சொற்கள் அயற்சியூட்டும்.என்னடா எப்ப பார்த்தாலும் ஒரே அழுகையும் புலம்பலும் என்கிற வெறுப்பு வரும்.ஆனாலும் கண்ணில் தட்டுப்படுக்கிற போதெல்லாம்.அவர்கள் இன்னொரு முறை கூட ஆழ்ந்து பார்க்க அழைப்பார்கள். எறிநட்சத்திரத்தைப்பார்த்த கண்கள் உடனடியாக ஒரு பச்சை மரத்தைப் பார்க்கவேண்டுமென்கிற பழக்கம் இருக்கிறது.தொடர்ந்து கெட்டது நடக்கும் வீட்டில் வலிய ஒரு நல்ல காரியம் நடத்தவேண்டுமெகிற சாங்கியமும் இதே விதிப்படிதான். கறுப்பிலக்கியமும் அதுபோலத்தான். விடுதலையின் நிறம் என்கிற நாவலைப்படித்துவிட்டு ஒரு மனிதன் பெண்களை பழைய்ய மாதிரிப் பார்க்கவே முடியாது.ஒரு யுகத்தின் ஆணாதிக்கப்பழிச்சொல் நம் மீது கவிழ்ந்தே தீரும்.
திருவாளர் ஃப்ளிண்ட் ஒரு ஜமீந்தார்.அவரே ஒரு மருத்துவர்.அவரே ஒரு கல்வியாளர்.அவரிடம் விலைக்கு விற்கப்பட்ட கறுப்புப்பெண்ணின் வாழ்க்கை கற்பனைகளுக்கப்பால் கொடூரமானது.பகலில் துன்புறுத்துவதும் இரவில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குவதும் ஒருபோதும் சாதாரண மனநிலக்கு திரும்பவிடாது.படிக்க நேர்கிற போது குலை பதறும்.அதைவிட அதிர்ச்சி கட்டிய மனைவியின் அனுமதியோடு அடிமைகளை பெண்டாள்கிற காட்சிகள்.பிறக்கிற குழந்தைகளுக்கு இனிஷியல் கிடையாது. ஆண்குழந்தைகள் உடனடியாக நாய்க்கூட்டிகளைப்போல் கண் திறக்கும் முன்னரே விற்கப்படும்.பெண்குழந்தைகள் எஜமானர் வீட்டிலே வளரும்.அதை அனுமதிக்கிற எஜமானரின் நாக்கில் ரத்தக்கவிச்சையோடு ஏச்சிலூறும். ஆனாலும் அவர்களுக்கு இரவு-பகல்,வலி-சுகம்,பசி-படையல் எல்லாம் அந்த சிறைக்கூண்டுக்குள்ளே தான். அவர்கள் விரும்பும் வாசம்.அவர்கள் தேடும் கதகதப்பு.வேறிடத்தில் அடிமையாகிக்கிடக்கும்.
அப்படிப்பட்ட தேடலில் ஒரு கருங்குயிலின் நாதத்தோடு இரண்டு கவிதைகள்.
இதோ கறுப்புக்குரல்கள் கவிதைத் தொகுதியிலிருந்து இரண்டு கவிதைகள். காதல் கவிதைகள்.இங்கே,இந்தப்பசலையில் வலையல்களும் அணிகலன்கலும் கழண்டு விழவில்லை.காதல் குறித்து நாம் சேர்த்துவைத்திருக்கும் விழுமியங்கள் கழண்டு விழுகின்றன.
சாக்குப்போக்குகள்.
பசியோடிருக்கும் காரணத்தால்
என்னைப்பிரிந்து செல்கிறாயா நீ.
என்ன, உன் வயிற்றின் அடிமையா நீ.
உன்னைப்போர்த்திக்கொள்ள வேண்டி
என்னைப் பிரிந்து செல்கிறாயா நீ
என் படுக்கையில் போர்வை இல்லையா என்ன
தாகமெடுப்பதால் பிரிந்து செல்கிறாயா நீ
அப்படியெனில் எடுத்துக்கொள் என்மார்பகத்தை
அது பெருகி வழிகிறது உனக்காய்.
ஆசீர்வதிக்கப்பட்டது
நாம் சந்தித்துக்கொண்ட அந்த நாள்.
(எகிப்தியர்.)
0
உதவாக்கரைக் காதலன்
காற்றாலான கால்சராய்
புயலாலான பொத்தான்கள்
'ஷோ ஆ' மண்மெத்தை
'கோண்டரில்' எதுவும் மிச்சமில்லை.
இறைச்சி சுமக்கும் கழுதைப்புலி.
தோற்பட்டையொன்றால் நடத்தப்படுவது;
நெருப்பின் அடியிலே விட்டுவைக்கப்பட்டிருக்கும்
ஒரு கண்ணாடிக்கோப்பையிலான கொஞ்சம் நீர்;
அடுப்பில் வீசப்பட்ட நீரின் ஒரு படியளவு
மூடுபனியிலான குதிரை
மற்றும் ஒரு நிரம்பிய கடவுத்துறை;
எதற்கும் பயன்படாதவன்
யாருக்கும் உபயோகமற்றவன்;
எதனால் நான் காதல்வயப்பட்டிருக்கிறேன்
அவனையொத்த மனிதனிடம்.
(அம்ஹாரா)