16.10.11

கவிதையில்லை, கணக்கெடுப்பு.


என்பெயர் காத்தன் மகன் முத்தன்
நாங்கள் இப்படித்தான் பெயர்வைத்துக் கொள்ளமுடியும்.
என்ன பெயர் வைத்துக்கொண்டாலும்
என்தெருப்பெயரும் என் மூதாதையர் பெயரும்தான்
எங்களை முந்திக்கொல்லும்.

என்கதவிலக்கம் எதுவாக இருந்தென்ன
ஏழேழுதலைமுறையாய் எட்டிஉதைக்கப்பட்ட
எங்கள் வீட்டுகதவுகள் கவிழ்ந்துகிடக்கிறது.

எனது தொழிலா?  ஒண்ணுமில்லை
பொழப்பூன்னு சொல்லுங்க, சுத்தஞ்செய்றது
சம்பளமா அது மேஸ்த்திரி,பைனான்ஸ்காரர்
பிடுங்கியது போக போட்ட பிச்சை

கேஸ் ஸ்டவ்வா லந்துபண்ணாதிங்கசார்
தொலைக்காட்சிப்பெட்டியா இருக்கிறது
ஆனால் அது அது அரசாங்கத்துக்குச்சொந்தமானது
இருசக்கரவாகனமா இருக்கிறது
ஆனால் அது நகராட்சிக்குச்சொந்தமானது.

குழந்தைகளா அது ஏழெட்டுத்தேறும்
என்ன பண்ணுதுகளா, அதுகளுந்தான்.
.
நீங்கள் இந்த நாட்டுப்பிரஜை
ஓட்டளிப்பது உங்கள் ஜனநாய உரிமை
நீங்கள் நினைத்தவருக்கு
சுதந்திரமாக ஓட்டுப்போடலாம்.
.
எல்லாம் புரிந்தது  முத்தன் எனக்கு
இந்த பிரஜை,ஜனநாயகம், உரிமை, சுதந்திரம்
மட்டும் என்னவென்று தெரியாமல் போனது.
.
இதுவா ?
இது கவிதையில்லை
இந்த தேசம் என்மேல்
வீசியெறிந்த குப்பைகள்.

5 comments:

Unknown said...

உண்மையிலேயே நல்லா சொல்லிருக்கீங்க

vasu balaji said...

/இதுவா ?
இது கவிதையில்லை
இந்த தேசம் என்மேல்
வீசியெறிந்த குப்பைகள்./

க்ளாஸ்

Rathnavel Natarajan said...

இது கவிதையில்லை
இந்த தேசம் என்மேல்
வீசியெறிந்த குப்பைகள்.

வேதனை தான்.

இரசிகை said...

:(

hariharan said...

ஒரு் ‘கணக்கு’ க்குத்தான் கணக்கெடுக்குறாங்க, நிலைமையை மாத்துறதுக்கு ஒன்னும் இல்லையே!