Showing posts with label பங்குனிப்பொங்கல். Show all posts
Showing posts with label பங்குனிப்பொங்கல். Show all posts

23.4.11

அசைபோடக் கிடைத்த நாட்கள்.


நான்கு நாட்கள் கிராமத்தில் கிடந்தேன்.விளைந்து மூன்று வருடங்களான வயல்வெளிகளினூடே நடந்து கண்மாய்க்கரைக்கு போனோம்.
அங்கே குழுமிக்கிடக்கும் புளியமரத்தடியில் உட்கார்ந்து அசைபோட்டோம்.தழும்பிக்கிடக்கும் கிணற்று நீரில் குதித்தோம் நேரம் போவது தெரியாமல் தவளைகளோடு நீருக்குள் கிடந்தோம்.ஷாம்பு, சோப்பு வகையறாக்கள் இல்லாத சிரிப்பும் கும்மாளமும் நீச்சலும் பாட்டுமான ஒரு குளியல் கிடைத்தது.

கருப்புநிலாக்கதைகளில் வரும் ஆனியன் தோசையைச் சிலாகித்துவிட்டு எட்டாவது குழந்தை பிறந்தபோது தன் மனைவிக்கு கருத்தடை செய்துகொண்ட பிச்சைக்கனியின் கதையை ஊர் சொல்ல இடி இடி எனச்சிரித்துக்கிடந்தோம்.உலகப்புரட்சிக்காரன் சேகுவேராவைப்பற்றி சொல்லச்சொல்ல முதியவர்களோடு இளைஞர்களும் நெருங்கி வந்து கதை கேட்டார்கள்.

காலையில் கறிவதக்கி இறக்கியதும் மாதவராஜ் தம்பியும் போட்டோக்கட கார்த்தியும் வருவாங்களாய்யா என்று அம்மா கேட்டார்கள். உட்காரக்கூட இடமில்லாத அந்த ஓட்டுவீட்டில் நண்பர்களோடு உட்கார்ந்து சாப்பிட்ட சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.கூடவே தளுத்தளுக்கும் குரலில் அம்மாவும் அவளும் குட்டியின் நினைவுகளைச் சொன்னார்கள்.இரவு சந்தோஷம் பொங்கும் வார்த்தைகளோடும் சந்தோஷக்குப்பியோடும் அன்புத்தம்பி பாலு வந்தான்.ஊர்தாண்டி இருக்கும் பம்புசெட்டு வாய்காலைல் உட்கார்ந்து பேசினோம்.

சாப்பாடு செமிக்க வெத்திலை போட்டுக்கொண்டிருக்கும்போது சாமியாடிக் கருப்பசாமிச் சின்னையா வந்து எங்களோடு உட்கார்ந்து தமிழகத் தேர்தலையும் அரசியலையும் பேசினார்.கடவுளின் தூதுவரோடு கருத்து யுத்தம் நடத்தினோம்.அவரும் கூட அன்னா ஹசாரேயைப்பற்றி புகழ்ந்து பேசினார்.இது அவருக்கிருக்கிற இன்னொரு நம்பிக்கை.வெப்பங்குச்சிகள் எரியும் அக்கினிச்சட்டியோடும்,மேளக்காரர்களின் வியர்வையோடும் வெறியேற்றுகிற டண்டனக்கா உருமியோடும்  சாயங்காலம் நாக்கில் சூலாயுதம் குத்தி சாமியாடினர்.கழுத்து முங்கக்கிடக்கும் ஊர்மாலைகளோடு நாங்களும் மாலைபோட்டோம்.

பார்க்கிற இடமெல்லாம் பான் பராக் தாள்களும், உடைந்த டாஸ்மாக் குப்பிகளும் கிடந்தன.தினம் முன்று நான்கு சண்டைகள் கூட நடந்தது.நூறு ரூபாய்க்கு ரம்மிச்சீட்டு விளையாண்டார்கள். இவைகளுக்குள்ளேதான் அவர்களின் கொண்டாட்டமும், அன்பும், விருந் தோம்பலும் கிடந்தது.

பாளையங் கோட்டையிலிருந்து கரகாட்டக் கோஷ்டி வந்திருந்தது இரவு முழுக்க சினிமாப்பாட்டும் ரெட்டை அர்த்த வசனங்களுமாக கேட்டுக்கொண்டே இருந்தது.விடிந்த பிறகு முதல் பேருந்துக்காகக் காத்திருந்த கரகாட்டக் கோஷ்டியில் அந்த இரண்டு பெண்கள் இருந்தார்கள். கொண்டு வந்திருந்த சூட்கேஸ் மேல் சுருண்டு படுத்துக்கிடந்த அவர்கள் மேல் இரவு முழுக்க எரிந்த காமப்பார்வைகள் கூட சுருண்டு கிடந்தது.ரெண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் ஆடிவிட்டு முடித்துக்கொள்ளலாமே எதுக்கு விடியவிடிய ஒடம்ப வருத்தனும் என்று கேட்டேன்.விடிய விடிய ஆடுவது சம்பளத்துக்காக மட்டுமில்லை கூட்டிக்கொண்டு வந்த பொம்பளப்பிள்ளைகளின் பாதுகாப்புக் காகவும் தான் என்று சொன்னார். அப்போது குட்டைப்பாவாடைக்கும் ஜிகினா ரவிக்கைக்கும் இடையில் தெரியும் அவள் பசித்த வயிறு நினைவுக்கு வந்தது.

ஊரை விட்டுக்கிளம்பும்போது சித்திகள், சித்தி பிள்ளைகள், பங்காளிகள், பெருசுகள் என அன்பும் பாசமுமாக சூழ்ந்து கிடந்தேன்.எல்லோரும் கொடிஎறக்குனாப்பெறகு போகலாமுல்ல எனச்சொல்லிக்கொண்டே வழியனுப்பினார்கள்.ஊருக்கு மேற்கே மஞ்சநீராட்டுக்கு அடிக்கிற மேளம் மெல்ல மெல்ல குறைந்துகொண்டே இருக்க வாகன இறைச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது.

25.4.10

பங்குனிப்பொங்கலும் அக்கினி நட்சத்திரவெயிலும்

இரண்டு வாரமாகப் போகிறது இன்னும் மனசு அடங்கவில்லை. ஊர்போய் வந்த திருப்தியில்லாமால் பாதியில் கிளம்பி வந்ததுபோல இருக்கிறது.


வியாழக்கிழமையே பொங்கல் ஆரம்பித்துவிடும் ஊர் முழுக்க வேப்பங்குலைகள் தோரணமாகத் தொங்கும்.யாரும் செருப்புப் போட்டுத் தெருவில் நடக்கக் கூடாதென்பார்கள். அந்த வாரம் முழுக்க பொத்துக்கால் பொன்னுச்சாமி மாமா கடைக்குக்கூட போகாமாட்டார். அவருக்கு செருப்பில்லாமல் ஒரு அடி எடுத்து வைக்க மிடியாது,ஆத்தாளுக்கு செருப்புப்போட்டால் ஆகாது.

எய்யா மாப்ள  ஒரு கட்டு சொக்கலால் பீடி வாங்கிட்டு வாங்க

சரி கொண்டாங்க

யோவ் இந்தரும், யோவ் கிழிஞ்ச செருப்பு, போடாதிரும்

சொல்லச் சொல்லக் கேட்காமல் கருப்பாயம்மா கடைக்கு பொன்னுச்சாமி மாமா செருப்போடு போய் திரும்பிவந்தபோது வீட்டுக்கு பலபேர் பிராது சொல்லிவந்துவிட்டார்கள்.அம்மா உட்காரவைத்து ஆச்சாரத்தை மீறக்கூடதென்று சொன்னது அப்போதெல்லாம் உறைக்கவில்லை.ராத்திரி சீதை மதினி உருவில் வந்த கனவு மாரி என்னை மடியிலமர்த்திக் கொண்டு 'ஓங்கண்ணையெல்லாங்  குத்தமாட்டன்  நீ பயப்படாமத் தூங்கு'என்று சொல்லிவிட்டுப்போனது.இதுபோலொரு பொங்கல் நாளில் கவுறு குத்து நடக்கும்.நேத்திக்கடன் செலுத்துவதற்காக இடுப்பில் ஊசி வைத்து நூல் கோர்ப்பார்கள்,அன்றைக்கு இரவு ஏழு மணிவாக்கில் பெரிய சாமிக்கு நாக்கில் சூலாயுதம் குத்துவார்கள்.

அந்த நேரம்  பெரிய சாமியைச்சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க வடக்குத்திசை நெடுக ஒரு பாதை அமைந்திருக்கும் அந்த ஆளில்லாப்பாதையின் குறுக்கே யாரும் போகக்கூடது.கொட்டுஅடிப்பது நின்று போய்  தீப்பந்தங்களின் ஒளியில்,அக்கினிச்சட்டியின் தீயில் எண்னெய் எரிகிற வாசமும் கடுகு வெடிக்கிற மாதிரி தீயெரியும் சத்தமும் மட்டும் வரும். கிழக்குப் பக்கம் நின்றுகொண்டிருந்த வேலவர் அருகில் நிற்பதகாக ஆளில்லா பாதையைக்கடந்த போது் கூட்டம் என் பேரைச்சொல்லிப் போகாதே போகாதே எனக்குரல் கொடுத்தது.அன்றும் கூட கறிக்குழம்பை ஊற்றிக்கொண்டே திட்டிய அம்மாவின் வாத்தைகள் சோத்தத் திங்க விடாமல் விரட்டியது. ஊர்மடத்தில் பசங்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் பசி கிளறிக் கிளறி வீட்டுப்பக்கமே பார்வையை கொண்டுபோனது. நினத்த படி அம்மா வந்தாள். 'என்ன சொன்னாகன்னு இப்டி நல்ல நளும் பொழுதுமா பட்னியாக்கெடக்க,ஏ வேலவரு ஓப்பிரண்ட சாப்பிடக் கூட்டியா' ன்னு சொல்லிவிட்டுப் போனாள்.

கல்லூரியில் கிடைத்த நட்பின் மூலமாக அறிமுகமான பெரியார் திராவிடக் கட்சி கருஞ்சட்டை தோழர்களும்,என் பால்ய நண்பன் முருகையாவின் மூலம் அறிமுகமான sfi யும் எனக்குள்ளே சில கேள்விகளை ஊன்றியிருந்தது.
அதையெலாம் அர்த்த பூர்வமாகச் சொல்லுகிற அறிவும் அப்போது எனக்கில்லை,அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவமும் ஊருக்கில்லை. காலையில் வந்த 'பெரியசாமி 'அஞ்சத்தாத்தன்   'ஏவிள  ஏ  செம்பட்டச் சிறுக்கி( என்னை அப்படித்தான் கூப்பிடுவார்)  படிச்சா கிறுக்குப் பிடிக்குமா'  என்று கன்னத்தை இனுங்கிவிட்டுப் போனார்.

ஊரைவிட்டுப்போனதும் அந்த சடங்குகளின் மேல் ஒரு சிநேகம் வந்தது.ஒரு வருட உழைப்பை,வறுமையை  இயலாமையை விரட்டி விடுகிற திருவிழாவாக வந்து போகும் பொங்கலன்று, எங்கெங்கோ போய்  வயிறு நிறப்பும் மாணாவரி மனிதர்கள் வந்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து   பழயவற்றை அசைபோட்டபடி ஊர்ச்சண்டை பார்க்கிற தருணத்துக்காக நானும் வருஷா வருஷம் போவேன். தொண்ணுறுகளுக்குப்  பிறகு மாது,கார்த்தி,இன்னும் சில தோழர்கள்  ஊருக்கு வருவார்கள். உட்கார இடம் பற்றாத அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்தக்கிராமத்தோடு ஐக்கியமாவார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் வந்து நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் போகும் தருணங்களில் எங்கம்மா பூரிப்போடு ' எய்யா வாங்க உள்ள சோறுபோட்டாச்சு'  என்று  கடைக்கும் வீட்டுக்குமாக அலைவாள்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழிந்து போனது. போன திங்கள் கிழமை நண்பர்கள் இல்லாத, பையன்களில்லாத, பொங்கலாக வந்தது. சொல்லி முடியவில்லை பெரிய பேரன் வரலையா, ஒங்க அக்காதங்கச்சி வரலையா, என்னன்னே இந்த தடவ தோழர்கள் வல்லையா கேள்விகளுக்கு அவள் தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

சூடுபிடித்துக்கொண்டது,எழுமிச்சம்பழம் வாங்கிவர மேலக்கடைசியில் இருக்கும் கடைக்குப்போனேன். 'எப்பா அடிப் பொசுக்குது செருப்பு போட்டுட்டுப்போ',  அம்மா சொன்னாள். பாதிவழி போனபிறகு வெயிலின் உக்கிரம் பாதத்தை வெந்து போகவைத்தது  ' எய்யா பேங்காரரே காலு பொத்துப்போகும்யா, இந்தாங்க செருப்பு போட்டுக்குங்க ' என்று கொண்டுவந்து கொடுத்தார். பரவாயில்ல என்று சொல்லிவிட்டு செருப்பில்லாமல் கடைக்குப் போனேன் . மாரி என் சாமியில்லை கொஞ்சம் வயதான எங்கள் ஊர் மூதாட்டி.