அடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான தலித்துகளின் போராட்டம் எனும் நூலின் தமிழாக்கத்தின் ஒருபகுதி.
எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் - ஆம்
எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்.
பாரதியின் கனவோடு காத்துக்கிடந்தது காலம். அது கனிந்தது. அந்த ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம்
நாள் நள்ளிரவு பணிரண்டு மணிக்கு. ஏன் இரவு பணிரண்டு மணி எனக் கேட்டால் அர்த்தமுள்ள இந்து தத்துவத்திலிருந்து பக்கம் பக்கமாக மிட்டாய்க்கதைகள் வரலாம். எந்த வேதம் இந்திய மனிதர்களைப்பிரித்ததோ, எந்த வேதம் ஒரு பெருவாரியான ஜனங்களை ஊரை விட்டு விரட்டி புற ஜாதியினராக்கியதோ, எந்த வேதம் அதைக்கேட்ட பிற்படுத்தப் பட்டவர்கள் தலித்துக்கள் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றச் சொன்னதோ அதே வேதத்திலுள்ள ஆகம விதிப்படி தான் இந்த இந்தியாவுக்கு நள்ளிரவில் விடுதலைக்கான நாள் குறிக்கப்பட்டது.விடுதலைக் கப்புறம் நேரு தலைமையில் உருவான மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கியது. அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பாதுகாப்புக் குறித்து பல அடிப்படைச்சரத்துக்கள் இயற்றப்பட்டன.
15 வது ஷரத்து.
------------
மத இன ஜாதி மற்றும் பால் பாகுபாடுகளிலிருந்து விடுதலை அடைவதற்கான உரிமையை
வழங்குகிறது
16 வது ஷரத்து.
------------
தலித்துகளுக்கு சமுதாய மற்றும் கல்வியின் மூலம் கட்டாய வளர்ச்சி தேவை என்பதை வலியுறுத்துகிறது. அது மட்டுமில்லாமல் தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனவலியுறுத்துகிறது. தீண்டாமைக்கொள்கையைக் கடைப்பிடிப்பது தண்டனைக்குறிய குற்றம் என்று வறையறுக்கிறது.
23 வது ஷரத்து
------------
வேலைபார்க்கிற இடங்களில், பொருளாதரா ரீதியாக மட்டுமல்லமால், சமூக மேலான்மையால் நிர்ப்பந்தப்படுத்தப்படும் தலித்துகளுக்கு பாதுகாப்பளிக்கிறது. அதோடு மட்டுமில்லாது மத்திய மாநில அரசுகளில் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது இடஒதுக்கீடு அளிக்கிறது.
25 வது ஷரத்து
------------
இந்தியர் யாவரும் தங்களிஷ்டப்படி எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதில் இணைந்துகொள்ளும்அடிப்படை உரிமை.
34 வது ஷரத்து
------------
பாராளூமன்ற, சட்டசபை , பஞ்சாயத்து தேர்தல்களில் அதிகாரப்பரவலுக்காக தலித்துக்கள் தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு வழங்குகிறது.
46 வது ஷரத்து
------------
கல்வி மற்றும் பொருதார நிலைமகளில் தலித்துகளின் நிலைமயக் கவனித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவ சிறப்புக் கண்கானிப்பு வேண்டுமென உறுதி செய்திருக்கிறது.இது தவிர மிகப்பிரபலமான பி சி ஆர் ( ப்ரொடெக்சன் ஆப் சிவில் ரைட்ஸ் ஆக்ட்- 1955 )பி சி ஆர் ஆர் சட்ட ம் ( 1977 ), வன்கொடுமைத்தடுப்புச்சட்டம் ( 1989 ) ஆகியவையும் இன்னும் இருக்கின்றன.
................... இந்த சட்டங்கள் பூராவும் அமலாகிப் பூர்த்தியடைந்திருந்தால் எப்போதோ கீழ் மேலென்ற நிலை மாறியிருக்கும். இந்தியா எந்தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன்பிரந்தோரென்று சொல்லியபடி தெருக்களில் ஜாதி மத பேதம் மறந்து குழந்தைகள் ஓடித்திரிந்திருக்கும். ஆனால் இங்கே இன்னும் வாச்சாத்தி, மாஞ்சோலை, வீதிகளில் மிதிபட்டுக்கிடக்கிறது. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலிகளில்
இன்னும் இரண்டாயிர வருட முடைநாற்றம் உட்கார்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா கிராமக்குடிநீர் ஆதாரங்களிலும் கண்ணுக்குத்தெரிகிற கிருமிகளாக தடைச்சட்டம் இருக்கிறது. பெருநகரங்கள் நகரங்கள் நகரத்தை நோக்கி நகருகிற உர்கள் தவிர்த்த எல்லாகிராம டீக்கடைகளிலும் ஒரு ஓரத்தில் நின்று டீக்குடிப்பதை பார்த்தபடியே காலம் நகர்கிறது. நகராட்சி ஊழியத்துக்கு அருந்ததியர்தான் என்பதை மாற்றமுடியாது.
மாற்றம் இருக்கிறதா இல்லையா என்று கண்கானிக்ககூட இந்தியாவின் மூத்த குடிமகன் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்துக் கண்காணிக்கலாம் என்றும் சட்டம் வழி வகுக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ரஜேந்திர பிரசாத் அவர்கள் 1936 ஆம் ஆண்டு
காந்தியால் முன்மொழியப்பட்டு அம்பேத்கர் ஆதரவோடு கொண்டுவந்த பட்டியல் இனத்தவர்களின் பட்டியலுக்கு
ஒரு புது வியாக்கியானத்தைக் கொண்டுவந்தார் அதுதான் அரசியலில் மதத்தைக்கலக்குகிற முயற்சி. யார் யாரெல்லாம் பட்டியல் இனத்தவர் என்று சொல்லிவிட்டு அவர்களில் எவெரேனும் இந்து அல்லாத பிற மதத்தைத் தழுவினால் அவர்கள் ஷெடூல்டு இனத்தில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் எனும் ஒரு சூழ்ச்சியை
இடைச்செறுகலாக, பிற்சேர்க்கையாக சேர்க்கிறார் இந்தியாவின் முதல் மூத்தகுடிமகன். இந்தச்சூழ்சியானது
இந்திய அடைப்படை உரிமைச்சட்டத்தின் 25 வது ஷரத்துக்கு நேர் எதிரானது எனப்பெரும் கலகக்குரல்கள்
கேட்டபின்னர் மிகத் தாமதமாக இரண்டுமுறை சீர்திருத்தப்பட்டது 1956 ல் சீக்கியர் களையும், 1990 ல்
புத்த மதத்தையும் இந்த சட்டத்துக்குள் கொண்டுவந்தனர்.
எப்படியிருந்தபோதிலும் நசுக்கப்பட்டவர்களை அடையாளப் படுத்தும்போது கூட மத அளவுகோல் கொண்டு அளப்பது நவ நாகரீகக் கொடுமை. அதுவும் எந்த சனாதனத்தின் காலில் மிதிபட்டு நசுங்கினார்களோ அதே சனாதனத்தின் காலுக்கடியிலேயே விமோசனம் கிடைக்கும் எனும் குருட்டுத் கதையானது தலித்துக்களின் நிலைமை. எல்லா மதத்திலும் இருக்கிற தலித்துகளுக்கு ஒரே அடயாளம் கிடைக்க இருந்ததையும், அவர்களை ஒன்று சேர விடாமலும் பிரித்தாளும் சூழ்சியை அதிகாரத்தின் துணையோடு அரங்கேற்றினார் ஹிந்து மஹாசபையின் தீவிர உறுப்பினர் ராஜேந்திர பிரசாத். அந்த அரங்கேற்றத்தின் எதிரொலியாக முஸ்லீம் தலித்துகளும் கிறிஸ்தவத் தலித்துகளும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் பிரகாரம் கிடைக்கிற அடிப்படை உரிமைகளை அனுபவிக்க இயலாத பிரிவினராயினர்.
நிலைமைகள் இப்படியிருந்த போதிலும் ஒரு சில நேர்மையான உயர் அதிகாரிகளும் அரிதாகவேனும் அவ்வப்போது
குறிஞ்சியாய் பூத்தார்கள். ஜனாதிபதியின் நேரடி நியமனத்தால் வந்த ஆனையாளர் L M ஸ்ரீகாந்த் அப்படிப்பட்ட ஒரு உயர் அதிகாரி. அவர் நியமிக்கப்பட்ட ஓராண்டுகாலத்தில் நடக்கிற ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திலும்
தலித்துகளுக்காக, அவர்களைப் பாதுகாக்கிற சட்டங்கள் ஒழுங்காக நிறைவேறுகிறதா என்று சோதனை செய்ய,
நடவடிக்கை எடுக்க, அது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க, அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அவர் சமர்ப்பித்த அறிக்கை பரபரப்பானதும் மிகுந்த ஈர்ப்புத் தன்மை கொண்டதுமாகும். அது 1951 ஆம் ஆண்டில்
சமர்ப்பிக்கப்பட்டது. அதுவே தலித்துக்கள் குறித்த முதல் அறிக்கை.
-----------------------------------------------------------------------------------------
"இந்து சமூக ஏற்பாட்டில் ஜாதி என்பது ஒரு மனிதனின் அடயாளமாகவும், செய்யும் தொழிலுக்கான தகுதியாகவும்,கௌரவமகவும் வலிந்து திணிக்கப்பட்டு பின் கடைப்பிடிக்கப்படுகிறது. இது போலொரு வறட்டு நடைமுறை இந்தியாவைத்தவிர உலகின் வேறெந்த மூலையிலும் கிடையாது. தெருக்கூட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது, தோல் பதனிடுவது, செருப்புத்தைப்பது, மலம் அள்ளுவது, பிற மனிதனின் அழுக்குத்துணிகள் வெளுப்பது போன்ற தொழில்கள் எல்லாம் மனிதனால் அவனது கைகளால் செய்யப்படுகிறது. இந்தத் தொழில்கள் யாவும் ஒரு சில ஜாதிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஜனத்தொகையில் ஐந்து கோடிக்கு மேலிருக்கும் அவர்கள் ஹரிஜனங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்."
"
அடக்குமுறயால் திணிக்கப்பட்ட இந்த பழக்கங்களால் அவர்கள் தங்கள் சுய மரியாதையை இழந்திருக்கிறார்கள்.
அவர்கள் அதற்குள்ளே நூற்றாண்டுகாலங்களாக உழன்றுகிடப்பதால், அது சாபமில்லை, அதை உடைத்துக்கொண்டு அவர்களால் வெளி வரமுடியும் என்பதை உணராதபடிக்கு அதிலே லயித்துக் கிடக்கிறார்கள். எனவே அவர்கள் பிறமனிதர்களோடு போட்டி போட்டு தொழில்களிலோ ஆலைகளிலோ உழைக்கமுடியாத சோம்பேறிகளாக மாறீப்போகிறார்கள், அவர்கள் மூலையும் உடலும் சோர்ந்து போயிருக்கிறது. அதை விடக்கொடூரம் தங்கள் குழந்தைகளைக்கூட பள்ளிக்கூடம் அனுப்ப முடியாத ஊற்றுக்கண் அடக்கிறவர்களாக மாறுகிறார்கள்
-----------------------------------------------------------------------------------------
அறிக்கையின் இந்த வார்த்தைகள் இருண்டு கிடக்கும் தலித்துகளின் உள்ளார்ந்த இயல்புகளின் மேல் வெளிச்சம்
பாய்ச்சுகிறது. அது ஜாதீய மேலாதிக்கத்தால் நசுங்கிக்கிடக்கும் மனித விழிப்புணர்வைப்பற்றிப்பேசுகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கூனிக்கிடக்கிற சமுகத்தின் முதுகெழும்புகளை நிமிர வைக்கும் மருத்துவம் குறித்து
யோசிக்க வேண்டிய நிர்ப்பந்ததில் இந்தியா இருப்பதைச்சுட்டிக்காடுகிறது. அது வெறும் காகிதச்சட்டங்களாலும்,
ஆணைகளாலும் தீர்மாணங்களாலும் பணமுடிப்புகளாலும் நிவர்த்தி செய்யமுடியாத பீடை எனத்திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.
ஒரே ஒரு மாற்று தானிருக்கிறது அது கல்வி. அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தர யோசிக்கிற போதே அவர்களின் உள்ளார்ந்த இயல்புகளை அலசி ஆராய்ந்து கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். எனவும் தெளிவக
ஆரம்பிக்கிறார் LM ஸ்ரீகாந்த்.இதற்கெனப் பிரத்யேகமாக அவர் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிறார்.
28 வது அறிக்கை ( 1987 )
-------------------------------------
கிட்டத்தட்ட முப்பத்தாறு வருடங்கள் அந்த நாற்காலி ஒரு அருங் காட்சிப் பொருளாகவும், மாதம் பிறக்கிற போது
பணம் பட்டுவாடாப் பண்ணுகிற கல்லாப்பெட்டியாகவும் இருந்ததே தவிர குறிப்பிட்டுச் சொல்லுகிற மாதிரி ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப்போடத்தயாராயில்லை. எனவே 1987 ல் வெளியான 28 வது அறிக்கை கூடுதல் கவனம் பெறுகிறது. அதாவது இந்த அறிக்கை தயாரான 1980 வது ஆண்டு கணக்கெடுப்புப்படி சுதந்திரமும் கடுமையான சட்டங்களும் நடைமுறைக்கு வந்து நாற்பதாண்டுகள் கடந்த பின்னரும் நிலைமைகள் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.பொதுக்கிணற்றில் தண்ணீரெடுக்க முடியாத கொடும் நடைமுறைகள் கிராமங்களில் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. அது போலவே நகரங்களின் சேரிப்பகுதியில் குடியிருப்பவர்களின் நிலைமைகளும் நீடித்தது. அதுபோன்ற தீராக்கொடுமைகளின் பட்டியல் பற்றிப்பேசுகிறதுறது, அந்த 28 வது அறிக்கை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலித்துகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு சின்னசின்னக் கீற்றாக ஒளிர ஆரம்பிக்கிற இடங்களில் எல்லாம் அவர்கள் அடுத்தவர்களின் ஆறாத கோபத்திற்கு ஆளக நேர்ந்தது. அந்தக்கோபத்துக்கு விலையாக மொத்தம் மொத்தமாக உயிரும் உடமைகளும் தலித்துகளிடமிருந்து பறிபோயின. அவர்களின் பாதம் பதிந்து நிற்கிற ஒரு
தப்படி இடம்கூட அவர்களுக்கெனச் சொந்தமாக இல்லாத ஜீவராசிகளாக இருந்ததனால், உயிர் வாழ்தலின் நிர்ப்பந்தத்தால் அறிதலுக்கான முயற்சியையும் கைவிட நேர்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வண்கொடுமைகளுக்கெதிரான இயலாமை, அவமானங்கள், இதர கொடுமைகள் என நீளும் பாடியல்கள், தங்கள் மிச்ச நாட்களுக்காக வாய்மூடிப் பொறுத்துக்கொண்டது போக, பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தினசரி நாளிதழ்களில் இடம்பெறாத நாளேகிடையாது என்று சத்தியம் செய்து சொல்லலாம். அப்படி பதிவு செய்யப்பட்ட மிகக்கடுமையான குற்றங்கள் சராசரியாக வருடத்திற்கு 15000 என்று கணக்கிடப்படுகிறது.
1) தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் குறித்த தெளிவற்ற ஆவணங்களால் தீர்க்கப்படாத தாவாக்கள்.
2) வயிற்றுப்பாட்டுக்கு எட்டாத குறைந்த கூலி, அல்லது கூலியில்லாத உழைப்பினால் உருவாகும் மனக்கசப்பும் பதற்றமும்.
3) தன்னெழுச்சியாக கிழம்பும் விழிப்புணர்வு ஆகியவைகளே அதற்கான காரணங்களாகச் சொல்லுகிறது.
சுதந்திரத்துக்குப்பிறகான மொத்த கல்வி வளர்ச்சி 1961 ல் 24 சதவீதமாகவும், 1971 ல் 29.4 சதவீதமாகவும், 1981 ல் 36.2 ஆகவும் இருக்க தலித்துக்கள் 1981 ல் 21.4 சதவீதம் மட்டுமே எட்டமுடிந்திருக்கிறது.
மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கும் குறைவாகவே தலித்துகள் இருக்க முடிந்தது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைகிடைக்கப்பெற்றோர் கணக்கில் 1983-85 ஆண்டில் வெறும் எட்டு சதமானவர்கள் தான் தலித்துகள். கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் காலியிடங்காளாகவே கிடந்தன.
இப்படி புள்ளிவிவரங்களுக்குள் பயணமாகித்தான் தலித்துகளின் நிலைமையைச்சொல்ல வேண்டிய அவசியமில்லை.அது கதவையும், கண்ணையும் திறந்துபார்த்தவுடன் தென்படுகிற அன்றாட அவலங்கள்.