25.10.10

வாடியபயிரைக் கண்ட போதெல்லாம்

நல்ல ஏறு வெயிலில் உரக்கடைக்கு வந்திருந்தவருக்கு மயக்கம் வர, சரிந்து விழுந்திருக்கிறார்.மருத்துவமனைக்கு கொண்டுபோய்சேர்த்த பிறகு, உடம்பில் போதிய தெம்பு இல்லை என்று சொல்லி மூன்று பாட்டில் குளுக்கோஸ் ஏற்ற மருத்துவர்கள் சொன்னார்களாம்.முதல் பாட்டில் ஏற்றி முடிந்ததும் அவருக்கு நினைவு திரும்பிவிட்டது. எழுந்தவர் என்ன நடந்ததெனக் கேட்டிருக்கிறார். சொல்லியிருக்கிறார்கள்.கையிலிருந்து ஒரு டியூப் ஏறிப்போய் பாட்டிலில் சொருகியிருந்ததைப்பார்த்து அதை என்னவென்று கேட்டிருக்கிறார்.

'ஒடம்புல சத்தில்ல அதா க்ளுக்கோஸ் ஏத்துறாங்க' என்று சொன்னதும்.
'இன்னு எவ்ளோ நேரமாகும்'
'ரெண்டு பாட்டலு ஏத்தனு,ராத்திரியாகிரும், காலைல டாக்டர் வரணு,அதுக்குப்பெறகுதா வீட்டுக்குப்போகலா'
'ஐயய்யோ எம்பருத்திச்செடி என்னாகு,விடுங்க நாம்பொகணு'
பதறியவரை ஆற்றுப்படுத்தி உடல்நிலையை எடுத்துச்சொன்ன பிறகு அவர் ஒரு யோசனை சொன்னார்.
'டாக்டரக் கூப்பிடுங்க பில்லக் குடுத்திறலாம்'.
'புரியாத ஆளாயிருக்கீரே,குளுக்கொஸ் ஏறனுமில்ல'
'அதுக்கு ரெண்டு செம்புத்தண்ணி ஒடம்புக்குள்ள போறதுக்கு ரெண்டுநாளா? ஒரு ஏக்கர் தண்ணி பாய்ச்சவே ஒரு
 மணிநேரந்தா ஆகுது'
'அதுக்கு'
'குடுங்க ஒரே மடக்குல குடிச்சிட்டு தோட்டத்துக்குப்போகணு'
பக்கதில் படுத்திருந்த நோயாளிகளோட சேர்த்து மருத்துவமனையே குலுங்கிக்குலுங்கிசிரித்தது.
'அப்பிடியென்னய்யா,தோட்டத்துல இருக்கு பருத்திச்செடிதான'
'செடி பருத்திச்செடிதா,ஆனாக்க கரண்டு மத்தியானக்கரண்டுல்ல' என்றார்.

சோகையாய்ப்போன தன்னுடம்பைக்காட்டிலும்,தண்ணிரின்றி வாடும் பருத்திச் செடிக்கு பரிந்து கொண்டு பதறித் துடிக்கிற விவசாயி.அந்தப் பதற்றத்துக்குப் பின்னாடி அவரது குடும்பமும் வாழ்வும் என ஒரு சுயலாபமிருந்தாலும் கூடப் பருத்திச் செடியின் வாட்டம் அவரை வாட்டுகிறது.அதனால் தான் உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி எனும்
விவசாயி கோமணாண்டியாகிறான்.எதைப்பற்றியும் கவலைப்படாதவன் அரசியல் பிழைத்து கோபுரவாசியாகிறான்.

17 comments:

வினோ said...

உண்மை தான் அண்ணே....

தமிழ் உதயம் said...

அந்தப் பதற்றத்துக்குப் பின்னாடி அவரது குடும்பமும் வாழ்வும் என ஒரு சுயலாபமிருந்தாலும் கூடப் பருத்திச் செடியின் வாட்டம் அவரை வாட்டுகிறது.///

சுயநலத்துக்கு பின்னே மிக பெரிய பொதுநலம்.....ஆனால்
இன்றைய தேவை சுயநலம் மட்டுமே.

Unknown said...

என்ன ஒரு அருமையான பொருள் அடங்கிய நகைச்சுவை.

நீங்களும் அவசர கதியில் ஓடக்கூடிய வாழ்க்கைக்கு உங்க வாழ்க்கையை மாற்றி அமைக்காததினால் மண்ணின் சுவையோடு கூடிய நல்ல படைப்புகள் எங்களுக்கு கிடைக்கிறது. உங்களால் மனிதனை மனிதனாக பார்க்க முடிகிறது.

எப்போதும் உங்க பதிவுக்கு வந்து போகும் போது மனம் மாறி ஒரு நல்ல மன நிறைவோடு போகிறோம். எவ்வளவு நன்றி சொல்ல.

vasu balaji said...

அய்யோ! இப்படி வெள்ளந்தியா ஆக்கள படிக்கறப்பல்லாம் இப்படி இருக்காம என்னவா மாறிப்போனோம்னு ஏங்கிப் போகுது:)). வாடுமோ பயிரென வாடிய வள்ளலார். அருமை காமராஜ்.தங்கமணியவுங்கம்மா பொண்ணுக்கு சிசேரியன் பண்ண கோவத்துல போட்டுச்சு ஒரு போடு. அதென்ன டாக்டரம்மா உன் ஆஸ்பத்திரில பொறக்கிற குழந்தைக்கு உன் டூட்டி எப்போன்னு தெரியுதுன்னாங்க. அந்தம்முணி சிரிச்சிகிட்டே ஏங்கன்னு கேட்டுச்சு. இல்ல. நீங்க ஆஸ்பத்திரி டூட்டில இருக்கிறப்ப பிறக்கிற குழந்தையெல்லாம் நார்மலா பிறக்குது. நர்சிங் ஹோம்ல இருக்கிறப்ப பிறக்கறதெல்லாம் சிசேரியனா இருக்குதேன்னு. :))

hariharan said...

//உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி எனும் விவசாயி கோமணாண்டியாகிறான்.எதைப்பற்றியும் கவலைப்படாதவன் அரசியல் பிழைத்து கோபுரவாசியாகிறான்//

யதார்த்தம்.

Mahi_Granny said...

அருமையோ அருமை

லெமூரியன்... said...

அந்த மண்ணும் அதில் விளையும் பயிரும்..ஒரு வித பிணைப்பை
கொடுக்குமோ? விவசாயிகளுக்கு??
கடன் வாங்கியாவது காதலோடு பயிர் வளர்க்கிறார்களே???
அருமையான பதிவு...!
கடைசி வரிகள் வழக்கம் போல உங்களோட டச்..!

வருணன் said...

மிக நல்ல பதிவு தோழரே. நாம் உண்கிற ஒவ்வொரு பருக்கைக்குப் பின்னாலும், மானம் மறைக்கிற ஒவ்வொரு முழம் துணியிலும் இருக்கின்ற இவர் போல பலரது உழைப்பும் வாழ்க்கையும் கவனிக்கப் படாமலேயே போய்விடுகிறது.

காமராஜ் said...

நன்றி வினோ.

நன்றி தமிழ் உதயம்.

நன்றி சேது சார்

காமராஜ் said...

நன்றி பாலாண்ணா

நன்றி தோழர் ஹரி

காமராஜ் said...

நன்றி மஹி- க்ரான்னி சார்

நன்றி தம்பி லெமூரியன்

காமராஜ் said...

புதுவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தோழர் வருணன்.

ராம்ஜி_யாஹூ said...

மிக அருமை

VELU.G said...

//அதனால் தான் உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி எனும்
விவசாயி கோமணாண்டியாகிறான்.எதைப்பற்றியும் கவலைப்படாதவன் அரசியல் பிழைத்து கோபுரவாசியாகிறான்.
//

முற்றிலும் உண்மை

மிக அருமையான பதிவு

NaSo said...

//'செடி பருத்திச்செடிதா,ஆனாக்க கரண்டு மத்தியானக்கரண்டுல்ல' //

மத்தியான கரண்டா இருந்தாலும் அது 2 மணி நேரந்தானே. அதையும் வெச்சு பொழப்பு நடத்துறான் விவசாயி. நமக்கு உண்ணாவிரதம் இருக்கும் போது கூட AC வேணும்.

க.பாலாசி said...

வெள்ளந்தி மனிதரின் கள்ளம் கபடமற்ற உள்ளம் தெரிகிறது...

இந்த அரசியல் பிழைப்பவனுக்கு எந்த அறம் கூற்றாகும் என்றுதான் தெரியவில்லை...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!