பாடப் புத்தகத்தில் இருந்த உரல் வாழ்க்கைப் பக்கத்திலிருந்து வீசியெறியப்பட்டது. என் மகனுக்குக் அதைக் காட்ட நான் புதைபொருள் ஆராய்ச்சிக்குத் தான் போகவேண்டும்.உரல் தெரியாத அவனுக்கு உரப்பெட்டியை எப்படி அறிமுகப்படுத்துவேன்.அது நூடுல்ஸ் சிக்கலில் நுனிதேடும் கதையாகும். அம்மியில் அரைத்த துவையலையும்,அம்மியைச் சுற்றி முளைத்துக் கிடந்த சீரகச் செடியையும் தேடித் திரும்ப ஊருக்குப் போனேன்.பெட்டிக்கடையில் தொங்கிய உடனடிப் புளிக்குளம்பு வாங்கி உடைத்து வைத்தாள் சோத்துக்குப் பக்கத்தில்.
மகன் வந்துவிட்டானென்று மடமடவென வேலைகள் நடந்தது அடுப்பிலிருந்து கோழிவாசம்,நகரத்தில் வீசும் அதே கறிக்கோழி வாசம். வேலை செய்யாம வீட்டில் இருந்து தொந்தி வச்ச எல்லோருக்கும் ஊரில் ஒரு பேருண்டு 'பொந்தாக் கோழி'.ரசத்தை ஊத்தி சாப்பிட்டு விட்டு காட்டுப்பக்கம் போனேன். மக்காச்சோளம், நித்தியகல்யாணி எனப் புதுப் புதுப் பயிர்கள். மனதிலும் உடலிலும் பசியில்லை. பொழுதடையும் வரைத்டேடினேன் அது சிக்கவே இல்லை.
காடைக்கண்ணி.
தினையின் வலசலில் பிறந்த பயிர். கருசக்காட்டுக்கு ஏத்த செடி.கதிர் முத்தி திருகி எடுத்தால் சாக்கு நிமிர எங்கத்த மக கண்தெரியும். எண்ணெய் வழிகிற தலையிலிருந்து இறங்கும் அவள் சடையைப்போலவே கருது.காடுமுழுக்க இப்ப ஷாம்பூ வாடைமட்டும் மிஞ்சிக்கிடக்கு.அவளது கூந்தலில் செருகி மணத்துக்கிடந்த மருக்கொழுந்தை விரட்டிவிட்டு.
மொசைக் தரையைப்போட்டிக்கு இழுக்கும் வழுவழுப்பு காடைக்கண்ணியின் மேலே பூசியிருக்கும்.என்ன இருக்கு நெஞ்சுக்குழிக்குள் என்று கண்டுபிடிக்க முடியாதது போல ஏழு தோல் போர்த்தப்பட்ட வெள்ளைக்கடுகு காடைக்கண்ணி.குதிரைவாலி,சாமை,திணையைத்தெரியுமா உங்களுக்கு எல்லாம் அவளது சோட்டுப்பெண்கள். யாரையும் காணவில்லை இருந்த சுவடும் அங்கில்லை.
திரும்ப வந்தேன் நூடுல்ஸ் நகரத்துக்குள்.
