21.2.09

அழுகை சங்கீதம், அலறல்....?
முந்திய நாள் மிரட்டிய

ஆசிரியரோ, தெரு நாயோபடுக்கையில்

மூத்திரமாய் நனைத்திருக்கும்.

சளிப்பிடித்தால் கிலிப்பிடித்து மருத்துவர் தேடி ஓடும்

பசியை அடகு வைத்து பலூன் வாங்கிக்கொடுக்கும்.

நெடுநாட்கள் இலையெனினும்

சில மணி நேரப்பிரிவில்தென்படும் பிள்ளைகளெல்லாம் தன்மக்கள்போலிருப்பர்.


விருட்சமோ, செடியோ,

விதைகளைக் கருகவிட்டால்

உலகம் கருகிப்போகும்.

மாமிச வெறி இருந்தாலும் கூட

செல்லப்பிராணியைக்கொல்லாதது மனிதர் உலகம்.பேருந்து பயணத்தின் அடுத்த இருக்கையிலிருந்து

தாவிக் கை நீட்டும் தளிர் விரல் தொடாத

துப்பாக்கியே உனக்கும், ஙொப்பன்

ராஜபக்சேவுக்கும்

என்னதெரியும் குழந்தையின் மகிமை.

20.2.09

நினவுகளின் அடுக்கிலிருந்து கிளரி எடுத்த குயில் சீட்டு
ஒரு மாலை நேரம் நகரப்பேருந்துகாக் காத்திருந்த போது என்னருகே இருசக்கர வாகனம் வந்தது. ஏறிக்கொள்ளுங்கள்வீட்டருக்கே இறக்கிவிடுகிறேன் என்னும் உதவிக்குரல் அழைத்தது. தயங்கியபோது வாகன ஓட்டி அண்ணே என்னைத் தெரியலையா நான் ஸ்ரீரெங்கபுரம் உங்க பக்கத்தூர்க்காரன். நினைவுகளின் அடுக்கிலிருந்து கிளரிக் கிளரி எடுத்துப்போட்டகிளிச் சீட்டில், தனது தந்தையோடு மாட்டுத்தோல் கட்டிய பானைத்தாளத்தைச் சுமந்து வந்த சிறுவன் மங்களாக தெரிந்தான். அவன் பெயர் இன்னும் பிடிபடவில்லை. ஆனால் அவனது பேச்சில் ஒரு வசீகரப்பாடலின் சின்னச் சின்ன ஒலிவடிவம் அடங்கியிருந்தது.


" காளியப்பத் தாத்தா மகனா "


" ம்ம்...பாம்பாட்டிக் காளியப்பன் "


ஆவாரம்பூ படத்தில் வரும் நாசரின் மீசை, காளியப்பத் தாத்தாவின் மீசைபோலிருக்கும். மேலாடை இல்லாத கிராமத்துசரீரம். பகலில் சிந்திய வியவையின் மேலே விசிறுகிற வசீகரக் குரல் . பாம்புகடிக்கு பாடலால் வைத்தியம் செய்த இசைமருத்துவர் அவர். காடுமேடுகளில் வெறுங்காலோடு உழைக்கிற சம்சாரிகளுக்கும் கூலிக்காரர்களுக்கும் பாம்புகள் எதிரியில்லை. மிதிபட்ட பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதற்கு ஏழை பணக்காரன் வித்தியாசமும் இல்லை. பின்னால் கைமருந்தும் வேப்பங்குலையும் தவிரக் கிராமங்களுக்கு வேறெந்த மருந்துமில்லை. விஷமுறிவு தீரும் வரை தூங்கக் கூடாது என்பது கட்டாய வைத்தியம். அன்று இரவு கடிபட்டவரின் வீட்டு வாசலில் ஊர் விழித்திருக்கும். சுத்துப்பட்டியில் யாரைப் பாம்புகடித்தாலும் " கூப்பிடு பாம்பாட்டிக் காளியப்பனை " என்ற குரல் ஆவலாக ஒலிக்கும்.தீப்பந்தமோ, பெற்றோமாஸ்க் விளக்கோ, அரிக்கேன் விளக்கோ அவரவர் வசதிப்படி ஏற்றிவைக்கப்படும்.அந்த மங்கிய ஒளியில் இரவு முழுவதும் கடிபட்ட நோயாளியோடு வாழ்க்கையில் அடிபட்ட மக்களின் வேதனையை ஒத்திவைக்கிற கதைப்பாடல்கள் நடக்கும். முதல் வட்டத்தில் ஊர்ப் பெரியவர்களும் முதியவர்களும் , நடுக்கூட்டத்தில் மற்றவரும், ஓரத்தில் பெண்களுமாக மக்கள் அரங்கம் கூடும். பாடறியேன் படிப்பறியேன் படிப்புவகை நானறியேன் என்று முன்னிரவு தொடங்கி விடிய விடியமக்களைத்தூங்க விடாது தாலாட்டும் காளியப்பத் தாத்தாவின் குரல். வரிவடிவில் தனது கைவசம் எதுவும் வைத்திராத அவர் ஒரு நூறு கதைப்பாடல்களின் நடமாடும் ஆவணக்காரன். விராட பர்வம், கீமாயாணம், குறவன்பாட்டு, மதுரைவீரன் கதை,நந்தனார் சரிதம், கட்டபொம்மன் கதை, காத்தவராயன் ஆரியமாலா கதை, அரிச்சந்திர மயானகாண்டம், என்று பிரபல நாடோடிப் பாடல்களின் பெரும் பட்டியல் வைத்திருந்தார்.கதையின் ஊடே நடப்புகளை ஊருக்குச்சொல்லும் கலைஞனின் தவிப்பு காளியப்பத் தாத்தாவிடமும் உண்டு.1969 ல் அறிஞர் அண்ணாவின் மரணத்தையும் அதைத் தொடர்ந்து இறுதி ஊர்வலத்துக்கு ரயிலில் போனவர்கள் இறந்த பரிதாபமும் செய்தித்தாளில்லாக் கிராமங்களுக்கு இசையோடு கொண்டு சேர்த்தவர். " அண்ணமாரே தம்பிமாரே அருமையுள்ள அக்காமாரே மன்னே மணிக்குறவன் மாண்ட கதையச்சொல்லிவாரேன் " சிட்டி பஸ்ஸு ஓட்டிவரும் டிவிஎஸ் டைவரவன் " என்று எழுச்சிக்காரன் மணிக்குறவன், தீச்சட்டிக் கோவிந்தன் இப்படி கணக்கிலடங்காக் கதைசொன்னவர். நடுச்சாமத்தில் தூக்கம் கண்சொக்கும் நேரத்தில் அந்தக்கூட்டத்தில் உட்கார்ந்திருக்கும் யாராவது ஒருவரின் ஊரறிந்த நடப்பைப் பாடலாக்கி கூட்டத்தை எழுப்பிவிடும் வித்தைக்காரர். ஓட்டமுந்தா பெருநடையா ஐயா ஓடிக்கொண்டு இருக்கிறானே என்று பாடும்போது பின்பாட்டுக்காரார் தன்னனன்னே னன்னன்னானே போடு தானன்னே தன்னத்தானே என்று சேர்ந்துகொள்வார். கூட்டம் ஆவலோடு கேட்டுக் கொண்டிருக்கும்போது. பாட்டைச் சுத்தமாக நிப்பாட்டிவிடுவார். கூட்டத்திலிருந்து பாட்டு நின்றுபோனதற்கான காரணம் கேட்கும் ஒரு குரல். " காப்பித்தண்ணி இல்லாமலே சும்மா கலங்குறானாம் ஊமத்தொர " என்று பாட ஆரம்பித்து விடுவார்." இந்தா வந்திருச்சி, ஏ எண்ணா வெக்கத்தக் கெடுக்காதெ " என்றபடியே ஐந்து நிமிட அவகாசத்தில் வரக்காப்பி வந்து சேரும். வந்த காப்பிக்கு வணக்கம் சொல்ல கதைகளில் வரும் பெண் பாத்திரங்களை காப்பி கொடுத்த நாச்சியா மாதிரி " கொனத்திலயும் தங்கக்கொனம் அல்லி..லே லேலோ, அவ கொளம்பு வச்சா நெய் மணக்கும் அல்லி..லே லேலோ" மனத்துலயும் நல்லமனம் அல்லி..லே லேலோ, ஒரு வெத போட்டா குருணி கொட்டும் அல்லிலே லேலோ " இப்படி இட்டுக்கட்டிப் பாட்டுச்சொல்லும் கலைஞன் காளியப்பத்தாத்தா.
தனது பாடலெங்கும் சாதாரண ஜனங்களையே கவனப்படுத்தும் அவர் ஒரு போதும் நிகழ்ச்சிக்காக சன்மானம் ஏதும் பெற்றுக்கொள்வதில்லை.


இரவில் பாடிமுடித்து விட்டுப் பகலில் காட்டுக்கு உழைக்கப்போகும் அவர் தனக்கென தன் பாடல்களைக் கூட சேமிக்கத் தெரியாத பொதுப்பாடகன். ஏடறியா ஏழைகளின் இலவச ஊடகமான அவரது பாடல்கள்வியர்வைக்கும் வேதனைக்கும் தற்காலிக நிவாரணி.நாட்கள் நகர்ந்துபோனது. ஒரு நாள் அலுவலர் குடியிருப்புப் பகுதியைக் கடந்த போது நான்குபேர் ஒலிபெருக்கி வைத்துக் கொண்டு கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தக்கூட்டத்தின் நடுவில் ஓசன்னா கீதம் பாடுவோம் என்று பாடிக்கொண்டிருந்த வாலிபன் காளியப்பத் தாத்தாவின் மகனேதான்.

17.2.09

முளைப்பாரிகள் மீண்டும் வயலில்
உள்ளே வரும்போது வாடிய பயிர்போல வந்தார்கள். வருவதற்கு முன்னாள் ஒரு குடிகார ஆணும், மெல்லிய குரலில் பெண்ணும் சண்டையிட்டுக்கொள்ளும் சத்தம் கேட்டது. உள்ளே நுழைந்த அவர்கள் தான் சண்டையிட்டிருப்பார்களென்றுசொன்னால் யாரும் நம்புவதற்கில்லை. படித்த கதைகள் ரசித்த சினிமாக்களின் நாயகிகளோடு ஒத்துப் போகிற ஜாடை இருந்தது. கையில் ஒரு குழந்தையுமிருந்தது. அப்படி லட்சணமான பெண்கள் வந்தால் மேனேஜர் காபின் தொடங்கி மெஸ்ஸஞ்சர் இருக்கை வரை சுறுசுறுப்பாகிவிடும். நான் உங்களுக்கு உதவலாமா என்கிற குரல் எல்லோர் உதட்டிலும் தயாராக நிற்கும். யாரையும் எதிர்கொள்ளாது வாடிக்கையாளர் இருக்கையில் அமர்ந்துகொண்டது. கூட்டம் வழிந்த பின்னும் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தது. ஒரு ஐந்து நிமிடம் வங்கியின் காற்றாடிச் சத்தம் மட்டுமே பிரதான பின்னணி இசையாகியிருந்தது. மெசெஞ்சர் ரபீக் தான் அந்த மௌனத்தை உடைத்தார். "வரவு செலவு நேரம் முடியப்போகிறது உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ". "செல்வி மேடம் வல்லையா" என்று கேட்டது. அன்றைக்கு செல்வி மேடம் வேறு ஒரு கிளைக்கு டெபுடேசன் போயிருந்தார்கள். இதைச்சொன்னதும் நம்பிக்கையின் கடைசி இழை அறுந்தது போலமுகம் மாறியது.


நகை அடகு வைக்கணுமா?

மேடத்துக்குச் சொந்தமா?

வேற ஏதுனா லோன் விஷயமா?


ரபீக்கின் எந்தக்கேள்விக்கும் பதிலில்லை. ரபீக் என் முகத்தைப்பார்த்தார். நானும் எனது பங்குக்கு கேட்டேன் பதிலில்லை.இங்க பாருங்கம்மா மேடம் லீவு எதாவது எங்ககிட்ட சொல்ற மாதிரி இருந்தாச்சொல்லுங்க என்றேன் .குனிந்த தலை இன்னும் கீழே குனிந்தது. கொஞ்சம் தயங்கி '' சப்ப்டீங்களா '' என்றதும் மடியில் இரண்டு மூன்று சொட்டுக் கண்ணீர் விழுந்தது.
சித்திரை வெயிலில் வாசலுக்கருகில், வேஷ்டி ஒதுங்கி வாயைப் பிளந்து கொண்டு கிடக்கிற கணவனென்னும் உத்தியோகத்துக்காரன். மார்ச் சேலையை இழுத்து இழுத்து ஓய்ந்து போய் கீழே கிடக்கும் ஏதோ ஒன்றைத் தேடி ஊர்ந்துபோகும் கைக்குழந்தை. இறுதிக் கையிருப்பான தாலியை நீட்டியது அடகு வைக்க. எப்போதோ செல்விமேடம் சொன்னபக்கத்து வீட்டுக்கதை நிழலாடியது.
" அவ்ளோ கலர், அவ்ளோ அழகு, வீட்டை விட்டு வெளியே வராது. வாசல் கதவு விட்டா கார்க் கதவு தொறக்கும், பெரிய தீப்பெட்டிக் கம்பெனி ஓனர். காலேஜ் படிப்ப நிறுத்திக் கல்யாணம். அதுக்கப்புறம் வெளியே வராது ". " மனுஷியா இல்ல மொளப்பாரியா " என்று நான் கேட்டதும் '' அட இது நல்லாருக்கே '' என்று சொன்னதும்ஊர்ஜிதம் ஆகியது.
மேனேஜர் குய்யோ முறையோ என்று கத்தினார், உடனிருந்த இன்னொரு எழுத்தர் இந்தியாவைத் தாங்கும் இன்னொரு தூண் இடிந்து போனதாகக் கவலை கொண்டார். வெகுநேர உணர்ச்சி பட்டிமன்றத்துக்குப் பின். இப்படி முடிவாகியது.ஆளுக்கு கொஞ்சம் பிரித்து அவர்களுக்கு கையில் கொடுக்கவும் மேனேஜர் கொஞ்சம் புத்திமதி சொல்லவும்.


" இந்தாங்கம்மா.... இங்க தாலியெல்லா அடகு வாங்குறதுக்கில்ல, என்னதா கஷ்டன்னாக்கூட இப்டி.. "


சட்டென எழுந்து, முகத்தைத்துடைத்துவிட்டு மேனேஜரை நேரடியாகப் பார்த்து ரொம்பத் தீர்க்கமாக சொன்னது.


" சார் அதுவு தங்கந்தான "


நீண்ட நாள் கழித்து. தலையில் பஞ்சுத்துகள்கள் ஒட்டிக்கொண்டிருக்க, கையில் வயர்க்கூடையோடு பேருந்தில் ஏறியபத்துப்பெண்களுக்கு நடுவில் சிரித்த முகத்தோடு அந்தப்பெண்மனி.

16.2.09

நினவுகளின் பதுங்கு குழி
இரண்டு நாட்களாக இந்தப்பாடல் வந்து வந்து அலைக்கழிக்கிறது.


சத்தமில்லாமல் வந்து உயிரைக் கவ்வும் ஒரு பார்வைபோல.

அதிகாலை நேரத்து குளிர் நிசப்தத்தில் தூரத்து

மரத்திலிருந்து எறியப்படும் குயிலின் ஒற்றை குரல்போல.

ஒரு பசிய மாலையில்தன்னந்தனியே நடக்கையில்

கூடவரும் ஒற்றையடிப் பாதைபோல.

ஆளில்லா வீட்டில் நினவுகளைத்

திறந்து உள் நுழையும் காற்றைப்போல.

சந்தடி மிகுந்த நகர நெரிசலில்கண்தெரியாத

இசைக் கலைஞனின்புல்லாங்குழலில் இருந்து கசியும்

மனதுக்குப் பிடித்த திரைப்படப் பாடல் மெட்டைப் போல.


ஒரு சமீபத்து பாடல். அது ஹாரிஸ் ஜெயராஜின் இசையில், வாரணம் ஆயிரம் திரைப்படப்பாடல். ''அனல் மேலே பனித்துளி:"...ஒரு அமைதிப் படையல். சுதா ரகுநாதனின் குரலில்.


அம்மாவும் நீயேஅப்பாவும் நீயே, கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே, காற்றினிலே வரும் கீதம், மாலையில் யாரோமனதோடு பேச, இயற்கையெனும் இளைய கன்னி, நிலவு தூங்கும் நேரம், .......................................................................இதே போல ஆயிரம் பாடல்கள் வந்து பொக்கிஷமாகக் கிடக்கும் இசைப்பரப்பில் இன்னொன்று.


"சந்திப்போமா கனாக்களில் சில முறையா பல முறையா, அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா"என்று இனிப்பா கேள்விகளை மீட்டிக்கொண்டே நினவுகளைக் கிளறுகிறது.
புற உலகின் தாக்குதலில் இருந்து தப்பிக்கக் கிடக்கும் நினைவுகளின் பதுங்குகுழி இப்படியான இசை.

15.2.09

தானாகத் தீராது

எல்லாம் முடிந்து எரிந்து கொண்டிருக்கிறது
இல்லாதஆட்டம் போட்ட பழைய ஆதிக்கம்.

தலைத்துண்டை அக்குளில் பதுக்கிக்கொண்டு
உடலைச்சுருக்கி நிற்கிற நாவிதரை
ஒதுங்கிநில்லுடா அம்பட்டப்பயலே
கொக்கரிக்கிறது எதிர்கால ஆதிக்கம்.
சித்திர குப்தனின் ஏட்டிலும் நேர்செய்யப்படாது
சமரசம் கருகிச் சாம்பலாகும் சுடுகாடும்.

14.2.09

வளர்சிதை மாற்றத்தில் இது ஒரு வசீகரமான படிநிலை.
இந்த வார்த்தை கொண்டுவரும் ஞாபகங்கள் முற்றிலும் அலாதியனது. உடனடி வெப்பம் ஊடுறுவி விடும். உடலின் உதிரிப் பாகங்களில் பௌதிக மற்றும் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். பூமிப்பந்தின் சகல ஜீவராசிக்கும் இது கட்டாயம் லவிக்கும்.நாடுகள் தோரும் இது வெவேறு அளவைகளில் வைத்து அளக்கப்படுகிறது. இந்தியா தவிர்த்த ஏனைய நாடுகளில் காதல் என்றவார்த்தையைத்தேடினால் குறைந்த பட்சம் உதடுகள் தழுவிக்கொள்கிற காட்சிகள் கிடைக்கும்.ஆனால் இங்கோ கடிதம், உருகல், தாடி, கண்ணீர், கடைசியில் தற்கொலை என்ற காட்சிகள் தவிர்க்க முடியாமல் வந்துசேர்கிறது. இந்தியாவிலிருக்கும் கவிஞர்களையும், திரைப்படத்துறையினையும் காதலை நீக்கி கவனித்தால் மொத்தம் பத்துப் படைப்பாளிகள் மட்டுமே தேரலாம். காதல் தோல்விக்காகவும், பரீட்சைத்தோல்விக்காகவும் தற்கொலைசெய்துகொள்கிற செய்திகள் இந்தியாதவிர வேறெங்கும் இல்லை. இங்கு ஆன்மீகம், கலாச்சாரம், இரண்டும் கலந்து காதல்மீகமும், அல்லது காதலாச்சாரம் என்றுதன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. அகமணமுறையும் ஒருதார மணம் என்னும் கற்பிதமும் இங்கு சகல எல்லைகளையும் ஊடறுத்து புரையோடிவிட்டது. காதல் என்பது நூறு சதவீத கலப்பு என்பதே பொருள். உடல், ஜாதி, மதம் பிரதேச எல்லைகள்நொறுங்கி புதியதோர் பரிமாணம் எடுக்கிற அறிவியல் நிகழவேண்டும். இதில் எதையும் இழக்காமல் காதல் என்கிற வார்த்தைமுற்றுப்பெறாது. காதலா மதமா என்றால் மதம்தான் பெரிது என்பதை உணர்வுபூவமானதாக மாற்றிக் களவாணித்தனம் பண்ணிய படங்கள் சகலாராலும் போற்றப்பட்டது. நீயும் நானும் ஒரேதெரு உனது தந்தையும் எனது தந்தையும் ஒரே ஜாதி சைவப்பிள்ளைமார், இனி நாம் கதலிக்கலாம் என்று கவிஞர் மீரா சொன்னவை. யுத்த களத்தில் சொன்ன உபதேசத்தில் கூட அகமணமுறையைக் கடைப்பிடிக்காவிட்டால் இந்த நால்வகை வர்ணம் என்பது சீரழிந்து விடும் என்கிற புராணக்கவனம் இப்பொழுதும் கூர்ந்து அவதானிக்க வேண்டியதாகிறது.

இருப்பினும் இந்த கட்டமைப்புகளை மீறிய செயல்கள் காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த மீறல்களில் எண்ணிறந்த ஜதைகள் கலப்பலியானது. அவர்களில் பிரபலங்களான, அம்பிகாபதி-அமராவதி, மதுரைவீரன்- பொம்மி, காத்தவராயன் - ஆரியமாலா, முதுப்பட்டன்- பொம்மக்கா, திம்மக்கா, முதலானோர் காதல்குரியீடுகளாக அல்லது காதல் கடவுள்களாக மாற்றப்பட்டார்கள். முடிந்தவரை தடுத்து நிறுத்துவது மிறி நுழைபவர்களைப் போட்டுத்தள்ளிக் கடவுளாக்கு என்பதே இங்கு எல்லாவற்றிற்குமான உயர் தொழிநுட்பமாகிறது. கவனிக்கப்படத கொலைகள் மண்மூடிப்போனது. மீறிப்பிறந்த குழந்தைகள் அனுலோமாக்களாகவும், பிரதிலோமாக்களாகவும் வர்ணமிடப்பட்டது.ஆடுகிற மயிலும், துள்ளிஓடுகிற மானும், கூவுகிற குயிலும் தங்கள் காமத்தைக் காதலாக்கியது. ஒருகால் நீட்டி ஒரு ரெக்கை விரித்து அரைவட்டமடிக்கிற சேவலின் கெக்கெக் சத்தம் காதல் கவிதை அல்லது காதலிசை. மனிதனும் அப்படியாகவே. கவிதை எழுது புல்லாங்குழல் இசை, கள்ளுண்ணாது கிறக்கம் எய்து. வளர்சிதை மாற்றத்தில் இது ஒரு வசீகரமான படிநிலை. எதையும் ஒளிவட்டமிடாமல் அணுகுகிற அறிவியலைக் கற்றுக்கொள்ள இந்த சமூகத்து அணுமதி கொடுங்கள்.காதல் கார்ப்பரேட் கம்பெனிகளின் விற்பனைச்சரக்குமல்ல, காவிச்சட்டைக்காரர்களின் அரசியலும் ஓட்டுப்பெட்டியுமல்ல என்பதை உரக்கச் சொல்லுங்கள். கொடூரச்செயல் செய்துவிட்டு கோவிலுக்குள் தஞ்சமடையும் கூட்டம் பெருகிவருகிறது. உன்னையும் என்னையும் அறியாத மதச்சாயத்தில் மயங்கிவிடாமல் காதலைக்கப்பாற்றுங்கள்.

12.2.09

மனித குல வரலாற்றை கண்டுபிடித்தவர்.
தனது அறுபத்துமூன்றாம் வயதில் தீராத சந்தேகத்தோடு கேட்ட கேள்வி இது. ஒரு முப்பதாண்டுகாலம் பணி முடித்து ஓய்வு பெற்ற ஆசிரியையின் கேள்வி இது. ஆறு பிள்ளைகளுக்கு தாய். ராணுவ மேஜரின் மனைவி. அந்தத்தெரு பெண்களின் ஆலோசகர். இப்படிப்பல பெருமைகலுக்கும் விழுமியங்களுக்கும் சொந்தக்காரரான ஒரு மூத்தகுடிமகள் " அப்ப ஒலகம் உருண்டையாவா இருக்கு, கடவுள் மனுஷனப்படைக்காம வேற யார் படச்சது? என்னும் கேள்வியை முன்வைத்தார். ரொம்பத் தாமதமான கேள்வி. முப்பதாண்டு கல்விப்பணியில் அவர்கள் தன் மாணவர்களுக்கு வரிவடிவில் உள்ள எழுத்துக்களை மட்டும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். அந்த வரிவடிவங்கள் அவருக்குக்கூட புரியாமல் போயிருக்கிறது. விஞ்ஞானம் வேகமாக நிலவுதாண்டிப்பயணம் செய்கிற இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், விரல் நுனியில் உலகைக்கொண்டுவரும் சாட்டிலைட் தொடர்புகள் மலிந்துகிடக்கிற இப்போதுகூட அவர்களுக்கு அந்தச் சந்தேகம் தீரவில்லை என்பது ஒரு சோகமான செய்திதான்.
இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒருவருக்கு இந்தசந்தேகம் வந்ததன் விளைவே பரிணாமக்கொள்கை. தத்துவங்களின் தந்தையானதும், கண்டுபிடிப்புகளுக்கு ஊற்றுகண்ணாக உருவானதும் டர்வினின் பரிணாமக்கொள்கை. இதே நாளில் பிறந்த அவர் அதற்கு முன்னால் பிறந்து மடிந்த பலகோடி உயிர்களின் வரலாற்றை மறு ஆய்விற்கு எடுத்துவந்து தனது சோதனைக் கூடத்தில் குவித்தவர். பாசிபடிந்து கிடந்த மூட நம்பிக்கைகளைத் துடைத்து சுத்தமான சிந்தனைகளைத் திறந்து விட்டவர்.நினைக்கவேண்டிய அறிவியல் புரட்சியாளர் பிறந்த நாள் இன்று.

10.2.09

காங்க்ர்ரீட் தெருவில் வெள்ளந்திப் பூக்கள்
எனக்கு மட்டும் குளிக்கிற நேரம் குறி பார்த்து தொலை பேசி அழைப்புகள் வருவதாகத் தோன்றியது. இதற்காக வளமையாகக் குளிக்கிற நேரத்தை மாற்றிப் பார்த்தேன் அப்படியும் விட்டபாடில்லை. மிகுந்த எரிச்சலாகவே உணர்ந்தேன்.இந்த எரிச்சலை இரட்டிப்பாக்க என் மனைவி குளிக்கும்போது கதவைத்தட்டி "ஒங்களுக்கு போன் வந்திருக்கு" என்று சொல்லுவாள். " எடுத்து பேசு அல்லது குளிப்பதாகச்சொல் " என்று சொல்லிப்பார்த்தேன். ஆனால் மறுநாளே கதவைத்தட்டுவது தொடரும். ஒருநாள் இதன் நிமித்தம் சண்டையே வந்துவிட்டது. "எதாவது அவசரமான சேதியாக இருந்தால்" என்கிற கேள்வியைக் கேட்டு மீண்டும் சண்டையைத் தொடர்ந்தாள்." என்ன அவசரமானாலும் இரண்டு நிமிடம் கழித்து பேசினால் என்ன குறைந்து போகிறது" நான் சொல்ல. "அப்ப போன் எதுக்கு" என்று கேட்டாள். ஏனைய பெண்களைப்போல் நறுவிசாக நடந்து கொள்ளத் தெரியவில்லை எனவும், அவளுக்குப் புரியவைக்க முடியாது என்றும், நானாக முடிவு கட்டிக்கொண்டு முற்றுப்புள்ளி வைத்தேன்.


பிரிதொரு நாள் அவசரமாகவே ஒரு அழைப்பு வந்தது. வெளியூரிலிருக்கும் எனது அலுவலக நண்பரின் அழைப்பு. தனது உறவினருக்கு ஒரு தகவல் சொல்லவேண்டும் அவர் தொலைபேசியை எடுக்கவே இல்லை என்றும் முடிந்தால் நீங்கள் தொடர்புகொள்ளுங்கள் அல்லது நேரிலாவது போய் இந்த தகவலைச் சொல்லிவிடுங்கள் என்றார். ஒரு பத்து நிமிடம் நானும் முயற்சி பண்ணிவிட்டு வண்டி எடுத்துக்கொண்டு நேரில் போனேன். உள்புறம் பூட்டப்,பட்ட மதிற்சுவர் கதவு, உள்ளே ஈரக்கொலை பதற வைக்கிற காவல் நாயின் குரைப்பு . நான் காத்திருந்தேன். அழைப்பு மணியின் இடையறாத சத்ததிற்குப்பின் கதவு திறந்த பெண்மனிக்கு நான் திருடன் இல்லை என்பதை சிரமப்பட்டு ஊர்ஜிதப்படுத்தினேன். " அப்படியா அவர் தூங்கறார் " அப்புறம் அவாருங்கள் என்று சொல்லி முடிக்கு முன்னே கதவை மூடிவிட்டார்கள். தகவல் சொல்ல சுவரேறிக்குதிக்க முடியாதல்லவா நான் திரும்பி வந்தேன்.


" எங்க போனாலும் போனக்கொண்டு போங்க தொனத்தொனன்னு ஒரே தொந்தரவா இருக்கு " வாசலில் நின்றிருந்தஅவளின் கோபம் எனக்கு சந்தோசமாக இருந்தது.

8.2.09

சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல கடவுச்சீட்டு கேட்கும் காலம் தூரமில்லை
மண்ணின் மைந்தர்கள் கோஷத்தோடு முளைத்த பால்தாக்கரேயின் உடனடி எதிரிகளாக அப்போது தமிழர்களும்தொழிற் சங்கங்களும் மலையாய் நின்றார்கள். பால் தாக்கரே மிகப்பெரிய தொழிலதிபர்களின் கூட்டாளியானார். விளைவு இன்று சிவசேனா எனும் சின்ன நாஜிப்படை வேரூன்றிவிட்டது. மும்பையில் பெயருக்குக் கூட இடதுசாரித் தொழிற்சங்கம் இல்லாமல் பொட்டல் காடாக்கிவிட்டது சிவசேனா. தனக்குப்பிடிக்காத எல்லாவற்றையும் கட்சியின் கொள்கையாக்குவது பாசிசம். சில நாட்களுக்கு முன்னால் சிவசேனா குண்டர்கள், வெளி மாநிலத்தவரை விரட்டியடித்த காட்சிகளை செய்தியாக மேய்ந்துகொண்டிருந்தது ஜனநாயக இந்தியா.


அதுபோல வட்டள் நாகராஜ் எனும் ரவுடிக்கூட்டம் பெங்களூரிலிருந்து தமிழர்களை விரட்டியடித்தது. அதைத்தொடர்ந்து காவிரிப் பிரச்சினை இன்னும் தீராத பிரச்சினையாகவே இருக்கிறது. கிறித்தவ சிறுபாண்மையினரைத் தாக்குவதில் ஒரிஸ்ஸாவோடு கர்நாடகம் போட்டிபோட்டு கிட்டத்தட்ட எண்பது எளிய உயிர்களை நரபலியிட்டது. தங்களது அகண்ட வெறிக்கனவை நிஜமாக்குவதற்கு அப்பாவிச்சிறுபாண்மை இனத்தை இட்டுக்கட்டி நரகாசுரனாக்குகிறது. அறிவியல் மங்கிக்கிடக்கும் இந்த தேசத்தில் ஒரு பாட்டில் தண்ணீரும், ஒரு லிட்டர் பாலும் ஒரே விலைக்கு விற்கிறது. இந்தச் சமூக கொடூரத்தை எதிர்த்துப் போராட மறந்து இந்திய மக்கள் தங்களின் அண்டை வீட்டு எளியோரை விரட்டியடிக்கத் துடிக்கிறார்கள். கட்டியிருக்கிற கோவணம் காவிக்கோவணமாக இருந்தால் போதுமென்கிற மடமையை மதம் என்று நம்பிக்கிடக்கிறது. இதோ எடியூரப்பா ( வட்டள் நாகராஜின் வாரிசு) வின் ராமராஜ்ஜியம் பெண்களுக்கு காவிப்பர்தாவை மாட்டிவிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட தாலிபானாக மாறிக்கொண்டிருக்கிறது.


பேருந்துகளில் கூட இரண்டு வெவ்வேறு மதத்தவர்கள் பயணம் செய்யமுடியாத மிருக மனோபாவம் அரசுமுத்திரையோடு அரங்கேறுகிறது. ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கு நாய்கள் பயணப்பட்டால் நடக்கிற சண்டைக்கும் இதற்கும் எந்த வித்தியசமும் இல்லை. அறிவார்ந்த எல்லோரும், பெருகிவரும் இந்தக் கனிபல் நடைமுறைகளைக் கண்டிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. தவறினால் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல கடவுச்சீட்டுக்கு மணுச்செய்துவிட்டுக் காத்திருக்க வேண்டிய சூழல் வரலாம்.

6.2.09

விடுதல்கள்பொங்கல் வைக்க, பூஜை பண்ண


ஆடறுக்க, அன்னதானம் பண்ண


கூட்டம் கூட்டமாய் வரும்


பக்தகோடிகளைக் காப்பாற்ற முடியும்போது‭


வாசலிலேயே வரிசையாய்த் தட்டேந்தும்


பிச்சைக்காரர்களைக் கைவிட்டதெப்படி.

o

5.2.09

பிஹு நடனம்.


மக்கள் கலை சேர்ந்து நிகழ்த்துவதும், சேர்ந்து ரசிப்பதுவதுமாகவே இருக்கிறது. அதுவும் பழங்குடிகளின் மத்தியில் தனி நடனம், தனிப்பாடல் என்பது உலகமெங்கும் இல்லவே இல்லை எனச்சொல்லி விடலாம். பிஹுநடனம் எல்லா பழங்குடிகளின் நடனம் போலக் குழு நடனம். அஸ்ஸாமியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான இந்த நடனம் அறுவடைக் காலத்துப்படல் அல்லது வசந்த விழாப்பாடல். அந்த மாநில அரசின் சுற்றுலா மற்றும் கலைத்துறையின் பிரதான கலையாகவும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு புல்லாங்குழல் அல்லது சின்ன நாதஸ்வரம் (சத்தக்குழல்), இரண்டு மூன்று முரசுகளோடு அதிர அதிரத்துவங்கும் அந்த ஆட்டத்தில் ஒருவர் பாட அதனோடு புல்லாங்குழல் சேரும். தாளங்கள் வேடிக்கை பார்க்கிற அமைதியில் பெண்கள் அபினயத்தோடு சுற்றிவரும் அந்த நேரம் இதமனதும் நளினமனதுமாகும். பாட்டு நின்றதும் முரசு அதிர பெண்கள் ஆடுவார்கள்.
ஆண் காதல் மிகுதியால் அழைக்கும்போது பெண் எனக்கும் உறவுகள் காவலாக இருக்கிறது என்று கூறுவாள். அவர்கள் கண்ணை மறைக்க நான் காற்றாக மாறுவேன் என்பான். அவள் புல்லாவேன் என்பாள் இவன் பசுவாவேன் என்பாள். உற்றுக்கவனித்தால் குரலில் ஒரு அமானுஷ்ய சோகம் இருப்பதை உணரமுடியும். தமிழகத்தில் இதே போல ஆணும் பெண்ணும் விரட்டவும் ஓடவுமான ஒரு லாவணிப்பாடல் உண்டு ஆலா மரம் உரங்க அடிமரத்தில் நானுறங்க என்று தொடங்கும் அந்தப்பாடல் ஞாபகத்துக்கு வருகிறதா ?.