இந்த மழைக்காலத்தில் பூமியெங்கும் நீராய் நிறம்பி வழிகிறது.சாத்தூரிலிருந்து மதுரை வரை குறுக்கே வருகிற அர்ச்சுனா,கௌசிகா காட்டாறுகள் நுங்கும் நுறையுமாக இழுத்துக்கொண்டு போகிறது.வேலிச்செடிகள் கரையில் அடைத்துக்கிடக்கும் பெரிய பொந்துகளாய்க்கிடந்த கரட்டு ஓடைகள் இப்போது கரை ததும்பி குதூகலமாக ஓடுகின்றன.மதுரையைக்கடக்கிற போதெல்லாம் அந்த வைகையைப் பார்க்கும் போது ஏக்கமும் பெருமூச்சும் மட்டும் வந்து போகும்.இதோ ரெண்டுகரையும் அடைத்துக்கொண்டு ஏப்பம் விடுகிறது வையை.சனம் வேலைவெட்டியைப் போட்டுவிட்டு பாலங்களில் நின்று நீரோட்டம் பார்க்கிறதுகள்.அடித்துச்செல்லும் மரக்கிளைகளில் மனசை ஓட விட்டு மெய்மறக்கிற கணங்கள் அலாதியானவை.
திரும்புகிற திசையெல்லாம் பசேலெனக் காடுகள் கண்னைப் பறிக்கின்றன. பிளந்து போட்ட பிளாட்டுகளின் நடுகற்களை மறைத்துக்கொண்டு கோரைப் புற்கள் பச்சைக் கொடியுயர்த்துகின்றன.உச்சிமத்தியானம் ஊதக்காத்து அடிக் கிறது எங்கள் வெயில் தேசத்தில்.எங்கு தான் மறைந்துகிடந்தனவோ இத்தனை காலம், இந்த தாரை தப்பட்டை முழங்குகிற தவளைகளும்,தாழப் பறக்கிற தட்டானும், ஈசலும், நெய்க்குருவிகளும். மொது மொதுவெனக் கிளம்பி வசந்த விழாக்கொண்டாடுதுகள்.
அரட்டாவளையை (அரைத்தவளை) மீனென்று நினைத்து குளம் குட்டைகளில் அலைந்து திரிந்த காலங்கள் மெல்லிதாய் வந்து போகிறது.பிடித்த அரட்டா வளையைச் மேல் சட்டையில் அள்ளிக்கொண்டுவந்து அம்மாவிடம்
கொடுத்து கொழம்பு வைக்கச் சொல்லி பாராட்டு வாங்கலாமென்று அப்துல் கலாம் கண்டுகொண்டு போனதும்.ஒத்தப்பிள்ளையப்பெத்து இப்பிடி அரக் கிறுக்குப்பிடிச்சு அலையுதே. எலெ நீ என்ன சீனாக்காரனா தவளையத் திங்கச்சொல்ற' என்று அம்மா செல்லமாய் திட்டியதும்.வந்து அலையடிக்குது.
செக்கச்செவேலென கிடக்கும் கண்மாய்த்தண்ணீரில் ஆண் பெண் வித்தியாச மில்லாமல் நீச்சலடிச்ச காலம் வந்து போகுது.முங்கு நீச்சலடிச்சு வந்து சரசுவின் காலை அவளுக்குத் தெரியாமல் பிடித்த நிமிடங்கள் அந்த நேரத்து சாகசங்கள்.அதே கண்மாய்த் தண்ணீரில் முங்கி சாகக்கிடந்த பிச்சைக்கனியை தூக்கிக்கொண்டு வந்ததும். வண்டியக் கொடசாய்ச்சி சக்கரத்தில் வச்சு சுத்தியதும். ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த நிஜ ஞாபகங்கள்.
