18.9.09

சரித்திர சாட்சிகளை இழந்து.....








வாணலிச்சட்டியில் வழுக்கிய வெண்ணெய் போல, காற்றைவிடக் கடுகி, ஆடாமல் அசையாமல் ஓடுகிறது வாகனங்கள்.எழுபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம் கூட கட்டை வண்டியாகப் பார்க்கப் படுகிறது. சாத்தூரிலிருந்து சென்னை செல்லவேண்டுமானால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம்,திண்டிவனம்,செங்கல்பட்டு,தாம்பரம் இப்படித்தானே வழி. அது பழைய்ய காலம் சாத்தூரிலிருந்து நேரே கோயம்பேடு தான். அது எப்படி மார்க்கம் இல்லாத பயணம். அது அப்படித்தான் ஒரே வழி. தங்க நாற்கர வழி . நீங்கள் திருச்சிக்கு போகவேண்டுமானாலும் எதோ கிராமத்துக்குப் போவது போல பிரதானச் சாலையிலிருந்து விலகித்தான் போகவேண்டும்.



கடந்து போகும் ஒவ்வொரு ஊரும் அதன் பிரபல கட்டிடங்களாலும் மரங்களாலும் ஆறுகளாலும் அடையாளப் படுத்திக்கொண்டு பயணமானதெல்லாம் பழய்ய காலம். இனி ஒவ்வொரு ஊரும் ஒரு மேம்பாலத்துக்கு அடியில் கடந்து போகும்.
சாப்பிடவேண்டுமானால் விக்கிரவாண்டி மோத்திரக் கவிச்சை மோட்டேலில் போய் என்னைக்கு சுட்டதென்று கண்டுபிடிக்க முடியாத தோசையை நாப்பது ரூபாய் தெண்டங்கட்டி வாங்கிவிட்டு. திண்ணவும் முடியாமல், எடுத்துக்கீழே போடவும் முடியாமல் ஊசலாடுகிற மனதோடு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். இவ்வளவு வேகமாய்ப் போனாலும் ஒரு மணி நேரம் மிச்சமாவது சிரமம். அந்த ஒரு மணி நேரத்தில் இந்த உலகத்தைப் புரட்டும் திட்டங்களை வேண்டுமானால் நேர மேலாண்மை குறித்துப் பேசுபவர்கள் பேசட்டும். ஆனால் அந்த ஒரு மணிநேரத்தைக் கட்டாயம் சென்னை சிக்னல்களில் தொலைத்தே தீரவேண்டும்.



முன்பெல்லாம் சாத்தூரிலிருந்து ஊருக்கு எட்டுக்கிலோமீட்டர் நடந்தே கடந்திருக்கிறோம். அப்போது பேருந்து கட்டணம் வெறும் 25 காசுதான் ரெண்டு மணிநேரத்துக்கு ஒரு பேருந்து இருக்கும் அதற்குக் காத்துக்கிடக்கிற நேரத்தில் பாவநாசநாடார் சேவுக்கடையில் சேவுப்பொட்டலம் வாங்கிக் கொறித்துகொண்டு காலார நடந்தே போகலாம். வழிநெடுக மரங்களும், பழங்களும், பறவைகளும், மனிதர்களும் கதைகளும் விரிந்து கிடக்கும். பாட்டிகதைகளில் வரும் ஆலாவிருட்ச மரம், அண்டரெண்டாப் பட்சி, ராஜகுமாரன்,அவனது வெள்ளைக் குதிரை எல்லாவற்றையும் அப்போது பொருத்திப் பார்க்கிற இடங்கள் நிறைய்ய இருந்தன.



ஒருதேசத்திற்கும் இன்னொரு தேசத்திற்கும் அதாவது மதுரைக்கும், சாத்தூருக்கும் இடையில் பயணமாகிற இளங்குமாரனைவிஷம் கொடுத்துக் கொல்வதற்கான சதி ஓலையில் சேதியாக இருக்கும். அதை அவனே எடுத்துக்கொண்டு செல்லுவான் என்கிறபோது ஆர்வமும் பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். இடையில் களைப்புத்தீர ஒருசுனையில் நீரருந்திவிட்டு, படுத்துறங்குவான். அவன் அசந்து தூங்குகிற போது ஆலவிருட்ச மரத்திலிருக்கும் பேசும் கிளிகளான அண்டலும் பேடையும் நடக்கப் போவதைச் சொல்லும். பாண்டசியும், மெட்டாபரும், இயல்பும் கலந்து கிடக்கிற கதைகளின் சாட்சியாக நின்று கொண்டிருந்த சாலையோர மரங்கள். அசோகரையும், ராணி மங்கம்மாவையும் நினைவுபடுத்துகிற மரங்கள் ஒன்றுகூட தேசிய நெடுஞ்சாலையில் இல்லை.



விருதுநகரைத்தாண்டி, சிவரக்கோட்டை பழைய்ய பாலத்துக்கருகில் நெடுநெடுவென வளர்ந்து கிடந்த வன்னிவேல மரங்களும் ஆலமரங்களும் மிகத்தடித்த தூரால் ஆனவை. ஒரு பத்தாள் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் சுற்றளவு கொண்டவை. எப்போதாவது சூறைக்காற்றில் அதன் கிளைகள் ஒடிந்து சாலை மறிக்கும். அப்போது மீதமிருக்கும் நிலைகுலையாத அதன் பருமன் பற்றி நிறய்ய யோசித்திருக்கிறேன். ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாததாகத் தோன்றும் அதன் ரூபம். ஒருநாள் அந்த எண்ணங்களை வேரோடு பிடுங்கிப்போட்டு விட்டது இந்த தங்க நாற்கர சாலைத்திட்டம். சரிந்து கிடந்த கலிவர் அண்ட் லிலிபட்டைப் போன்ற அதன் உருவம் என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது. அது வெறும் மரமா ?.



லட்சக்கணக்கான எறும்புகளின் வாழிடம். ஆயிரக்கணக்கான பூச்சிகளின் வசிப்பிடம். நூற்றுக்கணக்கான பறவைகளின் சரணாலயம். அது மட்டுமா பலநூறு வருடங்களின் நீட்சியல்லவா அது. ஒன்றையிழந்து பிரிதொன்றைப் பெறும் இந்த வாழ்கையில் நாம் இந்த சாலைக்காக இழந்தது சரித்திர சாட்சிகள்.



மரங்களோடு மனிதர்க்கு இருக்கும் பந்தம் தொப்புள்கொடிக்கு இணையானது. இயற்கை அறிவியலைத்தாண்டி அவை உணர்வுப்பூர்வமான பல கோடி பதிவுகளை விட்டுச்சென்றிருக்கிறது. ஒவ்வொரு கடவுளும் ஒரு மரத்தால் அறியப்படுவதும். இரு சகோதரர்கள் வெட்டப்படவிருந்த மருதமரத்தை கட்டியணைத்துக் காத்ததும், ஒரு புளியமரம் சுந்தர ராமசாமிக்கு ஒரு நாவலைத் தந்ததுமாக சொல்லிக்கொண்டே போகலாம். தென் இந்தியர்களின் வாழ்வில் பிரிக்கமுடியாத வெயில் மரமாய் நிற்கும் வேம்பு வெறும் மரமல்ல. அது ஒரு சர்வரோக நிவாரணி. மிகச்சிறந்த கிருமி நாசினி. அவற்றின் அருமை தெரியாமல் நாடு முழுக்க வாரிக்கொடுத்த எண்ணிக்கை லட்சக் கணக்கில் இருக்கும்.



ஒருநாள் விடிந்தால் குறைந்தது ஒருகோடி ரூபாய் கமிஷனாக மந்திரிக்கு தானாக வந்து விழும் ஏற்பாடு இங்கே இருக்கிறது. இந்தியன் படம் வந்த பிறகுதான் இலாக்காவுக்கு வந்துசேரும் குறைந்த பட்சக்கமிஷன் மூன்று சதவீதம் ஆனது. ஒரு பேச்சாளர் கூறினார் இது பொது மக்களுக்காகப் போடப்பட்டதல்ல மிகப்பெரிய கண்டைனர் வாகனங்கள் கடந்து செல்வதற்காகப் போடப் பட்டவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று. இது தொடங்கும் போது அமைச்சர் தங்க நாற்கர சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்று சொல்வது சுத்த ஹம்பக். பன்னாட்டு நிறுவணங்களுக்கு அர்ப்பணித்தது தான் உண்மை. பம்பாய் முதல் தானா வரை போடப்பட்ட இந்தியாவின் முதல் இருப்புப்பாதை இந்தியர்களுக்காகப் போடப்பட்டது என்று சொல்வதும் இப்படிச் சொல்வதுவும் சமமே.






22 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

இங்கு மனிதன் தன் சொந்த அடயாளத்தை மறந்து திரியும் வேளையில், சரித்திர சாட்சிகளை விட்டுவைக்கவா போகிறார்கள்?

சொந்தங்களும், உறவுகளுமே, வருடத்தில் சில நாள் என்றாகிப்போன பின் எது எதற்குத்தான் வருத்தபடுவது என்றே தெரியவில்லை....

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

velji said...

வளர்ச்சி இன்றியமையாததுதான்..மாற்றுத்திட்டங்களோ,மனசாட்சியோ இல்லாத செயல்கள்தான் வன்முறையாய்த் தெரிகிறது!

காமராஜ் said...

மிகச் செறிவான பின்னூட்டம்.
ரோபோக்களுக்கும் மனிதர்க்கும்
இருக்கிற இடைவெளி
இந்த செண்டிமெண்ட் மட்டும்தான்.
அது கூட கூடு விட்டுக் கூடு
மாறும். ஆனால் லாப வெறி ?.
எதையும் காவு கொடுக்கும்.

நன்றி ஆரூரான்.

காமராஜ் said...

வாங்க வேல்ஜி.

மிகச்சரியாகச்சொன்னீர்கள்.
வளர்ச்சி மிக மிக இன்றியமையாததுதான்.
மாற்றாக என்ன நட்டு வைத்திருக்கிறார்கள்
பார்த்தீர்களா செவ்வரளி குரோட்டன்ஸ் செடிகள்.

ஈரோடு கதிர் said...

இது குறித்து நீண்ட நாட்களுக்கு முன் ஒரு இடுகை எழுதி சிறிது திருப்தி வராமல் போடாமாலே விட்டுவிட்டேன்...

விரிவு படுத்தப்பட்ட சாலைக்கு தங்கள் பூர்வீகத்தை பலி கொடுத்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர்...

பாட்டன் பூட்டன் காலத்திலிருந்த வீடு வழியே சாலை அமைக்க, கொஞ்சம் காசைக் கொடுத்து, அந்த வீட்டை இடித்து அவர்களை அகதியாக்கி...

இப்படி அவர்கள் தியாகம் செய்த பூர்வீக பூமிமேல்தான் 120 கி.மீ வேகத்தில் பறக்கிறோம்...

வளர்ச்சி ஒருபோதும் அடிமட்ட மனிதர்களை கவனத்தில் கொள்வதில்லையே எனும் வலி இருக்கவே செய்கிறது

அன்புடன் அருணா said...

ஊரின் மாறாத சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட யோசித்துப் பார்த்தேன்...ஊஹும்......நல்ல பதிவு

☼ வெயிலான் said...

// ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாததாகத் தோன்றும் அதன் ரூபம். ஒருநாள் அந்த எண்ணங்களை வேரோடு பிடுங்கிப்போட்டு விட்டது இந்த தங்க நாற்கர சாலைத்திட்டம். //

உயிர்ப்போடு இருந்த சாலைகள் உயிரற்ற சர்ப்பமாய் இருக்கிறது.

நல்ல பதிவு!

Deepa said...

//லட்சக்கணக்கான எறும்புகளின் வாழிடம். ஆயிரக்கணக்கான பூச்சிகளின் வசிப்பிடம். நூற்றுக்கணக்கான பறவைகளின் சரணாலயம். அது மட்டுமா பலநூறு வருடங்களின் நீட்சியல்லவா அது. ஒன்றையிழந்து பிரிதொன்றைப் பெறும் இந்த வாழ்கையில் நாம் இந்த சாலைக்காக இழந்தது சரித்திர சாட்சிகள். //


:-((((

சாலைகள் விரிவுபடுத்துவதற்காக மரங்கள் வெட்டப் படும்போதெல்லாம் மிகுந்த வேதனையாக உணர்வேன்.
இப்போதும்.

மண்குதிரை said...

unmaithan sir. intha kavithaiyaip paarungka,


கடற்கரைச் சாலை.

''இந்த ரோட்ல உக்காந்தா
கன்யாகுமரிலயிருந்து
காஸ்மீர் வரைக்கும் போகலாம்''
என்கிறார் ஒரு ஊழியர்

''ரோடுதானே நாட்டோட
முதுகெலும்பு''
என்று மற்றொரு அலுவலர்.

''கவர்மண்ட் வேலைகூட
கெடைக்கலாம்''
'ஊக்க'த்தொகைக்காக
விஏஓ

''பத்தாயிரம் கெடைக்கும்''
என்று அவசரப் படுத்துகிறார்
அப்பா.

மேடேத்தி
களையெடுத்து
கதிரறுத்த
எங்க ஆச்சியின் கைகளில்
பேனா நடுங்கிக் கொண்டிருக்கிறது.

thiyaa said...

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

மிச்சம் பிடிச்சது 2 மணி நேரங்கள். தொலைச்சுட்டு நிக்கிறது பல நூறு வருசங்கள். அப்பா! தொலைச்ச எல்லோரையும் கூட்டி வச்சு ஒரு பாடு அழுது தீக்கனும். இப்போ கூட இந்தியாவின் முன்னேற்றப் பாதைக்கு உள்கட்டமைப்பை (infrastructure) சீராக்குவது அவசியம் என்று எல்லா பொருளாதார வல்லுனர்களும், அரசியல் தலைவர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது தவிர்க்கவே முடியாதா... முடியாது என்றே தோன்றுகிறது.

எனக்கும் இதே வருத்தங்கள் எப்போதும் உண்டு, ஆலமரங்கள் போன்சாயாய் போனது, தாத்தா பாட்டி, அப்பா, அம்மா என்று எல்லா உறவுகளையும் கூட கம்புயூட்டரில் தான் பார்க்கிறோம், துண்டு துண்டாய் உடையும் அன்பை காற்றில் பரப்பி, எதுவும் யாருக்கும் அகப்படாமல்,தொலைத்ததை தேடாமல், இருப்பவற்றை பெருக்குகிறோம். எல்லோருடைய, எல்லாவற்றின் தடங்களையும் அழித்து விட்டு எதன் பின் செல்வது என்று குழம்பி தவிக்கிறோம். என் வாழ்க்கையை விட, ஏதோ ஒரு கிராமத்தில் வாழும் யாரோ ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது, இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசப்பட்ட கதயா போச்சு. நினைவுகளாவது மிச்சம் இருக்கு...அவலாய் மென்று கொண்டிருக்க... சாத்தூர் சேவு, கோவில்பட்டி கடலமிட்டாய், நெல்லை அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கிருஷ்ணன் கோவில் மலைக்கொய்யா, கல்லுபட்டி வெள்ளரிபிஞ்சு என்று எதுவுமே கிடைப்பதில்லை எனக்கு இப்போது, என் மனைவிக்கு இதெல்லாம் விநோதமாப்படுது..

அன்புடன்
ராகவன்

காமராஜ் said...

ஆமாம் கதிர். உள்கட்டமைப்பு தேவைதான். இதற்கு முன்னாள் போட்ட சாலைகளைப்பாருங்கள்
நிறைய்ய வளைவுகள் உண்டு. காரணம் ஒரு சிறு மாத்தைக்கூட உரசாத சாலை அமைப்பு அது.

காமராஜ் said...

வாருங்கள் அருணா மேடம்.
முகம்தெரியாத வார்த்தைகளுக்குள்
இருக்கும் வலிமை மகோன்னதமானது.
அதை உணரும் வரை
வலைப்பக்கம் கேலியாகத்தெரியும்.
வருகைக்கு அன்பும் வணக்கமும்.

காமராஜ் said...

வெயிலான் வணக்கம்.
ஒரு முறை பகலில் காரில் திருச்சிக்குப் போனேன்.
பாலைவனத்துக்குள் பயணம் போன மாதிரி இருந்தது.
மணலில்லாமல்.

காமராஜ் said...

ஆமாம் தீபா. அது உணரும் வரை தெரியாது.
எங்கள் சிறுவயதில் பயிர்செய்த காட்டுக்குள்
நடக்க விடமாட்டார்கள். அதுவும் செருப்போடு நடந்தால்
அதோ கதிதான். மர நிழலில் தூங்காத அதில் காக்காவிரட்டு
விளையாடாத, ஊஞ்சல் கட்டி ஆடாத, புளியமரத்தின் கதை படிக்காத
அரசியல்வாதிகளுக்கு இது சாதாரணம்.

காமராஜ் said...

//எங்க ஆச்சியின் கைகளில்
பேனா நடுங்கிக் கொண்டிருக்கிறது.//

இந்த நடுக்கம் இயற்கையை ,காடுகளை, பயிர்களை மதிக்கிற
வாழும் வள்ளலார்களுக்கு நன்றாக தெரியும். நல்ல கவிதை
மண்குதிரை.

காமராஜ் said...

மிக்க நன்றி தியாகு.
வருகைக்கும் கருத்துக்கும்.

மிக்க நன்றி

காமராஜ் said...

//சாத்தூர் சேவு, கோவில்பட்டி கடலமிட்டாய், நெல்லை அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கிருஷ்ணன் கோவில் மலைக்கொய்யா, கல்லுபட்டி வெள்ளரிபிஞ்சு என்று எதுவுமே கிடைப்பதில்லை//
வாருங்கள் ராகவன். வணக்கம்.
காலையில் 'என் வானம்' பதிவில் பால்சோறும், பக்கோடாவும்
படித்தேன். இப்போது சாத்தூர் சேவு. அதுவும் சண்முக நாடார்
கடை காராசேவு இந்த உலகின் காரம் பொதிந்த பதார்த்தம்.

க.பாலாசி said...

//சாப்பிடவேண்டுமானால் விக்கிரவாண்டி மோத்திரக் கவிச்சை மோட்டேலில் போய் என்னைக்கு சுட்டதென்று கண்டுபிடிக்க முடியாத தோசையை நாப்பது ரூபாய் தெண்டங்கட்டி வாங்கிவிட்டு. திண்ணவும் முடியாமல், எடுத்துக்கீழே போடவும் முடியாமல் ஊசலாடுகிற மனதோடு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்//

இதுதான் உண்மையாக நடக்கிறது. பேருந்து நிலையங்களுக்கு செல்லாமல் அதன் புறவழிச்சாலைகளில் சென்று ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு மோட்டலில் நிறுத்தி வேறு வாய்ப்புகளே இல்லாவண்ணம் இந்த உணவுகளை திண்ண வைக்கிறார்கள்.

//விரிவு படுத்தப்பட்ட சாலைக்கு தங்கள் பூர்வீகத்தை பலி கொடுத்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர்...//

நிதர்சனமான உண்மை. இன்று சேலத்தை அடுத்த N.H. சாலையின் விரிவாக்கத்திற்கான எத்தனை வீடுகள் தங்களது பழமையை இழந்து நிற்கின்றன...

காமராஜ் said...

வணக்கம் பாலாஜி.

//நிதர்சனமான உண்மை. இன்று சேலத்தை அடுத்த N.H. சாலையின் விரிவாக்கத்திற்கான எத்தனை வீடுகள் தங்களது பழமையை இழந்து நிற்கின்றன...//

உண்மை. அதுவும் சுடும் உண்மை.

யோகராஜ் பக்கங்கள் said...

நண்பர்களே,

உங்களைப் பார்த்தே எழுதத் துவங்கினேன்.
உங்களிலிருந்தே பயணத்தைத் துவக்குகிறேன்.
என் பிளாக்கிற்கு வருகை தந்து தங்களின் வாழ்த்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
http://yogarajbabu.blogspot.com/
மிகுந்த நேசத்துடன்
யோகராஜ் பாபு.

காமராஜ் said...

வணக்கம் யோகராஜ்
நல்வரவு.
வாழ்த்துக்கள்.