மேகம் இருண்டு சிலுசிலுவெனக் காற்று வருடி தட்டாம்பூச்சிகள் பறக்கிற போது அந்த மழையை ரசிப்பதைவிட அப்போது டமடமவென கேட்கும் இடியோசை வரும்.அப்போது நமறியாமலே 'அச்சுனம்பேர் பத்து' என்று நமது வாய் முனுமுனுக்கும். இடிவிழும் போது அப்படிச் சொல்லவேண்டுமென அம்மா சொன்னபோது எனக்கிருந்த கேள்விகள் எப்படி இருண்டுபோனதோ,அதைவிட அடர்த்தியாய் என் அம்மாவுக்கும் இருண்டு கிடந்திருக்கும்.
வழி வழியாய் கவிழ்ந்து கிடந்த இந்த இருட்டிலிருந்து வெளிவர எனக்கு கிழித்துப்போட்ட தீக்குச்சியாய் அந்த ரத்தினா ஆரம்பப் பாடசாலையும் அது துவக்கி வைத்த கல்வியும் இருந்தது. ஆனால் அந்தக் கிராமத்தில் முளைத்த ஏனையோருக்கும் இது கிடைத்ததா என்றால், இல்லை. தொண்ணூறுக்கும் மேற்பட்ட விழுக்காடு சனம் இதுதான்நமக்கு விதிக்கப்பட்டது என்று நினைத்துக் கொண்டு கூலி வேலைக்குச் சந்தோசமாய் கிளம்பி போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த உலகம் எல்லோருக்கும் சமமானது என்கிற அறிவின் சாவி கல்வி. அதைப் பறிகொடுத்து விட்டு பறிகொடுக்கப்பட்டதையும் அறியாது வாழ்ந்துகொண்டிருக்கும் சனங்கள் கோடிகோடியாய் கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி விசனப்பட இந்த பரந்த உலகில் வெகு சிலரே முன்வருகிறார்கள். அப்படி முன்வருகிற வாதங்களின் தொகுப்புதான் எனக்கு இல்லையா கல்வி என்கிற ஆவணப்படம்.
இங்கிருக்கிற நூறுகோடி மக்களுக்கும் உணவு உடை உறைவிடம் கல்வி கொடுக்கவேண்டியது அரசின் கடமை. அப்படிக்கொடுக்கிற அடிப்படைத்தேவைகள் சரியான அளவிலும் முறையிலும் கொடுக்கப்படுகிறதா என்கிற கவனிப்பும் அரசின் கடமையாகிறது.
இவையாவும் கேள்விக்குறியாகிப் போன தேசத்தின் கடைக்கோடி மனிதர்களைத் தேடி தேடிப்பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படக் குழு . சென்னை ஜெயின் பள்ளி பத்மாஷேசாத்ரி மதுரை வேலம்மாள் பள்ளிகளுக்கு முன்னாடி நிறுத்தப்பட்டிருக்கிற கார்களை மட்டுமே பார்த்துப் பூரித்துப்போன மனிதர்களுக்கு மேற்கூரையில்லாத கிராமத்து ஆரம்பப் பாடசாலைகள் கட்டாயம் அதிர்ச்சியூட்டும். பள்ளித் தளமனைத்தும் கோவில் செய்யக் கனவுகண்ட பாரதியின் தேசத்தின் பள்ளிக் கூடங்கள் இரவு நேரம் சட்டவிரோத செயல்களும் சட்டபூர்வ மதுவருந்தும் செயல்களும்தான் நடக்கிறதென்கிற பதிவும் பார்வையாளர்களைக் கலங்கடிக்கும்.
அதே போல பத்துக் கிலோமீட்டர்கள் மலைப்பாதைவழியே நடந்துபோய் கல்வி கற்கத்துடிக்கிற சிறார்களின் பின்னாடி தொடர்கிற காமிராவுக்கு ஒரு சலாம் போடவேண்டும். தர்மபுரி பகுதியில் அம்மலை மக்களின் அன்றாட வாழ்க்கையே சவாலாக இருக்கிறது. அவர்களின் வாழ்வு, மொழி, தேவைகளெல்லாம் வேறு வேறாயிருக்கிறது. அவர்களுக்கு கல்வி என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது சமச்சீர்கல்வி என்பது விவாதத்துக்கு வெளியே தள்ளப்படுகிறது. இதைக் கவனப்படுத்துகிற கல்வி அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் வரிசையாய் நம்மோடு பேசுகிறார்கள்.
முன்னாள் துனைவேந்தர் வசந்திதேவி,பேரா.ச.மாடசாமி,திரு.ஹென்றிதிபேன்,வழக்கறிஞர் எழுத்தாளர்ச.பாலமுருகன், பவா,அழகிய பெரியவன்,சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜி.லதா,குணசேகரன்,தடாரஹீம், மாசானி, ஆர்.லட்சுமி, ரா.முனியம்மாள் என்று பலதரப்பு சிந்தனையாளர்களின் வாதங்களைத் திரட்டியிருக்கிறது இந்த ஆவணப்படம். அவர்கள் தரும் தகவல்களும் தரவுகளும் வெளியுலகில் கிடைக்காத அரியவை. பாடத்திட்டங்களின் கடினம் தான் மாணவர்களை விரட்டி அடித்து மீண்டும் அவர்களை உடல் உழைப்பாளர்களாக ரவுடிகளாக விளிம்புமனிதர்களாக மாற்றுகிறது என்கிற பேரா ச.மாடசாமியின் வாதத்தை பொதுசனம் வேறு எங்குசென்று கேட்கமுடியும் ?
கல்விக்கான உள்கட்டமைப்பு வசதிகள்,பாடத்திட்டம்,இப்படி தமிழ்க்கல்விச்சூழலை பகுதி பகுதியாக ஆவணப்படுத்தியிருக்கிறது ’எனக்கு இல்லையா கல்வி’. அவையாவற்றையும் சொல்லவேண்டுமானால்.இந்தக்கவிதைமாதிரி ஆகிவிடும்
’படித்தவற்றில் பிடித்தவற்றை
அடிக்கோடிட்டேன்
முடித்துப்பார்க்கையில்
புத்தகம் முழுக்க அடிக்கோடு’.
ஆம்.நாம் கேள்விப்படாத ஹண்டர் கமிட்டி,எந்த வரலாற்றிலும் இடம்பெறாத அரசியல் உள்விவகாரங்கள் என இந்தப் படம் நெடுக தமிழகம் அறிந்துகொள்வதற்கான கல்விகுறித்த சேதிகள் அதிகம் இருக்கிறது. ஆனாலும் அந்த வகுப்பறை வன்முறை என்கிற பகுதி இந்த ஆவணப்படத்தின் செரிவூட்டப்பட்ட பகுதி. சிவகாசிக்குப் பக்கத்தில் இருக்கும் துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ரா.முனியம்மாள் என்கிற பத்து வயதுச் சிறுமியின் வாக்குமூலம் இந்த தேசத்தின் மனசாட்சிமேல் அடிக்கிற ஓயாதசாட்டை அடி.
யாருக்காவது இன்னும் இருக்கிறதா சாதி என்கிற சந்தேகம் இருந்தால் அவள் கண்களில் இருக்கும் சோகம் பதிலாக இருக்கும்.
மாதா பிதா குரு என்று எழுத்தறிவிக்கிற ஆசிரியர்களை வழிபாட்டுக்கு உரியவர்களின் வரிசையில் மூன்றாவது நிறுத்தியிருக்கிறது முன்னோர் சொல். ஆனால் சாதி வெறி நீங்காத அந்த ஆசிரியர்களை, அதுவும் பெண் ஆசிரியர்களை எங்கே நிறுத்தி வைப்பதெனத் தெரியவில்லை. அதற்கு அழகிய பெரியவன் சொல்லுகிற அம்பேத்காரின் வார்த்தைகள் மட்டுமே சரியாக இருக்கும். பள்ளிப் பிள்ளைகளை குழுவாக பிரித்து விளையாட்டு,சாப்பாடு,கொடியேற்றுதல் என்று பொறுப்புக்கொடுக்கிற ஆசிரியர்கள் சுகாதாரப்பிரிவை மட்டும் ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்கு ஒதுக்கி வைப்பது என்கிற நடைமுறையை read அமைப்பின் ஆய்வு சொல்லுகிறது. இந்த சாட்சியங்கள் இளகிய மனதுள்ள எல்லோர் கண்ணிலும் நீர் தருவிக்கிற சாட்சியங்கள்.
அறிவும் உணர்வும் நெடுநாள் அலைக்கழிக்கும் சமூக சோகமுமாக எனக்கு இல்லையா கல்வி ஆவணப்படம் நமோடு கூடவரும்.
அதனோடே ப்ரபாகரின் இசையும், இரா. தனிக்கொடியின் பாடலும், அந்த சிறார்களின் குரலுமாக அந்தப்பாடலும் நம்மோடு கூடவரும்.
துடைத்துப்போடப்பட்ட கண்ணாடி வழித்தெரியும் பிம்பங்களாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிற காமிரா
அதை ஒருங்கிணைத்த படக்கோர்வை. துள்ளியமான ஒலிச்சேர்க்கை என இந்த ஆவணப்படத்தில் தனது திறமையான செய்நேத்திய நிரூபித்திருக்கிறார் எங்கள் தோழர் பாரதி கிருஷ்ணகுமார்.
1 comment:
வணக்கம்..
ஊழல் முன் வைத்து நடை பெறும் போராட்டம் போல.. கல்வியை வைத்தும் பெரும் போராட்டம் நடத்த வேண்டும்...
என்னால் இரவு தூங்க முடியவில்லை...
கல்விக்கு எதாவது பண்ண வேண்டும் என்று தோன்றுகிறது..
என்னுள் பெரிய விதை விதைத்த பாரதி கிருஷ்ணகுமாருக்கு நன்றி...
ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ். பி
பல்லவன் கிராம வங்கி
jeba02@gmail.com
jebamail.blogspot.com
Post a Comment