
வாணலிச்சட்டியில் வழுக்கிய வெண்ணெய் போல, காற்றைவிடக் கடுகி, ஆடாமல் அசையாமல் ஓடுகிறது வாகனங்கள்.எழுபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம் கூட கட்டை வண்டியாகப் பார்க்கப் படுகிறது. சாத்தூரிலிருந்து சென்னை செல்லவேண்டுமானால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம்,திண்டிவனம்,செங்கல்பட்டு,தாம்பரம் இப்படித்தானே வழி. அது பழைய்ய காலம் சாத்தூரிலிருந்து நேரே கோயம்பேடு தான். அது எப்படி மார்க்கம் இல்லாத பயணம். அது அப்படித்தான் ஒரே வழி. தங்க நாற்கர வழி . நீங்கள் திருச்சிக்கு போகவேண்டுமானாலும் எதோ கிராமத்துக்குப் போவது போல பிரதானச் சாலையிலிருந்து விலகித்தான் போகவேண்டும். கடந்து போகும் ஒவ்வொரு ஊரும் அதன் பிரபல கட்டிடங்களாலும் மரங்களாலும் ஆறுகளாலும் அடையாளப் படுத்திக்கொண்டு பயணமானதெல்லாம் பழய்ய காலம். இனி ஒவ்வொரு ஊரும் ஒரு மேம்பாலத்துக்கு அடியில் கடந்து போகும். சாப்பிடவேண்டுமானால் விக்கிரவாண்டி மோத்திரக் கவிச்சை மோட்டேலில் போய் என்னைக்கு சுட்டதென்று கண்டுபிடிக்க முடியாத தோசையை நாப்பது ரூபாய் தெண்டங்கட்டி வாங்கிவிட்டு. திண்ணவும் முடியாமல், எடுத்துக்கீழே போடவும் முடியாமல் ஊசலாடுகிற மனதோடு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். இவ்வளவு வேகமாய்ப் போனாலும் ஒரு மணி நேரம் மிச்சமாவது சிரமம். அந்த ஒரு மணி நேரத்தில் இந்த உலகத்தைப் புரட்டும் திட்டங்களை வேண்டுமானால் நேர மேலாண்மை குறித்துப் பேசுபவர்கள் பேசட்டும். ஆனால் அந்த ஒரு மணிநேரத்தைக் கட்டாயம் சென்னை சிக்னல்களில் தொலைத்தே தீரவேண்டும். முன்பெல்லாம் சாத்தூரிலிருந்து ஊருக்கு எட்டுக்கிலோமீட்டர் நடந்தே கடந்திருக்கிறோம். அப்போது பேருந்து கட்டணம் வெறும் 25 காசுதான் ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு பேருந்து இருக்கும் அதற்குக் காத்துக்கிடக்கிற நேரத்தில் பாவநாசநாடார் சேவுக்கடையில் சேவுப்பொட்டலம் வாங்கிக் கொறித்துகொண்டு காலார நடந்தே போகலாம். வழிநெடுக மரங்களும், பழங்களும், பறவைகளும், மனிதர்களும் கதைகளும் விரிந்து கிடக்கும். பாட்டிகதைகளில் வரும் ஆலாவிருட்ச மரம், அண்டரெண்டாப் பட்சி, ராஜகுமாரன்,அவனது வெள்ளைக் குதிரை எல்லாவற்றையும் அப்போது பொருத்திப் பார்க்கிற இடங்கள் நிறைய்ய இருந்தன. ஒருதேசத்திற்கும் இன்னொரு தேசத்திற்கும் அதாவது மதுரைக்கும், சாத்தூருக்கும் இடையில் பயணமாகிற இளங்குமாரனைவிஷம் கொடுத்துக் கொல்வதற்கான சதி ஓலையில் சேதியாக இருக்கும். அதை அவனே எடுத்துக்கொண்டு செல்லுவான் என்கிறபோது ஆர்வமும் பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். இடையில் களைப்புத்தீர ஒருசுனையில் நீரருந்திவிட்டு, படுத்துறங்குவான். அவன் அசந்து தூங்குகிற போது ஆலவிருட்ச மரத்திலிருக்கும் பேசும் கிளிகளான அண்டலும் பேடையும் நடக்கப் போவதைச் சொல்லும். பாண்டசியும், மெட்டாபரும், இயல்பும் கலந்து கிடக்கிற கதைகளின் சாட்சியாக நின்று கொண்டிருந்த சாலையோர மரங்கள். அசோகரையும், ராணி மங்கம்மாவையும் நினைவுபடுத்துகிற மரங்கள் ஒன்றுகூட தேசிய நெடுஞ்சாலையில் இல்லை. விருதுநகரைத்தாண்டி, சிவரக்கோட்டை பழைய்ய பாலத்துக்கருகில் நெடுநெடுவென வளர்ந்து கிடந்த வன்னிவேல மரங்களும் ஆலமரங்களும் மிகத்தடித்த தூரால் ஆனவை. ஒரு பத்தாள் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் சுற்றளவு கொண்டவை. எப்போதாவது சூறைக்காற்றில் அதன் கிளைகள் ஒடிந்து சாலை மறிக்கும். அப்போது மீதமிருக்கும் நிலைகுலையாத அதன் பருமன் பற்றி நிறய்ய யோசித்திருக்கிறேன். ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாததாகத் தோன்றும் அதன் ரூபம். ஒருநாள் அந்த எண்ணங்களை வேரோடு பிடுங்கிப்போட்டு விட்டது இந்த தங்க நாற்கர சாலைத்திட்டம். சரிந்து கிடந்த கலிவர் அண்ட் லிலிபட்டைப் போன்ற அதன் உருவம் என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது. அது வெறும் மரமா ?. லட்சக்கணக்கான எறும்புகளின் வாழிடம். ஆயிரக்கணக்கான பூச்சிகளின் வசிப்பிடம். நூற்றுக்கணக்கான பறவைகளின் சரணாலயம். அது மட்டுமா பலநூறு வருடங்களின் நீட்சியல்லவா அது. ஒன்றையிழந்து பிரிதொன்றைப் பெறும் இந்த வாழ்கையில் நாம் இந்த சாலைக்காக இழந்தது சரித்திர சாட்சிகள். மரங்களோடு மனிதர்க்கு இருக்கும் பந்தம் தொப்புள்கொடிக்கு இணையானது. இயற்கை அறிவியலைத்தாண்டி அவை உணர்வுப்பூர்வமான பல கோடி பதிவுகளை விட்டுச்சென்றிருக்கிறது. ஒவ்வொரு கடவுளும் ஒரு மரத்தால் அறியப்படுவதும். இரு சகோதரர்கள் வெட்டப்படவிருந்த மருதமரத்தை கட்டியணைத்துக் காத்ததும், ஒரு புளியமரம் சுந்தர ராமசாமிக்கு ஒரு நாவலைத் தந்ததுமாக சொல்லிக்கொண்டே போகலாம். தென் இந்தியர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத வெயில் மரமாய் நிற்கும் வேம்பு வெறும் மரமல்ல. அது ஒரு சர்வரோக நிவாரணி. மிகச்சிறந்த கிருமி நாசினி. அவற்றின் அருமை தெரியாமல் நாடு முழுக்க வாரிக்கொடுத்த எண்ணிக்கை லட்சக் கணக்கில் இருக்கும். ஒருநாள் விடிந்தால் குறைந்தது ஒருகோடி ரூபாய் கமிஷனாக மந்திரிக்கு தானாக வந்து விழும் ஏற்பாடு இங்கே இருக்கிறது. இந்தியன் படம் வந்த பிறகுதான் இலாக்காவுக்கு வந்துசேரும் குறைந்த பட்சக்கமிஷன் மூன்று சதவீதம் ஆனது. ஒரு பேச்சாளர் கூறினார் இது பொது மக்களுக்காகப் போடப்பட்டதல்ல மிகப்பெரிய கண்டைனர் வாகனங்கள் கடந்து செல்வதற்காகப் போடப் பட்டவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று. இது தொடங்கும் போது அமைச்சர் தங்க நாற்கர சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்று சொல்வது சுத்த ஹம்பக். பன்னாட்டு நிறுவணங்களுக்கு அர்ப்பணித்தது தான் உண்மை. பம்பாய் முதல் தானா வரை போடப்பட்ட இந்தியாவின் முதல் இருப்புப்பாதை இந்தியர்களுக்காகப் போடப்பட்டது என்று சொல்வதும் இப்படிச் சொல்வதுவும் சமமே. |