Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

23.7.11

பராக்குப் பார்த்தல் - இன்றைய மணல்கயிறு, நாளைய வரலாறு.


அவர் அன்று வழக்கத்துக்கு மாறாகவே பணப் பரிவர்த்தனையை முடித்திருந்தார்.கிளையில் எல்லோருக்கும் ஆச்சர்யம். நான்கு மணிவரைதான் பணப் பரிவர்த்தனை என்றாலும் நாலரை மணிவரை வாடிக்கையாளர்களுக்காக சேவை செய்கிற அவர் அன்று சற்று முன்னதாகவே முடித்துவிட்டார்.காரணம் அவரது உறவுப்பெண் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டதால் துக்க வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று சொன்னார். கிளைமொத்தமும் அந்த மரணத்தை அறியவும் அதுகுறித்து விவாதிக்கவும் தொடங்கியது.கணவன் குடிகாரனாம். எவ்வளவோ சொல்லியும் அவன் தனது குடிப்பழக்கத்தை விடவில்லையாம். வெறுத்துப்போன மனைவி.தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீப்பற்றவைத்துக் கொண்டாளாம்.

அதைக்கேட்ட இளம் பெண் ஊழியர் ஒருவர் இப்படிச்சொன்னார்.ஓவராக்குடிச்சுட்டு வந்ததுக்கு அவம்மேல இல்ல மண்ணெண்னெய் ஊத்தி தீ வச்சிருக்கணும்.நான் சொல்லவந்தது அதுவல்ல. மறுநாள் காலை செய்தித்தாளில் ஒரு செய்தியைப்பார்த்தேன். சமைத்தபோது கவனக்குறைவாக இருந்ததால் தீப்பிடித்து இளம் பெண் சாவு என்றிருந்தது. என்னடா இது தொடர்ந்து பெண்களே தீயினால் இறந்து போகிறார்களே என்று வருத்தத்தோடு விளாவாரியாகப் படித்தேன். ஊர் பெயர் சம்பவம் தேதி எல்லாம் முதல்நாள் கேள்விப்பட்ட மரணச்செய்தி பற்றியதாக இருந்தது.காரணம் மட்டும் கயிறு திரிக்கப்பட்டு இருந்தது.அதற்குப் பெயர்தான் நடு நிலை நாளேடு.

இப்படித்தான் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் குறித்த செய்தியும். ஆளுங்கட்சி கரைவேட்டி கட்டியிருந்த அவரோடு பேச நேர்ந்தது.நகை அடகு வைக்க வந்த அவர்.அங்கிருந்து போவதற்குள் ஆறுமுறை தனது மகன் கடலியல் தொழில் நுட்பத்துக்கான பட்டப்படிப்பு படிப்பதாகச்சொன்னார்.சொல்லுகிற ஒவ்வொருமுறையும் அவரது கறுத்த முகம் பூரித்து பிரகாசிப்பதை பார்க்கமுடிந்தது. வெறும் பூரிப்பு மட்டுமல்ல பரம்பரை பரம்பரையாக கடல் தொழில்செய்கிற அவரது தொழிலின் மிக மேன்மையான இடத்துக்கு மகனை அனுப்பிவைக்கிற சந்தோஷம் அதில் பளிச்சிட்டது.

அடிக்கடி சிங்களக் கடற்படை நமது மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுகிறதே.நிரந்தரமாக நாம் ஏதும் செய்ய்ய முடியாதா ?.நமக்கும் கடலோரக் காவல்படை இருக்கிறதல்லவா என்ன தான் செய்கிறார்கள் என்று கேட்டேன்.சுற்று முற்றும் பார்த்துவிட்டு. சார் அவுங்க கடல் எல்லைக்குள் பத்து பதினைந்து கிலோமீட்டர் போய் நாம மீன்பிடிச்சா சும்மாவா விடுவான்.அதுவும் ஒரு நாடுதானே என்று சொன்னார்.அப்போ செய்தித்தாளில் வருகிறதெல்லாம். சார் பச்சையாய்ச்சொல்லப்போனால் அவுங்க வீடு புகுந்து நாம களாவாங்குறோம்.இதையெப்படி பேப்பர்ல போடுவான். இல்லீங்க கடல்ல எப்படி எல்லையைக் கணக்குப் பார்க்கமுடியும் அங்கென்ன சுவரா கட்டமுடியும் கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கத்தானே செய்யும் என்றேன். .கடகடவெனச் சிரித்துக் கொண்டு  ஆயிரமாயிரம் வருஷமா கடலுக்குள்ள அலையிறோம் கடலப்பத்தி இஞ்ச் இஞ்சா எங்களுக்குத்தெரியும் சார் என்று சொன்னார்.

இப்படித்தான் ரஜினிகாந்தின் மருத்துவமும், சமச்சீர் கல்வி குறித்த செய்திக் குப்பைகளையும் நாம் வாங்கி அட்சர சுத்தமாகப் படிக்கிறோம். இன்றைய செய்தி நாளைய வரலாறாம்.

20.6.11

சிறுநீரகத்தைப் பறிகொடுத்த ஆந்திரப் பெண்களும், வாழ்வைப் பறிகொடுத்த உபி பெண்களும்

                                             ( நன்றி: டெக்கான் கிரானிக்கல்)


இரண்டு நாட்களுக்கும் மேலாக ஏதும் யோசிக்கத் தோன்றாமலே இருண்டு கிடக்கிறது சிந்தனை.வடிவேலுவின் நகைச்சுவையின் ஊடாகக்கூட அவளைப்பற்றியதான விசனம் தொற்றிக் கொண்டுவிடுகிறது.இது என்ன தேசம் இது எதனாலாஅன தேசம் என்கிற சிந்தனை வந்து வந்து குழப்புகிறது.ஆந்திரமாநிலம்  பகுதியில் தங்கள் வறுமையையும் கடன் சுமையையும் விரட்ட சொந்த சிறுநீரகத்தைப் பிடுங்கிக்கொடுத்த பெண்களும். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தலித் பெண் முதல்வராக இருந்தும் கூட தங்களின் கற்பைக்காப்பாற்றிக் கொள்ள த்ராணியற்றுச் செத்துப்போன அந்த இரண்டுபேரும் வந்து வந்து அலைக்கழிக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் உள்ள பெண்கள் தங்களின் கடனைத் திருப்பிக் கொடுக்க சிறுநீரகத்தைப் பிடுங்கிக் கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கு 9000 ரூபாய் தருவதாகச் சொல்லி நான்கு நாட்கள் ஆய்வுக்கூடத்தில் அடைத்துவைத்து திருப்பி அனுப்பியிருக்கிறது ஒரு ஆங்கில மருந்துக் கம்பெனி. ஆனால் இதே தேசத்தில் இதே காலத்தில் லஞ்சமாகப் பரிமாறப்பட்ட தொகையின் பூஜ்ஜியங்கள் எழுதுகிற தாளைவிட்டுத் தாண்டி வெளியே போகிறது.நாட்டை விட்டு வெளியில் கிடக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பைக் கேட்டால் தலை சுற்றுகிறது.அந்தக் கறுப்புப் பணத்தை காப்பற்றச் சொல்லிப் போராடும் சன்னியாசியின் சொத்து மதிப்பைக் கேட்டால் பயமாக இருக்கிறது. சாய்பாபவின் அறைக்குள் கிடந்த ரொக்கப்பணமும் நகையும் சாமியார்கள் மேலிருக்கிற கொஞ்சநஞ்ச அனுதாபங்களையும் துடைத்தெறிகிறது. அதை அலுங்காமல் குலுங்காமல் எடுத்துக்கொண்டுபோய் சாய்பாபா அறக்கட்டளைக் கணக்கில் சேர்த்த அரசின் பரிவை நினைத்தால் குமட்டிக்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அவலங்களில் நமது தேசத்திற்கான அடையாளம் எது என்கிற கேள்வி வந்து பதிலற்றுத் திரும்புகிறது.

கடந்த ஒரு வாரத்தில் உத்திரப்பிரதேசத்தில் ஆறு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.அதில் இரண்டு பெண்கள் வெறும் பதினாறு பதினைந்தே வயதான தலித் சிறுமிகள்.கடைசியாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபெண் ( இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மணிநேரத்து ஒரு வன்கொடுமையோடு பாலியல்பலாத்காரம் நடைபெறுவதாக அரசப்புள்ளிவிவரமே ஒத்துக் கொள்கிறது. எனவே அது கடைசியாக நடந்த கொடூரமாக இருக்காது ) ஐந்து பேர்களால் தூக்கிக்கொண்டுபோய் கொடுமைப் படுத்தப் பட்டிருக்கிறாள்.தான் கட்டிய மனைவியின் சம்மதமில்லாமல் கூடுவதையே குடும்ப வன்முறை என்று கணக்கிலெடுத்துக்கொள்கிற இந்த யுகத்தில் ஒரு பெண்ணை ஐந்துபேர் தூக்கிக்கொண்டு போக முடிந்தது எந்த தைர்யத்தில்.ஒரே ஒரு தைர்யம் ஆண், அதுவும் செருக்குத் திமிர்படைத்த சாதிய ஆதிக்கம் மண்டிக்கிடக்கும் ஆண் என்கிற தைர்யம்.

காதல் காமம் சிருங்காரம் ஆலிங்கணம் உறவு உடலுறவு இனவிருத்தி ஆசை இச்சை எனப்பட்டியலிட்டு அதைப்பேச பாட எழுத தீராது
காலங்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.அதைப்பற்றிப்பேசும் போதும் கேட்கும்போதும் நரம்புகளில் இனிப்பு ரத்தம் ஓடுகிறது. குருவிகள் இலைமறைவில் உட்கார்ந்து கொண்டு அலகுரசிக்கொள்ளும் போது பார்க்கிற நமக்கு கிலேசம் உண்டகிறது.அப்படிப்பட்ட ஒன்றை வல்லூட்டியமாக பறிக்கிற சிந்தனை எங்கிருந்து கிளம்பியிருக்க முடியும்.ஆதிக்கம்,ஆதிக்கமேதான்.

ஆநிறைகவர்தலோடு பெண்களையும் கவர்ந்து கொண்டு போவதே வீரம் என்றிருந்த கற்காலம் தொடங்கி இந்தக்கணினியுகம் வரையில் நலிந்த பெண்களுக்கு பாலியல் பாதுகாப்பு என்பதும் கூட கைக்கெட்டாத ஆடம்பரப் பொருளாகவே  இருக்கிறது. எனக்குத்தெரிந்த வரையில் மிருகங்கள் கூட கூட்டுக் கற்பழிப்பிலும் வன்புணர்ச்சியிலும் ஈடுபடுவதில்லை.தவிரவும் அவைகள் இன்னொரு உயிரை பசிக்குத்தவிர வேறு எதற்காகவும் கொல்லுவதில்லை.கயர்லாஞ்சி கூட்டுப் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சுரேகா போட்மாங்கே அவளது மகள் ப்ரியங்கா போட்மாங்கே இந்த இரண்டு பெயர்கள் இந்தியாவின் கவனத்தைப்பெறாமல் போனது.மராட்டிய மாநிலத்திலும் உபியிலும் மட்டுமே அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன.அது தவிர்த்த வேறெந்த மாநிலத்திலும் அப்படிச் சம்பவம் பற்றிச் சொல்லப்படவே இல்லை.அதற்கு முந்தைய நிதாரி தொடர் கொலைகளில் கொல்லப்பட்ட பதினைந்து பெண்குழந்தைகள் பற்றிய செய்தியும் பெரிதாக ஊடகங்களின் பரபரப்பை ஈர்க்கமுடியவில்லை. காரணம் ரொம்ப ரொம்பப் பழமையானது.பாதிக்கப்பட்ட உயிர்கள் எல்லாமே விளிம்பு நிலை மக்களின் உயிர்கள்.

நடந்தவைகளைக் குற்றம் என்று ஒப்புக்கொள்ளவே இந்த மேல்ஜாதி இந்தியாவுக்கு மனம் வரவில்லை.மாறாக நடந்த கொலைகளுக்கு புதிய விதிகள் எழுதப்படுகிறது அவை மநுவின் ஆங்காரம் அடங்கிய தடித்த பக்கங்களில் பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்படுகின்றன.
கயர்லாஞ்சி சம்பவத்தைக் கூட்டுப்பாலியல் பலாத்காரம், மற்றும் வன்கொடுமை எனச்சொல்லுவதற்குப் பதிலாக நடத்தை கெட்ட குடும்பத்துக்கு பஞ்சாயத்து கொடுத்த தண்டனை என்று ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டது.அதே போல உயர்சாதிப் பெண்ணைக்  கல்யாணம் செய்தவன் படுகொலை செய்யப்பட்டான் அது கருணைக்கொலை என்கிற சொல்லால் பூசிமெழுகப்பட்டது.

ஆக எதவதொரு வழியில் எங்காவது தவறு நடந்தால் அதற்குப் பின்னாடி ஆதிக்கம் தனது நாக்கைத் துருத்திக்கொண்டுதான் நியாயம் பேசுகிறது. ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஏதாவதுநேர்ந்தால் உடனே ஆகாயவிமானத்தில் ஏறி அங்குபோய் இறங்கத்தயாராய் இருக்கிறது வெளியுறவுத்துறை. பூஜா பேடியை தரக்குறைவாகப் பேசியதற்காக ஒட்டுமொத்த ஊடகமும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. இப்படியாகத் தராசின் ஒருபக்கம்தான் எப்போதும் இழுத்துக்கொண்டே இருக்கிறது.

மீதமுள்ள இன்னொரு தட்டில் கணம் சேர்க்கும் நியாயங்கள் கிடைக்கவே கிடைக்காதோ என்கிற சலிப்பும் இது யாருடைய தேசம் என்கிற கேள்வியும் துளிர்த்துக்கொண்டே இருக்கிறது. அவ்வப்போது எழும் சின்னசின்னக் கண்டனக் குரல்களில் இந்த கேள்விகள் கருகிப்போக மீண்டும் மீண்டும் எதாவது நிகழும் என்கிற ஒரு தேடல் ஒரு கனவு நீண்டு கொண்டே போகிறது.
ஒரு நிரந்தரமான நம்பிக்கை,எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்க நெடிய பயணம் தேவை.

அதுவரை அதுவரை கொண்டு வாருங்கள்  பாரதி கேட்ட எரிதழலையும் காந்திகேட்ட  பற்களும் நகங்களும், பாட்டாளிவர்க்கம் கேட்ட தெருவில் கிடக்கும் கற்களும்.எனதருமைத் தோழிகளே  இவையெல்லாம் எங்கே போயின ?


5.6.11

திடீர் ரசம்,திடீர் சாம்பார், மற்றும் திடீர் புரட்சியாளர் ராம்தேவ்.


ஜீவ சமாதி யடைந்தார்,தண்ணீரில் மிதக்கிறார்,குருடர்களைப்பார்க்க வைக்கிறார்,வாயிலிருந்து லிங்கத்தை எடுக்கிறார்,கிரிக்கெட்டில் ஜெயிக்க யாகம் நடத்துகிறார்,ஓடிப்போனார்,இரட்டை ஆயுள் தனடனை கொடுக்கப்பட்டது,ரஞ்சிதாவுடன் சல்லாபமாக இருந்தார் என்றுதான் இது வரை சாமியார்களைப்பற்றிச் செய்திகள் வந்துகொண்டிருந்தது.சமீபகாலமாக  அவர்களுக்கு புது அவதாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது அரசியல் அவதாரம்.அதுவும் பரபரப்பான அரசியல் அவதாரம்.தங்களின் ஞானதிருஷ்டியால் நடந்தவற்ரையும் நடக்க இருப்ப வற்றையும் அறியமுடிகிற இவர்களின் கண்ணுக்கு இப்பொழுதுதான் இந்த லஞ்சம் கறுப்புப்பணம் தெரியவந்திருக்கிறது.இவ்வளவு நாட்கள் அந்த ஞானதிருஷ்டி என்கிற ரேடாரில் லஞ்சமும் ஊழலும் கறுப்புப்பணமும்  தட்டுப்படாமல் போனது எப்படி.அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டது எப்படி.

நேற்று கரைவேஷ்டி கட்டிய அண்ணாதிமுக கவுன்சிலரலிருந்து தலைமுறை தலைமுறையாய் கரைவேஷ்டி கட்டாமல் கொள்ளையடிக்கிற முதலாளிகள் வரை தாங்கள் அடித்த பணத்தில் முதல் பங்கை உண்டியலில்தான் போடுகிறார்கள்.அன்னதானம் போட,கும்பாபிஷேகம் நடத்த என கோயில்களுக்கு கொடுக்கிற அன்பளிப்புகள் தங்கள் கறைகளை கழுவிக்கொள்வதோடு வருமாண வரியிலிருந்தும் விலக்குப் பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இப்படியான ஆன்மீக செயல்பாடுகளின் நிஜமான நிதியாதாரம் முறைகேடாக சம்பாதித்த பணம்தான் என்பதை தெய்வமே அறியும்.அதனால் தான் அந்த ஏரியாவுக்குள் இன்று வரை நுழையாமல்  சமியார்களும் பீடங்களும் நிஷ்டையில் இருந்தார்கள்.  இப்போது தங்களின் மௌனத்தைக் கலைத்துவிட்டு இந்த தவறுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது வினோதமான விஷயமக இருக்கிறது.சுமார் பதினெட்டுக்கோடி செலவில் முற்றிலும் குழு குழு வசதி செய்யப்பட்ட பந்தலில் இருந்துகொண்டு  அவர்கள் படம் காட்டுவதைப் படம் பிடிக்க வெறிகொண்டலைகிறது அவர்களின் ஊடகங்கள்.

ஒரு யோகா சொல்லிக்கொடுக்கிற சாமியார் எப்படி பதினெட்டுக்கோடி செலவழித்து உண்ணாவிரதம் இருக்க முடியும். ஒரு ஆன்மீக நிலையம் எதற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் உயர்தொழில்நுட்ப மருத்துவமனைகள் நடத்துகிறது.கருணையும், பரிவும்,மண்ணிப்பும் நிறைந்த சாத்வீகச்சாமியார்கள் ஏன் மசூதியை இடிக்கவேண்டும் என்கிற மனசாட்சிப்படியான கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. ஒரு மிகப்பெரிய ஊழலைக்கண்டுபிடித்து அதற்குத்தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அன்னா ஹசாரேவும்,ஆன்மீக ராம்தேவும் விஸ்வரூபமாகக்காட்சிப் படுத்தப்படுவது எதற்காக,யாருக்காக ?.

தங்களின் ஒருநாள் கூலியையும் இழந்துவிட்டு கைக்காசும் செலவழித்து வட்டாட்சியர் அலுவலகங்களின் முன்னாடி உட்கார்ந்து கோஷமிடும் லட்சோபலட்சம் மக்களின் கோரிக்கைகளை உதாசினமாகக் கடந்து போகிறது ஊடகங்கள் . இங்கொன்றும் அங்கொன்றுமாக தினம் தினம் இந்தியா முழுவதும் நடக்கிற போராட்டங்கள்.ஊழலின் ஊற்றுக்கண்ணான நிறுவணங்களில் நேரடியாகத் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துகொண்டிருக்கிறது ஒரு தன்னலமில்லாத கூட்டம்.அநீதிகளுக்கு எதிராகக் களத்தில் இறங்கி அதனால் இன்னல்களை சம்பாதித்து இறுதியில் தங்கள் உயிரையும் பலிகொடுத்த தியாகிகள் ரத்தினசாமி,லீலாவதி போன்ற வர்களின் மரணம் எதோ முன்பகை காரணமாக நடந்தது போல ஒரு வரிச்செய்தியாய்ச் சித்தரித்தது ஊடகங்கள்.

இப்போது களத்தில் இருக்கிற எந்த அரசியல் கட்சியும் எந்த அரசியல் வாதியும் சுத்தமானவர்கள் இல்லை என்பது போலொரு தோற்றத்தை உண்டு பண்ணவே திட்டமிட்டு இந்த திசை திருப்பல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.   இந்த உண்ணா விரதப் போராட்டத்துக்கான உடனடிப்பலன்கள் ஏதும் சர்வநிச்சயமாக நிகழ்ந்து விடப் போவதில்லை.ஆனால் திட்டமிட்டபடி பலன்கள்  அரசியல் அனுகூலமாக முடியும்.

26.5.11

சமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கோரிக்கை



சமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.கங்காதரன், பொதுச் செயலா ளர் எஸ்.துரைகண்ணு வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

கடந்த ஆண்டு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பு களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டு இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் படுவதாக இருந்த சமச்சீர் கல்வி முறையை பாடத்திட் டங்களில் தோற்கடிக்கப் பட்ட திமுக அரசாங்கம் செய்த சில தவறுகளை கார ணம் காட்டி நிறுத்தி வைப் பதாக தமிழக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

பணக்கார தமிழகம், ஏழைத் தமிழகம் என நமது மாநிலம் இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. அரசாங் கத்தின் ஒவ்வொரு அசைவையும் பணக்காரத் தமிழகம் தன் பால் சாதகமாக்கிக் கொள்ள அயராது முயல்கிறது. அதன் காரணமாகவே அரசின் பொறுப்புகளில் இருந்த கல்வி பணக்காரர்கள் புகுந்து விளையாடும் கள்ளச்சந்தையின் சரக்காக மாறிவிட்டிருக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்த முடி யாத அரசாங்கமே தமிழக அரசாங்கத்தையே மாற்றும் அளவு கல்வி வணிகர்கள் தலைக்கனம் பிடித்து அலை கிறார்கள். தமிழகத்தின் புதிய அரசாங்கம் எடுத் திருக்கிற முடிவை கல்வி வணிகர்கள் மட்டுமே வர வேற்றிருக்கிறார்கள் என் பதை தமிழக அரசாங்கம் ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனை வரும் ஒரே மாதிரியான கல்வி முறையின் கீழ் பயில வேண்டும் என்ற நோக்கத் தோடு கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அறி முகமான ஒரு திட்டத்தை சொத்தை காரணங்களைக் காட்டி அவசரகதியில் முடக்கிப்போட முயல்வது தமிழக அரசாங்கத்தை பணக் கார தமிழகத்தின் பக்கம் மட்டுமே தள்ளிவிடும்.

ஏழைகளுக்கு இலவச அரிசி; பணக்காரர்களுக்கு தரமான கல்வி வழங்குகிற முரண்பாடான அரசாங்க மாகத் தோற்றமளிப்பதில் இருந்து விடுபட்டு உண்மையான மக்கள்நல அரசாங்கமாகத் திகழ்ந்திட பாடத் திட்டத்தில் உள்ள சர்ச்சைக் குரிய பகுதிகளை நீக்கி விட்டு இந்த ஆண்டு முதலே சமச்சீர் கல்வித்திட்டத்தை தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தீக்கதிர்-  நாளிதழ்


கொள்ளிவைக்கப் பிள்ளையில்ல 
குடிச்ச கஞ்சி கூட்டுலசேரல
ஊசிமேல தவமிருந்து 
ஒத்தப்பிள்ள பெத்தானாம்
பெத்த பிள்ளைக்கு பேச்சு வராம 
ஊர் ஊரா அலைஞ்சானாம்
போகாதா கோயிலில்ல 
கும்பிடாதசாமியில்ல
ஒரு நாத்தேவையில 
திருவாய் மலர்ந்தானாம் 
கொள்ளியோட பெறந்த பிள்ள
ஒன்னக்கொல்லாம விடமாட்டேன்னு
விக்குனானுமில்ல 
வெறச்சானுமில்ல தகப்பன்

6.5.11

பிரிவின் அணையுடைக்கும் ஒரு துளி உப்பு நீர்

ஒரு மாசிப் பின்னிறவில்
பாட்டியின் சேலைக்ககதப்பில்
கலககலக்கும் கோலிக்குண்டு கனவில்
துயிழ்ந்தவனை எழுப்ப ஏழவில்லை
வறுமைக்கும் பிரியத்துக்குமான இழுபறியில்.

ஊர் கடந்து தட்டப்பாறைக்குப் போன
அம்மா அப்பாவுக்கு, எதிர்த்து தட்டுப்பட்ட
ஏழு வயதுச் சிறார்களைப்பார்த்த பொழுதெலாம்
தொண்டைக்குழி அடைத்திருக்கும்.

சொல்லில் அடங்காதவற்றை மௌனத்தில்,
மௌனத்திலும் அடங்காதவற்றை நினைவுகளிலும்
நினைவுகளில் அடங்காதவற்றை ஒருதுளி உப்புநீர்
கட்டாயம் உடைத்திருக்கும்.


26.4.11

எண்டோசல்பான்,மோடி,கல்மாடி, க்ளோபல் சல்பான் மற்றும் என் டி டிவி


எண்பத்தாறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.இந்த எண்டோ
சல்பானைத்தான் எதோ புண்ணிய தீர்த்தம் மாதிரி இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவணம் இந்த நிமிடம் வரை விநியோகிக்கிறது சிபாரிசு செய்கிறது. ஆனால் அரசுக்குச் சொந்தமான காசர் கோட் முந்திரி வயல்களுக்கு வான்வழியே தூவப்
படும் முறை இன்னும் அமலில் இருக்கிறது.தெளிக்கப்படும் எண்டோ
சல்பானின் வீர்யநச்சுத்தன்மையால் காசர்கோட் தொடங்கி அதன் சுற்று வட்டாரம் முழுக்க குழந்தைகள் பாதிக்கப் படுகிறார்கள். அங்குள்ள மருத்துவ
மனைக்கு வரும் ஏழைகளில் பெரும்பாலானோர் எண்டோசல்பானால் பதிக்கப்
பட்டவர்களாக இருக்கிறார்கள்.

மன்மோகன் வகையறாக்கள் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.இதைவிடக்  கோடிமடங்கு நச்சுத்தன்மை வாய்ந்த உலகமயம்,தாரளமயம் ஆகியவற்றைச் சகித்துக்கொண்ட உங்களுக்கு இதைச் சகித்துக்கொள்ள முடியாதா என்று ஏளனக்கேள்வி கேட்கிறார்கள். ஆகையினாலே மத்திய அரசு சி எம் ஆர் ஐ க்கு பரிசோதனைக்கு அனுப்பி அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நாடு முழுக்க தடைசெய்வது பற்றி யோசிக்கமுடியும் என்று இழுத்தடிக்கிறது. ஏற்கனவே கோக்கொகோலாவில் உள்ள நச்சுத்தண்மை கண்டறியும் விவகார த்தில் இந்திய அரசு நடந்து கொண்டதை நாடறியும். காரணம் அமெரிக் காவை எதிர்த்து ஒரு துரும்பைக்கூட கிள்ளிஎறியமுடியாத நிலைமையில் இருக்கிறது இந்திய வல்லரசு. இதை எதிர்த்தும் நாடு முழுவதும் எண்டோசல்பானை தடை செய்யக்கோரியும் மத்திய  அரசை வலியுறுத்தி கேரளம் போராட்டத்தில் இறங்கியிருக்கிறது.

குஜராத் முதலமைச்சர் மோடியின் மீது கவிழ்ந்திருக்கும் ரத்தவாடையை மீண்டும் உலகுக்குச்சொலியிருக்கிறார் சஞ்சய் பட் என்கிற போலீஸ் உயர் அதிகாரி. கோத்ரா சம்பவம் நடந்த பிறகு பெரும்பாண்மை மக்களின் கோபம் அதிகரித்திருந்ததாம்.அந்தக் கோபத்திற்கு வடிகாலாக முஸ்லீம் மக்கள் மீது வன்முறையை அனுமதிக்கலாம் என்று ஒரு அரசே முடிவெடுத் திருக்
கிறது. அதற்கான ஆதரங்களையும் தனது சாட்சியங்களையும்  வெளி உலகத்துக்குச் சொல்லியிருக்கிறார் சஞ்சய் பட். இந்தச் செய்தியை நீங்கள் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தாலும் எந்த ஊடகத்திலும் கண்டு பிடிக்க முடியாது. மூன்று முறை குஜராத் மக்கள் அமோக ஆதரவு அளித்து பதவியில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவரெப்படி கெட்டவராக இருக்கமுடியும் என ஒரு கணினி மென்பொருள் நுட்பவல்லுநர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்.

சொந்தக்கட்சியிலும் கூட்டணிக்கட்சிகளிலும் ஒவ்வொரு மந்திரியாய் கைதாகி உள்ளேபோய்க்கொண்டிருக்க உள்துறை மந்திரி கொல்கத்தாவில் தெருகோணலாக இருக்கிறதென்று கூப்பாடு போடுகிறார்.ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிற மம்தாபானர்ஜியை சினிமாவில் வரும் ரஜினிகாந்தின் அறிமுகம் போல அப்படிப்பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துகிறது என் டி டிவி. அனில் பாசு மன்னிப்புகேட்டார் என்று ஊடகங்கள் உரக்கக் கூச்சலிடுகின்றன. ஒரு மேடையில் கனிமொழியின் பார்வை ராசாவின் பக்கம் திரும்புவதை,ஒரு தற்செயலான அந்த சிறு கணத்தை திரும்பத்திரும்ப காண்பிக்கிறார்கள். ”.......மணியை நீ வைத்துக்கொள்”  என்கிற ஆணாதிக்க வக்கிரம் நிறைந்த கேலிக் குறுஞ்செய்திகளை அனுப்பி சந்தோசப்பட்டுக்கொள்கிறது  டிஜிட்டல் இந்தியா.

எதைச்சொல்வது, எதை மட்டறுப்பது, யாரை முன்னிறுத்துவது என்பதில் நடக்கும் காய்நகர்த்தலில் காலந்தோறும் ஜெயிக்கிறது இந்த முதலாலித்துவ ஊடகங்கள்.

கேப்பையில் நெய் வடிக்கிற இந்த ஊடகங்கள்.

21.2.11

பினாயக்சென் விவகாரம்:ஊடகம்,ஜனநாயகம்,வெகுமக்கள்


வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி முதல் தர மாணவர்.அதே மருத்துவ மனையின்  நிர்வாகத்துக்கும், ஏழை எளிய நோயாளிகளுக்கும் ஒருசேர பிடித்துப்போன மக்கள் மருத்துவர்.ஜவஹர்லால் நேரு பலகலைக் கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பொறுப்பு. இவை யாவும் அவரின் தாகத்தை அடக்க முடியவில்லை.அங்கிருந்து சட்டீஸ்கர்  டல்லி ரஜ்ஹாரா இரும்புச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் செய்யப்புறப்பட்டுப் போனார். அவருடன் அவரது மனைவி இலினாவும் பயணமானார். இயல்பிலேயே ஏழைகள் மீதும் விடுபட்ட ஜனங்கள் மீதும் அளவுகடந்த அக்கறை கொண்ட அவருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆதிவாசிகள் மேல் அக்கறை வந்ததில் வியப்பேதும் இல்லை.

ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு மேல் எளிய மக்களுக்கு மருத்துவம் செய்வதை மட்டுமே லட்சியமாகக் கொண்ட அவருக்கு சிஎம்சி மருத்துவமனை இம்மாதிரியான பணிகளுக்கு அளிக்கப்படும் ’பால்ஹாரிஸன்’ விருது தருகிறது. 1981 ல் சத்தீஸ்கரில் பிரபலாமான தொழிற்சங்கத் தலைவர் சங்கர்குஹா நியோகியுடன் நட்பு உண்டாகி இரும்புச் சுரங்கத் தொழிலாளத் தோழர்களுக்கென பிரத்யேக மருத்துவமனை ”ஷாகித்தை” உருவாக்குகிறார். பின்னர் சுரங்க நிர்வாகமும் அடியாட்களும் இணைந்து  சங்கர்குஹா நியோகி யைக் கொலை செய்கிறது. அதற்கு நீதி கேட்டுத் தெருவில் இறங்கிய அப்பாவி மக்களைத் துப்பாக்கிக் குண்டுக்கு இறையாக்குகிறது அரசு.அதில் இறந்து போன, அங்கஹீனமான ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவும் அமைப்பை நிறுவுவதிலும் சென் இணைந்துகொள்கிறார். இதன் தொடர்ச்சியாய் பியுசிஎல் அமைப்பின் மாநில பொறுப்பும்,அகில இந்திய பொறுப்பும் வருகிறது சென்னுக்கு.

உலகமயமாதலின் நேரடிக்கொடூரமாக இந்திய கனிமவளங்கள் அயல் முதலாளிகளுக்கும் உள்ளூர் முதலைகளுக்கும் தாரை வார்க்கப்படுகிறது. எந்தேசம் கொள்ளைபோகிறதே எனும் கோபம் ஆதிவாசிகளுக்கு வருகிறது.அதற்கு எதிராக எழும்பும் மக்கள் கிளர்ச்சியைத் தடுக்க சல்வாஜூடும் என்கிற எதிர்ப்புரட்சி அமைப்பு உருவாகிறது. சல்வாஜூடும் என்கிற கைக்கூலிகள் ஆதிவாசிகளல்லாத உயர் சமூகத்திலிருந்து தயாரிக்கபடுகிறார்கள்.வெறும் மூவாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்துக்கு பணியிலமர்த்தப்படும் அவர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்களாகிறார்கள்.
அது போக அவர்களுக்கு உள்ளூர் முதலாளிகள்,அவர்களின் எடுபிடிகளான காங்கிரஸ்,பாஜக,மற்றும் உள்ளூர் அரசியல் வாதிகளின் தார்மீக ஆதரவும் நிதி உதவியும் கிடைக்கிறது. அவுட்சோர்சிங் முறையில் ஜாதியப் பற்றை, முதலாளித்துவப் பற்றை உருவாக்கி அவர்களுக்கு வெறியூட்டுகிறது.

இப்படி அரசு மற்றும் ஆளும் எதிர்க்கட்சிகளின் செல்லப்பிள்ளைகளான அவர்கள் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் இந்த தேசத்தில் நடக்கும் வன்கொடுமைகள் மொத்தத்தையும் ஆதிவாசிகளின் மீது நிகழ்த்துகிறார்கள். குறிப்பாக ஆதிவாசிப் பெண்கள் மீது சொல்லக்கூசும் செயல்கள் நடந்தேறுகிறது. பியுசிஎல் அமைப்பின் மாநில பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கரம் நீட்டுகிறார் பினாயக்சென். இதன்மூலம் இந்திய அதிகார,ஜாதிய,முதாலாளிகளின் கோபத்துக்கு ஆளாகிறார் மருத்துவர் சென். தன்னை ஆதரிக்கவேண்டும் அல்லது அடிபணியவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவதொருவழியில் தீர்த்துக்கட்டப்படுவாய்.இது அதிகார மையங்களின் விதி.அது சென் மீதும் செலுத்தப்படுகிறது. குறி வைக்கப் படுகிறார். வழக்கு ஜோடிக்கப்படுகிறது.பிடிபட்ட மாவோயிஸ்டுகளோடும், ஆதரவாளர்களோடும் தொடர்புபடுத்தி கதைதிரித்து வழக்கு  நடக்கிறது. வளமை போல் வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்மானிக்கப் படுகிறது.

2007 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு மூன்று வருடம் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில், அதாவது  2008 ஆம் ஆண்டு உலகசுகாதார நிறுவனம் அவருக்கு மனித உரிமைகளுக்கான  ‘ஜோனதன்மான் ‘ விருது கொடுத்து கௌரவிக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற அறிவியல் அறிஞர்கள்,நோபல் விருதுபெற்றவர்களடங்கிய 22 பேர் குழு சென்னுக்காக பிரத்யேக கடிதம் ஒன்றை இந்திய ஆட்சியாளர்களுக்கு அனுப்புகிறது. இருந்தும் சென்ற 2010 டிசம்பர் மாதத்தில் அவரோடு மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு குறுகிய பிரதேசத்தில் மருத்துவ பணியாளராகவும்,ஜனநாயக ஆர்வலராகவும் இருந்த சென் இந்த தீர்ப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள்,ஜனநாயக அமைப்புக்கள்,உலக அறிஞர்கள் தூக்கிப்பிடிக்கும் பதாகையாக மறிக்கொண்டிருக்கிறார்.

(நன்றி காலச்சுவடு பிப் 2011,பினாயக்சென்: ஜனநாயகவாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி: க.திருநாவுக்கரசு)

எத்தனை காட்சி ஊடகங்கள் இதை பொருட்படுத்தியது.எத்தனை அச்சு ஊடகங்கள் விலாவாரியாக, பத்திபதியாய் எழுதியது.எத்தனை டீக்கடை பெஞ்சுகளில் பேசுபொருளானது.எத்தனைபேர் இதை எழுதி ஹிட் வாங்கினார்கள்.

இந்த தேசம் எதைப் பேசுவது எதைப் புறந்தள்ளுவது என்கிற நுண்ணரசியலில் கெட்டிக்காரத்தனமாக நடந்துகொள்கிறது. காங்கிரஸ்  அல்லது  பாஜக -, திமுக அல்லது அதிமுக இந்த இரண்டில் ஏதாவதொன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட அரசியலுக்கு நாம் ஜனநாயகம் என்றும் பேர் சூட்டிக்கொள்கிறோம்.உலகின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும்  அதைக்கண்டு பொங்குவாயானால் நீ என் தோழன் என்று சொன்னான் உலக புரட்சி நாயகன் சே.ஆனால் இங்கே கிடைக்கும் புரட்சிக் கருத்துக்கள் தன்வயப்பட்டவையாகவே இருக்கிறது. தீர்ப்பு வெளியாகி இரண்டு மாதங்களில் வெளியிலும் வலையிலும் சென்னைப்பற்றிய பிரமாதமான எந்தக்குறிப்பும் இல்லை. ஒருவருக்கு வழங்கப்பட்ட அநீதி ஒரு ஜாதிக்கு, ஒருகட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு மட்டும் நடந்த அநீதியாக சுருக்கிப் பார்க்கிற வியாதி நீடிக்கிறது இங்கே.

இலங்கை இடர்பாடுகள்மேல் வைத்திருக்கிற உக்கிரப் பார்வை உள்ளூர் கொடுமைகளில் பிசகுகிறது, பின்வாங்குகிறது வாளா விருக்கிறது.மீனவர் படு கொலைநடந்த அதே காலக் கட்டத்தில்தான் உத்தப்புரம் கோயில் நுழைவும், தாமரைக் குளம் தலித் வீடுகள் சூறையாடப்பட்டதும் நடந்தது.ஆராசா தலித் என்பதால் குறிவைக்கப்படுகிறார் என்று முதல்வர் சொன்னதும் உலகம் முழுக்க எள்ளி நகையாடப்படுகிறது. மிகச்சரி. தவறு செய்தவர்களுக்கு என்ன ஒதுக்கீடு வேண்டிக்கிடக்கிறது மிக மிகச் சரி.ஆனால் ஒரே ஊருக்குள் இருக்கிற சகோதர தமிழனை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறாயே தமிழா,தமிழக அரசே என்று ஒரு பலத்த குரல் எழும்பியிருக்கிறதா.2000 வருடங்களாக இப்படி ஒரு ஓங்காரக் குரல் ஒலிக்காதா என்று இந்திய தலித்துகளின் காதுகள் ஏக்கத்தில் இருக்கிற விஷயம் தெரியுமா ?

அது தெரிந்துகொள்கிற வரை புரட்சிக் கருத்துக்கள் தழல் வீரம் குன்றிப்போய் வெறும் சுயசொறிதல்களாக மட்டுமே நீடிக்கும்.பொங்குகிற கடல்மாதிரி,
பற்றி எரிகிற காடு மாதிரி, வானிடிந்து பேய்கிற பெருமழை மாதிரி புரட்சி எல்லோரையும்  ஏந்திக்கொள்ளவேண்டும். இதில் ஒதுக்கீடு கேட்பது நகைப்புக்குறியது. எனில்  ஒதுக்குவது ? அது புரட்சி என்கிற வார்த்தையைக் கொச்சைப்படுத்துவது.

2.12.10

இதற்கு என்ன தலைப்பு வைக்க ?

ஒரு புதுமனை புகுவிழாவுக்குப் போயிருந்தேன்.வீட்டுக்குச் சொந்தக்காரர் நெருக்கமானவர் எனபதால் காலை மதியம் இரவு மூன்று வேளை சாப்படும் அங்கேதான்.மூன்று நேரமும் மூக்கை உறுத்தாத இயல்பான மணம்,வயிற்றை உறுத்தாத  நல்ல சாப்பாடு.சமையல்காரர் யார் என்று கேட்டேன். அறிமுகப் படுத்தி வைத்தார்கள். மணக்க மணக்க சமைத்தவர் சிரிக்கச் சிரிக்கப்பேசினார். இவ்வளவு அருமையா சமயல் பண்றீங்க ஏன் பெரிய்ய ஆர்டகள் எடுத்து செய்யக்கூடாது என்றேன். எல்லாம் பேர் ராசி தான் தோழர் என்றார்.என்னய்யா தோழர்னு சொல்றீங்க தோழர் வீட்டுக்கு சமைக்க வந்துருக்கீங்க நீங்களே ராசி மேல நம்பிக்கை வச்சிருக்கீங்க என்று கேட்டேன்.சிரித்துக்கொண்டே 'எம்பேரு அம்பேத்கார்' என்று சொல்லிவிட்டு கடந்துபோய்விட்டார்.

என்னக்குத் தெரிந்து இதுவரை எந்தப்பள்ளி ஆண்டு விழாவிலும் அம்பேத்கர் வேடமிட்டு  குழந்தை மாணவர்கள் மாறுவேடப்போட்டிக்கு வந்ததில்லை. லோகமான்ய பாலகங்காதர திலகரைக் கூடப் பார்த்திருக்கிறேன்.காரணம் பள்ளிகள் நடத்தப்படும் கல்வித் தந்தைகளால் அது அரசு பள்ளிகளா யிருந்தாலும் கூட அம்பேத்கர் ஒரு புரட்சிக்காரன் என்கிற பிம்பம் ஏற்படுத்தப்பட வில்லை.இதெல்லாம் எழுதப்பேச அயற்சிதான் வருகிறது. ஆனால் இந்த செய்தியைப்படிக்கும் போது நமக்கு என்ன நேர்கிறது ?.

தீக்கதிர் 02.12.10 தலையங்கம்.

//தலைக்கு குளித்ததால் ஈரம் உலர வேண்டும் என்பதற்காக இரட்டைச் சடை போடாமல் வந்த கோவை மாணவி ஹரிஹரசுதாவின் தலையை சுவற்றில் மோதியதோடு தலைமுடியையும் வெட்டி எறிந்துள்ளார் ஆசிரியர். விருதுநகர் மாவட் டம் திருத்தங்கல் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர் கள்; தொடர்ந்து சாதிய ரீதியாக தாக்கப்படுகிறார் கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் ரோகிணி என்ற எல்.கே.ஜி மாணவி சக மாணவனை விளையாட்டின் போது கிள்ளி இருக்கிறாள். இதற்காக ஆசிரியர் ரோகிணியை தாக்கியதில் குழந்தை இறந்துவிட்டது. இதை மறைத்து தண்ணீர் தொட்டியில் வீசியிருக்கிறார்.

இவையெல்லாம் சில செய்திகளே. தேர்வு அட்டையால் மாணவனின் மண்டையை உடைத்த ஆசிரியர், ஆசிரியர் திட்டியதால் மாண வன் தற்கொலை, மாணவனை செவிடாக்கிய ஆசிரியர், வகுப்பறையில் அவமானப்படுத்தப்பட் டதால் எலி மருந்து சாப்பிட்ட மாணவி, தலைமை ஆசிரியரின் பாலியல் வக்கிரங்கள், தலித் மாண வர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் என 2008ஆம் ஆண்டு மட்டும் 21 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. பதிவாகாதவை இன்னும் பல.//

//“தேசிய ஆணையத்தின் வழிகாட்டல்கள் குறித்தும் குழந்தைகளையும் அவர்களது உரிமை களையும் பாதுகாப்பது குறித்தும் ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தமது பள்ளி யில் அனைத்துப் பெற்றோர்களும் பங்கேற்கும் பேரவைக் கூட்டங்கள், அதேபோல் பள்ளிக் கல்விக்குழு அல்லது பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டங்களை நடத்த வேண்டும்”. “உடல் ரீதி யான தண்டனைகள் தொடர்பாக வட்டார அள வில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரி யர் கூட்டத்தைக் கூட்டி, மாநிலத்தின் அனைத்து பள் ளிகளிலும் குழந்தைகளுக்கு எதிரான எந்த வன் முறைச் செயல் நடந்தாலும் ஒட்டுமொத்தத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கடுமையான நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி, 2009, மே 26 அன்று ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா அனுப்பிய வழிகாட்டும் குறிப்பின்மீது அரசு ஏதேனும் உருப்படி யான நடவடிக்கை எடுத்ததா? நிகழ்ச்சிப் போக்குகளைப் பார்க்கும்போது அனைத்து வழிகாட்டு நெறிகளையும் அரசு தூக்கி எறிந்து விட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.//

அதே தீக்கதிரில் ப.கவிதாகுமாரின் கட்டுரை ஒன்றும் இருக்கிறது.மதுரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த தனபாலின் மகள் ப்ரியங்காவை வகுப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லி அந்த குப்பையைத் திங்க வைத்த ஆசிரியர் குறித்த பதிவும் இருக்கிறது.படிக்க முடியாதபடி அவலம் கண்களில் திரையிடுகிறது.நாம் எங்கே இருக்கிறோம்.

22.11.10

ஊடகச்செய்திகளும் மக்கள் சேதிகளும்.

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் தொழிற்சங்கம்,செல்வி ஜெயலலிதா தொழிற்சங்கத்தை ஆதரித்தது. செய்தி.

துணை நடிகர் முதல் பிரபலநடிகர்வரை தங்களுக்கென்று தனித் தனியாக தொழிற்சங்கம் தொடங்க அவரவர் தனி மேலாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்களாம். வதந்தி.
0

அடுத்தடுத்து தோல்வி,நிதானமாக அடியெடுத்து வைக்கிறார் நடிகர் விக்ரம்.செய்தி

டிட்டர் லெனின் எடுத்த நாக் அவுட் குறும்படமும்,அடுத்து ஒரு தேயிலைக்கம்பெனி எடுத்த
விளம்பரப்படமும் என்ன கணக்கில் வரும் ?.இப்போது காட்சிப்படுத்திக்கொண்டிருக்கும் மணப்புறம் கோல்டு லோன் விளம்பரம் வெற்றியா,தோல்வியா?.இல்லை கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சங்கர்,மணிரத்னம் படங்களில் சம்பாதித்தது தோல்வியா ? வெவரமாக் கேட்டுச் சொல்லுங்க. பொதுஜனம் சந்தேகக் கேள்வி.
0
கன மழையால் விருதுநகரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செய்தி.

ரே ஒரு நாள் வீடுகளுக்குள்ள தண்ணி புகுந்தது செய்தியா வருது, வருஷம் முழுக்க ஆறு,ஓடை,கண்மாய்,குளங்களுக்குள் வீடுகள் புகுந்ததப்பத்தி எழுதறதே இல்லை ஏன்.நீர் நிலைகள் அங்கலாய்ப்பு.

கோடிக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் சபரிமலைக்கு மாலை போட்டார்கள். செய்தி

ரெண்டு மாசத்துக்கு இம்சையிலிருந்து விடுதலை. மனைவிமார்கள் உற்சாகம்.ரெண்டுமாசத்துக்கு யாவாரமே நடக்காது அந்திக்கடைக்காரர்களும் டாஸ்மாக் நிர்வாகிகளும் வருத்தம்.
0
விசாரணக்கைதி கொலைசெய்யப்பட்டதால் பெரியகுளத்தில் பதட்டம்.

ரே மாசத்துல ரெண்டு கொலை செய்திருக்கிறோம் ஒன்றுக்கு இனிப்புக்கொடுத்து மாலை மரியாதை பண்றாங்க.இன்னொன்னுக்கு கலவரம் பண்றாங்க. குழப்பம்.

9.10.10

அங்கும் இங்கும் பராக்குபார்த்தல்.

லியு க்சியாபூ தியானமென் சதுக்க நிகழ்வுகளுக்காக கைதுசெய்யப்பட்டு பதினோரு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சீனக்கவிஞர்.அவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் விருதை அளிக்க சித்தமாக இருக்கிறது நார்வே நட்டின் நோபல் விருது அமைப்பு.சென்ற முறை இதே விருது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு சீன அரசு கடும் எதிர்ப்பைத்தெரிவித்து இருக்கிறது.க்சியாபூ வின் நெருங்கிய நண்பரான க்சியாயொன் லியாங்,மற்றும் நாவலாசிரியர் டேனி வெய் லியாங் இருவரும் அடிப்படை மனித உரிமைகளின் குரலுக்கான அங்கீகராம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். bbc தொலைகாட்சி நிறுவணத்தின் செய்தியாளர் ராச்சல்
ப்ரௌன் சீன எதிர்ப்பாளர்களைத் தேடித்தேடி கருத்து வெளியிட்டிருக்கிறார். உலக இலக்கிய அரங்கில் எதிரும் புதிருமான விவாதங்களை எழுப்பக் காத்திருக்கும் இந்த செய்தியை நேற்று வெளியிட்டிருக்கிறார் நோபல் அமைப்பின் தலைவர் தோர்ப் ஜொயென் ஜாக்லாண்ட்.

தியானமென் சதுக்கத்தில் பலியிடப்பட்ட உயிர்கள் விலைமதிப்பற்றவை.உலகமெங்கும் வாழும் மனிதர்களின் விடுதலை கோரிக்கை 1000 சதவீதம் நியாயமானது.சிறியதோ பெரியதோ அடக்குமுறை ரத்தவெறி கொண்டது.
எனினும் நடப்பை ஒப்பு நோக்குவது இப்போது தேவையாக இருக்கிறது.சுமார் 100 மேற்பட்ட படையெடுப்புளில் தனது ராணுவ பூட்சுக் கால்களால் அப்பாவி உயிர்களை நசுக்கியது.வெடிச் சத்தத்தாலும்,கருமருந்துப்புகையினாலும் மானுட அமைதியின் வாசம் சிதைந்து போனது. அந்த உலக ரவுடி அமெரிக்காவின் சுவடுகள் முழுக்க ரத்தத்தால் ஆனது. அதன் வழி நெடுகிலும் சிதறிக்கிடக்கும் எலும்புக்கூடுகளுக்கும், மீந்து வாழும் உயிர்கள் ஒவ்வொன்றும் இந்த நேரத்தில் கவனத்துக்கு வந்துபோகிறது.

0

ஊதித்தின்னும் விளையாட்டு

மீட்டுபவனின் லயிப்பிற்கேற்ப
இசைமுழக்கும் பறையொப்ப
தன்னுடல் கொழித்து முப்போகமீந்த
நிலமழித்து உமியை விதைத்தவர்கள்
சுருட்டிப்போகிறார்கள் தவசதானியங்களை.

நீரோவின் கதையை நினைவுகள் கிளர்த்தி
தொழிற்பூங்காவின் தந்தையென
பட்டமேற்கிறார் மன்னர்
அந்தப்பொட்டல் வெளி நின்று

ந.பெரியசாமி _புதுவிசை செப் 10


இன்னும் ஐந்து வருடங்களில் இந்திய தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு இரு மடங்காகக் கூடிவிடும் சாத்தியம் இருக்கிறது என்று உலக புள்ளி விபரம் கருத்து தெரிவித்திருக்கிறது.தற்போதைய மதிப்பான 3.5  ட்ரில்லியல் டாலரிலிருந்து 6.4 ட்ரில்லியனாக உயர்ந்துவிடுமாம்.

முன்னதாக நடிகர்கள் அரசியலுக்கு வருவது,கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அரசியலுக்கு வருவது,விளம்பர நடிகர்கள் சினிமாவுக்கு வருவது,சினிமாக்காரர்கள் கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்குவது போன்ற பண்டமாற்று முறைகள் நடந்துகொண்டிருந்ததல்லவா ?. இப்போது அதன் தொடர்கண்டுபிடிப்பாக கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின்
சினிமாவில் நடிக்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.

0
சடுதியில் கடக்க முடியாத வலிமிகுந்த கவிதை ஒன்று

இடம் பெயர் முகாமிலிருந்து.

அந்தகாரத்தில் மூழ்கிப்போன
சாபமிட்ட இரவொன்றில்
நெற்றிப்பொட்டை எடுத்து
நிலத்தில் போட்டு மிதித்தேன்
...
...
...
...
முகாமின் முள்வேலியில்
விஷக்கள்ளிகள் மலரட்டும்
தந்தை பெயரறியாமல்
பிறக்கும் பிள்ளைகளுக்கு
முள்ளின் விஷம் உணர்த்தட்டும்.

சுபாஷ் திக்வெல்ல_ காலச்சுவடு.

2.5.10

மட்டஹாரி முதல் மாதுரிகுப்தா வரை.

ரகசிய போலீஸ் 115,சிஐடி சங்கர், இப்படித்திரைப்படங்கள் அறிமுகப்படுத்திய உளவுத்துறை மனிதர்களின் பிம்பம் இருட்டுக்குள் ஒரு சின்ன சூட்கேசுடன் பதுங்கிப்பதுங்கி அலைகிற மாதிரிப் பொதுப் புத்தியில் நிலைத்துவிட்டது.
பின்னர் தொன்னூறுகளில் பார்த்த சிபிஐ யின் டைரிக்குறிப்பு மம்மூட்டியின் வழியே மேதாவிலாசத்தைக்காட்டியது.அப்புறம் திருடா திருடா எஸ்பி பாலசுப்ரமணியன், இந்தியன் நெடுமுடிவேனு பாத்திரங்களும் கூட வித்தியாசமான உருவங்களில் உளவுத்துறையின் மேண்மை சொல்லும் மனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.

raw போன்ற நிறுவணங்களுக்கு ஆள் எடுக்கும் போது விண்ணப்பதாரரின் ஏழு தலைமுறைக் கதைகளும் தோண்டித்துருவப்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.அப்படித் துருவப்படும்போது தட்டுப்படுகிற காவல்துறை வழக்குகள்,விடுதலைப் போராட்டத் தொடர்பு, இன்னும் சில அரசுக்கு ஒவ்வாத குணங்கள் அவரை தகுதியற்றவராக்கிவிடுமாம்.இன்னும் கூடுதலாக ஒரு கதை சொன்னார்கள் அந்த எழுதலைமுறைத் தேடலில் விண்ணப்ப தாரருடைய ரத்தசம்பந்த உரவுகள் யாருக்காவது எதாவது சிவப்பு சித்தாந்த தொடர்பு இருக்குமேயானால், அதோகதிதானாம். இப்படித்தான்  இந்திய அல்லது தமிழ் சினிமாத்துறைக்கும் ஆள் எடுக்கிறார்கள் என்று பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.

உளவுத்துறைக்கோ அல்லது ராணுவ உயர் அதிகாரத்துக்கோ, இல்லை ஆட்சிப்பணிக்கோ ஆள் எடுக்கும்போது ஒரு  காலனி  அரசு இப்படி அடிமைகளைத்தெரிவு செய்யலாம் ஒரு சுதந்திர அரசுக்கு அப்படி நிர்ப்பந்தம் இருக்குமா என்பது தெரியவில்லை.ஆனால் இவர்களையெல்லாம் ஆட்டிப்படைக்கிற ஆட்சியாளர்கள் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் அவர்களைத்தேர்வு செய்கிற அதிகாரம் சாமான்யர்களின் ஆட்காட்டி விரலில் இருக்கிறது. இன்னும் சரியான உபயோகமில்லாமல்.

மாதுரி குப்தா இப்படி சல்லடைபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தூதரக இரண்டாம் நிலை அதிகாரி.இஸ்லாமாபாத்திந் தூதரகத்தில் பணிபுரியும் அவர் இந்தியாவின் ரகசியங்களை விற்றார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதினைந்து நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.அவரும் அவரது வழக்கறிஞரும் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.செய்திகளின் பரபரப்பை விழுங்கிக்கொண்டு முதலிடத்துக்கு வந்துகொண்டிருக்கிறார் மாதுரி குப்தா.இந்தியாவின் பிரதமர் அலுவலகம் இதுவரை சோரம் போனவர்களின் பட்டியலை பிரிதமருக்கு சமர்ப்பித்திருக்கிறது.மாதுரி குப்தா பத்தாவது ஆளாக வரிசையின் கடைசியில் நிற்கிறார்.இதில் எத்தனைபேருக்கு தண்டனை கிடைத்தது எத்தனை பேர் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்ட நாட்டுக்கு குடிபோனார்கள் என்கிற தகவல் இல்லை.தேடினால் கிடைக்கலாம்.ஆனால் மாதுரி குறித்த தொடர் செய்திகளில் அனுமானங்களில்,விமர்சனங்களில் அவர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதாக ஒரு தகவல்  சொல்லப்   பபட்டிருக்கிறது.

அதுமட்டும் அவரால் ஒப்புக்கொள்ளப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

அவர் ஏன் இஸ்லாத்துக்கு மாறினார் என்றகேள்விக்கு அதன் சியா தத்துவம் அவரை ஈர்த்தது எனப்பதில் சொல்லுகிறார்.அதை விவரிக்கிற செய்தியாளர் 'honey trap' என்கிற பதத்தை உபயோகப்படுத்துகிறார்.மீண்டும் நாம் தமிழ் சினிமாவுக்குள்ளே போகலாம். புதிய பறவை படத்தில் சிவாஜியைக் காதலித்த சரோஜா தேவி ஒரு பெண் உளவாளி என்கிற அதிர்ச்சித் திருப்பம் சினிமாக்கதைகளுக்கு பெருந்தீனியையும்,தயாரிப்பாளர்களுக்கு கட்டுக்கட்டாய் பணத்தையும் பாமரஜனங்களுக்கு ஒரு புதிய இலக்கியத்தையும் விட்டுசென்றது.மதம், ஜாதி, இசங்கள், இலக்கியம்,கல்வி,கலவி என எல்லாவற்றிற்கும் உடனடி விளம்பரதாரராக மனிதனே இருக்கிறான்.அவன் நெருக்கமான நண்பனாக,உருக்கமான தாயாக,உயிர்குடிக்கும் காதலனாக இருப்பதில் வியப்பேதுமில்லை.எதுவும் சுயம்புவாகத்தோன்றி வளர்வதில்லை,வளரவே முடியாது. அப்படிப்பட்ட  தேன் தடவிய பொறிக்குள் சிக்கிக்கொண்ட மாதுரியை விட்டுவிட்டு இதே போன்ற பொறியில் சிக்கிய உலகின் முதல் பெண் உளவாளி மட்டா ஹரியை நாம் பின்தொடராலாம்.


மட்டா ஹாரி முதல் உலகப்போரின் முடிவில் பலிகொடுக்கப்பட்ட விலையுயர்ந்த அழகுப்பெட்டகம்.1917 ஆம் ஆண்டு அக்டோ பர் மாதம் பதினைந்தாம் நாளின் இளங் காலைப்பொழுதில் தனக்குப்பிடித்தமான நீள நிற கவுனை தேர்ந்தெடுக்கிறாள்.க்ரீடம் போலிருக்கும் முக்கோண தலைமாட்டியை அணிந்துகொள்கிறாள். பனிரெண்டு காவலர்களோடு புறப்படுமுன் தனக்கு ஆறுதல் சொல்ல வந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கும்,தனது வழக்கறிஞனும் கடைசிக்காதலனுமான வுக்கும் முத்தங்களைக் கொடுக்கிறாள்.  ராணுவ வாகனத்தில் ஏறி தான் நேசித்த அந்த நகரத்து வீதிகளின் காலைத்தென்றலை ஆழ்ந்து உள்ளிழுத்துக்கொண்டு பயணமாகிறாள் 'மார்க்கரெதா கீர்த்ருய்டா செல்லி'. அவளுக்குத்தெரியும் அது உயிரோடு போகும்  அவளது கடைசி ஊர்வலமென்று.

நெதர்லாந்தில் பிறந்து தாயும் தந்தையும் கைவிட்டு காலமானதும் எதிர்கொண்ட வறுமையையும் வாழ்க்கையையும் வெற்றிகொள்ள தனது அழகை ஈடுவைத்தாள் மர்க்கரெதா. தனது பதினாறாவது வயதில் உடலின் அதிர்வுகளை மீட்டிவிட்ட  தலைமை ஆசிரியன் தான் முதல் ஆடவன்.அங்கிருந்து தனது மாமன் வீட்டுக்கு இடம்பெயர்ந்த போது மணமகள் தேவை விளம்பரத்துக்கு விண்ணப்பித்து 45 வயதான டச் காலனி அரசின் ராணுவ அதிகாரியான ரூடால்புக்கு மனைவியானாள். மிகுந்த சந்தோஷமான குடும்பவாழ்வுதானென்றாலும் ராணுவக்குடியிருப்பில் இருந்த
ஏனைய அதிகாரிகளும் அவளது சந்தோஷப்பார்வையில் விழுந்தார்கள். இன்னொரு அதிகாரியோடு ஆறுமாதங்கள் வாழ்ந்த பின்னர் இந்தோனேசியக் கலாச்சரத்தைப் படிக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த நடனக்குழுவில் சேர்ந்து
அந்த ஈர்ப்பில் தனது பெயரை மட்டா ஹாரி என மாற்றிக்கொண்டாள். இந்தோனேசிய மொழியில் கண் என்று
பொருள்படும் மட்டா ஹரிக்கு 'பகலின் கண்' என்பது தான்  கவிதைப்பெயர்.

நடனத்தில் ஆடைக்குறைப்புடன் கவர்ச்சியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது அவளது மேடைகள்.அதோடு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பயணமானாள்.1905 ஆம் ஆண்டு மார்ச் 13 அவள் ஏறிய மேடை ஒரே இரவில் உலகுபுகழ் நடனகாரியாக மாற்றியது. ஆதரவும் எதிர்ப்புமான விமர்சனங்களின் மூலம் புகழின் உச்சானிக் கொம்புக்கு ஏறிப் போனாள்.அவளது கவர்ச்சியும்,அழகும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள்,அரசர்கள்,மந்திரிகள்,தொழிலதிபர்கள்,பிரபலங்களின் கனவைக்கெடுத்தது.ஆள் அம்பு சேனை,சொத்து,அடிமைகள்,வெற்றி இவற்றோடு மட்டா ஹரியின் இரவுகளும் பெருந்தனக்காரர்களின் பெருமிதங்களின் பட்டியலில் இடம் பெற்றது. இப்படி நாடு விட்டு நாடு பறக்கும் பயணங்களை தடையற்றதாக்க அப்போதைய ராணுவ அதிகாரிகளின் படுக்கை அறையே அவளுக்கு, விசா, எமிக்ரேசன், அலுவலகங்கள் ஆனது.அதுவே அவளது  பயணங்களுக்கு மட்டுமல்ல உயிருக்கும் முற்றுப்புள்ளியானது.

முதல் உலகப்போர் உச்சக்கட்டத்திலிருந்தபோது,லடசக்கணக்கான வீரர்களின் உயிர்கள் பலியிடப்பட்ட குருதி ஆறாமல் கிடந்த அந்த நேரத்தில்  ஜெர்மன்,பிரான்ஸ் இரண்டு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும்
தங்களின் சதைப்பசியைத் தீர்த்துக் கொள்ள மட்டா ஹரியை நாடினார்கள்.இந்த போக்கு வரத்தில் இரண்டு நாட்டு ராணுவ ரகசியங்களை உளவு பார்க்கலாம் என்று ஆசைப்பட்டன. பிரான்ஸ் நாட்டு ராணுவ உயர் அதிகாரி  ஜார்கெஸ் லடாக்ஸ் தனது ராஜீய உளவாளியாக  ஒரு நடனக்கரியான மட்டா ஹரியை நியமித்தான்.தனது கடைசிக்கதலன் 23 வயது நிறம்பிய ரஸ்ஸிய நாட்டு இளம் ராணுவ அதிகாரியின் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள துடித்துக்கொண்டிருந்தாள் அதுவும் நிரைவேறியது. அவனோடு தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டாள் உளவு பார்க்கப்போன இடத்தில் பிரான்சின் ராணுவ ரகசியங்களை கசிய விட்டதாகவும் அதானால் ஏறபட்ட ராணுவ இழப்புக்கும் அவளே காரணம் எனக்குற்றம் சாட்டி மரணதண்டனை விதித்தது.

ஆனால் மட்டா ஹரி சாகும் வரை தான் ராணுவ அதிகாரிகளுக்கு தனது ரகசியங்களை மட்டிலும் தெரியப்படுத்தியதாகவும், ஒருபோதும் ராணுவ ரகசியத்தை காட்டிக்கொடுக்கவில்லையென்றும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.ஆனால் அவளிடம் சராணாகதியான ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படவே இல்லை.அன்றும் சரி இன்றும் சரி இது போன்ற குற்றங்களில் பலிகொடுப்பதற்கென ஒருவர் குறிவைக்கப்படுவதும். அதில் மறைந்து போன நிஜக் குற்றவாளிகள் தைரியமாய் வெளிவந்து அடுத்தகுற்றத்துக்கு நகர்வதும் வாடிக்கையாகிறது.

'ஒரு வீட்டின் சுவர்களுக்குச் சொந்தமானவளல்ல,சூரிய ஒளியில் சிறகசைக்கும்  வண்ணத்துப்பூச்சி  நான்'அவளே சொன்னதுபோல கண்டங்கள் தாண்டிய வண்ணத்துப்பூச்சி சுட்டுப் பொசுக்கப்பட்டது.கண்டங்கள் ஆளும் வெறியில் நடந்த சண்டையில் கொட்டியது குருதி. அந்தக்குருதியின் சாபத்தை அப்பாவி நடனக்கரியின் உயிர்ப்பலியிமூலம் பரிகாரம் தேடிக்கொண்டது  பிரான்ஸ் ராணுவம். அரசு உயர் அதிகாரிகள் தாங்கள் கொறிக்கும்கொழுத்த முந்திரிக்கும்,விலை உயர்ந்த மதுவுக்கும்,விலை உயர்ந்த விலைமாதுவுக்கும் விற்றவை ஏராளம்.

ஆனால் அப்பாவி ஜனங்களின் உயிர்ப்பலியிலும் தேச,பிரதேச வெறியிலும் அவை காலங்காலமாய் கரைந்துபோய்க்கொண்டே இருக்கிறது.