Showing posts with label முரண்பாடுகள். Show all posts
Showing posts with label முரண்பாடுகள். Show all posts

8.2.09

சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல கடவுச்சீட்டு கேட்கும் காலம் தூரமில்லை








மண்ணின் மைந்தர்கள் கோஷத்தோடு முளைத்த பால்தாக்கரேயின் உடனடி எதிரிகளாக அப்போது தமிழர்களும்தொழிற் சங்கங்களும் மலையாய் நின்றார்கள். பால் தாக்கரே மிகப்பெரிய தொழிலதிபர்களின் கூட்டாளியானார். விளைவு இன்று சிவசேனா எனும் சின்ன நாஜிப்படை வேரூன்றிவிட்டது. மும்பையில் பெயருக்குக் கூட இடதுசாரித் தொழிற்சங்கம் இல்லாமல் பொட்டல் காடாக்கிவிட்டது சிவசேனா. தனக்குப்பிடிக்காத எல்லாவற்றையும் கட்சியின் கொள்கையாக்குவது பாசிசம். சில நாட்களுக்கு முன்னால் சிவசேனா குண்டர்கள், வெளி மாநிலத்தவரை விரட்டியடித்த காட்சிகளை செய்தியாக மேய்ந்துகொண்டிருந்தது ஜனநாயக இந்தியா.


அதுபோல வட்டள் நாகராஜ் எனும் ரவுடிக்கூட்டம் பெங்களூரிலிருந்து தமிழர்களை விரட்டியடித்தது. அதைத்தொடர்ந்து காவிரிப் பிரச்சினை இன்னும் தீராத பிரச்சினையாகவே இருக்கிறது. கிறித்தவ சிறுபாண்மையினரைத் தாக்குவதில் ஒரிஸ்ஸாவோடு கர்நாடகம் போட்டிபோட்டு கிட்டத்தட்ட எண்பது எளிய உயிர்களை நரபலியிட்டது. தங்களது அகண்ட வெறிக்கனவை நிஜமாக்குவதற்கு அப்பாவிச்சிறுபாண்மை இனத்தை இட்டுக்கட்டி நரகாசுரனாக்குகிறது. அறிவியல் மங்கிக்கிடக்கும் இந்த தேசத்தில் ஒரு பாட்டில் தண்ணீரும், ஒரு லிட்டர் பாலும் ஒரே விலைக்கு விற்கிறது. இந்தச் சமூக கொடூரத்தை எதிர்த்துப் போராட மறந்து இந்திய மக்கள் தங்களின் அண்டை வீட்டு எளியோரை விரட்டியடிக்கத் துடிக்கிறார்கள். கட்டியிருக்கிற கோவணம் காவிக்கோவணமாக இருந்தால் போதுமென்கிற மடமையை மதம் என்று நம்பிக்கிடக்கிறது. இதோ எடியூரப்பா ( வட்டள் நாகராஜின் வாரிசு) வின் ராமராஜ்ஜியம் பெண்களுக்கு காவிப்பர்தாவை மாட்டிவிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட தாலிபானாக மாறிக்கொண்டிருக்கிறது.


பேருந்துகளில் கூட இரண்டு வெவ்வேறு மதத்தவர்கள் பயணம் செய்யமுடியாத மிருக மனோபாவம் அரசுமுத்திரையோடு அரங்கேறுகிறது. ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கு நாய்கள் பயணப்பட்டால் நடக்கிற சண்டைக்கும் இதற்கும் எந்த வித்தியசமும் இல்லை. அறிவார்ந்த எல்லோரும், பெருகிவரும் இந்தக் கனிபல் நடைமுறைகளைக் கண்டிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தவறினால் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல கடவுச்சீட்டுக்கு மணுச்செய்துவிட்டுக் காத்திருக்க வேண்டிய சூழல் வரலாம்.

27.1.09

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்.




ஒரு கேளிக்கை விடுதியில் ஆண்களும் பெண்களுமாக இருந்தனர். 15 முதல் 20 குண்டர்கள் நுழைந்து அங்கிருந்த பெண்கள் அணைவரையும் கொடூரமாகத்தாக்கியிருக்கிறார்கள். இது நடந்தது வேறெந்த நாட்டிலுமில்லை. இந்தியாவில். கர்நாடகத்தின் மங்களூர் நகரில். குடியரசு தினத்தின் முந்திய நாள் இரவில். தாக்கியவர்கள் கர்நாடக அரசு முத்திரை குத்தப்பட்ட குண்டர்கள்.தாக்கப்பட்டவர்கள் முதலில் முஸ்லிம்கள், பின்னர் கிறித்தவர்கள், காலம் காலமாக தலித்துகள், இப்போது பெண்கள்.தங்களின் பலத்தைப் பிரயோகிக்க கட்டாயம் ஒரு நோஞ்சானைக் கண்டுபிடிப்பதில் வெறிகளுக்குள் வித்தியாசமில்லை.

வரலாறு நெடுகிலும் அவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருந்தாலும் பாசிசத்தின் செயல்பாடுகள் ஒரே மாதியானவை.சுடிதார் அணியக்கூடாது, ஒரே பேருந்தில் சகல மதத்தினரோடு பயணம் செய்யக்கூடாது, மதம் மாறக்கூடாது,ஆண் பெண் சகஜமாகப் பழகக்கூடாது என்னும் கொடூர விதிகள் அமலுக்கு வருவது புதியதல்ல. மிக மிகப் பழையது மனுவின் விதிகள். மதத்தின் பெயர் மாறலாம், நாடு மாறலாம், குணம் மாறாது.

நாடுகளுக்கு நடுவில் இருக்கும் எல்லைக்கோடுகள் கூட இளகிப்போகிற இந்த நாட்களில் தெருக்களின் நடுவில் எல்லைக்கோடுகள் உயருகிறது.

18.1.09

இடிபாடுகளில் தொலைந்த இந்திய ஞானம்

பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த மாநாட்டுக்கு மாதவராஜ், மாப்பிள்ளை ஆண்டோ, பாலுசார், மணியண்ணன் ஆகியோரோடு ஒரு இருபது பேர் போனோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். நீரோடிப் பயமுறுத்தும் அகலமும் ஆழமுமான பெயர் தெரியாத ஆறுகள். புகை வண்டிப் பயணமெங்கும் கிடைத்த காட்சிகள் இது. இரவு இரண்டரை மணிக்கு காலகண்டி ரயில் நிலையத்தில் இறங்கும் போது கடும் குளிர். பாதுகாப்புக் கருதி விடியும் வரை அங்கிருந்து யாரையும் கிளம்ப வேண்டாமென்று காவல் துறை தடுத்துவிட்டது. நாங்கள் ரயில்வே ஊழியர் சங்கத்தின் அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டோம். அலுவலகத்துக்கு நடந்து போகையில் தரையெங்கும் பயணிகள் சுருண்டு படுத்துக்கிடந்த்தனர். காலையில் ஐந்தரை மணிக்கு கிளம்பிய போதுதான் தெரிந்தது சுமார் மூவாயிரம் பேர் வெட்டவெளியில் மொட்டைக்குளிரில் படுத்துக் கிடந்தார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாய் கூலி வேலைக்கு இடம்பெயர்ந்து செல்பவர்கள் என்று சொன்னார்கள். தேசம் செழித்து மக்கள் வறுமையில் வாடுகிற முரணும் விநோதமும் கொண்ட தேசம் எனது இந்தியா. தனித் திறனாளர்களாக கிரிக்கெட் வீரர்கள் முதலிடத்தில் இருக்கும்போது இந்திய அணி அதள பாதாளத்தில் கிடக்குமே அது போல. நகரங்கள் எல்லாம் குண்டு பல்பில் மங்கிக் கொண்டிருக்க கிராமங்கள் இருளில் கிடக்கிற பிகார். இன்னும் முறுக்கிய மீசையோடு நிலச்சுவாந்தார்கள் குதிரையில் வலம் வரும் மாநிலம். பகலிலே ஓடும் வாகனங்கள் எல்லாம் தனியாருக்குச் சொந்தமான ட்ரக்குகள். நினைத்தால் போகும் இல்லையென்றால் வேறு ஏற்பாடுகள் தான். ஐந்து மணிக்குமேல் அதுவும் இல்லை. சாலையில் வாகனங்கள் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்தால் சௌஜன்யமாக இருக்கலாம் என்று சோதிடம் சொல்லும் நண்பர்கள் ஒரு மாதம் பீகரைச்சுற்றிப் பார்க்கலாம்.
அங்குதான் உலகின் அதிக மக்கள் தொகை வழிபடும் புத்தர் கோவிலும் போதிமரமும் இருக்கிறது. நம்ம ஊர் தொழில் நுட்பக்கல்லூரிகளை நினைவுபடுத்தும் பெரிய பெரிய தர்மசாலாக்கள் இருக்கிறது. அங்கிருந்து அறுபது கிலோ மீட்டரில் வாரணாசி இருக்கிறது. எண்பத்தி ஏழு கிலோ மீட்டரில் நாலந்தா இருக்கிறது.
ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு. முப்பது மீட்டர் அகலமுள்ள நடைபாதை. சுமார் இரண்டாயிரம் ஆசிரியர்களோடு பத்தாயிரம் பௌத்த மாணவர்கள் தூரக்கிழக்கு நாடுகளில் இருந்து வந்து தங்கிப்படித்த உலகின் முதல் பல்கலைக்கழகம் நாலந்தா. ஐந்தாம் நுற்றாண்டுக்கும் பனிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்று கணிக்கப்படுகிறது. அந்தக்காலத்திலேயே அங்கே இறையியல், இலக்கணம், தர்க்கசாஸ்திரம், வானவியல், இயல்பியல், மருத்துவம், மனோதத்துவம் ஆகியவை கற்றுத் தரப்பட்டிருக்கிறது. உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் சீன யாத்திரிகருமான யுவான் சுவாங் நலாந்தாவின் பழைய மாணவர். சீக்கிய மதகுரு குரு நானக், ஜனநாயக விதை போட்ட நல்லரசன் அசோகன், மஹாத்மா காந்தி, இஸ்லாத்தின் சூவ்பி தத்துவம், இவற்றுக்கு ஊற்றுக்கண் நாலந்தா. இன்றைக்கும் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்ற பௌத்த விகாரைகளுக்கு இங்கிருந்து தான் பிடி மண்ணெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

இரண்டடுக்கு தங்கும் அறைகள், ஏழு அடுக்கு தியான மண்டபம், கல்வி சாலை, கோவில்கள் யாவும் தனித்தனியே அமைந்திருக்கிறது. ஒருகிலோமீட்டர் பரப்பளவில் எங்கு தண்ணீர் விழுந்தாலும் மைய மண்டபத்துக்கு அருகிலுள்ள தெப்பத்துக்கு வந்துசேரும் ஏற்பாடு. இடிபாடுகளில் தப்பித்து இன்னும் உருக்குழையாத கட்டைச்சுவர்கள் கட்டிடக்கலையைப் பெருமைப் படுத்துகிறது.

பதிவுலகினருக்கு கொட்டாவி வரும் இந்த ஒட்டை ரிக்காட்டுத் தகவல்கள் அவசியமாவெனத் தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்வி மட்டும் அத்தியாவசியமாகிறது.
இவ்வளவு சிறப்புமிக்க ஒரு கல்வி சாலை ஏன் பாதுகாக்கப்படவில்லை ?.
உலகத்துக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்த இந்தியா இன்று ஒரு கலர் பிக்சர் டியுப்புக்கும், மைக்ரோ சாப்டுக்கும்கையேந்துவதன் காரணமென்ன ?.
இன்னய தேதி வரை நம்மால் ஒரு சிறு குண்டூசியைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன் ?.

அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் தரைமட்டமாக்கப்பட்டது நாலந்தா. அங்கிருந்து கிளம்பிய சமண பௌத்த துறவிகள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள். போதி மரம் வளர, வளர வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பீறிட்ட குருதியோடு தர்க்க ஞானமும், பரிணாமத்தேடலும் உறைந்து போனது. உலகின் மிகப்பழம் பெரும் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று மாதங்கள் தழல் விட்டு எறிந்திருக்கிறது. பற்றி எறிந்த தீயில் இந்திய மெய்ஞானமும்,அறிவியலும்சமூகக் கேள்விகளும் சாம்பலாகிப்போனது. அந்த இடத்தில் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளிகூட இல்லை. இந்தியாவின் மொத்தக் கல்விமுறையே அதன் பழைய மாணவர்களாக மாறியிருக்க வேண்டிய ஒரு மாபெரும் வாய்ப்பு இனப் படுகொலையோடு மறுக்கப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர் வந்த குருகுலக்கல்வி முறைதான் உலகமறிந்ததே. ராஜாக்களுக்கும், பண்ணையார்களுக்கும் முதுகு சொரிந்து கொடுத்த கல்வித்திட்டம். அந்தக்கல்வி முறையைக் காப்பியடிக்கக்கூட சாமன்யர்களுக்கு உரிமையில்லை என்று சம்பூகனையும், ஏகலைவனையும் தண்டித்தது. அப்புறம் நம்ம மெக்காலேயின் அடிமைக் கல்வித்திட்டம் இதோ இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. மெக்காலேவைப் படித்த யுவன்களும், யுவதிகளும் கூட்டம் கூட்டமாய் நாலந்தாவுக்கு வந்து போகிறார்கள். வரலாற்றுப்பாடத்தில் ஒரு மதிப்பெண் கேள்வியாகக்கடந்து போகிற அந்த நாலந்தா மீது கடலைத்தோல்களையும் அது மடித்த காகிதத்தையும் வீசிவிட்டுப் போகின்றனர்.

பிரமிப்போடு அந்த இடிபாடுகளிலிருந்து ஒரு துகள் செங்கல்லையாவது எடுத்துக்கொண்டுவர ஆசையிருந்தது. ஆனால்நம் பேரப்பிள்ளைகளும் வந்து கால் வைத்துவிட்டுப் போகும் போது கருப்பும் சிகப்பும் கலந்த அந்த செங்கற்கள் மிஞ்சிநிற்கட்டும் என்று மனம் மாறித்திரும்பி வந்தோம்.
முரண்பாடுகள்