பனி சூழ்ந்த காலை நேரத்தில் டெல்லி செங்கோட்டை தொடங்கி உள்ளூர் கம்மவார் நாயுடு பெண்கள் மேநிலைபள்ளி வரை கம்பத்தில் கீழ்நிற்றல் பாரீர் காணரும் வீரர் திருக்கூட்டம் எனத்தேசியக் கொடியை அண்ணாந்து பார்த்துக்கொடிருந்தது இன்னொரு இந்தியா. பின்னர் மாநிலம் தோறும் சாதனை அணிவகுப்பு நடந்தது அதை அரசுத்தொலைக்காட்சி நேரடியாக ஒலிபரப்பயது.அரசின் அணுமதிபெற்று நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் ஒரு வரிச் செய்தியாகக் கடந்துபோயின.
அதே அதிகாலையிலே கலை கட்டிவிட்டது தொலைக்காட்சி அலை வரிசைகள்.நேற்றுவந்த காம்பியரிலிருந்து இசங்கள் பற்றிப்பேசும் கோபிநாத் வரை சினிமாவுக்குள் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் கிடந்தார்கள்.எல்லா அலை வரிசையிலும் தமிழ்த் தெரியாத ஒரு பதுமை உட்கார்ந்துகொண்டு அணிச்சையாக சிரித்துக் கொண்டும் அணிச்சையாக விரித்துப்போட்ட கூந்தலை ஒதுக்கிக்கொண்டும் இருந்தது.திரைப்படம் எனும் ஊடகம் எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதை அறிவார்ந்த பேட்டிகள் விளங்கப்பண்ணியது. தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட கிண்டலும்,கேலியும் உண்மையில் பார்வையாளர்களைப் பார்த்து வக்கணம் காட்டுவதாகவே தெரிகிறது.
சோப்பு சீப்பு கண்ணாடிக் காரர்களோடு சேர்ந்து வேலம்மாள் கல்வி நிறுவணமும் விளம்பரத்தில் போட்டி போட்டது. பெயர் மட்டும்தான் வேலம்மாள். கட்டணம் எல்லாம் டாடா - பிர்லாம்மாள். எங்காவது இரைச்சலான சத்தம் கேட்டால் என்ன இங்க சந்தக்கடையா நடக்கு என்று ஒரு விமரிசனம் வரும்.அந்த இரைச்சலை ஐந்து நிமிடத்துக் கொருதரம் ஓய்வில்லாமல் வழங்கியது விளம்பரங்கள்.இடையிடையே குடியரசைக் கொண்டாடுவோம் என்கிற சத்தமும் கேட்டது அதுவும் அந்த பதுமைகள் அணிச்சையாக முடியை ஒதுக்குவதுபோலவே இருந்தது.
பிரபலமாகாத ஒரு அலைவரிசையில் பொதுமக்கள் ஒரு பேட்டியில்,மாணவி ஒருத்தி வேற்றுமையில் ஒற்றுமை என்று மணப்பாடப்பகுதியை ஒப்பித்தாள். அதே நேரம் தான் மீண்டும் கர்நாடகத்தில் மைசூர் மாவட்டம் ஹின்கலில் ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் சூறையாடப்பட்டிருக்கிறது. சாலையோர வியாபாரி ஒருவர் சின்னவெங்காயத்தை நிறுத்துப் போட்டுக் கொண்டே 'குடியரசுண்ணா என்னன்னு தெரியலீங்க' என்று அப்பாவியாகச் சொன்னார்.அவர் உண்மையில் எல்லோரையும் விட நியாயமானவர்.பசியோடிருப்பவனுக்கு உணவு தெய்வம் என்று சொன்னார் புரட்சித்துறவி விவேகானந்தர்.ஒரிஸ்ஸாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அபாயமாக அதிகரிக்கிறது. இது வரை பசிக்கிறையானோர் எண்ணிக்கை 400 என்பது புள்ளிவிபரத் தகவலல்ல அவமானத் தகவல்.
இருபத்துநான்கு மணிநேர இரைச்சலில் இந்த செய்திகள் காணாமல் போய்விடுகின்றன.மாய்மால விளம்பரத்தில் வளர்ந்து வரும் வறுமை கவனப்படுத்தப் படாமல் போகிறது.இது விதிவிலக்கல்ல,இது ஒதுக்கிவிடக்கூடிய அல்லது கடந்துவிடக்கூடிய செய்திகளும் அல்ல அரசு கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டிய தகவல்கள்.குடியரசு
மக்களால் ஆனது.
நண்பர்கள்,பார்வையாளர்கள்,தொடர்ந்து பின்னூட்டம் வழியே என்னை ஊக்குவிக்கும், பின்தொடர்பவர்கள் மற்றும் தமிழ்மணம்,தமிழிஷ் குழுமம் அணைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இது எனது 200 வது பதிவு.