அவள் ஜிகினா உடையோடு மேடைக்கு வருவாள்.ஒரு மரப்பெஞ்சில் படுப்பாள்.அரங்கம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு காத்திருக்கும். அவன் பேசிக்கொண்டே இருப்பான்.கைகளைக் கொண்டு காற்றில் நர்த்தனம் ஆடுவான்,கண்களை உருட்டுவான். கூட்டத்தைப் பேச்சுக்கும்,காட்சிக்கும் இடையில் ஊசலாட விடுவான். வாளை உருவுவான்,அவள் மேல் ஒரு மூடியைக் கவிழ்த்துவான். வாளைச்சுழற்று வான். மனம் பதறும். எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் பருவத்தினளை வாள் கொண்டு அனுகுவது கண்டு ஆடிப் போவார்கள்.
இதை மாயா ஜாலம் என்று சொல்லுவார்கள்.மேஜிக் என்று பிரகடனப் படுத்து வார்கள். கிராமங்களில் இதை கண்கட்டி வித்தை என்று சொல்லுவார்கள்.
ஒரு கோப்பையில் தாள்களை போட்டு எரித்து விட்டு அதைக் கவிழ்கும் போது எப்படி புறா பறக்கிறது என்கிற கேள்வி இன்னும் கூடக் கேள்வியாகவே தொடர்கிறது.அதற்கு காரணம் நம்மைத் துரத்தும் வயிறும் அதைத்தொடர்ந்து நம்மோடு கூட வரும் மறதியும் தான்.
மக்களே....
சற்று கண்ணை மூடிக்கொள்ளுங்கள்.ராகுலின் குரலைக் கேளுங்கள்.இப்போது ராஜீவின் எதிரொலி கேட்கும்.
இப்படி ஒரு பழுத்த அரசியல்வாதி மேடையில் இருந்துகொண்டு இந்தியாவைக் கண்ணை மூடிக்கொள்ளச்சொல்லுகிறார்.நேரு பிரதமரான நிமிடத்திலிருந்து இன்று வரை இப்படித்தான் யாராவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். முன்னிருவரும் லாஞ்சனைப்பட்டு கொஞ்சம் மறைமுகமாக செய்ததவறை வெட்டவெளிச்சம் போட்டு துவக்கி வைத்தவர்.கலப்பு பொருளாதாரம் என்கிற பசப்பு பொருளாதாராத்தை புதிய பொருளாதாரக்கொள்கை என்று மாற்றி முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு திறந்துவிட்டவர்.
நான்கு தலைமுறைகளாக இந்திய சமூகம் இவர்களின் மாயாஜாலத்துக்குள் கிடந்து ஊசலாடுகிறது, உற்றுக்கவனிக்கிறது,பதறுகிறது,கண்ணீர் விடுகிறது கடைசியில் ஒன்றும் புரியாமல் வயித்துப் பாட்டைப் பார்க்க திரும்பிப்போய் விடுகிறது.
இந்த வம்சாவழி ஆட்சியில்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று எழுதி வைத்த பொய்யாமொழியின் குரல்வளை நெறிபடுகிறது. வருடா வருடம் வாழ வழியில்லாதும் பட்டினி யாலும் செத்துப்போகும் விவசாயிகளின் எண்ணிக்கை இருபதாயிர மாகிறது. சாக்கடைக் குழிக்குள் இறங்கி சமூக அடைப்பெடுக்கும் இந்தியர்கள் சராசரி யாக இருபதாயிரம் பேர் மூச்சடைத்து போகிறார்கள். ஜாதி மத மோதல்களில் நசுக்கப்படும் இந்திய மன்னர்களின் கணக்கு இன்னும் முழுதும் தெரியாது கறுப்புக் கணக்காகவே இருக்கிறது.ஒரு மாதத்துக்கு லட்ச ரூபாய் சம்பளம் தரத்தயாராக இருக்கும் இதே இந்தியாவின் குடிமகனுக்கு நாள் முழுதும் உழைத்தால் கிடைக்கிற சம்பளம் வெறும் நாற்பது ரூபாய்தான்.கருறைவக்குள் இருந்து கொண்டு கோடிஸ்வரர்களுக்கு அருள் வழங்கும் கருணாமூர்த்திகளும் கூட வாசலில் தட்டேந்தும் பிச்சமூர்த்திகளைக் கண்டுகொள்ளாத தேசம் என் தேசம் தான்.
ஆட்சியாளர்களே....
கண்ணை மூடிக்கொண்டு உற்றுக்கேளுங்கள்.சுனாமிப்பேரலையின் ஓசையைக்காட்டிலும் ஒரு ஓசை கேட்கும். காலங்காலமாக உறுமும் ஏழை இந்தியாவின் வயிற்றிரைச்சல்.இந்தியாவின் பரப்பளவைக் குறுக்கும் நெடுக்குமாகக்கிடந்து தட்டுத்தடுமாறி அலைகிற அவர்களின் கண்கள் இன்னும் திறக்கப்படவே இல்லை.அதைக் காவித்துணிகளும், ஜாதித் துணிகளும் கட்டிப்போட்டுவிட்டது.
என்றாவது
ஒரு நாள்
கட்டிவைத்த
கறுப்புத் துணிகளைக்
கழற்றுவார்கள்.
6 comments:
//சாக்கடைக் குழிக்குள் இறங்கி சமூக அடைப்பெடுக்கும் இந்தியர்கள் சராசரி யாக இருபதாயிரம் பேர் மூச்சடைத்து போகிறார்கள்//
ஜாதியின் பெயரால் சாவைத்தொடர்ந்து சந்தித்திடும் வர்க்கத்தினர் தலித்துகள் மட்டுமே. புதிய பொருளாதார கொள்கைகளின் அமலாக்கத்தின் பிறகு மட்டுமே செத்துப்போன விவசாயிகளுக்கு ஒரு கணக்கு வைக்க முடியும். சுதந்திரத்துக்கு முன்பிருந்து இன்று வரை சாக்கடையிலும் மலக்குழியிலும் இரந்தவரகளின் கணக்கு மூச்சு முட்டும் தோழரே!
கண்ணமூடி கேளுங்கள், சோனியாவின் சிரிப்பும்,
ராகுலின் நகைப்பும்,
ஓரத்தில் கார்த்திக் சிதம்பரம் வாழ்க கோஷமும் கேட்கும்.
வாரிசு இங்கும் தயார்.
பங்கு சந்தைகள்???
அன்பு காமராஜ்,
நல்ல பதிவு... கலப்பு பொருளாதாரம்??!!
அன்புடன்
ராகவன்
அதை இனி நாம் அவர்களுக்குத் திருப்பித் தருவோம் காமராஜ்.
முற்போக்கு பிற்போக்கு தலித் மேல்ஜாதி கீழ் ஜாதி ஆரியன் திராவிடன் என்று நமக்குள்தான் எத்தனை வர்ணம் அவர்கள் கலைத்துபோட்டு விளையாட வசதியாக?
எதை இனி யார் நமக்குத் தருவது என்பதை நாம் தீர்மானிப்போம்.
ஊழிக்கூத்தின் சாட்டை நம் கையில் நம் எழுத்தில் சுழலட்டும்.
இந்திய மக்கள் நேரு சந்ததியின் மேல் வைத்திருக்கும் பற்றை என்னவென்று சொல்வது. சிதாரம் கேசரி காங்கிரஸ் தலைவராக இன்னும் கொஞ்ச வருஷம் இருந்திருந்தால் காங்கிரஸ் என்றும் அடியோடு படுத்திருக்கும். தமிழ் மாநில காங்கிரஸ் உருவானதும் இக்காலகட்டத்தில் தான். எப்பிடியெல்லாம் கெஞ்சி காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவை தலைமையேற்க கெஞ்சினார்கள்.
இந்திய மக்கள் நேரு சந்ததியின் மேல் வைத்திருக்கும் பற்றை சோனியா காந்தி அவர்கள் நன்கு பயன்படுத்தி பிஜேபி அரசை வெளியற்றினர். இதில் மற்ற எதிர் கட்சிகளுக்கும் பங்குண்டு. இன்று காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு சோனியா காந்தி குடும்பத்தினரை வழிபடுவதைத் தவிர வேற என்ன இந்த காங்கிரஸ் தலைவர்கள் செய்ய முடியும். இன்னும் ஒரு முழுமையான மாற்று கட்சிகளின் கூட்டணி உருவானதாகத் தெரியவில்லை.
எதிர் கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடுவதில்லை. இந்த அரசும் பாராளுமன்றத்தில் எதையும் விவாதிக்காமல் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுகிறது.
வரும் சந்ததியருக்கு எத்தகைய ஒரு அமைப்பு இருக்கும் என்று நினைத்தால் அனைவரும் வருந்தக்கூடியது தான்.
பணம் எண்ணும் ஓசையில் பட்டினி வயிறு எழுப்பும் சத்தம் யாருக்குக் கேட்கப்போகிறது!?
Post a Comment