Showing posts with label ஊர்க்கதை. Show all posts
Showing posts with label ஊர்க்கதை. Show all posts

15.7.10

ரோஷக்காரி சின்னம்மாக்கிழவியும் ஒளிந்து பாடிய சங்கீதக்காரனும்.

தங்கையா வீட்டுக்கலயாணம் முடிந்து,பந்தி முடிந்து,மொய்க்கலயம் நிறஞ்சு அந்த ரெண்டு பத்தி வீட்டை புதுமாப்பிளை பெண்ணுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு ஊர்மடம் தேடிப் போய்விட்டார்கள்.ரேடியாச் செட்டு போடவந்த ஜானகிராம் சவுண்டு கண்ணன்ண்ணும்.மூடிவைத்துவிட்டு முடக்கிக்கொண்டார். எதுத்த வீட்டு கடவில் இருட்டில் ஒரு உருவம் பதுங்கிப் பதுங்கி நின்னது.ஒண்ணுக்கிருக்க வந்த கனகமணி சத்தம் போடவும் ஊர்கூடி பிடித்துவந்து வெளிச்சத்தில் பார்த்தால் சின்னம்மாக் கிழவி.களவாங்கிற வளசலுமில்ல,சுவர்தாண்டுகிற வயசுமில்ல பதுங்கி நிக்கவேண்டிய மர்மமென்ன என்று துருவித்துருவிக்கேட்டதில் 'எல்லாருந்தூங்குனாப்பெறகு எப்படியு குழாயுக்குள்ள இருந்து பாட்டுப்படிச்ச ஆம்பளயு பொம்பளயு எறங்கி வருவாகல்ல அதப்பாக்கத்தான் ஒளிஞ்சு நின்னேன் என்று சொன்னதற்குப்பிறகு ஊர் முழித்துக்கொண்டது.புதுமாப்பிளையும் பொண்ணும் தூங்கிவிட்டார்கள்.




கல்யாணவீடுகளில் படிக்கும் ஒலிபெருக்கி எங்கூர் மக்களுக்கு புரியாத புதிராகவே இருந்த காலம்.அண்ணாமலைக் கிழவனோ,முத்தையாக் கிழவனோ சொன்னால்தான் சரியென்று ஒத்துக் கொள்வார்கள். அவர்களிருவரும் தான் ஊர்நாடு போய்த்திரும்புகிறவர்கள். அண்ணாமலைக்கிழவன் ஐந்தாம் வகுப்பும், முத்தையாக்கிழவன்ஆறாம் வகுப்பும் தொட்டுவிட்டு வந்த படிப்பாளிகள்.ரெண்டு தலைமுறையாகவே முத்தையாக்கிழவன் குடும்பத்துக்கும் சின்னமாக்கிழவி குடும்பத்துக்கும் ஆகாது.பிரச்சினை ரொம்பப்பெரியது. வீட்டுக்கொட்டாரத்தில் நின்றிருந்த வேப்பமரம் யாருக்கென்கிற சண்டையில் விரிசலாகிப்போனது அடுத்தடுத்த வீடு ரெண்டும்.'முத்தையாகெழவன் அளந்து வுட்ற அறகொற லாப்பாண்ட கீல்னு கேக்க நா என்ன கேனச்சிறுக்கியா' என்று சொன்ன சின்னம்மாக் கெழவி ஒண்ணா நம்பர் ரோஷக்காரி.மண்டைக்குள்ளே தான் ஆளிருக்கு என்பது முத்தையாக்கிழவனின் வாதம்.இம்புட்டுக்கானு மண்டைக்குள்ள அத்தம்பெரிய ஆளு எப்படி இருப்பாக,குழாய்க்குள்ளதான் என்பது சின்னம்மாக்கிழவியின் சந்தேகம்.



லாப்பாண்டு=law point
கீல்னு= சரியென்று ஒத்துக்கொள்ள.
வலசல்=பங்காளிகள் சம்பந்திகளடங்கியகுழு