அந்தக்காலத்தில் துணிவே துணை அப்டீன்னு ஒரு திரைப்படம் வந்தது. தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்தது.எல்லாப்படத்திலும் ஒரு சூட்கேசைத் தூக்கிக்கொண்டு சுவரோரமாகவே பதுங்கிக்கொண்டு போகிறதைதவிர அவர் நடித்ததாக நினைவில்லை என்று ஜெய்சங்கரைப்பத்தி எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. அதில் ஜெய்சங்கர் வழக்கம் போல ஒரு சிஐடி அதிகாரி. ஒரு கொலையைக் கண்டுபிடிக்க அந்த ஊருக்குப்போவார். ஊர் ஒரே மர்மமாக இருக்கும். தண்ணித்தாகம் எடுத்து மனுசன் நாக்குவரண்டு கிடக்கும்போது கூட அவருக்கு யாரும் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள்.
அந்தப் படம் பார்த்தபிறகு அந்தப் பெயருடய சாயலுள்ள எந்த ஊருக்குப் போனாலும் எனக்கு திக் திக்கென இருக்கும்.இப்படித்தான் இந்த திரைப்படம் ஒரு பொருளை அதன் கண்வழியே பார்க்க வைத்துவிடுகிறது.
இப்போதும் கூட இந்த மதுரையை அப்படிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. மதுரையென்றால் முன்னமெல்லாம் எனக்கு, எனக்குமட்டுமல்ல இந்த உலகத்துக்கு சங்கத்தமிழ்,வைகை ஆறு, மீனாட்சியம்மன்
கோவில்,திருமலைநாயக்கர் மஹால்,கண்ணகி,மல்லிகைப்பூ என பல பிம்பங்கள் நினைவுக்கு வரும்.தோழர் நன்மாறன் மதுரையப்பற்றிச் சொல்லும்போது அது ஒரு தூங்காத நகரம் என்று வர்ணிப்பார்.இரவு இரண்டு மணிக்குக் கூட சூடாகப் புரோட்டாச் சாப்பிடுகிற மக்களைப்பற்றி வியந்து சொல்லுவார் அவர்.சினிமா நடிகர்கள் எல்லோருக்கும் தலைமை ரசிகர் மன்றம் மதுரையில் தானிருக்கிறது.
ஆனால் சமீப காலமாக மதுரையென்றாலே அருவா,அடிதடி என்கிற அளவுக்கு இந்தச்சினிமா மதுரையைப் புரட்டிப் போட்டுவிட்டது.மதுரையச் சுற்றியுள்ள கிராமங்களில் எல்லோரும் முதுகு சொரிவதற்குக்கூட அருவாளைத்தான் பயன்படுத்துவது போலொரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் ஒரு படம் ஒரே படம் வெற்றியடைந்து வசூலில் சாதனை பண்ணிவிட்டால் அப்புறம் அந்த நடிகர், அந்தக் கதையின் சாயலில் கதைகள், அந்தப்படத்தின் பாடலைப் போலே பாடல்கள் போதும் போதும் எனச்சொல்லும் அளவுக்கு கொண்டுபோய்விடும் நமது சினிமா. ஒரு காலத்தில் கள்ளிப்பால் கொடுத்து குழந்தைகளைக் கொன்ற பூமியும் அதுவாகத்தான் வெளி உலகுக்குச் சொல்லப்பட்டது.கோதுமைக்கலரில் இருக்கும் தமன்னா ' நான் ..... ஊர்க்காரி வெட்டிருவன்' என்று சொல்லுவதாக காதல்கொண்டேன் படத்தில் வசனம் வரும்.இப்படியே உருமாக்கட்டி இழுத்துக்கிட்டுப்போய் இப்பொ அந்த ஒன்னுக்குமத்த விளம்பரத் தொடரிலும் மதுரைப்பேய் பிடித்து ஆடத்துவங்கிவிட்டது.
சாத்தூர் மதுரையிலிருந்து எழுபது கிலோமீட்டர் தான் இருக்கும். மதுரை மாவட்டம் விருதுநகர் தாண்டியதுமே துவங்கிவிடும். அந்த எல்லையிலிருந்து நிலம், மண், மனிதர்கள் எல்லாம் வித்தியாசமாகி தரையிலிருந்து அருவா முளைத்துக் கிடக்கவில்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.அங்கும் கூட நெல்,வாழை,கரும்பு கம்பு,சோளம்,கேழ்வரகுதான் நிலத்தில் விளைகிறது. ஒரு கொலை என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயமில்லை. அது சம்பந்தப்பட்ட இருண்டு குடும்பங்களையும் சின்னா பின்னப்படுத்திவிடும். என்சிசி சீருடையில் உள்ளூர் மாணவர்கள் வந்தால்கூட வீட்டை,காட்டை,பெண்டுபிள்ளைகளை மறந்து தலைதெறிக்க ஓட நேர்வதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைவிட கொலைசெய்த குடும்பத்தில் மிஞ்சியிருக்கிற பெண்களைப் பற்றி இன்னும் முழுமையாக எந்த இலக்கியமும் பேசவில்லை. அவர்களுக்கான இரவுகள் பெருமைகளால் அலங்கரிக்கப்பட்டதில்லை.கட்டிய மனைவியிடம் சிரித்துப்பேசியவனை வெட்டிவிட்டு ஜெயிலுக்குப்போனவனின் மனைவிதான் மிச்ச நாட்களில் அந்த ஊரின் கேலிப்பொருளாவாள் என்பதை யாரும் அவதானிப்பதில்லை.
மானுடவியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி இதையே ஒரு நூலுக்கான விமர்சனத்தின் பேசுபொருளாக காலச்சுவடு இதழில் முன்வைத்திருக்கிறார். சமீபத்தில் பருத்திவீரன் படத்தின் இயக்குனர் சகோதரர் சீமான் 'மதுரை அருவாள்களால் அறியப்படுகிறது அது பல்வேறு பகுதி மக்களின் கூட்டு வாழ்விடம்' என்பதை தனது பேட்டியில் அறியத்தருகிறார்.
ஐந்து வகை நிலங்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வட்டார வழக்குகளும் கலந்துகிடக்கிற தமிழகத்தில் எல்லா மண்ணுக்கும் தனித்தனிக்கதை உண்டு. எதுவும் பெரிதில்லை எதுவும் சிறியதும் இல்லை. இசுலாமியத்தமிழ்,கன்னடத்தமிழ்,தெலுங்குத்தமிழ்,சௌராஷ்ட்டிராத்தமிழ்,மலையாளத்தமிழ் எனும் மொழிக்கலப்பும் இங்கே கெட்டிப்படுத்தப் பட்டிருக்கிறது.சமீபத்தில் ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஒருவர் சுமார் ஐம்பதுகிலோ மீட்டர் எல்லைப்பரப்புள்ள இருக்கன்குடிப் பகுதி ஒரு நாடாக இருந்ததென்று சொல்லுகிறார். இருஞ்சோ நாடாம் அதன் பெயர். புராண கதைகளில் ஐம்பத்தாறு தேசம் என்று பாடல் வரும். அப்போது ஒட்டுமொத்த உலகத்தைத்தான் அப்படிச்சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன். இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் இருந்த நாடுகளாம் அவை. ஒவ்வொரு தெருவும் கூட ஒரு நாடாகி இருந்த கல்தோன்றாக்காலத்து வெட்டிப்பெருமைகள் பல இருக்கிறது.அப்படி வழக்கொழிந்துபோன கல்லாயுதங்களை மீண்டும் தோண்டியெடுத்து மக்களுக்கு
கையில்கொடுத்து கணினி யுகத்தின் முதுகில் ஏற்றவேண்டாம் சினிமா அன்பர்களே.