ப்ளாஸ்டிக் பை பான் மசாலா உற்பத்தியாளர்களுக்கான கெடுவை எதிர்வரும் மார்ச் 2011 வரை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஒரு பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாள் வரை பான் மசாலா என்றால் என்னவென்று அறியாது இருந்தது எளிய இந்தியா.அது பெரும் சேட்டு களின் பெருமைகளில் ஒன்றாக தகர டப்பாக்களில் முடங்கிக் கிடந்தது. ப்ளாஸ்டிக் தாள்களில் அடைக்கப்பட்டு பெட்டிக்கடைகளில் தொங்கப்போடும் வரை அமிதாப்,அம்பானி,போயஸ்,கோபாலபுர வீடுகளைப்போல அருங் காட்சிப் பொருளாகத்தானிருந்தது. இந்திய மனிதவளத்தை ஒரு சந்தைப் பொருளாக மட்டுமே அனுகுகிற அமெரிக்க சிந்தனையின் நீட்சிதான் பான் மசாலா பாக்கெட்டுகள்.
முன்னமெல்லாம் கிராமத்து பெட்டிக்கடைகளில் தொங்குவது சிகப்பு தாள்களில் அடைக்கப்பட்ட கிளிமார்க் டீத்தூள் மட்டும் தான். உப்பு புளி கடுகு சீரகத்தோடு வெத்திலை போயிலையான மற்றவையெல்லாம் நகரக் கடைகளில் ஒருகிலோ அரைக்கிலோவாக வாங்கிவரப்பட்டு அததற்கான அஞ்சரைப்பெட்டிகளில் கிடக்கும். அந்த அங்குவிலாஸ் போயிலையை சின்ன சின்ன தாளிகளில் மடித்துக்கொண்டுதான் சோமுமாமன் ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பார். அறுபது எழுபது வயது தாண்டிய கிழடுகளுக்கு மட்டுமே விற்கப்பட்ட அந்த அங்குவிலாஸ் போயிலை இப்போது அரிதாகிவிட்டது.அதே சோமுமாமன் கடையில் இப்போது ரகரகமான வண்ணங்களில் பான் மசாலா தொங்குகிறது. பணிரண்டே வயதான தொப்ளானின் மகன் வாங்கிப்பிரித்து கீழுதட்டை இழுத்து அதில் செருகி வைத்துக்கொண்டு கிளம்புகிறான்.
நீண்ட தூரம் சவாரி போகும் வாகன ஓட்டுனர்கள் தொடங்கி சித்தாள் கொத்தனார்களின் அன்றாடத்தேவைகளில் ஒன்றாக மாறிப்போனது பான் மசாலா.அதன் உற்பத்தியாளர்கள் பகாசுரக் கோடீஸ்வரர்களின் வரிசையில் சேர்ந்து பத்துவருடங்களுக்கு மேலாகிறது.காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை விஸ்தரிக்கப்பட்ட இந்த புற்று நோயின் நேரடித் தூதுவர்களுக்கு இந்திய தடுப்புச்சுவர்களான ஜாதி,மதம்,மொழி ஏதும் ஒரு பொருட்டல்ல. பான்பராக் பொட்டலங்களின் மக்காத உறைகளின் வீர்யத்தினால் சக்தி உறிஞ்சப்பட்ட அமர்,அக்பர்,அந்தோணிகளின் கடவுள்கள் உண்டியல்களோடும் சண்டை களோடும் பொழுது கடத்துகிறார்கள்.அடுத்த வருட சதூர்த்தியில் பான் பராக் பொட்டலம் ஊர்வலமாய் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த உத்தரவால் என்ன நேர்ந்துவிடப்போகிறது ?. கொஞ்சநாட்கள் உயர்மட்ட அதிகாரிகள் தொடங்கி அடித்தட்டு ஏட்டு வரை ஆசிர்வதிக்க கள்ளத்தனமாக விற்கப்படும் இந்தியாவின் கலாச்சாரப் பொட்டலம்.நீதியரசர்கள் சங்க்வி,... இல்லாத பெஞ்சில் மேல் முறையீடு செய்து நீதியை லவட்டிக்கொள்வான் ரத்தன் டாடாவின் சம்பந்தகாரன்.அப்புறம் முடை நாற்றமெடுக்கும் எச்சில் களோடு எங்கே துப்பலாம் என்று அலையும் என் இந்தியா. இது பற்றியெலாம் வாய்திறக்கமாட்டார் அந்த சு.சாமி.
0
இந்திய அரசின் இரட்டைக்கொள்கையால் பெரிதும் பயனடைந்தது ரத்தன் டாடாவின் நிறுவனங்கள் தானாம்.
இந்த புள்ளி விபரத்தை ராஜ்யசபா உறுப்பினரும்( இரண்டு அவைகளிலும் இருக்கும் பிரதிநிதிகளைப் பாருங்கள்) முன்னாள் தொலைத்தொடர்பு சாதன உற்பத்தியாளருமான திரு ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி டாடா நிறுவணங்கள் ஒதுக்கிக்கொண்ட தொகை 19074.8 கோடிகள். சென்றவாரம் ஒரு வார இதழில் ராசாவுக்கு 10,கருணாநிதிக்கு 30,சோனி யாவுக்கு 60 என்று எழுதிய பத்திரிக்கை ரொம்ப லாவகமாக இந்த புள்ளி விபரத்தை இருட்டடிப்பு செய்துவிட்டது.
ஆமாம் ராசா குற்றவாளியா இல்லையா என்பதை விவாதிக்கிற ஆகப்பெரும் சிந்தனையாளர்களும்,பகாசுர ஊடகங்களும் இது அரசின் தனியார் கொள்கை களினால் வந்த பெரும் சரிவு என்பதை விவாதிக்கவே இல்லை.இந்திய பொதுத்துறை நிறுவணங்களிடமிருந்த வளங்களை உள்ளிருந்து கொண்டே களவாடிக் கொண்டுபோய் தனியார்களிடம் சேர்க்கும் இந்த பெரும் கொள்ளையைப் பற்றி ஊடகங்கள் பேசவே இல்லை. உலகம் முழுவதும் பொருளாதாரச் சரிவிலிருந்த போது இந்தியா ஓரளவுக்கு தாக்குப்பிடித்தது பொதுத்துறையால் மட்டுமே.ஆனால் அது ஒரு கட்சியின் சாதனையாகப் பேசப்பட்டது.அந்தக் கருத்து ஊழலைக் கண்டுபிடிக்க சு.சாமியின் சாமர்த்தியம் பலனளிக்கவில்லை.
0
லஸ்கரின் குறியில் குஜாராத்தும் இருக்கிறதாம்.விக்கி லீக்ஸ் தலைப்புச்செய்திகள். டண்டடண்டடய்ங்.
இந்திய ஊடகங்களுக்கு பெருந்தீனி.
அடுத்த தேர்தல் வரப்போகுதில்ல
.யாரையாச்சும் அய்க்கானாக்கி
மக்களை மாய்க்காணாக்கனுமில்லையா?
இந்தக் கதைகளையெல்லாம் கடைக்கோடியில் இருக்கும் எண்பது கோடி இந்தியர்களுக்கு எப்படிக்கொண்டு போய்ச் சேர்க்க ?. பொய்யும் பான் பராக் பொட்டலமும் போல விற்றுத்தீர உண்மையால் முடியவில்லை.அதைக்
கண்டுபிடிக்கிற நாள்வரை இந்த எழுத்து,அதற்கு விழும் நான்கு ஓட்டுக்கள், அதை வாசிக்கும் நூற்றி இருபத்து நான்கு அனுதாபிகள், கருத்தரங்கம், ஆர்ப்பட்டம் எல்லாம் உரமாக இருக்கட்டும்.
8 comments:
தலை சரியா இருந்தா வால் சரியா இருக்கும் காமராஜ்.இங்க தலை இல்லை.வால் நிறைய இருக்கு.
பதிவின் தலைப்பும், எழுத்தும் உண்மைதான் !
இது போல் நிறைய எழுதுங்கள்...
வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் !
அண்ணா உண்மைகள் வெளி வந்தால் இந்தியா நல்லா தான் இருக்கும்... ஆனா?
//ஒரு வார இதழில் ராசாவுக்கு 10,கருணாநிதிக்கு 30,சோனி யாவுக்கு 60 என்று எழுதிய பத்திரிக்கை ரொம்ப லாவகமாக இந்த புள்ளி விபரத்தை இருட்டடிப்பு செய்துவிட்டது.//
இந்திய ஊடகங்கள் அரசியல்வாதியை வேண்டுமானால் பகைத்துக்கொள்வார்கள், எக்காலத்துக்கும் பெருமுதலாளிகளை கண்டு பம்முவார்கள், ஏனென்றால் அவர்கள் விற்கும் பத்திரிக்கை, டிவி எல்லாம் அந்த முதலாளிகளின் விளம்பர விசுவாசம் தான்.
பான்பராகை ஏன் இன்னும் தடைசெய்ய முடியவில்லை என்று தெரியவில்லை, பாதிக்கப்படுவது அன்றாடம் காய்ச்சிகள்தான். முன்பு தடை தற்காலிகமாக இருந்தபோது கடைகளில் போலிகளை மக்கள் வாங்கி சுவைத்தார்கள் கடைக்காரர்களும் தடைசெய்யப்பட்ட பொருளுக்கு இருமடங்கு லாபம் பெற்று விற்றார்கள். எந்த நீதிபதியோ தடையை நீக்கினார். மாணிக்சந்தின் கல்லா குறையாமல் இருப்பதற்கு...
/இந்தக் கதைகளையெல்லாம் கடைக்கோடியில் இருக்கும் எண்பது கோடி இந்தியர்களுக்கு எப்படிக்கொண்டு போய்ச் சேர்க்க ?. பொய்யும் பான் பராக் பொட்டலமும் போல விற்றுத்தீர உண்மையால் முடியவில்லை.அதைக்
கண்டுபிடிக்கிற நாள்வரை இந்த எழுத்து,அதற்கு விழும் நான்கு ஓட்டுக்கள், அதை வாசிக்கும் நூற்றி இருபத்து நான்கு அனுதாபிகள், கருத்தரங்கம், ஆர்ப்பட்டம் எல்லாம் உரமாக இருக்கட்டும்./
செவிட்டில் அறையும் உண்மை!
நம்ம ஆதங்கங்களுக்கு சீக்கிரம் விடை கிடைச்சா அவங்க பாக்கெட் இன்னும் நிரம்பி வழியாதே. எப்பிடி விடுவாங்க.
இந்திய ஊடகங்களுக்கு பெருந்தீனி.
அடுத்த தேர்தல் வரப்போகுதில்ல
.யாரையாச்சும் அய்க்கானாக்கி
மக்களை மாய்க்காணாக்கனுமில்லையா?
.....சமூதாயத்தின் மேல் அக்கறையும் ஆதங்கமும், பதிவில் தெரிகிறது. பெரும்பான்மையான மக்கள், சிந்தித்து செயல் படாவண்ணம் பொழுது போக்கு அம்சங்கள் பார்த்து கொள்கிறதோ?
நீங்க சொல்றமாதிரி சொல்லி சொல்லி தீர்த்தாலும் இந்த உண்மைகள் விற்றுத்தீர்ந்து விருந்தாகப்போவதில்லை அந்த பாக்கெட்டுகளைப்போல..
Post a Comment