகளைச் சொன்னால் கணினி விசைப் பலகையில் எச்சில் கட்டாயம் சிதறும். வரகரிசி, திணையரிசி, குதிரைவாலி, காடக்கண்ணி,காலக்கம்பு,சோளாச்சோறுகள் தின்று செழித்த காலங்கள் எல்லாம் கற்காலங்கள்  போலாகிப் போனது. அதை விளைவிக்க மட்டுமல்ல பதப்படுத்த, பாதுகாக்க, இடித்துப், புடைத்துச், சமைக்கக்கூட உடல் உழைப்புத் தேவையாயிருந்தது. ஆதலால்தான் ஊரில் திரும்புகிற திசையெல்லாம் உரல்கள் நிறைந்திருந்தது.

ஆதலால்தான் அந்த உரல்கள் ஆரம்பக் கல்வியின் அரிச்சுவடியிலே இடம்பிடித்துக் கொண்டிருந்தது. அந்த உரல்களுக்குள் அப்போது வெறும் தானியங்கள் மட்டும் கொட்டி இடிபடாது. ஊர்க்கதைகள் எல்லாம் சேர்ந்த்தே இடிபடும். இடிக்கப்பெரும்பாலும் குமரிகளே வருவார்கள். இடிபடுகிற கம்புத்தவசம் மாரிக்கண்ணுசித்தி  வீட்டில் தான் சோறாகும் ஆனால் சுத்தியிருக்கிற கொமருகளெல் லாம் சேர்ந்து கம்பு குத்தும் அந்நியோன்யம் இனி எங்கும் கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் ஆள் மாத்தி ஆள் இடிக்கிறபோது ஊரே அதிரும். அது பார்த்த அந்த அதிர்வைக்கேட்ட எந்தக்கொம்பனும் பெண்கள் இழைத்தவர்கள் என்று ஒருபோதும் வாய்திறக்கமாட்டான். என்றா லும் பெண்கள் எப்போதும் உரல்மேல் உட்காருவதில்லை.ஆனால் அதொன்றும் மநுஎழுதிவைத்த விதியுமில்லை . திங்கிற சோத்துக்கு பெணகள் தரும் மரியாதை அவ்வளவே. ஆனால் எளவட்டங்கள் தூக்கமுடியாத உரல்களை சுலுவாகத்தூக்கி எறிவாள் கல்லுடைத்து கஞ்சிகுடிக்கிற கன்னிமரியாக்கா.

22.2.12

ஜாதி கடந்த பொதுவுடமைவாதியின் வீட்டுக்கல்யாணம்.

பாண்டியன் கிராமவங்கி ஊழியர்சங்கத்துக்கு 42 பி எல் எஃப் தெரு என்று ஒரு முகவரி உண்டு அதே போல எண் 6 பிச்சைப்பிள்ளைதெரு விருதுநகர் என்கிற முகவரியும் உண்டு. அது ஒரு பாதியில் நின்று போன  கட்டிடம். மீதிக் கட்ட முடியாமல் போன வீட்டுக்காரரின் கனவை நாங்கள் வாடகைகொடுத்து நனவாக்கினோம். அவர் வீடாக் கியிருந்தால் ஒரே ஒருகுடும்பம் மட்டுமே அங்குவாழ்ந்திருக்கும்.ஆனால் தமிழ்நாடு அரசு  ஊழியர்  சங்கம், பாண்டியன் கிராமவங்கி ஊழியர்சங்கம் என்ற இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களின் தற்காலிக வீடாகவும். நேரம் தப்பி வீடுபோக முடியாத தோழர்களுக்கு புகழிடமாகவும்.அங்கு தங்கியிருந்த  சுந்தரராஜ்,சிதம்பரம்  என்ற தோழர்களின் வாழிடமகவும் மாறியிருந்தது.

யாருக்காவது தேநீர்குடிக்க ஆசையிருந்தால் குறைந்தது பத்து தேநீர் செலவாகும் அதுவும் சந்தோசத்தோடு. யாருக்காவது காய்ச்சலென்றால் எதாவது ஒரு கை மாத்திரை தேடும் நெகிழ்சியான அரைக் கம்யூன் வாழ்க்கை வாழ்ந்த காலம் அது. பல நேரங்களில் பாண்டியன்கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் செயற்குழு  நடக்கும். அதுபின்னிரவில் தொடங்கி விடிய விடிய தொடரும் அப்போதெல்லாம் தங்கள் படுக்கைகளை எடுத்துக்கொண்டு மாடிப்படிக்கோ அல்லது பிடிக்காத சினிமா ஓடும் தியேட்டருக்கோ  போய் விடுகிற இங்கீதம் ஒலித்துக்கிடந்த காலம் அது. நான் மாதவராஜ், அன்பை மொத்தமாக வாங்கி  சில்லறைக்கு விநியோகம் செய்வதுபோல எந்தநேரமும் சீவலும் வெத்திலையும் கூடவே வைத்திருக்கும் தோழர் விஸ்வநாதன். எங்கள் அன்புத்தோழர் முதலாளி செல்வா தினம் அங்கே இரவு பத்துமணி வரை உட்கார்ந்திருப்போம்.

கடிதங்கள் வரும் அல்லது ஒரே ஒரு லேண்ட்லைன் போனுக்கு எப்பொழு தாவது அழைப்புவரும்.அதுதவிர்த்த நேரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தோழர்களோடு பேசிப்பொழுது கழிப்போம். அங்கே முத்துராஜ், ஜீவா, செல்வின், போன்ற தோழர்களோடு தோளாய் இருந்த அப்போதைய செயலா ளர் தோழர் பாலசுப்ரமணியன் மிகச்சிறந்த தொழிற் சங்கப்ப போராளி. அத் தோடு  மிகச்சிறந்த கவிஞர். சின்ன சின்ன கடிதங்களிலும், போஸ்டர்களிலும், நோட்டீசுகளிலும் சிரத்தையெடுத்து கவிதை மொழியில் எழுதும் தோழர். அவரை நானும் மாதுவும் நிறைய்ய எழுதச்சொல்லுவோம் அவரும்  ஆவலோடு   சரி சொல்லுவார்.ஆனால் மாவட்டம் முழுக்க வியாபித் திருக்கும்  அவரது சங்கத்தின் பிரச்சினைகள் அவரை முழுமையாக ஆகரமித்துவிடும். எங்கு பிரச்சினையென்றாலும் ஓடோடிச்செல்லும் மிகச்சிறந்த மனிதாபிமானி. அதனால் தான் எழுத்தையும் மிஞ்சிய செயலால் உயர்ந்துநிற்கிறார்.

அம்மா,அப்பா ஊர் ஜாதியக்கட்டுமானங்களை எதிர்த்து மணம் முடித்தார். அந்த மீறலில் விளைந்த கவிதையாய் ஒரு பெண் மகள் கிடைத்தாள். பெண்ணுக்கும் ஜாதிமதம் பாராத வரன் தேடினார் கிடைத்துவிட்டார். இரண்டாயிரம் வருட குப்பையைப் புறங்காலால் எத்தி நிமிரும் களிப்பை நான் அவர் முகத்தில் எபோதும் பார்க்கலாம். அதை எந்தச்சூழலிலும் தொய்வில்லாது பாது காக்கும் ஒரு சில தோழர்களில் தோழர் பாலுவும் ஒருவர்.அவர் தனது மகளின் கல்யாணத்தை ஜாதிகலக்காத தோழமையோடு நடத்தப்போகிறார்.அதற்கு அவரே எழுதிய கவிதையே அழைப்பிதழாகிறது.

சாதி,மதம்,இனம்,மொழி- என
புதர்மண்டிக்கிடக்கும்
சமூகச்சூழலுகிடையேயான
எங்களின் வாழ்க்கைப்பயணத்தை...

குருவிகளும்,கிளிகளும்
குயில்களும்,மைனாக்களும்
கூடுகட்டிகுலாவிடும்
சோலைகளுக்கு
இடையே ஆனதாக மாற்றிய
எங்கள் அன்புமலரின்
திருமணம்......

கால்நுற்றாண்டிற்கும் மேலாய்
எங்களுக்கு
எல்லாமுமாய் இருக்கிற
அன்புநெஞ்சங்களே....

அவசியம் வாருங்கள்.....

29.2.2012 விருதுநகரில்.
மணமக்கள், அபர்ணா-பாலச்சந்திரன்

அந்தக்கோட்டையில் கல்யாணம் இந்தக்கோட்டையில் கல்யாணம் என்று ப்ளக்ஸ் பேனர்கள் வழியே ஜாதி மருரூபம் எடுத்து நாக்கைத் துருத்திக் கொண்டலையும் இந்த அடர் இருளில் ஆங்காங்கே தெரியும் ஒளிக்கீற்றைப் போல நம்பிக்கையை தோற்கவிடாத தோழனுக்கும் அவர் மனைவிக்கும் முதலில் வாழ்த்துக்கள்.பின்னர் மகளுக்கும் வாழ்த்துக்கள். ஜாதிகடந்த பொதுவுடமையை நேசிக்கிற எல்லோரும் வாழ்த்தலாம்.
     

9.2.12

நினைவுகளை எடுத்துக் கோர்க்கும் ஜன்னலோர இருக்கை.

ஒவ்வொரு பேருந்து நிலையமும் ஒரு நிறத்தோடு வித்தியாசமாக இருக்கிறது.காரணம் அங்குதான் அந்தப்பகுதி கிராமத்து மக்கள் எல்லோரும் வந்து குழுமிப்போவார்கள்.விளாத்திகுளம் பேருந்து நிலையம் ஒரு வெளிர் மஞ்சள் நிறமாக இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. ஒரு நான்குநாட்கள் அதை காலையும் மாலையும்  கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சாத்தியமாயிற்று. அங்கிருந்து முக்கால் மணிநேரம் கிழக்கே பயணம் செய்தால் வேம்பார் வந்து விடும். வேம்பாருக்கு வேலை நிமித்தமாக நான்குநாட்கள் போய்வந்தேன்.ஆனால்  அங்கே தான் முன்னொரு காலத்தில் தங்கியிருந்த மாதிரி மனசுகிடந்து அடித்துக்கொள்கிறது.

அங்கிருந்து கொஞ்ச தொலைவில் தான் வேப்பலோடையாம்.தோழர் மு.சுயம்புலிங்கத்தின் எழுத்துக்களைப் படித்ததால் ஒருவேளை நான் அங்கு நடந்து திரிந்தது போல பிரம்மை ஏற்பட்டிருக்கலாம்.விளாத்திகுளத்திலி ருந்து ஒருமணிநேரம் மேற்கே பயணமானால் கோவில்பட்டி வந்துவிடும். எட்ட யபுரத் திலிருந்து விளாத்திகுளம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் கண்ணங்கரே லென்று கரிசல்காடு விரிந்து கிடக்கிறது. அதில் கம்பு, குதிரை வாலி, உளுந்து முளைத்துக் கிடக்கிறது.பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக் கிறது. விளைந்து நிற்கும் கம்மங் கதிரில் படகுருவிகள் பறந்துவந்து உட்காருவதும் சொல்லி வைத்தாற் போல நூறு குருவிகள் மேலெழும்பிப் பறப்பதும் மேஜிக் பார்க்கிற சுகானுபவத்தைக் கொடுக் கிறது.

இந்தக்கரிசல் காடுகளை மையமிட்டுத்தான் எங்கள் தோழர் கு.அழகிரிசாமி யின் கதையும்  முளைத் திருக்கிறது என்று நினைக்கும் போது அந்த சாப்பாட் டுக்கடை எங்கிருந்திருக்கும் என்று தேட ஆரம்பிக்கிறது  எட்டயபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் குதிரைகளின் குளம்பொலியும், நகராச் சத்தமும், சாட்டையடியின் சளீர்ச்சத்தமும் அமானுஷயமாய் வந்து போகிறது. கூடவே பாரதியின் நினைவு வருவதை யாரும் தடை செய்ய முடியாது. அதே போல அந்த ஊரில் வைத்து நடந்த பாரதி விழாவில் மேலாண்மை, எஸ் ஏ பி, கந்தர்வன், பீகே,மாது,தமிழ்செல்வன், கோணங்கி, உதயசங்கர், பார்த்தசாரதி, என எக்கச்சக்கமான எழுத்தாளத் தோழர்கள் பங்குகொண்ட கருத்தரங்கக் காட்சிகளின் நினைவுகள் நிலழாடுகிறது.

குறுக்கே குறுக்கே எழுந்து பேசிய கோணங்கியைப் பார்த்து ’மொதல்ல ஒம்பேர மாத்தப்பா,பேசச்சொன்னா பேசமாட்டீங்ற ஆனா ஒருத்தரையும் பேசவிடாம குறுக்க குறுக்க எதாச்சம் குழப்படி பண்ணிக்கிட்டே இருக்கியே ஒக்காரு மொதல்ல’. என்று எஸ் ஏ பி சொன்ன வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் எல்லொரது பேச்சுகளின் மீதும் கேள்விகளைத்தொடுத்த கோணங்கியைப்பார்த்து அடிபுடி சண்டை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நாக்குக் குளரும் பாவனையில் பேசும் கந்தர்வனின் தலைமையில் அன்று பேசிய எல்லோரும் இப்போது பெரிய ஆளுமைகள். ஆனால் எங்களுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும்  பீகே தான் ஆளுமை.

7.2.12

சாதாரண மக்கள் வாழ்க்கைப் பாட்டின் சொற்சித்திரங்கள்...-எஸ் வி வேணுகோபாலன்

காலண்டர்கள், கடிகாரங்கள், பஞ்சாங்கங்கள், ஜாதகக் கட்டுகள், பிரதோஷம், நவகிரக சாந்தி, பரிகாரங்கள், வாஸ்து சாஸ்திரங்கள்... இவற்றின் வாடையே படாத உலகிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள், மரிக்கிறார்கள். இவர்களது வாழ்வியல், நாகரிக உலகம் பேசிக் கொண்டிருக்கும் ஒழுக்க விதிகளின் ஆதாரத்தை அம்பலப்படுத்திவிடும் வல்லமை கொண்டதாக இருப்பது மேலோட்டமான பார்வையில் பிடிபடாது.

தெருவோரத்தில் எதையோ வெறித்துப் பார்த்துப் படுத்துக் கொண்டிருக்கும் ஆள், நடு வீதியில் காது கூசுகிற கெட்ட வார்த்தைகளால் எவனையோ ஏசிக் கொண்டே போகிற ஒழுங்கற்ற முறையில் உடையணிந்திருக்கும் பெண்ணொருத்தி, ரயில் பயணத்தில் திடீரென்று தோன்றி உங்கள் கால்களின் கீழே திரளும் குப்பையைப் பெருக்கிக் கொண்டே சில்லறைக்காக கையை நீட்டும் ஏழைச் சிறுவன்....இவர்களைக் கண்டால் ஏதோ தியேட்டரில் சுவாரசியமாகப் படம் பார்த்துக் கொண்டிருக்கையில்  புரொஜெக்டர் ஒளியின குறுக்கே எழுந்து நிற்கும் எவருடைய நிழலோ திரையில் விழுந்தாற் போல எரிச்சலடைகிறோம் நாம்.

பொற்கொல்லர் வீதியில் ஓடும் சாக்கடை நீரை முகந்தெடுத்து அலசி அலசி வடிகட்டி அதில் பொன் துகள்கள் கிடைக்காதா என்று தேடும் வாழ்க்கையை யாரும் ஏ.டி.எம். எந்திரத்தின்முன் வரிசையில் நின்று அட்டையைப் போட்டுப் பெற்றுக் கொண்டு வருவதில்லை. இந்த சமூகம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கும் அடிப்படை தார்மீக அம்சம் அதில் புதைந்திருக்கிறது. சமூகவியலாளர் பதிவு செய்ய வேண்டியதை, இலக்கியவாதி படைப்புகளாய் வார்க்கிறார். முன்னதில் புள்ளி விவரங்களாக இருப்பது, பின்னதில் மண்டையில் ஓங்கி அறையும் சம்மட்டியாக வெளிப்படுகிறது. எல்லோருக்கும் அப்படியான புனைதல் சாத்தியமாவதில்லை.  உலுக்கி எடுக்கும் கதைகளை எஸ் காமராஜ் இந்தத் தொகுப்பு நெடுக வழங்கி இருப்பது, இதனால் தான் கவனத்தை ஈர்க்கிறது.

"எம்மா கஞ்சி போடுங்கம்மா, அழுக்கெடுத்துப் போடுங்கம்மா.." என்று வீதி நெடுக அலைந்து  தினம் ஒரு வீட்டில் எச்சிச் சோத்தோடு அவமானத்தையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து வயிறு நிரப்பும் வண்ணார் குடும்பத்தின் சிறுவனுக்கு, இந்த ஊரு பூராம் வேற, நாம வேற என்பதை விளக்க முடியாத பெற்றோர் (வேரை விரட்டிய மண்), தெருக்கூத்தில் நடிப்புக்குக் கூட 'செத்த மாடு திங்கிற சின்ன சாதிப்பய, நாயே, போடா, வாடா என்று நம்மாளை எந்த மசுத்துக்கும் சொல்லப்பிடாது (விடுதலையின் ஒத்திகை ) என்று திமிரும் ஆதிக்க சாதி, தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குப் போன தாழ்த்தப்பட்ட சாதிச் சிறுமிக்கு முதலாளியின் காமத்திற்கு ஈடு கொடுக்க வேண்டியதும் ஒரு ஊழியமாக அர்த்தப்படும் கொடுமையின் அடுத்த நுனியில் அதுவே அவளது வாழ்க்கை விதியாக மாறுவதும், அந்த அவமானத் தொழிலில் இருந்து வெளியேறுவதன் வாசலில் அவள் சாமியாடி குறிசொல்லியாக பரிணமிப்பதும் (மருளாடியின் மேலிறங்கியவர்கள்).. என "கருப்பு நிலாக் கதைகள்" தொகுப்பின் சிறுகதைகள்  உள்ளத்தை உலுக்கும் விவரிப்புகளோடு பட்டவர்த்தனமான விசாரணையாகவே உருவெடுக்கின்றன.

தலைப்புக் கதை, ஈவிரக்கமின்றி பாலியல் வேட்டைக்குப் படைக்கப்படும் பெண்ணொருத்தியின் கதையைச் சாட்டையடியாய்ச் சொல்கிறது. கயவனின் வன்புணர்ச்சியின் வலியில் இருந்து அவள் மீளுமுன் கணவன் தனது புனிதம் காப்பாற்றிக் கொள்ளக் குழந்தைகளோடு வேறிடம் போய்விடுவதும், அந்தக் கயவனோடே பகிரங்க வாழ்வை அவள் தொடர இடம் கொடுததும் கொச்சைப் படுத்தப்பட்ட உடலுக்கு மரியாதை மிஞ்சியிராததும் அவளுக்கான கூராயுதங்களைத் தயாரித்துக் கொடுக்கத் தான் செய்கிறது. 

வேதனையான வாழ்வுச் சூழல்களை மட்டுமே சொல்லி நகர்ந்துவிடாத காமராஜின் எழுதுகோல், இவற்றினூடே பனிப்பூக்கள் போல் மின்னும் மனிதநேயத்தை, மாற்றுப் போக்குகளின் தடயத்தை, சவால்களை ஏற்றுப் போராடும் வேட்கையை எல்லாம் உள்ளன்போடு பதிவு செய்கிறது. உலகெங்கும் பாட்டாளி மக்களின் விடியலுக்காகத் தன்னலமற்று உழைக்கும் தொழிற்சங்க ஆளுமைகள் அனைவருக்குமான படிமமாக படைக்கப்பட்டிருக்கும் சம்பத் (சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும்) கதை ஒரு தந்தையும் மகளும் பகிர்ந்து கொள்ளும் எத்தனையோ சின்னச் சின்ன சந்தோசங்களை இழந்திருந்தும், ஒரே ஒரு பார்வையில், லேசாகத் தோலில் சாய்கையில், தலை கோதுவதில் அவற்றை மீட்டெடுக்கும் வல்லமை பற்றி அழகாகப் பேசி பொது வாழ்வை கவுரவிக்கிறது.

நகைச்சுவையோடு சாதாரண மனிதர்களின் அசலான வாழ்வைப் பேசும் "ஆனியன் தோசையும், அடங்காத லட்சியமும்", காதலின் மெல்லிய கணங்களைக் கவிதையாகக் கடக்கும் "ஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச் சட்டினியும்", குழந்தைத் தொழிலாளர் பற்றிய வெற்றுப் பிரகடனங்களைக் கேள்விக்குட்படுத்தும் அதிர்ச்சியான "சிறுபிள்ளைகள் என்னருகே வர தடை செய்யாதிருங்கள்", அன்பின் வெள்ளம் எங்கே வழியுமோ அங்கே கழியும் வாழ்க்கை என முகவரி தரும் "நினைவில் சலசலக்கும் பனங்காடு"...என தொகுதி முழுக்க மீண்டும் மீண்டும் வாசிக்க நிறைந்திருக்கின்றன பதினான்கு கதைகள்.

இரண்டு கதைகள் ஒன்றாகக் கலந்து விட்ட பாட்டுக்காரி தங்கலச்சுமி மற்றும் தொகுப்பு முழுவதிலும் ஆங்காங்கு சரி செய்ய விடுபட்ட  மெய்ப்பு திருத்தங்களால் நெருடும் பிழைகள், சில இடங்களில் இருவரது பேச்சுக்களை ஒன்றாகக் கலந்துவிட்ட  உரையாடல்களால் ஏற்படும் வாசிப்பின் இடையூறுகள் இவற்றைக் குறிப்பிடாதிருக்க இயலாது. என்றாலும் வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த அழகான நூல், காமராஜின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.  தமது தேர்ச்சியான சொற்சித்திரங்களில் அவர் குழைத்துத் தரும் மிகச் சாதாரண மக்களது வாழ்க்கைப்பாட்டின் வித்தியாசமான வாசிப்பு அனுபவம் அது. 

5.2.12

சூழ்ச்சியால் பேசப்படாது போன - அவள் அப்படித்தான்.

இன்று அதிகாலை ஐந்துமணிக்கு ஒரு உள்ளூர் கேபிள் மூலமாக கருப்பு வெள்ளை படங்களில் இருந்து  பாடல் கள் ஒலி_ஒளி பரப்பினார்கள். கடவுள் அமைத்துவைத்த மேடை,கம்பன் ஏமாந்தான்,பன்னீர்புஷ்பங்களே என மிக மிக நெருக்கமான பாடல்களாக இருந்தது. எழுபது  எண்பதுகளின் பாடல்கள். எல்லாமே என் கல்லூரிக்  காலங் களின் பாடல்கள். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் பாடல்கள். ஆனால் அது முழுக்க  கமல காசனின் படங்களாக இருந்ததால் கமலகாசனின் பாடல்கள் என்றுதான்  தமிழ்ச் சினிமா சொல்லும்.

முன்னாடி  கமலகாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது அபூர்வராகங்கள் மற்றும் நிழல் நிஜமாகிறது ஆகிய இரண்டு படங்களால் சிவாஜியிலிருந்து கமலுக்கு உருமாற்றமான ரசனை. இரண்டிலும் ஒரு அசல் கோபக்கார  இளை ஞனாக சித்தரிக்கப் பட்டிருப்பார் கமல். பிற்பாடு அந்த ரசனையை ரஜினிக்கு  மாற்றிக் கொண்டேன் காரணம் இன்னும் அடர்த்தியான கோபம் அவரிடமிருந்து வெளியானதாக நான் நம்பியதால் வந்த வினை இது.

இதெற்கெலாம் சிவாஜியோ,ரஜினியோ,கமலோ காரணமில்லை அதன் இயக்குனர் தான் என்பதை அறிந்த போது எனக்கு அவள் அப்படித்தான் என்கிற படமும் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்கிற படமும் மிக மிக  நெருக் கமான படமாகத் தெரிந்தது. இந்த இரண்டில் அவள் அப்படித்தான் படத்தை குறிப்பிட்டுச்சொல்லியே தீரவேண்டும். தமிழ் இலக்கியச் சூழலில் சில எழுத்தும் எழுத்தாளர்களும்  கவனிக்கப் படாமல் போனது போல அவள்  அப்படித் தான் படமும் கவனிக்கப்படாமல் போனது. அதே காலத்தில் வெளியான பாரதிராஜாவின் படங்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கான தூண்டுகோலாக சித்தரிக்கப்பட்டது. ஆனால் நிஜத்தில் அவற்றில் பெண்கள் பெண்ணடிமைக் கலாச்சாரத்தைத் தூக்கிபிடிக்கும் பழய்ய பதுமைகளாகவே முன்னிருத்தப்பட்டார்கள். அவள் அப்படித்தான் அப்படி யில்லை.

1980 ஆம் வருஷம் சாத்தூர் தனலட்சுமி தியேட்டரில் திரையிடப் பட்டது. அப்பொழுதெல்லாம் சினிமா சகலரையும் விழுங்கும் ஒரு ராட்சஷ பொழுது போக்காக இருந்தது.புதுப்படம் திரையிடப்பட்ட முதல் நாள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்கி அரங்கில் உட்காருகிற தமிழகம் தங்களுக்கான தேவைகள் எல்லாவற்றையும் கண் ணெதிரே பூதாகரமாக ஒளிரும் திரைம் தரும் என்று நம்பினார்கள். இன்னமும் நம்பிக்கொண்டிருக் கிறார்கள். இந்த நம்பிக்கையிலிருந்து  விலகிய இலக்கியம் காலங் காலங் காலமாக தோற்றுப் போய்க்கொண்டே  இருக்கிறது. அவள் அப்படித்தான் படமும் அப்படித்தான். மூன்றே நாட்களில் படத்தைத் தூக்கிவிட்டார்கள். மொத்தம் முன்னூறுபேர் கூடப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.அந்த மூன்று நாளில் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு மூன்று முறைபார்த்தோம்.

இன்றுவரை தமிழ்ச் சினிமாவுக்கென ஒரு நேர்கோடு  இருக்கிறது. அந்தப்படம் அதற்கு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கிறது.

ஒரு பெண்ணைப்பார்த்தவுடன் காதலிப்பது. ஒரு சீப்பு வாங்கவேண்டுமானால் கூட ஆயிரம் முறை யோசிக்கிற சனம் பார்த்த நொடியில் காதலில் விழு வதான கற்பனை. அப்படியே அவளைப் பூஜிப்பது. அவளது மினுக்கல் களை மட்டும் விஸ்வ ரூபப்  படுத்துவது. அவளிடம் மனது என்கின்ற ஒன்றிருப் பதை லாவகமாக ஒதுக்கித்தள்ளுவது.ஒரு பெண்ணை காதலிப்பது , அதற்கு எதிரான சவால் களை சாதுர் யமாக எதிர் கொள்வது. அவங்கப்பனைக் கொன்றுவிட்டு அவளை  மண முடிப்பது.

கொடுமை.  ஒரு பெண் இந்த உலகத்தில் முதன் முதலில் நெருக்கமாகவும் பிரியமாகவும் இருப்பது தனது தகப்பனிடம் என்கிற அறிவியல் உண்மையை ஹீரோயிசச் சாணியால் மூடி மறைத்த சினிமாக்கள் தான் இன்னும் அறி யாமையிலிருந்து மீள விடாமல் நம்மை அமுக்குகிறது.

அவள் அபபடித்தான் அப்படியில்லை. ஒருமுறைதான் காதல் வரும் எனும் சப்பைச் சிந்தனைகளை. தொட்ட வனையே கட்டிக் கொள்ளவேண்டும் என்கிற அதி பயங்கர சர்வாதிகாரச் சிந்தனைகளை மௌனமான அடியால் நொறுக் குகிற படம் அது. காதலன் காதலி நுனி விரலைத் தொட்டதும் மின்சாரம் பாய்ச்சுகிற கற்பனைகள் இல் லாத படம். ஒரு பெண்ணின் அவயவங்களைத் தொட்டுப்பார்க்க விடலைப் பையனுக்கும் ஆசைவரும்என்பதைச் சொல்லும் படம். அதை ஒரு சின்ன ஷாட்டில் சொல்லுகிற படம். காதலை பூஜை அறை யில் வைக்கிற சரக்காக ஆக்காத படம். ஆகவே அந்தப்படம் மக்களால் பெரி தும் பார்க்கப்படாமல் போனது.

ஆனால் அதிலும் நாம் சொல்லச் சின்னசின்னக் குறைகள் இருக்கிறது  அவளைப் பற்றி பேசுவது ஒரு ஆண் என்கிற குறைதான். அது எதனால் வந்த தென்றால் அதை உருவாக்க ஒரு பெண் இயக்குநர் இல்லை என்பதே. பெண் கள்  தனி யாகச் சினிமாவுக்குப் போகமுடியாத ஒரு மறைமுக தாலிபான் மனோபாவம் இருந்த இருக்கிற யுகத்தில் நாம் பெண் இயக்குநர்களுக்கு எங்கே போக?

பெண் மட்டுமல்ல இந்த சினிமா ஊடகத்தின் வழியே பேசப்படாது போன குரல்கள் ஒரு கோடியிருக்கும்.அதற்கு மேலும் இருக்கும். அந்தக் குரல்கள் தியேட்டர் இருளில், இடைவேளைக் காண்டீன் சலசலப்பில்,கழிப்பறை களில் சிதறிக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறன. அவற்றைப் பேசவிடாமல் குரல் நெறிக்கும் வகையில் வியாபார உத்திகள்,அரசியல் சூழ்சிகள்,தொழில் நுணுக்கங்கள், இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கதைகள் வற்றிப்போய் மீண்டும் மீண்டும் கழிசடைக் கருத்துள்ள ரஜினி படங்கள் மறு அவதாரமெடுக்கின்றன ரத்த பீஜன்களைப்போல.

2.2.12

இன்றைக்கும் ஒத்துப்போகும் பழங்கதைகள்


அது தாது வருசப் பஞ்சம்.திருடர்கள் பணம்,பொன்,பண்டங்களைத் திருடு வதை  விட்டு விட்டு.ஆக்கிவைத்த கஞ்சிப்  பானை களைக் களவாண்டு போனர்கள்.தேசம் முழுக்க பசியே வியாபித்திருந்த பஞ்சம் தலைதூக்கி ஆடியது. அவன் சொந்த ஊரைக் காலி பண்ணிவிட்டு சோறு கிடைக்கிற இடம்தேடி காடுமேடெல்லாம் அலைந்தான். பலநாள் அலைந்து கண்கள் பஞ்சடைத்துப் போய் ஓரிடத்தில் மயங்கி விழுந்தான்.

அந்த நேரத்தில் அங்குவந்த குடியானவன் ஒருவன்அவனைத் தூக்கிக் கொண்டுபோய் கண்முழிகக வைத்தான். கதைகேட்டான்.சொன்னான். இப்போதைக்கு என்னிடம் கொஞ்சம் கேழ்வரகும் வேட்டையாடிக் கொண்டு வந்த கொக்கும் இருக்கிறது சமைத்துத் தந்தால் சாப்பிடுவாயா என்று கேட்டான். ஆபத்துக்குப் பாவம் இல்லை உயிர் கொடு என்றான். கேழ்வரகை திரித்து,கொக்கைச் சமைத்துக் கலியும், கறியும் கொடுத்தான்.

அங்கேயே தங்கி விடுவதெனத் தீர்மானித்து அவனிடம் சொன்னான்.சரி என்னுடன்  தொழிலுக்கு வருவாயா எனக் கேட்டான்.சரி சொன்னான்.எனில் இன்றிரவு தொழிலுக்குப் போகலாம் என்று சொன்னான்.ஏன் இரவு என்று கேட்டான். பொறு அவசியம் வரும்போது சொல்கிறேன் என்றான்.இரவில் ஒரு வீட்டருகே போனார்கள். சன்னலை உடைத்து உள்ளே போ அங்கிருக் கும்  சாமான்களைத் தூக்கிக் கொண்டுவா என்று சொன்னான்.திருடுவதா மாட்டேன் என்று சொன்னான்.

’அப்ப என் கொக்கும் கலியும் கக்கு’
 என்றானாம்.

30.1.12

பராக்குப் பார்த்தல் அங்கும் இங்கும் - யேனம் தொழிலாளர் கிளர்ச்சி,மணிப்பூர் தேர்தல்

உத்திரப்பிரதேசத்தில் குசுப்போட்டாலும் அது தேசியப்பிரச்சினை யாகும். மணிப்பூர் போன்ற மாநிலங்களில் எவ்வளவு பெரிய சோகம் நிகழ்ந்தாலும் அது ஒருவரிச் செய்தியாகக் கூட இடம்பெறாது.இதுதான் இந்தியாவின் சன நாயகம்,பத்திரிகை அனுகுமுறை,ஊறிப்போன மந்தை நடைமுறை. வீட்டில் போரடித்து நேரம் போகவில்லை யென்றால் எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேசம் போய்விடுவார். அங்குபோய் நின்றுகொண்டு தான்  அரசி யல் படிப்பார். அதற்கு காரணமும் அங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை தான். ஏன் உத்திரப் பிரதேசம் ஏன் மணிப்பூர்.

இந்த இரண்டிலும் உள்ள பாராளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் இந்த ஒப்பீட்டுக்கு காரணம். உபியின் மொத்த பாராளுமன்ற  உறுப்பினர்கள் 80. மணிப்பூரின் மொத்த பா ம உ எண்ணிக்கை- 2. 1958 ஆம் வருடம் தொடங்கி இன்று வரை  மணிப் பூரில் கிட்டத்தட்ட  ஒரு மறைமுக ராணுவ ஆட்சி நடை பெறுகிறது. இந்த நிமிடம் வரை அங்கு அடக்குமுறையும், அதற்கெதிரான போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கிறது. அது பெரும்பாண்மையான இந்தி யர்களுக்கு தெரியாது.அது பெரும்பாண்மையான  படித் தவர்களுக்கு தெரி யாது.அது பெரும்பாண்மையான அரசியல்வாதிகளுக்கு தெரியவே தெரி யாது.தெரிந்துகொள் வதால் எந்த லாபமும் இல்லையென்கிற கணக்குத்தான் இதற்கெலாம்  மூலகாரணம்.

வெறும் 2 எம்பிக் கள் மட்டுமே இருக்கிற அதற்கென மெனக்கெட 63 வருடங் களாக நமது அரசுக்கு நேரமில்லை. தங்களின் வலி, வேதனை, கஷ்டம், ஆகியவற்றை கண்டு கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் அவர்களுக்குள் இருக்கிறது. அந்த நேரத்தில் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்தியமக்கள் என்று  சொல்லு வதும். எல்லோரும் உடன் பிறந்தவர் என்று சொல்லுவதும்.,பாரத்மாதாகீ ஜே சொல்லுவதும் அர்த்தமில் லாததாகி விடும். ஒதுக்கி வைக்கப்பட்ட அந்த மாநிலம் தனது வெறுப்பை பல்வேறு வடிவங்களில் சொல்லிக் கொண்டிருக் கிறது. ஆயுதத்தின் மூலமா கவும் வெளி உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பதுதான் சமீபத்திய தேர்தலில் நடந்த வன்முறையும் அதில் பலியான ஆறு மனிதர்களும். ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரம் பெரும்பாணமையால் தீர்மானிக்கப்படுகிறது. அதற்காக அந்த அரசு பெரும்பாண்மை மக்களுக்கு மட்டுமானது என அர்த்தமில்லை.

யேனம் என்கிற ஊர் புதுச்சேரி மாநிலத்துக்குச்சொந்தமானது. அங்கிருந்து கிட்டத்தட்ட எண்ணூறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கிற அந்த ஊரைச்சுற்றி  கேரளா,ஆந்திரா,கர்நாடக எல்லைகள்தான். இது சனநாயகத்தின் இன்னொரு வியப்பு. ஏதாவதொரு மாநிலத்தோடு சேர்த்த்தால் என்ன கேடு வந்துவிடுமென்று  தெரிய  வில்லை. பழய்ய நடைமுறையைக்கைவிடாமல் பிரெஞ்சுக்காரார்கள் அடிமைப்படுத்தியிருந்த போது எப்படி இருந்ததோ அதே நிலைமை தான் இன்னும் நீடிக்கிறது.

அந்த யேனத்தில் இருக்கிற ரீஜென்சி செராமிக் டைல்ஸ்  நிறுவ ணத்தின் ஒப்பந்த ஊழியர்கள் ஒரு மாதகாலமாக போராடிவருகிறார்கள். போராட் டத்தில் ஈடுபட்ட தலைவர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. கைதான வர்களில் முரளிமோகன் என்கிற தலைவர் கொலை செய்யப்பட்டிருக் கிறார். அதற்கெதிரான போராட்டம் வன்முறையாகி யிருக்கிறது. போலீஸ்காவலில் இறந்தவருக்கு மாரடைப்பாம் அதனால் இறந்துவிட்டாராம். வன்முறையில் நிறுவண அதிகாரி கொல்லப்பட்டது ஒரு குறிப்பிட்டவர்களின் தூண்டுதலால் நடந்த கொலையாம்.

எந்தக் காலத்திலும் செய்தி ஊடகங்கள் உழைப்பாளிகளுக்காகவும்,  அடித் தட்டு  மக்களுக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுவதில்லை. தாங்கள் விளம் பரப்படுத்தும் நடு நிலை என்கிற வார்த் தைக்காகவாவது உண்மையாக நடக்க வேண்டாமா? வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பம் தொழிலை அபிவிருத்தி பண்ணுவதோடு அது அடித் தட்டு மக்கள் வரைப்போய்ச் சேர்கிறது இந்த பிரக்ஞை  இல்லாமல் இன்னமும் இருட்டடிப்பு வேலைகளில் ஈடுபட முடி யாது. சூழ்சியும்,இருட்டடிப்பும்,வஞ்சகமும்,பாரபட்சமும் அதிகாரத்தின் ஆயுத மாக இருக்கும் போது, தெருவில் கிடக்கும் கல்லெல்லாம் உழைப்பவரின் ஆயுதமாகும்.

26.1.12

மருளாடியின் மேலிறங்கியவர்கள்

கருப்பு நிலாக் கதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிற சிறுகதை.மீள்பதிவு.

முக்குலாந்தக்கல்லில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையத்துக்கு கடைசிப் பஸ்ஸைப்பிடிப்பது போல ஒரு அவசர நடை நடந்துவிட்டு, அதே வேகத்தில் திரும்பி முக்குலாந்தக்கல்லுக்கு வரும் அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. முகத்தில் பறவி இருக்கும் மஞ்சள், நெற்றியில் பதிந்திருக்கும் செந்துருக்கப் பொட்டுக்கும்  சம்பந்த மில்லாத கிராப் தலை.  நாலு அடி ஐந்தங்குள உயரம். அவளின் வயது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்து  எட்டிருக் கலாம். ஆனால் நூறு வயது வாழ்ந்து கடந்து விட்ட கால முதிர்ச்சி அவளின் முகத்தில்  ஒட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் உலகத்தை அலட்சியப் படுத்துகிற அந்த பார்வையில் ஆயிரம் ஞானிகளின்  ஒளி குடிகொண்டிருக்கிறது.கடந்துபோன ஒரு நவீன வாகனத்துக்கார முதலாளியின் பார்வை இவள் பக்கம் திரும்பவில்லை. அது குறித்து அவளுக்குக் கவலை இல்லை. அந்த முதலாளி மாதிரியே நகரத்துப் பிரதானச் சாலையில் பல ஆண்கள் அவளைக் கடந்து போகிறார்கள். வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கிறது. செருப்பிலாத காலில் சாலையோரத்து மணல் ஒட்டிச்சிதற்கிறது. எல்லோர் பாதங்களையும் பதற வைக்கிற அந்தச்சூடு அவளை ஒன்றும் செய்யத்திராணியற்றுப் போனது.


காவல் நிலைய வாசலில் உட்கார்ந்திருந்த செவத்த வள்ளி இவளைக்கூப்பிட்டு ரெண்டு வெத்திலையையும் உடைத்த பாதி பான்பராக்கும் சேர்த்துக்கொடுக்கிறாள்.

'' சீ கருமம், இதப்போயி '' என்று தட்டி விடுகிறாள்.
'' ம்ம்ம்ம்.. ரெம்பத்தா சுத்தக்காரி மாதிரி சிலுப்பிகிராத ''
'' ஏ... சொன்னாலுஞ் சொல்லாட்டாலு நா சுத்தக்காரி தா அந்த ஆத்தாவ செமக்கமில்ல ''
'' ஆமா இடிச்சிப்போட்ட பழய டேசன் கக்கூசக்கேட்டாச் சொல்லும் '' 
'' சீ நாத்தம் பிடிச்சவா ஓண்ட மனுசி பேசுவாளா ''
 
சுருக்கென்ற கோபத்தில் அங்கிருந்து நடையைக் கட்டினாள். ப்ரியா ஸ்டுடியோவுக்குள் நுழையும் போது யாரோ கேலி சொல்வது கேட்டும் கேட்காமலும் நுழைந்தாள். உள்ளே மாடன்,  அலங்காரிக்கப்பட்ட சின்னக்குழந்தையை மரப்பெஞ்சில் உட்கார வைத்து படம் பிடிக்க குனிந்து, குனிந்து வசம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதும் கூட அங்கிருக்கிற யாரும் அவளைக் கவனிக்கவில்லை. ஏதாவது பேச்சுக் கொடுத்தால் உட்கார்ந்துவிடும் அபாயம் உணர்ந்த, கம்ப்யூட்டர் முத்து, தீபா யாருமே அவளோடு பேசவில்லை எல்லோர் முகத்தையும்  பார்த்து விட்டு திரும்பவும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அந்தக்குறுகிய வாசலின் வழியே ஒருவாரத்திற்கு முன்னாள் படம் எடுத்த எஞ்சினியரிங் மாணவன் வர யோசித்து நின்றதைக் கவனித்த தீபா ''சச்சி கொஞ்சம் தள்ளிக்கோ'' சொல்லவும். அய்யய்யோ பிள்ளாண்டன் நிக்குதா உள்ளபோங்க சாமி என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தாள். அந்தக் கம்ப்யூட்டர் மாணவனும் எஞ்சினியரைவிடப் பெரிய பட்டம் கிடைத்த  சந்தோசத்தோடு சாமிப் பட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளே போனான்.

இது ஒரு அன்றாட  வாடிக்கை தான் என்றாலும் அந்த புகைப்பட நிலையத்தோடு சம்பந்தமில்லாத ஒரு பெண்  அங்கு வந்துபோகிற எல்லோரோடும் மிக இயல்பாகப் பேசுகிற லாவகம் கற்றுக் கொண்டதும், வியப்பானவை. இன்னும் சில சாவகாசமான பொழுதுகளில் புகைப்பட நிலையத்தின் நடுக்கூடத்தில் செந்தில், மாடன், சூரியா, இன்னும்சில இளவட்டங்கள் உட்கார்ந்திருக்க நடுவில் உட்கார்ந்து கொண்டு வலமை பேசிக்கொண்டிருப்பாள் சச்சி. அந்த சச்சி யார் என்கிற ஒரு கேள்வி புதிதாய் நுழைகிற எல்லோருக்குள்ளும் எழுந்து அடங்கும்.


சரஸ்வதி என்கிற சச்சி.


மேட்டமலையில் ஒரு ஒதுக்குப்புறத்தில் பத்து வீடுகளுக்கும் குறைவாக இருந்தது அந்தக் குடிசைகள். அதில் ஒரு குடிசையில்  நாள், பொழுது, நட்சத்திர தேதிகளுக்குள்ளும் பஞ்சாயத்து ஜனனப்பதிவேடுகளிலும் பிடிபடாமலும் பதிவாகாமலும் பிறந்த சரசுவுக்கு ஒரு குடும்பம் இருந்தது. ரெண்டு வேளைச்சோறு  சாப்பிடு வதற்கு ஊரின் ஒட்டு மொத்த அழுக்கைச் சரிசெய்ய வேண்டும்.  வெயிலோடும், புழுதியோடும், பசியோடும் கடந்துபோன பால்யப்பருவத்து பசுமை நினைவுகளில் மிக அறிதாக விளையாட்டும், மழையும், சில இனிப்பு களும் தவிர வேறு ஏதும் பிரமாதமாக இல்லை.  மானம் பார்த்த இந்த கந்தக பூமியில் விவசாயம் காய்ந்து போனது.  மத்தியில் ஆட்சி செய்த  ஜனதா அரசு தீப்பெட்டிக்கான உற்பத்தி வரியைக்குறைத்து, குடிசைத் தொழிலாக அறிவித்தது அந்த எழுபதுகளில்தான் பருத்தி, மிளகாய் விளைந்த கிராமங்களில் தீப்பெட்டிகள் முளைக்கத் தொடங்கியது. விவசாயம் செய்த பண்ணையார்கள் தீப்பெட்டி முதலாளிகளானார்கள். அபோது எல்லா பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பத்து குழந்தைகளைப் போலவே இலவசக்கல்வி, இலவச உணவு எலாவற்றையும் தாண்டிய வறுமையை எதிர்கொள்ள உழைக்கப்போகிறாள் சச்சி.


கட்டை அடுக்குவதற்கும், தீப்பெட்டி ஒட்டுவதற்கும் கச்சாப்பொருள்களை வீடுகளில் கொண்டுவந்து  கொடுத்து விட்டு, அதைத்தயாரித்து முடித்த பின்னால் எடுத்துக் கொள்வதற்குமான ஏற்பாடுகள் இருந்தது. ஆனால் அப்படி உட்கார்ந்து வேலை பார்க்கக்கூட இடவசதியில்லாத வீடுகளில் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய தீபெட்டி ஆலைகளுக்கு உழைக்கப்போவார்கள். காமராஜர் மாவட்டத்து பெண்களின் சந்தோசம் துக்கம் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கொட்டிக் குவிக்கப்பட்ட இடங்களாக தீப்பெட்டி ஆபீசுகள் மாறிக்கொண்டிருந்த காலம் அது.

ஒரே ஒரு ஆரம்பக் கல்வி நிலையம் இருக்கிற ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆபீசுகள் இருக்கிற வினோதம் உண்டு. புலர்ந்தும் புலராத இளங்காலையில் எழுந்து முகம் துடைத்து தீப்பெட்டி வாசத்துக்குள் நுழையும் அவர்கள் பொழுது சாயும் போதுதான் வீடு வரமுடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் ஓடுகிறகிற பம்ப்செட் தேடி அலைவார்கள். மொத்தமிருக்கிற ரெண்டு அல்லது மூன்று ஜோடி உடைகளை துவைப்பார்கள், குளிப்பார்கள். பாதி கந்தக வாசமும் பாதி சோப்பு வாசமுமாக திங்கள் கிழமை வந்துவிடும். வீடு என்பது தூங்குவதற்கும் உணவு தயாரிப்பதற்குமான இடம் மட்டும் தான். மற்றபடி கனவு, காதல் துக்கம், சந்தோசம், சண்டை எல்லாவற்றையும் உள்ளடக்கிய உலகமாக தீப்பெட்டி ஆபீஸ் மட்டும் தான் இருக்கும்.


ரெண்டு பெண்களின் துணையோடு மத்தியான வேலைகளில் ஒருத்தி வீடு திரும்பினால், ஒரு கந்தகப்பூ மலர்ந்து விட்டது என்பது கோனார் நோட்ஸ் இல்லாமல் புரிகிற விசயமாகும். இதுகூட புரியாத சச்சிக்கு ராக் ரூம் இருட்டே இரவாகியது. பொதுவாக ஊர் சுத்தம் செய்யும் குடும்பத்து குழந்தைகளும் சுத்தம்செய்கிற வேலைக்கு நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.  எல்லோரும் போன பிறகு ''ஏத்தா சச்சி நீ இரு'' என்று  முதலாளி அவளை இருக்கச் சொன்னதற்கு அதுதான் காரணம் என்று நினைத்தாள். போகும் போது அலாதியாக கொஞ்சம்பணம் கிடைக்கலாம் என்னும் எதிர்பார்ப்பிமேல் மண் விழுந்தது. ராக் ரூமில் அந்த கணத்த எண்பது கிலோ உருவம் அவள் மேல் கிடந்தபோது அது காமம் என்று அறியாத பருவத்திலிருந்தாள்.

எதிர்க்க வலுவற்ற சமூகத்தில் பிறந்த அவளுக்கு அந்தக்கொடுமை கூட முதலாளிகளுக்கு செய்கிற ஒரு ஊழியமென்று  நினைத்திருந்தாள். அது போலவே பல முறை அது நடந்தது.  சாக்கடை சுமக்கிற, மலம் அள்ளுகிற, பொறுமையோடு சகித்துக்கொண்டாள். அதன் பின்னாள் முதலாளி மிளகாய்த் தோட்டத்துக்கு வேலைக்கு வரச்சொன்னார் அங்கேயும் கூட அவளுக்காக காமவெறி காத்துக்கிடந்தது. கால மாற்றமும் உடல் மாற்றமும் அவளுக்கும் கூட இச்சைகளை உண்டுபண்ணு கிற வேலையைக்காட்டியது. இப்போது முதலாளி எப்போது கூப்பிடுவார் என்கிற எண்ணம் உருவானது. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று கந்தக வாசமும், கழிவு, குப்பை வாசமும் சூழ வேலை பார்க்கிற நிர்ப்பந்தம்அவளுக் கில்லாமல் போனது. இரண்டு அந்த வேலைகள் இல்லாத போதும் கூட அவளுக்குத் தேவையான  எல்லாம் கிடைத்தது.  மகள் கெட்டுப்போன சேதியைக் கடைசியில் தெரிந்துகொள்கிறவர்கள் பெற்றோர்கள் தான் என்பது கிராமத்து சொலவடை. கடைசியாகத் தெரிந்த போது அவள் கருவுற்றிருந்தாள்.

அடுத்த சாதிக்காரன் கிண்டல் பண்ணினால் கூட போட்டுத் தள்ளுகிற சமூகக் கட்டமைப்புள்ள இந்த பூமியில் ஒரு பெரிய பாலியல் பலாத்காரம் அதுவும் அறியாத வயசில் நடந்திருக்கிறது அதுகுறித்துக் கோபப்பட வேண்டிய குடும்பம், மாற்று யோசனை மட்டுமே யோசிக்க முடிந்தது. கருவைக்கலைக்க சொந்தக்காரர்கள் ஊருக்கு அனுப்பினார்கள்.  அங்கேயும் ஆண்டைகளும், ஆதிக்கமும் குறைவில்லாமல் இருந்தது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அவள் அங்கேயும் ஆதிக்க சாதிப்பையன்களுக்கும் பெரியவர்களுக்கும் பொழுது போக்க கிடைத்த சாவடிபோல், பாஞ்சாம்புலி போலாகிப்போனாள். மீண்டும் பழைய ஊருக்கு வந்த போது இருந்த கொஞ்ச நஞ்ச மானமாவது மிஞ்சட்டும் என்று பெற்றோர்களே பிராது கொடுத்து விபச்சார வழக்கில் சிறைக்கு அணுப்பினார்கள். சட்டி சுடுகிறது என்று தப்பித்துக் குதித்து அடுப்பில் விழுந்த கதையாகியது சச்சியின் பொழப்பு. சிறைவாசம் எழுந்துவரமுடியாத புதைகுழியானது. அங்கிருந்து வெளி வரும்போது ஒரு புடம் போட்ட தங்கமாக வருவாள், மறு வாழ்வு வாழ வைக்கலாம் என்ற இன்னொரு மூட நம்பிக்கையும் தகர்ந்து பெற்றோருக்கு. மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.


1985 வருசம் முதல் 1990 வரை ஒரு ஐந்தாண்டுகள் நகரத்தின் பிரபலங்களில் ஒன்றாகிப்போனாள்.அவளைப் பற்றியதான தகவல்கள் எந்த சுவரொட்டியிலும், எந்த ஊடகத்திலும் விளம்பரப் படுத்தப் படவில்லை  எல்லோ ருக்கும் அவளைப்பற்றித் தெரிந்திருந்தது. அவளைக்கடந்து போகிற யாரும் எளிதில் தவிர்க்க முடியாத வசீகர தோற்றம், இருபத்து நான்கு மணிநேரமும் வாடாத வரம் வாங்கியது போலவே அவள் சடையேறும்  மல்லி கைப்பூ, என வளைய வளைய வந்தாள். அந்தக்காலத்தில்தான்  எம்ஜியார் இறந்துபோனார். அப்போது மூன்று நாட்கள் தமிழகத்து நகரங்கள் சகஜ வாழ்கை இழந்து வெறிச்சோடிக் கிடந்தன. ஜனங்கள் போக்கிடமில்லாமல் வீடுகளுக்குள் அடைந்துகிடந்தார்கள். கடைகள்  மூடிக்கிடந்தன. மூடிய கடைகளின் முதலாளி நான்கு பேர் ஒரு காரில் அவளை எங்கெங்கோ கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்களில் மூன்றுபேர் நல்ல குடிகாரர்கள்  அப்படி யான நேரங்களில் அவளும் குடிப்பது தவிர்க்க இயலாததாகிவிடும்.


குடிப்பழக்கம் ஒரு புது அனுபவமாகவும், தாங்கும் சக்திக்கான மாற்று மருந்தாகவும் அவளுக்கு அறிமுகமாகியது. அதை அறிமுகப்படுத்திய மாரிக்கிழவி சரக்குச் சாப்பிடுவது பார்க்கப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். சும்மா பச்சத்தண்ணி குடிக்கிற மாதிரிக்குடித்துவிட்டு ஒரு செருமல் கூட இல்லாமல் இயல்பாகிவிடுவாள். குடித்த சரக்கின் வாசனை தவிர குடித்ததற்க்கான் எந்த தடயமும் அவளிடம் இருக்காது. முதலில் கொமட்டிக்கொண்டு வந்தாலும் பின்னர் கொஞ்சநாளில் சச்சியும் பழகிக்கொண்டாள். அப்போது கேட்ட சரக்கு கேட்ட துணிமணி,வாரி யிறைக்கிற பித்துப்பிடித்த பணக்காரர்களாக அவள் பின்னாலே அலைந்தார்கள். ஆனால்  யாரிடமும் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்கிற யோசனை அப்போது அவளுக்குத் தோன்றவேயில்லை. இந்த உடல், அதன் வசீகரம், அதன் மேலுள்ள ஈர்ப்பு எல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். அப்போது வயிறும் வாழ்கையும்  வழி மறிக்குமே என்கிற தூரத்து சிந்தனை இல்லாதவளாக காலம் கடத்தினாள்.

நகரத்து பிரமுகர்களும் அவர்களது மகன்களும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அவளைத் தேடி வந்துபோகிற நாட்களில்  அவளுக்கு கர்வம் கலந்த புன்னகை குடிகொண்டிருக்கும். அதை மாரிக்கிழவியிடம் சொல்லிச் சிரித்திருப்பாள். தன்னைக்கடந்து போகிற யாரும் உற்றுப்பார்த்தாலோ அசடு வழிந்தாலோ ''இங்கஎன்னதொறந்தா கெடக்கு நாரக்கருவாட்ட பூன பாக்குற மாறி பாக்கான்'' என்று எடுத்தெறிந்து பேசுவாள். பார்த்தவன் தூரத்தில் போனதும் கெக்கலிட்டுச்சிரிப்பாள். அப்போது இந்த உலகம் தன் காலுக்கு கீழே கிடக்கும் ஆங்காரத் தோடு அலை வாள். குண்டு மஞ்சள் அறைத்துக் குளிக்கிற போதும் வாசனைச்சோப்புப் போடுக் குளிக்கிறபோதும் அவளே ரசிக்கிற இளமை மீது இன்னும் கூடுதல் கர்வம் மேலோங்கும்.தெருவுக்குள் யாரேனும் நடத்தை பற்றிப்பேசினால் காளியாட்டம் ஆடி எதிராளியை நிலைகுலையச் செய்வாள். அந்தச் சொல் மீண்டும் ஒரு முறை தன்னை நோக்கி வராதபடி வேலி போட்டுக்கொள்கிற உத்தி அது.

ஒரு நாள் திருச்செந்தூர் முருகன் கோவில் காட்டேஜுக்கு கூட்டிக்கொண்டு போயிருந்தார்கள். மூன்று நான்கு பிரமுகர்களோடு இரவு குடியும் கூத்துமாகக் கழிந்தது. விடிகிற நேரம் மிகையான போதையில் தூங்கிப்போய் விட்டாள் கண்விழித்தபோது மீண்டும் இருட்டியிருந்தது. எவ்வளவு குடித்தோம் யார் யார் கூட இருந்தார்கள் என்கிற எதுவும் மனசில் இல்லை. ஊரின் மிகப்பெரிய புள்ளி ஒருவரின் மூஞ்சியில் காரித்துப்பியது மட்டும் நினைவிலிருந்தது. உடல் முழுக்க அடிபட்ட காயமும், நகப்பிராண்டல்களுமாக வலித்தது. அதோடு தலை வலியும், பசியும் கலந்த கிரக்கத்தில் நீண்ட நேரம் காத்திருந்தாள். உடன்  வந்த யாரும் இல்லை. முதல் நாள் இரவோடு இரவாக அவர்கள் ஊர்போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நெடுநேரம் அழுகையும் வேதனையுமாக உட்கார்ந் திருந்தாள். கைபிடித்தபடியே நடந்து வரும் அய்யாவும், மடிக்குள் வைத்து பேன்பார்க்கிற அம்மாவும், காரணமில் லாமல்  நினைவில் வந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் வந்தது.  அங்கிருந்து பேருந்து நிறுத்தம் வந்து சில பேரிடம் சொல்லிப் பணம் கேட்டாள் பலனில்லை. பிறகு ஒரு குதிரை வண்டிக்காரர் எந்தப்பிரதி உபகாரமும் இல்லாமல் அவளுக்கு சாப்பாடும், பஸ் செலவுக்குப்பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். திருச்செந்தூரிலிருந்து திரும்பி வருகிற போது இவ்வளவு நாள் தேக்கி வைத்த வீராப்பும் வைராக்கியமும் உடைந்தது. அப்போது ஒரு ஆண் துணை தேவை என்று உணர்ந்தாள். அதுவும் தாட்டிக்கமான ஆண் துணை.


அந்தக் காலங்களில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த அம்மாசி தான் அவளுக்கு துணையாளாகவந்தான். முதலாளி மார்கள் கூப்பிடும் இடத்துக்கு கூட்டிக்கொண்டு போவதற்கும். திரும்பக்கூப்பிட்டு வருவதற்கும் அவனுக்கு சரக்கும் சம்பளமும் உண்டு. அவள் வைக்காத விலை, அவள் கேட்காத பணம், இரண்டுமே மறை முகமாக அவனுக்குச் சாதகமாகியது. சச்சிக்கோ அது குறித்து  ஏதும் தெரியாது. ஆனால்  முதல் முதலில் அவளுக்காக ஒரு ஆண் மெனக்கிடுவதை, சாப்பாடு வாங்கித்தருவதை, டிக்கட் போட்டு கூட்டிப்போவதை. பயணங் களில் அருகிருந்து, தூங்கும் நேரங்களில் தோள் தருவதை ஒரு வித்தியாசமாக உணர்ந்தாள்.  காலம் கடந்து , காமம் கடந்து ஒரு சிநேகம் முளைக்கத் தொடங்கியது அப்போது தான் எல்லோருக்கும் வருகிற குடும்ப ஆசை அவளுக்கும் வந்து வந்து போனது. ஆனால் அம்மாசிக்கோ கல்யாணம் ஆகி வயசுக்கு வருகிற பருவத்தில் பெண்ணிருந்தது.

இந்தக்காலத்தில் பல முறை கருவேந்திக்கொண்டாள்,  அதைக்கலைக்க நாட்டு மருத்துவச்சிகளைத் தேடிப் போனாள். அப்போது மாரிக்கிழவிதான் அவளோடு கூட இருப்பாள்.எப்போதுமே துணையாக இருந்தவள் காசில்லாத நேரங்களில் ஒரு டீ வாங்கி பகிர்ந்து சாப்பிடுகிற ஒரே ஜீவன் அவளுக்கு மாரிக்கிழவிதான்.சில நேரம்  அம்மாசி வந்து செலவுக்கு பணம் தந்துவிட்டுப் போவான். அதிக கருக்கலைப்பினால் அதிக உதிரம் விரயமாகியது. அதிக உதிர விரயத்தால்  உடலில் பெலமில்லாமல் போனது. சாப்படும் சாராயமும், அம்மாசியின் தயவால் கிடைத்தது. ஒரு குற்ற வழக்கில் மூன்றுமாதம் சிறைக்குப்போன அம்மாசியில்லாத அந்த நாட்களில் தொழிலும் மந்தப்பட்டுப்போனது. அறைவயிற்றுக்கஞ்சிக்கு கூட அவதிப்பட்டாள். அப்போது நகரில் இவளுக்கு போட்டியாக இன்னும் சில பேர் அறிமுகமானர்கள்.

வேற்று ஊர்களில் இருந்து தருவிக்கப்பட்ட அவர்கள் தொழில் நிமித்தமாக இரவு வந்து  தங்கி பகல் திரும்புகிறவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு தனது போட்டிக்காரியைப் பார்க்க விடிய விடிய கிருஷ்ணன் கோயில் பஸ் நிறுத்தத்தில் காத்துக்கிடந்தாள். வாடிக்கையாகச் சவாரி செய்கிற ஆட்டோ  ஓட்டுநரிடம் அவள் எப்படியிருப்பாள் என்று கேட்டாள். நல்ல ஒசரம் நல்ல நெறம் என்று சொன்னதும் வதங்கிப்போனாள். மாரிக்கிழவியிடம் சொல்லிச் சொல்லி புளம்பிக்கொண்டேயிருந்தாள்.   வயித்துப்பாட்டுக்கு வேறு எதாவது செய்யென்று சொல்லிவிட்டு மாரிக்கிழவியும் செத்துப்போனாள். ''ஆமா அப்பனு ஆத்தாளு ரெண்டு தேட்டரு, ஒரு சாராயக்கடை, நாலு தீப்பெட்டியாபீசு உட்டுட்டு செத்துப்போனாகளாக்கு இந்தத்தொழில விட்டுட்டு வேற தொழில் பாக்க ?  திருப்பியு அந்தப் பீயள்ற பொழப்புத்தான  த்தூதூ....'' என்று காரித்துப்பி விட்டு விபச்சாரத்துக்குக் கிளம்பினாள்.

மிக உறுதியாக இனி சம்பாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினாள். ஆனால் அவளிடம் இருந்த ஒரே மூலதனமான அந்த இளமை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு கடந்து போய்க்கொண்டிருந்தது.  கிராக்கியில்லாத எந்தப்பொருளும் லாபம் சம்பாதிக்காது என்பதே வியாபார விதி. அந்த விதியின் பிரகாரம் அவள் மீண்டும் வயிற்றுப்பிழைப்புக்காக மட்டுமே சம்பாதிக்க முடிந்தது.  சீனி நாய்க்கர் புரோட்டாக்கடையில் காசைக்காட்டித்தான் சாப்பிட முடிந்தது. சில நாட்கள் அதுவும் இல்லாது பட்டினியாய்க் கழிந்தது. அம்மாசி வரும் வரை நாட்கள் நகருவது வேலிப்புதருக்குள் நடக்கிற மாதிரியே இருந்தது. அம்மாசி வந்தபிறகு மூன்று நாள் வீட்டில் சண்டை நாடந்ததாகவும் அங்கு அவனை வீட்டுக்குள் யாரும் சேர்க்க வில்லையென்றும்  சொல்லி  இவளிடம் வந்தான். ரெண்டு பேரும் சென்னைக்கு ரயிலேறிப்போனார்கள் அங்கு சரக்கு செல்லுபடியாகாமல், திரும்பி வந்து திருச்சியில் ஒரு புரோக்கர் மூலம் குறி சொல்லப் போவதாக விசா எடுத்து சிங்கப்பூர் அணுப்பி வைக்கப்பட்டாள்.

மூன்று மாதம் கழித்து கைநிறையப் பணத்தோடும் கொஞ்சம் உடல் தேறி மினு மினுப்பாகத் திரும்பி வந்தாள். சாத்தூரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வாடகை வீடெடுத்து அங்கேயே அம்மாசியும் அவளும் வாழ்ந்தார்கள். பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட சேதியைச்சொல்லும் போது தான் அம்மாசி தன்னை அம்மனமாகக் காட்டினான்.  தனக்கு பிள்ளை பெறுவதற்கும் ரேசன் கார்டில் பேர் போடவும் ஊரில் ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கிறது, நீ அதற்கு கிடையாது என்று சொல்லி விட்டான். அதற்குப்பிறகு  வாரிசு என்கிற வார்த்தை அவளை நிறையச் சிந்திக்க வைத்தது. ஆண்கள் சேத்தில் மிதித்து ஆத்தில் கால் கழுவுகிறவர்கள். அப்போதும் கூட மிதி படுகிற கேவலப் பொருளாகப் பெண்ணே இருக்கிறாள். இன்னுமொரு சேறு வேண்டாம் எனத்தீர்மானித்து ஒரு நாள் நடு இரவில் காட்டு வழியே இலக்கில்லாமல் நடந்துகொண்டிருந்தாள்  நடக்க எசக்கில்லாமல் கால்வலித்து இருக்கங்குடி மரியம்மாளே நீயே கதி என்று போய் கோயிலில் படுத்துவிட்டாள். 

மாசக்கணக்கில் அங்கேயே இருந்து கோயில் சோறு சாப்பிட்டு காலம் கழித்தாள். வெள்ளி செவ்வாய் விரத மிருந்து குறிசொல்ல ஆரம்பித்து விட்டாள். ஜனங்களின் முகங்களில் தெரிகிற சஞ்சலம் பார்த்து கொஞ்சம் போதாத காலம் என்றும், சந்தோசத்தைப்பார்த்து ஏறுகாலம் என்றும் அவளுக்குத் தெரிந்த வானசாஸ்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது தான் மனிதர்களின் முகத்தையும் கையையும் பார்க்கிறாள். இப்பொழுது தான் குடும்பம், உறவு விரிசல் பணம், வறுமை, ஆதிக்கம், சாதி எல்லாம் மெல்ல மெல்ல அறிமுகமாகிறது. அவளைக்கடந்து போகிற பத்து வயசுக்குழந்தை களைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் போல் சில நேரங்களில் ஆசை வருகிறது. பழைய இரவுகளில் பழக்கமான அந்த இளகிய ஆண் முகங்கள், இப்போதைய பகலில் மிக இறுக்கமாகத் தெரிகிறது. கோபம் தலைக்கேறி வாயில் கெட்டவார்த்தைகள் வருகிறது. ஆத்தா மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அடங்கிப்போகிறாள். முதலில் கொஞ்ச நாளாய்த் தூசன வார்த்தைகள் இல்லாத மொழி பழகு வதற்கு நிறையச் சங்கடப்பட்டாள். நெற்றி நிறைய திருநீரு பூசிக்கொண்ட முதல் நாள் திருநீரு ம்பக் கணமாகத் தெரிந்தது பழைய ரணங்களின் கணங்களை விட மிக மிக லேசாகிப்போனது. இப்போதும் கூட அவலைக்கடந்து போகிறவர்கள் பார்வை மையம் அவள் பக்கம் திரும்பிப் பின் கடந்து போகிறது.

அவளது வீடு எது, அவளது  குடும்பம் எது அவளது கனவு எது, எதிர்காலம் எது என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகிற இடங்கலுக்குள் தன்னை இருத்திக்கொள்ள நடந்து கொண்டிருக்கிறாள். வெள்ளி செவ்வாய்க்கு கருப்பசாமி வந்து அவள் மேலிறங்குவதாகவும், அந்தக்கருப்பசாமி யின் வார்த்தைகள் தான் அவளுக்கு அருள் வாக்கு எனவும் உலகத்துக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். தானொரு மானுடப்பிறவியல்ல சாதாரண மனுஷியல்ல என்னும் பிம்பம் ஒன்றை தானே உருவாக்கி அதை அவளே சித்திரமாக்குகிறாள். தொலைந்து போன பால்யகாலம், தொலைந்து போன இளமை, காதல்  எல்லா வற்றுக்கும்  அவள் மேல் விழுந்த பாறாங்கல் போன்ற சமூகம் என்பது அறியாமல் கருப்பசாமி என்னும் கற்பனை யோடு வாழ்கிறாள்.  கடந்த காலம் மேலெழும்பி வரும்போதெல்லாம் பழைய நினைவுகள் மேலெழும்புகிற நேரமெல்லாம் கிளம்பி சாத்தூர் நகரத்துக்கு வருவதும்,  ப்ரியா ஸ்டுடியோவில் உட்கார்ந்து பேசிச்சிரிப்பதும். அப்படியே எழுந்து பேருந்து நிலையத்துக்கு அவசர நடை நடப்பதுவும் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

( நன்றி. புதுவிசை ஏப்- 2007 ) 
சிறுகதை