23.12.10

கொஞ்சம் பொறுங்கள்,கோக் குடித்து விட்டு மீதி எழுதுகிறேன்.

தங்களின் நிறம்,தாங்கள் சாப்பிடும் உணவு,உடுத்தும் உடை,படிக்கும் கல்வி கீழானது என்று அவர்கள் மூளைக்குள் புகுத்திவிட்டாலே போதும் நாம் இந்தியாவை எளிதில் வெற்றிகொண்டுவிடலாம் என்கிற அறிக்கையை 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி மெக்காலே சமர்ப்பித்திருக்கிறான்.
அந்த அறிக்கையை செயலாக்குவதில் அவர்களுக்கு எந்தச்சிரமமும் இருக்க வில்லை.

அதற்கான தட்பவெப்பம் இங்கு தேவைக்கு அதிகமாகவே இருந்தது என்பதுதான் நிதர்சனம்.அது இந்தியாவில் புழக்கத்தில் இருந்த வர்ணாசிரமம்.இதோ 175 ஆண்டுகள் கடந்த பின்னும் கூட நம்மால் அதை புடுங்கி எறிய முடியவில்லை.மெக்காலே வேர் இந்திய மண்ணைப் பிளந்து மறுபக்கம் பாய்ந்து இப்போது உலகமயமாக்களாக திரும்பவும் வந்திருக்கிறது. junk food எனப்படுகிற ஆயத்த உணவுகள் கொடுமையான விஷம் என்பதைச் சொல்லுபவர்கள் கோமாளியாகிறார்கள்.அது சாப்பிட்டால் உன்னத மடைவோம் என்று சொல்லுகிற விளம்பர மாடல்கள்தான் இந்தியாவின் கதாநாயக் கனவுக் கன்னிகளாக இருக்கிறார்கள்.

கல்வி நிலையங்களிலும்,அதற்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவிலும் ஆயத்த உணவுகளையும் கரியமில வாயு செலுத்தப்பட்ட குளிர்பாணங்களையும் விற்கத்தடை செய்ய வேண்டும் என்று  உதய் பவுண்டேசன் என்கிற தொண்டு நிறுவணம் பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறது.டெல்லி உயர் நீதி மன்றம் அதற்கு பதில் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.இது மாதிரி எத்தனை நாடகங்கள் நடந்து முடிந்திருக்கிறது.

நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற தாடிக்காரனின் குறள் நமக்கு அநாவசியமானது.எவன் எவனோ வந்து நிலங்களை வாங்கி வளங்களை அழித்து பகாசுர ஆலைகள்ஆக்ரமிக்கிறான்.அப்போது பொத்திக்கொண்டு கிடக்கிற தொண்டும் நாட்டுப்பற்றும் பொதுநலவழக்குகள் தாக்கல் செய்தததோடு புரட்சியைச்சுருட்டிக்கொண்டு படுக்கப் போய்விடுகிறார்கள்.

என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது.போராடத் தெரியாத இந்த ஊமை ஜனங்களுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட விஷம் விற்பான். விஜய்,ராதிகா, விவேக்,சூரியா,அசின் போன்றவர்கள் அதையும் சிபாரிசு செய்வார்கள். கொஞ்சம் பொறுங்கள் ரெண்டு மடக்கு கோக் குடித்து விட்டு மீதி எழுதுகிறேன். ரெண்டும் ஒண்னுதானே?

12 comments:

vasu balaji said...

கோக்குக்கு கடிச்சிக்க எம்.சி. ஃபிங்கர் சிப்ஸ் பாஸ்:)

க.பாலாசி said...

//கொஞ்சம் பொறுங்கள் ரெண்டு மடக்கு கோக் குடித்து விட்டு மீதி எழுதுகிறேன். ரெண்டும் ஒண்னுதானே?//

இதேதாங்க என்னுடைய ஆதங்கமும்.. கலக்கல்... எல்லாம் காலக்கொடுமை...

வினோ said...

அண்ணா, என் ரெண்டு வயசு மகள் இப்போவே லேஸ் கேட்கிறாள்.. :(

Unknown said...

நல்ல கடுமையான சாடல். தேவை தான்.

உள்ளூரில் நடக்கும் சிறுதொழில்களை முதலில் ஆதரிக்க வேண்டும். பெரிய கம்பனிகளின் சிப்ஸ் வாங்குவதற்கு பதிலாக கண் முன்னே போட்டுக் கொடுக்கும் சிப்ஸ், பஜ்ஜி, வடை ஆகியவற்றை வாங்கி அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

எங்க அப்பா, மல் வேஷ்டி விலை கம்மியா இருந்தா கூட, சேலம் மாவட்டத்திலுள்ள சிறு நெசவாளிகளின் கைத்தறி வேஷ்டி வாங்கி, பண்டிகை நாட்களில் சொந்தக் காரங்களுக்கு வைச்சுக் கொடுப்பார்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சேதுவின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்.

நம்ம ஊர் இரும்புச் சத்துக்குப் பெயர் போன வெல்லப் பண்டங்கள் மரியாதை இழந்துவிட்டன.

கோக் குடிப்பதால் இளம் பருவத்தினரின் முதுகுத் த்ண்டுவடம் மிகவும் பூஞ்சையாய் மாறிவிடுகிறது.

பற்களுக்குக் கரும்பையோ கடலைமிட்டாய் முறுக்கு போன்ற கடினப் பொருட்களைக் கடித்துத் தின்னும் வலு இல்லாது போகிறது.

தவிர உடல் பருமனுக்கும் ஊளை சதைக்கும் காரணமாகிறது.

இதையெல்லாம் விட நம் நாட்டின் இனிமையான நீர்வளம் முற்றிலும் உறிஞ்சப்பட்டு வண்ணமும் விஷமும் கலக்கப்பட்டு நம்மிடமே அதை விற்றுக் காசாக்குவதை என்ன சொல்லலாம் காமராஜ்?

உங்கள் பதிவின் தலைப்பை இப்படி வைக்கலாம்.

ஒரே கல்லுல எத்தன மாங்கா?

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
Unknown said...

போலியான கவர்ச்சி விளம்பரங்களால் ஈர்க்கப்படும் மக்கள் அதற்கான விலையை கொடுக்கும்போது பணம் கொடுத்து உடல்நலத்தை கெடுத்துக்கொள்கிறார்கள்..

தமிழ்க்காதலன் said...

தேசத்தின் அவலத்தை நேர்த்தியாய் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. நம்ம வலைப்பூ பக்கம் வந்து போங்கள். ( ithayasaaral.blogspot.com & thamizhththenral.blogspot.com )

பத்மா said...

arumai sir

ஈரோடு கதிர் said...

தண்ணிக்குப் பதிலா கோக் குடிக்கிறத கௌரவமா நினைக்குறாங்க சிலர்

pavithrabalu said...

அருமையான பதிவு,, அவசியமானதும் கூட,,
வண்ணப் பாக்கெட்டுகளில் மயங்கி நமது சின்னஞ்சிறு மழலைகள் நஞ்சை விலை கொடுத்து வாங்கி தினமும் புசிக்கின்றனர்,,

ரெடிமேட் நுடுல்ஸ் சாப்பிடுவது குடும்ப கௌரவத்தின் அடையாள சின்னமாகவே ஆகி விட்டது,,,

குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில், haemogloblin மிகவும் குறைந்த அளவில் இருந்தது கண்டறியப்பட்டது,,
பாக்கெட் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை மழுங்கடித்து விடுகிறது,

hariharan said...

பெப்சியும் கோக்குகளின் தொலைநோக்கே வேறு!

அங்கங்கே ஏரிகளையும் ஆறுகளையும் தங்கள் தனியுடமையாக்கி பாட்டிலில் அடைத்து விற்பதுதான் நீண்டகால தந்திரம். அவர்களுக்கு துணை நிற்போர்கள் அனைவரையும் ஏஜெண்டுகள் என்று விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை.குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் தங்கள் சியநலத்திற்காக மக்கள் நலனை அடகு வைக்கிறார்கள். எப்போது ‘சித்தி’ களை பார்ப்பதை மக்கள் நிறுத்துவார்கள்.