Showing posts with label ஆயத்த உணவு. Show all posts
Showing posts with label ஆயத்த உணவு. Show all posts

23.12.10

கொஞ்சம் பொறுங்கள்,கோக் குடித்து விட்டு மீதி எழுதுகிறேன்.

தங்களின் நிறம்,தாங்கள் சாப்பிடும் உணவு,உடுத்தும் உடை,படிக்கும் கல்வி கீழானது என்று அவர்கள் மூளைக்குள் புகுத்திவிட்டாலே போதும் நாம் இந்தியாவை எளிதில் வெற்றிகொண்டுவிடலாம் என்கிற அறிக்கையை 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி மெக்காலே சமர்ப்பித்திருக்கிறான்.
அந்த அறிக்கையை செயலாக்குவதில் அவர்களுக்கு எந்தச்சிரமமும் இருக்க வில்லை.

அதற்கான தட்பவெப்பம் இங்கு தேவைக்கு அதிகமாகவே இருந்தது என்பதுதான் நிதர்சனம்.அது இந்தியாவில் புழக்கத்தில் இருந்த வர்ணாசிரமம்.இதோ 175 ஆண்டுகள் கடந்த பின்னும் கூட நம்மால் அதை புடுங்கி எறிய முடியவில்லை.மெக்காலே வேர் இந்திய மண்ணைப் பிளந்து மறுபக்கம் பாய்ந்து இப்போது உலகமயமாக்களாக திரும்பவும் வந்திருக்கிறது. junk food எனப்படுகிற ஆயத்த உணவுகள் கொடுமையான விஷம் என்பதைச் சொல்லுபவர்கள் கோமாளியாகிறார்கள்.அது சாப்பிட்டால் உன்னத மடைவோம் என்று சொல்லுகிற விளம்பர மாடல்கள்தான் இந்தியாவின் கதாநாயக் கனவுக் கன்னிகளாக இருக்கிறார்கள்.

கல்வி நிலையங்களிலும்,அதற்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவிலும் ஆயத்த உணவுகளையும் கரியமில வாயு செலுத்தப்பட்ட குளிர்பாணங்களையும் விற்கத்தடை செய்ய வேண்டும் என்று  உதய் பவுண்டேசன் என்கிற தொண்டு நிறுவணம் பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறது.டெல்லி உயர் நீதி மன்றம் அதற்கு பதில் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.இது மாதிரி எத்தனை நாடகங்கள் நடந்து முடிந்திருக்கிறது.

நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற தாடிக்காரனின் குறள் நமக்கு அநாவசியமானது.எவன் எவனோ வந்து நிலங்களை வாங்கி வளங்களை அழித்து பகாசுர ஆலைகள்ஆக்ரமிக்கிறான்.அப்போது பொத்திக்கொண்டு கிடக்கிற தொண்டும் நாட்டுப்பற்றும் பொதுநலவழக்குகள் தாக்கல் செய்தததோடு புரட்சியைச்சுருட்டிக்கொண்டு படுக்கப் போய்விடுகிறார்கள்.

என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது.போராடத் தெரியாத இந்த ஊமை ஜனங்களுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட விஷம் விற்பான். விஜய்,ராதிகா, விவேக்,சூரியா,அசின் போன்றவர்கள் அதையும் சிபாரிசு செய்வார்கள். கொஞ்சம் பொறுங்கள் ரெண்டு மடக்கு கோக் குடித்து விட்டு மீதி எழுதுகிறேன். ரெண்டும் ஒண்னுதானே?