அந்த ஜாம்பவானுக்கு பதவி உயர்வுமேல் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டிருந்தது.கேட்ட இடத்துக்கு மாறுதலும் கிடைத்தது. இப்போது அவன் ஒரு உயர் அதிகாரி. அவனுக்கு கீழே ஊழியர்கள் இருக்கனுமில்லையா. இருக்கிறவர்களில் பெரும்பாலும் பெண்கள்.அதில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பெண்.வந்த நாளில் இருந்து அவரை சீண்டுவது மட்டுமே தன் குலத்தொழில் என்பதை கறாறாகக் கடைப்பிடித்து வருகிறான்.சீண்டலின் அளவு நாளாக நாளாகக் கூடிக்கொண்டே வருகிறது.அதையெல்லாம் பட்டியலிட மனசு கூசுகிறது.இயல்பான மத்திய தர நடைமுறை அவரை கூடுதல் பொறுமைசாலி யாக்குகிறது.'பொறுமையென்னும் நகையணிந்து பெண்கள் பெருமை கொள்ளவேண்டும்'.பொறுமையிலே பூமகளாம்,அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் அம்மா அகந்தை கொள்ளக்கூடாது எந்நாளும்'.இப்படியே சொல்லிசொல்லி சோத்திலிருக்கிற உப்பை மட்டுமல்ல பெண்களின் ரத்தத்திலிருக்கும் உப்புசத்தையும் உறிஞ்சி எடுத்து விட்டது சமூகம்.
அவன், அந்த ஜாம்பவான் தனக்கு மனப்பிறழ்வு ஏற்படுகிற நேரமெல்லாம் ஏதாவது சொல்லித் திட்டுகிறான். இறுதியாக ஒருநாள் புதிதாக வந்த ஒரு பெண் அலுவலரிடம்,பேசிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை தாறுமாறாகத் திட்டுகிறான்.காரணம் அந்தப்புதிய பெண்ணுக்கு எழுந்து நின்று மரியாதை தரவில்லையாம்.புதியவரின் தாயார் வயதிருக்கும் இவருக்கு. ரெண்டுபேரும் அடுத்தடுத்த இருக்கையில் இருந்து வேலைபார்க்கும் அமைப்பு வேறு. அப்படியே மரியாதை கொடுக்க வேண்டுமென்றால் இவர் நாள் முழுக்க இருக்கையில் உட்காரவே முடியாது.இதையெல்லாம் சொல்லி ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டபொழுது "கோபம் வந்தால் நான் பிறகு யாரைத்தான் திட்டுவதாம் ?" என்று தனது அடாவடிக்கும் ஆதிக்கத்திமிருக்கும் நியாயம் கற்பிக்கிறான்.
நமக்கு நடப்பது சமூகப்பேரவலம் என்பது தெரியாதவரை அதை ஏற்றுக்கொள்கிறது அடிமைத்தனம். அந்த தளையிலிருந்து கல்வியும்,பொது அறிவும் கொஞ்சம் கட்டைத் தளர்த்திவிடுகிறது.தனக்குக் கொடுக்கவேண்டிய குறைந்த பட்ச அங்கீகாரத்தைக் கூட ஈவிறக்கமில்லாமல் சிதைக்கிறது இந்தச்சமூகம் என்பதைத் தெரிந்துகொண்டபின் ஏற்படுகிற வலி மிகக்கொடியது.அவர் இரண்டு இரவுகள் தூக்கமில்லாமல் கழித்திருக்கிறார். எதிலிருந்து விடுபடப் படித்தாரோ, எதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேலைக்கு வந்தாரோ அதுவே மீண்டும் கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு கூடவே அலைகிறது. அவன் என்ன படித்தானென்று தெரியவில்லை.
"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்"
என்று பாரதி பாடினான்.அது நடக்குமா என்பது தெரியவில்லை.ஆமா அவன அந்தச் சொறிநாய என்ன செய்யலாம் ?
0
---------------------------------------------------------------------------------------------------------------
இந்தச் செய்தியைப் பதிவிட்ட பின்னாடி படிக்க நேர்ந்த மூன்று
பதிவுகள் சுஷ்மா திவாரியின் வழக்கு குறித்தது.
ஒரு வேற்று சாதி ஆடவனை காதலித்து மணந்ததால் வெறியேறிய உயர் மிராண்டிச் சகோதரன் காதலனோடு மூன்று பேரைக் கொன்று போட்டிருக்கிறான். 2004 ல் நடந்த இந்த குற்றத்துக்கு கிடைத்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பாகியிருக்கிறது.
அது குறித்து விமர்சனம் இல்லை. ஆனால் அதற்குக் கூறப்பட்ட விளக்கம் மிக மிக கொடூரமானது. கொலையை ஆதிக்க மனோபாவத்தோடு நியாயப் படுத்துகிறது. ஆழ்ந்த விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டியஇதை அன்புத் தோழர்கள்
முகிலன்
http://pithatralkal.blogspot.com/2010/03/blog-post_13.html
ச.தமிழ்ச்செல்வன்மகளிர் தினமும் இரண்டு கதைகளும்
வெண்ணிற இரவுகள் கார்த்திக்
தங்கள் பதிவுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதை நண்பர்கள் அன்பு கூர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------