24.12.10

பழய்ய உள்ளியும், புதியவெங்காயங்களும்

எப்பொழுது இந்தப் பெயரைக் கேட்டாலும் அந்த ஈரோட்டுக் கிழவனின் ஞாபகம் வராமல் இருக்காது. இது இந்தியாவில் விளைந்த சொந்த பயிரா,எங்கிருந்து வந்தது,இதன் வயதென்ன என்கிற சிந்தனை வரும்போதெல்லாம், இது எகிப்திலிருந்து தான் வந்திருக்கவேண்டும் என்கிற நம்பிக்கையிலான பதில் கிடைக்கிறது.அந்த அடிமை எகிப்தியர்கள் இதைக் கடவுளாகத் தொழுதிருக் கிறார்கள். பசியோடிருக்கிறவனுக்கு உணவு தான் கடவுள்.  பிரமீடுகளை நிர்மாணித்த லட்சக்கணக்கான எகிப்திய அடிமைகளின் உணவாக இருந்தது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

89 சதமானம் நீர்ச்சத்தும்,9 சதமானம் கரியமிலமும்,4 சதமானம் சர்க்கரைச்சத்தும் அடங்கிக்கிடக்கிற  எளிய உணவு இது. அதனாலே தான் எகிப்திய அடிமைகள் தாங்களாவே பயிரிட்டு பசியாற்றிக்கொள்ள கிடைத்த அருமருந்தாகவும் இருந்திருக்கிறது.மற்ற காய்கறி பழங்களைப்போல அழுகிப்போகாத இதன் நீடித்த ஆயுள் கூட அந்த அடிமைகளின் வரப் பிரசாதாமாக இருந்திருக்கலாம்.அடிமைகளைப் போலவே இதற்கும் காற்றும் வெயிலும் கிடைத்தால் அதுபாட்டுக்கு நீண்டகாலம் தன்னுள் ஈரத்தை அடைகாத்துக் கொண்டு பயன் கொடுக்கும் பயிர் இந்த வெங்காயம்.

தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு அருமருந்தான இந்த வெங்காயம்.ஆதிகாலத்து விளையாட்டு வீரர்களின் ஊட்டச்சத்தாக இருந்ததற்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் இதன் மருத்துவ குணமே காரணம் என்று நம்புகிறார்கள்.கருப்பிடிப்பதற்காக பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படும் வெங்காயம் இன்னும் உலக ஜனத்தொகையின் மிக அதிகமான அளவு ஏழைகளின் வியாதிகளுக்கு மருந்தாக இருக்கிறது.காய்ச்சல் தலைவலிக்கு தேங்காய் எண்னெயில் வதக்கி அரைத்து பத்து போடுவதும்,ஆறாதபுண் மற்றும் கொப்புளங்களுக்கு மருந்தாகக்கட்டுவதும் இன்னும் இந்தியக் கிராமங்களில் தொடர்கிறது.எனினும்  இந்தியாவில் மட்டும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதை ஒதுக்கி வைப்பதற்கான வலுவான காரணம் என்னவெனத் தெரியவில்லை.

எழுபதுகளில் ஏற்பட்ட பஞ்சத்தில் காமராசர் மாவட்ட உழைக்கிற உயிரைத் தக்கவைக்கும் உணவாக இருந்தது. அந்தச் சனங்களுக்கு இந்த வெங்காயம் வராது வந்த மாமணியாய் இருந்தது வெங்காய உபரி. அறுவடை நேரத்தில் வீணாய்ப் போகும் வெங்காயத் தழைகளை எடுத்துக்கொண்டு வந்து சேமித்து பின் அவித்து உணாவாக்கி தங்கள் பசியைப் போக்கிக் கொண்டார்கள். இப்பொழுதும் கூட தென் தமிழகத்து உழைக்கிற மக்களின் தொட்டுக்கொள்ளும் ( sade dish) பதார்த்தமாகத் தொடர்கிறது. கம்மங்கஞ்சி,சோழக்கஞ்சி,கூழ் போன்ற ( தண்ணிக்கஞ்சி)நீராகாரங்களுக்கான இயற்கை இணை இந்த வெங்காயம்.

எனினும்  இந்தியாவில் மட்டும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதை ஒதுக்கி வைப்பதற்கான வலுவான காரணம் என்னவெனத் தெரியவில்லை.இவ்வளவு மருத்துவ மகத்துவம் வாய்ந்த உணவுப்பயிரை இழி சொல்லாகப் பயன் படுத்தினார்கள் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.கடவுள் மறுப்பா ளராகவும், வர்ணாசிரம எதிர்ப்பாளராகவும் இருந்த தந்தை பெரியார் கூட இதை ஒரு வசவாகத்தான் பயன்படுத்தினார் என்பதும் நமது மரபின் மீது கேள்விகள் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

வெப்பதேசத்தில் விளையும் இந்த வெங்காயத்தை 1492 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர் க்ரிஸ்டோ பர் கொலம்பஸ். இப்போதைய நிலவரப்படி உலகின் மொத்த வெங்காய விளைச்சலில் அதிகப்பங்கு வகிப்பது இரண்டு நாடுகள் ஒன்று சீனா இன்னொன்று இந்தியா.ஏனைய வளர்ந்த நாடுகளில் எல்லாம் சேர்ந்து விளையும் மொத்த வெங்காயம் 177 லட்சம் டன்.இந்தியா சீனா இரண்டு தேசங்களில் மட்டும் விளைகிற மொத்த வெங்காயம் 299 லட்சம் டன்.இது ஒன்றும் கடவுள் செய்த அற்புதமல்ல.மனித சக்தியின் மகத்துவம். இரண்டு தேசத்திலும் உள்ள கூட்டு மக்கள் தொகை உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு.எனவே அது அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது.

வருடத்திற்கு சுமார் எண்பது லட்சம் டன் இந்தியாவில் விளைகிற இந்த ஏழைகளின் பயிர் அதன் உபரி விளைச்சலாலும்,எளிய மக்களின் பயன்பாட்டாலும் கைக்கடக்கமான விலையிலேதான் நீடித்தது.புதிய பொருளாதாரம்,உலகமயம்,ஊகபேர வர்த்தகம் என்கிற அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் பயன்பாட்டுக்கு வராதவரை.கிலோ பதினெட்டு ரூபாய்க்கு கிடைத்த இதன் விலை கண்மூடித் திறப்பதற்குள் எண்பது ரூபாய்க்கு தாவிவிட்டது.

ஒரு காலத்தில் வரிசெலுத்தாதது,நிலம் அதிகம் வைத்திருப்பது, தேவைக்கு
அ திகமாக சொத்து குவிப்பது,உணவுதாணியங்களைப்பதுக்கி வைப்பதெலாம் சமூகக்குற்றமாக இருந்தது.பழய்ய எம்ஜியார் சினிமாவில் பார்த்திருக்கிறோம்.
அதெல்லாம் இப்போது சட்டங்களாக இருக்கிறதா?. தெர்ல.

எனில் இங்கே அரசாங்கத்தின் உண்மையான வேலை என்ன,என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விகள் வெறும் செய்தியாகவே நீடிக் கிறது. 1998 ஆம் ஆண்டு பிஜேபி அரசாங்கம் கவிழ்ந்துபோனதற்கு வெங்காய விலைதான் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் சொல்லு கிறார்கள். அப்படியெனில் வெங்காய விலையை கட்டுப்படுத்தமுடியாமல் போன ஒரே குற்றத்துக்கான தண்டனைதான் மற்றபடி அவர்கள் உலகமகா யோக்கியர்கள் என்கிற மறைமுக விளம்பரம் இது.

நூற்றிப்பத்துக்கோடி மக்களின், சுகம், துக்கம், கல்வி, கலாச்சாரம், வேலை வாய்ப்பு,விலைவாசி, சுதந்திரம் மத சுதந்திரம்  எல்லாவற்றிலும் பிஜேபி நூறுமார்க் வாங்கியதுபோன்ற பிம்பத்தை உருவாக்கும் தகிடுதத்தம் இந்த வாதம்.மனசாட்சி யில்லாதவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமில்லை இந்த ஊடகங்களும்,அதன் அதிமேதாவி நோக்கர்க்களும்  தான்.வெங்காயம் மட்டுமே ஆட்சியை நிர்ணயிக்கிற காரணி என்றால் அடித்துவைத்த கொள்ளைப் பணத் திற்கு வெங்காயம் வாங்கி ஓட்டுக்கு கொடுக்கலாமே.அல்லது வெங்காய உற்பத்தி செய்யும் விவசாயிகள் பிரதமராக வரலாமே.

போங்கடா நீங்களும் உங்கள் அரசியலும்.

15 comments:

kashyapan said...

வெங்காயம் விலை ஏறாமல் எப்படி முடியும்?2004-05 ம் ஆண்டில் வெங்காய ஏற்றுமதி600 சொச்சம் கோடி.. டன்னுக்கு 525 டாலரா இருந்தது.Minimum Export price 1200டாலர் என்று இந்தப்பாவிங்க அறிவிச்சுட்டாங்க. சென்ற ஆண்டுமட்டும் 2400 கோடிக்கு ஏற்றுமதி பண்ணிப்புட்டானுங்க.கி.லொ 600 ரூ வெளிநாட்டுக்கு விப்பானா? சொள்ளமுத்துவுக்கும், மாரிமுத்துவுக்கும் பத்துரூ விப்பானாஐயா?---காஸ்யபன்

vasu balaji said...

வெங்காயத்தை உரிச்சாலும் ரகசியம் தெரியலாம ஒரே ராத்திரியில ரூ80ல இருந்து ரூ30க்கு விக்கிற மாயம் புரியவேயில்லை:)

Unknown said...

பி.ஜெ.பி ஆட்சி கவிழ்ந்ததுக்கு முக்கிய காரணம் வெங்காயமாக இருந்தது, காங்கிரஸ் இந்த விசயத்தில் தப்பித்துக்கொள்ளும் என்றுதான் நினைக்கிறேன்,,

ஆன்லைன் வர்த்தகம்தான் விலை ஏற்றத்துக்கு காரணமே ..

அழகிய நாட்கள் said...

//இந்தியாவில் மட்டும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதை ஒதுக்கி வைப்பதற்கான வலுவான காரணம் என்னவெனத் தெரியவில்லை//
மும்பையில் சின்ன வெங்காயம் கிடைக்காது சில பகுதிகளைத்தவிர. நாடு முழுதும் கிடைக்கும் "பல்லாரி" என்கிற பெரிய வெங்காயம்தான்.
குஜராத் மாநிலத்தில் சுவாமி நாராயணன் இயக்கம் என்ற ஒன்று உண்டு. அவர்கள் வெங்காயம் பூண்டு போன்ற உணவு வகைகளை ஏற்பதில்லை. பிராமணர்கள் கூட பூண்டு சாப்பிடுவதில்லை என்று நினைக்கிறேன். பதிலாக பெருங்காயம் என்பதாக இருக்கிறது.
உழைக்கும் மக்கள் அனைவரிலிருந்தும் மற்றும் பெரியாரிடமிருந்தும் பிரிக்க முடியாததாக வெங்காயம் இருக்கிறது.

vasan said...

இன்றைய‌ / என்றைய‌ காங்கிர‌ஸின் ம‌த்திய‌ ஆட்சியை விட பிஜேபி ஆட்சி மோச‌ம் இல்லைதான்.
ஆட்சிக்கு வ‌ரும் முன் நட‌ந்த‌ ம‌சூதி இடிப்பு ஒரு க‌ரும்புள்ளியாய் இருக்க‌லாம். அத‌ன் பிர‌ச்னையை தீர்க்காம‌ல் குளிர்காய்ந்து கொண்டிருந்த‌ காங்கிர‌ஸுக்கும் அந்த‌ த‌வ‌றுக‌ளில் ப‌ங்கிருக்கிறது. ஆய்த‌ம் விற்ப‌வ‌னுக்கு, யுத்த‌பூமி வேண்டும், அதே போல் அர‌சிய‌ல்வாதிகளுக்கு ம‌க்க‌ள் பிள‌வுப‌ட்டிருக்க வேண்டும். பெரும்பான்ம‌யின‌ரை தாக்கித்தான், சிறுபான்மையின‌ர் சார்பு எனக்காட்ட‌ வேண்டிய‌தில்லை. காடுக‌ளில் ப‌ல‌ப்ப‌ல வ‌டிவ‌ங்க‌ளில் ம‌ர‌ங்க‌ளும், செடியும், புற்க‌ளும் செழித்தே ஒன்றாடு ஒன்றாய் த‌ன் வாழ்கின்ற‌ன. நிழ‌ல் அதிகமெனில் ச‌ற்று த‌ள்ளி, அவ்வ‌ள‌வு தான்.

kashyapan said...

வாசன் சார்! ஒரு சின்ன தகவல்.சென்னை டில்லி ரயில் பாதையில் சந்திரபூர் இருக்கிறது.ஆந்திரா-மகாரஷீடிரா எல்லை அது. மிகவும் முக்கியமான ராணுவ தொழிற்சாலைகள் இருக்கின்றன.எவருக்கும் அனுமதி கிடையாது. பூமிக்கடியில் கனிவளம் உள்ளது என்ரு கூறி ஆயிரம் ஏக்கர் ஒரு பெரும் முதலைக்கு கொடுத்துவிட்டார்கள் வாஜ்பாய் பிரதமராக 13 நாள் இருந்தபோது ராணுவ மந்திரியாக பிரமொத் மகாஜன் இருந்தார். பள்ளி ஆசிரியராக இருந்த மகாஜன் இறக்கும் போது 2000கோடி இருந்ததாக சொல்வார்கள்.இரண்டுமே எரியும் கொள்ளிகள்---காஸ்யபன்.

Unknown said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

அன்பின் சேதுசார்.

ஒரு சாராருக்கு வெங்காயம் உணவிலிருந்து
விலகிப்போனது ஏன் என்றும்.
வெங்காயம் என்கிற சொல்
பொதுமக்கள் புழங்கும் வசவாகப் பயன்படுவது எதனால் என்றும் தான் அர்த்தப்படுத்தினேன்.

'பொதுமக்கள்' என்கிற சொல் விட்டுவிட்டது.அவ்ளவுதான்.

க.பாலாசி said...

சூப்பரான இடுகை சார்... இவ்வளவு விசயங்கள் வெங்காயத்தில் அடங்கியிருப்பதை ஒருசேர படிக்கிறதுல திருப்தி... கடைசியா நீங்க சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்.

வினோ said...

இந்த விலை ஏற்ற நாடகமும் அரசியலோ... ?

வெங்காயத்தில் இவ்வளவு பலன்கள் இருக்கு என்று தெரியாது அண்ணா. நன்றி பகிர்வுக்கு...

Unknown said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வெங்காயத்தைத் தேடிப் போயிருந்தேன். கொஞ்சம் லேட் காமராஜ்.

வெங்காயத்தை உரிச்சா ஒண்ணுமிருக்காது.ஆனா அதையே இப்பிடி உரிச்செடுத்துட்டீகளே ராசா?

பழய்ய உள்ளி புது டெம்ளேட்ட்ல சூப்பர்.

கண்ணாடிக் கண்ணுக்கு இதமான நீலம்.

பா.ராஜாராம் said...

வணக்கம் மக்கா!

கண்ணுடன், வயிறும் சேர்ந்து எரிகிறது.

சிவகுமாரன் said...

சின்ன வயசுல என் கிராமத்து நண்பன் கொண்டு வரும் பழைய சாதம் + வெங்காயத்துக்கு என்னோட இட்லியை மாத்திக்குவோம். அவனை நான் ஏமாற்றி இருக்கிறேனோ என்று தோன்றுகிறது.

vasan said...

/வாஜ்பாய் பிரதமராக 13 நாள் இருந்தபோது ராணுவ மந்திரியாக பிரமொத் மகாஜன் இருந்தார். பள்ளி ஆசிரியராக இருந்த மகாஜன் இறக்கும் போது 2000கோடி இருந்ததாக சொல்வார்கள்.இரண்டுமே எரியும் கொள்ளிகள்---காஸ்யபன்./

விள‌க்க‌த்திற்கு மிக்க‌ நன்றி திரு காஸ்ய‌ப‌ன், இது நான‌றியாச் செய்தி. (அப்படியானால் 4 ஆண்டுகால (1450 நாட்க‌ள்) வாஜ்பாய் கால‌த்தில் வேறு எவ்வ‌ள‌வோ?) ஆந்திராவில் சுஷ்மாவின் ஆசியில் ரெட்டி சகோத‌ர்க‌ள் கொட்ட‌மும், கர்நாட‌க‌ எடியூர‌ப்பாவின் நிலக் கொள்(ளை)கைக‌ளும் ம‌க்க‌ள் அறச்சீற்ற‌ம் கொள்ளும் அடாவ‌டி அக்கிர‌ம‌ங்க‌ள். அவ‌ர்க‌ளை நியாப்படுத்த‌வில்லை. எரிகிற‌ கொள்ளிக‌ள் தான்
காங்கிர‌ஸை ஒரு சமூக‌ந‌ல‌க் க‌ட்சியாக‌வும், பிஜேபியை சிறுபான்மை எதிர்ப்புக்க‌ட்சியாக காட்டுவ‌தால், க‌ய‌மைய‌ர்க‌ள் நிறைந்த‌ காங்கிர‌ஸ்க்கு அனுகூல‌மாகிற‌தே என்ப‌துதான் வ‌ருத்த‌மான‌து. வீட்டை எறித்த தீயைவிட‌, காட்டுத்தீ அபாய‌க‌ர‌மானதெனிலும், முதல்ப் ப‌க்க‌ச் செய்தியாவ‌து வீட்டுத்தீ தானே.