ஆறுகச்சாமிக்கு வெத்திலைதான் உயிர். அந்த அழுக்கேறிப்போன கைவச்ச பனியனும், வெத்திலை வாயும் தான் அவரது அடயாளம். வெத்திலைக்காக அவர் வெள்ளியிலான டப்பாவோ, காடாத்துணியில் அடுக்கு வைத்துத்தைத்த சுருக்குப்பையோ, வைத்திருக்க வில்லை. அதுக்கான தேவையும் இல்லாமலே அவருக்கும் வெத்திலைக்குமான தொடுப்பிருந்தது. அவருக்கு முன்னாலுள்ள மண் கொப்பறையில் ததும்பத் ததும்ப கருத்த வெத்திலை நிறைந்திருக்கும். கொஞ்சம் தள்ளி அஞ்சரைப்பெட்டியில் கொட்டப்பாக்கு கிடக்கும். சுண்ணாம்பிருக்கிற தகர டப்பாவும், அங்குவிலாஸ் போயிலையும் கைக்கெட்டுகிற தூரத்திலேயே இருக்கும். மேல்பரப்புக்கு வந்து மீன்கள் வாய் பிளக்கிற மாதிரி வாயைத்திறந்து கொர் கொர் என தொண்டையிலிருந்து சத்தம் எழுப்பி வெத்திலைச்சாறை வாய்க்குள் தக்கவைத்துக் கொள்வார். தூங்குகிற நேரம் போக எந்நேரமும், கன்னத்தின் இடது பக்கம் சிலந்தி மாதிரி பொடப்பா இருக்கும். சாப்பிட, வரக்காப்பி குடிக்க மட்டும் வெளியே வந்து வாய் கொப்பளிப்பார். அது தவிர நாள் முழுக்க சரப்பலகையிலே உட்கார்ந்திருப்பார்.
குத்துக்காலிட்டு, சம்மணம் கூட்டி, ஒருக்களிச்சு மாறி மாறி உட்கார்ந்து கொண்டு குண்டி காந்தலை தள்ளிப்போடுவார். கருங்காலி மரத்தாலான அந்தக் கல்லாப்பெட்டியில் அய்யாணார் கோயில் எண்ணச்சட்டி மாதிரி அழுக்கேறியிருக்கும். அதற்கு மேலே நீளவாக்கிலுள்ள கணக்கு நோட்டு இருக்கும். சாமுவேல் வாத்தியார், காலேஜ் மாடசாமி, பைபிளம்மா, பிரசண்டுசுந்தராசு, பேர்களில் தலைப்புபோட்டு அவருக்கான தமிழில் ஊச்சி ஊச்சியாய் கணக்கெழுதியிருப்பார். காலேஜ் மாடசாமி பொண்டாட்டி வந்து புஸ்த்தகத்தை தூக்கி 'இதென்ன மொலாளி கக்கூசுல எழுதுற கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் கணக்கு நோட்டுல எழுதிவச்சிருக்கீரு எங்க மாமா பேரு அஞ்சந்தான'. என்று சொல்லுவது குறித்தெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. அதற்கவர் மீண்டும் மீன் வாயைப்பிளக்கிற மாதிரி சிரிப்பார். எதிரே நிற்கிரவர்கள் மீது செகப்பா தூறல் விழும். அவர் எழுதுகிற அ வுக்கு கு வுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.
'எனக்கென்ன தாயி ஓங்க வீட்டுக்காரு மாறி காலேஜிப்படிப்பா கெட்டுப்போச்சு அந்தக்காலத்துல எங்கைய்யா பனைக்கி போயிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போவாரு பிள்ளமாரு வீட்டுப்பிள்ளைகளெல்லாம் பெஞ்சில ஒக்காரும் நாங்க பின்னாடி தரையில அதுக்கும் பின்னாடி ஒங்க தெருக்காரப்பிள்ளைக ஒக்காரனும், அதெல்லாம் படிப்பாம்மா' வெத்திலைச்சாறை கொர் கொர் என்று காறி வெளியில் வந்து செகப்பு உருண்டையாய் வெத்திலையைத்துப்பி விட்டு திரும்பவும் ஆரம்பிப்பார். அது இரண்டு தலைமுறைச்சரித்திரம்.
அந்தக் காலத்தில் ஆறுமுகச்சமியின் அய்யா இசக்கிமுத்து பனையேறுவதில் நாடறிந்த கெட்டிக்காரர். சுத்துப்பட்டியிலெல்லாம் "பனைக்கி இசக்கி" என்று சொலவடை சொல்லுகிற அளவுக்கு பெரிய வித்தைக்காரர். காலாக்கை இல்லாமல் நிமிசத்தில் பனையுச்சிக்குப் போவதும். கண்மூடி முழிக்குமுன்னே பதினிக்கலயத்தோடு கீழே நடப்பதுவும் பார்ப்பதற்கு கண்கட்டி வித்தை மாதிரி இருக்குமாம். சில நேரங்களில் அருகருகே இருக்கும் பனைகளில் ஒன்றிலிருந்து இறங்காமலே இன்னொரு மரத்துக்குத்தாவி விடுவதால் அவருக்கு ''மாயாவி'' ங்கிற பாட்டப்பெயரும் உண்டாம். அந்தக்காலத்தில் பனை ஏறத் துவங்குகிற எல்லாரும் அவருடைய காலைத் தொட்டுக்கும்பிட்டு விட்டுத்தான் பனையேறுவார்களாம். அதுமட்டுமில்லெ தெக்கத்தி கம்புக்கு அவராலாலேயே பேர் வருமளவுக்கு கம்பு விளையாட்டில் அவரே பல புதிய அடிகளையும் அடவுகளையும் உருவாக்கினார்.
அவர் கம்பு சுத்துவதைப்பார்க்க கொடுத்துவைக்கணும். கம்பைக்கையில் வாங்கி குருவணக்கம் சொல்லி தரைதொட்டுக் கும்பிடுகிற வரைதான் கம்பும் கையும் கண்ணுக்குத்தெரியும். சுத்த ஆரம்பித்ததும் காத்தைக்கிழிக்கிற சத்தம் மட்டுமே உய்ங் உய்ங் என்று கேட்டுக்கொண்டே இருக்குமாம். சில நேரங்களில் சுத்தியும் பத்து எளவட்டங்களை நிற்கச்சொல்லி அவர்களிடம் கல்குமியைக் கொடுத்து எரியச்சொல்வாராம். எல்லாக் கல்லும் கம்பில் பட்டு சிதறுமாம். அவரிடம் வெங்கலப் பூன்போட்ட பிரம்பு போக, சுருள் வாளும், மான் கொம்பும் கூட பள பளப்பாக இருக்குமாம். அந்தக் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கையில் அவர் கண்களுக்குள் ஒரு பனைக்கூட்டம் கிடந்து சலசலக்கும்.
சின்னப்பிராயத்தில் கஞ்சி கொண்டு போகும்போது ஒவ்வொரு பனைமரத்தையும் எண்ணிக்கொண்டே போவதும் கூட ஆறுமுகச்சாமியின் விளையாட்டுகளில் ஒன்று. முதல் முதலாக அய்யாவோடு பனைக்கூட்டத்துக்குள் நடக்கும்போது காத்தும் பனையோலைச் சலசலப்பும் எங்காவது ஒரு பனை மரத்திலிருந்து இன்னொரு பனையிலிருக்கிற ஆட்களோடு பேசுவது எல்லாமே அமானுஷ்யமாகத் தெரியும். ஒரு பயம் உண்டாகும். ஆனால் அய்யா பக்கத்திலிருப்பதால் அந்தப்பயம் தெரியாது. பழகிப்போன பிறகு பனைகளெல்லாம் சேக்காளி ஆகிப்போனது. அந்தச்சலசலப்பு அவனைக் குசலம் விசாரிக்கிற மாதிரியே இருக்கும். அது அப்பாவின் சேக்காளிகள். அவருக்குப்பிடித்த அந்த மரத்துக்குப் பக்கத்தில் வந்ததும் கஞ்சிச் சட்டியை இறக்கி வைத்து விட்டு அன்னாந்து பாளைகளையும், நுங்குகளையும் பார்த்து பார்த்து தனக்குள்ளே பேசிக்கொள்வது. திரும்பி வரும் போது எக்குப்போடு ஆறடி ஏழடி ஏறி, பிறகு சறுக்கிக் கீழே விழுந்தது எல்லாம் ஆறுமுகச்சாமிக்கு நினைவுக்கு வந்து போகும்.
பனையோலைக் குச்சல் தான் வீடு. பனங்காய் வண்டியும், பனமட்டைச் செருப்பும் அய்யா செய்து கொடுப்பார். அந்த வீட்டில் எப்போதும் பதினி வாடையும் கருப்பட்டி வாசமும் அவர்களோடே குடியிருக்கும். பதினிக்காலம் போனபின்னால், பனம்பழம். ஒரே ஒரு பழம் கிடந்தாலும்கூட கனவிலும் கூட இனிக்கிற வாசம் அந்தப் பிரதேசம் முழுக்க பரவியிருக்கும். அப்புறம் அவிச்ச பனங்கிழங்கு. இப்படி திங்கவும், விளாத்திகுளம் சந்தையில் கொண்டுபோய் விற்கவுமாக வருசம் பூராவும் அந்தப் பனைக் கூட்டம் அவர்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அய்யாவும் வீடு திரும்புகிற போது பதினிக் கலயத்துக்குள்ளோ, கையிலோ பண்டமில்லாமல் வரமாட்டார். காலையில் பனங்காட்டுக்குப் போகிற அய்யாவோடு இனிப்பு வடைகள் எப்படி வந்தது என்கிற சந்தேகம் தனக்குப் பிள்ளைகள் பிறக்கிற வரை தீராமலே இருந்தது. ஊரில் சில பேர் வேம்பாத்து கருவாடு வாங்கி வடகாட்டுக்கு கொண்டுபோய் வித்துவிட்டு பணங்காசு வச்சுப் பிழைத்தார்கள். சிலர் விளாத்திகுளம், விருதுநகர், சிவகாசி, சாத்தூர்ப் பக்கம் போய் கடைகள் வைத்து கல்லுவீடு கட்டினார்கள். எப்போதாவது குல தெய்வம் கும்பிட வருகிற அவர்களைப்பார்த்து "எசக்கில்லாத பயலுவ கால்ல பெலமில்லாம தெராசுபிடிக்க ஆரம்பிச்சுட்டானுவ'' என்று சொல்லிக்காண்டு அவர்களை வம்பிழுப்பார். அப்போதெல்லாம் அவர்குடித்திருக்கிற கள்ளுத்தண்ணி வாசத்துக்கு பயந்துகொண்டு யாரும் அவருக்கு பதில்சொல்லாமல் விலகிப் போய்விடுவார்கள்.
ஆனால் தெக்காட்டிலிருந்து ரெண்டு பேர் சிலம்பு படிக்க வந்து ஒரு வாரம் தங்கினார்கள். அவர்களோடு அய்யாவும் நாகர்கோவில் பக்கம் போனார்.
ஒரு நாள் இரண்டுநாள் அய்யா ஊரி இல்லாவிட்டால் கூட இரவுகளில் பனையோலைச் சத்தம் கேட்பதற்கு ரொம்பக் கர்ண கொடூரமாக இருக்கும். இப்போது அய்யா ஊரில் இல்லாமல் ஒரு வாரம் ஓடிவிட்டது. தனக்கு தின்பண்டங்களைப் பாதுகாத்துத் தருவதற்காகவே அய்யாவின் இடுப்பில் தொங்கும் பதினிக்கலயம், குச்சலின் மூலையில் மூளியாய்க் கிடந்தது. அந்த ஒரு வாரமும் சாராய வாடை இல்லாத வீடாகியது அவன் வீடு. ஒருவாரம் கழித்துத் திரும்பி வந்து அம்மையிடம் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு பனைத்தொழில் பார்க்கப்போவதாகச் சொல்லிவிட்டு மீண்டும் போனவரைப்பற்றி ஊருக்குள் கதைகள் மட்டும் தான் கிடைத்தது. அவர் ஆளே வரவில்லை. கொஞ்ச நாள் கழித்து போலீஸ் தேடி வந்தது அம்மாவிடம் துருவித்துருவி கேள்விகள் கேட்டது. அதிலிருந்து ஊரும் அவன் சோட்டுப்பிள்ளைகளும் அவனை வித்தியாசமாகப் பார்த்தது. அத்தோடு பள்ளிக்கூடத்துக்கும் அவருக்குமான உறவும் துண்டிக்கப்பாட்டது. அம்மா நாள் முழுக்க வீட்டுக்குள்ளே கிடந்தாள். சாப்பாடு தண்ணி யில்லாமல் வெளிரிப் போயிருந்தாள்.
சாத்தூர் பாக்கம் பந்துவார்பட்டியில் கடைவைத்திருந்த மாமா வந்தார். ஒரு சின்ன ரெங்குப்பெட்டிக்குள் துணிமணிகளையும் ஒரு குட்டிச்சாக்குக்குள் பாத்திர பண்டங்களையும் அடைத்துக்கொண்டு ரெண்டுபேரையும் கூட்டிக்கொண்டு போனார். பஸ்டாப்புவரை வந்த ஆறுமுகச்சாமி திரும்ப ஓடிப்போய் அய்யாவின் வெங்கலப்பூன் போட்ட ஊணு கம்பைத் தூக்கி வந்தான். அம்மையும் அதை வாங்கி ஆசையோடு தடவிக்கொடுத்தாள். மாமன் வெறிகொண்டு அனதக்கம்பைப் பிடுங்கித் தூர எறிந்தார். அய்யாவையே தூரத்தூக்கி எறிந்த மாதிரி வலித்தது. அந்த வலியோடு மாமன் சேத்துவிட்ட புளியமரத்துக் கடையில் சரக்கு மடிக்கும் கடைப்பையனாகச் சேர்ந்தார். சலசலக்கிற பனங்காடும், டவுசர் கிழிந்த சேக்காலிகளும், பரந்து கிடந்த வனாந்திரக்காடும், தாய் அடித்த வலியும், தந்தை கொடுத்த பண்டமும் ஒட்டுமொத்தமாய்க் கானாமல் போக, உப்பு புளி சீமைத்தண்ணி வாசத்துக்குள் விடிய விடிய அடைத்துவைக்கப்பட்டார்.
கருப்பையா வாத்தியார் வீட்டுக்கு சாமான் இறக்கி வைக்கப்போகும்போது ஏவீஸ்கூலின் இறைச்சல் தேவகீதமாகக் கேட்கும். ஒண்ணுக்கு ரெண்டுக்கு விடும்போது பிள்ளைக்கூட்டம் சக்கரைச் செட்டியாரிடம் சவ்வு மிட்டாய் வாங்கித்திங்கிற தருணம் பலநாள் கனவில் திரும்பத் திரும்ப வரும். சீனி மடிக்கிற தாளில் இருக்கும் படமும் கதையும் படிக்கிறபோதொரு நாள் பொடதியில் படீரென்று அறைவிழுந்தது.அந்தமாட்டுல அடிச்ச மொதலாளிகைய ஒடிச்சுப்பிட்டு ஓடிப்பிடலாமான்னு ஆத்திரம் பொங்கிய போதே, அதிகமாக நாலு அடி முதுகில் விழ, நெடுநேரம் அழுதுகிடந்தான். அந்த வாரம் வீட்டுக்குப்போய் இனி களையெடுத்தாவது கஞ்சி குடிப்பேன் எனக்கு சரக்குமடிக்கிற உத்தியோகம் வேண்டாமென்று தாயிடம் மன்றாடினான். மாமனிடமும் அடிபட்டதுதான் மிச்சம். அதுக்கு கடக்காரனிடம் அடிவாங்குவது தேவலையென்று திரும்பவும் கடைக்கு வந்தான். அன்று மூக்கநாடார் வஞ்ச வசவு ஏழு தலைமுறைக்குப் போதுமானதாக இருந்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த ரோசமும் மெல்ல மெல்ல கறைந்து போனதாக உணர்ந்தான். பிறகு கடையே கதியெனக் கிடந்தான். கையை ஊனிக் கரணம் பாய்ஞ்சி காலம் தள்ளினார். தனிக்கடை போடுமளவிற்கு வளர்ந்த போது ஒரு பொட்டிக்கடைக்கான சாமானுடன் மகள் தங்கத்தாயையும் கொடுத்தார். பந்துவார் பட்டியில் முன்னதாக ரெண்டு கடைகள் இருந்ததனால் சூரங்குடியில் கடை வைத்து பிள்ளைமார் தெருவில் வீடும் பார்த்து குடியேறி இருவது வருடம் ஓடிப்போனது.
ஆரம்பத்தில் அன்னாடம் சாப்பாட்டுக்கு மிஞ்சுவதே சிரமமா இருந்தது, குடிச்சும் குடியாமலும் வெறும் வெத்திலையை அதக்கிக்கொண்டு பசியைத் தள்ளிப்போட்டு, தம் கட்டியே பழகிப்போக, ரெண்டே ரெண்டு வருசத்தில் முதலியார் செவக்காட்டை கிரயம் பண்ணும் அளவுக்கு யாவாரம் சூடு பிடித்தது. அந்தக் காலத்தில் தான் அவருக்கு அந்த எளப்பு நோய் கண்டது. சாத்தூர் டவுனாஸ்பத்திரிக்கு போய் வைத்தியம் பார்க்க
நேரமில்லை. கைவைத்தியம் தான். மஞ்சனத்திச் சாறு பிழிஞ்சு குடித்தார். லச்சகெட்டகீரை வதக்கி சாப்பிட்டார். சுக்கு மிளகு திப்பிலி கருப்பட்டி போட்டு லேகியம் பண்ணிக்கொடுத்தார் வைத்தியர். அது சாப்பிடும்போது தேவலையாக இருக்கும், பின்னாடி ஒரு வாரத்தில் மறுபடியும் அந்த எளப்பு வந்துவிடும். தோணுகால் வைத்தியர் வந்து காக்காக்கறி சப்பிடச் சொன்னார்.சாம்பாக்கமார் தெருப்பிள்ளைகளிடம் சொல்லி பிடித்து வந்த காக்காயைப் பார்த்து அலறியடித்து பந்துவார் பட்டிக்கு அப்பன் வீட்டுக்கு ஓடிவிட்டார் தங்கத்தாயம்மாள். அதுக்குப்பிறகு வெள்ளச்சியிடம் கொடுத்து மணக்க மணக்க சாறு குடித்தார்.
சாயங்காளம் கலிக்கிண்டி, நடுவிலே குழி மதிச்சி காக்காக்கறி பரிமாறினாள். கையில் ஒட்டிக்கொண்ட கலியில் வெள்ளச்சியின்அன்பு கலந்திருந்ததைக் கண்டுபிடிக்க வெகுகாலம் பிடிக்கவில்லை. பின்நாட்களில் காக்காய் தேடி பையன்கள் அலையாமல் பள்ளிக்கூடம் போனதால், காக்காய் கிடைப்பது குதிரைக் கொம்பானது. ஈரல் திண்ணாத் தேவலையாகும் என்று வெள்ளச்சி சொன்ன மாத்திரத்தில் ஓங்கரித்து வாந்தியெடுப்பது போல் பாவனை காட்டினார் ஆறுகச்சாமி. அதன்பிறகு ரொம்பநாள் தைப்பு வராமலும் வெள்ளச்சி வராமலும் காலம் நகர்ந்தது. பின்பனிகாலம் ஆரம்பித்த மாசி மாசத்திலொருநாள் கடை திறக்க காலையிலே வந்தவர் இளைப்பு வந்து சரப்பலகையோடு சாய்ந்துகிடந்தார். பக்கத்துவீட்டு மாரியப்பன் பொண்டாட்டி ஓடிவந்து கூச்சப்போட்டு சாம்பாக்கமார் தெருவே கூடியது வெந்நி கொடுத்து கால் கை தேய்த்து விட்டது சனம். அன்று பகல் பொழுதில் கடைக்கு வந்த எல்லோருமே ஆளாளுக்கு வைத்தியம் சொன்னார்கள் அவர்கள் சொன்ன வைத்தியம் வெள்ளச்சி சொன்ன வைத்தியமாக இருந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஈரல் மருந்தாகியது. பிறகென்ன வாராவாரம் முதல் கூறு மொதலாளிக்கு என்று சொல்லும் அளவிற்கு கடக்கார ஆறுகச்சாமி மாரிப்போனார். தங்கத்தாயும் இப்போது ஈரல் சமைக்கிற கைப் பக்குவம் கற்றுக்கொண்டார். இருந்தாலும் வெள்ளச்சி கையில் சுட்டுக்கொண்டு வரும் பொங்குக்கறியில் கிடைக்கிற ருசிக்கு இணையாக ஏதும் இருப்பதாகப் படவில்லை.பிடிக்காத பொம்பளை சிங்கப்பூர் செண்டு போட்டாக்கூட நாத்தமடிக்கும், பிடிச்சுப்போயிட்டா கம்புக்கூட்டு வாசம் கூட ஜவ்வாது வாசமாகும்.
ஆந்திராவுக்கு கல்லுடைக்கப்போன வெள்ளச்சி புருசன் அங்கிருக்கிற தார்ப்பாச்சா கட்டிய தெலுங்குக்காரியைச் சேகரம் சேத்துவச்சிக் கிட்டான் என்று ஊர் பேசியது. அது நெசமோ பொய்யோ தெரியவில்லை ஆனால் போன புருசன் திரும்ப வரவேயில்லை. அவளும் எத்தனைநாள் மானத்தப் பாத்துக்கிட்டே படுத்துக்கிடப்பாள். ஆறுமுகச்சாமியும் ஒருவாச்ச அரிசிமூடை வெளியே கிடக்கு என்று சொல்லிக் கடையிலே படுத்துக்கொள்வார். அரசல் புரசலாக ரெண்டு முறை ஊர்க் கூட்டத்தில் பிராதாக தனக்கும் ஆறுகச்சாமிக்கும் தொடுப்பில்லை என்று பிள்ளையைப் போட்டுத் தாண்டினாள்.
''இருக்கிற ஆம்பிலைகளையெல்லாம் பொட்டப்பயகன்னு நெனச்சியா''
சொல்லிக்கொண்டே வெள்ளச்சியின் கொழுந்தனொருவன் அவள் தலை மயிர் பிடித்துக் கீழே தள்ளி நாலு மிதி மிதித்தான். ஏ பெரிய கொம்பனக் கெனக்கா பொட்டச்சியெ அடிக்கிறெ, ஊரு விட்டு ஊரு வந்து கை வச்ச கடக்காரனெ உக்கார வச்சிப் பேசிக்கிட்டு என்று கூட்டத்துக்குள்ளிருந்து யாரோ சொன்னதும் ஊர்க்கூட்டம் முடிவில்லாமல் கலையும் அளவுக்கு சளசளப்பானது. மறுநாளிலிருந்து ராத்திரி கடைபூட்டிப்போகும் ஆறுமுகச்சாமியை யாரோ பின்தொடருகிற மாதிரியே இருந்தது. அவரும் தைரியமாகத்தான் அலைந்தார். ஆனாலும் பொங்கல் அன்று எல்லோரும் களத்தில் சாமி பார்த்துக்கொண்டிருக்கையில் தெரு வெறிச்சோடியிருந்தது. தெரு விளக்கை அனைத்துவிட்டு நாலைந்துபேர் ஆறுமுகச்சாமியின் வீட்டில் கல்லெறிந்து ஓடினார்கள். அன்று இரவு ஆறுமுகச்சாமியின் வீடு விளக்கணைக்காமல் முழித்துக்கிடந்தது. மெட்ராசில் கடைப்பையனாக இருந்த மகன் வன்னியராஜ் வந்து இருந்த நிலங்களை விற்றுக் காசாக்குவதில் மும்முரமாக இருந்தான். அவனுக்கு கடையைக்காலி பண்ணுவதனால் சென்னையில் தனியாக தொழில் பண்ண நிலம் விற்ற காசு உதவியது. ஊர்த் தலைவர் வந்து கண்ணீர் விடாத குறையாக போகவேண்டாமென்று மன்றாடினார், உரில் பாதிச்சனம் வந்து கண்கள் கலங்க ஆறுமுகச்சாமியைப் பார்த்துவிட்டுப் போனார்கள்.
ஒரு சனிக்கிழமை சாயங்காலம் சாத்தூர் போய் ரயிலேறிப்போனது அவரது குடும்பம். கொஞ்ச நாள் சம்பவங்களால் நினைவு கூறப்பட்டதும் நாளடைவில் சுருங்கிப்போனது. சந்தோசம் சண்டை வறுமை களியாட்டம் என மாறி மாறி ஒரு இறுபது வருடம் கடந்து போனது. செதுக்கி மம்பட்டி சுத்தியல் கொண்டு தன்னை நெருங்கிய வறுமையைச் சமாளித்தாள். ஆனால் ஒவ்வொரு இரவையும் ரொம்பக்கடினப்பட்டுக் கடத்திவிட்டாள். இடையி ஒரு முறை ஊருக்கு வந்த வெள்ளச்சி புருசன் மகன்களை மனைவியை விடக் கூரைவீட்டை மட்டும் சுற்றிச்சுற்றி வந்தான் தரகரோடு வந்து விலை பேசியவனை மகன்கள் இருவரும் சேர்ந்து நடுத் தெருவில்போட்டு நாலு மொத்து மொத்தியதோடு ஓடிப்போனவன் ஊர் திரும்பவே இல்லை. இரண்டு பையன்களும் சொந்தமாக உழைக்க ஆரம்பித்துக் கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றினார்கள். நல்ல சாப்பாடும் துணிமணிகளும் மகன்களால் வந்து சேர்ந்தது. இருந்தும் இரவுகளில் நெடுநேரம் முழித்துக் கிடக்கிற தாயைக் காணச்சகிக்காமல் திண்ணையில் படுத்தார்கள்.
முத்து நகர் துரித வண்டியிலிருந்து இறங்கியதும் ஆறுகச்சாமிக்கு, ஜெயிலில் இருந்து வெளிவந்தது போலிருந்தது. சென்னை எக்மோர் ரயில் நிலையத்தைப் போல நிழல் கூரையும், தலைக்குமேல் தொங்குபாலமும் இருந்தது. தெரிந்த முகங்கள் ஏதும் தட்டுப்படவில்லை. தன்னோடு மூக்கநாடார் கடையில் சரக்குப்பையனாக இருந்த மாரிக்கனி தொந்தியைத் தூக்கமுடியாமல் நான்கு பேரோடு நடந்துவந்தார். அவருக்கு ஆறுகச்சாமி அடையாளம் தெரியவில்லை. பலசரக்குக் கடையில் ராத்திரி நேரங்களில் ஆறுகச்சாமி மேல் காலைப்போட்டுக்கொண்டு உறங்கிய நாட்களை எப்படி மறந்து போனான் என்ற நினைத்துக்கொண்டே நின்றார். தூரத்தில் போய் திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் நடைப்பயிற்சியைத் தொடங்கினார் மாரிக்கனி. எப்போது சூரங் குடியை மிதிப்போம் என்னும் குறு குறுப்பு சின்னப்பிள்ளையைப் போலக் குதியாட்டம் போட்டது.
பேருந்தில் இறங்கி நடந்த போது பத்துப்பதினைந்து பேர் கூடவந்தார்கள்.எல்லாரும் எளவட்டங்களாக பள்ளிக்கூடப்பிள்ளைகளாக இருந்தார்கள். யாரும் அடையாளம் தெரியவில்லை.ஒரு சீருடை அணிந்த பெண்ணிடம் 'எம்மா யாரு மகா நீயி' என்று கேட்டார்.பேரைச்சொன்னதும் தனது யூகம் சரிதானென்று முடிவுசெய்துகொண்டார்.'தாத்தா நீங்க எந்தூரு,யாருவீட்டுக்குபோகனும்'.அவர் எந்த ஊரைச்சொல்லுவார். சென்னையையா,சூரங்குடியையா, இல்லை வேம்பாரையா.
'வெளியூரம்மா'.
முப்பது வருடங்கள் ஓடிப்போயிருந்தது. ஊர் பெரிதாகை இருந்தது. நேரே அவர் வாழ்ந்த அந்த வீட்டுக்குப்போனார். திண்ணையில் ஒரு தையல் மிஷின் இருந்தது. எதிர்த்த தாழ்வாரத்தில் ஒரு டிவீஎஸ் 50 நின்றிருந்தது. அங்குதான் எப்போதும் மூன்று பசுமாடுகள் வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும்.அவர்வந்தவுடன் கனைக்கும்.மூஸுமூஸு என்று மூச்சு விடும்.கண்ணை மூடிக்கொண்டு அந்த நாட்களை நினைத்துக்கொண்டார்.
அந்த வீட்டில் குடியிருந்த வீஏஓ மனைவி வந்து விசாரித்தாள்.சொன்னதும் அப்படியா என்று சொல்லிவிட்டு உள்ளே போவிட்டாள்.அந்த தெரு முழுக்க வேறு வேறு ஆட்கள் குடிவந்துவிட்டார்கள்.கடைசி வீட்டில் குடியிருந்த
கணேசபிள்ளையின் மனைவி வந்து வீட்டுக்கு கூப்பிட்டுக்கொண்டு போனாள்.ரெண்டு மணி நேரம் முப்பது வருடக்கதைகளைப்பேசித் தீராமல் எம்மா செத்த அப்படியே ஊருக்குள்ள போய்ட்டு வாரன் என்று சொல்லிவிட்டு நடந்தார்.கடை இருந்த இடம் இடிக்கப்பட்டு வீடாகியிருந்தது. அவர் சோட்டு ஆட்களில் சிலர் வந்து பேசிவிட்டுப்போனார்கள்.வெள்ளச்சிப்பாட்டி வந்தது.வாங்க எப்ப வந்திக என்று கேட்டது.வீட்டுக்கு கூப்பிட்டுக்கொண்டு போனது.கூரை வீடு இப்போது ஓடு வேய்ந்து மின் விசிரியெல்லாம் இருந்தது.மகன்கள் ரெண்டு பேரும் அய்யா வாங்க என்று எழுந்தார்கள்.பக்கத்து வீட்டில் சேர்வாங்கி வந்து உட்கார வைத்தார்கள்.காப்பி கொடுத்தார்கள். குடித்துக்கொண்டே வீட்டை நோட்டம் விட்டார்.ஒரு மூலையில் குத்துப் பலகை கிடந்தது.கருங்காலி மரத்தாலான குத்துப்பலகை. அது அவரது குத்துப்பலகை.
உடம்பு சிலீரென்றது.
23 comments:
என்னய அறியாம கண்ணுலேந்து கண்ணிர் வழியுது சார். ரொம்ப நாள் ஆகிடுச்சு இப்படி ஒரு எழுத்த படிச்சு. ரொம்ப நன்றி...
ஒரே ஒரு சந்தேகம் மூக்கன்செட்டியார் கடை கேள்வி பட்ருக்கேன்.. மூக்கன்நாடார் கேள்வி பட்டதுல்ல நான்.. கதைக்காக உருவாக்க பட்டதா...
--பிடிக்காத பொம்பளை சிங்கப்பூர் செண்டு போட்டாக்கூட நாத்தமடிக்கும், பிடிச்சுப்போயிட்டா கம்புக்கூட்டு வாசம் கூட ஜவ்வாது வாசமாகும். ---
ரொம்ப ரசிச்சேன் சார்.. நன்றி.
//ஒரே ஒரு சந்தேகம் மூக்கன்செட்டியார் கடை கேள்வி பட்ருக்கேன்.. மூக்கன்நாடார் கேள்வி பட்டதுல்ல நான்.. கதைக்காக உருவாக்க பட்டதா...//
நன்றி.கண்ணன் நீங்க சாத்தூர்க்காராரில்லையா ஹஹ்ஹஹ்ஹா....
இது கதைக்காகவே.
நண்பரே, அப்படியே கையப் பிடிச்சு உங்க ஊரையும் காமிச்சு, ஊர் கதையும் சொல்ற பாங்கு, உங்கள விட்டா யாருக்கு வரும். அப்பிடியே முன்ன பின்ன பார்த்திராத உங்க ஊரப் பார்த்தா மாதிரி இருந்தது.
ரொம்ப நன்றிங்க.
காமராஜ் தம்பி என்று சொல்லலாமில்லையா. இரண்டு தலைமுறை வரலாறு இது. அருமையாக பதிவு செய்து இருக்கிறீர்கள் .எந்த இடத்திலும் நிறுத்த விரும்பாமல் தொடர்ந்து படித்து, என்ன சொல்லி பாராட்ட எனத் தெரியவில்லை. ஒவ்வொரு பத்தி யாகத் தான் மேற்கோள் காட்டியாக வேண்டும் . i think i am over excited.
காமு சார் ! புரட்டி போடுகிறது ஒரு நாவலை சிறுகதையாக்கியிருக்கும் மொழித்திறம்
எழுதுங்கைய்யா !வேறென்ன சொல்ல ...
எல்லா வார்த்தைகளும் கொண்டு பாராட்டி ஆகி விட்டது.
வேறு என்ன சொல்ல.
இந்த மாதிரி அற்புதமான படைப்பாளிகளை தந்துள்ள சாத்தூர் வட்டாரத்திற்கும், படிக்க உதவும் இணையத்திற்கும் கோடானு கோடி நன்றிகள்
காமராஜ்! இரவு 10.30 க்கு தான் படுத்தேன். காலைல பாத்தா பின்னூட்டத்தோடு உம்ம இடுகை கண்ணைச்மிட்டுது. 2.15 க்கு நேசமித்ரன் பின்னூட்டம் பொட்டு முந்திக்கிட்டார். சின்னவயசுல எங்க பனந்தோப்பில பொரண்டிருக்கேன். மொழி இருக்கு.ஆளுமை இருக்கு.நெஞ்சுல சரக்கு இருக்கு. அப்புறம் இத நாவலா எழுத வேண்டியதுதான. தோழரே! உம்மால் முடியும்---காஸ்யபன்..
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
வணக்கம் சேது சார் நலமா.
பத்துநாட்கள் வலைப்பக்கமே வரமுடியவில்லை.
கருத்துக்கு நன்றி.
Mahi_Granny said...
// காமராஜ் தம்பி என்று சொல்லலாமில்லையா.//
ரொம்ப ரொம்ப சந்தோஷம். இத விட வேறென்ன வேனும்.
//இரண்டு தலைமுறை வரலாறு இது. அருமையாக பதிவு செய்து இருக்கிறீர்கள் .//
மிக்க நன்றி
நேசன் வணக்கம் எப்டீ இருக்கீங்க....
எல்லா வார்த்தைகளும் வார்த்தைகளல்ல ராம்ஜி. அத்தனையும் அக்மார்க அன்பு.
ஸ்வேதா மற்றும் காஷ்யபன் தோழர் நன்றிங்க
ஆமாம். இது ஒரு அருமையான நாவலாகணும் காமராஜ். இப்பல்லாம் கடைசிவரிய முதல்ல படிக்கணுங்கற உந்தல கட்டுப்படுத்தி படிக்கவேண்டியிருக்கு:)).
ஆமாம். இது ஒரு அருமையான நாவலாகணும் காமராஜ். இப்பல்லாம் கடைசிவரிய முதல்ல படிக்கணுங்கற உந்தல கட்டுப்படுத்தி படிக்கவேண்டியிருக்கு:)).
ரொம்ப நன்றி பாலாண்ணா.
கண்கள் பனித்துப் போகிறது காம்ஸ். சுழன்றடிக்கும் நினைவுகளுடன் வாழ்க்கை பெருவேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனூடாக "நினைவில் சலசலக்கும் பனங்காடுகள்" தான் ஈரம் மிகுந்தவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.வெத்திலை வாசமும்,கம்பு ழற்றலும்,சொலவடையும்,சுரங்குடியும்,பழைய நினைவுகளை மீட்டி நெஞ்சாங்கூட்டுக்குள் வந்து அமர்ந்துவிடுகிறது.நினைவுகளின் மீட்டலில் சுரம் இருக்கிறதுதான் எப்போதும்,,,...சுரங்களின் லயங்களில் பயணிக்கிற வாழ்க்கை சில நேரம் இனிப்பாய், சில நேரம் கசப்பாய்.இது மாதிரியான எழுத்துக்கள் உங்களை உயர்த்திக் காண்பிக்கிறது காம்ஸ்.நன்றி.
இந்த பதிவை முன்னமே உங்கள் தளத்தில் படித்த மாதிரி நியாபகம்..!
ஆனா அப்போ முழுதுமாக வரவில்லை....
கொஞ்சம் மட்டும் எழுதியிருந்தீங்க........
அருமையா இருந்தது... இந்த வாழ்க்கை குறிப்பு....
அன்பின் மூர்த்தி.
சும்மா எழுதி வச்சு போடலாம வேண்டமன்னு இருந்த கதை பத்துநாள் ஊரில் இல்லாத பள்ளத்தை நிறப்ப போட்டுவிட்டேன்.நல்லா வந்துருக்கா? சந்தோஷம்.
வாங்க தம்பி லெமூரியன்.
வணக்கம்,
ஆமாம்
இதில் வரும் பனங்காட்டைப்பற்றிய பகுதியைக்
சின்னப் பதிவாகப்போட்டேன்.இது ஒரு நெடுங்கதை. இன்னும் இருக்கிறது. அச்சில் முழுமையாக வரும்.
சிறு வயதில் கேட்டு வளர்ந்த நாஞ்சில் நாட்டு தமிழ் வார்த்தைகள்......அவைகளில் பாதி மறந்து போனதா?....அல்லது உபயோகபடுத்த வாய்ப்பு இல்லாமல் போனதா? என்று தெரியவில்லை. உங்கள் கதை படித்த போது என் சிறுவயது நினைவுகள் வந்து போனது என்பது உண்மையே......மிகவும் அருமை
மண் நேசம் மிகுந்த யாரும் இக்கதையோடு வாழவே செய்வார்கள் .. இருபது வருடங்களாக நகரங்களோடு மல்லுக்கட்டும் கிராமத்தானாக வாழும் எனக்கு இப்படிப்பட்ட எழுத்துதான் துணை ... மிக்க நன்றி ஐயா ...
Post a Comment