Showing posts with label ஆவணப்படம். Show all posts
Showing posts with label ஆவணப்படம். Show all posts

1.9.11

எனக்கு இல்லையா கல்வி -ஆவணப்படம்.


மேகம் இருண்டு சிலுசிலுவெனக் காற்று வருடி தட்டாம்பூச்சிகள் பறக்கிற போது அந்த மழையை ரசிப்பதைவிட அப்போது டமடமவென கேட்கும் இடியோசை வரும்.அப்போது நமறியாமலே 'அச்சுனம்பேர் பத்து' என்று நமது வாய் முனுமுனுக்கும். இடிவிழும் போது அப்படிச் சொல்லவேண்டுமென அம்மா சொன்னபோது எனக்கிருந்த கேள்விகள் எப்படி இருண்டுபோனதோ,அதைவிட அடர்த்தியாய் என் அம்மாவுக்கும் இருண்டு கிடந்திருக்கும்.

வழி வழியாய் கவிழ்ந்து கிடந்த இந்த இருட்டிலிருந்து வெளிவர எனக்கு கிழித்துப்போட்ட தீக்குச்சியாய் அந்த ரத்தினா ஆரம்பப் பாடசாலையும் அது துவக்கி வைத்த கல்வியும் இருந்தது. ஆனால் அந்தக் கிராமத்தில் முளைத்த ஏனையோருக்கும் இது கிடைத்ததா என்றால், இல்லை. தொண்ணூறுக்கும் மேற்பட்ட விழுக்காடு சனம் இதுதான்நமக்கு விதிக்கப்பட்டது என்று நினைத்துக் கொண்டு கூலி வேலைக்குச் சந்தோசமாய் கிளம்பி போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த உலகம் எல்லோருக்கும் சமமானது என்கிற அறிவின் சாவி கல்வி. அதைப் பறிகொடுத்து விட்டு பறிகொடுக்கப்பட்டதையும் அறியாது வாழ்ந்துகொண்டிருக்கும் சனங்கள் கோடிகோடியாய் கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி விசனப்பட இந்த பரந்த உலகில் வெகு சிலரே முன்வருகிறார்கள். அப்படி முன்வருகிற வாதங்களின் தொகுப்புதான் எனக்கு இல்லையா கல்வி என்கிற ஆவணப்படம்.

இங்கிருக்கிற நூறுகோடி மக்களுக்கும் உணவு உடை உறைவிடம் கல்வி கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அப்படிக்கொடுக்கிற அடிப்படைத்தேவைகள் சரியான அளவிலும்  முறையிலும் கொடுக்கப்படுகிறதா என்கிற கவனிப்பும் அரசின் கடமையாகிறது.
இவையாவும் கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் கடைக்கோடி மனிதர்களைத் தேடி தேடிப்பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படக் குழு . சென்னை ஜெயின் பள்ளி பத்மாஷேசாத்ரி மதுரை வேலம்மாள் பள்ளிகளுக்கு முன்னாடி நிறுத்தப்பட்டிருக்கிற கார்களை மட்டுமே பார்த்துப் பூரித்துப்போன மனிதர்களுக்கு மேற்கூரையில்லாத கிராமத்து ஆரம்பப் பாடசாலைகள் கட்டாயம் அதிர்ச்சியூட்டும். பள்ளித் தளமனைத்தும் கோவில் செய்யக் கனவுகண்ட பாரதியின் தேசத்தின் பள்ளிக் கூடங்கள் இரவு நேரம் சட்டவிரோத செயல்களும் சட்டபூர்வ மதுவருந்தும் செயல்களும்தான்  நடக்கிறதென்கிற பதிவும் பார்வையாளர்களைக் கலங்கடிக்கும்.

அதே போல பத்துக் கிலோமீட்டர்கள் மலைப்பாதைவழியே நடந்துபோய் கல்வி கற்கத்துடிக்கிற சிறார்களின் பின்னாடி தொடர்கிற காமிராவுக்கு ஒரு சலாம் போடவேண்டும்.  தர்மபுரி பகுதியில் அம்மலை மக்களின் அன்றாட வாழ்க்கையே சவாலாக இருக்கிறது. அவர்களின் வாழ்வு, மொழி, தேவைகளெல்லாம் வேறு வேறாயிருக்கிறது. அவர்களுக்கு கல்வி என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது சமச்சீர்கல்வி என்பது விவாதத்துக்கு வெளியே தள்ளப்படுகிறது. இதைக் கவனப்படுத்துகிற கல்வி அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் வரிசையாய் நம்மோடு பேசுகிறார்கள்.

முன்னாள் துனைவேந்தர் வசந்திதேவி,பேரா.ச.மாடசாமி,திரு.ஹென்றிதிபேன்,வழக்கறிஞர் எழுத்தாளர்ச.பாலமுருகன், பவா,அழகிய பெரியவன்,சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜி.லதா,குணசேகரன்,தடாரஹீம், மாசானி, ஆர்.லட்சுமி, ரா.முனியம்மாள் என்று பலதரப்பு சிந்தனையாளர்களின் வாதங்களைத் திரட்டியிருக்கிறது இந்த ஆவணப்படம். அவர்கள் தரும் தகவல்களும் தரவுகளும் வெளியுலகில் கிடைக்காத அரியவை. பாடத்திட்டங்களின் கடினம் தான் மாணவர்களை விரட்டி அடித்து மீண்டும் அவர்களை உடல் உழைப்பாளர்களாக ரவுடிகளாக விளிம்புமனிதர்களாக மாற்றுகிறது என்கிற பேரா ச.மாடசாமியின் வாதத்தை பொதுசனம் வேறு எங்குசென்று கேட்கமுடியும் ?  

கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகள்,பாடத்திட்டம்,இப்படி தமிழ்க்கல்விச்சூழலை பகுதி பகுதியாக ஆவணப்படுத்தியிருக்கிறது ’எனக்கு இல்லையா கல்வி’. அவையாவற்றையும் சொல்லவேண்டுமானால்.இந்தக்கவிதைமாதிரி ஆகிவிடும்

’படித்தவற்றில் பிடித்தவற்றை
அடிக்கோடிட்டேன்
முடித்துப்பார்க்கையில்
புத்தகம் முழுக்க அடிக்கோடு’.

ஆம்.நாம் கேள்விப்படாத ஹண்டர் கமிட்டி,எந்த வரலாற்றிலும் இடம்பெறாத அரசியல் உள்விவகாரங்கள் என இந்தப் படம் நெடுக தமிழகம் அறிந்துகொள்வதற்கான கல்விகுறித்த சேதிகள் அதிகம் இருக்கிறது. ஆனாலும் அந்த வகுப்பறை வன்முறை என்கிற பகுதி இந்த ஆவணப்படத்தின் செரிவூட்டப்பட்ட பகுதி. சிவகாசிக்குப் பக்கத்தில் இருக்கும் துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ரா.முனியம்மாள் என்கிற பத்து வயதுச் சிறுமியின் வாக்குமூலம் இந்த தேசத்தின் மனசாட்சிமேல் அடிக்கிற ஓயாதசாட்டை அடி.
யாருக்காவது இன்னும் இருக்கிறதா சாதி என்கிற சந்தேகம் இருந்தால் அவள் கண்களில் இருக்கும் சோகம் பதிலாக இருக்கும்.

மாதா பிதா குரு என்று எழுத்தறிவிக்கிற ஆசிரியர்களை வழிபாட்டுக்கு உரியவர்களின் வரிசையில் மூன்றாவது நிறுத்தியிருக்கிறது முன்னோர் சொல். ஆனால் சாதி வெறி நீங்காத அந்த ஆசிரியர்களை, அதுவும் பெண் ஆசிரியர்களை எங்கே நிறுத்தி வைப்பதெனத் தெரியவில்லை. அதற்கு அழகிய பெரியவன் சொல்லுகிற அம்பேத்காரின் வார்த்தைகள் மட்டுமே சரியாக இருக்கும். பள்ளிப் பிள்ளைகளை குழுவாக பிரித்து விளையாட்டு,சாப்பாடு,கொடியேற்றுதல் என்று பொறுப்புக்கொடுக்கிற ஆசிரியர்கள் சுகாதாரப்பிரிவை மட்டும் ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்கு ஒதுக்கி வைப்பது என்கிற நடைமுறையை read அமைப்பின் ஆய்வு சொல்லுகிறது. இந்த சாட்சியங்கள் இளகிய மனதுள்ள எல்லோர் கண்ணிலும் நீர் தருவிக்கிற சாட்சியங்கள்.

அறிவும் உணர்வும் நெடுநாள் அலைக்கழிக்கும் சமூக சோகமுமாக எனக்கு இல்லையா கல்வி ஆவணப்படம் நமோடு கூடவரும்.
அதனோடே ப்ரபாகரின் இசையும், இரா. தனிக்கொடியின் பாடலும், அந்த சிறார்களின் குரலுமாக அந்தப்பாடலும் நம்மோடு கூடவரும்.
துடைத்துப்போடப்பட்ட கண்ணாடி வழித்தெரியும் பிம்பங்களாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிற காமிரா
அதை ஒருங்கிணைத்த படக்கோர்வை. துள்ளியமான ஒலிச்சேர்க்கை என இந்த ஆவணப்படத்தில் தனது திறமையான செய்நேத்திய  நிரூபித்திருக்கிறார் எங்கள் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.


29.4.09

இரு சக்கர வாகனத்தோடு இரண்டு சாகசப்படங்கள்








ஒரு திரைப்படம் உருவாக எத்தனை மனிதகள் காரணமாக இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, கதைவசனம், இப்படி நீண்டுகொண்டு போகிற உட்பிரிவுகள். இதை உருவாக்க அல்லது திரைப்படத்துக்கு ஏற்ப வடிவமைக்க கதைக் கலந்தாய்வு.தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர்,கலை, சண்டை, நடனம், யப்பா இளைப்பு வருகிறது. இன்னும் நூற்றுக்கணக்கான தலைப்புகள் இருக்கிறது. அப்புறம் நடிகர், நடிகை இவற்றோடு உடல் உழைப்பாளர்களான உதவியாளர்கள். இப்படி ஆயிரக்கணக்கான மனிதர்களின் கூட்டு உழைப்பில் உருவாகிறது. ஆனால் அந்தப் படம் யாராவது ஒரு நடிகரின் கணக்கில் காசாகவும், கணக்கில் வராத கள்ளப் பணமாகவும் மாறிப்போவது மட்டுமல்லாமல், அதையே சாக்காக வைத்து அரசியலில் குதித்து நாறிப்போகவும் காரணமாகிறது. ஒரு வருடத்திற்கு நூறுபடங்கள் வந்து மனதிலும் திரை அரங்குகளிலும் நில்லாமல் ஓடிவிடுகிறது. தப்பித்தவறி ஒன்றிரண்டு நல்ல படங்கள் வந்து விட்டாலும் ஆடலும் பாடலும் இல்லாத இந்தியச்சினிமா பாவம் பண்னிய சினிமாவாகிவிடும்.
இந்த வியக்கியானங்களை எல்லாம் ஒரு வரியில் தூக்கி எறியும் வல்லமை கொண்ட காட்சி ஊடகமாக சில படங்கள் இருக்கின்றன. அவற்றில் இருசக்கர வாகனத்தை பின்புலமாகக் கொண்ட இரண்டு படங்கள்.



ஒன்று ' ரைடிங் சோலோ டு தெ டாப் ஆப் தெ வேர்ல்ட்' ஆவணப்படம்.


இரண்டு ' மோட்டர் சைக்கிள் டைரீஸ் ' எனும் ஸ்பானியத் திரைப்படம்.



மும்பையைச் சேர்ந்த முப்பத்திரண்டு வயதுக்கார கவுரவ் ஜெனி. தனது ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் மினிடோர் வண்டியில் ஏற்றக்கூடிய அளவுக்கான பொருட்களோடு ( உணவு, உடை, கொட்டகை, பெட்ரோல், மற்றும்,வாகனப்பராமரிப்பு உபகரனங்களோடு, மருந்துகளும்) இமயமலையின் உச்சிக்கு தன்னந் தனியாகப் பயணமாகிறார். இது தான் ஆவணப்படத்தின் ஒரு வரிக்கதை. சுவாரஸ்யமில்லாமல் முன் நகரும் தார்ச் சாலையையும், நாற்கர சாலைத்திட்டத்தால் விறகாகிப்போன பழைய மரங்களையும் காட்சிப் படுத்திக்கொண்டு துவங்குகிறது பயணம். கொஞ்சம் கொஞ்சமாக உயரம் அதிகரிக்கும்போது சுவாரஸ்யமும் அதிகரிக்கிறது. நமக்கு இதுவரை காட்டப்படாத இமயமலையின் பகுதிகளை ஊடுறுவிக் கொண்டு காமிரா தொடர்கிறது. மனிதர் புழங்காத - கடவுளும் புழங்காத, சாதாரணப் பகுதிகள் வழியே வாகனம் முன்னேறுகிறது.


வழிநெடுகரோமங்களடர்ந்த ஆடுகள், வரிகளடர்ந்த முகங்களோடு அவற்றின் மேய்ப்பர்கள். பனிமலை, புல்வெளி, அரிய தாவரங்கள், அக்வாகார்ட் இல்லாமலே சுத்தப் படுத்தப்பட்ட தெளிந்த நீர். மலை மனிதர்கள் அவர்களின் ஊரும் வீடும், மலைக்கடவுள்கள் அவர்களுக்கு மனிதர்கள் கட்டித்தந்த வீடுகளும். இப்படி உல்லாசமாக நீடிக்கிற பயணம் ஆயிரம் அடி உயரத்துக்கு மேலே போகும்போது பதைபதைப்பை உண்டாக்கும் சாகசமாக மாறுகிறது. கையிருப்பு பெட்ரோல் குறைவாக இருக்கும் போது, அடுத்த பெட்ரோல் பங்க் 350 கிலோ மீட்டர் எனும் தகவல் பலகை நமக்குள் நடுக்கத்தை உண்டு பண்ணுகிறது. பனிப்புயல், வரும்போது ஒரு கிராமத்து வீட்டில் தஞ்சம் புகுந்து. ஆம் ஒரு பெரிய பொந்து போலிருக்கும் வீட்டில் அவர்களோடு ரொட்டி சுட்டுத்தின்பது, அவர்களோடு திருவிழாக் கொண்டாடுவது என இன்னொரு கலாச்சாரமும் மக்களும் நம்முன்னால் வியப்பாக வந்து போகிறார்கள். 16000 அடியில் 80 சதவீத பிராண வாய்வு குறைவான பிரதேசத்தில், பூஜ்ஜியத்தை நெருங்க்குகிற வெப்பநிலையில் மூச்சு விடுவது சிரமமான கணங்களோடு பெட்ரோல் பற்றி எரியும் ஆற்றல் இழக்கிறது. முகமும் உடலும் கருத்துப்போக மௌண்டன் சிக் எனப்படுகிற நோய்க்கு ஆளகிறார் கௌரவ். அதோடு 305 கிலோ எடையுள்ள வாகனத்தைத் தள்ளிக்கொண்டு போகிற காட்சிகளுமாக தொடர்கிறது ஆவணப்படம்.சித்தரிக்கப்பட்ட மயிர்க்கூச்செரியும் திரைப்படங்களை தனது நிஜப்பதிவுகளால் புறங்கால் கொண்டு தள்ளிவிடுகிறது இந்தப்படம். மனித வாழ்வின் இயல்புகளான வீடு மனைவிமக்கள் அலுவலகம் கடிகாரம் நாட்காட்டி உயரதிகாரி அல்லது முதலாளி இப்படியான வளமைகளை உதறித்தள்ளிய சிட்டுக்குருவி நாட்களை இழந்து மீண்டும் மும்பைக்குப் போகிறேன். இனி வார நாட்கள், சனி ஞாயிறு எனும் சிறைக்குத்,திரும்புகிறேன் என்று சொல்லி முடிப்பார் கௌரவ் ஜெனி.



இதில் சொல்ல மறந்த ஒரு தகவல். தன்னந்தனியே பயணம் மட்டுமில்லை அந்தப்பயணத்தைத் தானே காட்சிப்படுத்திக் கொண்டதுதான் மிகப்பெரிய சாகசம். எதாவது ஒரு உயரமான திருப்பத்தில் அந்தத்,தானியங்கி காமிராவை இயக்கிவைத்து விட்டு அதன் பார்வை படுகிறவரை பயணமாகி நின்று மறுபடியும் அதே தொலைவு திரும்பவந்து காமிராவை எடுத்துப் போகவேண்டும். அதனால் அவரது பயண தூரம் இரண்டு மடங்காகிறது. ஒரு இடத்தில் குரங்கு காமிராவை கையிலலெடுத்து விடும் அந்தப்பதிவு காணாமல்போகும் இப்படி பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய தனிமனித சாகசம் ரைடிங் சோலோ டு தெ டாப் ஆப் தெ வெர்ல்ட். இயக்கம், பின்னனிக்குரல், எடிட்டிங் என எல்லாவற்றையும் தன் தலையில் போட்டுக்கொண்ட அவருக்கு இதுவரை ஒரு தேசிய விருது உட்பட 11 விருதுகள் மகுடமாகியிருக்கிறது.

22.4.09

நெடுநாள் நீங்காத அதிர்வை விட்டுச்சென்ற ஆவணப்படம்








இந்தியாவின் கோடை வாசஸ்தலங்களில் எல்லம் கூட்டம் கூட்டமாக ஸ்வெட்டர் விற்கிறவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம் அவர்களுக்குள் அடர்த்தியான ஒரு சோகம் கவிழ்ந்திருக்கிறது. 1958 ஆம் வருடம் இந்திய அரசு armed force special power act என்கிற சிறப்பு சட்டத்தைக்கொண்டு வந்தது. அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் செல்லுபடியாகிற இந்தச் சட்டம் கிட்டத் தட்ட பொடா, தடா சட்டங்களை விட இறுக்கமானது. ஒரு முக்கால் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கிற இந்தச்சட்டம் தேசப் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் அதிகார எல்லை கேள்விகளற்றது. சந்தேகத்தின் பேரில் பிடித்துக்கொண்டு போகிறவர்கள் ஒருபோதும் உருப்படியாக வீடு திரும்புவதில்லை. அதன் கோரப்பல்லில் சிக்கிய மணிப்பூர் அப்பாவி மக்கள் குறிப்பாகப்பெண்கள், அதுவும் இளம்பெண்கள் சந்தித்த இழிவுகளும் சொல்லமுடியதவை. அதை எதிர்த்த ஜனநாயக இயக்கங்கள் நசுக்கப்பட்டன. துடிப்பான இளைஞர்கள் வழக்கம் போல நக்சலைட் முத்திரை குத்தப்பட்டு வதைக்கப்பட்டார்கள். இதற்கெதிரான போராட்டங்கள் சங்கிலித்தொடராக ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் நடந்து வந்த போதிலும். ஒரே ஒரு பாரளுமன்றத்தொகுதியைக்கொண்ட அந்த மக்களின் கோரிக்கை சிறப்புக்கவனம் பெறத் தகுதியற்றதாகிவிட்டது. தர்ணாக்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் என சூடு பிடிக்க ஆரம்பித்தது சமூக ஆர்வலரும் மணிப்பூர் போராட்டக் குழுவின் தலைவர்களில் ஒருவருமான மனோரமா தேவி கற்பழித்துக் கொல்லப்பட்ட பின்னர்தான். சட்டைப் பட்டனைத்த் திறந்து கொண்டு எந்திரத்துப்பாகிக்கு நெஞ்சைக்கட்டுகிற இளைஞர்கள், சாலை மறியல் நடக்கும்போது படுத்துக்கிடக்கிற இளைஞனின் தலைக்குப்பக்கத்தில் பாய்கிற துப்பாக்கி ரவைகள் என போராட்டத்தின் துணிச்சலைச் சொல்லுகிற ஆவணப்படம் afspa 1958.



பல விருதுகளைவாங்கிய இந்தப்படத்தில் போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து 2004 ஜுலை 14 வரை தேதி வாரியாகத் தொக்குக்கப் பட்டிருக்கிறது அதிர வைக்கும் ஆவணம். ஒரு நூறு மாணவர்கள் தங்கள் காலகளில் தீவைத்துக்கொண்டுதெருக்களில் ஓடுகிற தீக்குளிப்பு நெடுங்காலம் திகிலைத்தக்கவைக்கிற நிஜம். பிடிவதமாக இறந்து போகும் மாற்ற் தலைவனின் மரணவாக்கு மூலம் காணச்சகிக்கமுடியாத இறுதிச்சோகம். இன்றுவரை தனது பட்டினிப்போராட்டத்தைத் தொடரும் மாணவி சர்மிளாதேவி உலக இரும்புப் பெண்களின் முன்னணியில் நிற்கிறார். படத்தின் இறுதிப்பதிவு 2004 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் தேதி உலகை உலுக்கிய ஒரு சம்பவத்தோடு உறையும்.



காங்லா மணிப்பூரின் புனிதத்தலங்களில் மிக முக்கியமானது. அஸ்ஸாம் ரைபிலின் 17 வது படையின் தலைமையிடம் அங்குதான் அமைந்திருக்கிறது. அந்த தலைமயகத்தின் மிக நெடிய இருப்புக்கதவுக்கு முன்னாள் இருபது தாய்மர்கள் நடத்தியபோராட்டம் இந்திய வரலாறு சந்திக்காத ஒன்று.
தங்களை நிர்வாணப் படுத்திக்கொண்டு " எங்களை வாழவிடு அல்லது எங்களையும் கற்பழித்துக்கொன்று போடு " என்று கீச்சுக்குரலில் ஒலிக்கிறது தாய்மர்களின் குரல். மணிப்பூரி பாஷை புரியாவிட்டாலும் அதன் கோபம் எல்லோரிலும் அதிர்வை உண்டாக்கும். ' எனது நிறமே எனது கொடியாகும் ' என்கிறது ஒரு கறுப்புக்கவிதை. ' எனது இழிவே எனது ஆயுதமகும் ' என்கிறது இன்னொரு கவிதை. ஓரக்கண்ணால் பார்க்கிற, காலம் காலமாக போகப்பொருளாக கற்பிதப்படுத்தப்பட்ட நிர்வாணத்கைக் கூட ஒரு ஆயுதமாக்குகிற வல்லமை பெண்களால் மட்டுமே சாத்தியாமானது.



அரங்கில் இருந்த ஐநூறு பேர்களில் சலனத்தை தடுத்து நிறுத்திய அதிர்வு ஒரு நீண்ட மௌனத்தை மட்டும் விட்டுச்சென்றது. afspa 1958 ஆவணப்படம். அதன் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஹவோம் பபன்குமார் இன்னும் நிலைமை அப்படியே தான் தொடருகிறது எனச்சொன்னார்.