9/11 மற்றும் 26/11 இந்த இரண்டு தேதிகளைக்கேட்ட மாத்திரத்தில் பயங்கரவாதம் என்கிற பூச்சாண்டியின் உருவம் நிழலாடும். உலகமெங்கும் தீவிரவாதம் இந்த நேரத்தின் உடனடிச் சவாலாக முன் நிறுத்தப்படுகிறது. அந்த அரணுக்குள் அந்தமாயக் கேடயத்துக்குள் மறைந்துகொண்டு அதிகாரம் தனது மறைமுக செயல்திட்டங்கள் அணைத்தையும் வெகு இலகுவாக நிறைவேற்றிக்கொள்கிறது.
இதோ மும்பை தாஜ் சொகுசு விடுதித் தாக்குதல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. அந்த தக்குதலில் களப்பலியான உயிர்களில் அசோக் காம்டெ,கார்கரே,சலஸ்கர் எனும் பெயர்கள் முக்கியம் வாய்ந்தவை.தாக்குதலை முறியடிக்கப்போன அவர்கள் வீரமரணத்தை ஏந்திக்கொண்டார்கள். சம்பவ இடத்தின் தீவிரத்தை உடனடியாக காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லியும் நெடுநேரம் போதிய படைகள் அனுப்பப்படவில்லை.காமா மருத்துவமனையில் நாற்பது நிமிடம் இரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த காவல் உதவி ஆணையாளைர் அசோக் காம்டே கேட்பாரற்று இறந்து போனார்.
இப்படியான இருட்டடிப்பு செய்யப்பட்ட சேதிகளோடு ஒரு புத்தகத்தை தனது காதல் கணவருக்கு நினைவஞ்சலியாக்குகிறார் வினிதா காம்டே. மறைந்த உதவி ஆணையாளர் அசோக் காம்டெயின் மனைவியான வினிதா எழுதிய to the last bullet எனும் இந்தப்புத்தகம் மும்பை கவல்துறை மற்றும் அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. வெளியிட்ட நாளிலே விற்றுத்தீர்ந்து விட்ட அந்த விவாதப் புத்தகத்தின் வெளியீட்டு நிறுவணமான அமேயா பப்ளிகேஷன் இது இந்திய புத்தக வரலாற்றில் ஒரு திருப்பம் என கருதுகிறது.
இறந்தவர்களின் பெயருக்குப்பின்னால் ஒளிவட்டம் வரைந்துவிட்டு தனது பாதுகாப்பு ஓட்டைகளை மறைக்கிற அரசின் எல்லா பாக்கங்களையும் விவாதப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகிறது.
