இந்தியாவின் நீளத்தைக் குறிக்கும், அளக்கும் வடக்கு முனை.அப்புறம் ஆப்பிள் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் மாநிலம்.பனிமலைகள், எம்ஜியார் இதயவீனையில் ஒண்டர்புல்,ப்யூட்டிபுல் என்று குதித்து ஓடிக்காட்டிய பசேல் பிரதேசம் இப்படியான குளிச்சியான அல்லது இதமான நினைவுகளைத்தந்து கொண்டிருந்த மாநிலம். தீராத துப்பாக்கிச்சத்தங்களோடே செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.ஒரு நடுத்தரவயசுக்காரன் நினைக்கலாம் இது எண்பதுகளில் ஆரம்பித்த பிரச்சினை என்று.ஆனால் இந்த தேசத்தின் விடுதலைக்கான தேதி குறிக்கப்பட்ட நாளில் இருந்து பிரச்சினையோடே தொடர்கிறதுதான் கஷ்மீரின் நிஜ வரலாறு.
இந்தியா சுதந்திரமடைந்த போது ஜம்முகாஷ்மீர் ஒரு மன்னராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது.மன்னன் ஹரிசிங் என்ன காரணத்தினால் ஆண்டு அனுபவிக்க அனுமதிக்கப்பட்டான் எனத்தெரியவில்லை.ஆமாம் ஜம்மு காஷ்மீர் பகுதி இந்தியாவோடு இணைக்கபடவில்லை.இங்கிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானும் பிரிவினையின் பேரில் பெருக்கெடுத்தோடிய ரத்தம்.ரெண்டு பக்கத்துப் பெண்டுகளுக்கும் நேர்ந்த சொல்லமுடியாத மானபங்கம். ஒரு பெரும் வரலாற்று சோகம்.பரஸ்பரம் இரண்டு பக்கத்திலும் நடந்த உயிர்ச்சேதம் ஒரு உலகப்போரை மிஞ்சும்.
பிரிந்துபோன கையோடு அங்கிருந்த சிறுபாண்மை மக்கள் விரட்டப்பட்டார்கள்.பின்னர் அது ஒரு முஸ்லீம் மத அடிப்படை நாடானது.கைக்கெட்டும் தூரத்தில் அனாமத்தாக விரிந்துகிடந்த இயற்கை வளமும், வற்றாத நதிகளும் தகதக்கும் ஏரிகளும் நிறைந்து கிடக்கும் ஒரு பிரதேசத்தை அபகரிக்க யாருக்குத்தான் ஆசை வராது.ஆசை வந்த சீனாவும்,பாகிஸ்தானும் 20 மற்றும் 37 விழுக்காடு காஷ்மீரை கையகப்படுத்திக் கொண்டன.மீதியிருந்த 43 சதமான காஷ்மீரை ஹரிசிங் அனுபவித்து வந்தான்.சுதந்திரத்துக்கு முன்னமும் கூட அது இந்துக்களால் ஆளப்பட்ட முஸ்லீம் பகுதியாகும்.அப்போதும் கூட நேரு தலைமையிலான அரசு அது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான் அதிபர் ஜின்னாவின் ஆசைப்படி அந்தப்பகுதியிலுள்ள மலைஜாதி மக்களும் பாகிஸ்தான் துருப்புக்ககளும் இணைந்து மிச்சக்காஷ்மீரை பிடிக்க நுழைந்தனர்.
தொடர்ந்து சண்டையால் மன்னரிடமிருந்து காஷ்மீரை முழுவதும் பிடுங்க முயற்சி செய்தனர். நொந்துபோன ஹரிசிங் அப்போது நேருவிடம் ராணுவ உதவி கோரினார்.அப்போது இந்தியாவின் வியாபாரத்தை இழந்து பர்மாவில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி மவுண்ட் பேட்டன் ஆலோசனையின்பேரில் காஷ்மீர் இந்தியாவோடு இணைய வலியுறுத்தப்பட்டது. மகாராசன் வேறுவழியில்லாமல் தான் ஆண்ட பகுதிகளை 26.10.1947 அன்று இந்தியாவுக்கு கைமாற்றினான். அப்போதும் கூட துள்ளியமான எல்லைகளை வறையறுக்காமல் விட்டு விட்டார் நவ இந்தியச் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேரு.
இணைக்கப்பட்ட காஷ்மீர் ஒரு secular அரசின் மாநிலமாக இருந்தது.காஷ்மீர் பகுதிகளுக்கென்று சிறப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனாலும் பாகிஸ்தான் ஆக்ரமித்த பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியிலுள்ள முஸ்லீம் ஜனத்தொகையும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய முஸ்லீம் பிரதேசமாக மாறியது.1947 ல் இருந்தே அவர்களின் கனவெல்லாம் பகிஸ்தானோடு இணவதாகவே இருந்தது.எனவே மொழி,கலாச்சராம்,இனம் இவைகளின் அடிப்படையில் தாங்கள் பாகிஸ்தானுடனேயே இணைய விரும்புவதாக காஷ்மீர் மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வந்தார்கள். காஷ்மீர் முஸ்லீம்கள் எங்களோடு இருப்பதற்கே நாங்கள் ஆசைப்படுகிறோம் ஆனால் அவர்களின் விருப்பத்தை எதிர்க்கவும் மாட்டோ ம் என்னும் மழுப்பல் அறிக்கை விட்டார் நேரு.
பிரிட்டிஷ் காலத்திலிருந்தே உருவான இந்து முஸ்லீம் பிரிவினை.எண்பதுகளில் உருவான jklf இயக்கம்,ஆப்கன் தாலிபான்களின் ஆதிக்கம்,இந்தியவில் உருவான ராமஜன்ம பூமி விவகாரம் அதைத்தொடர்ந்து இடிக்கப்பட்ட
பபாபர் மசூதி என நிலைமை மேலும் மேலும் விரிசலடைந்து கொண்டே போனதேயொழிய ஒரு நிரந்தரத் தீர்வு
எட்டப்படவே இல்லை.காஷ்மிர் எல்லையில் 100000 ராணுவவீரர்களும்,100000 எல்லைக்காவல் படையினரும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு வருடத்திற்கு 300 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைப் பலியிடுகிறது.பனிப்பிரதேசத்தில் எல்லைக்காவலில் நிற்கும் ராணவ வீரனின் சம்பளம், சமதளத்தில் இருக்கும் வீரனை விட இரண்டு மடங்கு அதிகம்.அவர்களுக்கென உருவாக்கப்படும் ஆடை,உணவு,போக்குவரத்து ஆகியவை அம்பானி,அமிதாப்,மல்லையா,smகிருஷ்ணா,லட்சுமி மிட்டல் போன்றவர்களின் தரத்துக்கு இணையானது.அதற்காக இதுவரை ஆன செலவு 100000 கோடி என்று புள்ளிவிபரம் சொல்லுகிறது.
அந்தப்பணத்தில் சீனப்பெருஞ்சுவர் போலொரு அதிசயத்தை நிர்மானித்திருக்க முடியும்.வடக்கிலிருந்து தெற்காக ஒரு செயற்கை ஆறு உருவாக்கியிருக்க முடியும்.பெருகிவரும் லஞ்சத்தை தடுக்க உருப்படியாய் எதாவது செய்திருக்க முடியும்.வேலையின்மை,பசிக்கொடுமை,பட்டினிச்சாவு இவற்றையெல்லாம் மட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனாலும் நமக்கு வீம்புதான் முக்கியம். அப்படி இருந்தும் கிட்டத்தட்ட 10,15 கிலோமீட்டர் பகுதிக்குள் ஊடுறுவிய
பாகிஸ்தான் துருப்புக்களை தடுக்க முடிந்ததா?. பெரும் எண்ணிக்கையில் வீரர்களை இழந்த கார்கில் யுத்தம் நடந்ததுதான் மிச்சம்.இவை எல்லாம் எதற்காக பொலித்தகராறுக்காக மட்டுமே.கூடப்பிறந்த கிச்சா நாயக்கரும்,
கிட்ண நாயக்கரும் பத்துவருடம் கோர்ட்டுக்கு அலைந்து, வீம்புக்காக வீடுவாசல் இழந்து,நிம்மதியிழந்த கதைபோலத்தான் இந்தப்பொலித்தகராறு கதை.ஆனால் இது கொஞ்சம் பெரிய பொலி.
சர்வதேச அரசியல் மற்றும் வரலாற்று நோக்கர்கள் இது எப்போதோ முடிந்திருக்கவேண்டிய பிரச்சினை என்பதில் திடமாக இருக்கிறார்கள்.இந்தப்பிரச்சினையில் இரண்டு யுத்தங்கள் நடைபெற்றிருக்கிறது.1989 க்குப்பிறகு நிரந்தரமான பதட்டம் அங்கே குடிகொண்டிருக்கிறது.கட்டப் பஞ்சாயத்து நாட்டாமை ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு தீர்க்கமான முடிவைச்சொல்லாமல் தீயை அணைக்காமல் குளிர் காய்கிறது.அமெரிக்காவின் கைப்பாவையாக இருக்கும் ஐநா சபை தலையிட்டு இதுவரை ஒரு குழாயடிச்சண்டை கூட தீர்த்துவைக்கபடவில்லை.அப்படிச் சண்டையில்லாத பகுதியில் அமெரிக்காவே குசும்பு இழுத்து சண்டைபோடும்.இது வரை 120 மேற்பட்ட படையெடுப்புகளை நிகழ்த்திய போர்வெறி அமெரிக்க அரசின் ரத்தில் ஓடுகிறது.அதை விரல் நீட்டி குற்றம் சொல்லமுடியாத முதுகெலும்பில்லாத அரசுகளில் ஒன்றாக நீடிக்கிறது இந்தியா.
நமக்கு எல்லாமே அமெரிக்காதானே?. அதே பாணி அனுகுமுறைதான்.ஒரு பகுதியில் பதட்டம் உருவாவதற்கான எல்லாச்சூழலையும் உருவாக்கி விட்டு,பதட்டம் வந்த பின் தீவிரவாதப் பகுதியாக அறிவிப்பது.அப்புறம் ராணுவத்தையும் சண்டையையும் கொண்டாடுகிற அமெரிக்க மனோபவம் சன்னஞ்சன்னமாய் ரத்ததில் ஊறிவிட்டது.கேள்விகளற்ற மூடப்பற்றும்,சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட திருவுருவாக்கலும் ராணுவத்தின் மீது செயற்கையாய் வரையப்படுகிற மாயை அவர்களைப்போலவே. ரெட்டைக் கோபுரத்தை தகர்த்த போது அமெரிக்காவை விட இந்தியா தான் பெரும் குலுங்கு குலுங்கியது.அமெரிக்காவின் சோகம் நமது சோகம்.அதன்பிறகு எடுக்கிற சினிமா,பேசுகிற சகஜ வார்த்தைகளில் ஓசாமாபின் லேடன் எதிரியாக்கப்பட்டுவிட்டான்.அமெரிக்காவுக்கு எதிரி நமக்கு எதிரி.
பனையிலிருந்து விழுந்த அப்பனுக்கு எலும்பு கூடிவர வீட்டில் ஆட்டுக்கால் சூப்பு செஞ்சாளாம் அம்மெக்காரி.
அதை எடுத்துட்டுவந்து சேக்காளிகிட்ட பெருமை பீத்தினானாம். சேக்காளி சொன்னானாம் 'எங்கப்பனுக்கும் ஒரு நா பனையிலிருந்து உழுந்து கால் ஒடிஞ்சு போகும், அப்போ நானும் குடிப்பெண்டா ஆட்டுக்கால் சூப்பு'
என்று .அதே தான் நமக்கும். அங்கே 9/11 இங்கே 26/11.தீவிரவாதத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் இப்போது அமெரிக்காவின் பிரிக்கமுடியாத கூட்டாக இந்தியா.கடந்த பத்துவருடங்களாக வந்த தலைப்புச் செய்திகளை கவனித்தால் ஒன்று புரியும்.இந்த ஊடகங்கள் ஒரு திருவிழாவையும் நிம்மதியாகக் கொண்டாட விடவில்லை.
சுதந்திர தினம்,குடியரசு தினம்,தீபாவளி,விநாயகர் சதுர்த்தி,காமன்வெல்த் போட்டி எல்லாவற்றிற்கும் முன்னாடி
தீவிரவாதிகளின் ஊடுறுவல் என்கிற செய்தி வந்தே தீரும். ஒரு திட்டமிட்ட வெறுப்பை குடிமக்களின் ஆழ்மனதில்
கொண்டுபோய் வைத்துவிட்டு அதை அப்போதைக்கப்போது நினைவுபடுத்துகிற இழிவான தந்திரம் இது.
ஆதலால்தான் அந்தப்பகுதி மக்களின் உயிர்,உடமைகள்,மானம்,கற்பு,நிம்மதி எல்லாமே நமக்கு இழிவானதகத்தெரிகிறது.காஷ்மீர் தீவிரவாதப்பகுதியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தினம் தினம் பிடித்துக்கொண்டு போகப்படு
அப்பாவி பொது ஆண்கள் திரும்புவதே இல்லை.காணாமல் போன ஜனத்தொகை லட்சத்தை நெருங்குகிறது.
அவர்கள் விட்டுச்சென்ற வீடு,மனைவி,மக்கள், கனவு எல்லாம் சின்னாபின்னமாகித் தெருவில் அலைகிறது.
அப்படி அலைகிற பெண்கள் தாங்கள் விதவையா சுமங்கலியா என்ற குழப்பத்திலேயே ஒவ்வொரு இரவையும்
கடத்துகிறார்கள்.திடீரென்று ராணுவ முகாமிலிருந்து ஒரு அழைப்பு வரும்.'இங்கே ஒருவவர் இருக்கிறார், உடனே வந்து அது உங்கள் கணவரா என்று பாருங்கள்' என்கிற தெய்வ வார்த்தையோடு. கட்டாயம் அது எல்லாமே இரவு நேரங்களாக அமைந்துவிடும்.சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து திரும்புமா மான்குட்டி.திரும்புகிற பெண்களிடம் என்ன கதை இருக்கும் ?.இப்படிச் சொல்லமுடியாத கதைகளோடு இரண்டு லட்சம் பெண்கள் ஒரு அமைப்பாகிவிட்டார்கள்.( the waiting,afspa 1958 ஆவணப்படங்கள் )
அது தவிர்க்க முடியாத எதிர் விதியல்லவா ?.
குஞ்சுகளைக் களவாட வரும் பருந்தை
எதிர்த்து பிடறி சிலிர்க்கும் கோழிகள்.
தாக்குண்டால் புளுக்கள் கூடத்
தரைவிட்டுத் துள்ளி விழும்.
அப்படி நியூட்டனின் விதியையும், இந்தக் கவிதையும் புறந்தள்ளிவிட முடியாது.
எனக்கானலும், எனக்குப்பிடிக்காத ஒருவனுக்கானாலும் வலி வலிதான்.
அதைத் தீர்க்கிற மருந்து ,கட்டாயம் துப்பாக்கிகளில் இல்லை.
ஒரு இந்தியனிடம் கேட்டால்
காஷ்மீர் எனக்குசொந்தம் என்பான்
ஒரு பாகிஸ்தானியும் கூட அப்படியே சொல்வான்
ஒரு கஷ்மீரியிடம் கேட்டால் விடுதலை கேட்பான்
அந்தப் பனிப்பிரதேசத்திடம் கேளுங்கள்
அந்த மனிதாபிமனியிடம் கேளுங்கள்.
3 comments:
காஷ்மிரின் முஸ்லீம் விவசாயிகள் அங்கிருந்த நிலப்ப்ர்புத்துவக் கொடுமையை எதிர்த்து பொராடினார்கள்.அவர்களுக்கு ஆதரவளித்து தலைமைதாங்கியவர்களில் ஒருவர் ஷேக அப்துல்லாவும் ஒருவர்.அவருக்கு ஆதரவாக நேரு இருந்தார்.அதனால் நேரு காஷ்மீருக்குள் நுழைய மன்னர் தடைவிதித்தார்.இந்தியா சுதந்திர மடைவதற்கு முந்தயகாஷ்மிரின் வரலாறு மதநல்லிணக்கத்தின் உதாரணமாகும் அன்றய சொவியத்தையும்,வளர்ந்துவரும் சீனாவையும் அதன் செல்வாக்கு இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தமல் இருக்க அமெரிக்க,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்கள் செய்த சதிதான் காஷ்மீர்பிரச்சினை.ஆங்கில அதிகாரிகளிந்தூண்டுத்லின் காரணமாக கஷ்மீரின் ஒரு பகுதியை பிடித்துவத்துக் கொண்டது பாகிஸ்தான்.அப்பொது சினா சுதந்திரம் பெறவில்லை என்பது கூறிபிடத்தக்கது.
வரலாறு மாறிக்கோண்டுதான் இருக்கும்.முந்தய வரலாற்றின் பின்புலத்தில் இன்றய வரலாற்றை பார்ப்ப்து சரியாக இருக்கும்.---காஷ்யபன்
இதுவரை இழந்தது இழப்பது வேற யாரோன்னு மக்கள் நினைக்கிறாங்க. அது நாமே தான்னு உணரும் போது சுமுகமாக முடிசிப்பாங்கனு தான் எதிர் பார்க்கமுடியும். இது கஷ்மீர் மக்களுக்கும் நம்ம மக்களுக்கும் பொருந்தும். நாம எல்லோருன் ஒண்ணுதான்னு உணருங்கையா.
காஷ்மீர் பற்றிய எழுத்து வரவேற்க தக்கது. ஆனால் தாங்கள் இந்து என்னும் அடிப்படை வாதத்தை வைத்து எழுதிய கட்டுரையாகவே இதை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. எமது முன்னோரும் பாகிஸ்தானில் இருந்து விரட்டப்பட்ட சிறுபான்மையினர் தான், என்றாலும் காஷ்மீர் இந்து மன்னரால் ஆளப்பட்ட்ட முஸ்லிம் பிரதேசமே, அங்கிருந்த பண்டித் இந்துக்களும், சீக்கியர்கள் கூட வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதனை ஆணித்தரமாக கூறிகொள்கிறேன். இன்னொன்று இன்றைய உலகமயம்மக்களுக்கும், ஒசாமா பின் லேடனுக்கும் காஷ்மீர் மக்களின் அடிப்படை பிரச்சனைக்கும் முடிச்சு போட வேண்டாம், இதைத் தான் இந்திய அரசும் செய்து கொண்டு இருக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் அங்கமாக இருந்தாலும், அது சுய நிர்ணய உரிமை பெற்ற நாடு, அது இந்தியாவின் பெடரல் உறுப்பாக தான் உள்ளது. காஷ்மீர் மக்களின் தலைவிதியை அவர்கள் தான் நிர்ணயிக்க வேண்டும், ஆனால் அது இந்தியாவின் எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுத்தால், ஈராக்கில் அமெரிக்க நுழைந்ததைப் போன்று இந்தியா நுழைவதில் ஐயமில்லை. .. மற்றபடி தங்களின் பதிவு நன்றாக உள்ளது.
Post a Comment