அவள் ஜிகினா உடையோடு மேடைக்கு வருவாள்.ஒரு மரப்பெஞ்சில் படுப்பாள்.அரங்கம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு காத்திருக்கும். அவன் பேசிக்கொண்டே இருப்பான்.கைகளைக் கொண்டு காற்றில் நர்த்தனம் ஆடுவான்,கண்களை உருட்டுவான். கூட்டத்தைப் பேச்சுக்கும்,காட்சிக்கும் இடையில் ஊசலாட விடுவான். வாளை உருவுவான்,அவள் மேல் ஒரு மூடியைக் கவிழ்த்துவான். வாளைச்சுழற்று வான். மனம் பதறும். எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் பருவத்தினளை வாள் கொண்டு அனுகுவது கண்டு ஆடிப் போவார்கள்.
இதை மாயா ஜாலம் என்று சொல்லுவார்கள்.மேஜிக் என்று பிரகடனப் படுத்து வார்கள். கிராமங்களில் இதை கண்கட்டி வித்தை என்று சொல்லுவார்கள்.
ஒரு கோப்பையில் தாள்களை போட்டு எரித்து விட்டு அதைக் கவிழ்கும் போது எப்படி புறா பறக்கிறது என்கிற கேள்வி இன்னும் கூடக் கேள்வியாகவே தொடர்கிறது.அதற்கு காரணம் நம்மைத் துரத்தும் வயிறும் அதைத்தொடர்ந்து நம்மோடு கூட வரும் மறதியும் தான்.
மக்களே....
சற்று கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.ராகுலின் குரலைக் கேளுங்கள்.இப்போது ராஜீவின் எதிரொலி கேட்கும்.
இப்படி ஒரு பழுத்த அரசியல்வாதி மேடையில் இருந்துகொண்டு இந்தியாவைக் கண்ணை மூடிக்கொள்ளச்சொல்லுகிறார்.நேரு பிரதமரான நிமிடத்திலிருந்து இன்று வரை இப்படித்தான் யாராவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். முன்னிருவரும் லாஞ்சனைப்பட்டு கொஞ்சம் மறைமுகமாக செய்ததவறை வெட்டவெளிச்சம் போட்டு துவக்கி வைத்தவர்.கலப்பு பொருளாதாரம் என்கிற பசப்பு பொருளாதாராத்தை புதிய பொருளாதாரக்கொள்கை என்று மாற்றி முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு திறந்துவிட்டவர்.
நான்கு தலைமுறைகளாக இந்திய சமூகம் இவர்களின் மாயாஜாலத்துக்குள் கிடந்து ஊசலாடுகிறது, உற்றுக்கவனிக்கிறது,பதறுகிறது,கண்ணீர் விடுகிறது கடைசியில் ஒன்றும் புரியாமல் வயித்துப் பாட்டைப் பார்க்க திரும்பிப்போய் விடுகிறது.
இந்த வம்சாவழி ஆட்சியில்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று எழுதி வைத்த பொய்யாமொழியின் குரல்வளை நெறிபடுகிறது. வருடா வருடம் வாழ வழியில்லாதும் பட்டினி யாலும் செத்துப்போகும் விவசாயிகளின் எண்ணிக்கை இருபதாயிர மாகிறது. சாக்கடைக் குழிக்குள் இறங்கி சமூக அடைப்பெடுக்கும் இந்தியர்கள் சராசரி யாக இருபதாயிரம் பேர் மூச்சடைத்து போகிறார்கள். ஜாதி மத மோதல்களில் நசுக்கப்படும் இந்திய மன்னர்களின் கணக்கு இன்னும் முழுதும் தெரியாது கறுப்புக் கணக்காகவே இருக்கிறது.ஒரு மாதத்துக்கு லட்ச ரூபாய் சம்பளம் தரத்தயாராக இருக்கும் இதே இந்தியாவின் குடிமகனுக்கு நாள் முழுதும் உழைத்தால் கிடைக்கிற சம்பளம் வெறும் நாற்பது ரூபாய்தான்.கருறைவக்குள் இருந்து கொண்டு கோடிஸ்வரர்களுக்கு அருள் வழங்கும் கருணாமூர்த்திகளும் கூட வாசலில் தட்டேந்தும் பிச்சமூர்த்திகளைக் கண்டுகொள்ளாத தேசம் என் தேசம் தான்.
ஆட்சியாளர்களே....
கண்ணை மூடிக்கொண்டு உற்றுக்கேளுங்கள்.சுனாமிப்பேரலையின் ஓசையைக்காட்டிலும் ஒரு ஓசை கேட்கும். காலங்காலமாக உறுமும் ஏழை இந்தியாவின் வயிற்றிரைச்சல்.இந்தியாவின் பரப்பளவைக் குறுக்கும் நெடுக்குமாகக்கிடந்து தட்டுத்தடுமாறி அலைகிற அவர்களின் கண்கள் இன்னும் திறக்கப்படவே இல்லை.அதைக் காவித்துணிகளும், ஜாதித் துணிகளும் கட்டிப்போட்டுவிட்டது.
என்றாவது
ஒரு நாள்
கட்டிவைத்த
கறுப்புத் துணிகளைக்
கழற்றுவார்கள்.