Showing posts with label ஆவிகள். Show all posts
Showing posts with label ஆவிகள். Show all posts

19.7.10

ஆவிகள் இருக்கிறது. அடுப்பில், இட்லிச்சட்டியில்.


அனந்தபுரத்து வீடு திரைப்படத்தின் அறிமுகம் நேற்று சன் தொலைக் காட்சியில் நடந்தது.ஈரம் படத்தில் நடித்த அதே நந்தா தான் இந்தப்படத்திலும் கதாநாயகன்.இரண்டு படத்திலுமே கதை ஆவியைச்சுற்றி பின்னப்பட்டிருக்கும்.ஆவி இருக்கிறதா இல்லையா என்கிற தத்துவார்த்த கேள்விக்கு நான் இருக்கிறதென்றே பதில் சொல்லுவேன்.ஏனெனில் ஆவி நமது அன்றாடங்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது.எவ்வளவு இட்லி சாப்பிட்டிருக்கிறோம்.ஆவியில்லை என்றால் சாப்பிட்டதெல்லாம் போய்யாவியாகிவிடாத?.

ஆனால் பாருங்கள்,ஆவிப்படங்கள் எடுக்கிற எல்லா மொழி திரைப்படத்துக்கும் தந்திரக்காட்சிகள் வடிவமைக்கிற தொழில் நுட்பம் கைவரவேண்டும். இன்னொன்று பிரம்மாண்டமான வீடுகள்,பங்களாக்கள்,பெரிய பெரிய கதவுகள்,திரைச்சீலைகள் கட்டாயம் வேண்டும்.இதுவரை வந்த தமிழ் ஆங்கில,தெலுங்கு,இந்திப்படங்கள் எல்லாவற்றிலும் இதே இலக்கணம் பிசிறில்லாமல் வரையறுக்கப்பட்டிருக்கும்.சாதாரண குடிசை வீடுகளைச்சுற்றிப்படம் எடுக்க முடியாது.உங்கள் திரைப்பட அனுபவத்தை பின்னோக்கி கொண்டு போனால் யரும் இந்த இலக்கணத்தை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இயல்பு இதற்கு நேரெதிரில் இருக்கிறது. பேய் பிடித்திருப்பதாக,அருள்வந்து ஆடுவதாக தங்களை கற்பிதப்படுத்திக்கொள்ளும் ஜனங்கள் எல்லாரும் கஞ்சிக்கில்லாத அடித்தட்டு மக்களாகவே இருக்கிறார்கள்.பிரபலமான அம்மன் கோவில்களில்,பிரபலமான அந்தோணியார்,மைக்கேலாண்டவர் கோவில்களில்,பிரபலாமான தமிழகத்து தர்ஹாக்களில் தங்கிக்கும்பிட கட்டாயம் ஒரு ஏற்பாடு இருக்கும். அங்கு வந்து வயனங்காக்கிற( residential worship) மக்களைப் பார்த்தவுடனேயே இந்தப் புள்ளி விபரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

கடவுளோ அல்லது பேயோ தங்களை இரண்டு வகையாக வெளிப்படுத்திக்கொள்கிறது. மேல்தட்டு மக்களிடம் ரொம்ப பதவிசாகவும் அடித்தட்டு மக்களிடம் அகோரியாகவும் அவதாரம் கொள்கிறது.இந்த இரட்டை வேஷம் போடுவது ஏனென்று தான் இன்னும் விளங்கவில்லை.ஒண்ணுந் தெரியாத காளியம்மா மதினியைப் பிடித்துக்கொண்டு 'நாந்தா கெனத்துல உழுந்து செத்துப்போன பால்ராஸ் வந்திருக்கேன்' என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறது. ஆனால் ஒரு நாள் ஒரு பொழுதாவது அம்பானி குடும்பத்திலோ,ஐஸ்வர்யாராய் குடும்பத்திலோ பேய் பிடித்து ஆட்டுவதில்லை.

பொருளாதார ரீதியான உத்திரவாதம் அற்றுபோன மக்களுக்கு பெரிய பிடிமானம் மனிதர்கள் மேலிருக்கிற பிரியமும் தெய்வங்களின் மேல் இருக்கிற நம்பிக்கையும் தான். இந்த இரண்டும் பொய்த்துப்போகிற போது மனம் பேதலித்துப் போகிறது.அடிகொப்புமில்லாமல் பிடி கொப்புமில்லாமல் எதிர்காலம் அந்தரத்தில் தொங்குகிறது. விஞ்ஞானம் இதை நரம்புத் தளர்ச்சி,மனப்பிறழ்வு,ஹிஸ்டீரியா என்று பெயரிடுகிறது.விஞ்ஞானத்தை காசுகொண்டு நெருங்கமுடியாத ஜனங்கள் 'பேய்க்கும் பாரு நோய்க்கும்பாரு' என்று நம்பிக்கைகளின் பின்னால் அலைகிறது.


சரி கதைக்கு வருவோம்.

அம்மா,அப்பாவை,நீச்சல் குளத்தோடு பங்களாவை,முப்போகம் விளையும் கிராமத்தை உதறித்தள்ளிவிட்டு சென்னைக்குப்போகும் பையன் கடனாளியாகி.கலங்கினார் பாலா என்று ஊர் திரும்புகிறார்.செத்துத்தெய்வமான அம்மாவும் அப்பாவும் ஆவியாக வந்து இவர்களுக்கு உதவுகிறார்கள் என்பது கதை.நீதி, அம்மா அப்பா என்பவர்கள் எவ்வளவு மகோன்னதமானவர்கள் என்பதை ஆவிகளின் மூலம் தெரிந்துகொள்வதுதான் நீதி. ஆவிகள் உதவுகிற ட்ரீட்மெண்ட் புதுசு என்கிற முலாம் பூசப்பட்ட வார்த்தைகளைக்கேட்கும் போது பட்டணத்தில் பூதம்,அதற்குமுந்தைய விட்டலாச்சாரியார்களின் ஆவிகள் சிரிக்கிற சத்தத்தை சன்னமாகக் கேட்கமுடிகிறது.