வீடுகட்டிக் குடிவந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.கொல்லையில் வைத்த கறிவேப்பிலைச்செடி அந்தக் களிமண்ணிலிருந்து எழுந்துவரமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது. 'வச்சு ஒருவருஷமாகப்போகுது ரெண்டு இணுக்கு கூட விடமாட்டீங்குதே என்னங்க வேர்பிடிக்கலையோ' என்றாள். பத்து வருஷமாச்சு எனக்கே இந்த நகரத்தோடு ஒட்டமுடியவில்லை.இது ஊரிலிருந்து கொண்டுவந்தது.சின்ன முணியாண்டி சொல்லிக்கொண்டே தெருவில் கிடந்த மாட்டுச் சாணத்தை எடுத்துவந்து செடியின் தூருக்கடியில் போட்டான்.எரிவாயு அடுப்பு,கறிக்கோழி ,வேத்தாள் வந்தா உட்கார தனி அறை,ரிமோட்டில் இயங்கும் தொலைக்காட்சிப் பெட்டி,உள்ளூர் மெற்றிக்குலேசனில் பிள்ளைகள் படிப்பு,கண்ணைப்பறிக்காத கலரில் உடுப்புகள் என சுற்றுப்புறங்களை எல்லாம் பூசியபின்னும் இன்னும் உள்வீடு
கிராமத்து மண்சுவர் தேடியபடியே அலைகிறது.அந்த மத்தியதரக் குடியிருப்பில் இறுக்கிக்கட்டினாலும் மேக்க பாத்து இழுத்துக்கொண்டு ஓடுகிறது மனசு.
சனி ஞாயிறுகளில் வீட்டுக்கு வரும் அய்யாவை கட்டிலில் படுக்கச்சொன்னால் ஒரு போர்வையும் தலகாணியும் எடுத்துக்கொண்டு மெத்துக்குப்போய் விடுகிறார். அல்லது தாவாரத்திலே படுக்கிறார்.சுகமில்லாத ரெண்டு நாளில் இருநூறுதரம் ஊரைப்பற்றியே பேசுகிறார்.காட்டுப்பக்கம் போய் தும்பையும் துளசியும் பிடுங்கிக்கொண்டு வந்து கஷாயம் போட்டுக் குடிக்கிறார். வாங்கிய மாத்திரைகளை சாத்துரிலேயே போட்டுவிட்டு காய்ச்ச குறைவதற்குள் பஸ் ஏறிப்போய்விடுகிறார்.இப்படிக் கட்டுத்தறி அறுத்துக்கொண்டு போகும் சிலாக்கியம் அவரைப்போலவே நகரத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் வாய்த்து விடுகிறது. ஊருக்குப்போனால் மின்விசிறி தேடுதும், பம்புசெட்டுக்குப் போனால் வாய்க்காத் தண்ணீரில் குளிப்பதுவுமாக, விலகி இருத்தல் அவர்களின் வாடிக்கையாகிப்போகிறது.இந்த இரண்டுக்கும் நடுவில் இழுபடுகிற சின்ன முணியாண்டிக்கு தொலைத் தொடர்புத்துறையில் எழுத்தர் வேலை.
'மொதல்ல அதிகாரிகளுக்கு முன்னாடி இப்படி நெஞ்ச நிமித்திக்கிட்டு நிக்கக்கூடாது,அதப்படிச்சுக்கோ. அப்புறம்வேலையைப் படிச்சுக்கலாம்' என்று சொன்ன ராமநாதனை என்ன செய்வதென்று தெரியவில்லை.பத்துமணிக்கு ஆபீஸுன்னா பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே சீட்ல இருக்கணும்.அதிகாரி வந்தால் எழுந்திரிச்சு வணக்கம் சொல்லணும்.சரியா அஞ்சடிச்சதும் சீட்ட விட்டுப்போகக்கூடாது. வேல முடிஞ்சிருந்தாலும் ஒன் அவர் போக்கு காட்டிட்டு ஆறு மணிக்கு கிளம்பணும். பொளைக்கத்தெரியாத பிள்ளையார்க்கியே'. இது பொழப்பா. 'அதிகாரி தப்பா செஞ்சாலும் சொன்னாலும் சரின்னுட்டு அப்புறம் பத்து நிமிஷம் கழிச்சு பணிவா எனக்கு இப்படி ஒரு சந்தேகம் இருக்குன்னுதான் சொல்லணும்'. என்று அடுக்கிக்
கொண்டே போனான்.அலுவலக விதிமுறைகளிலும்,வேலைப் பிரிவினையிலும் இதெங்கும் சொல்லப்படவே இல்லையே என்றான் முணியாண்டி.'இது சரிப்படாது தம்பி'சலித்துக்கொண்டான் ராமநாதன்.
அவனது ஊரில் ஐநூறு தலக்கட்டில் இதே போல ஒரே ஒரு ஆள் இருந்தார். தாடிக்காரப் பெருமாளு. அவர்தான் ஆயிரம் நொறநாட்டியம் பேசுவார்.
சுற்றுச்சுவர் இல்லாத தண்ணிக் கிணற்றில் வெள்ளத்தாயி தவறி விழுந்ததும் தெக்குத்தெரு சுப்பன் குதிச்சு தூக்கிட்டு வந்தார்.வெள்ளத்தாயோட உயிர் பற்றிக் கவலைப்படாமல் சுப்பன் விழுந்து குடிதண்ணி கெட்டுப்போசேன்னு வியாக்யானம் பண்ணியவர்.வெனயம் புடிச்ச மனுஷன் என்று ஊரே சொல்லும். இங்கே அதற்குப்பெயர் கன்னிங்.இந்த நகரம் முழுக்க தாடிக்கரப் பெருமாளு தான் அதிகம்.
ஒருநாள் நடு இரவில் தெருவில் ஒரு பலத்த சத்தம் கேட்டது எழுந்து ஓடிப்போய்க் கதவைத்திறந்து பார்த்தான்.பாட்டு டீச்சர் வீட்டில் திருடர்கள் வந்து கதவைத்திறக்கச் சொல்லி மிரட்டிக்கொண்டிருந்தார்கள். விசிலடித்து சத்தம் போட்டு போலீஸ் போலீசெனக் கத்தி,கையில் ஒரு கம்பெடுத்துக் கொண்டு நெருங்கினான்.தெரு முழித்துவிடும் அபாயம் உணர்ந்த திருடர்கள் ஓடிப்போனார்கள்.அவ்வளவு சத்தம் கேட்ட பிறகும் யார் வீட்டுக்கதவும் திறக்கவில்லை என்பது நூதனமாகத் தெரிந்தது இவனுக்கு.காலையில் பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் கூப்பிட்டு'சத்தம் வந்தா உடனே ஜன்னலைத் திறந்துதான் பாக்கனும் சார்,இல்லே அந்த வீடு தெறக்கலேன்னு ஒங்கவீட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டா'
'நுழைஞ்சா டீவிப்பெட்டி இருக்கு அதைத் தூக்கிக்கிட்டு போயிறுவான்,அதும் கூட ரிப்பேராகி ஒரு வருஷமாச்சு,செரி ஒங்க வீட்டுக்குள்ள புகுந்தாலும் இதே விதிதானா ' முனியாண்டி சொன்னதும் 'அப்ப நா வர்ரேன் சார் ' என்று இடத்தைக் காலிபண்ணினார்.ஒவ்வொரு வீடும் தனித்தனித் தீவாகித் தெரியும்.குழம்பு, துவையல்,ரசம்,பண்டங்கள் அந்தத்ந்த வீட்டுக்குள்ளேயே உற்பத்தியாகி அங்கேயே அழிந்துபோவதும் அல்லது அழுகிப்போவதுமான் துர்ப்பாக்கியம் நிரைந்தது இந்த குடியிருப்புக்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான் முனியாண்டி.
காய்ச்சலோடு கிடந்த இன்னாசிமுத்து வாத்தியாரை துளசிச்செடியோடு மொத்தமாய் பார்க்கப்போன அந்த ரிடையர்டான கூட்டத்தைப் பார்க்கும் வரை.
9 comments:
காலையில வெறுப்பேத்துறீங்க. அவ்வ். பால்கனியில க்ரோட்டன்சும், கள்ளிச்செடியும் வளருதே தவிர பூச்செடி துளசியெல்லாம் போங்கடான்னு போயிருது. குழாய் பிச்சுக்கிச்சுப்பா. பதினஞ்சு நிமிசம் வால்வ் மூடுறேன்னா, முந்தா நேத்தே ஏன் சொல்லலைன்னு சண்டைக்கு வருவாங்க. கால்வாய் அடைச்சிகிட்டு மேல வருதுப்பா, உங்க ஷேர் குடுங்கன்னா, எனக்கு வலப்பக்கத்துல இல்ல இருக்கு கக்கூசு, உங்க பக்கத்துக்கு நான் ஏன் குடுக்கணும்னு சண்டை. பசியோட களைச்சி வந்து, ஆண்டி அம்மா எங்க போயிருக்காங்கன்னு கேக்குற குழந்தைக்கு க்ரில்லுக்கு அந்தப் புறமிருந்தே தெரியாது என்ற பதில். தபால் காரர் சொருகிவிட்டு போகும் கடிதம் பறந்து தரையில் மிதிபட்டாலும், ஓரம் கிழிஞ்சிருக்கு. நாம படிச்சிட்டோம்னு சண்டை போடுவாங்கன்னு கடந்து போகும் புத்தி. பக்கத்து வீட்டில் சாவு என்றால் பூட்டிக் கொண்டு வெளியில் கிளம்பும் நல்ல மனசு. எல்லாம் மறந்துட்டு அவனுக்கு இதெல்லாம் வரும்போது மட்டும் வரும் பாருங்க சலிப்பு. இப்படியும் பொழச்சிட்டிருக்கோம்:)) நாஆஆஆகரீகமா.
ம்..நல்ல பதிவு ..
நல்லவேளை எங்க வீட்டு துவையலும் , குழி அப்பமுமோ .. ஒரு இனிப்போ எதிர்வீட்டு
அம்பாசமுத்திரக்காரங்களுக்கோ..
மாடிவீட்டு குமாவுன் மலைக்காரங்களுக்கோ போகுது
அங்கிருந்தும் ஓரு தால்மக்கனியும் பனீர் பக்கோராவும் வருது..பாலங்களை
உருவாக்கிக்கவேண்டியது தான் ..
தொட்டியில் வச்ச ஓமவல்லியில் ஒரு கிள்ளும்.. கத்தாழையில் ஒரு கொம்பும் கூட பரிமாறும் பாக்கியத்துக்கு மகிழனும்..
அன்பு காமராஜ்,
அருமையான பதிவு. நிறைய எழுத வேண்டும் இதைப்பற்றி... nagaraththil kudipeyarndhavarkalin aarambakaala resistancil sinna sinna kuraikalum boothaagaramaai irukkum... ennada vazhi thirumba pidungikittu oorukke poidalaamnu thonum... solli vachcha maadhiri suththi irukkuravan ellaam ayokkiya payalaavum, vinayakkarangalaavum theriyum. thulasi chedi mulaikkadhu, poochchedi valaraadhu... kurottankal mattume... kavanippin nimiththam illaatha ellaam valarum... pazhagiya piragu kiramaththukku pona... rasikkumaa... oru naal rendu naal tripaa kulu kulunnu irukkum... poi thirumba thangamudiyumaa... theriyalai.... eppavume akkarai pachchaithaan kaamaraaj...
nallavaikalaal aanadhu ulagam, allavai manjal kannadi anindhavarkalukku mattume...
thamizh thagaraaraa irukku...ennamo thamizh ezhuththukkal varamaa... ore muttai muttaiyaa varudhu...
mannikkavum...
anbudan
raagavan
ஆஹா! என்ன அருமையான பதிவு! அருமையான பின்னூட்டங்கள்.
நீங்க எழுதியது மட்டுமல்ல. மாநிலம் விட்டு மாறிப் போகும் போதும், ஏழு எட்டு மாசம் கழிச்சு, தெரிந்த ஒரே மொழி தமிழை கேட்க்கும் போது எப்பிடி இருக்கும். திரும்பி ஓடிப் போயிருலாம்னு தான் இருக்கும். ஆனாலும் வாழ்க்கை ஓடிக் கொண்டுத் தான் இருக்கும். பத்து நாள் கழிச்சு ரயில்வே station book store வரும் குமுதம் விகடன் பார்த்து தமிழ் மறக்காம இருந்த காலமும் உண்டு.
இளம்வயதினர் தீவாகவே இருந்தாலும் வயது முதிர்ந்தவர்களால் அவ்வாறு இருக்கமுடிவதில்லை என்பது நிஜம்தான்.
சிநேகமான சிரிப்பு, சின்ன விசாரிப்பு, ஆள்கிடைத்தால் அங்கலாய்ப்பென்று தங்கள் வட்டத்தை எளிதில் விசாலமாக்கிக்கொள்ளமுடிகிறது அவர்களால்.
நகர வாழ்விலே வெறுத்துபோய் கிராமத்துக்கு போய் ஒரு பத்து நாலு தங்கி வரலான்னு போனேன் அங்கன சொல்லி வச்சா மாறி அத்தன பேரும் சாயாங்கலாமானா டிவி பொட்டி முன்னாடி உக்காந்துகிறாங்க .. பெருசுக கூட கிரிக்கெட் பாக்குது.. ரெண்டே நாள்ல திரும்பி வந்துட்டேன்..
கிராமங்கள் தோறும் சாராயக் கடைகளை தொறந்து, விவசாயிகளை சேமிக்க
விடாமல் செய்தனர். அவர்களின் பிள்ளைகள் அதனாலேயே பட்டங்கள் படித்து நகரங்கள் நோக்கி அலுவலக வேலைக்கு கிளம்பினர்.
இது எல்லாம் நான் படிச்சு தான் தெரியவேண்டி இருக்கிறது... :(
'மேக்க பாத்து இழுத்துக்கொண்டு ஓடுகிறது மனசு.' மேக்க எந்த பக்கம் . அனுபவிச்சு எழுதினது. பின்னூட்டம் உங்களுக்குன்னு கொடுப்பினை தான் .உங்க இடுகையில் நீங்கள் செலக்ட் செய்யும் பெயர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Post a Comment