நல்ல ஏறு வெயிலில் உரக்கடைக்கு வந்திருந்தவருக்கு மயக்கம் வர, சரிந்து விழுந்திருக்கிறார்.மருத்துவமனைக்கு கொண்டுபோய்சேர்த்த பிறகு, உடம்பில் போதிய தெம்பு இல்லை என்று சொல்லி மூன்று பாட்டில் குளுக்கோஸ் ஏற்ற மருத்துவர்கள் சொன்னார்களாம்.முதல் பாட்டில் ஏற்றி முடிந்ததும் அவருக்கு நினைவு திரும்பிவிட்டது. எழுந்தவர் என்ன நடந்ததெனக் கேட்டிருக்கிறார். சொல்லியிருக்கிறார்கள்.கையிலிருந்து ஒரு டியூப் ஏறிப்போய் பாட்டிலில் சொருகியிருந்ததைப்பார்த்து அதை என்னவென்று கேட்டிருக்கிறார்.
'ஒடம்புல சத்தில்ல அதா க்ளுக்கோஸ் ஏத்துறாங்க' என்று சொன்னதும்.
'இன்னு எவ்ளோ நேரமாகும்'
'ரெண்டு பாட்டலு ஏத்தனு,ராத்திரியாகிரும், காலைல டாக்டர் வரணு,அதுக்குப்பெறகுதா வீட்டுக்குப்போகலா'
'ஐயய்யோ எம்பருத்திச்செடி என்னாகு,விடுங்க நாம்பொகணு'
பதறியவரை ஆற்றுப்படுத்தி உடல்நிலையை எடுத்துச்சொன்ன பிறகு அவர் ஒரு யோசனை சொன்னார்.
'டாக்டரக் கூப்பிடுங்க பில்லக் குடுத்திறலாம்'.
'புரியாத ஆளாயிருக்கீரே,குளுக்கொஸ் ஏறனுமில்ல'
'அதுக்கு ரெண்டு செம்புத்தண்ணி ஒடம்புக்குள்ள போறதுக்கு ரெண்டுநாளா? ஒரு ஏக்கர் தண்ணி பாய்ச்சவே ஒரு
மணிநேரந்தா ஆகுது'
'அதுக்கு'
'குடுங்க ஒரே மடக்குல குடிச்சிட்டு தோட்டத்துக்குப்போகணு'
பக்கதில் படுத்திருந்த நோயாளிகளோட சேர்த்து மருத்துவமனையே குலுங்கிக்குலுங்கிசிரித்தது.
'அப்பிடியென்னய்யா,தோட்டத்துல இருக்கு பருத்திச்செடிதான'
'செடி பருத்திச்செடிதா,ஆனாக்க கரண்டு மத்தியானக்கரண்டுல்ல' என்றார்.
சோகையாய்ப்போன தன்னுடம்பைக்காட்டிலும்,தண்ணிரின்றி வாடும் பருத்திச் செடிக்கு பரிந்து கொண்டு பதறித் துடிக்கிற விவசாயி.அந்தப் பதற்றத்துக்குப் பின்னாடி அவரது குடும்பமும் வாழ்வும் என ஒரு சுயலாபமிருந்தாலும் கூடப் பருத்திச் செடியின் வாட்டம் அவரை வாட்டுகிறது.அதனால் தான் உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி எனும்
விவசாயி கோமணாண்டியாகிறான்.எதைப்பற்றியும் கவலைப்படாதவன் அரசியல் பிழைத்து கோபுரவாசியாகிறான்.