4.12.11

சில சில்லறைத் தகவல்களும் தேசபக்தியும்.



இந்த வார்த்தையே கொஞ்சம் சிக்கலானது அதென்ன தேச பக்தி. நாம் வாழும் தேசத்தின் மீது பக்தி மட்டும்தான் இருக்கவேண்டுமா? காதல் இருக்கக்கூடாதா ? நேசம்,அன்பு,பற்று,அபிமானம்,மரியாதை இவையெல்லாம் இருக்கக்கூடாதா ?. பக்தி என்கிற சொல்லே குதர்க்கமானதும் நிறைய்ய உள்குத்துகள் அடங்கியதும்  ஆகும். முதலில் தேசம் என்பது என்ன வெறும் எல்லைகள் மட்டும்தானா ? அதில் வாழுகின்ற மனிதர்  சகமனிதர், உயிரினங்கள்,இயற்கை,மண்,வளங்கள் இவை யாவும் கூட்டாக சேர்ந்தது தானே தேசமாக முடியும்.நம்மோடு இங்கிருக்கிறவற்றை நேசித்து விட்டு பிறகல்லவா எல்லைகள் பற்றி  யோசிக்கவேண்டும்.  இருப்ப வற்றை கூடியமட்டும் கூறுபோட்டு விட்டு தேசபக்தி வேண்டுமெனத் தேடினால் என்ன  கிடைத்து  விடப் போகிறது. கிடைக்கப்போவது அக்மார்க் அடிமைத்தனம் மட்டுமே?

இந்த இந்தியா அம்பத்தாறு தேசங்களாக பிரிந்துகிடந்த காலத்தில் மேலை நாடுகளில் இருந்து எதாவது வாசனத்திரவியங்களை விற்கவந்தார்ர்கள். வந்ததும் லாட்டரி அடித்த சந்தோசமடைந்தார்கள். எதற்கு ஏவாரம் பண்ணவேண்டும் நாட்டையே  அடிமைப் படுத்திவிட்டால் கப்பல் கப்பபலாய் அள்ளிக்கொண்டு போகலாம் என்று முடிவுபண்ணினார்கள். அது அவர்களுக்கு வியாபாரம் பண்ணுவதை விட சுலபாமான வேலையாக இருந்தது.அவர்களின் உடலுக்கு ஏற்ற தட்பவெப்பம் சரியாக இல்லாதிருந்த போதுகூட அவர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கான தட்பவெப்பம் தேவைக்கு அதிகமாகவே இருந்தது.

கிறிஸ்து பிறந்து 2011 ஆண்டுகள் கடந்து போன பின்பும்,கணினி,உயிரி,பௌதிக,ரசாயன தொழில்நுட்பங்கள் கூடிப்போன இந்தக்காலத்தில் கூட கேரளத்தோடும், கர்நாடகத்தோடும், மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற இதே மனிதர்கள் தான் அன்றைக்கு சேர,சோழ,பாண்டிய மீசைகளை முறுக்கிவிட்டுக் கொண்டலைந்தார்கள். சகமனிதனை வெட்டிச் சாய்த்துப் பீய்ச்சி அடிக்கிற ரத்தத்தைக் கண்டு கொந்தளிக்கிற குரூரத்தை வீரம் என்று பீற்றிக் கொண்டு கிடந்தார்கள். ஆடுமாடு திருடுவதை ஆநிறை கவர்தல் என்று புராணகாவியங்கள்  எழுதி வைத்தார்கள்.

பிறன்மனை நோக்கக்கூடாது என்பதை இதிகாசமாக்கிய காலத்தில்தான் ஒருத்தன்  பொண் டாட்டியை இன்னொருத்தன் அபகரிக்க ஆயிரக்கணக்கான சிப்பாய்களின் விலை மதிப்பில்லாத உயிர்களைப் பகடைக் காய்களாக்கினார்கள். மலை உச்சியில்,நதிக்கரைகளில் நூறு இருநூறு ஏக்கர்களில் அரண்மனை  கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான பெண்களை வைத்துக்கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு ஏழைகளின் வயிற்றிலடித்து வரிகள் வாங்கிக் குவித்தார்கள். இதே மன்னர்கள் தான் நோய்வாய்ப்பட்டு மரித்துப் போன மனைவிகளுக்கு நினைவுச் சின்னம் எழுப்புகிறேன் என்று சொல்லி லட்சக்கணக்கான மனிதர்கள் உழைப்பை உறிஞ்சி மண்டபங்கள் கட்டினார்கள். இதை எவனும் எதிர்த்துக்கேட்க வழியில்லாதவாறு மனிதர்களை நிறம்பிரித்தார்கள்.

இதுபோதுமானதாக இருந்தது மேலைத் தேசத்தவர்கள் நம்மை அடிமையாக்க.வெறும் பிரிட்டிஷார் மட்டும் தான் நம்மை அடிமையாக்கினார்கள் என்பதுபோலத்தான் இன்றுவரை நமக்கு வரலாறுகள்  சொல்லிக்கொடுக்கின்றன. வந்து போனவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவமானத்தில் உடல்பதறுகிறது.  கில்ஜிகள், முகம்மதியர்கள், பார்சீகள்,போர்ச்சுக்கீசியர்கள்,யூதர்கள்,சிரியர்கள்,டச்சுக்காரர்கள், அப்புறம் தானே பிரிட்டிஷார்கள் வந்தார்கள். இதிலென்ன கொடுமை என்றால் இந்த இனத்தவரெல்லாருடைய நாட்டு வரைபடத்தைப் பாருங்கள்  வெற்றிலை எச்சிலைத்( அல்லது பான்பராக்) துப்பியது போலதிட்டுத் திட்டாய்மட்டுமே இருக்கும். அப்படியே நமது இந்திய வரைபடத்தைப் பாருங்கள் மிகக்கேவலாக இருக்கும். அதைவிடக் கொடுமை என்ன வென்றால் யூதர்களுக்கு நாடே கிடையாது.

இந்த யூதர்களுக்குத்தான் கேராளா தொடங்கி பம்பாய் வரையிலும் இந்தியா சிக்கிக்கிடந்தது. அதற்குப்பெயர் யூத இந்தியாவாம்.அந்த யூத வந்தேறிகளுக்கு அப்போதைய ’இந்து’ மன்னன் ஒருவன் கிறித்தவ யூதத்தலைவன் ஜேம்ஸ் ராப்பனுக் கொடுத்த உரிமைகைகளின் எண்ணிக்கை 72 வகையாகும்.ஆள்,அம்பு,பரிவாரம்,அரண்மனை,அந்தப்புறம் இவைகள் போதாதென்று ஆனைமேலே  அம்பாரி. அந்த அம்பாரி போகும் போது முன்னாடி முரசறைந்து கொண்டு பராக் சொல்லவேண்டும். சொல்லும்போது கீழ்சாதிக்காரார்கள் ஓடோடி கண்ணில் படாமல் மறைந்து கொள்ளவேண்டும். இதே வகை மரியாதைகள் சிரியதேசத்து கிறித்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டதாகத் தாமிரப் பட்டயம் சொல்லுகிறது.( ஜேம்ஸ்மெஸ்ஸேயின் ’தி டவுன்ட்ரோடன்’ பக்கம் 17 ).தனது மண்ணில் தன்னோடு பிறந்து தனக்காக உழைத்து,வியர்வை சிந்துகிறவனை பார்க்கக்கூடாதவனாகவும் தன்னை  அடிமையாக்க வந்தவனிடம் குண்டி குப்புறவிழுந்து எல்லாவற்றையும் இழந்து போனவர்கள் தான் வீரம் செரிந்த மன்னர்கள் என்று நாம் இன்னும்கூடப் போற்றிப்பாடுகிறோம்.

ஏகலைவன் என்கிற ஒரு சாமான்யன் வில்வித்தை தெரிந்துகொண்டான் எனக்கலங்கிப்போய் அவன் பெருவிரல் பிடுங்கிய சூழ்ச்சிக்காரர்கள் வாழ்ந்த இந்த தேசத்திலிருந்து தான் போதி தர்மன் வருஷக்கணக்காய் பயணமாகிப் போய்  சீனர்களுக்குத் தற்காப்புக் கலை சொல்லிக் கொடுத்தானாம். இது எப்படியிருக்கிறது ?. புராணங்களின் காதுகளிலேயே சமகாலக் கதைகள் பூச்சுற்றுகிறபோது பழங்காலக் கதைகள் சும்மாவா  இருந்திருக்கும் ?. சொல்லுகிற கதைகளெல்லாம் வீரம்தான் என்று வைத்துக்கொள்வோம். அதையெல்லாம் வைத்துக்கொண்டு உள்ளூர்க்காரனை மட்டும் தான் அடிக்கவேண்டுமா அயல்நாட்டுக்காரனை அடிக்கக்கூடாதா? அப்படியானால் அது
என்னவகை வீரம். அந்த வீரத்தை 1947 வரை அடகுவைத்திருந்தார்களா? இல்லை  பத்மநாதபுரம் கோயில் நகைகளைப்போல குழிதோண்டிப் புதைத்துப் பூட்டிவைத்திருந்தார்களா?.

இந்தியப்பரப்பில் எத்தனை பேரரசர்கள்,எத்தனைஎத்தனை சிற்றரசர்கள்,எவ்வளவு குறுநிலமன்னர்கள்,இன்னும் ஜமீந்தார்கள் இருந்தார்கள்.  அவர்களில் எத்தனை அரசருடைய ஆள் அம்பு பரிவாரங்கள் பிரிட்டிஷாரைக்குறி பார்த்தது. கணக்குபார்த்தால் வருத்தமாக இருக்கிறது. ஆனால் வரி வசூலிப்பவர்களாகக் கப்பம் கட்டுகிறவர்களாக காலந்தள்ளிய மன்னர்கள் பட்டியல் தான் கணக்கிலடங்காதது. ராணி லக்குமிபாய், வீரபாண்டியக் கட்டபொம்மன் போன்றோரைக் கணக்கிலெடுத்தாலும் மெல்லமெல்லக்கிளம்பும் தரவுகள் குழப்பம் தருகிறது.

ஆனால் சாமன்யர்களின் கால்கள் வீதிக்கு வந்தபிறகுதானே சுதந்திரம் என்கிற சொல் உருவானது. அப்படிச்சொல் உருவாக உயிர் புதைத்தோர் பட்டியல் நீளமானது அவர்கள் யாரும்  அரச குடும்பத்தையோ, ஜமீந்தார்  பரம்பரை யிலோ இல்லை வழிவழியாய் நெஞ்சில் வாள் கொண்டு எழுதிய வீரக்கதைகளுக்குச் சொந்தக்காரர்களோ
இல்லை. ஜாலியன் வாலா பாக்கில் மலிவாக மடிந்துபோன உயிர்களுக்கு பதில் கேட்க முப்பதுவருடங்கள் பதுங்கியிருந்து ஜெனரல் டயரின் உயிரை பிடுங்கினன் ”உத்தம் சிங்”.இந்தப்பெயரைக்கேட்டாலே உடல் புல்லரிக்கிறது. வன் ஒரு சாமன்யன்.அதேபோலத்தான் சூரியா  சென்,  கல்பனாதத் , பகத்சிங்,  சுகதேவ், ராஜகுரு,வாஞ்சி,குமரன்,வ உ சி,சிவா என்கிற எளிமையான மனிதர்கள் தான் போராளிப்பட்டம் ஏந்தினார்கள். அவர்களின் கதைகள் கேட்ட சாமான்யர்கள்தான் தெருவில் இறங்கினார்கள்.இறங்குவார்கள்.

அதுவரை
சில்லறை சில்லறையாய்
எல்லாவற்றையும் சுருட்டிக்கொள்ளும்
இந்த தேசத்து ஆட்சியாளர்களோடு
கைகோர்த்துக்கொண்டு
அமெரிக்காவும் ஆட்டம்போடும்.
அதுவரை
நாமும் மலையாளிகளும் மாறி மாறி
உண்ணாவிரதம் இருக்கலாம்.
அதுவரை
தேசம் என்பது பக்திக்கானதாக
மட்டுமே பற்றவைக்கப்படும்.

2 comments:

hariharan said...

அண்ணே அருமையான பதிவு. இது 501வது இல்லையா?

//இதிகாசமாக்கிய காலத்தில்தான் ஒருத்தன் பொண் டாட்டியை இன்னொருத்தன் அபகரிக்க ஆயிரக்கணக்கான சிப்பாய்களின் விலை மதிப்பில்லாத உயிர்களைப் பகடைக் காய்களாக்கினார்கள்//
எம்.ஆர்.ராதா சொல்லுவார், சேரன், சோழன், பாண்டியன் எல்லாம் 50 மைலுக்குள்ள இருந்தானுங்க அவன் பொண்டாட்டிய இவன் பிடிக்கிறதுக்கு ஊருக்காரன் தாலிய அறுப்பானுங்க! என்ன ஆட்சி செ?ஞ்சானுங்க. பொம்பளைக்காகவும் பவுனுக்காகவும்.

இப்ப பரவாயில்லை, இன்னும் நிறைய வருஷம் போகனும் போல..மண்ணுலகில் சொர்க்கத்தை அமைக்க..

kashyapan said...

காமரஜ் அவர்களே !" If ever a proposition is made by which a border dispute is solved by military action then that proposition is certainly wrong " என்றார் அந்த கெரளத்து புத்தி ராட்சசன் E.M.S ..அவருக்கு தெச பக்தி இல்லை என்று அன்றய ஜனசங்கிகள் குதித்தனர். என் நாடு தவறான யுத்தத்தில் ஈடுபட்டு என் மக்களை வாட்டுமனால் அதனை தடுக்க வெண்டியதும் என் தேச பக்த கடமை தான் என்றார் அந்த மாமேதை. இந்தியனும் பாகிஸ்தானியனும் அமெரிக்கனும் செர்ந்து சகாரா பாலைவனத்தில் ஜெர்மனியை எதிர்த்தார்கள் . அதனை தேசபக்த யுத்தம் என்றார்கள். Petriyatism is only a relative term.---காஸ்யபன்