மதுரையைத் தாண்டி எங்கும் போயிருக்கவில்லை.வேலை கிடைத்து கிழக்கு ராமநாதபுர மாவட்டம் பாண்டுகுடியில் வேலை. 1984 ஆம் ஆண்டு ரமேஸ்வரத்தில் வங்கி நிர்வாகக்குழுக்கூட்டம்.அங்கேயே எங்கள் சங்கத்தின் சார்பில் எதுக்கடை போட்டோம் .தர்ணா.ஒரு இரவு ஒரு பகல் அங்கேயே தங்க நேர்ந்தது. எல்லோரும் மறுநாள் திரும்பினார்கள் நானும் வந்துவிட்டேன். இதில் ஒரு செய்தியுமில்லை. ஆனால் கடலுக்கும்,கோவிலுக்கும் போகாமல் திரும்பி வந்தேன் என்பது செய்தி.பாடத்தில் படித்த பாம்பன் பாலத்து வழியே கடலையும் அலைகளையும் பார்த்தபடி எந்த உறுத்தலும் திரும்பிவந்தேன்.
சென்ற மாதம் ரெண்டு முறை சென்னை போக நேர்ந்தும் புத்தகக் கண் காட்சிக்குப் போக முடியவில்லை.அது தான் உறுத்திக்கொண்டிருந்தது.
வருவேன் என்று தொயரங்கட்டிய பிறகும் ரெண்டு போடு போட்டு அனுப்பிவைத்துவிட்டு அம்மா அப்பா போன சாத்தூர் ஒத்தையடிப் பாதையைப்போல, அவர்கள் பார்த்த சிவாஜி படம் மாதிரி இந்த புத்தகக்கண்காட்சி ஏக்கமும் ஆர்வமும் உண்டுபண்ணியது. அதைச் சரிசெய்கிற மாதிரி தோழர் பத்மா அவர்கள் வாங்கி அனுப்பிய யோ.கர்ணனின் சிறுகதைப் புத்தகம் இன்று வந்து சேர்ந்திருக்கிறது.
நாங்கள் பேசுகிற தொழிற் சங்கம்,தமுஎச,இலக்கியம்,சினிமா இவற்றின் பின்னாடி ஒரு பெயர் ஒளிந்து கொண்டிருக்கும்.அந்தப் பெயர்
தோழர் கிருஷ்ணகுமார்.பகலில் நிர்வாகத்தோடு மல்லுக்கு,சாயங்காலம் உறுப்பினர்களின் கடிதங்களுக்கு பதில்,இரவில் செயற்குழுவில் குடுமிபிடி
என்று நிற்காமல் ஓடும் கடிகாரத்தை நிறுத்தி ஆசுவாசமாய் ஒரு ஓவியம்,ஒரு கவிதை,ஒரு சினிமாப் பாட்டு, ஒருத்தரோட காதல் அனுபவம், ஒரு ஏ ஜோக் என்று ரம்மியப்படுத்துவார் கிருஷ்ணகுமார்.எந்த நேரமும் இளைஞர் பட்டாளம் சுத்திக்கிடக்கும். இதோ அவரது வலைப்பிரவேசம்
‘ உண்மை புதிதன்று ‘.படிக்கிற எல்லோருக்கும் எழுத்துக்களோடு அவரது கனத்த குரல் ஒலிக்கும்.