Showing posts with label கன்னித்தாய். Show all posts
Showing posts with label கன்னித்தாய். Show all posts

31.12.09

முதல் புதுவருடமும் என் தேவதைத்தாயும்.


எட்டாம் பண்டியலு என்று சொல்லிக்கொண்டுதான் எனக்கு இந்த புதுவருடம் முதன் முதலில் அறிமுகமானது.அந்த வேதக்கோயிலில் குழாய் ரேடியோ அலறலுக்கு ஆட்டம்போடப்போய் பீடம் முழுக்க மெழுகுவர்த்தி எரிய அதை வேடிக்கை பார்த்தபடி அங்கேயே தங்கிவிட்டேன். சாமத்தில் பூஜை நடக்கும் போது பீடத்துப்பக்கம் காலை நீட்டித்தூங்கிய என்னை எழுப்பிவிட்டார்கள். வெள்ளை அங்கியில் அவர் ஜபம் சொல்லிக்கொண்டிருந்தார்.எனக்கு பாட்டி சொன்ன பலிகொடுக்கும் கதைகள் ஞாபகத்துக்கு வந்து அழுதுவிட்டேன்.கடுப்பான பாதிரியார் பூஜையை நிறுத்திவிட்டார்.எங்கோ சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த என் தகப்பனாருக்குச் சொல்ல, அவர் ஓடிவந்து வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்.

எட்டுப்படிக்கும்போது ஊருக்கு பிரச்சார்த்துக்கு வந்த அந்த சிஸ்டர்தான் என்னைக் கூப்பிட்டு பீடத்தை அலங்கரிக்கச்சொனார். அந்த வார்த்தை கன்களுக்குள் கிடந்த கனிவு.என் தலைமுடியைக்கோதிவிட்ட விரல்களில் சிக்கிக்கொண்டு அவர்களின் பின்னாலே அலைந்தேன்.ஊரிலிருந்து சாத்தூர் எட்டு கிலோமீட்டர் அவ்வளவு தூரம் அவர்களோடு நடந்து போய் கான்வெண்ட் வாசலில் விட்டுவிட்டு வருவேன்.அந்தளவுக்கு கிறுக்குச் செய்தது அவர்களின் அன்பு.குழிப்பணியாரம் பிடிக்கும் என்று சொன்ன அவர்களுக்காக என் அம்மாவிடம் மன்றாடி தினையில் செய்த பணியாரம் கொண்டுபோய்க் கொடுத்தேன். வாங்கிக்கையில் வைத்திருந்த அவர்களின் முகத்தில் தெரித்த வெளிச்சம் எந்த தேவதூதர்களுக்கும் கிடைக்காதது.

காட்டு வழியே நடக்கும் போது வாடா என் தங்கமகனே என்று என் தோழில் கைபோட்டபடியே நெடுந்தூரம் நடந்து வரும். அப்போது அந்த வெள்ளை அங்கியில் படிந்திரிருக்கும் டெட் சோப்பின் வாசத்தோடு நான் கண்மூடி நடப்பேன்.ஒரு வேலிப்புதரில் நின்று நீ முன்னாள் நட என்று சொன்னபோது விளங்கவில்லை.நான் அவர்களின் காவலன் என்கிற கர்வத்தில் நகரவில்லை. லூசுப்பயலே போடா யூரின் போகனும் என்று சொன்னபிறகுதான்.
தேவதைகளும் மனுஷிகள் என்பது புரிய ஆரம்பித்தது அந்தச் சின்னவயசில்.ஒரு முறை சிஸ்டர் நீங்க சடைபோடுவீங்களா என்று கேட்டதற்கு பதில் சொல்ல ஒரு பெரிய மௌன இடைவெளி விட்டதை நிறைய்ய காலங்கள் கழித்து படம் பிடித்து வைத்துக்கொண்டேன்.

அவர்கள் தான் முதன் முதலில் புது வருடத்துக்கு கான்வெண்டுக்கு வா நான் உனக்கு புத்தாண்டுப்பரிசு தருவேனென்று சொன்னார்கள்.அன்று வாங்க முடியாமல் போன அந்த சிகப்பு நிற நேவி பேனாவின் எழுதப்படாத
மையில் என்னைபெறாத அந்த அன்னையின் நினைவுகள் உறைந்துகிடக்கிறது. அது  என்னை அலைக்கழிக்கிறது.
அம்மா நீ எங்கிருக்கிறாய்.