தாஹீர் சதுக்கம் மானிட சமுத்திரமாக மாறிக்கொண்டு வருகிறது. '' முபாரக் வேண்டாம் ஜனநாயகம் வேண்டும்'' என்கிற கோஷம் அலையின் உருமலோடு ஒலிக்கிறது.கெய்ரோவின் தெருக்களில் நைல் நதி பொங்கிப்பிராவகம் எடுத்தது போல ஊர்வலங்கள் நகர்ந்து வருகிறது.இந்து கிறித்தவன் என்கிற முபாரக்கின் பிரித்தாலும் சூழ்ச்சி நொறுங்கடிக்கப்பட்டு மாற்றத்திற்கான ஒற்றுமை எதிர்கொள்ளமுடியாத பேருழுச்சியாக மாறிப்போனது.’என் நாடு என் நாடு’ என்கிற தேசீய கீதம் போராட்டக்காரர்களின் சங்க நாதமாக எகிப்து முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ராணுவத்தின் சீருடைகளும் கவச வாகனங்களும் துப்பாக்கி முனைகளும் கூட தாங்கள் ஏவல் நாய்களில்லை ரத்தமும் மூளையும் உள்ள இந்த தேசத்தின் சொத்து என்பதை சொல்லிக் கொடுக்கின்றன. ராணுவத்தின் இந்த புது அடங்காமை எஞ்சிய உலகத்துக்கான வரலாறு காணாத செய்தி.
இனி எகிப்தின் பெயர் கேட்கும் போதெல்லாம் பிரமீடுடுகள் மாதிரி,நைல்நதி மாதிரி நாகரீகத்தின் தொட்டில் மாதிரி இந்த மக்கள் எழுச்சியும்
நினைவுக்கு வரும். அப்படியாப்பட்ட சூடான மக்கள்,சூது வாதுகளுக்கு இடம் தராத மக்கள், இந்த நிமிஷத்து எகிப்து மக்கள்.
இதோ எங்கள் தேசத்து நடுவன் உள்துறை மந்திரி மோடியின் கைகளைப் பிடித்துக்கொண்டு ’வாருங்கள் தீவிரவாததை ஒழிப்போம்’ என்று வசனம் பேசுகிறார். முன்பாதியில் ரவுடிகளாகவும் பின்பாதியில் கடமை உணர்ச்சி மிக்க காவலர்களாகவும் மாறுகிற திரைப்படங்கள் பார்க்கிற உணர்வுதான் மிஞ்சுகிறது. ஏனென்றால் நமது உள்துறை மந்திரி நல்ல தமிழரல்லவா ?