30.12.11

ஒரேதரம்....தொலைக்காட்சி சிறந்த பத்து
மொக்கைசினிமாக்களை வரிசைப்படுத்தும்.
இந்தியா டுடே சிறந்த பத்து
கொள்ளைக்காரர்களை வரிசைப்படுத்தும்,
பத்திரிகைகள் சிறந்த பத்து
பரபரப்பை வரிசைப்படுத்தும்,
குமுதம் சிறந்த பத்து
தொடைகளை வரிசைப்படுத்தும்,
அரசியல்வாதி சிறந்த பத்து
சூட்கேசுகளை பத்திரப்படுத்துவார்,
அம்பானிகள் சிறந்த பத்து
தனியார் திட்டங்களை வரிசைப்படுத்துவார்கள்,
அன்னா ஹசாரே சிறந்த பத்து
உண்ணாவிரதப்பந்தலை வரிசைப்படுத்துவார்,
சமூக வலைத்தளம் கூட
பத்து வரிசையை பற்றிக்கொள்ளும்
இவையெல்லாம் சேர்ந்து
வஞ்சித்த மக்களுக்கு வஞ்சனையின்
எண்ணிக்கையும் தெரியாது அவற்றைத்
தரப்படுத்தவும் நேரமிருக்காது
அவர்களுக்கு ஒன்றுமட்டும் தெரியும்
மேற்சொன்ன எல்லாமே ஒரேதரம் என்று.

29.12.11

ஏழைகளின் கண்ணீரெனும் வற்றாத நதிமூலம்


வாச்சாத்தித் தீர்ப்பின் போது நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் பெண்கள் தீர்ப்பைப் பற்றிச் சொல்லும்போது தெளிவாகச் சொல்லி, நேர்ந்தவற்றைச் சொல்லும் போது உடைந்து நொறுங்கிக் குலுங்கிக் கண்ணீர் சிந்துவார்காள். அணைகட்டியிருந்த அந்த உப்புவெள்ளம் எங்கே இருந்தது.

காரமான உணவு சாப்பிடுவதாலும் கண்ணில் தூசி விழுவதாலும்  கொட்டாவி விடுதல்,கோபம்,சோகம்,ஆனந்தம் சிரிப்பு போன்ற மிகு உணர்ச்சிகளின் மூலம்  உருவாகி பின்னர் அது கன்னம் வழி ஓடி மண்  கலக்கிறது. மூளையினின்றும் தனியே தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும்  தன்னாட்சி நரம்பு மண்டலம் தான் கண்ணீரை உருவாக்குகிறது. அந்த அடானமஸ் அமைப்பு கண்ணீரை மூன்று வெவ்வேறு காரணங்களுக்காக திறந்து விடுகிறது. இதனால் கண்ணில் இருக்கும் மூன்று திரைகளுக்கு உயவுப்பொருளாக மாறுவதும் பழய்ய  உயவுப் பொருளை சுத்திகரிக்கவுமான இரண்டு பிரதான வேலையை இந்த கண்ணீரானது  செய்கிறது.

ஆத்திரம், ஆனந்தம், சோகம்,வெங்காயம் உரிப்பதுபோன்ற வேலைகளில்லாத விலங்குகளுக்கும்கூட  இயல் பாகவே கண்ணீர் வழிகிற ஏற்பாடு இருக்கிறதாம்.இப்படி பட்டியலிட சுட்டிக்காட்ட அறிவியல்  காரணங்கள், கண்டுபிடிப்புகள் ஆயிரம் இருந்தாலும் கூடக் கண்ணீர் உணர்வால் ஆனது. அதுவே அதன் விஷேச குணம். ஆற்றமுடியாத சுயவலிகளைக் காயங்களை யாரும் குறைக்க முடியாதபோது சொந்தக் கண்ணீர் அதை இலகுவாக்கும். அழுவதனால் பாரம் குறைந்து ஆயுள் கூடுகிறதாம். கண்ணிலே நீரெதற்கு காலம் எல்லாம் அழுவதற்கு, அழுதால் கொஞ்சம்  நிம்மதி, கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்,உன்கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று கண்ணதாசன்கள் எழுதி  வைத்திருக்கிறார்கள்.  இந்த வரிகளை க்கேட்கும் போதே கண்ணீர் மண்டலம் கலங்கும்.எதிராளியை இயக்கும். அல்லது இப்படிச்சொல்லலாம் இளகிய மனதைக் கட்டாயம் இழுத்துப் பிடித்து ஆட்டும்.

அதனாலேதான் எலிகள் தனது எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள உடல் முழுவதும்  சொந்தக்  கண்ணீரை தடவிக்கொள்ளுமாம். இளகியமனது இருக்கிறதோ இல்லையோ கண்ணீருக்கு எதிராளியை  இளகச் செய்யும் வேதியற்பண்பு ( chemistry- chemical reaction) இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ஆமாம் ஆண் மிருகங்களின் காம வேட்கையைக் குறைக்கும் சக்தி கண்ணீருக்கு இருக்கிறதாம். இப்படி அறிவியல் ஆய்வின் முடிவுகளும் இலக்கிய குறிப்புகளும். ஒரு புள்ளியில் இயல்பாகவே  சந்தித்துக்  கொள் கின்றன. அது  ஆதிக் கத்தை எதிர்கொள்கிற இயலாமையின் வெளிப்பாடு கண்ணீர் என்பதே. அதனால் தான் ஜெர்மனியக் கவிஞன் குந்தர்கிராஸ் எதிர்க்கவலுவில்லாத ஏழைகளின் கண்ணீர் ஆயிரம் வாளுக்குச்சமம் என்று கூறுகிறார்.

தனக்கெனத் தனியே தமிழ்,ஆங்கிலம், உருது, பாலி, ஸ்பானிஸ், பிரெஞ்சு,ருஷ்ய,மொழிகளென ஏதும் இல்லாத குழந்தைகள் தங்களின் தேவைகளை,உணர்வுகளை அழுகையால் மட்டுமே உலகுக்கு அறிவிக்கிறது. அப்படியான ஒரு மொழியைப் புரிந்து கொள்ளமுடிகிற இன்னொரு வகை தாய்களின் வகை. அவள் மட்டுமே ஒரு  குழந் தையின் அசைவுகளையும் மொழியின்றி அறிந்துகொள்ளும் ஆதி அறிவியல் அறிஞர் ஆகிறாள். அந்த அறிவின் பயன்பாடுகளை அவள் ஆதிக்கத்துக்கு  எதிரான தனது இயலா மையின் போது  பரீட்சித்துக் கொள்கிறாள்.

உலகமெங்கிலும் கண்ணீர் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமானது என்கிற பெருங்கருத்து நிலவுகிறது. லத்தீனமெரிக்க நாடுகள் தவிர்த்த ஏனைய தேசத்தில் அழுவது ஆண்களுக்கு அழகானதல்ல என்கிற  ஆதிக்கச் சிந்தனதான் நிறைந்திருக்கிறது என்பது விநோதமான வரலாற்றுச் செய்தி. வரலாறோ, நீதியோ அது எப்போதும் எழுதுபவனுடைய சார்புத்தன்மையையே நிலைநிறுத்தும். வரலாற்றை உருவாக்கிய பெண் ஒதுக்கப்பட்டு எழுதிய ஆண் தன்னை நிறுவிக்கொண்ட கொடுமை வீரம் என்கிற பதத்தால் உருவாயிற்று.

24.12.11

குழந்தையும் தெய்வங்களும்.


நிற்ககக்கூட இடமில்லமல் இருந்த பேருந்துகளில் கூட்டம் குறைந்து கொண்டிருக்க,புகைவண்டிகளில் கூட்டம் அலைமோதுகிறது. எல்லாமே அம்மாவின் கைங்கர்யம்.ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் பணிநிமித்தம் போக நேர்ந்தது.பேருந்தில் 32 ரூபாய் புகைவண்டியில் 9 ரூபாய். ரயிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமானதுதான். கூட்டம் ஏன் அலைமோதாது. இதையும் வைகோ கவனித்தாரானால் ஐந்துவருடத்திற்குள்ளேயே பலன் கிடைக்கலாம்.

இறங்குகிறவர்களும் ஏறுகிரவர்களும் அந்த மூன்றடி வாசலுக்குள்ளேய மோதிக்கொண்டார்கள்.ஒருவழியாக உள்ளே நுழைந்தால் இரண்டு எதிர் எதிர் இருக்கைகளை வெறும் நான்கு  ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள்.  பழங் காலத்துஎம்ஜியார் படத்தில் இப்படித்தான் எம் ஆர் ராதா படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணுவார்.அது அறுபதுகளில் தமிழனின் மனோபாவத்தை கிண்டலடித்தகாட்சி.ஐம்பது வருடங்கள் தாண்டியும் இதில் துளிக்கூட மாற்றமில்லை.

கணவன், மனைவி,இரண்டு குழந்தைகள்.மனைவி கனணவன் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தாள்.  குழந்தை களை அதட்டிப் படுக்க வைத்திருந்தான். ஏறிய பயணிகள்  எந்திரிக்கச் சொன்னார்கள்.மனைவிக்கு உடம்புக்கு முடியவில்லை என்று பொய் சொன்னான்.குழந்தைகளை ’கொண்டே போடுவேன் க்காலி படுத்துக்கோ  எந்திரிக் காத என்று மிரட்டினான். பேச்சுவழக்கு அவனை மதுரைக்காரன் என்று நிரூபித்தது. பயணிகள் அவனோடு சண்டைபோட்டாகள். இவன் நா மதுரக்காரெய்ங்க தெரியுமில்ல என்றான்.அவன் கருப்புக்கலர் வேஷ்டி  உடுத்தி யிருந்தான். அவர்கள் நாங்க ராமநாதபுத்துக்கரங்க தெரிஞ்சுக்கோ என்றார்கள் அதில் ரெண்டுபேர் காவிக்க்கலர் வேஷ்டியுடுத்தியிருந்தார்கள். இந்தக்களேபரத்தில் குழந்தை அழுதது.சண்டை போடுவதை  கைவிட்டுவிட்டு. இருக்கிற கொஞ்ச இடத்தைப் பகிர்ந்து கொண்டு உட்கார்ந்து அவர்களுக்குள் பேச  ஆரம்பித் தார்கள்.சுகமில்லை என்று சொன்ன மனைவி எழுந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க  ஆரம் பித்தாள். பிறகு குழந்தைகளும் எழுந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. அந்த இடத்தின் கலவரச் சூழல் குறைய்ய ஆரம்பித்தது.

இரண்டு குழந்தைகளில் ஒன்றுக்கு இரண்டுவயது இருக்கும்.அது மெல்ல மெல்ல எல்லோரது மடிக்கும் தாவி அவர்களது சாப்பாட்டுப் பையை நோண்டியது.அவர்களின் சட்டைப்பயை துழாவியது, முகத்தை  வருடியது. அவர்களும் நடந்த சண்டைக்கும் அந்தக்குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பதை தூக்கி  வைத்துக் கொஞ்சுவதில் காட்டினார்கள். மதுரைக்கார வீரன்,அந்தக்குழந்தையுடைய அப்பனின் முகத்தைப்பார்த்தேன் தலைகுப்பறக் கவிழ்ந்திருந்தது.

22.12.11

சுடச்சுடத்தேநீர் மற்றும் அரசியல்


எல்லா நேரமும் குளிரும் பனியும் கவிழ்ந்திருக்கிறது.
தேநீர்க்கடைகளில் கூட்டம் குறைந்த பாடில்லை.
ஒருகுவளையின் கடைசி மிடறுகுடிக்குமுன்னே
ஆறிப்போகிறது சுடேற்றும் திரவம்.
ஒவ்வொரு மிடறு உள்ளே போகும் போதும்
வெளியேறுகிறது அவரவர்க்கான அரசியல் அறிவு.
ஞொம்மால இருக்குற சேட்டங்கடையெல்லாம் நொறுக்கணும்
என்கிறான் தமிழ்ப் பற்று மிகுந்த சுத்தத் தமிழன்.
சிங்கப்பூர்ல நம்மூர்க்காரன் ஒரு அமைச்சர் தெரியுமா
தொடை தட்டும் ஆண்ட பெருமைத் தமிழன்.
இதையெல்லாம் கேளாது பசிமிகுந்து வாய் பார்த்து
நெடுநேரம் கையேந்தி நிற்கிறான் ஒரு வறிய தமிழன்.
எதுவும் பேறாது என்று திரும்பும் அவன் குனிந்து
ஒரு எச்சில் சிகரெட்டை எடுத்து பற்றவைக்கிறான்
இப்போதைக்கு இதுபோதும்
வயிற்று எரிச்சலுக்கும் வாடைக்குளிருக்கும்.

21.12.11

வறுமையும் அறியாமையும் விகடமாகும் வெள்ளந்தி வீடுகளில்


எங்கோ போவதும் திரும்பி வந்து சீ இந்தப்பொழப்பும் ஒரு பொழப்பா என்று புலம்புவதுமாக இருக்கிற அம்மையைப் பார்க்க பாவமாக இருந்தது. ரெங்குப் பெட்டியில் இருக்கும் சில்லறைகளை எண்ணிப்பார்த்தான் பதினேழு ரூபாய் முப்பந்தைந்து காசு இருந்தது. பழய்ய நோட்டுப் புஸ்தகத்தையெல்லாம் எடுத்து அடுக்கினான். அதைப்பார்த்த அம்மை ’ஏலே ஏ ஒனக்கென்ன கிறுக்குப்பிடிச்சிருச்சா சரஸ்வதியப்போய் எடைக்குப்போடப்போற என்றாள். எம்மா இது பழசுதாம்மா,இதெதுக்குமா இன்னும்,எடத்த அடச்சுக்கிட்டு’ என்று சொன்னான்.’அதுக்காக படிக்கிற பொஸ்தகத்த வெலைக்குப் போடனுமா இருப்பா யார்ர்ட்டயாச்சும் கடன்  வாங்கியாரன்’.  சொல்லிக் கொண்டே விடுவிடுவென்று வெளியே கிளம்பினாள்.

என்சிசி யில் சேர்வதற்கு பெயர்கொடுக்கும் போதே சொன்னார்கள்.ஆளு ஒசரமா  இருக்கணும்,  முட்டிதட்டக் கூடாது,டெய்லி புதன்கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஆறுமணிக்கே பள்ளிக்கூட மைதானத்தில்  இருக்கணும், தாமதமானால் 15 ரவுண்டு மைத்தானத்தை சுற்றவிடுவார் வெள்ளைச்சாமி சார்,வேறு ஏதும் தப்பு பண்ணினால் மணல் மூடையை தூக்கிதலையில வச்சுருவார் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.அதற்கெல்லாம் அசரவில்லை. எட்டு கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கூடம் போனவனுக்கு,லீவுநாட்களில் கூலி வேலைக்குப் போகிற வனுக்கு இந்த தண்டனைகள் எல்லாம் எறும்புகடிச்ச மாதிரி.ஆனால்  125 ரூபாய் டெப்பாசிட் கட்டணும்  என்று சொன் னதும் தான் ஆடிப்போனான்.அவ்வளவு பெரிய தொகையைக்கேட்டால் தங்கராசை அவங்கம்மா  நிப்பட்டியது போல போதும் போதும் நீ படிச்சுக் கிழிச்சது, ஓடு சீலுத்தூருக்கு கல்லொடைக்க என்று அனுப்பிவிடுவார்களோ என்கிற பயம் தொற்றிக்கொண்டது.

ஆனாலும் புதன் கிழமையும் வெள்ளிக் கிழமையும் காலையில்  மசாலக் கிழங்கு வாசம் மணக்க மணக்க தனலெச்ச்சுமி ஓட்டல் பூரிக்கிழங்கை திண்கிற என்சிசி மாணவர்களைப் பார்க்கும் போது ஏக்கமாக இருக்கும். புழுச்செத்து மிதக்கும் கோதுமைக் கஞ்சியைக் குடிக்க அரசு மாணவர்  விடு தியில் வரிசையில் நிற்கிற போதெல்லாம் தனலெச்சுமி ஓட்டலின் பூரிக்கிழங்கு கேந்தியைக் கிளப்பும். இந்தப் பிறவியில் தனலெச்சுமி ஓட்டலில் காசு கொடுத்து பூரிக்கிழங்கு வாங்கித்திண்போம் என்கிற நம்பிக்கையும் சுத்தமாக இல்லை அவனுக்கு. திங்கள் கிழமை காலையில் கொடுத்து விடுகிற ஒரு ரூபாயில் வெள்ளிக்கிழமை திரும்ப கொடைக்கான் பஸ்சில் வருவதற்கு 25 காசு எடுத்து வைத்துக்கொண்டு அந்த வாரம் முழுக்க செலவழிக்கணும். இடையிடையே பேணாவுக்கு மையும் அடைக்க வேண்டும். இவ்வளவு கையிருப்பில் வாங்கித்திங்க கட்டுபடியவது  ஏவீஸ்கூல் வாசலில்  விற்கிற  அரை நெல்லிகாயும், சவ்வு மிட்டாயும்தான்.

நெல்லிக்காயென்றதும் அவனுக்கு ரோசாப்பூவின் நினைப்பு வந்தது. சனிக்கிழமை வாங்கிப் பத்திரப்படுத்திய முழு நெல்லிக்காயை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.மேலத்தெருவுக்குள் நுழையும் போது ரோசாப்பூவின் சிநேகிதி காளீஸ்வரி வந்தாள்.ரோஜா எங்கயிருக்கா என்று கேட்டான். என்ன புஸ்த்தகம் கொடுக்கவா என்று கேட்டுவிட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள். கவனிக்காமல் ஓடினான்.போனவேகத்தில் திரும்பி வந்தான். ஏ லூசு அவ  கோயில் பட்டிக்கு போயிருக்காளே சொல்லமிண்ண அப்படி என்ன அவசரம் என்றாள்.இதக்கொடுத்துரு என்று கொடுத்தான் அப்புறம் என்றாள். இரண்டு நெல்லிக்காயைக்கொடுத்தான். அதானே என்றாள். வீட்டைத்திறந்து போட்டுவிட்டு வந்த ஞாபகம் வந்தது.ஓட்டமெடுத்தான். ரெண்டு வட்டி சண்முகப் பெரியாவோடு  பேசிக் கொண்டிருப்பது அம்மா மாதிரித் தெரிந்தது. கையில் ஒரு புது மண்பானை வைத்திருந்தாள்.என்சிசிக்குப் பணம் கெட்டத்  துப்பில்லை, இந்நேரத்தில் புத்துப்பானைக்கு என்ன அவசரம் என்கிற கோபம் வந்தது.அம்மா வந்ததும் கேட்டேவிட்டான்.சும்மா கெட பெரிய்ய மனுசனாட்டம் என்று கண்டுக்காமல் பித்தளைப்பானையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

ராத்திரி முழுக்க கனவில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் வந்தார்கள்.இவனுக்கு கொடுத்த  ராணுவத்துப்பாக் கியை வேறு யாரோ புடுங்கிக்கொண்டு ஓடுவது போலெல்லாம் வந்தது.விடிகாலையில் எழுந்து  அரக்கப் பறக்க கிளம்பிக் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டு கையில் பத்து ரூபாய் நோட்டாக ஒரு கத்தையை வைத்தாள் அம்மா. அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருந்தது.ஏதும்மா என்று கேட்டான்.செல்லம்மா பெரிம்மாட்ட சீட்டு போட்ருந்தேன்ல என்று சொன்னாள். அப்போதும் கூட அந்த பித்தளைப்பானை வீட்டில் இல்லாதது அவனுக்குத் தெரியவில்லை.புதூர் ஞானப்பழம் சைக்கிளில்  தொத்திக் கொண்டு எட்டுமணிக்கே பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தான். என்சிசி ஆபீஸ் திறக்கவில்லை.மைதானத்துக்குப் போய் ரெண்டு ரவுண்டு ஓடினான்.திரும்பி வந்தான் அன்றைக்கு விளையாட்டு வாத்தியார் வெள்ளைச்சாமி லீவு என்று சொன்னார்கள். பூதம் அடைகாத்த மாதிரி அந்த 125 ரூபாயை பொத்தி பொத்தி வைத்திருந்தான்.மறுநாள் தான் கடைசி நாள்பயந்து கொண்டே இருந்தான். பணத்தைக் கட்டி காக்கிக்கலர் சீருடையும்,தொப்பியும்,பூட்சும்  வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு வந்த போது ஒரு ராணுவ வீரனின் மிடுக்கோடுதான் வந்தான்.

அந்த வாரத்தில் சனியும் ஞாயிறும் பயிற்சி இருந்தது.ஊருக்குப்போக முடியவில்லை.சனிக்கிழமை காலையில் பரேடுக்கு வரும் போது பஜாரில் சாமிக்கண்ணு மாமாவைப் பார்த்தான்.வலியப்போய்  அவர் முன்னாடி நின்று மாமா என்று கூப்பிட்டான்.பதறிப்போனவரிடம் அம்மாவிடம் இந்த வாரம் லீவுக்கு வரமுடியாதுன்னு  சொல்லி ருங்க மாமா என்றான்.அடுத்த வெள்ளிக்கிழமை எப்போ வரும் என எதிர்பார்த்துக் கிடந்தான். சாயங்காலம்  எஸ் ஜி ஜே வண்டியில் ஏறும்போது எல்லோரும் இவனை உற்றுப் பார்த்தார்கள்.ஜன்னலோர இருக்கையில் இருந்த படியே ஊருக்குள் உலாவினான். அம்மாவின் அகலவிரியும் கண்கள்,வாசலில் நின்றுகொண்டு  பெருமை யடிக் கப்போகும் அவளது உற்சாகம் எல்லாம் வந்துபோனது.ரோசாப்பூவிடம் உடுப்போடு போய் நிற்கிறபோது அவளிடம் என்ன ரியாக்சன் இருக்கும் என்பதை கற்பனை செய்தான். இந்தப்பவுலுப் பயல் கட்டாயம் இதை ஓசி கேட்பான் கொடுக்கக் கூடாது. நிறுத்தம் வந்து விட்டது. அப்போதுதான் நடத்துநர் சுதாரித்துக்கொண்டு ’ஏப்பா பள்ளிக்கூடத்தான் நீயா,ஏட்டய்யாவோன்னு நெனச்சி வுட்டுட்டேன். இந்தா டிக்கெட்’ என்று கொடுத்தார்.

பஸ் கிளம்பியதும் பஸ் நிறுத்தத்தில் பாஞ்சாம்புலி ஆடிக்கொண்டிருந்த கூட்டம் பதறி எழுந்தது.  கஞ்சாப் பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டிருந்த  ஐயண்ணா பொன்னுச்சாமி அதை வேலிச்செடிக்குள் எறிந்துவிட்டு காட்டுக்குள் போய் வேட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியே இருப்பது போல உட்கார்ந்து கொண்டார். நெருங்கிப் போனான். சார் கல்கெடங்குல தண்ணி பெருகிருச்சு வேலையில்ல, சும்மா பொழுது போகலன்னு பாஞ்சாம்புலி என்று சொல்லிக்கொண்டே ஏ முத்தையப் பெரிய்யா மகன் மாசிலாமணி டா.என்று சொன்னதும் ஒரே  ஆச்சர் யமும் சிரிப்புமானது.அப்பிடியே போலீஸ் மாதிரியே இருக்கடா,ஏ மாப்புள இங்கரு சொங்கி ராமன் வேட்டில ஒண்ணுக்கிருந்துட்டான் என்று சொல்லி வெடிபோட்ட மாதிரி சிரிச்சான் கருத்த மணி.அத உடு அஞ்சு ரூவாய்க்கு வாங்குன கஞ்சாவத் தூக்கி எறிஞ்சிட்டு கெதிபுடுங்கா ஓட்றாண்டா பொன்னுச்சாமி. இந்நேரம்  குறுக்க கூடி ஓடிப்போய் சிவகாசி சேர்ந்திருப்பான்.அங்கன போய்த்தான் திரும்பிப் பாப்பாம்போல என்று சொல்லிவிட்டு வேலிச் செடிக்குள் கஞ்சாப் பொட்டலத்தை தேடிப்போனான்.

ஒத்தையடிப் பாதையிலெ நடந்துகொண்டிருந்தான் சரக்கு சரக்கென்கிற பூட்சுக்காலின் சத்தம் இப்போது அவனுக்கு பெருமிதத்தோடு சிரிப்பையும் கொண்டுவந்தது. ஊர் நெருங்க நெருங்க அம்மாவும் ரோசாப்பூவும் ஆயிரம் முறை வந்து போனார்கள். கொஞ்ச நேரத்தில் பின்னாடியே ஆட்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது. பஸ்ஸ்டாப்பில் இருந்த  மணி மச்சானும்,ஒலக்கை செல்வராசு சித்தப்பனும் தான். எய்யா அஞ்சு ரூவா கஞ்சாவ ஓசியாக்குடுத்த ஞண்ணே மகனே கொஞ்சம் நில்லுய்யா. மடத்துல மும்மரமா சீட்டுவிளாட்டு  நடக்கு. வெட்டுச் சீட்டு.மொத்தமா ஐநூறு தேறும்.வாப்பா ஒன்ன வச்சி அதப்பூராம் கைப்பத்திரமுய்யா. என்று சொன்னார்கள். ஏ வேண்டாம் மச்சான் எங்கய்யா,ஊர்ர்ப்பெருசு எல்லாம் இருப்பாக என்றான். இங்கரு நீ ஒண்ணுஞ்செய்ய வேண்டாம் இந்தா சைக்கிளப்பிடி, பைய்யக்கொண்டா, நா அத்தையிட்ட குடுத்திர்ரேன்,ரோட்டுவழிய வந்து மடத்துக்கு பத்தடி தள்ளி நில்லு. இன்னைக்கி இருக்குடி ஒங்கலுக்கு கொடமானம்’.என்று சொல்லிவிட்டு பையை வாங்கிக்கொண்டு ஊருக்குப்போனார்கள்.

கும்பிடப் போனசாமி குறுக்க வந்த மாதிரி சைக்கிள் கையில கெடச்சிருச்சி. ரோட்டுவழியே போனால்  மேலத் தெரு தாண்டித்தான் ஊருக்குள் நுழையணும். ரோட்டுமேலதான் ரோசாப்பூ வீடு. நாய்குறைத்த சத்தங்கேட்டு ரோசாப்பூ வெளியே வந்தாள்.இரண்டே நொடியில் இனங்கண்டு கொண்டாள். என்ன என்று கைச்சாடை  போட் டாள். என்சிசி ல சேந்துருக்கேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்தான். பத்தடி தூரத்தில் ஒலக்கை சித்தப்பன் நின்று கொண்டிருந்தான்.பக்கத்தில் ஒரு வாண்டு கருப்பாயி மதினி மகன் இருந்தான்.பதறிஓடுகிற மாதிரி ஓடி போலிஸ்,போலிஸ் என்று சொன்னான். மடத்தில் இருந்து யாரோ எட்டிப்பார்த்தார்கள்.அடுத்த விநாடி சட்டையைத் தோளில் போட்டபடி,அண்ட்ராயரோடு,தெக்க வடக்க சந்து பொந்துகளுக்குள் நுழைந்து ஆட்கள் ஓடினார்கள். ஓடமுடியாத அம்மாச்சிக்கிழவன் ஒரு ஓரமாய்ச்சுருண்டு படுத்துக்கொண்டான். மடத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் பொம்பளைகள் கூடினார்கள்.

ஒருநாளாச்சும் லாரியக்கொண்டாந்து அத்தனபேரையும் அள்ளிப்போட்டுக்கிட்டு போகமாட்டெங்க்றாங்களே. வேல வெட்டிக்குப் போகாமெ இருக்கிற சாமங்களையெல்லாம் அடகு வச்சி இவிங்க பண்ற ஆட்டந்தாங்கல.வாங்கடி இன்னைக்கு அந்த ஏட்டய்யாட்டப் போயி யார் யாருன்னு எழுதிக்கொடுத்திருவம். என்று லசுமித்தாய் சொல்லுச்சு. பாப்பாத்தியக்கா விருவிரு வென்று வீட்டுக்குப்போய் கொண்டா நாயக்கர் பிஞ்சையிலிருந்து எடுத்துவந்த  பருத்தி மாத்தை தூக்கிக்கொண்டுபோய் விறகுகளுக்கு அடியில்  ஒளித்து  வைத்து விட்டு வந்தாள். திடு திப்புனு வந்துருக் கானுகளே ? நேத்து கொண்டைய்யன் வீட்டுக்கும் அகத்தியன் வீட்டுக்கும் அடி புடி நடந்துச்சே அதுக் காருக்குமோ.இல்லக்கா போன வாரம் மொளகா நாத்தக்காணுமின்னு புதூர் நாடார் தேடி வந்தாரே  அதுக்காகத் தான் இருக்கும். நம்மூருக்காரங்களுக்கு ஊறுகாமட்ட வாங்குறதுக்கே துப்புக்கிடையாது கச்சேரிக் கெங்க  போகப் போகுதுக. சின்னப்பயலுகள் கூட்டமாக ஓடிவந்து மெல்ல மெல்ல மாசிலாமணிக்கு அருகில் கெக்கெக்கே என்று சிரித்தார்கள்.

அப்புறம் சனிஞாயிறு ரெண்டு நாளும் பவுலுப்பயதான் அந்த பூட்சையும் உடுப்பையும் போட்டுக்கொண்டு தெருத்தெருவாய் சிரிப்புக் காட்டிக்கொண்டு அலைந்தான்

18.12.11

அக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல் ( போட்டி நிகழ்சிகள் )


இன்று மதியம் ஜெயா( அப்படிச்சொல்லலாமா?) தொலைக்காட்சியில் ஒரு போட்டி நிகழ்ச்சி நடந்தது. சமயல் போட்டி.எது எதற்கெல்லாம் போட்டி வைக்கலாம் என்கிற வரையரை ஏதும் இல்லை.அது அவரவர்களின் சுதந்திரம். இருக்கிறவன் கொழுப்புக்கு போட்டிவைப்பான் இல்லாதவன் பசிக்கு போட்டிவைப்பான்.கொழுப்புக்கு நடக்கும் போட்டிகளில் நேரமும் பணமும் இன்னபிறவும் விரயமாகும்.இல்லாதவனுக்கு அப்படியில்லை.
நிகழ்சியில் நூடுல்ஸ் சமைத்துக்கொண்டுவந்த ஒரு இளம் யுவதியின் நூடுல்ஸ் நிராகரிக்கப்பட்டது உடனே அவள் கண்ணைப்பிழிந்து கொண்டு அழுதாள். மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

இப்படித்தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளிலும் சிறார்களைப் போட்டிக்கு இலக்காக்கி அவர்களுக்கு தோல்வியைப் பற்றிச்சொல்லிஅழவைத்து அதற்கு பின்னணி இசை அமைத்து காசாக்குகிறார்கள். ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பீட்டுப் பேசக்கூட கூடாது என்று உளவியலார்கள்  சொல்லு கிறார்கள். அது ஒரு புறமிருக்கட்டும். தோல்வியடைந்த இந்தக் குழந்தைகளின் இசைத் திறமையோடு புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக்காரர்கலைப் பாட வைத்தால் குழந்தைகள் தான் ஜெயிப்பார்கள். பித்துக்குளி முருகதாசின் தொண்டையையும்,ஏ.ஆர்.ரகுமானின் தொண்டையிலிருந்து வரும் பாடல்களுக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கும்போது ஒரு குழந்தையின் பாட்டை நிராகரிப்பது கொடூரம். ஏன்  கே.பாக்கியராஜையும், டீஆரையும் கொண்டாடுவத்ற்கு இங்கொரு கூட்டமே இருக்கிறதே.

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர். இந்த உலகம் தனது குழந்தையின் மழலையை கூடிநின்று கேட்டுக்குதூகலித்துக்கொண்டாடுகின்ற உலகம்.அதன் மொழிக்கு இலக்கணம் கிடையாது.  அப்பாவைப் போடா என்று சொல்லும்,விருந்தினரை தொந்தி மாமா என்று சொல்லும்.ஏற்றுக்கொண்டு சிரிப்பதில்லை.இப்போது அது இல்லையா?. எல்லாம் மறந்துப்போய் நடுவர்கள் அப்போது ஒரு தத்துவம் சொல்லுவார்கள். போட்டியென்று வந்துவிட்டால் ஒருவர் தான் ஜெயிக்க வேண்டும் அதனால் நாங்கள் உங்களை நிராகரிக்கிறோம் என்று. இது  போட்டி நடுவர்களின் தத்துவமல்ல.இது தான் இன்றைய உலகமயத்தின் பிரதான தத்துவம் . அது, தான் ஜெயிக்கவேண்டு மென்பத்தற்காக எதையும் தோற்கடிக் கும். குழந்தைத் தனத்தையும் சேர்த்து.

எல்லா விலையாட்டிலும் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது இன்னொருவராகவும் தான் இருக்கும். ஆனால் இந்த தாராள உலகமய விளையாட்டில் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது கோடிக் கணக்கிலும் பெருகிவருகிறது. வால்மார்ட் ஜெயிப்பதற்காக இந்தியா தோற்கிறது.விலைவாசி பஸ்கட்டணம் ஜெயிப்பதற்காக
தமிழ் மலையாள உணர்வுகள் பணயம் வைக்கப்படுகிறது.

11.12.11

பாரதி எனக்கு நினைவுகள் கொண்டுவரும் தூதுவன்.


செய்யுள்களை மதிப்பெண்களுக்காக மணப்பாடம் செய்த பள்ளி நாட்களில் அந்தப்பாரதியின் மீசையும்,முண்டாசும் கொடூரமாய்த்தெரியும்.எங்கள் பள்ளிகூடத்து பெரிய சார்.( தலைம ஆசிரியர் திரு சுப்பையாபிள்ளை )  அறிமுகப் படுத்திய தேசியத் தலைவர்களில் சிவாஜிக்கும் திப்புசுல்தானுக்கும் வித்தியாசம் தெரியாது  ரெண்டு பேரும் தலைநிறைய்யத் துணிசுற்றி வைத்திருப்பார்கள்.அவர்களைப் பற்றிச் சொல்லிய கதைகளை குலசாமி  கதை களைக் கேட்பது போலக்கேட்டோம்.அப்போதெல்லாம் தமிழ் இலக்கியம் என்றால் மனப்பாடம்  செய்யுள் மட்டும்தானே.

சுதந்திரத்தினத்துக்கு கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுப்பார்களே அன்று கொடியேற்றியவுடன் தாயின் மணீக்கொடி பாரீர் என்கிற பாட்டைப் படிக்க தேர்வுசெய்யப்பட்ட போது நடுக்கமும்,சந்தோஷமும் குழைந்து கிடைத்து.எழுதிவைத்து உட்கார்ந்து ரவ்வாப்பகலா மணனம் செய்து ஆகத்து 15ல் அரைகுறையாய்ப்  படித்தாகி விட்டது. அப்போதும்கூட  பாரதியைப்பற்றித் அலாதியாகத் தெரியவில்லை. சுதந்திரத்துக்காகப் போராடினால் கட்டாயம் தலப்பாக் கட்டியிருக்கணும் போல என்று நினைத்துக் கொண்டேன்.அந்த வருடம் தொடக்கம் சுமார் ஐந்து வருடங்களாக எனக்கே சுதந்திரநாளில் கொடிக்குண்டான சவரட்ணைகள் அணைத்தும் செய்கிற வேலைகள் ஒதுக்கப்பட்டது.

ஆயிரவைசிய மேநிலைப்பள்ளியில் எங்கள் தமிழாசிரியர் தணுஷ்கோடி ராமசாமிதான் கண்களை உருட்டி உருட்டி பாரதிபோல ஜாடை செய்து பேசுவார். அவரின் நாடகத்தனமான பேச்சும் செய்கையும் பாரதிமேலன்றி அவர்மேல் பாசம் வரச்செய்தது. அவரது இல்லத்தில் வைத்திருக்கும்தாடியோடும் தடியோடும் நிற்கும் பாரதியின் மேல் ஈர்ப்பு வர ஆரம்பித்தது. என்பத்தி நான்காம் ஆண்டுக்கப்புறம் எங்கள் தோழர் கிருஷ்ணகுமாரோடு அலைந்த போதுதான் பாரதியிமேல் காதல் மலர்ந்தது. கழுதையைக் கட்டிப் பிடித்துக் கொண்டலைந்தார். மீசையை  முறுக்கிக் கொண்டார்,கனகலிங்கத்துக்கு பூணூல் மாட்டினார்,கடன்வாங்கிவந்த அரிசியைத்தூக்கி குருவிகளுக்கு படையல்செய்தார்,கஞ்சாக்குடித்தார்,கண்ணம்மாவின் மேல் பித்துப் பிடித்தலைந்தார்,சென்னைவந்த  காந்திக் கெதிரே கால்மேல் கால்போட்டுக்கொண்டு உட்கார்ந்து ’விளையாட வருகிறாயா’ என்றுகேட்பதுபோல கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா என்றுகேட்டார்,கைதானார்,தப்பியோடி புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார் இப்படியே ஆயிரமாயிரம் தகவல்களைச் சொல்லிக்கொண்டே போவார்.

அப்போதும் கூட பிரம்மிப்பில் பாரதியின்  புத்தகங் களைப் படிக்கவில்லை. ஏன் படிக்கவேண்டும். தோழர் bk சொல்லுகிற தகவல்களைக்  கேட்டுக் கொண்டி ருந்தாலே போதும்.பாரதிமேல் அப்படியொரு குருட்டு  பக்தி யிருந்தது அதனாலே தான் எங்கள் சங்கக் கையெழுத்துப் பத்திரிகைக்கு அக்கினிக்குஞ்சு எனப்  பெயரிட் டோம். எனது முதல் மகனுக்கு கிஷோர் பாரதியெனப் பெயரிட்டோம், ரெண்டாவது பையனுக்கு  சூரியபாரதி யெனப் பெயரிட்டோம். அதன் பிறகு எனது சுற்றத்தார் அணைவரது குழந்தைகளும் பெயரின் பின்னாடி  பாரதி யைச் சேர்த்துக் கொண்டார்கள்.தொண்ணூ றுகளில் தோழர் bk எங்களிடமிருந்து தூரமானார்.மூன்று  இரண்டானது. அப்போதுதான் ஒரு பாரதியின் படைப்புகளடங்கிய புத்தகம் வாங்கினேன்.

ஒரு பொருளும்,இடமும்,சப்தமும்,வாசனையும் அதனதன் இருப்பை மட்டும் உணர்த்துவதில்லை.அந்த  பொருட் களுடனான நினைவுகளையும் கொண்டுவரும். இதோ இந்த பாரதிகவிதைகள் புத்தகத்தைப்  பார்க்கும்  போதெல் லாம் 42 பி எல் எஃப் தெரு நாட்கள் ஓடிவந்து உட்கார்ந்துகொள்ளும். யாராவது ஒருவர்  வரத்தாமத மானாலும் காத்திருந்து மாதுவுடனும் bk யுடனுமாக மூன்றுபேரும் ஒன்றாகச் சாப்பிடுவது,  ஒரேநேரத்துக் குத்தான்  உறங்கப் போவது.அன்றுவாங்கிய பேனாக்கதை முதல் அவளுக்காக அலைந்த கதைகள் வரை  பேசிக் கிடந்தது என நட்பின் உச்சானிக்கொம்பில் இருந்த நாட்கள் அவை. அவற்றயும் சேர்த்து நினைவுகூறக் கிடைத்தது இந்த பாரதி நினைவுநாள்.

10.12.11

பொங்கியெழும் அணையும்,உடைப்பெடுக்கும் ஒருமைப்பாடும்தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கிற ஒவ்வொரு முறையும் அண்டைமாநிலத்தோடு உரசல் தீவிரமடைவது எதேச்சையானதா திட்டமிட்ட்டு நடக்கிறதா என்கிற சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து கசிந்த தண்ணீர் விவகாரம் பெரிதாக உடைப்பெடுத்தது. பூதாகாரமாகி பின்னர்  திரைப்படத் துறையினரின் கூட்டுப் படப்பிடிப்பெல்லாம் கூட நடந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை அதை முழுநீள நிகழ்ச்சியாக சன் தொலைக்காட்சிக் குழுமங்கள் நேரடியாக ஒளிபரப்பியது. என்ன மாயமோ தெரியவில்லை இப்போதெல்லாம் அதைப்பற்றிப் பேசுவது செய்தி வெளியிடுவது out of fashion ஆகிவிட்டது. தண்ணீர் தேவையான  அளவுக்கு  அங்கிருந்து கிடைக்கிறதா இல்லை போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று தமிழ் உணர்வாளர்கள் முடித்துக்கொண்டார் களோ என்னவோ தெரியவில்லை.

 மூன்று முக்கிய தேசியக் கட்சிகள் மட்டுமே களத்தில் இருக்கிற கேரளத்தில் உணர்வு ரீதியான போராட் டங்கள் ஆரம்பித்து வைக்கப் படுகிறது.  இதில் ஆர் எஸ் எஸ் சும் அதன் கொடுக்குகளும் போடுகிற ஆட்டம் அபரிமிதமானது. ஆனால் பத்திரிகைகள் காங்கிரஸையும் தோழர்.அச்சுதானந்தனையும் மட்டும் குறிப்பிட்டுவிட்டு சடக்கென்று கடந்து போய்விடுகின்றன.

முதலில் இந்த முல்லைப் பெரியாறு அணை எங்கே இருக்கிறது,அதன் வரலாறு என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் பிறகு நீர்-நிலம்-காற்று-மற்றும் பொதுத்துறைகள்  எல்லாம் தேசத்தின் பொதுச்சொத்துக்கள் என்கிற புரிதலும் வரவேண்டும். அதன் பின்னர் எதன் மீது தனிக்கவனமும் யார் மீது கோபமும் வரவேண்டும் என்கிற வழிகளைத் தேர்ந்து கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது.

முல்லைப்பெரியாறு கேரளாவில் உள்ள  இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 881 மீட்டர் உயர்த்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 1895 ஆம் ஆண்டு. பிரிட்டிஷ் இந்தியாவால்  கட்டி முடிக்கப்பட்டது. முதலில் பெரியாறு அணை என்றும் பின்னர் முல்லைப்பெரியாறு அண என்றும் பெயர் மாற்றப்பட்டது.காரணம் கேரளத்து நதிகளான முல்லய்யாறும்,பெரியாறும் கலந்து தேக்கிவைக்கப்படும் இடம் என்பதே. அப்போதைய திருவிதாங்கூர் அரசர் விஷாகத்திருநாள் ராம வர்மனுக்கும் இந்திய  மாகானச் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அந்நாளைய ராணுவ செயற்பொறியாளர் ஹென்னிங்டனும் திருவிதாங்கூர் திவான் ராம் ஐய்யங்காரும் 1886 ஆம் ஆண்டு அக்டோபர்29 ஆம் நாள் கையெழுத்திட்டனர்.

999 வருடத்திற்கான ஒப்பந்த ஷரத்துப்படி 8000 ஏக்கர் நிலம் அணைக்காகவும் 100 ஏக்கர் நிலம் கட்டுமானத் திற்காகவும் சர்வ சுதந்திர பாத்தியதைக்காகக்  கையளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து ரூபாய் வாடகை வீதம் வருடத்திற்கு 40000 ரூபாய் செலுத்தவேண்டும்.

சென்னைப்பட்டாளியன்களும் போர்ச்சுக்கீசிய கைவினைகர்களும் ஈடுபடுத்தப்பட்ட கட்டுமானத்தின் உத்தேச மதிப்பீடு 1கோடியே நான்குலட்சம். செங்கற்ஜல்லிகள்,சுண்ணாம்பு,கருப்பட்டி ஆகியவை கலந்து உருவாக்கப்பட்ட பழய்ய தொழில்நுட்பம்.கட்டுமான காலத்தில் சுமார் 450 பேர் உயிரிழந்தார்கள் இரண்டுமுறை உடைப்பெடுத்து பெருத்த சேதமேற்பட்டது எனவே செலவினங்கள் கூடியது, உடனே பிரிட்டிஷ் அரசு அணை கட்டுமானத்தை நிறுத்திவைத்தது.சர் பென்னிகுயிக் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து கட்டுமானத்தைத் தொடர்ந்தார்.

இந்தக் கட்டுமானத்தின் விஷேசம் என்னவென்றால் இரண்டு நதிகளின் போக்கு அரபிக்கடலை( மேற்கு)  நோக்கி யிருக்கிறது. அதைத் தேக்கி வங்காள விரிகுடாவுக்குத் (கிழக்கே) திருப்பவேண்டும். திருப்பியதால் தென்  தமிழக த்தின் மழைமறைவுப் பிரதேசங்களான மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரத்து மாவட்டங்கள் பயனடைந்தன.அங்கிருந்த சுமார் 85000 ஏக்கர் பொட்டல் காடுகள் விலை  நிலங்களாக மாறின. இந்த  அணையி லிருந்து கேராள பயன்பாட்டுக்கு ஒருசொட்டுக் கூடக் கிடையாது.அதே போல அணையின் பராமரிப்பு,பாதுகாப்பு எல்லாமே தமிழ்நாட்டைச்சார்ந்தது.

இந்த ஒப்பந்தம் இந்திய சுதந்திரத்துக்குப் பின் காலாவதியாகிய படியால் அதன் பிறகான பலசுற்றுப்  பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்து இறுதியில் 1970ல், முதல்வர் அச்சுதமேனன் அரசால் ஒப்பந்தம்  புதுப்பிக்கப் பட்டது.அதன் பிரகாரம் வாடகையை ஒரு ஏக்கருக்கு 30 ரூபாயாக உயர்த்தியும் அதுபோக தயாரிக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட் மின்சாரத்துக்கும் 12 ரூபாய் வரியாகவும் செலுத்தவேண்டுமென ஒப்பந்தமானது.

1979 ஆம் ஆண்டு குஜராத்திலுள்ள மோர்வி அணை உடைந்து சுமார் 1500 பேர் உயிரிழந்து 150000 பேர்  பதிக்கப் பட்டனர்.அதன்பின் அணைகள் குறித்த பாதுகாப்பில் தீவிரம் காட்டப்பட்டது.116 வருட பழமையும்,19ஆம்நூற் றாண்டின் கட்டுமானத் தொழில் நுட்பமும், வல்லுநர்களால் எச்சரிக்கப்பட்டது. கூடவே இரண்டு முறை  இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம், கல்லாறு பகுதிகளில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் நிலநடுக்கம். மாறிவரும் பூமி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களினால் முல்லைப் பெரியாறு தேக்கத்தை மையப்படுத்தி கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீரின் தேக்க அளவு குறைக்கப்பட்டது.கொந்தளிப்பு இரண்டு மாநிலங்களுக்கிடையிலான
சண்டையாக மாறிக்கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது எனக்கிளம்பிய போராட்டங்கள் கொந்தளிப்பாகி அவ்வளவுபெரிய அணயை உடைப்போம் என்று கேரளத்தார் அறிக்கைவிடுகின்றனர்.இந்த அறிவீன அறிக்கைகளை தூக்கிக் கொண்டு பிரதேச உணர்வை கிளறிவிடுகிறது கேரளாரசியல்கட்சிகள்.ஆனால் அங்கிருக்கிற சமூக ஆர்வலர்கள் இலக்கியவாதிகள் தமிழகத்துக்கு வழக்க ம்போல தண்ணீர் தந்தே ஆக வேண்டும் என அறிக்கை விடுகிறார்கள். நீதி மன்றமும் அதை உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு இது எதோ வெளிநாட்டுப் பிரச்சனைபோல கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எத்தனை பொதுத் துறைப் பங்குகளை விற்கலாம்,எந்தெந்த துறைக்குள் அந்நிய முதலீட்டைப் புகுத்தலாம்,சில்லறை விற்பனையோடு சேர்த்து எதையெல்லாம் விற்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது.

பொங்கிவரும் போராட்ட உணர்வைப் பார்க்கும்போது. சரி இருக்கட்டும் ஒரு நல்ல போராட்டத்துக்கான தருணம் வரும் அப்போது இன்னும் அடங்காத கோபத்தோடு மக்கள் கிளம்புவார்கள் என்கிற நம்பிக்கை வருகிறது.

6.12.11

’மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல’ (அண்ணல் அம்பேத்கர் நினைவுக்கு)


                                                        ( S.Radhakrishnan )

இந்தப் பதம் ஒரு நெடுங்கவிதையின் இடையில் வரும்.இதை எழுதிய கவிஞர் வலைமக்களால் பெரிதும் அறியப்பட்டவர்.அவன் தோழன் மாதவராஜ் .( தீராதபக்கங்கள்). அவன் எழுதிய இன்னொரு குருசேத்திரம் என்கிற கவிதையின் இடையில் தான் இந்தப்பதம் வரும். இது நாங்கள் நடத்திய அக்கினிக்குஞ்சு என்கிற கையெழுத்துப் பத்திரிகையில் தவிர வேறெங்கும் நாம் பார்க்க முடியாது. இருந்தும்  1984 ஆம் ஆண்டு வாசிக்கப்பட்ட கவிதையின் இடையில் வரும் இந்தச்சொல் ஏன் எனக்குப் பிடித்துப்போனது என்பதை முழுக் கவிதையையும் வாசித்தல் தான் புரியும்.அது ஒருபுறம் இருக்க மனம் இருந்தும் ஒருதாழம் பூவைப்போல ஒதுக்கிவைக்கப்பட்ட பலரில் பாபா சகேப் அம்பேத்கர் முதலானவர்.

அவர் குறித்த பல புத்தகங்கள் இருக்கிறது.இன்னும் வலையில் தேடினால் அதற்கதிகமாகவும் கூடப்படிக்கலாம்.ஆனால் அவரைப்பற்றிய சில அறிதான செய்திகளை எனது தாய்மாமனார் திரு எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்லிக்கேட்கவேண்டும்.. அம்பேத்கரைவிட பெருந்தலைவர் காமராஜர் குறித்த அறிதான விஷயங்களை இடம் காலம் குறித்த துள்ளியத்தோடு தனது அலாதியான விமர்சனத்தையும் சேர்த்துச் சொல்லுவார். அப்படி ஒருமனிதர் அதுவும் பள்ளி ஆசிரியர் பொதுச் சமூகத்தில் இருந்தால் அவரைக்கொண்டாட சமூகம், அமைப்புகள் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு வந்திருக்கும். ஏனோ தெரியவில்லை இந்த ஐம்பத்தெட்டு வயதிலும் யாராலும் இனங்காணப் படாத மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் கூட இந்த மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப் போல என்கிற பதத்தின் பட்டியலின் கீழ்வருகிற ஒரு மனிதராவார். அவர் அம்பேத்கர் குறித்துச்சொன்ன ஒரு விஷயத்தை இங்கே இன்று பகிர்ந்து கொள்ளவேண்டும்.

அவர் தனது மகனுக்காக ஒரு சான்றிதழ் வாங்க ஒரு வழக்குறைஞரிடம் போனாராம்.அங்கே வழக்கறிஞரின் நண்பர்களும் சொந்தங்களுமாக நான்கைந்து பேர் குழுமியிருந்தார்களாம். இவரைப்பார்த்ததும் இந்த அம்பேத்கர் என்னதான் செய்துவிட்டார் நாடு முழுக்க சிலைவைத்துக் கொண்டாடு மளவுக்கு என்று ஒருவர் கேட்டாராம் மற்றவர்களும் பகடி செய்து சிரித் தார்களாம். உடனே ’நான் ஒரு கையெழுத்து வாங்க வந்திருக்கிறேன் இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி என்காதில் விழுகிறது,நான் பதில் சொன்னால் ஒருவேளை எனக்கு போட வேண்டிய கையெழுத்து கிடைக்காமல் போய் விடும் ஆனாலும் என்னிடம் கேட்கப்படாத இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் போக முடியாது’ என்று சொன்னதும் சரி அப்படி என்னதான் செய்தார் இந்த அம்பேத்கர் என்று கேட்டிருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவுக்கு வரிவடிவிலான சட்டம் ஒன்று தேவைப்பட்ட தொடக்க காலத்தில் அதை உருவாக்கு வதற்கான அரசியல் நிர்ணய சபையைக் கூட்டினார்கள்.அதன் தலைவராக முன்னாள் சனாதிபதி திரு ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டாராம். பின்னர் அந்த சபை நான்குமுறை கூடி யிருக்கிறது அதன் பின்னர் கூட சுதந்திர இந்தியாவில் நான்குபேர் கொண்ட குழு அமைக்கமுடியவில்லை. பிர்தமர்நேருவின் ஆலோசனைப்படி அதற்குத் தகுதியான ஒரே நபர் என்கிற நிணயசபையின் உறுப்பினர்கள் எல்லோரும் அம்பேத்கரைப்பார்க்க அவரது இல்லத்துக்குப் போனார்களாம். வரவேற்று உபசரித்து வருகையின் நோக்கம் கேட்ட அறிந்துகொண்ட அம்பேத்கர் ’உங்களுக்கு ஒரு இதிகாசம் தேவைப்படும் போதும் நாங்கள் அவசியமாக இருந்தோம்,ஒரு புராணம் தேவைப்படும் போதும் நாங்கள் அவசியமான வர்களாக இருந்தோம் இப்போது சட்டம் தேவைப்படுகிறது இப்போதும் கூட நாங்கள் தான் தேவைப்படுகிறோம்’ என்று சொல்லிவிட்டு அரசின் விருப்பத்துக்கு இணங்க சட்டக்குழுவின் தலைவராக இருக்க ஒத்துக் கொண்டார். அந்தக்குழுவில் அம்பேத்காருடன் இணைந்து பணிபுரிய சர். அல்லாடி கிருஷ்ணமூர்த்தி அய்யரும், டிடி.கிருஷ்ணமாச்சாரியும்,வங்கத்தின் நர்சிங்ராவும்,கேகே முன்ஷி,கனேஷ் மாவ்லாங்கர் ஆகியோர்...... நியமிக்கப் பட்டார்கள்.

அந்தகுழுவின் முதல் கூட்டம் மட்டுமே ஆறுபேருடன் நடந்தது. பொதுவாகவே இப்படியான அமைப்புக்களின் முதல்கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் என்னவாக இருக்கும்.அலுவலகத்தை எங்கே வைத்துக்கொள்ளலாம்.
அலுவலக சாதனங்கள்,சப்பாடு,தேநீர் இவற்றை எங்கு இருந்து தருவித்துக் கொள்ளலாமென்கிற விடயங்கள் குறித்து மட்டுமே பேசியிருக்கமுடியும். அதன் பிறகு தனக்கு வயதுஆகிவிட்டது என ஒருவரும்,தான் மேலைநாடு போகிறேன் என்று இன்னொருவரும்,தனக்கு உடல்நிலைசரியில்லை என மூன்றாமவரும் அந்தக்குழுவில் இருந்து விலகிக்கொண்டார்களாம்.

குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கச் சொல்லிக் கேட்காமல் அம்பேத்கர் தனக்கிட்ட பணிகளை தன்னந்தனியே தொடங்கினார். அவர் குறிப்புகள் சொல்லசொல்ல அவரது உதவியாளர் அப்போதைக்கிருந்த அந்தக்கால ரெமிங்டன் தட்டச்சு எந்திரத்தில் அதை எழுத்துருவாக்க பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.

இடைப்பட்ட காலத்தில் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் சனாதிபதி ராஜேந்திரப் பிரசாத்திடம் போய் ஒரு தேசத்தின் சட்டவடிவை உருவாக்க எப்படி ஒருதனிநபரைமட்டும் சார்ந்திருக்கமுடியும் என்று வாதிட்டு இருக்கிறார்கள். அவர்களின் முணுமுணுப்பை புறந்தள்ளிய சனாதிபதி அவருக்கு துணைக்கு  ஆள் தேவைப்பட்டால் அவரே கேட்டிருப்பார் நானாக வழியப்போய் ஆட்கள் நியமித்தால் அவரை என்னால் எதிர்கொள்ள முடியாது தவிரவும் அவரது திறமை பற்றி எங்களுக்குத்தெரியும் என்று சொல்லிவிட்டாராம்.

ஒன்றிரண்டல்ல பத்தொன்பது மாதங்கள் அல்லும்பகலும் தன்னந்தனியே கிடந்து உருவாக்கிய வரைவு சட்டமசோதாவை மிகச்சரியாக நவம்பர் 1949 ஆம் ஆண்டு 26 ஆம் தேதி நிர்ணயசபையின் கூட்டத்தில் சமர்ப்பித்தார் அம்பேத்கர். 95 திருத்தங்கள்,12 பட்டியல்கள், 22 தொகுதிகள்,448 ஆர்ட்டிகிள்ஸ், ஆகிய வற்றை உள்ளடக்கிய 117369 ஆங்கிலச் சொற்களினால் உருவாக்கப்பட்ட ஒருகணத்த கோப்பு அது.

அந்தக்கூட்டத்தில் இந்த சட்ட உருவாக்கலில் தனக்கு உறுதுணையாக இருந்த ஏனையோருக்கும் நன்றி தெரிவித்து அவர்களின் பங்களிப்பில் தான் இது சாத்தியமாகி யிருக்கிறது என்று உரையாற்றினாராம். கூட்டத்தில் ஆஜராகி யிருந்த ஏகே அய்யர் என்கிற அல்லாடி கிருஷ்ணமூர்த்தி உட்பட யாரும் ஏதும் சொல்லாமலிருந்தாலும்,டிடிகே அவர்கள் எழுந்து உண்மையில் இந்த சட்ட உருவாக்கலில் எங்களுக்கு  பங்கில்லாத போதும்கூட எங்கள் பெயரை இணைத்திருப்பது அம்பேத்கரின்  பெருந்தண்மையைக் காட்டுகிறது என்று சொன்னாராம்.

உண்மையான நடப்பு இப்படி இருக்க பத்திரிகையாளர் திரு சோ.ராமசாமி அவர்கள் எதாவது சட்டநுணுக்கங்கள் பற்றிச் சொல்லும்போது பெரும்பாலும் டாக்டர் டிடிகே அவர்களின் பெயரையும், சர்.அல்லாடிகிருஷ்ணமூர்த்தி அவர்களையும் மட்டும்தான் மேற்கோளிட்டு காட்டுவார்.

மிகப்பெரும் படிப்பாளி,மிகப்பெரும் எழுத்தாளர்,கல்வியாளர்,உலகின் அணைத்து மதங்கள் குறித்து நுணுக்கமாக கற்றறிந்த அவர்தான் இந்து மதம் குறித்த மிகப்பெரிய எதிர்க் கருத்தை வலுவாக முன்வைத்தார்.சுமார் 5000 பக்கங்கள் எழுதியிருக்கிற சாதனை இதுவரையில் யாராலும் எட்டப்பட முடியாதது. தான் முதலாக வெளியிட்ட இந்தியாவில் ஜாதிகள் எனும் புத்தகம் தொடங்கி 1956 ல் வெளியான புத்தமும் அவரது தம்மமும் எனும் புத்தகத்தோடு சுமார் 21 புத்தகங்களை அறிவுலகத்துக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.அவர் எழுதிய புத்தமும் தம்மமும்,ரைடில்ஸ் ஆப் ஹிண்டுயிஸம்,சூத்திரர்கள் யார், அனிஹி லேசன் ஆப் கேஸ்ட் ஆகியவை எவராலும் மறுதலிக்கமுடியாத பொக்கி ஷங்கள். இந்தியாவின் சமூகபொருளாதார அமைப்புக்குறித்த அவரது தீர்க்க மான மற்றும் ஆழமான கருத்தியல்கள் பொதுச்சமூகத்தால் புறந்தள்ளப் பட்டவை. சத்திய சோதனையும்,வேர்ல்டு ஆப் டிஸ்டனியும் தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் அளவுக்கு அம்பேத்கர் அறியப்படவில்லை. சுமார் 50000 புத்தகங்களை தனது சொந்தச்செலவில் வாங்கி நூலகமாக்கிய பெருமை வேறெந்த கல்வியாளருக்கும் கிடையாது.

இந்தத் தகவல்களை உலக நடப்புகளோடும்,இன்றைய்ய செய்திகளோடும் ஒப்பிட்டுச் சொல்லிக்கொண்டே போவார் திருராதாகிருஷ்ணன் அவர்கள். அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் சத்தூரில் இருக்கிறது. அந்த பட்டாளம்  தேவி ஸ்டுடியோவிலோ,என் ஆர்கே சுவீட்ஸ் வாசலிலோ, இல்லை ஒரு தேநீர்க் கடையிலோ தினப்படிக்கு கூடும். மிகச்செறிவான அரசியல் சமூக, இலக்கிய,திரைப்படம் குறித்த விமர்சனக் கருத்துக்கள் பதிவுசெய்யப் படாமல் காற்றில் கறைந்து கொண்டே போகிறது. அவரிடம் அழியாத வாய்மொழிப் பொக்கிஷங்கள் தேங்கிக்கிடக்கிறது அதிலிருந்து கொஞ்சமாவது  எடுத்து பதிவு செய்ய ஆவலாக இருக்கிறது.எனவே இந்தநாளின் நடுப்பகலில் அவரைச் சந்தித்து அவரோடு பேசிக்கொண்டிருந்த தருணம் மிக முக்கியமானது.


         

4.12.11

சில சில்லறைத் தகவல்களும் தேசபக்தியும்.இந்த வார்த்தையே கொஞ்சம் சிக்கலானது அதென்ன தேச பக்தி. நாம் வாழும் தேசத்தின் மீது பக்தி மட்டும்தான் இருக்கவேண்டுமா? காதல் இருக்கக்கூடாதா ? நேசம்,அன்பு,பற்று,அபிமானம்,மரியாதை இவையெல்லாம் இருக்கக்கூடாதா ?. பக்தி என்கிற சொல்லே குதர்க்கமானதும் நிறைய்ய உள்குத்துகள் அடங்கியதும்  ஆகும். முதலில் தேசம் என்பது என்ன வெறும் எல்லைகள் மட்டும்தானா ? அதில் வாழுகின்ற மனிதர்  சகமனிதர், உயிரினங்கள்,இயற்கை,மண்,வளங்கள் இவை யாவும் கூட்டாக சேர்ந்தது தானே தேசமாக முடியும்.நம்மோடு இங்கிருக்கிறவற்றை நேசித்து விட்டு பிறகல்லவா எல்லைகள் பற்றி  யோசிக்கவேண்டும்.  இருப்ப வற்றை கூடியமட்டும் கூறுபோட்டு விட்டு தேசபக்தி வேண்டுமெனத் தேடினால் என்ன  கிடைத்து  விடப் போகிறது. கிடைக்கப்போவது அக்மார்க் அடிமைத்தனம் மட்டுமே?

இந்த இந்தியா அம்பத்தாறு தேசங்களாக பிரிந்துகிடந்த காலத்தில் மேலை நாடுகளில் இருந்து எதாவது வாசனத்திரவியங்களை விற்கவந்தார்ர்கள். வந்ததும் லாட்டரி அடித்த சந்தோசமடைந்தார்கள். எதற்கு ஏவாரம் பண்ணவேண்டும் நாட்டையே  அடிமைப் படுத்திவிட்டால் கப்பல் கப்பபலாய் அள்ளிக்கொண்டு போகலாம் என்று முடிவுபண்ணினார்கள். அது அவர்களுக்கு வியாபாரம் பண்ணுவதை விட சுலபாமான வேலையாக இருந்தது.அவர்களின் உடலுக்கு ஏற்ற தட்பவெப்பம் சரியாக இல்லாதிருந்த போதுகூட அவர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கான தட்பவெப்பம் தேவைக்கு அதிகமாகவே இருந்தது.

கிறிஸ்து பிறந்து 2011 ஆண்டுகள் கடந்து போன பின்பும்,கணினி,உயிரி,பௌதிக,ரசாயன தொழில்நுட்பங்கள் கூடிப்போன இந்தக்காலத்தில் கூட கேரளத்தோடும், கர்நாடகத்தோடும், மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற இதே மனிதர்கள் தான் அன்றைக்கு சேர,சோழ,பாண்டிய மீசைகளை முறுக்கிவிட்டுக் கொண்டலைந்தார்கள். சகமனிதனை வெட்டிச் சாய்த்துப் பீய்ச்சி அடிக்கிற ரத்தத்தைக் கண்டு கொந்தளிக்கிற குரூரத்தை வீரம் என்று பீற்றிக் கொண்டு கிடந்தார்கள். ஆடுமாடு திருடுவதை ஆநிறை கவர்தல் என்று புராணகாவியங்கள்  எழுதி வைத்தார்கள்.

பிறன்மனை நோக்கக்கூடாது என்பதை இதிகாசமாக்கிய காலத்தில்தான் ஒருத்தன்  பொண் டாட்டியை இன்னொருத்தன் அபகரிக்க ஆயிரக்கணக்கான சிப்பாய்களின் விலை மதிப்பில்லாத உயிர்களைப் பகடைக் காய்களாக்கினார்கள். மலை உச்சியில்,நதிக்கரைகளில் நூறு இருநூறு ஏக்கர்களில் அரண்மனை  கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான பெண்களை வைத்துக்கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு ஏழைகளின் வயிற்றிலடித்து வரிகள் வாங்கிக் குவித்தார்கள். இதே மன்னர்கள் தான் நோய்வாய்ப்பட்டு மரித்துப் போன மனைவிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்புகிறேன் என்று சொல்லி லட்சக்கணக்கான மனிதர்கள் உழைப்பை உறிஞ்சி மண்டபங்கள் கட்டினார்கள். இதை எவனும் எதிர்த்துக்கேட்க வழியில்லாதவாறு மனிதர்களை நிறம்பிரித்தார்கள்.

இதுபோதுமானதாக இருந்தது மேலைத் தேசத்தவர்கள் நம்மை அடிமையாக்க.வெறும் பிரிட்டிஷார் மட்டும் தான் நம்மை அடிமையாக்கினார்கள் என்பதுபோலத்தான் இன்றுவரை நமக்கு வரலாறுகள்  சொல்லிக்கொடுக்கின்றன. வந்து போனவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவமானத்தில் உடல்பதறுகிறது.  கில்ஜிகள், முகம்மதியர்கள், பார்சீகள்,போர்ச்சுக்கீசியர்கள்,யூதர்கள்,சிரியர்கள்,டச்சுக்காரர்கள், அப்புறம் தானே பிரிட்டிஷார்கள் வந்தார்கள். இதிலென்ன கொடுமை என்றால் இந்த இனத்தவரெல்லாருடைய நாட்டு வரைபடத்தைப் பாருங்கள்  வெற்றிலை எச்சிலைத்( அல்லது பான்பராக்) துப்பியது போலதிட்டுத் திட்டாய்மட்டுமே இருக்கும். அப்படியே நமது இந்திய வரைபடத்தைப் பாருங்கள் மிகக்கேவலாக இருக்கும். அதைவிடக் கொடுமை என்ன வென்றால் யூதர்களுக்கு நாடே கிடையாது.

இந்த யூதர்களுக்குத்தான் கேராளா தொடங்கி பம்பாய் வரையிலும் இந்தியா சிக்கிக்கிடந்தது. அதற்குப்பெயர் யூத இந்தியாவாம்.அந்த யூத வந்தேறிகளுக்கு அப்போதைய ’இந்து’ மன்னன் ஒருவன் கிறித்தவ யூதத்தலைவன் ஜேம்ஸ் ராப்பனுக் கொடுத்த உரிமைகைகளின் எண்ணிக்கை 72 வகையாகும்.ஆள்,அம்பு,பரிவாரம்,அரண்மனை,அந்தப்புறம் இவைகள் போதாதென்று ஆனைமேலே  அம்பாரி. அந்த அம்பாரி போகும் போது முன்னாடி முரசறைந்து கொண்டு பராக் சொல்லவேண்டும். சொல்லும்போது கீழ்சாதிக்காரார்கள் ஓடோடி கண்ணில் படாமல் மறைந்து கொள்ளவேண்டும். இதே வகை மரியாதைகள் சிரியதேசத்து கிறித்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டதாகத் தாமிரப் பட்டயம் சொல்லுகிறது.( ஜேம்ஸ்மெஸ்ஸேயின் ’தி டவுன்ட்ரோடன்’ பக்கம் 17 ).தனது மண்ணில் தன்னோடு பிறந்து தனக்காக உழைத்து,வியர்வை சிந்துகிறவனை பார்க்கக்கூடாதவனாகவும் தன்னை  அடிமையாக்க வந்தவனிடம் குண்டி குப்புறவிழுந்து எல்லாவற்றையும் இழந்து போனவர்கள் தான் வீரம் செரிந்த மன்னர்கள் என்று நாம் இன்னும்கூடப் போற்றிப்பாடுகிறோம்.

ஏகலைவன் என்கிற ஒரு சாமான்யன் வில்வித்தை தெரிந்துகொண்டான் எனக்கலங்கிப்போய் அவன் பெருவிரல் பிடுங்கிய சூழ்ச்சிக்காரர்கள் வாழ்ந்த இந்த தேசத்திலிருந்து தான் போதி தர்மன் வருஷக்கணக்காய் பயணமாகிப் போய்  சீனர்களுக்குத் தற்காப்புக் கலை சொல்லிக் கொடுத்தானாம். இது எப்படியிருக்கிறது ?. புராணங்களின் காதுகளிலேயே சமகாலக் கதைகள் பூச்சுற்றுகிறபோது பழங்காலக் கதைகள் சும்மாவா  இருந்திருக்கும் ?. சொல்லுகிற கதைகளெல்லாம் வீரம்தான் என்று வைத்துக்கொள்வோம். அதையெல்லாம் வைத்துக்கொண்டு உள்ளூர்க்காரனை மட்டும் தான் அடிக்கவேண்டுமா அயல்நாட்டுக்காரனை அடிக்கக்கூடாதா? அப்படியானால் அது
என்னவகை வீரம். அந்த வீரத்தை 1947 வரை அடகுவைத்திருந்தார்களா? இல்லை  பத்மநாதபுரம் கோயில் நகைகளைப்போல குழிதோண்டிப் புதைத்துப் பூட்டிவைத்திருந்தார்களா?.

இந்தியப்பரப்பில் எத்தனை பேரரசர்கள்,எத்தனைஎத்தனை சிற்றரசர்கள்,எவ்வளவு குறுநிலமன்னர்கள்,இன்னும் ஜமீந்தார்கள் இருந்தார்கள்.  அவர்களில் எத்தனை அரசருடைய ஆள் அம்பு பரிவாரங்கள் பிரிட்டிஷாரைக்குறி பார்த்தது. கணக்குபார்த்தால் வருத்தமாக இருக்கிறது. ஆனால் வரி வசூலிப்பவர்களாகக் கப்பம் கட்டுகிறவர்களாக காலந்தள்ளிய மன்னர்கள் பட்டியல் தான் கணக்கிலடங்காதது. ராணி லக்குமிபாய், வீரபாண்டியக் கட்டபொம்மன் போன்றோரைக் கணக்கிலெடுத்தாலும் மெல்லமெல்லக்கிளம்பும் தரவுகள் குழப்பம் தருகிறது.

ஆனால் சாமன்யர்களின் கால்கள் வீதிக்கு வந்தபிறகுதானே சுதந்திரம் என்கிற சொல் உருவானது. அப்படிச்சொல் உருவாக உயிர் புதைத்தோர் பட்டியல் நீளமானது அவர்கள் யாரும்  அரச குடும்பத்தையோ, ஜமீந்தார்  பரம்பரை யிலோ இல்லை வழிவழியாய் நெஞ்சில் வாள் கொண்டு எழுதிய வீரக்கதைகளுக்குச் சொந்தக்காரர்களோ
இல்லை. ஜாலியன் வாலா பாக்கில் மலிவாக மடிந்துபோன உயிர்களுக்கு பதில் கேட்க முப்பதுவருடங்கள் பதுங்கியிருந்து ஜெனரல் டயரின் உயிரை பிடுங்கினன் ”உத்தம் சிங்”.இந்தப்பெயரைக்கேட்டாலே உடல் புல்லரிக்கிறது. வன் ஒரு சாமன்யன்.அதேபோலத்தான் சூரியா  சென்,  கல்பனாதத் , பகத்சிங்,  சுகதேவ், ராஜகுரு,வாஞ்சி,குமரன்,வ உ சி,சிவா என்கிற எளிமையான மனிதர்கள் தான் போராளிப்பட்டம் ஏந்தினார்கள். அவர்களின் கதைகள் கேட்ட சாமான்யர்கள்தான் தெருவில் இறங்கினார்கள்.இறங்குவார்கள்.

அதுவரை
சில்லறை சில்லறையாய்
எல்லாவற்றையும் சுருட்டிக்கொள்ளும்
இந்த தேசத்து ஆட்சியாளர்களோடு
கைகோர்த்துக்கொண்டு
அமெரிக்காவும் ஆட்டம்போடும்.
அதுவரை
நாமும் மலையாளிகளும் மாறி மாறி
உண்ணாவிரதம் இருக்கலாம்.
அதுவரை
தேசம் என்பது பக்திக்கானதாக
மட்டுமே பற்றவைக்கப்படும்.

2.12.11

மாற்றத்தைத் தடுக்கும் அரண்


எகிப்து தொடங்கி
வால்தெரு வரை
பற்றிப் படர்ந்த தீ,
என்தேசத்துக்குள்
நுழையவில்லை.
ஏனெனில்
அது மூன்று பக்கம்
ஜாதியாலும்
ஒரு பக்கம்
மதத்தாலும்
சூழப்பட்டிருக்கிறது.

27.11.11

நாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.

வலைநண்பர்கள் 
அணைவருக்கும் 
நன்றி. 
இது 500 வது பதிவு.


மேகம் கருத்து ஊதக்காத்து வீசியதும் தட்டான்கள் தாளப்பறக்கும். நெய்க் குருவிகள் எங்கிருந்தோ கிளம்பிவந்து ஊர்களுக்குள் குதியாளம் போடும். மாரிக்கிழவன் புருவத்துக்குமேலே கைவைத்து சலாம் போடுகிற பாவனையில் அண்ணாந்துபார்த்து ’ தெக்க எறக்கமா இருக்கு ஓடப்பட்டி காட்டுல ஊத்து, ஊத்துனு ஊத்துது’ என்று புளகாங் கிதப்படுவான்.உடனே கலப்பையில் பிஞ்சு கிடக்கும் கைப்பிடியை சரிசெய்ய அல்லிராஜ் ஆசாரியிடம் ஓடுவான். முத்திருளாயிச் சித்தி அண்டாவைத் தூக்கிவந்து ஊர்மடத்து மொட்டை மாடியின் குழாய்க்கு நேராக வரிசை போடுவாள். அஞ்சப்பெரியன் ஓடிப்போய் காட்டில் கட்டிப் போட்டிருக்கும் எருமையை இழுத்துக் கொண்டுவந்து ஆள் புழங்காத ஓட்டைவீட்டில் கட்டிப் போடுவான். எப்படியும் ஓடப்பட்டியில் பெய்யும் மழை ஊருக்கு வந்துவிடும் என்கிற சந்தோசத்தில் ஊர்பரபரக்கும்.  இப்படித்தான் அந்த முண்டாசுக்கவிஞனும் ஆஹாவென்றெழுந்தது யுகப்புரட்சியென்று  புளகாங்கிதப் பட்டிருப்பானோ?.

கொடியில் காயும் ஒற்றை மாற்று பழுப்புநிற வேட்டியை எடுத்து மடித்து பத்திரப்படுத்தும் சூரிக்கிழவனுக்கு கூரை முகட்டைப் பார்த்து பார்த்து கலக்கம் வரும். மச்சினன் வீட்டில் போய் ரெண்டு சருகத்தாள் ஊரியாச்சாக்கு கடன் கேட்பான்.எதோ ரெண்டேக்கர் கம்மாக்கரை பம்புசெட்டை எழுதிக்கொடுக்கிற மாதிரி நெடுநேரம் யோசிப்பான் மச்சினன் யோசியப்பு. பொண்டாட்டிக்காரி எடுத்துக்கொடுத்த பிறகு தருமப்பிரபு பட்டத்தை தானாகப் புடுங்கிப் போர்த்திக் கொள்வான்.அதில் அவனுக்கொன்றும் லாஞ்சனையில்லை. தாயாருந்தாலும் பிள்ளையாயிருந்தாலும் வாயி வகுறு வேற வேற என்பதே அவனது தாரகமந்திரம். தனக்குப்போகத்தான் தானம் என்கிற சொல்லில்  மறைந் திருக்கும்  நமுட்டுச்சிரிப்புத்தான். ஆனாலும் ஊர்- சமூகம் என்பது பகிர்தலின் ஆதிப்பொதுவிலிருந்தே ஒன்றுசேர்கிறது. அரைக்கிலோ கறியெடுத்துவந்து வதக்கி ஒத்தையாளா திண்ணு ஏப்பம் விடும் ஆசாமிகள் ’எலும்புக் கொழம்பில் தான் சத்து இருக்கு’ என்கிற மாதிரி எப்போதுமே ஒரு மந்திரச்சொல்  வைத்திருப் பார்கள். அல்லது சம்பாதிக்கிற எனக்கே அதை செலவழிக்கிற தகுதியும் திறமையும் இருக்கிறதென்கிற இருமாப்புத் தத்துவம் எழுதிவைத்துக் கொள்வான். அது வெள்ளந்தி தெருக்களில் குறைவாகவும் சமத்தர்களின் பகுதியில் அதிகமாகவும் விளைந்துகிடக்கும்.

கொட்டாரத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கும் சாம்பக்கோழிக்கும் தெரிந்து போகும் இன்னும் கொஞ்சநேரத்தில் மழைவந்துவிடுமென்று. கொக்கொக் என்று குஞ்சுகளைக்கூப்பிட்டுக்கொண்டு தாழ்வாரங்கள் தேடிப்போகும். கூடடையும் கோழிக்குஞ்சுகளைப் பார்த்ததும் முத்தரசி மதினிக்கு மகன் ஞாபகம் வந்து  வீடு வீடாய்த் தேடுவாள். ’நடக்கத் தெரிஞ்சுக்கிட்டு இந்த கருவாப்பய ஒருநிமிஷம் வீடுதங்க மாட்டிக்கானே அவங்க அப்பனமாதிரி’ என்று முனுமுனுத்துக் கொண்டுபோய் தீப்பெட்டிக் கட்டு ஒட்டும் சரோஜாச்சித்தி  வீட்டி லிருந்து  கருவாப்பயமகனே என்று கன்னத்தைக் கடித்துக்கொண்டே  தூக்கிக்கொண்டு வருவாள். சின்னம்மாப் பாட்டி வெளியில் வந்து ’எலே ஏ வேலவரு எங்கே போய்த்தொலஞ்சான் இந்த மூத்த பய’ என்று மகனைத்தேடுவாள். அவள் கூப்பிட்ட சத்தம் தொடர் சத்தங்களால் ஓட்டைமடத்தில் உட்கார்ந்து  திருட்டுத் தனமாய் சிகரெட் குடிக்கிற வேலவருக்கு வந்துசேரும். உருப்பிடியா ஒரு சீரெட்டுக்குடிக்க  விட மாட்டாகளே என்று ராக்கெட் விடுவதை தடுத்தமாதிரி சலித்துக்கொண்டு கிளம்புவான். ’எய்யே எங்கய்யா போன மழ இருளோ மருளோன்னு வருது. களத்துல மொளகாப் பழங் காயுது. மாட்டுக்கு கூளம் உருவிப்போடனும் நீபாட்டுக்குல போயி ஓட்ட மடத்துல ஒங்காந்தா எப்புடி’ என்று  கெஞ்சுவாள். பின்னாடி வந்த  பவுலைப்  பார்த்துக் கொண்டே அந்த ஓட்ட மடத்துல  என்னாதான் இருக்கோ என்று புலம்புவாள்.

'ஏ.... வெளங்காதவனே  ஙொப்பஞ் சீரழிஞ்சது போதாதா நீயுமா இப்பிடி படிக்கிற காலத்துல  பீடிசீரெட்டுக்குடிச்சுக் கிட்டு அலைவ இந்தா இந்தக்கோணிச்சாக்க கொண்டு போ, புதுருக்கு கடக்கிபோன மனுசன் மழையில நனைஞ்சிட்டு வருவான் கொண்டு போய்க்குடு’ என்பாள் பவுலின் அம்மா குந்தாணிப்பாட்டி. கொட்டாரத்தில் வெட்டிப்போட்ட விறகுகளைக் கட்டித் தூக்கிவந்து மழை படாத இடம் பார்த்து திண்ணையில் அடுக்கி வைப்பார் கொண்டச்சுந்தரப்ப மாமன். இத்தினிக்கானு வீட்ல ஆளுகளுக்கு கால்நீட்ட எடமில்ல வெறகக்கொண்டுவந்து அடுக்குறதப்பரு கிறுக்குப்பிடிச்ச ஆளு என்று கிண்டல் பண்ணும் சீதேவி அத்தையை அடிக்க ஓங்கிக்கொண்டே ’அங்க பாரு அடச்சுக்கிட்டு வருது சாய்ங்கால மழ, லேசுக்குள்ள விடாது, வெறகுநனஞ்சு போனா கால நீட்டியா அடுப்பெறிப்ப அறிவுகெட்ட சிறுக்கி’ என்று கடிந்துகொள்வான்.

மழைக்காலம் தொடங்கி விட்டது.இனித் தெருக்களில் கால் நீட்டிப்படுக்க முடியாது.தெருவிளக்கில் உட்கார்ந்து சீட்டு விளையாட்டு நடக்காது. நிலவொளியில் சின்னஞ்சிறுசுகள் கண்டொழிப்பான்  விளையாடாதுகள். வழக்கத்துக்கு முன்னாடியே ஊரடங்கிப் போகும். தீப்பெட்டி யாபீசுகளில் வேலை நின்றுபோகும். மூனுமாசத்துக்கு கையில துட்டு இருக்காது. காலையில் சூடாகக் காப்பிகுடிக்க பாயாசக்கரண்ணனிடம் கடன் சொல்லி வசவுவாங்க வேண்டும். சிலுவாடு சேர்த்துவைத்த காசுகள் வெளியேறி கடைக்குபோகும்.முத்துமாரி மதினி இருக்கங்குடிக்கு முடிஞ்சுவச்ச காணிக்கைத் துட்டை எடுத்து கருவாடு மொளகா வாங்கிக்கொள்வாள். மஞ்சள் துணியிடம்  மன்னிப்புக் கேட்டால் கூட மனதிறங்கி மாரியாத்தா சும்மா வுட்டுருவா.சனங்கள் தீப்பெட்டியாபீசிலிருந்து கிளம்பி வயக்காட்டு வேலைகளுக்கு மாறிக் கொள்ளும். இனிக்கூலியாக தானிய தவசங்கள்தான் கிடைக்கும்  அதைசாப்பாடாக தயார் பண்ண சாயங்கால நேரங்களில் பூமி அதிர அதிர உரல்கள் இடிபடும்.

கனகமணிஅத்தையும் ஞானசுந்தரிச்சித்தியும் காலக்கம்மம்புல்லை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே நேரத்தில்  ரெண்டு பேர் ஜோடிபோட்டு உரலிடிப்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.ஒரு அடி விட்டமுள்ள உரல்வாயில் மேல் செருகியிருக்கிற உரப்பட்டியிலும் படாமல் ஒரு உலக்கையை இன்னொன்று உரசி விடாமல் நெஞ்சாங் குழியிலிருந்து ஹ்ர்ர்ம் ஹ்ர்ர்ம் என்று உருமல்குரல் கொடுத்துக்கொண்டு நடக்கிற ஒரு விளையாட்டுப் போட்டி போலத்தெரியும். நேரம் ஆக ஆக வேகமெடுக்கிற உலக்கைகளின் குத்து அந்த பிரதேசத்தயே அதிரச்செய்யும். சற்று நிறுத்தி முகம் முழுக்க ஓடித்திரியும் வியர்வையை சேலைத்தலைப்பை எடுத்து அழுத்தித் துடைத்துக்கொள்ளும் ஞானசுந்தரிச் சித்தியின் முகத்தில் ஆயிரமாயிரம் தேவதைகள் குடியிருப் பார்கள். உள்ளங்கையில் எச்சிலைத் துப்பி இரண்டு கையையும் உரசி ஈரப்படுத்திக்கொண்டு கனமணி அத்தை கேட்கும் ’என்னவிள அவ்வளவுதானா ஓ எசக்கு’ என்றதும் உலக்கையை எடுத்து உயர்த்துவாள். ஏ இருடி இருடி என்று சொல்லிக்கொண்டே குண்டாலச் செம்பெடுத்து கம்பரிசியில் கொஞ்சம் தண்ணீர் ஊத்திவிட்டு தனது தொண்டைக்குழியில் கொஞ்சம் ஊற்றிக்கொள்வாள் கனமணி அத்தை.

இந்த ஞாயித்துக்கெழம கம்மாய்க்கு குளிக்கப்போகனும்டி,நீச்சடிச்சு குழிச்சு எம்பூட்டு நாளாச்சு என்பாள். அந்த எம்பூட்டு என்கிற கால அளவின் ஊடே மாரிமுத்துவின் உருவம் வந்துபோகும்.பதினாலு வயசிருக்கும் தண்ணிக்குள்ள தொட்டுப்பிடிச்சி விளையாண்டார்கள்.அப்போதெல்லாம் கனகமணியை யாராலும் நீச்சலில் பின்தொடர முடியாது. அதே போல மாரிமுத்து இந்தக்கரையில் முங்கி அந்தக்கரையில்  எந்திரிப்பான். இரண்டு நீச்சல் எதிரிகளை அந்த சித்திரை மாசத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் போட்டிக்கு அழைத்தது. என்னத்தொட்டுரு ஒனக்கு உள்ளாங்கையில சோறுபொங்கி ப்பொட்றேன் என்றாள். அது பழமொழி.உள்ளபடி கனகமணிக்கு வெண்ணி வைக்கக்கூடத்தெரியாது.கூட வந்ததெல்லாம் நண்டும் நசுக்கும்.கரையில் உட்கார்ந்திருந்து துணிகளுக்கு காவலிருந்த ஏஞ்சல்தான் ரெப்ரீ.

பொம்பளப் பிள்ளதானே என்று நினைத்து பின்தொடர்ந்த மாரிமுத்து திணறிப்போனான்.குளிக்கிற படித்துறை யிலிருந்து நேராகப்போனால் அக்கறைவந்துவிடும்.பக்கவாட்டில் போனால் கண்மாய் வளைகிற இடத்தில் நாணல் புதர்களும் வேலிச்செடிகளும் இருக்கும் அதைக்கடந்து போனால் படித்துறையின் பார்வையில் இருந்து மறைந்து போய்விடலாம்.விரட்டிப்போன மாரிமுத்து மிக அருகில் மடேரென்று எழுந்தாள். பதறிப்போன மாரிமுத்து சுதாரிப்பதற்குள் மறுபடி முங்கி காணாமல் போனாள்.ரெண்டு நிமிசம் கழித்து தூரத்தில் மாரிமுத்து மாரிமுத்து என்கிற சத்தம் கேட்டது.வேகமாகப்போனான் கால்ல எதோ சுத்தி இருக்கு சாரப்பாம்பா பாரு என்றாள் முங்கி அவள் காலைப்பிடித்தான் அது எதோ செடியின் தண்டு.அங்கிருந்து ஒரு மேடான பகுதிக்குப் போனார்கள். அந்தப் புதரில் தொங்கிய தூக்கணாங் குருவிகள்,. நாணல் பூக்கள், நாணலுக்குள் சலப் சலப் என்று விளையாடும் குறவை மீன்கள் எல்லாம் ரம்மியமானதாகத்தெரிந்தது அவற்றோடு மாரிமுத்துவும். ஏபிள்ள இதென்ன உதட்டுக்கீழ என்று கம்மாய்த் தண்ணீரின் சிகப்பு படிந்திருந்த நாடியைத் தடவினான். சூடாக இருந்தது.ஏவின நா ஒனக்கு நா சித்திமொற என்றாள்.’சீரெங்கபுரத்து சமியாடிபொன்னையச்சின்னையன் ஒனக்கென்ன மொற’ ’அது எங்கம்மா கூடப்பிறந்த மாமா’.’எனக்குச்சித்தப்பா, இப்பச்சொல்லு’ என்றான்.’இங்கரு தொட்ட நீதாங்கட்டிக் கிறனும்’. இதமொதல்லயே சொல்லவேண்டியதுதான என்று தண்ணீரோடு நெருங்கினான்.

அவன் கண்களில் இருந்து பீச்சியடிக்கிற காந்தத்தில் உடல் முழுக்க சூடு பரவியது. வீட்டில் யாரும் வாய் வச்சு தண்ணீர் குடித்தால் அந்த டம்ளரில் அதுக்கப்புறம் தண்ணீர் குடிக்காத சுத்தக்காரிக்கு.தனக்கெனக் கோரம்பாய், தட்டு,சீப்பு என தனித்து பதவிசு பார்க்கும் மேட்டிமைக்காரிக்கு மாரிமுத்துவின் எச்சில் ருசித்தது.சித்திரைக் கண்மாய் வெளியே வெதுவெதுவெனவும் உள்ளே குளு குளுவெனவும் ரெண்டு குணங்களில் கிடக்கும்.எச்சில் பட்ட ஒரு அரைமணிநேரம் கழிந்து போனது. திரும்பி வரும்போது இவர்களிடம் இருந்த இயல்பு தொலைந்து போயிருந்தது. எஞ்சல் மட்டும் இருந்தாள் ரெண்டுபேர் கண்ணையும் உற்றுப்பார்த்தாள். போய்ட்டு வரட்டா சித்தி தொட்டுட்டேன் நீ பந்தயத்துல தோத்துட்ட என்றபடியே சைக்கிளை எடுத்து விருட்டென்று மறைந்து போனான்.

அதற்க்கப்புறமான நாட்களெல்லாமே ஞாயிற்றுக்கிழமையை குறிவைத்தே கழிந்தது.ஒருவாரம் அவன் ஊரில் இல்லை. அடுத்த வாரம் ஒரே பெரிய பொம்பளைகள் கூட்டம். ஏ ஆம்பளப்பயக தனியாப்போங்கடா என்று அதட்டி விரட்டி விட்டாள் பன்னீரக்கா. ஒரு வெள்ளிகிழமை தீப்பெட்டி ஆபீஸ் சோதனை என்று சொல்லி பிள்ளைகளை விரட்டி விட்டிருந்தார்கள் நேரே கண்மாய்க்குத்தான் ஓடிவந்தாள். நெடுநேரம் மாரிமுத்து வரவில்லை தலை துவட்டி  பட்டன் போடும்போது வந்தான். பேசாமல் விடுவிடுவென்று போய் விட்டாள். குளிப்பதா வேண்டாமா என்கிற சிந்தனையிலேயே உட்கார்ந் திருந்தான்.கரையில் கூழாங்கற்களை எடுத்து களுக் களுக் கெனச் சத்தம் வர போட்டுக்கொண்டிருந்தான். ஒரு சாரப்பாம்பு தலை தூக்கியது சிலீரென்றது உடம்பு.அப்புறம் கனகமணியின் நினைவு வந்தது. பின்னாடி இர்ந்து பெரிய கல் விழுந்தது. திரும்பிப்பார்த்தான் கனகமணி நின்றுகொண்டிருந்தாள். என்ன வென்று கேட்டான் ஏங்கூடப்பேசாத என்றாள். பின்னர் தண்ணீருக்குள் இறங்கினாள் ஏஞ்சல் மேட்டில்போய் உட்கார்ந்து கொண்டாள். இவன் திரும்பிக்கொண்டான்.மேட்டிலிருந்து ஏ மாரிமுத்து ஒங்காளு கம்மல் தண்ணிக்குள்ள விழுந்துருச்சாம் கொஞ்சம் தேடிக்குடு என்றாள்.  ரெண்டுபேரும் தேடினார்கள். அதற்கப்புறம் ரெண்டுமூனு வாரத்தில் தண்ணீர் காலியாகி முட்டளவுக்கு வற்றிப்போனது.நிறமும் மங்கி குளிப்பதற்கு ஏதுவானதில்லாமல் போனது.மீன்பிடிக்க ஆரம்பித்தார்கள்.

கனகமணியை ரெண்டுவாரம் குச்சலுக்குள் உட்காரவைத்தார்கள். ஜன்னல் வழியே பார்த்து பார்த்து  மாரிமுத்துவைக்காணாமல் துவண்டு போனாள்.சடங்குவைத்தார்கள்.மூன்றே மாதத்தில் எலவந்தூருக்கு  வாக்கப்பட்டுப் போய்விட்டாள்.மாரிமுத்து படிப்பை நிறுத்திவிட்டு தாம்பரத்துக்கு கல்லுடைக்கப்போய்விட்டான். நான்கைந்து வருடத்தில் கனகமணி புருசனோடு திரும்ப ஊருக்கே வந்துவிட்டாள்.மாரிமுத்துவும் அக்கா மகளைக்கல்யாணம் முடித்து தாம்பத்திலேயே தங்கிவிட்டான்.

அந்த வழியாக வந்த செல்லமுத்து கம்புகுத்த வரலாமா என்று கேட்டுவிட்டு நமுட்டுச்சிரிப்பு சிரிப்பான்.அதில் ரெட்டை அர்த்தமில்லை ஒற்றை அர்த்தம்மட்டுமே என்பதை புரிந்துகொண்ட ஞானசுந்தரிச் சித்தி சும்மா
வாய்ட்ட அளக்கக்கூடாது வந்து எங்கூட ஜோடி போட்டு இடிச்சிட்டு அப்புறம் பேசனும் என்றதும்  பாஞ்சாம் புலியாட நடையை கூட்டிவிடுவான் செல்லமுத்துச் சின்னையன். ஞானசுந்தரிச்சித்தி ஏதோ சொல்ல மொங்கு மொங்கென்று சிரித்து விட்டு சும்மா கெட பிள்ள அது எனக்கு தம்பி மொற என்பாள். அந்த வழியே அழுதுகொண்டு போகிற சின்னத்தாயின் மகனைக் கூப்பிட்டு மூக்கைப்பிடித்து துடைத்துவிட்டு,கையில் ஒருகைப்பிடி கம்பரிசியை உருண்டை பிடித்துக்கொடுப்பாள் கனகமணி அத்தை. அந்த நேரத்தில்  சொட்டு சொட்டாய் இறங்கும் மழையை முந்திக்கொள்ள வேகமாக இடிபடும் உரல்.இடித்த அரிசியை அள்ளி குத்துப் பெட்டியில் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடினார்கள்.ஒவ்வொருமழையும்,எட்திர்ப்படுகிற
கண்மாய்களும் மாரிமுத்துவையே ஞாபகப்படுத்தியபடி கழிந்தது. இந்தமுறை கட்டாயம் கண்மாய்நிறையும் என்று ஆளாளுக்குச் சொல்லும் போதெல்லாம் நாணல்புதர் செழித்து வளருவதுப்போல் நினைவுகளும் வளரும்.   வீட்டுக்கு வந்தாள் அங்கே புருசன் கண்ணுச்சாமி உட்கார்ந்திருந்தான்.

ஏம்மா இந்த வருசம் ஒரு குண்டு வயக்காட்ட வாரத்துக்கு பிடிச்சி நெல்லுப்போடுவமா  என்றுகேட்டான்.  ஒத்துக் கொண்டாள். நாணல் புதருக்கு எதிர்த்தாப்போல வயக்காடு கிடைத்தது. சங்கிலியைக்கழட்டி அடகுவைத்து நெல் நட்டார்கள். மூணு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அடிக்கடி வயக்காட்டுக்குப் போனாள். அந்த மாசிமாசம் மாரிமுத்து தங்கச்சி மகளுக்கு காது குத்துக்கு ஊருக்கு வந்திருந்தான். குளிப்பதற்கு வீட்டுக்காரியைக்  கூட்டிக் கொண்டு கம்மாக்கரைக்குப் போனான். கொண்டுவந்த துணிகளை எடுத்துக்கொண்டு நாணல்புதர் பக்கம் போனார்கள்.அங்கேயே ஒரு கல்லெடுத்துப் போட்டு துவைத்தார்கள். வயக்காட்டைப்பார்க்க வந்த கனகமணிக்கு நாணல்புதர் பக்கம் ஆள்சத்தம் கேட்டது. கம்மாக் கரையேறினாள்.அது மாரிமுத்துவின் சத்தமேதான். நானும் எம்பிரண்டும் போட்டிபோட்டு முங்குநீச்சடிச்சு இங்கவந்துதான் விளையாடுவோம் என்று மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். நாணல்புதருக்குள் குறவைமீன்கள் சலப் சலப் என்று சத்தமிட்டுக்கொண்டு ஒன்றையொன்று விரட்டிக்கொண்டலைந்தன.

13.11.11

ஆற்றாது அழுத கண்ணீர்......


தமிழ் மக்களின் மேல் கவிழ்ந்திருக்கும் நீங்காத சாபம்தான் இந்த நிகழ் அரசியலும்,சினிமாவும். ஒரு ஐந்துவருடம் மக்கள் பட்டு அழுந்திய மனக்குமுறலுக்கும் ஆயாசத்துக்கும் திமுகவுக்கு கோட்டைவாசலைத் திறந்துவிட்டது 2006 தேர்தல் . அதை மாற்றம் எனக்கணக்கிலெடுத்துக் கொண்டால் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்துக்குள் நடந்த சண்டைகளைக்கூட மாற்றம் என்று தான் புள்ளி விபரப் படுத்தவேண்டிய கேடுகாலம் வந்துபோனது தமிழகத்தில். யாருக்குமே தெரியாமல் சும்மா மதுரைக்குள் சம்பாதித்துக்கொண்டிருந்த அழகிரி யானைமாலை போட்டதுபோல மத்திய மந்திரி ஆனார்.நானென்ன இளைத்தவனா என்று தயாநிதி அழகிரியும் மத்திய மந்திரி ஆனார். இவர்களிருவரும் மந்திரியாகிறபோது நான் மட்டும் என்ன சூத்தக் கத்திரிக்காவா என்கிற கேள்வியோடு கனிமொழியும் களமிறங்கினார். தமிழக அரசியல் சூடு பிடித்துக் கொண்டது.நீங்கள் இதே சூத்திரத்தை அப்படியே தமிழ்ச் சினிமாவுக்கும் தூக்கிப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

ஒரே குடும்பத்தில் இரண்டுபேருக்குமேல் சினிமாத்துறையில் இருந்தால் மட்டுமே ஸ்டார் அந்தஸ்து பெறமுடியும் என்பதை எழுதாத சட்டமாக்கி அரசி யலைப்போல சினிமாவா? சினிமாவைப்பார்த்து அரசியல் கள்ளக் காப்பி அடிக்கிறதா? என்று கண்டு பிடிக்க முடியாமல் செய்து விட்டார்கள். சண்ட,சண்டக்கோழி, கோழிச்சண்ட,சண்டியர்,420,பருத்திவீரன்,வீரமும் ஈரமும் இப்படியான சினிமாக்களாக கொட்டிக்குவித்து இதிலிருந்து ஏதாவது ஒன்றைத்தான் நீ தெரிவுசெய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தியது தமிழ்ச்சினிமா. அதாவது நாற்பத்தேழுவருடமாக திமுக அல்லது அதிமுக மட்டும்தான் கட்சிகள் என்கிற ரெட்டைச்சாளர ஆரசியலை நிலை நிறுத்திவிட்டார்களே அதுபோல.அரசியலென்பது குறைந்தபட்சம் ஒரு டாடா சுமோவாவது
வைத்துக்கொண்டு திமிர்த்தனம் பண்ணுவது,லஞ்சம் வாங்குவது,லஞ்சம் வாங்கிக்கொடுப்பது,கட்டப்பஞ்சாயத்து பண்ணுவது மக்களை சாதிய ரீதியாக ஒன்று திரட்டுவது என்கிற பண்ணையார்த்தனங்களை ஆராதிக்கிற செயல்களாக மாற்றமானது. அதை அப்படியே கட்டமைக்கிற நடவடிக்கைகளை இந்த இரண்டு குப்பையில் ஊறிய மட்டைகளும் துள்ளியமாக நடத்தியது.

படிப்பறிவில்லாமல் வெறும் சண்டியர்த்தனத்தால் கட்சியேறி பதவிக்குவந்தவர்கள் மட்டுமே இப்படிச்செய்தார்கள் என்கிற நியதியில்லாமல் பெரும் பட்டமும், வக்கீல்கள்,டாக்டர்கள்,பேராசிரியர்கள்  உயர்படிப்பு படித்தவர்களும்  கூட இதே சாக்கடைக்குள் தான் விழுந்து புரண்டார்கள். ’ஏற்றதொரு கருத்தைச்சொல்வேன் எவர் வரினும் அஞ்சேன்,நில்லேன்’ என்கிற வரிகளைப் படித்துப் புல்லரித்தவர்கள் திமுக, அதிமுக அரியணைகளுக்குள் சிக்கிச்
செல்லரித்துப் போனார்கள். நான் கோட்டைக்குள் மட்டுமல்ல தமிழகத்தில் செருப்பே அணிவதில்லை ஏனென்றால் அம்மா ஆளும் தமிழகம் எனது கோவில்’ என்கிற உலகப் புரட்சிகரமான,திராவிடத்தனமான கருத்தை ஒரு சட்ட வல்லுநரான அமைச்சர் உதிர்க்கிறார்.அதை இந்தக்களவாணிப்பத்திரிகைகள் பெருமிதத்தோடு செய்தியாக்குகிறது.தமிழகம் படித்துவிட்டு காறித்துப்புவதை மறந்து எதிரும் புதிருமாய் உட்கார்ந்து கொண்டு நீயா நானா வென விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறது.

இந்துமதமெனும் வர்ணாசிரம கொடுங்கோண்மைக்கு எதிர்ப்புத்தெரிவித்து தம்மை வெளியிழுத்துக்கொண்டு
கலகம் செய்து ஆரம்பிக்கப்பட்ட தத்துவங்கள்  அந்நாட்களில் பௌத்தம், சீக்கியம், சூவ்பி, ஜைனம் ,சமணம், அருட்பெரும் ஜோதி,வீரசைவம்,பார்சீ யெனக்கிளம்பியவற்றின் நீட்சியாக தெற்கில் உதித்தது திராவிடம். ஒரு கருஞ்சூரியனின் அலைச்சலும் ஆற்றலும் சிந்தனையும் செயலுமான வெக்கை தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அசாத்திய அரசியல் வரலாறு. பெரியாரின் படத்தை உபயோகப்ப்படுத்துவதோடு பெரியாருக்கும் திராவிடக்கட்சிகளுக்குமான பந்தம் நின்றுபோனது. அதனால்தானோ என்னவொ அந்த தீர்க்கதரிசி போங்கடா வெங்காயங்களா நீங்களும் உங்கள் தேர்தலும் என்று மூக்கைப்பொத்திக்கொண்டு ஒதுங்கிப்போய் நின்று கொண்டார். ’கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா’ என்பது அறுபதுகளில்
நாடிநரம்புகளை சிலிர்க்கச்செய்யும் வார்த்தைகள்.இது அந்தக்காலத்தில் வேலை வெட்டி இல்லாமல் கஞ்சிக்கு வழியில்லாமல் பஞ்சத்திலடிபட்ட தமிழர்களை உசுப்பி விட்டது.

ஆனால் அதே வழியில்வந்த இந்த அரசு இதோ 13500 மக்கள் நலப்பணியாளர்களை வயிற்றிலடித்துத் தெருவுக்குள் தள்ளி விட்டிருக்கிறது.ஒரே காரணம் அவர்களெல்லோரும் திமுக ஆட்சிக்காலத்தில் பணியிலமர்த் தப்பட்டவர்கள் என்பது மட்டுமே. இதே போலத்தான் சென்ற முரையும் ஆடுகோழி வெட்டக்கூடாது என்று சட்டம் இயற்றியது இந்த அரசு.ஒரே கையெழுத்தில் பத்தாயிரம் சாலைப்பணியாளர்களைத்தெருவுக்கு அனுப்பியது. தெருவுக்கு வந்த குடும்பங்கள் அதைசமாளிக்கமுடியாமல் அழுதுபுலம்பியது.எண்பது தோழர்கள் இறந்து போனார்கள். நூறுக்கும் அதிகமானவர்கள் மனப்பிறழ்வுக்கு ஆளானார்கள். இறுதியில் தேர்தல் பயத்தினால் மறுபடியும் பணிக்கு அழைக்கப்பட்டார்கள். ஆனால் இறந்துபோனவர்கள் விட்டுச்சென்ற  குடும்பங்கள். அந்தக் குடும்பங்களின் கண்ணீர் அப்படியே உறைந்து போயிருக்கிறது. மனப்பிறழ்வானவர்களின் வார்த்தைகள் திரும்ப திரும்ப இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்தக்கறையே நீங்காமல் திட்டுத்திட்டா இருக்கும்போது இதோ மறுபடியும் மக்கள் நலப்பணியாளர்களை தெருவுக்கு கொண்டுவந்திருக்கிறது அரசு.

வேலையிழந்த பெண்கள் தெருப்புழுதியில் புரண்டு அழுகிற காட்சி மனம் பதற வைக்கிறது. அப்படி அவர்கள் வயிற்றிலடித்து,அவர்கள் கண்ணீரை கோட்ட வைத்து என்ன சாதிக்கப்போகிறது இந்த அரசு. தோற்றுப்போன மந்திரிகளையும்,கட்சிக்காரர்களையும் கோர்ட்டுக்கு அலைய வைக்கிற செயல்கள் சரியென்கிற ஒரே  காரணத் துக்காக அவர்களுக்கு ஓட்டுப்போட்ட சனங்களை வயிறெரிய விட்டு விட்டு மின்விசிறிகள் கொடுப்பது
எதற்கு? வெக்கையை இன்னும் விசிறிவிடுவதற்கா?.

எதிர்க்க வழுவற்ற ஏழைகள் அழுதுபுலம்பி ஆற்றாமல் சிந்தும் கண்ணீர் ஆயிரமாயிரம் கூர்மையான வாள்களுக்குச்சமம்

என்று ஜெர்மானியக் கவிஞர் குந்தர்கிராஸ் சொல்லுகிறார்.  


6.11.11

வரலாறு நெடுகிலும் அணைக்கப்பட்ட அறிவொளி தீபங்கள்.......

                                         ( அமெரிக்கப்படை தீயிட்டுக்கொளுத்திய பாக்தாத் நுலகம்)

இந்தியா முழுமைக்கும் பரவியிருந்த பௌத்தம் உயிர்ப்பலிகளை எதிர் கொண்டு நிர்மூலமாக்கப்பட்டது.போதிமரம் இருபதுமுறைக்குமேல் வெட்டப்பட்டது.உலகின் முதல் பல்கலைக்கழகமான நலந்தா தரைமட்ட மாக்கப்பட்டது. அதற்குப்பின்னர் அங்கிருந்த அறிவுப்பொக்கிஷங் களான ஓலைச்சுவடிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.(கிமு1193)பற்ற வைத்த தீ மூன்று மாதங்களுக்கு மேல் எறிந்துகொண்டிருந்ததாம்.

http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_27.html

போலந்து,பல்கேரிய நாடுகளில் நாஜிகள் நூலகங்களைத்தீகிரையாக்கினர்(கிபி 1941-42).

இலங்கையில் யாழ் பல்கலைக்கழக நூலகம் எறிக்கப்பட்டது(1981).

ஆப்கனில் தாலிபான்கள் நூலகத்தைத்தீக்கிரையாக்கினார்கள்(1998).

ஈராக் போரில் அமெரிக்கா ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்ததோடு நின்றுபோகாமல் அங்கிருந்த புகழ் மிக்க கலைப் பொக்கிஷங்களைஅழித்து நாசம் பண்ணியது (கிபி2003).

இப்படி வரலாறு நெடுகிலும் அறிவுத்தீபத்தை அணைக்கிற சிந்தனைக்கொலைகள் நிகழ்ந்து வந்திருக்கிறது. அவையாவும் கடைந்தெடுத்த காட்டுமிராண்டிச் செயல்கள் என்றால் சென்னை கோட்டூர்புரத்தில் இருந்து இடம்மாற்ற முடிவு செய்யும் தமிழக யோசனை  மேற் சொன்னவற்றின்  ஹைடெக் வடிவம். நூலகம்  ஆளும் கட்சி,எதிர்க்கட்சி எனும் குடுமிபிடிக்குள் அடங்காத அறிவுப்பெட்டகம்.அதன் மேல் கைவைக்கிற அரசின் செயலைக் கண்டிக்க அறிஞர்கள்,எழுத்தாளர்கள் கலைஞர்கள் மட்டும் போதும் என்கிற எல்லைகள் தவறானது. அதைத் தாண்டி இது ஒரு பொதுப் பிரச்சினை என்பதை பரவலாக்க வேண்டும்.

அண்ணா நூற்றாண்டுவிழா நூலகப்பிரச்சினையில் குரலெழுப்பும் எல்லோருக்கும் செவ்வணக்கம்.

o

by Su Po Agathiyalingam on Wednesday, 02 November 2011 at 17:25

புஷ்யமித்திரன் புத்தநினவுத்தூண்களை இடித்தான். ஹிட்லர் நூலகத்தையும் புத்தகங்களையும் எரித்தான்.சிங்களக் காடையர்கள் யாழ் நூலகத்தை எரித்தனர்.தாலிபான்கள் புத்தர் சிலையை உடைத்தனர்.அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் சூறையாடியது.பாபர் மசூதியை சங்பரிவாரங்கள் நொறுக்கின.வரலாறு முடியவில்லை... ஜெயலலிதாவுக்குபகை கருணாநிதிமீதா? தமிழ் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதுமா ? பாடபுத்தகங்களில் செம்மொழி மீதெல்லாம் கருப்பு சாயம் பூசி அழித்தார்..’யாதும் ஊரே யாவரும் கேளிர் ’பாடலை மறைத்தார் அது வர்ணாஸ்ரத்திற்கு எதிரான குரல் என்பதால்.சமச்சீர் கல்விக்கு எதிராக கொக்கரித்தார்.செம்மொழி நூலகத்தை குப்பைத் தொட்டியில் வீசினார்.தலைமைச் செயலகத்தை அடாவடியாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்கிறார். இப்போது அண்ணா நூலகத்தை பிய்த்து எறிகிறார்.இதையெல்லாம் வரலாற்றில் பாசிசம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?ஆனால் வரலாறு பாசிஸ்டுகளைக் குப்பைத்தொட்டியில்தான் வீசியெறிந்துள்ளது? கடைசியாக ஒரு தகவல்:குமரிமுனை திருவள்ளுவர் சிலை பாசிஸ்டுகள் கண்ணை உறுத்துகிறதாம்...தற்போது ஆயுதப்போலீஸ் காவல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாம்.ஒரு நாள் கடற்கரை கண்ணகி சிலைபோல் வள்ளுவரும் காணாமல் போக ஏற்பாடாம்.என்ன செய்யப் போகிறாய் தோழா

இடிபாடுகளில் தொலைந்த இந்திய ஞானம் ( நலந்தா பற்றிய குறிப்பு)
http://skaamaraj.blogspot.com/2009/10/blog-post_27.html

1.11.11

இசைஞானியின் மனைவியின் மறைவுக்கு...


தமிழகத்து வீடுகளில்,தெருக்களில்,சந்தோசத் திருவிழாக்களில், காற்றில், மின்காந்த அலைகளில்,அலைக்கற்றைகளில் கடல்கடந்து வாழும் தமிழர்களின் நினைவுகளில் இரண்டறக் கலந்துகிடக்கிறது இளையராஜாவின் இசை.

மனசை வசீகரிக்கிற இசையைத் தந்த படைப் பாளியோடு வாழ்ந்த அவரது மனைவி திருமதி ஜீவா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி.

நடைபாதை மனிதர்களும் அவர்களை வயிறு இழுத்துக்கொண்டுபோகும் வாழ்க்கையும்.


நாள் முழுக்க மழை நசநசவெனப் பெய்துகொண்டே இருந்தது. குடைகளற்ற மனிதர்கள் பெரும்பாலும் பஜாரில் நடமாடவே இல்லை. வழக்கமாக காய்கறி விற்கும் நடைபாதை வியாபாரிகள் ஒரு குடையையும் ஒரு கோணிச் சாக்கையும் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்கள். போன வரம் பெய்த மழை கத்தரிக் காய்களையும் வெண்டைக் காய்களையும் இழுத்துக்கொண்டு தெருவழியே ஊர்கோலம் போனது. போனதுபோக மிச்சமாவது விற்கட்டும் என்று உட்கார்ந்திருந்தவர்களில் ஒரு அம்மா, தனது கத்தரிக்காய் குமியில் இருந்து பக்கத்துக் கடைக்கார அம்மாவின் குமிக்கு உருண்டு போனதற்கு ஒருமணிநேரம் சண்டையிட்டார்.

ராமநாதபுரம் எங்கும் மீன்கள் கிடைக்கும் கருவாடு கிடைக்கும் என்பதுதான் எல்லோருக்குமான பொதுப்புத்தி.  ஆனால் பச்சைப்பசேலென குவிந்துகிடக்கிற புத்தம் புது காய்கறிகள் கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தையும் உண்டாக்கும். மிகச்சரியாக நான்கரை  மணிக் கெல்லாம் அந்த நியான் விளக்கின் அடியில் நூற்றுக் கணக்கான பெண்கள் வந்து டாடா ஏசியில் இறங்குவார்கள். கூடவே அவர்களின் காய்கறிகளும் இறங்கும்.

பொதுவாகவே இரவு ஒன்பதுமணிக்குள் அடங்கிவிடுகிற ராமநாதபுரம்.பத்துமணிக்கு சாப்பாட்டுவிடுதிகள்,பெட்டிக்கடைகள் ஏன் மருந்துக் கடைகள் கூட அடைத்து விடுகிற ராமநாதபுரத்தில். கோழிகள் கூவாத அந்த மூன்றாம் சாமத்தில் விழித்துக் குழுமிக்கொள்வது வியப்பாக இருக்கும். அதுவும்  பெண்கள் உழைக்கிற, கிராமத்து விவசாயப்பெண்கள் குழுமியிருப்பது எதிர்மறையான ஒன்று. தலையில் கவிழ்ந் திருக்கிற முக்காட்டைச் சரிசெய்துகொண்டே காய்கறி மூடைகளைச் சுமந்து வரும் இஸ்லாமியப்பெண்களும் அதில் இருப்பார்கள். எல்லாம் வயிற்றுக்காக அது எல்லாவிதமான கோடுகளையும்,வரப்புகளையும் இலக்கணங்களையும் உடைத்துக்கொண்டு வெளியேறும்.

சாத்தூருக்கு நிகராக வெள்ளரி விளைவதும் அது ராமநாதபுரத்து பேருந்து நிறுத்தங்களில் கூறுகளாகத்தாகம் தீர்க்க காத்துக்கிடப்பதும் சொல்லியாகவேண்டிய ஒன்று. ஆனால் சாத்தூர் ராமநாதபுர,திருமங்களம்,சென்னை என வித்தியாசமில்லாமல் அதை விற்கிற பெண்களின் கண்களில் அந்த நாளின் கொதிக்கப்போகும் அரிசியின் ஏக்கம் ஒரே மாதிரித்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்துதான் வர்க்கம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் மட்டுமே வர்க்கம் தலைதூக்க முடியாதபடி வர்ணக் குழம்பு அமுக்கிவிடுவதுதான் பரிதாபம்.

நீங்கள் தமிழகத்தின் எந்த நகரம் அல்லது பெருநகரங்களுக்குப் போனாலும் அங்கே ஒரு புராதனமான,பிரதானத்தெரு இருக்கும். அங்குதான்
அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடக்கும், நாடகங்கள், கச்சேரிகள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் துவங்கும், அங்குதான் நடைபாதை வியா பாரிகள் வியாபித்திருப்பார்கள், அங்குதான் பெரும்பாலும் இறுதி ஊர்வலம் வந்து நின்று பின் வேகமெடுக்கும்,அங்குதான் ஒருகாலத்தில் மாட்டு வண்டிகள் வந்து தங்களை ஆசுவாசப் படுத்தியிருக்கும். ஒரு இருபது ஆண்டுகளில் நகரங்களின் முகங்கள் முற்றிலும் மாற்றி யமைக்கப்பட்ட போதிலும் இன்னும் தனது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் அங்கே. எதாவது ஒரு ஸ்தூபி, நினை விடம், நடுகல், இல்லை ஒரு கொடி மரம் நின்று கொண்டு தன் மக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும்.

பொதுவீதிகள்,பொட்டல்கள்,விளையாட்டுமைதானங்கள்,பொதுச்சொத்துக்களான,கல்விக்கூடங்கள்,பொதுத்துறைநிறுவணங்கள்,ஏன் நடைபாதைகள்,கோவில்கள்( ஒரு சில) கூட அடித்தட்டு மக்களை அகலக் கைவிரித்து வரவேற்கும் கருணைப்பிரதேசங்கள்.அங்கே அத்துமீறுவபர்கள் ஒருபோதும் தண்டிக்கப்படுவதில்லை.

ஒரு திரைப்படத்தில் விவேக் தனது அறிவார்ந்த விகடத்தை காவலர்களிடம் சொல்லுவதாக இப்படிச்சொல்லுவார்.
‘டேக் டைவர்சன்,இந்தப்பக்கம் போகக்கூடாது
ஏன் சார்
போராட்டம் நடக்கு,நடைபாதைவியாபாரிகள் போராட்டம் நடத்துறாங்க
நடைபாதையின்னா நடக்குறதுக்குத்தான...ஙே....

என்று சொன்னதும் தமிழகம் தன்னை மறந்து சிரிக்கும்.அதில் நடைபாதை வியாபாரிகளும் கூட சேர்ந்து சிரிப்பார்கள்.
இதே விவேக் வாழ்கிற தேசத்தில்தான் பொதுத்துறைப் பங்குகள் ஊளைமோர் விலைக்கு விற்கப்படுகிறது. நிலஅபகரிப்புகள், நிலஆக்ரமிப்புகள், ஊகபேரவர்த்தகங்கள்,என  நடந்தேறிக்கொண்டிருக்கும் அது குறித்த எந்த எள்ளலும் அவர் சிந்தனைவட்டத்துக்குள் வருவதில்லை.மாறாக ஊனமுற்றவர்கள்,வயதான மூதாட்டிகள்,பாலியல்தொழில்நடத்துவோர், திருநங்கைகள், விளிம்புநிலைமக்கள், சேரித்தமிழர்கள், பிச்சை யெடுப்போர்,குஷ்டரோகிகள் நகரசுத்தித் தோழர்கள் என இவர் விகட எல்லைக்குள் வருகிற ஜனங்கள் எல்லாமே அடித்தட்டுமக்களும் அவர்தம் இயலாமை மற்றும் இல்லாமையும் கேலிப்பொருளாகும்.

கடைசிப் பேருந்தைத் தவறவிட்ட கிராமத்தார்கள்,வந்த இடத்தில் தங்க நாதியில்லாமல் ஏங்கிவரும் பயணிகள் காலையில் வரும் தொடர்வண்டியில் ஏறக்குடும்பத்தோடு வந்து காத்திருக்கும் முபதிவுசெய்யமுடியாத ஏழைகள். இவர்கள் எலோரும் தலைசாய்த்துப்படுக்கிற பேருந்து நிலையங்களும்,ரயில்நிலையங்களும் கருணையோடு கதவு திறந்துவைத்திருக்கின்றன. பின்னிரவுநேரத்தில் மதுரை ரயில் நிலையச் சந்திப்புக்குப் போனால் நடைபாதை தொடங்கி முன்பதிவு இடம் வரையில் கால்மாடு தலைமாடாகப் படுத்திருக்கும் ஜனங்கள் வேறெங்கே போவார்கள். ஏக்கர் கணக்கில் விரிந்துகிடக்கிற தனியார் நிறுவண வாசலிலும் ஐந்துநட்சத்திர விடுதிவாசலிலுமா போய்ய்ப்படுக்க முடியும்?.றயில்வே ஸ்டேசன்கிறது ரயில்ல பயணஞ்செய்யத்தானே.....என்று ஒவ்வொன்றுக்கும் விகடஞ்செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்.

எண்பதுகளின் மத்தியில் ஈழத்தமிழ் போராட்டங்கள் ஊக்கிரமாக இருந்த காலத்தில் கள்ளத்தோணிகளில் கூட்டம் கூட்டமாய்ச்சனங்கள்
ராமேஸ்வரம் தொடங்கி நரிப்பையூர் வரையான கடற்கரையில் வந்து இறங்குவார்கள். அவர்கள் கண்களில் அநாதரவாய் விட்டுவந்த பண்ணைவீடுகளும் தென்னந்தோப்புகளும்,எண்ணெய் ஆலைகளும் முங்கிக்கிடக்கும். சட்டப்படி அவர்களிடம் எந்த அரசும் கடவுச்சீட்டுக் கேட்பதில்லை. நம்பிகைகள் தளர்ந்து புகலிடம் தேடி வரும் மனிதர்களை அரவணைக்கிற முகாம்கள் கருணையினால் ஆனது.
அப்படிக்கருணைமுகங்கள் அரசிடமே இருக்கும் போது கலைஞனிடம் தொலைந்து போவது வேதனையின் உச்சமல்லவா தோழர்களே?

நீங்கள் ராமநாதபுரத்துக்கு வரநேர்ந்தால் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் ஆகிய லேண்ட்மார்க்குகளுக்குகள் தானே உங்களை இழுத்துச் செல்லும். ஆனால் அந்த மூன்றாம் சாமத்து வேளையில் அரண்மனைவாசலில் வந்திறங்கும் காய்கறி லாரிககளும்,மீன்லாரிகளும்
அவைகளின் பின்தொடரும் சில்லறை மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகளியும்,அவர்களுக்குள் நடக்கும் சில்லறைச்சண்டைகளும் ரம்மியமானது. அவர்களுக்கென திறந்து வைத்திருக்கிற ஆவிபறக்கிற டீக்கடைகளும்,அங்கே அதிகாலையிலேயே சூடு பறப்பிக்கிடக்கும் முட்டைக்கோஸ் உருண்டைப்போண்டாக்களும் இனிப்பானவை.

அங்கிருந்து கொஞ்சம் விலகிப்போனால் மொத்தம் மொத்தமாய் பெண்களும் ஆண்களும் மங்கிய வெளிச்சத்தில் மங்கிய ஊதாச்சேலயும், காக்கிச்சடையும் போட்டுக்கொண்டு எதிர்ப்படுவார்கள்.சொல்லிவைத்தது போல எல்லோர் தோளீலும் ஒரு குத்தாலத்துண்டு மடித்துக் கிடக்கும். ஐந்தரை மணிக்குள் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களுக்கான ஏவலை மேஸ்த்திரியிடம் தெரிந்துகொண்டு துடைப்பங்களோடு கிளம்புவார்கள். தீராத இந்த தேசத்துக் குப்பைகளைக் குறிவைத்தபடி.

31.10.11

ஏழாவது அறிவு கொண்ட இந்தியாவில்....


இந்தியா ஒரு துணைக்கண்டம்.இந்தியா ஒரு தீபகற்பம்.இந்தியாவில் கற்கால மனிதர் தொடங்கி கணினி யுக மனிதர் வரையான எல்லா (specimen)அடையாளங் களையும் எச்சங்களையும் நாம் காணலாம்.

நமக்கு 2500க்கும்மேற்பட்ட வருட வரலாறு இருக்கிறது.முப்பெரும்கடல் ஐம்பெரும் காப்பியம் கிடக்கிறது. 4546 ஜாதிகளுக்குமேல் பல்கிப்பெருகிக் கிடக்கிறது. முப்பத்துமுக்கோடி தேவர்கள் ( இது ஜாதியில்லை)  உருவாகி அருள்பாலித்துக் கிடக்கிறார்கள்.

ஆனால் ஆயிரம் ஆயிரம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவுக்கென்ன பங்கு இருக்கிறது ?.

பேருந்தைப் பார்க்காமல்செத்துப் போனவர்கள் உண்டு, ரயிலில் ஏறாமல் வம்சம் தொலைத்தவர்கள் உண்டு,ரேடியோ வாங்காமல் ஏங்கிச் செத்த வர்கள், தொலைக்காட்சி வாங்கமுடியாதவர்கள் இங்குண்டு ஆனால் அவற்றை யெல்லாம் சரிக்கட்ட வந்ததுதான் இந்த செல்போன் என்கிற அலை பேசி.

அதன் சுருக் கவரலாறு பார்ப்போமா ?

1910 ஆம் ஆண்டு லார்ஸ் மாக்னஸ் எரிக்சன் தனது காரில் ஒரு தொலை பேசியை பொருத்துகிறார். போகிற வழியில் எங்காவது தந்திக் கம்பி தென் பட்டால் தனது காரில் இருக்கும் தொலைபேசியை கொக்கிபோட்டு இணைத் துக் கொண்டு தொடர்பு கொள்வாராம். நம்ம ஊர்கள்ல கலியானம் சடங்குக்கு கொக்கிபோட்டு கரண்டு சுடுவம்ல அத மாதிரித்தான். ஆனால் அவர் அதை முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்து முன் அனுமதி   வாங்கிக் கொண்டார்.

பெர்லின் முதல் ஹம்பர்க் வரை ஓடிய புகைவண்டியின் முதல்வகுப்புப் பெட்டியில் தந்தியில்லாத் தொலைபேசி வசதி உருவாக்கப்பட்டது. இது நிகழ்ந்தது 1926 ஆம் வருடம். அதற்கு ரேடியோ டெலிபோன் என்று பெயரி ட் டார்கள். அதே காலத்தில் பயணிகள் விமானத்திலும் இந்த வசதி செய்யத் தொடங்கினார்கள்.இதன் நீட்சியாக இரண்டாவது உலகப்போரில் ஜெர்மன் நாட்டு பீரங்கிகளிலும் இந்த ரேடியோ டெலபோனி முறை கையாளப் பட்டது. இதைக் கண்ட ஜெர்மன் காவல்துறை ரோந்து வாகனங்களிலும் இந்த தந்தியில்லாத் தொலைபேசியை உபயோகிக்கத்தொடங்கியது.

அதைத் தொடர்ந்து இருவழி தந்தியில்லாத் தொலைபேசியை முதன் முதலாக வாடகைக் கார்களிலும், பின்னர் காவலர் வாகனங்களிலும் பின்னர் பெரு முதலாளிகளின் இந்த இருவழி தொலைபேசியை உபயோகிக்கத் தொடங் கினார்கள். ஆனால் அதில் தொடர்பு எண்கள் இருக்காது.இதுதான் பின்னாட்களில் வாக்கி டாக்கியாக உருமாறியது.

1940 ஆண்டுவாக்கில் ப்ளாக்பெர்ரி நிறுவணம் அதை இராணுவத்துக்காகச் சந்தைப் படுத்தத் தொடங்கியது.

1946 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் இரண்டு தொழில்நுட்பவல்லுநர்கள் ஜி.ஷப்பிரோவும், சர்ஜென்கோவும் இணைந்து கார்களுக்குள் பொருத்தக்கூடிய தந்தியில்லாத் தொலைபேசியை வெற்றிகரமாகக் கண்டு பிடித்தார்கள். என்ன வெற்றியென்றால் இந்த தொலைபேசியை 20 கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் சாதாரண தொலபேசியுடன் இணைக்கமுடியும்.

1947 ல் டக்ளஸ் ரிங் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அலை பேசி களுக்கான கோபுரங்கள் அமைத்து அதன் மூலம் மின்காந்த அலை வரிசை களை உருவாக்கி அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளில் சினிமாத் துறையும் இணைந்து கொண்டது  1950 ஆம் ஆண்டு வெளிவந்த சப்ரினா என்கிற திரைப்படத்தில் பெருமுதலாளி உபயோகிக்கிற அலைபேசியின் மாதிரிகள் பின்னர் பயன்பாட்டுக்கும் வந்தன.

அப்புறம் 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் இன்னொரு இளம் விஞ்ஞானி குப்ரியானோவிச் கையடக்கமான முதல் அலைபேசியக் கண்டு பிடித்தார். அபோதைய கையடத்தின் எடை என்ன தெரியுமா மூன்று கிலோ. அவரே அதை 500 கிராம் எடையுள்ளதாகக்குறைக்க ஒருவருடம் போராடி 1958ஆம் ஆண்டு வெற்றி கண்டார்.

எனினும் முறைப்படி இந்தக்கண்டுபிடிப்புகளை காப்புரிமையோடு சந்தைப் படுத்த முடிந்தது அமெரிக்காவால்தான்.1970 ஆண்டு பெல் ஆராய்ச்சி நிறுவணத்திற்கு அலைபேசியின் முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. அதே போல இதை முதன்முதலில் உபயோகப் படுத்தத் தொடங்கிய தனிமனிதன் பிரிட்டிஷ் இளவரசன் பிலிப் மட்டுமே.

ஊரைவிட்டுதனியே காரில்போகும் போது இளவரசியோடு காதல் மொழி பேசிக்கொள்ளத் தான் இதை உபயோகித்தானாம். இதற்கு இடைப்பட்ட காலத் தில் இந்தியா தவிர்த்த பல்வேறு நாடுகள் செல்போன் குறித்த கண்டு பிடிப்பு களில் தத்தமது முயற்சிகளை பங்களித்தன.

இறுதியில் 1973 ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவணத்தின் மார்ட்டீன் கூப்பர் தனது முதல் பொதுமக்கள் செல்போனை பயன் பாட்டுக்கு வெளி யிட்டார். அதன் பெயர் என்ன தெரியுமா ’ மோட்டோரோலா டைனா 8000+ ’

1981 ஆம் ஆண்டு டென்மார்க்,ஸ்வீடன்,பின்லாந்து ஆகியநாடுகள் அகில உலக இணைப்புவசதிகொண்ட ( Nordic Mobile Telephone (NMT) system ) 1G  அலைக்கற்றை அலைபேசியை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

1985 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வோடோபோன் நிறுவணம் அதனது செல் போனை அறிமுகப்படுத்தியது.

1990 ஆம் ஆண்டு 2G அலைக்கற்றை வசதிகொண்ட செல்லுலார்போன்கள் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டன.

இந்தவரலாற்றுநெடுகிலும் இந்தியா பற்றிய ஒருவரி கூட கிடையாது. வரி வேண்டாம். ஒரு கமா, ஆச்சரியக்குறி, புல்ஸ்டாப்புக்கூடக் கிடையாது என்பதே நமது பெருமை.

1986 ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வர்த்தகம், வெளியுறவு,முதலீடு போன்றவற்றில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்த நாடுகளில் நுழைய தனக்கு ஏதுவான பாதைகளை சுலபாமாக உருவாக்கிக்கொண்டது அமெரிக்கா.

அநேகமாக இதே காலக்கட்டத்தில்தான் சோவியத் ருஷ்யா சுக்குநூறாக உடைக்கப்பட்டு ( 1986 ) அமெரிக்காவின் கட்டுப்பாடுகள்,பயம் எல்லாம் அழிக்கப்பட்டது. சதாம் உசேன் இரான் இராக் போரை அறிவித்தார் 1980.

உலகத்துக்கு புதிய பொருளாதாரக்கொளகைகள்போல எய்ட்ஸ் என்னும் இன்னொரு மிரட்டல் கண்டுபிடிக்கப்பட்டது (1981).

இதே காலக்கட்டத்தில் தான் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு (1984) அரியணை ஏறிய ராசீவ் காந்தி புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி படுக்கையறைக் கதவு வரை திறந்துவிட்டார்,

போபாலில் விஷவாயு கசிந்தது.

உலகம் முழுக்க செங்கல் சைசில் செல்போனை அறிமுகப் படுத்திக் கொண்டிருந்த இதே காலக்கட்டத்தில் தான்  கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரை செங்கல் திரட்டி அதன் மூலம் இந்துத்துவா வெறியையும் திரட்டிக்கொண்டிருந்தது இந்தியா.

இதே காலங்களில் தான் தமிழகமும் ஆந்திராவும் சட்டி சுடுகிறதென்று தப்பித்து அடுப்பிற்குள் விழுந்தது. எம்ஜியாரும்,என்டிஆரும் தங்களது நடிப்புத் திறமை களை அரசியலில் ஓட்டுக்களாக மாற்றமுடிந்ததும் இதே காலத்தில்தான்.

எனக்குத்தெரிந்து பழம்பெருமை கொண்ட இந்தியா விஞ்ஞான உலகுக்கும், பயன்பாட்டுக்கும் கண்டுபிடித்துக்கொடுத்த பெருமைகள் அவ்வளவாக இல்லை.

புரட்சி நடிகன் எம் ஆர் ராதா சொன்னதுபோல எல்லோரும் நீராவியில் கப்பலையும்,ரயிலையும் இயக்கிக்கொண்டிருந்த போது நாம் அதை வைத்து இட்லி அவித்துக்கொண்டிருந்தோம்.

அதே போல யாராலும் அழிக்கமுடியாத இனிஎவராலும் இதற்குமேல் கண்டுபிடிக்கமுடியாது என்று சரணாகதி அடையும் அளவுக்கு ஜாதியைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறோம்.

இல்லை நாம் ரொம்பக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று எவரேனும் சொல்ல வந்தால் மீண்டும் சிலேட்டுப் புத்தகத்தோடு படிக்கக் காத்திருக்கிறது உலகம்.

30.10.11

ஜன்னலும், கண்களும் சேர்த்துப்பிடித்த படங்கள்.


பேருந்துகளின் ஜன்னலோர இருக்கை வெறும் காற்றையும், கடந்துபோகும் இயற்கையையும் காண்பித்துச் செல்லுவதில்லை. கூடவே மனிதர்களையும் துரிதப்படம் பிடித்துக் காட்டுகிறது. புயலின் வருகை தமிழகத்தில் காற்றோடு மழையையும் கொண்டுவந்துகொட்டுகிறது.தீபாவளியைக் கொண்டாட விட வில்லை என்று மனம்வெதும்புகிற ஜனங்களுக்கு எப்படி மழையைக் கொண் டாட  மனம் லயிக்கும்.

சாலைகள் எல்லாம் கரும்பச்சை ஓவியத்தின் ஊடே  கழுவித்துடைத்த கருப்புக்கோடுபோல நீண்டுகிடக்கிறது. அதற்கருகிலேயே புத்தம்புது பழுப்புத்தண்ணீர் இன்னொரு கோடுகிழித்துக்கொண்டு ஓடுகிறது. எங்கிருந்தன இத்தனை பசும்புல்லும் இவ்வளவுகாலமாய் என்று அறிவைக் கிளறிவிடும் அதன் வசீகரச்சிரிப்பு அறுபது கிலோ மீட்டர்வேகத்தில் கடந்துபோகிறது.

முகத்திலடிக்கும் சாரல் மொத்தமாக குளிர் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது.  இருக்கட்டும் இன்னொரு பயணத்துக்கென நினைவை மட்டுப்படுத்த ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட வேண்டியிருக்கிறது. முன்னிருக்கையில் இருக்கும் மூதாட்டியின் குளிர்போக்க போர்வையில்லை. கையே நீண்டு இன்னொரு கண்ணாடியை இறக்குகிறது. விருதுநகரில் ஏறும்போது இடம்மாறி உட்கார்ந்து இருக்கை தரவில்லையென்று பழித்த பழம் திரும்பிச்சிரித்து ஸ்நேகம் வளர்க்கிறது.

போகவழியில்லாததால் முளைவிட்ட பயிர்களை மூழ்கடித்துக்கொண்டு ஆக்ரமிக்கும் தண்ணீரைத் திருப்பிவிட கையிலிருக்கிறது நனைந்த மண் வெட்டி. முழுவதும் நனைந்து விட்ட உலகத்தார்க்கு அச்சாணிக்கிழவனின் முதுகில் கிடக்கிறது நவீனக்குடைகளின் முன்னோடி.யூரியாச்சாக்கு கொங்காணி. சண்டைக்காரனின்  அடுத்த வயலிலும் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை வெட்டிவிட்டு நிமிர்கிறவனின் முகத்தில் விழுகிற மழைத்துளிகள் சொல்லும் நன்றி போதும் எப்போதும்.

நிறுத்தமில்லா இடத்தில் நனைந்த கையுயர்த்தி இடம்கேட்கும் பயணிக்காக பிரேக்கை அழுத்துகிறது  அந்த ஓட்டுனரின் ஈரக்கால்கள். நாற்கரச்சாலையின் வளைவில் எங்கிருந்தோ கொண்டுவந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தூங்கும் காவலரின் கனவிலும் வந்து தொலைக்கிறது அடுத்து வரப்போகும் இன்னொரு காவல். காட்டுப்பாதையில் காத்துக்கிடக்கும் காக்கிச்சட்டைக்கு தூக்குவாளியில் தேநீரும் சட்டைப்பைக்குள் சிகரெட்டுப்பெட்டியும் கொண்டு வரும் சிறுவனுக்கு பின்னாட்களில் தெரியலாம் இரும்புவாசமடிக்கும் அரசு எந்திரத்தின் இதயங்கள்.

26.10.11

அழுக்கில் குளிக்கப்போகும் மாற்றங்கள்


தமிழகத்து புரட்சியை அடுத்து வரும்
தலைத் தீபாவளி இது.
இருட்டிக்கொண்டுவருகிற
மேகத்தைப் பார்த்துச் சபிக்கிறது
மினரல்வாட்டர் வண்டிகாரனிடம்
குழையும் வீரத்தமிழகம்.
அவசர அவசரமாக மூட்டைகளில்
வெடிப்பார்சலைச் சுமந்துகொண்டு
அரசு அலுவலர் குடியிருப்புகள்
நோக்கிவிரைகிறது
அன்னா ஹசாரேயின்
இளைஞர்படை இருசக்கரவாகனங்கள்.
விடிகாலையிலே எழுந்து
ஒரு சுற்று மாற்றங்களைப்
பார்த்து வரக்கிளம்பினால்
வழியெங்கும் சிதறிக்கிடக்கிறது
வெடிகளடைத்த தமிழ்பாடநூல்  குப்பைகளும்,
வெறிகளடைத்த தமிழ் கலச்சாரக் குப்பிகளும்.
லக்கான் கோழிக்கடையில் நேற்றுவரை கிலோ 120
இன்னைக்குமட்டும் 150 ரூபாய்.
அரசியலும் சமயமுமாகச்சேர்ந்து
ஆயிரம் ஆயிரம் அழுக்கு
படிந்த சாக்கடைக்குள்
முழுகப்போகிறது எண்ணெய்தேய்த்தபடி.

17.10.11

வாகைசூடட்டும் புதுப்புதுக் கதைகள்.சூட்டோடு சூடாக பார்த்துவிடத் துடித்து முடியாமல் போனது. இந்த இரண்டு வார இடைவெளியில் பார்க்கநேர்ந்த விளம்பரங்கள் உச்சிமண்டையில்  உட்கார்ந்துகொண்டு என்னைப்பார் என்னைப்பார் என்று கெஞ்சியது. சிட்பியா டோனில் அல்லது கேவாக்கலரில்  விளம்பரம் விரிய அது எனது பால்ய நினைவுகளைக் கிளறிவிட்டு விட்டது. மீளக் கிராமத்துக்குள் போகிற போதெல்லாம் பால்யத்தின் நினைவுகள் மட்டுமே நிழலாடமுடியும்.நாங்கள் ஏறி விளையாண்ட உரல்களும் மதில்களும் குள்ளமாகிவிட்டதுப்பொன்ற பிரம்மை உண்டாகும். ஆனால் அவற்றை வேரோடு தோண்டியெடுத்து  காட்சிகளாய்க் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்.

சொல்லப்பட்ட கதை நூற்றுக்கு நூறு கொத்தடிமைகளின் கதை. இரவுகளிலும் கூட நிழலென நீளும் அவர்களின் துயரத்தைக்கோடிட்டு மட்டும் காட்டிவிட்டு அந்த துயரத்துக்குள் இருந்து நகர்த்தப்படும் வாழ்க்கையைச் சின்னச் சின்ன சந்தோசங்களாக கோர்த்திருக்கிறார் இயக்குனர். ஒரு கலைப்படத்துக்கு மிக அருகில் நகரும் இந்த திரைப்படம் முந்தைய களவாணிபோல கொண்டாடப் படாததற்கு செங்கல் அறுக்கிற கொத்தடிமைகள் மட்டுமே காரணம்.  விளிம்பு மக்களிலும் ஒருகுறுகிய எண்ணிக்கையில் தமிழகத்தில் வாழும் அவர்களது வாழ்க்கை ஏனைய சமூகத்துக்கு முற்றிலும் அந்நியமானது.  வெறும் உழைப்புச் சுரண்டலோடு நின்று போகிறவராக ஆண்டை  பொன் வண்ணனைக் காண்பித் திருப்பது கொஞ்சம் நழுவல் ரகம். அல்லது முழுக்க முழுக்க குழந்தை உழைப்பை  சுற்றுகிற காரணத்தால்  பொன் வண்ணன் முழுக்கச் செதுக்கப் படாமல் போயிருக்கலாம். ஆயினும் கொத்தடிமைகளின் வாழ்க்கை சொல்லமுடியாத இருள் அடர்ந்தது. அதுவும் அறுபதுகளின் மத்தியில் ஆன காலம் என்பதால் ஆதிக்கம் இன்னும் கூடுதலாகவே இருக்கவாய்ப்பிருக்கிறது.

எங்கள்முதல் ஆவணப்படத்துக்காக கேபிள் குழி தோண்டும் ஒருகுடும்பத்தை ஒருவாரகாலமாக படம் பிடித்தோம். வெறும் பணிரெண்டு நிமிடங்கள் நீடிக்கிற அந்த ஆவணத்துக்கு அவ்வப்போது அவர்களுக்குத்தெரியாமல் படம் பிடித் தோம். ஒருவாரத்துக்குப் பின்னால் அதிலிருக்கிற ஒரு பெண் காணவில்லை.  கேட்டதற்கு,ஊருக்கு (சேலத்துக்கு பக்கத்திலாம்)  போனதாகச்சொன்னார்கள். ஊருக்குப் போகிறேன் என்று சொன்னதற்காக கங்காணி அவளைக் கணவன் முன்னாடியே கன்னத்தில் அடித்தானாம். இது 2005 ஆம் ஆண்டுவாக்கில் நடந்தது. 1966 ல்  அதுவும் ஆதிக்கம் செரிந்த புதுக்கோட்டைப்பகுதியில் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.

ஆயினும் அந்த ’கண்டெடுத்தான் காட்டு’ மனிதர்களைச் சுற்றியும், அவர்களு க்கான அறிவொளி குறித்தும் பேசுவதால் இந்தப்படத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கணும்.

குருவிக்காரர்,வைத்தியர்,தம்பிராமையா,அப்புறம் சூரங்குடி ( தம்பி) கந்தசாமி ஆகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஆண் பாத்திரங்களும் இனியா, ஊனமுற்ற சிறுவனின் தாய் என இரண்டே இரண்டு பெண்பாத்திரங்களும் தவிர இந்தப் படமெங்கும் வியாபித்திருப்பவர்கள் அந்த சிறுவர்களும் அவர்கள் அடிக்கிற லூட்டியும் தான். சதா நேரமும் பயமுறுத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கத்தின் மீது மறைமுகமான அவர்களுக்குள்ளே புழங்கிக்கொள்ளும் விமர்சனம் இருக்கும். அந்த விமர்சனத்தை பொழுதுபோக்காக கடத்தும்  விளிம்பு மனிதர் களிடத்தில் வியந்து வியந்து போற்றக் கூடிய குசும்பு மண்டிக்கிடக்கும்.
அதோடு கூடவே இயற்கையோடு இரண்டறக் கலந்த அற்புதமான வாழ்வு முறை இருக்கும். அவர்களிடத்தில் ஆதிப்பொதுவுடமை வாழ்க்கையின் எச்சங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த அரிய பொக்கிஷங்களை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் சற்குணம்.

மரத்தில் மீன் ஏறுவது,குளத்தில் அடியில் கிடக்கிற மீன் புழுவைக்கடிக்கும்போது அது என்னவகை எனத் துள்ளியப்படுத்துவது,புகை போட்டு எலிப்பிடிப்பது,செத்துப்போன குருவிக்காரருக்கு படப்பு வைப்பதென்று இந்த கணினி யுகம் மறந்து போன கிராம வாழ்க்கையை சின்ன சின்ன காட்சிகளில் மீட்டித் தருகிறது வாகைசூடவா. இனியா இதுவரை வந்து தங்களை கிராமத்துப்பெண்ணாக உருமாற்றிக்கொண்ட புகழ்பெற்ற தமிழ் நாயகிகளை விழுங்கிச்செறித்தபடி அநாயசப் படுத்துகிறார். அவரும் கூட கன்னடத்துக்காரராமே. கலை எல்லைகளற்றது. அதுபோலவே காதலும் வரம்புகளற்றது. ஊருக்கு வந்த வாத்தியாரை காதற்கணவனாய் வரித்துக் கொள்கிற கண்டெடுத்தான்காட்டுப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் இனியா. அதற்குச் சம்பவங்களும், பின்புலமும் கதையும் வலுவூட்டியிருக்கிறது. வாத்தியார் விமலை ஏகடாசி பண்னிவிட்டு இந்தப்பக்கம் திரும்பி தனக்குள் சிரிக்கிற இனியாவின் அந்த மேனரிசம் நெடுநாள் நினைவுகளில் கிடக்கும்.

இரவில் முசிறிக்கு தீப்பந்தங்களோடு காட்டு வழியே நடந்துபோகிற காட்சி தமிழ்சினிமாவுக்கு அர்த்தம்கூடுதலாகச்சேர்க்கிறகாட்சி. அதை  அனுபவித் தவர்களைக் கட்டாயம் அலைக்கழிக்கும் அந்தக்காட்சி.
http://skaamaraj.blogspot.com/2010/04/blog-post_09.html
( நேரமிருந்தால் கொஞ்சம் படியுங்கள் )

நடந்துவரும் கூட்டத்துக்குள் இருளும் ரகசிய சில்மிஷங்களும் கலவையாக சூடுபரவிக்கிடக்கும் அப்போது தீப்பந்தங்கள் வழிமறிக்கிற நெருடல்களாக மாறும். இப்படிப்படம் முழுக்க ஒரு  விளிம்பு வாழ்க்கையை செதுக்கிச்செதுக்கி வைத்திருக்கிற படம். மிருனாள் சென் இயக்கி எண்பதுகளில் வெளிவந்த மந்தன் திரைப்படத்தை நினைக்க வைத்தாலும் வைத்துவிட்டுப்போகட்டும். அவர்களுக்குள் தூவப்படும் கல்வி இந்த சமூக மடமைகளில் இருந்து  உடைத்துக் கொண்டு வெளிவர உதவும் கிரியா ஊக்கியாக மாறவேண்டும் என்கிற கனவிருக்கிற எல்லோரும் அங்கீகரிக்கிற படைப்பாக வந்திருக்கிறது வாகை சூடவா.

விமலின் நடிப்பை, இசையை, தொழில்நுட்பத்தை எல்லாம் தனித்தனியே சொல்லுகிற அளவுக்கு எனக்கு திரைப்பட ஞானம் இல்லை. ஒரு வலுவுள்ள  கதை செய்நேர்த்திமிக்க படைப்பாளனின் கையில் கிடைக்கும் போது அந்தக் குழுவும் செய்நேர்த்திமிக்கதாக மாறும். வரண்டு கிடந்த தமிழ்ச் சினிமாவுக்குள் கதைகளோடு களமிறங்கும் எல்லோருக்குமான வெற்றியாக இந்தப்படமும் இருக்கட்டும்.

உள்ளாட்சியைக் கைப்பற்றப் போவது யார் ?. ஜாதியா,ஊழலா இல்லை ஹசாரேவாபேஸ்புக்குக்கும் ப்ளாக்குக்கும் அலைந்து அலைந்து கண்கள் வலித்திருந்தது. காலைச்சாப்பாட்டை எடுத்துவைத்த இணை கிறுக்குத்தான் பிடிச்சிருச்சி என்று சொல்லிக்கொண்டே அதை எடுத்து மூடிவைத்துவிட்டு தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிட்டார்.பகல் முழுவதும் யாரவது வந்து வாக்குறுதி நோட்டீசும் மாதிரி வாக்க்குச் சீட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.ஒரு சில நோட்டீசில் காந்தி எம்ஜியார் காமாராஜர் அம்பேத்கர் முத்துராமலிங்கம் அழகுமுத்து வ.உ.சி அப்துல்கலாம் இம்மானுவேல்சேகரன். இன்னும் ஒருசில நோட்டீசில் பெரியாரும் முத்துராமலிங்கமும் அருகருகே காட்சிதந்தார்கள். பார்த்தபோது சிரிப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

அடுத்த வருடத்திலிருந்து முழுமையாக மின்வெட்டே இருக்காது என்று அம்மா அறிக்கைவிடுகிறார். அதைப்படித்த ஒரு இளைஞன் ஆமாமா பரமக்குடி மாதிரி முழுக்க முழுக்க ஆளவெட்ட ஆரம்பிச்சுருவாங்க அதனால மின்சாரத்த வெட்டத் தேரமிருக்காது என்று சொல்லுகிறார். ஆனால் அதே பரமக்குடிக்கு ஓட்டுக்.கேட்கப்போன கேப்டன் இனிமேல் இடஒதுக்கீடு என்பதே இருக்கக்கூடாது என்கிற தனது ஆராய்ச்சியை தெருவில் கொட்டுகிறார். அப்போ இந்த ஆறுபேர் படுகொலையும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகத்தானா என்கிற நக்கலுக்கு அவர் எப்படிப்பதில் சொல்லுவார்.  கைக்கெட்டாத தூரத்தில் இருந்து தான் கேள்விக்கேக்கனும்.

இந்தத்தேர்தல் எப்படியெல்லாம் தான் குட்டிக்கரணம் போடவைக்கிறது. மூன்றுமுறை தொடர்ந்து பஞ்சாயத்துதலைவராக இருந்த ஒருவர் நான்காவது முறையாக தனது மனைவியை நிறுத்துகிறார். அதோடு நிற்காமல் நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் பொதுமக்களுக்கு  நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று கூச்ச நாச்சமில்லாமல் உறுதிமொழி கொடுக்கிறார். காலையில் டீக்கடைக்கு வந்த ஒரு
பட்டாசுக் கம்பெனி முதலாளி அந்த ஊரின் அடுத்த பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடுபவர். ராத்திரியானா ஒரு நூருரூவாக்கட்டு காலியாப் போகுது என்று சொல்லிவிட்டு கோடு போட்ட டவுசரிலிருந்து மீதிரூபாயை எடுத்துக் காட்டுகிற்றார். அதைப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ’எல்லாத்துக்கும் வாங்கிக்,கொடுக்ககூடாது  அண்ணாச்சி,டெய்லி ஒரு இருபது பேருக்கு மட்டும் வாங்கிக் கொடுக்கணும். அதுவும் கண்ட பயக வருவாய்ங்க கவனமாப் பாத்து வாங்கிக் கொடுக்கணும்’. என்று அறிவுறை சொல்லுகிறார்.

ஓட்டுவீடுகள் மட்டுமே நிறைந்திருக்கிற அந்த ஊரில் ஆனையாக்குவேன் பூனையாக்குவேன் என்று சொல்லி பஞ்சாயத்துதலைவர் பதவியேற்ற ஒருவர் ஒரே வருடத்தில் மூன்று மாடி வீடுகட்டுகிறார். இரண்டு டாடா ஏசி வாங்கி வாடகைக்கு விடுகிறார்.குண்டிகிழிந்த டவுசர் போட்டுக்கொண்டலைந்த மகனுக்கு பல்சர் வண்டி வாங்கிக்கொடுக்கிறார்.நட்ட நடுத்தெருவில் சாக்கடையோடும் ஊரில் அந்தப்பல்சர் வண்டியில் அவன் சிட்டாய்ப் பறக்கிறான். அதுவரை அண்ணாதிமுக திமுக தேமுதிக மதிமுக கொடிகளுக்கு இடையில் இருக்கிற வித்தியாசம் கூடத்தெரியாத கூமுட்டையாக இருந்தவர் பழுத்த அரசியல்வாதியாகி ஆளும்கட்சியின் விவசாய அணிச் செயலாளாராகிறார். அதற்குப்பிறகு அங்கிருக்கிற வேலிக் காட்டையெல்லாம் எர்த்மூவர் வைத்து திருத்தி, அளந்து, கல்நட்டி, செம்மண் கோடு போட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பிக்கிறார். ஏங்கெல்சையும் டார்வினையும் காலில்போட்டு மிதிக்கிறபடியான பரிணாமம் இது.

இதையெல்லாம் பக்கத்துவீட்டில் இருந்து பார்த்துப் பொருமிக் கொண்டிருக்கும் மதினிக்காரி சாப்பாடுவைக்கிற நேரமெல்லாம் பங்காளிக்கு
பொழைக்கிற வழிசொல்லிக் கொடுக்கிறாள். அவளும் பத்துப்பவுனில் ஒத்தை வட முறுக்குச்செயின் போட்டுக்கொண்டு டாடா ஏசியின் முன்னாடி உட்கார்ந்துகொண்டு மாரியம்மன் கோவிலுக்கு போக ஆசைப்படமாட்டாளா என்ன? அந்த ஆசைதான் இந்த தேர்தலில் அண்ணனையும் தம்பியையும் எதிர் எதிராக பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட வைக்கிறது. நாப்பதுவருஷம் தண்ணிபாய்ச்சி சேர்த்து வச்ச கம்மாப்பிஞ்சையை கிரயம் எழுதிக்கொடுத்து கத்தை கத்தையாய் நோட்டுவைத்துக்கொண்டு க்ரேடு க்ரேடாக குவார்ட்டர் வாங்கிக் குவிக்கிறார்கள்.

ஒரு நகராட்சியின் மொத்த வாக்குகள் எத்தனை அதில் எந்த ஜாதி அதிக எண்ணிக்கை என்கிற கணக்கெடுப்புக்கு அப்புறம் தான் வேட்பாளர் தேர்வு நடக்கிறது.ஆளும், எதிர்,கூட்டணி,சுயேச்சை வேட்பாளர் எல்லோரும் அதே ஜாதிக்காரர்களாகவே நிறுத்தப்படுகிற்றார்கள்.
ஆனால் இந்தச்சூழலில் தான் ஒரு வலைத்தளம் கணக்கெடுப்பில்  நல்லவேட்பாளர்களைத்தான் இந்த உள்ளாட்சி தேர்தல் தேர்ந்தெடுக்கும் என்று எழுபது சதவீதம் பேர் ஓட்டளித்து கருத்துக்கணிக்கிறது. இந்த மாதத்தில்தான் புத்தகம் பேசுது உள் அட்டையில் பேராசிரியர் க.பழனித்துரை எழுதிய ‘ தமிழக கிராமப்புற உள்ளாட்சி( கடமையும்- அதிகாரங்களும்) என்கிற கையேடு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்துகிறது.

இதுவேறு இதிகாசம் ஆவணப்படத்துக்காக காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.பழனித்துரையைச் சந்திதித்து  பேட்டி யெடுத்தோம்.அப்போது அவர் சொன்னது.பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம்.மதுரைப் பகுதியில் சுமார் ஐநூறு பஞ்சாயத்து தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்களாம்.கலந்துகொண்டவர்கள் ஆயிரம் பேர் கணக்கு உதைக்க. என்னவென மண்டையைப்போட்டுக்குழப்பிக்கடைசியிகண்டுகொண்டார்களாம்.தேர்ந்தெடுக்கப்பட்ட அத்துணைபெண் தலைவர்களின் கணவன் மார்களும் கூட வந்திருந்ததுதான் காரணம்.உடனே மேடையிலிருந்து பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட தலைவர்கள் மட்டுமே இருக்கமுடியும் அவர்களின் கணவன்மார்கள் வெளியே போகவேண்டும் என்று சொன்னதும் சுமார் 250 எழுந்துபோய்விட்டார்களாம். மீண்டும் கணக்கு உதைக்கவே மண்டையைக் குடைந்து கண்டுபிடித்ததில். அந்தக்கூடுதல் 250, பேர் ஊராட்சிமன்றத்தின் எழுத்தர்கள் என்பது தெரியவந்தது.
ஆமாம் பெரும்பாலான தலித் மற்றும் படிக்காத தலைவர்களின் பஞ்சாயத்துகளில் கிட்டத்தட்ட தலைவர் பொறுப்பைப் பிடுங்கிக்கொள்வது
பேண்ட் சட்டை போட்ட எழுத்தர்களே.

இந்தக்கொடுமை போதாதென்று பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், மற்றும் வங்கிக்கிளைகளில் தலித் பஞ்சாயத்து தலைவர் நின்று கொண்டிருக்க பஞ்சாயத்து கிளார்க்குகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னே நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் வன்கொடுமைகள் நடப்பதாகச்சொன்னார்.  அதன்பிறகான எனது வங்கிநாட்களில் நான் அதைக் கவனிக்கத் தொடங்கினேன்.பேராசிரியர் சொன்னதைவிடவும் நூறுமடங்கு கூடுதலாகவே நடக்கிறது. காரணம்அரசு அலுவலர்கள், வங்கிமேலாளர்கள்,ஊழியர்கள்,என்.ஜி.ஓ, க்கள் எல்லோருக்கும் கூடுதல் சமூகப்பொறுப்பு இருக்கிற சுரணையே இல்லாமல் ஜாதியத்தடத்திலே பயணிக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில்தான் வருடா வருடம் சிறப்பாகச் செயல்படும் ஊராட்சி மன்றங்களைத் தேர்ந்தெடுத்து  மத்திய அரசும் மாநில அரசும் பரிசு அளிக்கிறது, அதைத்தான் முன்மாதிரி பஞ்சாயத்துக்களாக அரசு அறிவிக்கிறது. அந்தப் பஞ்சாயத்துக்கள் எம்ஜியார்,ரஜினி மாதிரி எந்த விதமான சாகச அற்புதங்களியும் செய்துவிடுவதில்லை. அரசு அறிவித்த திட்டங்களை முறைப்படி அமல்படுத்துகின்றன, அவ்வளவுதான். அப்படி அறிவிக்கப்படுகிற பஞ்சாயத்துக்கள் மூன்றே முன்றுதான். ஆனால் தமிழகத்திலுள்ள மொத்தப்பஞ்சாயத்துக்கள் சுமார் 12856.
எனில் மீதமுள்ள 12853 பஞ்சாயத்துக்களும் என்ன செய்கின்றன. மீண்டும் முதலில் இருந்து வாருங்கள்.

இதைக்கண்காணிக்க அரசு எந்திரத்தில் ஏற்பாடுகள் இல்லையா என்றால் அழகாக இருக்கிறது. ஆனால் எல்லாக்களவாணித்தனங்களும் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. இங்கேதான் காவல்துறையின் உச்சாணிப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் இகாப க்கள் ஜாதிக் கட்சித் தலைவர்களாகிறார்கள்.வருமாண வரித்துறையின் உயர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறவர்கள் தனியார் நிறுவணங்களுக்கு கணக்கு ஆலோசகர்களாகிறார்கள்.பொதுத்துறைவங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற மறுநிமிடம் தனியார் நிதிநிறுவணங்களுக்கு மேலாளர்களாக உருமாறுகிறார்கள். அரசுப்பள்ளியில் வேலைபார்த்துக்கொண்டு முழுநேரமும் மெட்ரிக்குலேசன் மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். இப்படிப்பொறுப்புள்ள கணவான்கள் கூடித்தான் அன்னா ஹசாரேயை கதாநாயகன் ஆக்குகிறார்கள்.

16.10.11

கவிதையில்லை, கணக்கெடுப்பு.


என்பெயர் காத்தன் மகன் முத்தன்
நாங்கள் இப்படித்தான் பெயர்வைத்துக் கொள்ளமுடியும்.
என்ன பெயர் வைத்துக்கொண்டாலும்
என்தெருப்பெயரும் என் மூதாதையர் பெயரும்தான்
எங்களை முந்திக்கொல்லும்.

என்கதவிலக்கம் எதுவாக இருந்தென்ன
ஏழேழுதலைமுறையாய் எட்டிஉதைக்கப்பட்ட
எங்கள் வீட்டுகதவுகள் கவிழ்ந்துகிடக்கிறது.

எனது தொழிலா?  ஒண்ணுமில்லை
பொழப்பூன்னு சொல்லுங்க, சுத்தஞ்செய்றது
சம்பளமா அது மேஸ்த்திரி,பைனான்ஸ்காரர்
பிடுங்கியது போக போட்ட பிச்சை

கேஸ் ஸ்டவ்வா லந்துபண்ணாதிங்கசார்
தொலைக்காட்சிப்பெட்டியா இருக்கிறது
ஆனால் அது அது அரசாங்கத்துக்குச்சொந்தமானது
இருசக்கரவாகனமா இருக்கிறது
ஆனால் அது நகராட்சிக்குச்சொந்தமானது.

குழந்தைகளா அது ஏழெட்டுத்தேறும்
என்ன பண்ணுதுகளா, அதுகளுந்தான்.
.
நீங்கள் இந்த நாட்டுப்பிரஜை
ஓட்டளிப்பது உங்கள் ஜனநாய உரிமை
நீங்கள் நினைத்தவருக்கு
சுதந்திரமாக ஓட்டுப்போடலாம்.
.
எல்லாம் புரிந்தது  முத்தன் எனக்கு
இந்த பிரஜை,ஜனநாயகம், உரிமை, சுதந்திரம்
மட்டும் என்னவென்று தெரியாமல் போனது.
.
இதுவா ?
இது கவிதையில்லை
இந்த தேசம் என்மேல்
வீசியெறிந்த குப்பைகள்.

9.10.11

வேலிமுள் கிழித்த பழய்ய கோடுகள்எப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்
வீடு திரும்பிய அப்பனின் தூக்குச்சட்டிக்குள்
எதாவது சில எட்டாவது அதிசயங்கள்.

மஞ்சளும் பச்sசையுமாய் சில மிதுக்கம் பழம்
அரக்குக் கலரில் அரைப்படி எலந்தைப் பழம்
ஆகாய நிறத்தில் புள்ளிகள் நிறைந்த காடைமுட்டை
அம்மையின் முகத்தைகாணாமல் கத்தும் மைனாக்குஞ்சு

கிட்டிப் புல்லும் கவட்டைக் கம்பும்
ஆணியில்லாதபம்பரமும் கயிறு இல்லாத வில்லுமாக
எப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்
விறகு வெட்டப்போன அப்பனின் தூக்குச்சட்டிக்குள்.

ஆனால் அம்மைக்கு மட்டுமே தெரியும்
அப்பனின் உடம்பெங்கும் எழுதிவைத்த
வேலிமுள் கிழித்த காயங்களின் வலியும்
வட்டிக்குகொடுத்த வைரமுத்துவின் வசவும்.

6.10.11

நாஞ்சில் நாடனின் ’கான்சாஹிப்.’( வண்ணநிலவனும்,நாஞ்சில்நாடனும் வாரிச்சுருட்டிக்கொள்ளும் ‘காபிர்களின் கதைகள்’ )


எந்த ஒரு அசாத்தியத்தையும் நிகழ்த்தாமல்,சாகசம் என்கிற வார்தையைக் கூட உச்சரிக்காமல், திடீர் திருப்பங்கள் அவர்கள் நடந்து போக்கும் தெருவில் கூட இல்லாமல் சுற்றித்திரியும் இரண்டு பேருடைய சகவாசத்தை சொல்லுகிற சிறுகதை.ஆனால் லயித்துப் போய்,ஆட்டுக்குட்டி மாதிரி நம்மை அவரது எழுத்தின் பின்னாடியே நடக்க வைக்கிற சமாச்சாரம் ஒன்றிருக்கிறது.அது நட்பு.அதை நட்புதான் என்று சொல்லாமல்.நட்புக்கான இல்லக்கணம் இதுதானென்றும் சொல்லாமல்.ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த பிரியத்தை மட்டுமே நம்பி இந்தக்கதையை நகர்த்தியிருப்பது தான் அதன் வசீகரம். கதை ஆரம்பிக்கும்போது இது கதையா நினைவு கூறலா என்கிற முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கான் என்று முடிகிற பேர்களாகப்பட்டியலிடுவது இப்படி குறுக்குமறுக்காக நம்மை அலையவிட்டு அப்புறம் மும்பைக்கு கூட்டிக்கொண்டு போகிறார் நாஞ்சில் நாடன். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வீடே ஊராகும்.ஊரை விட்டு தனித்து விடுதியில் இருக்கும் எல்லோருக்கும் அந்த ஊரே வீடாகும்.

தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு  சிலாக்கி யமான விஷயம் என்பதை நாஞ்சில் நாடன் அசத்தலாக எடுத்துவைக்கிறார்.கான்சாஹிப்போடு சேர்ந்து சுற்றிய தெருக்கள்,பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், மனிதர்கள், ,சிகப்பு விளக்குத்தெருவும் பெண்களும் என்று வழிநெடுக நினைவுகளை நட்டுக்கொண்டு போய் ஒரு தோல்பையில் முடிகிறது கதை. பிரியமான மானிதர்களை நினைவுபடுத்துகிற எல்லாமே பிரியமானதாகவும் பொக்கிஷமாகவும் மாறும். அப்படி ஒரு தோல்பையை மாற்றிக் கையில் கொடுக்கிற சிறுகதையை படிக்கும் எல்லோரும் தங்களை உரசிப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் . முடிந்தால் அப்படியொரு கதையை எழுதவேண்டும் என்கிற ஏக்கத்தை உண்டுபண்ணும் கதை ’கான்சாஹிப்’.

5.10.11

வண்ணநிலவனும்,நாஞ்சில்நாடனும் வாரிச்சுருட்டிக்கொள்ளும் ‘காபிர்களின் கதைகள்’


சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக்பேலசுக்கு சென்ற மாதம் போயிருந்த போது சுற்றிச் சுற்றி புத்தகங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்த ஒரு நண்பனின் வீட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது.புத்தக அலமாரிகளுக்கு மத்தியிதான் அண்ணன் ராஜசுந்தர ராஜனும், விதூஷ்வித்யாவும், பத்மாவும், மேவியும் சகோதரர் கார்த்திகப்பாண்டியனும் இருந்தார்கள்அவர்களோடு பேசிக்கொண்டே புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன்.என்னை இறக்கிவிடவந்த எனது மூத்த மகன் கிஷோர்பாரதிக்கு அங்குதான் எடிட்டிங் குறித்த புத்தகம் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். அதை அவன் புரட்டிக்கூடப் பார்த்திருக்காமல் இருக்கலாம்.அல்லது படித்திருக்கலாம். ஆனால் அது காலங்காலத்துக்கும் அவனோடு கூட இருக்கும். ஒரு தகப்பனாக நான் அவனுக்கு வாங்கிக்கொடுத்த சில அறிவற்றுள் அதுவும் இடம் பிடிக்கும்.தன்னை யாராவது படிக்கமாட்டார்களா என்கிற ஏக்கத்துடன் அது அவனோடு கூடவே இருக்கும்.

அப்படி ஏக்கத்தோடு டிஸ்கவரி புக்பேலசின் அலமாரிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காத்துக்கிடந்தன.நான் பேச்சை தவிர்த்துவிட்டு புத்தகங்களுடன் பேசப்போனேன்.அப்போது தோழர் எஸ்.வி.வேணுகோபால் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய புத்தகங்கள் கிடந்தன. அது தோழர் கீரணூர்ஜாகீர்ராஜாவின் புத்தகங்கள்.எண்பதுகளில் யதேச்சையாக ஒரு பழய்ய கணையாழியில் படித்த நாகூர் ரூமியின் குட்டிவாப்பா என்கிற சிறுகதை என்னை நெடுநாள் அழைக் கழித்த கதை.ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த விவகாரங்களை மனிதர்களின் நடை உடைபாவனையோடு கலந்து பிசைந்து வைக்கிற அந்த மாதிரியான எழுத்து குட்டிவாப்பா கதையில் கிடந்தது.வயதுதளர்ந்த ஒரு மனிதனை அவனது மூலநோயோடு கூடிய சுவாரஸ்யங்களை அசைபோட்டபடி அவரை நினைவு கூறும் அந்தக்கதை.அதன்பிறகு தான் தோப்பில் முகம்மது மீரானின் அன்புக்கு முதுமையில்லை தொடங்கி ஒன்றிரண்டை வாசிக்கிற ஈர்ப்புவந்தது. அதற் கடுத்து அந்தமக்களின் வாழ்க்கை குறித்து வருகிற எழுத்துக்களை திறம் படச்சொல்லுகிற சமகால எழுத்து தோழர் ஜாகீர்ராஜாவுடையது.

அவர்தான் காபிர்களின் கதைகள் என்கிற பதினெட்டுக்கதைகளை தொகுத்து ஆழி பப்ளிஷர் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டிருக்கிறார். அதில் ஒன்றி ரண்டைத் தவிர எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது. அதற்கந்த ராமநாத புரத்து தனிமைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

மஹாகவி சுபரமண்ய பாரதிதொடங்கி அண்ணன் சோ.தர்மன் வரையிலான ஆளுமைகளின் கதைகள்.இந்தப்பதினெட்டுப்பேரும் தங்களின் குறுக்கே வந்த இஸ்லாமியர்கள் பற்றிக்கதை சொல்லியிருக்கிறார்கள். பதினெட்டுப்பேர்களில் எனக்குப்பிடித்த வண்ணநிலவனோடுதான் அதை ஆரம்பித்தேன். ’மெஹ்ருண்ணிஷா ’ ஒரு வாழ்ந்துகெட்ட பெரும் பணக்கார முஸ்லீம் வீட்டின் ஒட்டடை படிந்த சுவர்களுக்குள் பயணமாகிற கதை.அப்படியான வாழ்ந்துகெட்ட கதைகளில் எல்லாமே ஒரு வேலைக்காரர் கட்டாயம் கிடப்பார்.அவர்தான் உடைந்து நொறுங்கிப்போன மனிதாபி மானத்தை எடுத்து அவனது சேவகம் என்கிற அன்பினால் மறுபடி புணரமைப்பார். அப்படிப் புணரமைக்கிற ராமையாவை எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

அவரோடும் அந்தகதையின் நாயகி மெஹ்ருண்ணிஷாவோடும்,அந்த வீட்டு சமயற்காரி ஆயிஷாவோடும் நாம் அந்த வீட்டுக்குள் பிரவேசிக்கலாம். ஊராருக்குத்தெரியாமல் அந்த வீட்டு ரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம். தனக்கு குழந்தையிலாததால்  கணவனுக்கு இன்னொருத்தியை கைபிடித்துக் கொடுத்துவிட்டு அவளது அப்பா போட்டோவோடும் அவர்கொடுத்த வயலினோடும் அதுகசிகிற இசையோடும் அந்த வீட்டுக்குள்ளே தன்னை தானாகவே அடக்கம் செய்துக்கொள்ளும் மெஹ்ருண்ணிஷா. அவளை அறிய நாம் வண்ணநிலவனின் கையை மட்டும்தான் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டும். பெண்விடுதலை,மேல்கீழ் முரண்பாட்டை தகர்ப்பது போன்ற வற்றுக்கு வக்காலத்து வாங்காமலும்,இருக்கிற பண்ணை யடிமைத்தனத்துக்கு வால்பிடிக்காமலும் உள்ளபடியான நடப்பை  உருக உருகச் சொல்லுகிற வண்ணநிலவணின் மெஹ்ருண்ணிஷா இந்ததொகுப்பில் ஏழாவது கதையாக வரும்.

அப்புறம் தோழர் நாஞ்சில் நாடனின் ’கான்சாஹிப்.’