15.2.10

சுவர் இல்லாத சமுத்திர வீடாக,வரப்புகளே இல்லாத பெரும் வயலாக....

கேரளா மாநில கள்ளிக்கோட்டை மாநாட்டுக்குத்தான் முதன்முதலாகப் போனேன்.அப்போது கூட மாது என்கூடவரவில்லை எனக்கும் அவனுக்கும் அப்போது அறிமுகமில்லை.சாத்தூரிலிருந்து மூன்று வேன்களில் போனோம்.
அப்போதுகூட இதே போல ஒரு உஷ்ணமான சூழல்தான் இருந்தது. ஆம் அந்த போராட்டங்கலின் மூலமாக பாண்டியன் கிராம அவங்கி ஊழியர் சங்கம் மெல்ல மெல்ல எல்லைகள் தாண்டிப்பிரபலமானது.  இந்த வங்கியில் அப்போது வேலைபார்த்த எல்லோரும் முதல் தலைமுறையாக அரசுப்பணிக்கு வந்தவர்கள்.பெரும்பாலும் அடித்தட்டிலிருந்து வந்தவர்கள்.அவர்களிடம் தழல் வீரம் குறையாத கோபம் கனன்று கொண்டிருந்த காலம் அது.சூழ்ச்சி அரசியல் ஏதும் அறிமுகமாகத காலமுமாகவும் அது இருந்தது. அது எவ்வளவு பெரிய கொடுப்பினை. அதனாலேதான் நாங்கள் வங்கி அரங்கில் நினைத்துப் பார்க்கமுடியாத,44 நாள் வெலை நிறுத்தம் எனும் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கினோம். அப்போது அலுவலர் ஊழியர் எனும் பேதமிலா ஒரே சங்கமாக இருந்தோம். போராட்ட குரலெடுத்துப்பாடும் பா.கிருஷ்ணகுமார் என்கிற மகுடிக்காரனின் தலைமை இருந்தது. ஆறடி உயரமும்,
வசீகரிக்கிற குரலும்,தோளில் லாவகமாகப் புரளும் கைகளும்,எல்லாம் ஒருங்கிணைந்த தோழமையும் அவருக்கென அளவெடுத்து தைத்தது போல அமைந்தவை.

ஒரு காங்கிரஸ் குடும்பத்தின் பேரன்,ஒரு நிலச்சுவான்தார்,ஒருகவிஞன், ஆளுங்கட்சிக்காரன்,ஒரு தீவிர கம்யூனிஸ்ட்,ஒரு திமுக மொழிப்பற்றாளன்,ஒரு வலது கம்யூனிஸ்ட் எல்லோரையும் இணைக்கிற சரடும்,அதை இழுத்து கரைசேர்க்கிற வல்லமையுங்கொண்ட மனிதனாக பா.கிருஷ்ணகுமார் அந்தச்சங்கத்தை வழிநடத்தினார்.அவரையும் வழிநடத்த  ஒரு இசம் இருந்தது அப்போது யாருக்கும் தெரியாது.சினிமாக்கவிஞர் வைரமுத்து சொன்னது போலல்ல, நமுத்துக்கிடந்த லௌகீக வாழ்க்கையிலிருந்து உருவி வெளியிலெடுத்து எங்களை உஷ்ணக்காரர்களாக்கியது தோழர் பீ.கே கிழித்துப்போட்ட சில தீக்குச்சிகள்.அது பிழைக்கத்தெரியாதவர்கள் என்கிற இன்னொரு பட்டத்தையும் தூக்கி வைத்தது.

நாங்கள் தொழிற்சங்கவாதிகளாக மாறி இதோ ஒரு கால் நூற்றாண்டுகள் கடந்துபோய்விட்டது.நூற்றுக்கணக்கான செயற்குழுக்கூட்டங்கள்,பல போராட்டங்கள்,பேரணிகள்,வேலைநிறுத்தங்கள் என ஓடிக்கொண்டே இருக்கிற காலங்களை உற்சாகப்படுத்துகிற தருணாமாக இந்த மாநாடுகள்.''இலைகள் பிண்ணி இணைவதனால் ஏற்ற சேலை கிடைக்குது,வண்ணங்களின் கூட்டுறவால் வானவில் கண்பறிக்கு 'தெனும் பாடலின் சாறுகிடைக்கிற மாநாடுகள்.
காம்பவுண்ட் சுவர் இல்லாத சமுத்திர வீடாக,வரப்புகளே இல்லாத பெரும் வயலாக நிறைந்துகிடக்கும் தோழமையின் ருசி பருகும் நாட்கள் அந்த மாநாடுகள்.

எத்தனையோ அகில இந்திய மாநாடுகள் நடந்தபோதும் இயக்க ரீதியாகவும்,உணர்வுரீதியாகவும் ஒரு பெரிய மைல்கல்லாக விளங்குவது கட்டாக் மநாடுதான். இந்தியாவின் தென்கோடியிலிருந்து 48 பேர் கல்ந்துகொண்டோ ம்.எங்கள் ஓவியங்கள் அந்த மாநாடு முழுக்க பேசுபொருளானது.அப்போதுதான் 9 நாள் வேலை நிறுத்தம் நடத்தி வெற்றியோடு போனோம். இன்னும் சொல்ல நிறைய்ய இருக்கிறது. அதைவிட அழுத்தமானது  கட்டாக் நகர வீதியில் தேசம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆயிரக் கணக்கான தோழர்களின் பேரணியில்,இன்குலாப்,வொர்கெர்ஸ் யுனைட்டி, ஒக்கிலோ பாரதீய கிராமினா பேங்க் கர்மாச்சாரி சங்க்,எனும் கோஷங்களோடு கடந்து
போகையில் அவரவர் அவரவர் மொழியில் கோஷம் போடுகிற திருப்பம் வந்தது. மஹா கவி பாரதியின் பாடலைக் கோஷமாக்க வேண்டுமென மாதுவிடமும் கிருஷ்ணகுமாரிடமும் கேட்டேன். ஆஹா அதை நீயே போடு என்றார்கள்.

இப்படித்தான் ஒரு கவிதையை,ஒரு சிறுகதையை,சின்னச்சின்ன வேலைகளை அங்கீகரித்துப் பாராட்டுகிற மிகப்பெரும் பலம் மாதுவிடமும்,பீகேவிடமும் உண்டு.அது அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல அந்த இயக்கத்துக்கும் உறுப்பினர்களுக்கும் கிடைத்த பேறு. நான் கோஷம் போட்டேன் ஒட்டுமொத்த பேரணியையும் திரும்பிப்பார்க்கவைத்த பாடலாகியது அது.மராத்தி, பஞ்சாபி, குஜாரத்தி எனும் வெவ்வேறு மாநிலத் தோழர்கள் சூழ்ந்து கொண்டு எங்களோடு அச்சமில்லை,அச்சமில்லை,அச்சமென்பதில்லையே என்று இணைந்து கோஷமிட்டார்கள்.பசி,வறுமை,அடிமைத்தனம்,உழைப்பு எல்லாவற்றிற்கும் உலகம் முழுக்க இருக்கும் ஒரே மொழியாக,ஒரே இசையாக ஒன்றுசேர்ந்து ஒலித்தது உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை,அச்சமில்லையென்று.

சங்கச் சுற்றறிக்கையை,மாநாட்டு பேச்சை,எங்கள் போராட்டங்களை,அதன் வலிகளை இலக்கியமாக்கினோம் எதிர்ப்புகளுக்கிடையில். எங்களது அரட்டைகளை அர்த்தமுள்ளதாக்கினோம்.எல்லோருக்கும் பிடித்துப் போகிற
நிறமாகச் சிகப்பு நிறத்தை மாற்றும் அணில் முயற்சியைக் கையிலெடுத்தோம்.அகில இந்திய மாநாடுகளின் பயணங்களை கலகலப்பாக்க பாடுவதும், ஆடுவதும் பரஸ்பரம் உணவு, தண்ணீரைப் பறிமாறுவதுமான சந்தோசங்களை அந்த பெட்டி முழுக்கப் பரவவிடுவோம்.எப்படியாவது ஒரு ராணுவவீரர் சிக்கிவிடுவார் பிறகென்ன உற்சாகம் கரைபுரளும்.இடையில் கடந்துப்போகும் நிலம்,ஆறுகள், மனிதர்கள், பாஷைகள்,விறைப்போடு கவனிக்கவரும் ஆயுதமேந்திய காவலாளிகள்,வியாபாரிகள்,பிழைப்பேந்தி வருவோர் எல்லோருக்குள்ளும் லயம் மாறாமல் ஜிகுஜிகுவெனும் இசையும் எங்கள் ஸ்நேகமும் கலந்திருக்கும்.

இந்த இருபத்தைந்து வருடப் பயணத்தில் யாரோடும் சில்லறைச்சண்டை போட்டதில்லை என்பது இப்போது வந்து
எழுதச் சொல்லுகிற நினைவாகிறது.இடமிருந்தால் உட்காரவைப்போம் இல்லாவிட்டாலும் பகிர்ந்துகொள்வோம்,
ரயிலிலும் வாழ்விலும்.இந்த நினைவுகளோடே எங்கள் அகில இந்திய மாநாட்டுக்கான பயணம் இன்று தொடங்குக்கிறது.சென்ற கயா மாநாட்டில் மாது வந்தான், நாங்கள் இயக்கிய 'இரவுகள் உடையும் ஆவணப்படம்' திரையிடப்பட்டது,என்பது போன்றவை இல்லாத ஒரு பயணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு உச்சச்தாயியில் ஒலிக்கும் அவனது சுனாமிச்சிரிப்பைக் கேட்டகமுடியாது. இரண்டு வாரங்களுக்கு தொலைபேசி அழைப்பையும்,சில அன்புக் கட்டளைகளையும் வைத்துக்கொண்டு அவள் காத்திருப்பாள்.இரண்டுவாரங்கள் வலை நண்பர்களின்
எழுத்துக்களைப் படிக்க இயலாத இழப்பும் உடன் சேர்கிறது.

எனினும் வடகரைவேலனுக்குப் பிறகு இரண்டாவதாக ஒரு வலை நண்பரை நேரில் பார்க்கப்போகிறேன்.
நாக்பூரில் இருக்கும் முதுபெரும் தோழர் எழுத்தாளர் காஸ்யபன்  செவ்வணக்கம் சொல்ல ரயில் நிலையம்
வருகிறார்.எனினும் பயணம் எல்லாவற்றையும் சரிசெய்யும் புதிய அனுபவங்களைக் கொண்டு வந்துசேர்க்கும்.

அறிவினை விரிவுசெய்,
அகண்டமாக்கு,
விசாலப் பார்வையால்
விழுங்கு மக்களை,
அணைந்துகொள்,
மானிடசமுத்திரம்
நானென்று கூவு.

14.2.10

விதி வலியது.

ராஜகுமாரன் கதைகளில்,
பக்கத்துவீட்டு அக்கா சொன்ன
விடுகதைச்  சேதியில்,
அண்ணன்களின் கண்களில்,
அவர்கள் வளர்த்த தாடியில். 

விரும்பிப் படித்த சிறுகதைகளில்,
திரும்ப திரும்ப படித்த நாவலில்
தூர தேசத்தில்,தலைநகரில்,
சினிமாவில்,அடுத்த தெருவில்
அண்டை வீட்டில்
பற்றி எரிந்தது தீ .

தண்ணீர் வாளியோடு
நானும் காத்திருந்தேன்.
திடீரென்றென் தண்ணீர் வாளி
காணவில்லை.

அப்போது அடுத்த தெருவில்
என்வாளியும், என்கதையும்
யாரோசிலர் கையிலிருந்தது.

12.2.10

வேர்கள் தேடும் பாரிவேட்டை

நேற்றிரவே வீடுகளில்,மொச்சைப்பயறும்,சீனிக்கிழங்கும் அவியத்தயாராக இருந்திருக்கும். விடிந்தும் விடியாமலும் அவையெல்லாம் நார்ப்பெட்டியில் ஆவிபறக்க விழுந்துகிடக்கும்.ஊரின் நாக்கில் ஒட்டுமொத்தமாக தண்ணீர் கொட்டும்.ரக ரகமான பயறுகளின் மணம் தெருக்களில் வழிந்து ஓடும். அப்புறம் ரெண்டு நாளைக்கு அனுகுண்டுச் சத்தம் காதைப்பிளக்கும்.

பாரிவேட்டை,மாசிப்படப்பு,என்று சொல்லும் குலதெய்வங்களை நினைத்துப் பார்க்கும் திருநாள் இது.ஒட்டு மொத்த தமிழகமே எட்டுத்திசையிலும் நகர்ந்து கொண்டிருக்கும்.ரயில்,பேருந்து வேன் தொடங்கி ஆட்டோ க்கள் வரை கூட்டம் கூரையில் உட்கார்ந்து பயணம் செய்யும்.நெல்லும் கரும்பும் செழித்துக்கிடக்கும் கோவை மாவட்டக்குக்கிராமத்திலிருந்து வேலிக்கரடுகள் பரவிக்கிடக்கும் ராமநாதபுர குக்கிராமத்துக்கு கூட்டமாக வருவார்கள். எதாவதொரு  பொட்டக் காட்டில் கேட்பாரற்றுக்  கிடந்த நடுகல்லைச் சுற்றி பந்தலிட்டு படையல் வைத்து, பொங்கி, குலவையிட்டு கும்மாளமிட்டுச் செல்லுவார்கள். இது ஒரு சுற்றுலாவெனக் குதித்துக் கூட வரும் சிறார்களிடம் இது ஒங்க முப்பாட்டன் வாழ்ந்த கிராமம் வாய்மொழி வரலாறு சொல்லிவைப்பார்கள்.

பழைய வாழ்வைத் தோண்டி பூர்வீகம் தேடி,வேர்காணும்  மக்களிடத்தில் அலெக்ஸ் ஹேலியின் ஏழுதலைமுறைத்தேடல் அடி ஆளத்தில் உறங்கிக்கொண்டே இருப்பதற்கான அடையாள நாள் பாரிவேட்டை. இதற்கு பின்கதை,புனைவு வரலாறு,பிற்சேர்க்கை பல வந்து வேறு வண்ணங்கள் பூசப்பட்டாலும். ஒட்டுமொத்த தமிழகத்தின் முப்பாட்டன்களின் பெயர்கள் மொத்தம் பத்து அல்லது  இருபதுதானிருக்கும். கருப்பன், மாடன், கந்தன், இசக்கி,சாயலுள்ள பெயர்கள் தவிர ஏதும் இருக்கச் சாத்தியமில்லை.அப்படி இருந்தால் எழுதுங்கள்.

11.2.10

நான் பாடவந்த பாடல் இன்னும் தீரவில்லை - பதின்பருவ நினைவுகளின் தொடர் பதிவு

யார் வீட்டிலாவது கல்யாணம்,சடங்கென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய்ய  ஒலி பெருக்கித்  தளவாடங்கள்  வரும். குழல் விளக்கும், போனோக்ராம்  ரிக்கார்டுமாக  ஊர்  அல்லோல கல்லோலப்படும்.தில்லாணா மோகனாம்பாள் படகாருகுறிச்சியி நாதசுரம் நகுமோகு பாட ஆரம்பித்ததும் ஹோவெனச் சத்தம் வின்னைமுட்டும்.அந்த  நேரத்திலிருந்து  விடிய  விடிய  ரிக்காடுசெட் போடுகிறவரோடு  தவம் கிடப்போம், சிநேகம் கொள்வோம். அவருக்கு சிகரெட் வாங்கிக் கொடுக்க,அவருக்கெனச் சொல்லி வீட்டிலிருந்து  வரக்காப்பி கொண்டுவர போட்டிகள் நடக்கும்.

அதுபோலத்தான் எங்கள் பள்ளிக்கூடம் வந்த நீலாம்பிகை டீச்சர்.தினம் அவரை வழியனுப்ப பஸ் நிறுத்தத்துக்கு போவது, அவரது  குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு  விளையாடுவதெனக் கிடந்த கிறக்கம் தான். முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பட்டாளம்,பாட்டு,விளையாட்டு என எல்லாமே என்னைச் சுற்றியே வட்டமிடும். சாத்தூர் சுற்றுவட்டாரத்திலே நம்ம ஸ்கூலோட பெருமைய நீதாங் காப்பாத்தனும் என்று தலைமை ஆசிரியர் என்னிடம் பெரிய பாரத்தை தூக்கிவைத்தபோது கிடைத்த பெருமையோடு ஊரும் என்னை தூக்கிவைத்து உச்சி முகரும். அதை நாங்கள் எங்கள் சேட்டைகள் மூலம் காலிபண்ணிவிடுவோம்.

ஊரில் உறவு முறைக்கு மிக முக்கியப்பங்கு இருக்கும். எல்லோருக்கும் அத்தைமகள் மாமன் மகள்கள் கொத்துக் கொத்தாக இருக்கும்போது எனக்கு மட்டும் சித்திகள்,அத்தைகளாக வளைய வளைய வருவார்கள். எனவே அந்த ஆட்டத்தில் நான் ஒற்றை ஆளாய்  பார்வையாளர் பக்கம் நின்று கொண்டிருப்பேன். சோறு பொங்கி விளையாடுகிற விளையாட்டில்கூட எனக்கு தகப்பனார் அல்லது மகன் எனும் பாத்திரமே ஒதுக்கப்படும்.

எனவே பக்கத்து ஊரிலிருந்து தான் எனக்கான தேவதைக் கனவுகள் வரும். ஒவ்வொரு கனவுச் சித்திரத்தையும்  எனக்குள்ளே எழுதி எழுதி அழித்துவிடுவேன். மாணவர் மன்றத்தில் எனது பாடல் ஒலிக்க வேண்டுமானால் அவள் பாடு என்று முதல்வரி எடுத்துக் கொடுக்கவேண்டும். அவளுக்கு எனது ஊர் புளியங்காய் பிடிக்கும். எனக்கு அவள் கைக்குள் பொத்திவைத்து கொண்டுவரும் எல்லாமே கிறக்கம். ஒரு அட்லஸ் சைக்கிளும் அவளும் இருந்தால் உலகத்தை சுண்டுவிரலில் தூக்கிவிடலாம் என்று கனவு கண்ட காலம்.

அவளின் கண்ணில் படுவதற்காகவே அவள் வீட்டுப் பக்கம் இருக்கும் நூல்நிலையம் போனேன்.யுனெஸ்கோ கொரியரின் வழுவழுத்த பக்கங்கள் என்னை எழுத்தோடு இழுத்துக் கொண்டு போகும்.எட்டுவரை என்னோடு படித்த அவள் நான் சாத்தூருக்கு ஒன்பதாம் வகுப்புக்குப் போனவுடன் கல்யாணமாகி ஊரை விட்டுப் போய்விட்டாள்.அவளால் அறிமுகமான எழுத்து வாசம் என்னைச் சுற்றிக் கொண்டே வந்தது. குரும்பூர் குப்புசாமி,சாண்டில்யன்,தாண்டி சுஜாதா அறிமுகமானார் அவரோடு ஜெயராஜ் ஓவியங்களும் இரவுத்தூக்கம் கெடுக்கும்.

சாத்தூர் ஏவீஸ்கூலுக்கு வந்தேன் ஒரு எட்டுகிலோமீட்டர் தொலைவில் இன்னொரு உலகம் இருந்தது அது என் கிராமத்தை கேலிசெய்யும் சிறுநகரம்.ஒருகோடியில் மாணவர் விடுதி மறுகோடியில் ஆயிர வைசியப்பள்ளி . இடையில் நடந்து கடக்கும் தூரத்துக்குள் பச்சைத்தாவணி பாவாடையில் எதிர்ப்படும் எத்தல் ஹார்விப் பெண்களில் தொலைந்து போன கலைச் செல்வியின் முகம் தேடி தோற்றுப்போனேன்.அவற்றைத் துடைக்கிற சாக்கில் சினிமா,விளையாட்டு,படிப்பு என உயர்நிலைப்போட்டி முடிந்த போது எனது கிராமத்து சேக்காலிகள் என்னைவிட்டுக்கடந்து போனாகள். என்னோடு லட்சுமணன்,குணா,முருகையா,செல்வகுமார் நடிகன் ராம்கி எல்லோரும் கூட வந்தார்கள்.

எனது அண்ணன் என் இலக்கிய தடத்தை வாசிப்பின் மூலம் அறிமுகப்படுத்திய அந்தோணிக்காக முழுநேரத்தூதுவனாக என்னை வரித்துக் கொண்டேன். அவனுக்காக கடிதம் எடுத்துக்கொண்டு போய் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தேன். அவனுடைய காதலியை நான் பாலோ பன்னுகிறேன் என்று குடுமபத்தாரிடமும் அவனிடமும் சொல்லியிருக்கிறாள்.இதைச் சொல்லிவிட்டு என் உடன்பிறவா சகோதரன் சிரித்தான். எனது தொழில் நுட்பக் கோளாறு என்றுணர்ந்த பிறகு நொந்து போய் வேண்டாமப்பா தென்றலை,அன்னத்தை,மேகத்தை வைத்துக்கொள் என்னைவிட்டுவிடு  என்று சொல்லி விலகிக் கொண்டேன். விலகி ஜெயகாந்தன்,சுஜாதா,பாலகுமாரன்,சில சோவியத் புத்தகங்கள் அதில்வரும் பல்லுடைக்கும் பெயர்கள் ஆகியவற்றோடு கரைந்து போனேன்.

அப்போது தான் இளையராஜாவும், இன்ரீகோ  ரெக்கார்டுகளும், ஜானகி, ஜேசுதாஸ், ஜென்சி, சுனந்தா, என்னடிமீனாட்சி எஸ்பிபியும் என்னை இழுத்துக் கொண்டார்கள். நான் மூங்கில் வரிச்சி ஒடித்து ஓட்டைகளிட்டு புல்லாங்குழல் செய்தேன். ஊருக்கு வெளியே உட்காந்து அடுப்பு ஊதுவதுபோல் ஊதி ஊதி இசை செய்தேன். எனது குரலில் ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு பாட்டு ஒருமுறையாவது பாடாமல் இரவு நேர கிராம ஜமா  முடியாது.அந்தகாலத்து இசைக் கச்சேரிகள் கேட்பதற்காக சைக்கிளில் இருபது முப்பது கிலோமீட்டர் இரவுப்பயணம் போவோம். ஒரே ஒரு முறையாவது நெல்லை முயுசியானோ கச்சேரியில் எல்லா வாத்தியங்களோடும் பாடவேண்டும் என வெறியாய் அலைந்து, இரண்டு முறை பாடவும் செய்தேன். வான்கோழி முயற்சியாக பல இடங்களில் வெறும் தாளத்தோடு கச்சேரியும் நடத்தினோம்.கமகம் சுதி,மூச்சுப்பயிற்சி என்கிற ஏதும் தெரியாத எங்கள் சினிமாப்பாட்டு உழைப்புத் தவிர ஏதும் இல்லாத  பக்கத்து ஊர்களுக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.

எல்லாவற்றையும் சொல்லிமுடித்தேனா  தெரியவில்லை.
ஒளித்து  வைத்திருக்கிற  இரண்டு  பெண்பெயர்கள்,
ஒருகோடை மழை நேரம்,  எதிர்பாராத நேரத்தில் திடுமெனக் கிடைத்த வியர்வை கலந்த முதல் முத்தம்,  ஒரு பத்து மீட்டர் இடைவெளிக்குக் குறையாமலே பார்த்திருந்த என்னோடு பேசாத கவிதா ( வேறு பெயர்) பலவருடங்கள் கழித்துப் பார்க்கும்போது தன் பிள்ளையிடம்
'இந்த பாரு ஒங்கப்பா' என்று சொன்ன வார்த்தையின் முழு அர்த்தம்
எல்லாமே வேறு ,வேறு ராகங்களில் கூட வந்து மறைந்துருக்கும் பாடல்கள்.

ஊர்போகும் போது
தென்படும் நினைவிடங்கள்,
அவற்றின் மிச்சமாக
சில எழுத்துக்கள்,
எப்போதாவது
மதுக்கிறக்கத்தில்
மாதுவோடு பகிர்தல்,
எதாவதொரு உருவத்தில்
ஊடுறுவும் கனவு,
என்ன பலமான சிந்தனை
என்று ஊடறுக்கும்
அவளது கேள்வி,
அதோ அந்த ஷோகேசில்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற 
வாசிக்காத புல்லாங்குழல்.
இவற்றோடு
தடதடவெனக்
கடந்துபோகிறது
நிகழ் வாழ்க்கை. 

 

8.2.10

நிலாப்பாட்டு - நிழற்படநினைவுகள்

எங்கு இலக்கியக்கூடம் நடந்தாலும் நானும் அவனும் கடைசிப் பெஞ்சில் உட்கார்ந்தி ருப்போம். மதுரை, திருநெல்வேலி எனக் கணக்குக் கிடையாது. நினைத்த மாத்திரத்தில் கிளம்புகிற சிலாக்கியத்தை அந்த வாலிபம் கொடுத்திருந்தது. சிட்டுக் குருவியைப் போல விட்டு விடுதலையாகி எங்களிடம் காதலும் கோபமும் குவிந்து கிடந்தது . ஆயிரம் பேர் கூடுகிற கூட்டத்தில் எங்கள் மூச்சுக்காற்று கூடத் தனித்திருந்தது. தனலட்சுமி தியேட்டரில் சினிமாப் பார்ப்பதைவிட கடைசிப் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் எங்கள் விமர்சனத்தைக் கூட்டம் கூர்ந்து கவனித்தது. மாதுவுக்கு அப்போது நல்ல கத்தை முடி. அவனது உயரமும் அவன் இழுத்து விடுகிற சிகரெட் புகையும் பெண்கள் கவனிக்கிற அலாதி அம்சங்கள். அவன் காதல் கொண்டிருந்தான். அதற்காக மெனெக்கெடவில்லை. நானும் கூட காதல் வயப்பட்டிருந்தேன் அது என்னை இருபத்து நாலு மணி நேரமும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.

சென்னைக்கு அழைத்துப்போய் எனக்கு அம்முவை அறிமுகம் செய்துவைத்தான். என்னுடன் சுகந்தியப் பார்க்க சினிமாவுக்கு பாட்டுக்கசேரிக்கு வளையல் கடைக்கெல்லாம் வருவான். ஒரு நாள் ஜப்பான் ஸ்கூலில் கண் தெரியாதவர்களின் பாட்டுக்கச்சேரி நடந்தது. அவள் கட்டாயம் வருவாள் என்ற கனவுத்தேடலோடு போயிருந்தேன் மாதுவும் என்னோடு வந்திருந்தான். எல்லா பாட்டுக் கச்சேரியைப்போல இறைவணக்கம் பாடாமல், எடுத்த எடுப்பிலே கண்ணில் என்ன கார்காலம் என்கிற சினிமாப் பாட்டு பாடியது எங்கள் இருவருக்குமே பிடித்திருந்தது. அந்தப் பாட்டு பாடும் போது ரெண்டுபேரும் அழுதுவிட்டோ ம். சோகமும் வலியும் நிறைந்த அந்த ராகம் அதன் இசைச்சேர்க்கை அதன் வரிகள் என்னவோ அந்த ப்ளைண்ட் ஸ்கூல் மாணவர்களுக்காக படைக்கப் பட்டது போலிருந்தது. அதன் பிறகு அந்தப்பாடல் எங்கு எப்போது கேட்டாலும் இரண்டு வித உணர்வுகள் நினைவுகள் மேலெழுந்து வரும். ஒன்று எனது மனைவியின் ஞாபகம், இரண்டு  42 B எல் எப் தெரு.

 ஒரு முடுக்குத்தெருவின் மாடியில் மூன்று அறை அதில் நடுவில் உள்ள அறையில் தான் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் ºí¸ «ÖÅĸõ. அங்கு நான் மாது மூர்த்தி பெருமாள்சாமி அழகப்பன் எல்லோரும் தங்கியிருந்தோம். பக்கத்து இரண்டு அறைகளிலும் எங்கள் வங்கி தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் நிறையப்பேர் தங்கி இருந்தார்கள். மூன்று அறைகளின் பின்வாசலும் ஒரு வராண்டாவில் சந்திக்கும் அங்கே தான் இரண்டு கழிப்பறையும் ஒரு குளிப்பறையும் இருக்கும். சாயங்கால நேரங்கள் எல்லோரும் கூடிக் கும்மாளம் அடிக்க, கோடைக்காலங்களில் தண்ணீர் தெளித்து குளிரப்பண்னி படுக்க, சனி ஞாயிறு ஆள் குறைவாக இருக்கும்போது  கதவைபூட்டிக்கொண்டு கள்ளத்தனமாக பீர் குடிக்க, தோதுவான இடமாக இருந்தது. ஆனால் எல்லா நேரங்களுமே சமூகம் சார்ந்த பேச்சுகளும் சிந்தனைகளூமே நிறைந்திருந்தது.

 இருக்கிறவன் தலைக்கு நெருப்பாக வா இல்லாதவன் காலுக்குச் செருப்பாகவா என்று கவிஞர் கந்தர்வன் கவிதைகள் காதுவழியாக நுழைந்து நாடி நரம்புகளுக்குள் ஓடிய காலம். மார்க்சிம் கார்க்கியின் தாய் அந்தச்சிவப்பு ருஷ்யாவிலிருந்து புத்தகம் வழியாக பயணமாகி செங்குளியிலும், சூரங்குடியிலும் வந்து குடியேறத்துவங்கிய நாட்கள். கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் பாடல்கள் கேட்டுக்கிளர்ந்த உணர்வுமாக அலைந்த காலம்.   ஓடுகிற பாம்பை மிதிக்கிற அந்த வயசில் சமூக சீர்கேடுகளை மிதிக்க கால் பரபரப்பாக இருந்தது.


நினைவுகள் அழிவதில்லை படித்துவிட்டு ஒவ்வொருவரும் உட்கார்ந்து அழுத போது மூர்த்தி தனக்கு சிறுகண்டன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டான். அவன் ஒவ்வொரு இரவும் வாட்டர் கலர் வாங்கி ஏதாவது ஒரு ஓவியம் வரைவான். விடிகிற போது என்னிடமும் மாதுவிடமு0ம் காட்டிவிட்டுத்தான் காலைக்கடன் பற்றிச்சிந்திப்பான். நாங்களும் நல்லா இருக்கிறது என்று சொல்லி வைப்போம். அண்ணன் ஜீவா தான் அவனைப்படாத பாடு படுத்துவார். ''மூமா எல்லா பெயிண்டிங்கையும் எடுத்து வை ஒரு கண்காட்சி வைக்கலாம், எப்படி ஓவியம் எப்படி இருக்கக்கூடாதுன்னு பொதுஜனங்க படிச்சுக்குவாங்க'' என்று கேலி பண்ணும் ஜீவா அண்ணனை யாரும் கோபிக்க மாட்டார்கள். ஜீவா அண்ணன் கேலி பண்னமாட்டாரா என்று மனது கிடந்து அலைகிற அளவுக்கு அவரது கேலிகள் பிரசித்தம்.   எல்லோரும் கக்கூசுக்கும் குளிப்பத்றகும் வரிசையில் நிற்கும் அந்தக் காலை நேரத்தில் கைலி ஒதுங்க தூங்கிக்கொண்டிருப்போம் நானும் மாதுவும்.

சாத்தூரில் கோடைக் காலங்களை எதிர்கொள்வது என்பது ஒரு பெரிய சாகசம். குளிப்பதற்காக வைப்பாத்தில் உறைக்கிணறு தேடிப்போய் கூட்டத்தோடு குளித்து திரும்புகிற அவர்கள் எங்களைப்பார்த்து இவர்களை எந்த தண்னிக்கஷ்டமும் பாதிக்காது எதுக்குன்னா அவங்கதான் குளிப்பதில்லையே என்றொரு நாள் சொன்னது சென்னையில் நண்பர்கள் கூப்பிட்டு விசாரிக்கும் அளவுக்குப் போய்விட்டது. அதோடு நில்லாமல் வக்கீல் மாரிமுத்துவோடு கூட்டணி வைத்துக்கொண்டு எங்கள் பெயரையே குளிக்காதவங்க நம்பர் ஒன் டூ என்று மாற்றிவிட்டார்கள். யாராவது எங்கள் இருவரைத்தேடி வந்து கேட்டால் யாரு அந்தக்குளிக்காத ஜோடியா என்று தான் மானத்தை வாங்குவார். மரிமுத்து வக்கீல் தினம் தினம் சாயங்காலம் எங்கள் ரூமுக்கு வருவார் எல்லொரும் உட்கார்ந்து உலக இலக்கியம் பேசுவோம். அவரவர் படித்த புத்தகங்களை சினிமாவைப் பேசுவோம்  சீட்டு ஆடுவார் மாதுவோடு  செஸ் விளையாடுவார் .அப்படித்தான் செஸ் விலையாட்டில் பிரியமான ஒரு நபரை அவர் கூட்டிக்கொண்டு வந்தார் குள்ளமான கருப்பு தலை வழுக்கையான அவர் பற்றி கொஞ்சம் அலட்சியமாக இருந்தபோது அவர் ஒரு அரசு மருத்துவர் என்று சொன்னதும் தூக்கிப் போட்டது.

பெரும்பாலும் மருத்துவர்களை டீக்கடை, சினிமா தியேட்டர், அரட்டைக்கச்சேரிகளில் காண்பது அரிது.  முதல் நாளே செஸ்ஸில் எல்லோரையும் வீழ்த்தி விட்டார். அடுத்த முறை வரும்போது நிறைய்ய இலக்கிய செய்திகளோடு வந்தார். இப்படி ஒவ்வொரு தரம் வரும் போதும் அவருடன் ஒரு ஆச்சரியம் வரும். ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார். பெருமாள் கோவில் தெருவில் ஒரு சாதா வீடு. மூனு பத்தி , மாடியில் ஒரு அறையும் இருந்தது. அந்த எளிமை அவர்மேல் நிறைய மரியாதையைக் கொண்டு வந்தது. மாடி அறைக்கு எங்களைக் கூட்டிக்கொண்டு போய் ஆலிசின் அற்புத உலகத்தைக் காண்பிப்பது போல அவரது புல்லாங்குழல், அவரது கீ போர்டு, மோர்சிங், கேரம் போர்டு, செஸ்போர்டு, ஸ்நூக்கர் போர்டு என ஒவ்வொன்றாக எங்களுக்குக் காண்பித்தார்.

எங்களோடு அப்போது ராஜாராம் வருவார் ராஜாராம் மின்சார வாரியத்தில் தறகாலிக கூலியாளாக வேலை செய்துகொண்டிருந்தார். அவரும் நானும் புல்லாங்குழலை எடுத்து ஊதுவோம். மாது புஸ்தகங்களை நோண்டுவான். மெல்ல மெல்ல மருத்துவர் வல்லபாய் எங்களுக்கு மிக நெருங்கிய நண்பராகினார். தினமும் சாயங்காலம் அவரது கிளினிக்குக்கு போனோம் போகாத நேரங்களில் ஆள்விட்டு கூப்பிட்டுவிடுவார். ஆனால் எங்களுக்கு அவர் டாக்டர் வல்லபாய் என்பது மட்டுமே தெரிந்திருந்தது. மதுரைக்குத் தெற்கே மிகச்சில அறுவை சிகிச்சை நிபுனர்களில் அவர் ஒருவர் என்பதும் அவர் ஒரு முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உருப்பினரின் மகன் என்பதும் கேள்விப்பட கேள்விப்பட அவரின் உருவம் உயர்ந்து கொண்டே போனது.

பொதுவாகவே பார்த்த மறுநாளே ஜாதி விசாரிக்கும் மரபு இந்திய மரபு, அதில் படித்தவர்களும் அரசாங்க ஊழியர்களும் கில்லாடிகள். ஆனால் நண்பர்களின் பூர்வாசிரமம் பற்றிக்கவலைப்படாதவர்களாக ஒரு கூட்டம் இருக்கிறது. அது இந்தியாவில் ரொம்பச்சின்னக் கூட்டம்.  ஜாதி என்கிற ஒன்றைத்தவிர ஆயிரம் ஆயிரம் விசயங்களும் ரசனைகளும் சிந்தனைகளும் ஒரேதடத்தில் இருப்பதை அந்தக்கூட்டத்தில் இருப்பவர்கள் அடையாள ம் காண்பார்கள். அந்தத்தடத்தில் எங்களோடு டாக்டர் வல்லபாய் இணைந்து கொண்டார். எங்கள் நட்புகிடையில் அவரது மருத்துவப் பாட்டமும் அவரது குடும்பமும் தடையாக இருந்ததில்லை. அதைவிட இன்னொரு விநோதம் நடந்தது அவரது கிளினிக்கில் வைத்து எங்கள் மூவருக்கும் பரிணாம வளர்ச்சியின் வரலாறு குறித்துப் பாடம் நடத்தினார். உடனடிக் கவிதைப் போட்டி வைத்து என்னை ஜெயிக்க வைத்தார், பிறகு ஒரு நாள் அங்கேயே புல்லாங்குழல் எடுத்து நிலாவே வா என்னும் பாட்டு இசைத்தார்.

நிலா வரும் காலங்களில்,பழைய்ய டிஎம்மெஸ் பாடல்கள் கேட்கிற எல்லா நேரங்களிலும் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு அவர் பாடும் நிலாப்பாடல்களின் வரிசை என் முன் ஊர்வலமாக வந்துபோகும்.

7.2.10

வீரம் வெளஞ்ச மண்ணு.

கோழிகளுக்கு பஞ்சாரம்,
ஆடுகளுக்கு கூடாரம்,
மாடுகளுக்கு ஒருகம்பும் கயிறும்.

பாட்டிலில் தண்ணீர்,
பையில் கட்டுச்சோறு,
அலுவலக நாற்காலி.

சூ..சூச்சு சொற்கள்
சாட்டைக் கம்பு,
பொக்குத்தாணியம்.

அலுவலக அறநெறிகள்
எச்சரிக்கை விதிகள்
மாசக்கடைசியில் கவர்.

எல்லாம் சரி...
எங்கிருந்து வந்ததிந்த
கோள் மூட்டிப்
போட்டுக் கொடுக்கும்
பழக்க வழக்கம் ?

4.2.10

சாமிக்குணவு இல்லாத போது சிறிது பசிக்கும் படைக்கப்படும்.

ஒரு ஆடு,
இல்லையா.

ஒரு சேவல்,
பரவால்ல.

ஒரு சட்டி பொங்கச்சோறு,
அதுவுமில்லயா ?.

அஞ்சு ரூவாய்க்கொரு தேங்கா
அட என்ன புள்ள நீ ?.

பழம்,பாக்கு,பத்தி,சூடன்
ஒண்ணுமேயில்லையா ?.

இந்தா பிடி சில்லுத் தேங்கா
திண்ணுக்கிட்டே
ஒக்காந்து ஒங்கதயச் சொல்லு.
பொழுதாவது போகட்டும்.

தெனம் ஒரு கதை கேட்பார்
கிழவங் கோயில் பூசாரி
எங்க பூச்சச் சின்னையா.

அதிகாலை

கரிச்சான் குருவிச்சத்தம்
வெங்கலச் சட்டியில்
பால்மோதும் சத்தம்
மாட்டின் மணிச்சத்தம்
சாணி தெளிக்கும்
வீட்டுவாசல்களோடு
விடிந்து கிடந்த காலை
மருவி.


தூரத்துவீட்டில் கேட்கும்
சாம்பிராணி மணக்கும்
சுப்ரபாதம்

மொழி புரியாவிட்டாலும்
மனனம் ஆகிப்போன
மசூதியின் பாங்கோசை
குளிர் வியர்வை கோர்த்த
பால் பொட்டலம்.

வீசியெறியப்பட்டு
விரிக்கப்படாத நாளிதழ்,
வியர்வை வேண்டித்
தலைப் பாகையுடன்
நடக்கும் மேலாளர்.

எல்லாவற்றோடும்
இணைந்துகொண்டது
பத்து ரூபாய்க்கு
ஒத்தக்குடம் தண்ணீர்.

நீர்வராத் தெருக்குழாயில்
கூடு கட்டப் பழகிவிட்டது
சிட்டுக்குருவி.