10.12.11

பொங்கியெழும் அணையும்,உடைப்பெடுக்கும் ஒருமைப்பாடும்



தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கிற ஒவ்வொரு முறையும் அண்டைமாநிலத்தோடு உரசல் தீவிரமடைவது எதேச்சையானதா திட்டமிட்ட்டு நடக்கிறதா என்கிற சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து கசிந்த தண்ணீர் விவகாரம் பெரிதாக உடைப்பெடுத்தது. பூதாகாரமாகி பின்னர்  திரைப்படத் துறையினரின் கூட்டுப் படப்பிடிப்பெல்லாம் கூட நடந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை அதை முழுநீள நிகழ்ச்சியாக சன் தொலைக்காட்சிக் குழுமங்கள் நேரடியாக ஒளிபரப்பியது. என்ன மாயமோ தெரியவில்லை இப்போதெல்லாம் அதைப்பற்றிப் பேசுவது செய்தி வெளியிடுவது out of fashion ஆகிவிட்டது. தண்ணீர் தேவையான  அளவுக்கு  அங்கிருந்து கிடைக்கிறதா இல்லை போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று தமிழ் உணர்வாளர்கள் முடித்துக்கொண்டார் களோ என்னவோ தெரியவில்லை.

 மூன்று முக்கிய தேசியக் கட்சிகள் மட்டுமே களத்தில் இருக்கிற கேரளத்தில் உணர்வு ரீதியான போராட் டங்கள் ஆரம்பித்து வைக்கப் படுகிறது.  இதில் ஆர் எஸ் எஸ் சும் அதன் கொடுக்குகளும் போடுகிற ஆட்டம் அபரிமிதமானது. ஆனால் பத்திரிகைகள் காங்கிரஸையும் தோழர்.அச்சுதானந்தனையும் மட்டும் குறிப்பிட்டுவிட்டு சடக்கென்று கடந்து போய்விடுகின்றன.

முதலில் இந்த முல்லைப் பெரியாறு அணை எங்கே இருக்கிறது,அதன் வரலாறு என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. அதன் பிறகு நீர்-நிலம்-காற்று-மற்றும் பொதுத்துறைகள்  எல்லாம் தேசத்தின் பொதுச்சொத்துக்கள் என்கிற புரிதலும் வரவேண்டும். அதன் பின்னர் எதன் மீது தனிக்கவனமும் யார் மீது கோபமும் வரவேண்டும் என்கிற வழிகளைத் தேர்ந்து கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது.

முல்லைப்பெரியாறு கேரளாவில் உள்ள  இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 881 மீட்டர் உயர்த்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 1895 ஆம் ஆண்டு. பிரிட்டிஷ் இந்தியாவால்  கட்டி முடிக்கப்பட்டது. முதலில் பெரியாறு அணை என்றும் பின்னர் முல்லைப்பெரியாறு அண என்றும் பெயர் மாற்றப்பட்டது.காரணம் கேரளத்து நதிகளான முல்லய்யாறும்,பெரியாறும் கலந்து தேக்கிவைக்கப்படும் இடம் என்பதே. அப்போதைய திருவிதாங்கூர் அரசர் விஷாகத்திருநாள் ராம வர்மனுக்கும் இந்திய  மாகானச் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அந்நாளைய ராணுவ செயற்பொறியாளர் ஹென்னிங்டனும் திருவிதாங்கூர் திவான் ராம் ஐய்யங்காரும் 1886 ஆம் ஆண்டு அக்டோபர்29 ஆம் நாள் கையெழுத்திட்டனர்.

999 வருடத்திற்கான ஒப்பந்த ஷரத்துப்படி 8000 ஏக்கர் நிலம் அணைக்காகவும் 100 ஏக்கர் நிலம் கட்டுமானத் திற்காகவும் சர்வ சுதந்திர பாத்தியதைக்காகக்  கையளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து ரூபாய் வாடகை வீதம் வருடத்திற்கு 40000 ரூபாய் செலுத்தவேண்டும்.

சென்னைப்பட்டாளியன்களும் போர்ச்சுக்கீசிய கைவினைகர்களும் ஈடுபடுத்தப்பட்ட கட்டுமானத்தின் உத்தேச மதிப்பீடு 1கோடியே நான்குலட்சம். செங்கற்ஜல்லிகள்,சுண்ணாம்பு,கருப்பட்டி ஆகியவை கலந்து உருவாக்கப்பட்ட பழய்ய தொழில்நுட்பம்.கட்டுமான காலத்தில் சுமார் 450 பேர் உயிரிழந்தார்கள் இரண்டுமுறை உடைப்பெடுத்து பெருத்த சேதமேற்பட்டது எனவே செலவினங்கள் கூடியது, உடனே பிரிட்டிஷ் அரசு அணை கட்டுமானத்தை நிறுத்திவைத்தது.சர் பென்னிகுயிக் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து கட்டுமானத்தைத் தொடர்ந்தார்.

இந்தக் கட்டுமானத்தின் விஷேசம் என்னவென்றால் இரண்டு நதிகளின் போக்கு அரபிக்கடலை( மேற்கு)  நோக்கி யிருக்கிறது. அதைத் தேக்கி வங்காள விரிகுடாவுக்குத் (கிழக்கே) திருப்பவேண்டும். திருப்பியதால் தென்  தமிழக த்தின் மழைமறைவுப் பிரதேசங்களான மதுரை,தேனி,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரத்து மாவட்டங்கள் பயனடைந்தன.அங்கிருந்த சுமார் 85000 ஏக்கர் பொட்டல் காடுகள் விலை  நிலங்களாக மாறின. இந்த  அணையி லிருந்து கேராள பயன்பாட்டுக்கு ஒருசொட்டுக் கூடக் கிடையாது.அதே போல அணையின் பராமரிப்பு,பாதுகாப்பு எல்லாமே தமிழ்நாட்டைச்சார்ந்தது.

இந்த ஒப்பந்தம் இந்திய சுதந்திரத்துக்குப் பின் காலாவதியாகிய படியால் அதன் பிறகான பலசுற்றுப்  பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்து இறுதியில் 1970ல், முதல்வர் அச்சுதமேனன் அரசால் ஒப்பந்தம்  புதுப்பிக்கப் பட்டது.அதன் பிரகாரம் வாடகையை ஒரு ஏக்கருக்கு 30 ரூபாயாக உயர்த்தியும் அதுபோக தயாரிக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட் மின்சாரத்துக்கும் 12 ரூபாய் வரியாகவும் செலுத்தவேண்டுமென ஒப்பந்தமானது.

1979 ஆம் ஆண்டு குஜராத்திலுள்ள மோர்வி அணை உடைந்து சுமார் 1500 பேர் உயிரிழந்து 150000 பேர்  பதிக்கப் பட்டனர்.அதன்பின் அணைகள் குறித்த பாதுகாப்பில் தீவிரம் காட்டப்பட்டது.116 வருட பழமையும்,19ஆம்நூற் றாண்டின் கட்டுமானத் தொழில் நுட்பமும், வல்லுநர்களால் எச்சரிக்கப்பட்டது. கூடவே இரண்டு முறை  இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம், கல்லாறு பகுதிகளில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் நிலநடுக்கம். மாறிவரும் பூமி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களினால் முல்லைப் பெரியாறு தேக்கத்தை மையப்படுத்தி கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீரின் தேக்க அளவு குறைக்கப்பட்டது.கொந்தளிப்பு இரண்டு மாநிலங்களுக்கிடையிலான
சண்டையாக மாறிக்கொண்டிருக்கிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது எனக்கிளம்பிய போராட்டங்கள் கொந்தளிப்பாகி அவ்வளவுபெரிய அணயை உடைப்போம் என்று கேரளத்தார் அறிக்கைவிடுகின்றனர்.இந்த அறிவீன அறிக்கைகளை தூக்கிக் கொண்டு பிரதேச உணர்வை கிளறிவிடுகிறது கேரளாரசியல்கட்சிகள்.ஆனால் அங்கிருக்கிற சமூக ஆர்வலர்கள் இலக்கியவாதிகள் தமிழகத்துக்கு வழக்க ம்போல தண்ணீர் தந்தே ஆக வேண்டும் என அறிக்கை விடுகிறார்கள். நீதி மன்றமும் அதை உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு இது எதோ வெளிநாட்டுப் பிரச்சனைபோல கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எத்தனை பொதுத் துறைப் பங்குகளை விற்கலாம்,எந்தெந்த துறைக்குள் அந்நிய முதலீட்டைப் புகுத்தலாம்,சில்லறை விற்பனையோடு சேர்த்து எதையெல்லாம் விற்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது.

பொங்கிவரும் போராட்ட உணர்வைப் பார்க்கும்போது. சரி இருக்கட்டும் ஒரு நல்ல போராட்டத்துக்கான தருணம் வரும் அப்போது இன்னும் அடங்காத கோபத்தோடு மக்கள் கிளம்புவார்கள் என்கிற நம்பிக்கை வருகிறது.

2 comments:

kashyapan said...

காமராஜ் அவர்களே! தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டும்.அதனைத்தர கேரளம் தயாராக இருக்கிறது. கேரளத்திற்கு அணை பற்றிய பயம் இருக்கிறது.அதனை விஞ்ஞானிகள் ஆராய்ந்து இரண்டு மாதத்தில் சொல்ல இருக்கிறார்கள் . தேவையில்லாமல் உதிரிக் கட்சிகள் வம்பு செய்கின்றன . நகைகடைக்கு போலீஸ். நாயர் டீக்கடைக்கு யார் காவல். பாவம் நடுத்தெருவில் இருக்கிறார். அவர் தான் தமிழர்களின் விரோதி என்கிறார்கள். ---காஸ்யபன்

உயிரோடை said...

கர்நாடகமும் ஒரு காலத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவோம் என்று சொல்லித் தான் காவிரியின் மீது அணை கட்டினார்கள்.